கட்டிலின் முகப்பில் முதுகுக்குத் தலையணையை அணைவாகக் கொடுத்து அமர்ந்திருந்தான் ரஞ்சன். அவன் கை வளைவுக்குள்ளேயே சுருண்டு கிடந்த சித்ராவுக்கு உடம்பும் மனமும் சோர்வாக இருந்தது. அவனுடன் மதியம் போட்ட சண்டையினாலும், அழுத அழுகையினாலும் தலை வலித்தது.
இன்று மட்டுமில்லை, சில நாட்களாகவே இப்படிச் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டாள்.
திருமணத்துக்கு முதல் நடந்தவைகளை மனதுக்குள் போட்டு உழன்றபடி இருந்ததனால்தான் அப்படி இருந்தது போலும் என்று எண்ணும்போதே, இந்த வீட்டுக்கு வந்த புதிதில் அப்படியெல்லாம் இருக்கவில்லையே என்கிற நினைவும் சேர்ந்தே வந்தது.
இந்த மாதம் மட்டும் ஏன்… மாதம்.. நாள்.. சட்டென மூளையில் எதுவோ பளிச்சிடப் பரபரப்புடன் எழுந்தமர்ந்தாள் சித்ரா.
“இப்போது எதற்கு எழும்புகிறாய்..”
மனைவியின் அருகாமையை இழக்க விரும்பாமல் கேட்டவனிடம் ஒன்றும் சொல்லாது, நாட்களை வேகமாகக் கணக்குப் போட்டவளின் முகம் பளீரென மலர்ந்தது.
எதையெதையோ எல்லாம் நினைத்துக் குமைந்தபடி இருந்ததில் இதைக் கவனிக்காமல் போனோமே என்று எண்ணியவளுக்கு, அதை உடனேயே உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற பரபரப்புத் தொற்றிக்கொள்ள சுவரில் தொங்கிய மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தாள்.
“இரவு ஏழு மணிதான் ஆகிறது. ஏன், பசிக்கிறதா?” என்று கேட்டான்.
அப்போதும் அவனுக்குப் பதிலைச் சொல்லாதவளின் மனமோ, ‘ப்ச்! லதாக்கா வீட்டுக்குப் போயிருப்பார்கள்’ என்று சலித்துக்கொண்டது.
“என்ன யாழி? ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்.” என்று கேட்டவனிடம், ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்துவிட்டு அவன் மார்புக் கூட்டுக்குள் மீண்டும் ஒண்டினாள் சித்ரா. இன்னும் அழுத்தமாக!
இதயமோ அதுதான்.. அதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று துடித்தது.
அவளின் செய்கைகளில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தபடி, “யாழி?” என்று அவள் பெயரையே கேள்வியாக்கினான் கணவன்.
அவளோ அவனுக்குள் இன்னுமின்னும் புதைய, அதுவே அவன் தாபத்தைக் கிளறிவிட்டது.
மெல்ல அவளின் புருவத்தை நீவி, கன்னம் வருடி, இதழ்களைத் தடவியவனின் விரல்கள் அதை சற்றே அழுத்தமாகப் பற்றின. அதில் உடல் சிலிர்க்க அவனுக்குள் இன்னும் அவள் புதைய, மனைவியின் முகத்தை வாகாக நிமிர்த்தி அவளின் இதழ்களோடு தன் இதழ்களைப் பொருத்தினான் ரஞ்சன்.
அதற்குமேலும் பொறுக்க மாட்டாமல் அவளைக் கட்டிலில் கிடத்தித் தன் தேடலைத் தொடங்கியபோது, அதுவரை வேறு ஏதோ ஒரு உலகத்தில் மிதந்தவள் அப்போதுதான் தன்னுணர்வு பெற்றாள்.
அவளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்த கணவனைச் சட்டெனத் தடுத்தபடி, “இன்றைக்கு வேண்டாமே.. ப்ளீஸ்..” என்றாள் பலகீனமாக.
அவள் எண்ணுவது போல குழந்தையாக இருந்தால், இதனால் குழந்தைக்கு ஏதும் ஆகுமோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.
சும்மா இருந்தவனின் உணர்வுகளைத் தானாகவே கிளறிவிட்டவளின் மறுப்பில் முகத்தில் ஏமாற்றம் கவிழ்ந்த போதும், “ஏன்டா..” என்று கேட்டான் அவன்.
கணவனின் மனநிலை புரிந்தாலும், “அது.. நான்.. எனக்குக் களைப்பாக இருக்கிறது..” என்றாள் மெல்லிய குரலில்.
