கணவனின் துரோகம் ஜானகியை முற்றிலுமாக அடித்து வீழ்த்தியது உண்மை. வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூடப்பிறந்த தமையனை, அவர் மனைவியை, பெற்ற மகனை, மருமக்களை என்று யார் முகத்தையும் அவரால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவமானத்தில் வெந்துபோனார்.
அதுவும் இளவஞ்சியைப் பார்க்கிற பொழுதுகளில் எல்லாம் இத்தனை வருடங்களாகத் தான் வாழ்ந்த பொய்யான வாழ்க்கையும் கணவரின் துரோகமும் மட்டுமே கண்முன்னே வந்து நின்றன.
அந்த அவமானம் தந்த அகங்காரத்திலும், அந்த அகங்காரத்தால் உண்டான ஆக்ரோசத்திலும்தான் இப்போது வரை பாலகுமாரனை வார்த்தைகளால் வதைத்துக்கொண்டே இருக்கிறார்.
அவருக்கு மூலையில் குந்தியிருந்து அழ வரவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் வீட்டில் இருக்கிறவர்களை வார்த்தைகளால் குத்திக் குதறத்தான் வந்தது.
இப்படி இருக்கையில்தான் இளவஞ்சியின் மீள்வருகை. மெல்ல மெல்ல அந்த வீட்டில் அவள் கை ஓங்குவதும், மொத்த வீடும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவள் பின்னே நிற்பதும் அவரை இன்னுமின்னும் எரிச்சல் கொள்ள வைத்தன.
தான் இந்த நிலையில் இருப்பதற்கு தன் வீட்டினரும் ஒரு காரணம் என்கையில் அவர்களிடமிருந்து சொத்துகளை எல்லாம் பறித்து ஏதோ ஒரு வகையில் பழிவாங்கத் துடித்தார். கூடவே அது தனக்கு அவர்கள் செய்யவேண்டிய நியாயம் என்றும் எண்ணினார். அதுவும் நடப்பதாக இல்லை.
இப்படி இருக்கையில்தான் மிதுன் இந்தியா போகப்போகிறானாம் என்று சொன்னார்கள். வெகுண்டு எழுந்துவிட்டார் ஜானகி.
“நீ ஆரு என்ர மகனை நாட்டை விட்டு அனுப்ப?” என்று இளவஞ்சியிடம் பாய்ந்துகொண்டு வந்தவரை நடுவில் புகுந்து மாறித்தான் நிலன்.
“இந்தியா போய் இயக்குநன் ஆகோணும் எண்டு ஆசைப்பட்டது மிதுன். அதுக்கான வழியக் காட்டினதுதான் அவள். என்ன கதைக்கிறதா இருந்தாலும் அவனோட கதைங்க. வஞ்சியோட இல்ல.” என்றான் அழுத்தமான குரலில்.
அவர் எதையும் கேட்க முதல், “ஒரு சந்தோசமான விசயத்தை உங்களிட்டச் சந்தோசமா சொல்ல வந்ததுதானம்மா நான் செய்த பிழை. வரவர எனக்கு வெறுத்துப் போகுது. என்ன இது வீடா இல்லை வேற எதுவுமே? எப்ப பாத்தாலும் ஏதாவது ஒண்ட பிடிச்சுக் கத்திக்கொண்டே இருக்கிறீங்க. எனக்குச் சினிமாதான் விருப்பம் எண்டு உங்களுக்குத் தெரியும்தானே. பிறகும் என்ன?” என்று மிதுனும் ஆத்திரப்பட்டான்.
“வெறுத்துப்போகுதா உனக்கு? ஒன்றுமே இல்லாததும் எல்லாம் உனக்கு வெறுக்குது எண்டா நான் என்ன சொல்லுறது? பெத்த அப்பா எண்டு நம்பினதுக்கு எல்லாத்தையும் மறைச்சுத் தலைல மண்ணை அள்ளிப்போட்டுட்டார் அந்த மனுசன். கட்டின புருசன் எண்டு நம்பி வாழ்ந்தவன் ஒரு கேடுகெட்டவன். பெத்த பிள்ளை நீ கூட உன்ர கலியாணத்துக்கு கூட என்னை ஒரு வார்த்தை கேக்கேல்லை. இப்ப இந்தியா போறதைப் பற்றியும் ஒண்டும் சொல்லேல்ல. அப்ப நான் ஆர் இந்த வீட்டில? இதுக்கெல்லாம் நான் என்ன சொல்லுறது?” என்றதும் நிலன் இளவஞ்சி இருவருக்குமே ஒரு மாதிரியாகிப் போயிற்று.
மிதுனுக்கும் அன்னை அப்படிச் சொன்னதும் எதுவும் பேச முடியாமல் போயிற்று. ஆனாலும், “நான் ஏன் அம்மா உங்களை ஏமாத்த நினைக்கிறன்? இது நடக்குமா, ஏகே அண்ணா என்னைச் சேர்ப்பாரா எண்டு தெரியாம சொல்ல விருப்பம் இல்லை. சுவாதிக்கு கூட நான் சொல்லேல்ல.” என்றான் சமாதானமாக.
“நீ என்ன சொன்னாலும் இஞ்ச நடக்கிறது ஒண்டும் எனக்குப் பிடிக்கேல்ல தம்பி.” என்றபடி போய் உணவு மேசையில் அமர்ந்துகொண்டார் ஜானகி.
“உங்களுக்குத்தானம்மா ஒண்டும் விளங்கேல்ல. நான் எங்கட வீட்டை போறன்.” என்றுவிட்டு விடுவிடு என்று சுவாதியிடம் சென்றான் மிதுன்.
