ஆக, அவருமே அவள் வேலையை விடமாட்டாள் என்பதைத்தான் பூசி மெழுகுகிறார். அப்படியானால், அடுத்த இரண்டு வருடத்துக்கும் தனிமையில் கிடந்து வேகட்டுமாமா? “இப்ப என்ன மாமா சொல்லுறீங்க? என்ர மகள் உன்னட்ட வரமாட்டாள், உனக்கு மனுசி வேணும் எண்டால் நீ அங்க போ எண்டா?”
இப்படி, அவரிடமே நேரடியாகக் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை அவர். சற்றே திகைத்தாலும், “இதையே எங்கட மகளும் திருப்பிக் கேக்கலாம் தானே தம்பி?” என்று வினவினார்.
“கேக்கத் தேவையில்லை மாமா.” என்றான் அவன் உடனேயே. “ஏன் எண்டால் அவளின்ர விருப்பத்துக்கே நான் விட்டுட்டன். ரெண்டு வருசம் இப்பிடியே போகட்டும். பிறகு நான் கொழும்புக்குப் போற காலம் வரேக்க, உங்கட மகளுக்கு என்னோட வாழ விருப்பம் எண்டால் சேர்ந்து வாழுவோம். இல்லாட்டி என்ன எண்டு அந்த நேரம் பாப்பம்.” என்றான் அக்கறையற்ற குரலில்.
இடி விழுந்தது போன்று நிலைகுலைந்து போனார் அவர். “என்ன தம்பி இதெல்லாம்? இதுக்கா படாத பாடெல்லாம் பட்டு உங்களுக்குக் கலியாணத்தைச் செய்து வச்சோம்? பிரச்சனையத் தீர்த்து சந்தோசமா வாழுவீங்க எண்டு பாத்தா இப்பிடிச் சொல்லுறீங்களே?” என்றவருக்குக் குரலே உடைந்து போயிற்று. ஆசை மகளின் வாழ்க்கை. அதை எவ்வளவு இலகுவாகப் பேசிவிட்டான் மருமகன்?
“என்னை வேற என்ன செய்யச் சொல்லுறீங்க? நீங்களே சொல்லுங்கோ? வேலைய விடச் சொல்லுறீங்களா?”
அவரால் எப்படி அப்படிச் சொல்ல முடியும்? பதிலற்று நின்றார்.
“உங்களிட்டயே பதில் இல்ல பாத்தீங்களா? இதுதான் என்ர நிலையும். இது ஆணாதிக்கக் குணமோ, இல்ல, என்ர வறட்டுப் பிடிவாதமோ இல்ல. வாழ்க்கைல முன்னேறுறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. அதை விடேலாது எண்டுதான் சொல்லுறன். அதை விடாம அவளோட போயிருக்க ஏலாது. இது எல்லாத்தையும் விட, நல்ல வேலைய விட்டுட்டு, ஒண்டுக்கும் உதவாத ஒரு வேலையைப் பாத்துக்கொண்டு, அவளோட போயிருந்தாத்தான் ஒரு குடும்ப வாழ்க்கை எண்டால், அதுல எனக்கு விருப்பம் இல்ல. அப்பிடி ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம். ரெண்டு வருசம் கழிச்சு என்ன எண்டாலும் பாப்பம்.” என்றான் அப்போதும் முடிவாக.
“என்ன தம்பி இது? நீங்க வீம்பு பிடிச்சு நிக்க இது விளையாட்டு இல்ல. வாழ்க்கை. கொஞ்சம் கோவப்படாம யோசிங்கோ. கலியாணம் பேசேக்க கூட அவா திரும்பத் திரும்பச் சொன்ன ஒரே விசயம், ‘அப்பா நான் வேலையை விடமாட்டன் எண்டு தெளிவாச் சொல்லுங்கோ, நாளைக்கு இதால எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது’ எண்டுறதுதான். நாங்களும் அதை மறைக்காம உங்களிட்டச் சொல்லித்தான் பேசினாங்க. கலியாணம் முடிஞ்ச கையோடயே நீங்க கொழும்புக்கு வந்திருக்க வேணும். ஆனா, நீங்க வரேல்ல. இப்ப வரைக்கும் நாங்க அதைப்பற்றிக் கதைக்க இல்ல. இப்ப இன்னும் ரெண்டு வருசத்துக்குப் பிரிஞ்சு இருக்கப்போறீங்க எண்டுற கவலையிலதான் நான் கதைக்கவே வந்தனான்.”
அவரின் பேச்சில் கோகுலனின் முகம் இறுகிப்போயிற்று. “உண்மைதான் மாமா. பிழை என்னில தான். சொன்ன சொல்ல காப்பாத்த ஏலாமப் போச்சு.” என்றான் அவரின் முகம் பாராமல்.
அதைக்கேட்டுப் பதைத்துப்போனார் கஜேந்திரன். அவனைக் குத்திக் காட்டவோ, அவனுக்குக் கோபத்தை உண்டாக்கவோ அவர் நினைக்கவில்லை. மகளின் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க முனைந்தார். அது சரியாக அவனிடம் சென்று சேரவில்லையோ என்கிற அவசரத்துடன் பேசினார் அவர்.
“தம்பி, இப்ப யார்ல பிழை, யார்ல சரி எண்டு கதைக்க வரேல்ல நான். யார் விலகி நிண்டாலும் அநியாயமாப் போறது உங்கள் ரெண்டுபேரின்ர வாழ்க்கையும் தான். அவா வேலைய விட்டுட்டு உங்களிட்ட வருவாவா, இல்ல, நீங்க போவீங்களா தெரியாது. எங்களுக்கு நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா வாழவேணும். அதுக்கு என்ன செய்ய வேணுமோ அதைச் செய்ங்கோ. இதைத்தான் மகளிட்டயும் சொன்னனான். மருமகனா இருந்தாலும் உங்களையும் நான் என்ர மகன் மாதிரித்தான் நினைக்கிறன். அந்த உரிமையோடதான் மனதை மறைக்காமக் கதைச்சனான். நான் ஏதாவது பிழையாக் கதைச்சிருந்தா தயவு செய்து கோவிக்காதீங்கோ தம்பி.” கண்கள் கலங்கச் சொல்லிவிட்டுப் போனார் அவர்.
பொய்க்கால் பொறுத்தப்பட்டிருந்ததில் வேகமாக நடக்க முடியாமல் தாண்டித் தாண்டி நடந்து செல்கிற அந்த மனிதரைப் பார்த்தான் கோகுல். நெஞ்சினில் என்னவோ செய்தது. ஆனாலும், சொன்ன வாக்கை அவன் காக்கவில்லை என்ற அவரின் வார்த்தைகள், அவன் நெஞ்சில் ஆழமாகவே
இறங்கியிருந்தது.

