அத்தியாயம் 16
ரஜீவன் பதறிப்போனான். எது நடந்துவிடக் கூடாது என்று பயந்தானோ அது நடந்தே விட்டதே. அவன் பட்ட பாடெல்லாம் வீணாகப் போயிற்றே. எவ்வளவு தைரியமாக அவன் முன்னேயே தங்கையைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போகிறான். நெஞ்சு காந்தியது.
“இல்லை அத்தான். நீங்க என்னைப் பிழையா நினைச்சாலும் சரி, இதுக்கு நான் ஒத்துக்கொள்ளவே மாட்டன். அவர் சொல்லுற மாதிரி இதைச் சொல்ல எனக்கு ரைட்ஸ் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் சம்மதிக்காம என்ர தங்கச்சி ஆரையும் கட்டமாட்டாள்.” என்று இருந்த பதட்டத்தில் படபடத்தான்.
கௌசிகனுக்கும் மோகனன் நடந்துகொண்ட விதம் பிடிக்கவில்லை. பழையபடி ஆரம்பிக்கிறானே என்று நினைத்தான். அவன் பார்வை ராதாவிடம் சென்றது.
முற்றிலுமாக உடைந்துபோயிருந்தாள். மிகுந்த வேதனையைச் சுமந்திருந்தது அவளின் முகம். கண்கள் இரண்டும் கலங்கிச் சிவந்திருந்தன.
ஆனாலும் நிமிர்ந்து கௌசிகனை நேராகப் பார்த்து, “உங்களை மீறி எதுவும் நடக்காது எண்டுற நம்பிக்கையோட போறன் அண்ணா.” என்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.
அதுவரை நேரமும் நடந்ததை எல்லாம் ஒருவிதத் திகைப்புடனேயே கவனித்துக்கொண்டு நின்றிருந்த செல்வராணி, “ஏன் அம்மாச்சி, உனக்கு…” என்று அவசரமாக ஆரம்பிக்க, வாசலுக்குப் போய்விட்டவள் நின்று திரும்பினாள்.
“நாங்க நிறைய விசயத்தில உங்களிட்டக் கடமை பட்டிருக்கிறோம் மாமி. அதால, நீங்க கேட்டும் மறுக்கிற இடத்தில என்ன நிப்பாட்டிப் போடாதீங்கோ, பிளீஸ். எனக்கும் சில ஆசைகள், எதிர்பார்ப்புகள், கனவுகள் எல்லாம் இருக்கு. அதுக்குள்ள உங்கட மகன் வரேல்ல.” என்றாள் கனம் மிகுந்த குரலில்.
அப்படியே நின்றுவிட்டார் செல்வராணி. தன் ஆசை நிராசையானதில் கவலையாக இருந்தாலும் அதைப் பற்றி இனி யோசிப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டு வேகமாக வந்து அவளின் கையைப் பற்றினார்.
“என்ர சின்னவனுக்கு உன்னக் கட்டிவச்சா அவன் நல்லாருப்பான் எண்டு நான் நினைச்சது உண்மைதான். எப்பிடியாவது உன்னோட கதைச்சு, ஓம் ஒண்டு சொல்ல வைக்கோணும் எண்டு நினைச்சதும் உண்மைதானம்மா. அதுக்காக, எங்களிட்டக் கடமைப்பட்டிருக்கிறாய்தானே அதுக்குப் பதிலா இதைச் செய் எண்டு கேக்கிற அளவுக்கு மோசமான குணம், இந்த வீட்டில ஆருக்குமே இல்லையாச்சி. எதையும் எதிர்பாத்து ஆருக்கும் எதையும் நாங்க செய்ததும் இல்ல. இவ்வளவு நாளா சொந்தப்பிள்ளை மாதிரி இந்த வீட்டுக்கு வந்துபோற உனக்கு இது தெரியாம போச்சா? ஆனாலும், இந்தளவுக்கு நீ சொன்னபிறகு இனிமேல் இதைப் பற்றி நான் கதைக்கமாட்டன். நீ கவலைப்படாத!” என்றார் ஆதுரம் நிறைந்த குரலில்.
ராதாவுக்கு விழிகள் மீண்டும் கலங்கிற்று. “சொறி மாமி!” என்றாள் கரகரத்த குரலில்.
செல்வராணி மென்மையாக அவளின் கையைத் தட்டிக் கொடுத்தார். “என்னத்துக்கு மன்னிப்புக் கேக்கிறாய்? இது வாழ்க்கை. மிச்சம் இருக்கிற காலம் முழுசுக்கும் வரப்போற துணை. பிடிக்காம வாழ ஏலாது. அதால நீ எதைப் பற்றியும் யோசிக்காம கவனமா போயிட்டு வா.” என்று அனுப்பிவைத்தார்.
*****
காரில் சென்றுகொண்டிருந்த மோகனனுக்கு வீட்டில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டு வந்திருக்கிறோம் என்று தெரியாமல் இல்லை. அதற்காகவெல்லாம் அவன் கவலைப்படவும் இல்லை, பயப்படவும் இல்லை. துணிந்து இறங்கியாயிற்று. வருவதை எதிர்கொள்ளும் தைரியமும் இருக்கிறது. பிறகு என்ன?