“ஓ..!” என்று இழுத்தவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
தன்னைச் சமன் படுத்திக்கொண்டு எழுந்து அமர்ந்தவன், “ஏதாவது குடிக்கிறாயா? டீ போட்டுத் தரவா?” என்று அவள் புருவங்களை நீவி விட்டபடி கேட்க, அவளுக்கோ கண்ணைக் கரித்தது.
நிச்சயமாகத் தெரியாமல் எதையும் வாய்விட்டுச் சொல்லவும் முடியவில்லை.
“இல்லை.. வேண்டாம்.. சாரி..” என்றவளை இதமாக அணைத்துக் கொண்டான் ரஞ்சன்.
“அசடு! கொஞ்ச நேரம் பேசாமல் படுத்திரு. எல்லாம் சரியாகிவிடும்.” என்றவன், அவளுக்கு இதமாகப் புருவங்களை மீண்டும் நீவிவிடத் தொடங்கினான். மெல்ல மெல்ல ஆழ்ந்த உறக்கம் வந்து சித்ராவைத் தழுவிக் கொண்டது.
உறங்கிவிட்ட மனைவியின் நெற்றியிலே மெலிதாக இதழ் பதித்துவிட்டு எழுந்தவன், கீழே கடைக்குச் சென்றான்.
வேலைகளை முடித்துக்கொண்டு அவன் வந்தபோதும் இன்னும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் சித்ரா. அவன் குளித்து சற்று நேரம் தொலைகாட்சி பார்த்து என்று நேரத்தைக் கடத்தியபோதும் அவள் எழுந்து கொள்ளவில்லை.
இப்படியே விட்டால் இரவு உணவு இல்லாமலேயே உறங்கிவிடுவாள் என்று நினைத்து மெல்ல அவளைத் தட்டி எழுப்பினான்.
“என்னைத் தூங்க விடுங்கள் ரஞ்சன்..” என்றபடி, கட்டிலில் அமர்ந்திருந்தவனை அண்டிக்கொண்டு படுத்தாள் சித்ரா.
“சரிமா. ஆனால் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்.”
“எனக்குப் பசியில்லை. நீங்கள் சாப்பிடுங்கள்..”
“பசியில்லாவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டுப் படு. இல்லாவிட்டால் உடம்பு கெட்டுவிடும். சும்மாவே மெலி மெலி என்று மெலிந்து எலும்புக் கூடாக இருக்கிறாய்..” என்று இதமாக அவன் கடிந்துகொள்ள, பட்டென விழிகளைத் திறந்தாள் சித்ரா.
‘அவள் சாப்பிடாமல் படுத்தால் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்குப் பசிக்குமே..’ என்று நினைத்த மாத்திரத்திலேயே வேகமாக எழுந்தமர்ந்தவள், “எங்கே சாப்பாடு. தாருங்கள் சாப்பிட..” என்றாள் அவசரமாக.
ரஞ்சனோ மனைவியை அதிசயமாகப் பார்த்தான்.
பின்னே, சில காலை நேரங்களில் அலுப்பில் டீயை கட்டிலுக்கே கொண்டுவா என்று அவன் சொன்னாலே, முகம் கழுவிட்டு ஹாலுக்கு வந்தால் தான் டீ என்று உறுதியாகச் சொல்பவள் இன்று கட்டிலில் இருந்தபடி சாப்பாட்டைக் கேட்கிறாளே..
எதையும் வெளிக்காட்டாது எழுந்து சென்று உணவை எடுத்துவந்தவன், அதை வாங்குவதற்காக கையை நீட்டியவளைத் தடுத்துவிட்டு தானே ஊட்டிவிட்டான்.
மறுத்து எதுவும் சொல்லாது அந்தத் தட்டில் இருந்த முழு உணவையும் உண்டுவிட்டே விட்டாள் சித்ரா.
‘பசியில்லை என்று சொன்னாளே..’ அதையும் கேட்கவில்லை ரஞ்சன்.
குடிக்கத் தண்ணீர் கொடுத்து அவள் வாயையும் துடைத்துவிட்டவன், “இப்போது படு..” என்றபோது, “நீங்களும் சாப்பிடுங்கள்..” என்றுவிட்டுக் கட்டிலில் சரிந்தாள் சித்ரா.
அதுவும் அவனுக்குப் புதிராகவே இருந்தது. அதுவரை நாளும் அவனுக்குப் பரிமாறாமல் அவள் விட்டதே இல்லை.
தானும் உணவை முடித்துக்கொண்டு வந்த ரஞ்சன், அதற்கிடையில் மீண்டும் உறங்கிவிட்ட மனைவியை அணைத்தபடி படுத்துக்கொண்டான்.