அவனளவில் ஏகன் கவியரசுவைச் சந்தித்தது என்பது கனவு போன்ற ஒரு நிகழ்வு. இனி அவன் அவரோடு இணைந்து பணியாற்றப்போகிறான், அவரின் மேற்பார்வையின் கீழ் பலவற்றைக் கற்றுக்கொள்ளப்போகிறான் என்கிற மகிழ்ச்சியில் ஓடிவந்து சொன்னால், அதையே ஒரு பிரச்சனையாக்கி, அவன் சந்தோசத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிய அன்னை மீது பெரும் கசப்பு உண்டாயிற்று அவனுக்கு.
இங்கே ஜானகியும் தனக்குள் புழுங்கிக்கொண்டுதான் இருந்தார். கணவரோடு இனி அவரால் சேர்ந்து வாழ முடியாது. மகனும் தள்ளிப்போகிறான். அப்பா, சகோதரம் என்று எண்ணியவர்கள் கூட அவரைப் பற்றி யோசிக்கத் தயாராக இல்லை என்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவருக்கு.
ஏகன் வீட்டிலிருந்து பகல் உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டவர்கள் அப்படியே காங்கேசன்துறை கடற்கரைக்குச் சென்றுவிட்டுத்தான் வந்தார்கள். நிலனும் இளவஞ்சியும் மேலே சென்று களைப்பு நீங்கக் குளித்து, உடை மாற்றிக்கொண்டு வருகையில்தான் மிதுன் இந்தியா பயணத்தைக் பற்றி ஜானகியிடம் சொல்லி, இந்தச் சண்டை வெடித்திருந்தது.
சக்திவேலர் உள்ளேதான் இருந்தார். இருந்தும் எழுந்து வெளியே வரவில்லை.
இளவஞ்சிக்கு நேரத்திற்கே இரவுணவைக் கொடுத்தால்தான் செமிக்கும். இல்லையானால் வாந்தி, செமிக்காமல் சாப்பாடு மேலே மேலே வருவது என்று சிரமப்படுவாள் என்று அவளுக்கான உணவைத் தயாரித்துக்கொண்டிருந்தார் சந்திரமதி. இல்லையானாலும் ஜானகியின் விசயத்துக்குள் எல்லாம் அவரால் தலையிட முடியாது. அதனால் எப்போதும்போல் இன்றும் ஒதுங்கிக்கொண்டார்.
இப்போது சண்டை ஓய்ந்ததும், “வஞ்சி, வாங்கோம்மா சாப்பிட.” என்று அவளை உணவு மேசையில் அமர்த்திப் பரிமாறினார்.
அதைப் பார்த்த ஜானகிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
“இஞ்ச நானும் ஒருத்தி இருக்கிறது உங்கட கண்ணுக்குத் தெரியேல்லையா அண்ணி? அவளை மட்டும் கூப்பிட்டுக் குடுக்கிறீங்க. எனக்கு எங்க சாப்பாடு? போங்க போய் எடுத்துக்கொண்டு வாங்க!” என்று ஏவினார்.
நிலனுக்குத் தாடை இறுகியது. சூடாக ஏதாவது சொல்ல நினைத்தவனைத் தவிப்புடன் வேண்டாம் என்று இறைஞ்சிய சந்திரமதியின் பார்வை அடக்கிற்று.
சந்திரமதிக்கும் முகம் மாறாமல் இல்லை. ஆனாலும் இன்னொரு சண்டையை விரும்பாமல், “பிள்ளைத்தாச்சிப் பொம்பிளை பசியில இருக்கக் கூடாது எண்டுதான் மச்சாள் அவாவை முதல் கவனிச்சனான். சமையல் எல்லாம் முடிஞ்சுது. இப்ப கொண்டு வாறன்.” என்றபடி திரும்பவும் அடுப்படிக்கு விரைந்தவரைக் கரம் பற்றித் தடுத்தாள் இளவஞ்சி.
“என்னம்மா?” என்ற சந்திரமதிக்குத் தவிப்பு. இளவஞ்சியும் பேச ஆரம்பித்தால் நிலைமை எப்படி மோசமாகும் என்று அவருக்குத் தெரியுமே.
“நீங்க இருங்க மாமி. அவாவே எடுத்துச் சாப்பிடுவா.” என்றாள் இளவஞ்சி நிதானமாக.
தான் பயந்ததுபோலவே அவள் கதைக்கவும், “இதுல என்னம்மா இருக்கு. சமச்சதக் கொண்டுவந்து மேசைல வைக்கிறது எல்லாம் ஒரு வேலையா?” என்று திரும்பவும் நகரப்போனவரை அப்போதும் அவள் விடவில்லை.
“அதாலதான் சொல்லுறன். அவாவே கொண்டுவந்து வச்சுச் சாப்பிடுவா. நீங்க இருங்கோ.” என்று பிடிவாதமாக அவரைத் தன்னருகில் அமர்த்தியே வைத்திருந்தாள்.
இதையெல்லாம் பார்த்திருந்த ஜானகி, “அண்ணி! இப்ப சாப்பாடு போடப்போறீங்களா இல்லையா?” என்றார் பல்கலைக் கடித்தபடி.
“மாமிக்கு என்ன பதினெட்டு வயசா, ஓடியாடி எல்லாத்தையும் செய்ய? அதவிட அவாக்கும் உடம்பு சரியில்ல. கவனமா இருக்கோணும் எண்டு டொக்டர் சொல்லியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனா இவ்வளவு காலமும் இந்த வீட்டைப் பாத்த மனுசிய நீங்க இருத்தி வச்சுப் பாத்திருக்கோணும். அத விட்டுப்போட்டு என்னவோ வேலைக்காரிட்டச் சொல்லுற மாதிரி வேலை ஏவுறீங்க?” என்றாள் அவரிடமே இளவஞ்சி நேராக.