உண்மையைச் சொல்லப்போனால், இத்தனை நாட்களாக நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகிய உணர்வு இப்போதுதான் வந்தது. மனத்தினில் ஒருவித உற்சாகமும் துள்ளலும் குடிபுகுந்தன. ‘என்னை வேண்டாம் வேண்டாம் எண்டு சொல்லிச் சொல்லியே அவாதான் வேணும் எண்டு நினைக்க வச்சிட்டா…’ கண்களில் மின்னிய சிறு சிரிப்புடன் காரின் கண்ணாடியைப் பார்த்து மீசையை நீவி விட்டான்.
அவள் மீதான ஈர்ப்பு ஒன்று அவனுக்குள் உருவாகிக்கொண்டு இருப்பதை அறிந்தேதான் இருந்தான். அது எந்தப் புள்ளியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று தெரியாமல் இருக்க அவன் சிறுவனும் அல்லன்.
இருந்தபோதிலும் அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் அவனால் முடிந்திருந்தது. கடைசிவரைக்கும் கூட அப்படியேதான் இருந்திருப்பான். இன்றைய அவன் மனது அந்தளவில் உறுதியானது; திடமானது.
கூடவே, செய்த தப்புகள் எல்லாம் உப்பு மூட்டைகளாக அவன் தோளிலேயே கனத்துக்கொண்டு இருக்கையில், அவளின் முன்னே சென்று நின்று, உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிடவும் அவனால் முடியாது. சொல்லவும் நினைத்திருக்கவில்லை.
ஆனால், அவனுடைய மொத்த உறுதியையும் அவளின் ஒற்றைக் கண்ணீர்த் துளி உடைத்துவிட்டதை அவள் அறிவாளா? தன் நேசத்தைக் கூட தனக்குள்ளேயே போட்டுப் புதைத்துவிட்டு நடமாடியவன், அவளின் கலங்கிய தோற்றம் கண்டு உனக்கென நானிருப்பேன் என்று வீறுகொண்டு எழுந்துவிட்டதை உணர்வாளா?
இன்றைக்கு அவன் ஒன்றும் இளமையின் வாசலில் நிற்கும் வாலிபன் அல்லன். முழுமையான மனிதன்.
திருமணம் என்பதைத் தெளிந்த மனத்தோடு, சீர் தூக்கிப் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டியவன். அதற்கு மாறாக, அவளிடம் தன் மனத்தைச் சொல்லிவிட்டதை ஒரு சிறுவனின் உற்சாகத்துடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறான்.
பிரச்சனைகளே இனித்தான் ஆரம்பிக்கப் போகிறது. ஆனாலும் அதெல்லாம் அவனுக்குப் பொருட்டாகத் தோன்றவே இல்லை.
தன்னை நினைத்தே சிரிப்பு வந்தாலும் சந்தோசமாக உணர்ந்தான். தீபாவை விரும்பிய காலத்தில் கூட அவளை யாருக்கும் கொடுத்துவிடக் கூடாது என்கிற தீவிரம் இருந்தது. நான் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்கிற மூர்க்கம் இருந்தது.
இப்படி, ஒருத்தியை நேசிப்பதைக் கொண்டாடும் மனநிலை இருக்கவில்லை. தன்னைத் தானே ரசிக்கவில்லை. முகம் கொள்ளா புன்னகையை அடக்கத் தெரியாமல் அலையவில்லை.
இதோ, இதற்குள் கார் கண்ணாடியில் அவன் முகத்தை அவனே பார்த்துவிட்ட தடவைகளை எண்ணி மாளாது. சிரிப்புடன் பிடறியில் தட்டிக்கொண்டான். அந்தக் கையைத் தூக்கியபோது புடைத்து எழுந்த புஜத்தைக் கண்டவனுக்குத் தன் தோற்றமே அவளுக்குப் பிடிக்காது என்பதும் சேர்ந்து உதட்டு முறுவலை இன்னுமே பெரிதாக்கிற்று.
தன் நேசத்தைக் குறித்தான இத்தனை பரபரப்புகள் அவனுக்குள் இருந்தாலுமே, கனவுகளிலும் இனிய நினைவுகளிலும் மாத்திரமே காலத்தை ஓட்ட அவன் தயாராயில்லை. காதலிக்க ஆரம்பித்தவன் உழைப்புக்கு வழி செய்ய வேண்டாமா? இப்படியே இருந்தால், ‘அப்பா வீட்டுக் காசுல வாழுற உனக்கு நான் கேக்குதாடா?’ என்று அவனுடைய சிட்டியே கேட்பாளே.
வீட்டு வேலை செய்கிற வேலையாட்களை அழைத்துக்கொண்டு போய், சுந்தரம் அண்ணாவின் வீட்டைக் காட்டினான். அவன் செய்ய எண்ணியிருந்த வேலைகளைப் பற்றி அவர்களோடு கதைத்தான்.