அடுத்தநாள் காலையில் எழுந்ததுமே, வழமைபோல் தயாரான சித்ரா, “என்னை அப்பாவின் கடையில் விட்டுவிடுங்கள் ரஞ்சன்.” என்றாள்.
கையில் மணிக்கூட்டைக் கட்டிக்கொண்டு இருந்தவன் வியப்போடு அவளைப் பார்த்தான்.
“ஏன், உன் ஸ்கூட்டிக்கு என்னவாகிற்று?”
“ப்ச் ரஞ்சன்! இப்போது உங்களால் கூட்டிக்கொண்டு போக முடியுமா முடியாதா?”
ரஞ்சனின் இதழ்களில் புன்முறுவல் ஒன்று பூத்தது.
அவளை நெருங்கி மூக்கைப் பிடித்துச் செல்லமாக ஆட்டி, “வர வர உன் பிடிவாதத்துக்கு அளவே இல்லடி!” என்றான் சிரிப்போடு.
“அது.. அது..” என்று அவள் திக்கித் திணற, “சரி வா.. கூட்டிக்கொண்டு போகிறேன்..” என்று அழைத்துச் சென்றான்.
வண்டியில் போகும்போதோ, “மெல்லப் போங்கள் ரஞ்சன்..” என்று சொல்லிச் சொல்லியே அவன் பொறுமையைச் சோதித்தாள் சித்ரா.
இருந்தாலும், மனைவியிடம் தெரிந்த ஏதோ ஒரு வித்தியாசத்தில் அவள் சொன்னபடியே மெதுவாக அவன் ஓட்ட, “இன்னும் கொஞ்சம் மெதுவாகப் போங்களேன் ரஞ்சன். எதற்கு இவ்வளவு வேகம்?” என்று சினந்தவளை கண்ணாடி வழியாப் பார்த்து முறைத்தான் அவன்.
“இதைவிடவும் மெதுவாகப் போனால் நடந்து போகிறவர்கள் நம்மை முந்திவிடுவார்கள்!” என்றான் கடுப்புடன்.
அவளோ அவன் பேச்சைச் சட்டையே செய்யவில்லை.
சந்தானத்தின் கடையில் சென்று இறங்கியவள், ரஞ்சன் அங்கிருந்து கிளம்பியதுமே, “அப்பா, நான் வெளியே போய்விட்டு வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு அவரது பதிலை எதிர்பாராது வெளியே நடந்தாள்.
அவள் சென்றது லதாவிடம்.
“ஹேய் சித்து!! வாவா. எப்படி இருக்கிறாய்?” என்று வரவேற்றார் அவர்.
அவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “லதாக்கா, நான் செக்கப்புக்கு வந்தேன். உடனேயே பார்த்துச் சொல்லுங்கள்!” என்றவளை முறைத்தார் லதா.
“என்னடி, வந்ததும் வராமல்… ஹேய் சித்து.. நிஜமாவா? நாள் தள்ளிப் போயிருக்கிறதா?” என்றவரும் ஆவலோடு அவளைப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்.
விழிகளில் ஆவலைத் தேக்கி, மனம் படபடக்க, ‘கடவுளே குழந்தை என்றுதான் லதாக்கா சொல்ல வேண்டும்’ என்று நெஞ்சம் வேண்ட லதாவின் பதிலுக்காகக் காத்திருந்தாள் சித்ரா.
சித்ராவை மகிழ்ச்சியோடு அணைத்துக்கொண்ட லதாவும், “நீ நினைத்தது சரிதான். இப்போது உன் வயிற்றில் பத்துவாரக் கரு. வாழ்த்துக்கள் சித்து.” என்றார் அவளை ஏமாற்றாது.
அதைக் கேட்டதுமே ஆனந்தத்தில் சித்ராவின் விழிகள் கண்ணீரை வடித்தன.
“நன்றிக்கா..” என்றவள் உணர்ச்சிவசப்பட்டு தானும் அவரை அணைத்துக்கொண்டாள்.
திடீரெனத் தோன்றிய சந்தேகத்துடன், “லதாக்கா, உறுதியாகத்தானே சொல்கிறீர்கள். நன்றாகப் பார்த்தீர்கள் தானே. எதுவும் மாறாதே..” என்று தவிப்புடன் கேட்டாள் சித்ரா.