இன்னும் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் என்றும் கேட்டுத் தெரிந்துகொண்டான். அங்கே வைத்தே, என்ன வேலைகள் எல்லாம் செய்யப்போகிறார்கள், அதற்குத் தேவையான பொருட்கள், அந்தப் பொருட்களை எங்கிருந்தெல்லாம் தருவிக்கலாம், குத்து மதிப்பான செலவுகள், வேலையாட்களின் கூலி, எத்தனை நாட்களுக்கு வேலை இருக்கும் என்று ஒன்றையும் மிச்சம் விடாமல் குறித்து எடுத்துக்கொண்டவனுக்கு அந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்ட முழுமையான வரைபு ஓரளவுக்குக் கிடைத்திருந்தது.
பொருட்களை இறக்குமதி செய்யும் செலவிலிருந்து வேலையாட்களின் உணவு, தேநீர் செலவு வரைக்கும் மறக்காமல் பட்டியல் இட்டுக்கொண்டான்.
அடுத்தநாளும் இன்னொரு பகுதியினரை அழைத்துக்கொண்டு போய் இதைப்போலவே தன் திட்டங்களைச் சொல்லி, அவர்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்றான்.
செலவாகும் தொகை, வேலையாட்களின் அளவு, வேலை நாட்களின் எண்ணிக்கை என்று நேற்றுப் போலவே இன்னொரு வரைபையும் பெற்றுக்கொண்டான்.
அதேபோல ஜன்னல்கள், நிலைகள், சீமெந்து, கல்லு, சல்லி, பைப்புகள், டைல்ஸ் என்று வீட்டுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும் கடைகளிலும் விசாரித்து அவற்றின் விலைகளை அறிந்துகொண்டான்.
அவன் போட்டு வைத்திருக்கிற கணக்குக்குள் பொருந்துகிறதா என்றும் பார்த்து, கணக்கிலும் மாற்றங்களைக் கொண்டுவந்தான். அந்த வீட்டைப் புதுப்பித்த பிறகு என்ன விலைக்குக் கொடுக்கலாம் என்று அங்கே இருந்த ஒரு சில வீட்டுத் தரகர்களோடும் பேசி அறிந்துகொண்டான்.
அவர்களிடம் பேசிய வரையில் நல்ல இலாபம் கிடைக்கும் என்றுதான் தோன்றியது.
இது எல்லாமே மனக்கணக்கும், தாளில் போட்டுப்பார்த்த கணக்கும்தான் என்று அவனுக்குத் தெரியாமல் இல்லை. வேலையில் இறங்கிய பிறகுதான் பல பிரச்சனைகள் வரும். செலவுகள் வரும். அதற்கென்று இறங்காமலேயே இருப்பதா?
சுந்தரம் அண்ணாவிடம் முடிவு சொல்வதாகச் சொல்லியிருந்த இந்த இரண்டு நாட்களுக்குள் நேரம் காலம் பாராமல் இவை அனைத்தையும் முடித்திருந்தான்.
அன்று, இவனோடு கதைப்பதற்கு என்று அழைத்த கௌசிகனிடம் கூட இரண்டு நாட்களில் வருவதாகத்தான் சொல்லியிருந்தான். இன்று, அந்த வீடு குறித்து அவன் சேகரித்த தரவுகள் அடங்கிய கோப்பை எடுத்துக்கொண்டு தமையனைப் பார்க்க அவன் வீட்டுக்கே புறப்பட்டான்.
*****
இந்த இரண்டு நாட்களும் தன்னை அடக்கிக்கொண்டு நடமாடிக்கொண்டிருந்தான் ரஜீவன். என்ன கோபம் என்றாலும் அவர்கள் இருவரும் தனியாக இருக்கையில் அவள் கேட்டிருக்கலாம். சண்டை பிடித்திருக்கலாம்.
அதைவிட்டுவிட்டு, எல்லோர் முன்னும் கேள்வி கேட்டு, மற்றவர்களின் முன்னால் அவனை விட்டுக்கொடுத்துவிட்டாளே. அவனது பயத்தை அவள் புரிந்துகொள்ளவே இல்லையா? அல்லது, அதில் இருக்கிற நியாயத்தை உணரவில்லையா?
ராதாவின் வாழ்க்கைக்கு ஒரு முடிவு வருகிற வரைக்கும் அவனுடைய இல்வாழ்க்கை அமைதியாக இருக்கப்போவதில்லை என்று தெரிந்தது.
இந்தமுறை கௌசிகனை முன்னிறுத்தியே ராதாவுக்கு மாப்பிள்ளை பார்க்க முடிவு செய்து, அதைக் கௌசிகனிடமும் தெரிவித்திருந்தான்.
ஒரு நொடி அமைதி காத்தாலும், “நீ யோசிக்காத ரஜீவன். அவளுக்குப் பிடிச்ச மாதிரியே நல்லவனா பாத்துக் கட்டி வைக்கலாம்.” என்று சொல்லியிருந்தான் கௌசிகன்.
இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்காகக் கௌசிகன் காத்துக்கொண்டிருக்க மோகனனும் அவனைத் தேடி வந்தான்.