என் மீதே உனக்குச் சந்தேகமா என்று லதாவால் கோபப்பட முடியவில்லை. அவளைப் பற்றிய முழு விபரமும் அறிந்தவர் அல்லவா. முதல் குழந்தையை இழந்தபோது அவள் துடித்த துடிப்பையும் அழுத அழுகையையும் நேரடியாகப் பார்த்தவர் தானே!
“உனக்கு எதற்கு இந்தச் சந்தேகம். வா ஸ்கான் பண்ணியே பார்த்துவிடலாம்..” என்றவர், அவளை அதற்கான அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த கட்டிலில் சித்ரா படுக்க, ஸ்கான் செய்து பார்த்த லதாவின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
லதாவையும் அங்கே முன்னே தெரிந்த ஸ்க்ரீனையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, “என்னக்கா.. என்ன? ஏதும் பிரச்சினையா?” என்று கேட்டாள் கலவரமான குரலில்.
“பிரச்சினையா?” என்று கேட்டுச் சிரித்தவர், மகிழ்ச்சியோடு அவள் வயிற்றைத் தொட்டுக் காட்டி, “இந்த வயிற்றுக்குள் ஒன்றல்ல இரண்டு குட்டிகள் இருக்கிறார்கள்..” என்றார்.
“அக்கா உண்மையாகவா!?!” வியப்பு, மகிழ்ச்சி, அதிசயம் என்று அனைத்துமாகக் கூவினாள் சித்ரா.
“எங்கே.. எனக்கும் காட்டுங்கள். நானும் பார்க்கவேண்டும்.” என்று பரபரத்தவளுக்கு, அவள் வயிற்ருக்குள் கருக்களாக இருந்த இரண்டு சிசுக்களையும் சுட்டிக் காட்டினார் லதா.
ஆசையோடும் ஆவலோடும் தன் மணிவயிற்றுக்குள் பத்திரமாக இருந்த சிசுக்களை விழியகற்றாது பார்த்துப் பார்த்து ரசித்தாள் சித்ரா. கண்கள் வழியாக வயிற்றுக்குள் இருந்த மகவுகளை நெஞ்சுக்குள் நிறைத்துக் கொண்டவளின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் அளவின்றி வழிந்துகொண்டே இருந்தது. சின்ன விம்மல் கூட வெடித்தது.
முதன் முதலாய் உதித்த முத்தைப் பறிகொடுத்து விட்டேனே என்று துடித்துக் கொண்டிருந்தவளுக்குப் பரிசாக இப்போது இரண்டு முத்துக்கள்!
நினைக்க நினைக்க மனம் விம்மிப் புடைத்தது!
“ஆசை தீரப் பார்த்துவிட்டாயா? போதுமா? இப்போது உன் சந்தேகம் தீர்ந்ததா? ஆனாலும், உன் கணவரின் வேகத்துக்கு அளவே இல்லை.” என்று கேலி பேசவும் மறக்கவில்லை லதா.
கண்களில் இருந்து வழிந்த கண்ணீரோடு கன்னங்கள் சிவக்க மலர்ந்து சிரித்தாள் சித்ரா.
லதாவிடம் ஆயிரம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டவள், “லதாக்கா, இந்த முறை நீங்கள் யாரிடமும் மூச்சே விடக் கூடாது. நானே எல்லோரிடமும் சொல்லவேண்டும். அப்படி ஏதாவது உங்கள் வாயால் வெளிவந்தது என்று தெரிந்தது அண்ணாவிடம் உங்களைப் போட்டுக் கொடுத்துவிடுவேன்!” என்று செல்லமாக அவரை மிரட்டிவிட்டே அங்கிருந்து வெளியேறினாள்.
கணவனை அப்போதே அந்த நிமிடமே பார்த்துவிட மனம் பரபரத்தது. அவனைக் கட்டிக்கொண்டு, அவன் நெஞ்சில் சாய்ந்தபடி, அவன் வழங்கும் முத்தங்களைப் பரிசாகப் பெற்றபடி இந்த மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்துகொள்ளத் துடித்தவள், அவனுக்கு அழைத்தாள்.
“என்ன, என் திருமதிக்கு என்னை விட்டுவிட்டு இருக்க முடியவில்லையோ?” சரசமாகக் கேட்டான் ரஞ்சன்.
அவனிடம் என்னென்னவோ சொல்லத் துடித்தவளுக்கு ஓராயிரம் வார்த்தைகளைக் கொண்ட தமிழில் ஒருவார்த்தை கூட வாயில் வர மறுத்ததில், “இதயன்..” என்று அவன் பெயரையே வார்த்தையாக்கி, உயிர்நேசத்தையே அதில் தேக்கி அழைத்தாள் சித்ரா.