அதுவரை நேரமும் மனதிலிருந்த இதமும் உற்சாகமும் மறைய தலை வலித்தது. சோபாவிலேயே பின்பக்கமாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
கவியின் திருமணத்துக்கு என்று அவன் சேர்த்து வைத்திருந்த காசை, அவளுக்கு இப்போது திருமணம் வேண்டாமாம் என்று சொன்னபோதே வாங்கி, அங்கே இலங்கையில் இன்னொரு வீடு வாங்கிப் போட்டிருந்தார் லக்ஷ்மி. அவனும், கையில் இருந்தால் செலவழிந்துவிடும், அதோடு கவிதாவுக்கு என்று ஏற்கனவே வாங்கிவிட்டிருந்த வீட்டைப்போல் இது பவித்ராவுக்கு இருக்கட்டும் என்றெண்ணி விட்டுவிட்டான். இப்போது திருமணத்துக்கு மாப்பிள்ளை பார் என்றால் செலவுக்கு யாரைப் பார்ப்பது?
அவனது அமைதி பொறுக்க இயலாமல், “தனா?” என்று மெல்ல அழைத்தாள் மித்ரா.
அப்போதும் தன் சிந்தனைகளில் இருந்து அவன் கலையாமல் இருக்கவே, அவன் கையில் தட்டி, “தனா..” என்று திரும்பவும் அழைத்தாள்.
கண்களைத் திறந்து பார்த்தான். அன்னை அவளைக் குத்திச் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டன. மனம் கனக்க, “என்னம்மா?” என்று கேட்டான்.
“ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்கள்?”
“ஒன்றுமில்லை. கொஞ்சம் தலை வலிக்கிறது.”
“ஏன்? இவ்வளவு நேரமும் நன்றாகத்தானே இருந்தீர்கள். தைலம் ஏதும் தடவிவிடவா?”
இதுவே சற்று முன் அவன் இருந்த உல்லாச மனநிலையாக இருந்திருக்க, ஆம் என்றுசொல்லி அந்தச் சுகத்தைத் தவறவிடாமல் அனுபவித்து இருப்பான்.
இப்போது இருப்பவனோ லக்ஷ்மி அம்மாவால் புண்படுத்தப்பட்ட அவரது அப்பாவி மகன் கீர்த்தனன்! “வேண்டாம். கொஞ்ச நேரத்தில் அதுவாகச் சரியாகிவிடும்.” என்றான்.
அது எப்படி? தலைவலி தானாகச் சரியாகும்? ஒன்றும் சொல்லாமல், “சரி. கஃபே ஆறுகிறது. அதைக் குடியுங்கள்.” என்றாள் மித்ரா.
அப்போதும் சிந்தனை வயப்பட்டவனாகவே அதை அருந்தி முடித்தவன், திரும்பவும் மனத்தினதும் தலையினதும் பாரம் தாங்காமல் சோபாவிலேயே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
மனம் தாயையும் அவர் பேசிய பேச்சுக்களையுமே சுற்றிச் சுற்றி வந்தது. அப்போது மென்கரம் ஒன்று அவன் நெற்றியின் இரு பக்கத்தையும் பூப்போல் தொட்டு அழுத்திவிட, சொர்க்க சுகமாய் உணர்ந்தவன் மெல்ல விழிகளைத் திறந்து பார்த்தான்.
சோபாவுக்குப் பின்னால் நின்றுகொண்டு அவனின் நெற்றியைப் பிடித்து விட்டுக்கொண்டிருந்தவள் புன்னகைத்தாள்
அந்த முகத்தில் தவழ்ந்த சாந்தமா, அந்த விழிகளில் தெரிந்த அன்பா, அல்லது அவன் நெற்றியை பிடித்துவிட்ட விரல்களில் தெரிந்த அக்கறையா.. எதுவோ ஒன்று அவனை மெல்ல மெல்ல அமைதிப்படுத்த, அவன் விழிகளும் மெல்ல மூடிக்கொண்டன.
அந்தச் சுகத்தைச் சற்று நேரம் அனுபவித்தான். சுகமாக இருந்தது. “போதும் வா.” என்று அவள் கையைப் பற்றி முன்னால் அழைத்தான்.
அவனருகில் இப்போது தானாகவே வந்து அமர்ந்து, “என்ன பிரச்னை தனா? ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்கள்? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்.” என்று இதமான குரலில் கேட்டாள் மித்ரா.
அவளின் ஒரு கையை எடுத்து தன் இரு கரங்களுக்குள்ளும் அடக்கிக்கொண்டு, “உன்னிடம் சொல்லாமல் என்ன? நீயே கேட்டாய் தானே.. கவிக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி அம்மா சொன்னார். அதில் பிரச்சனை இல்லை. ஆனால் பணத்துக்குத்தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. சமாளிக்க முடியாது என்றில்லை. கடன்பட வேண்டி வரும். அதுதான் மனதுக்கு ஒரு மாதிரி இருக்கிறது.” என்றான்.
அடுத்தக் கணமே, “இதற்குத்தான் இவ்வளவு யோசித்தீர்களா? நானும் கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கிறேன். அதை எடுத்து கவியின் திருமணத்தை முடியுங்கள்.” என்றாள் மித்ரா மலர்ந்த முகத்தோடு.
இப்படியானவளை பார்த்துத்தான் அவனைப் பெற்றவர் என்னவெல்லாமோ சொன்னார்! “அதை நீ உன் தேவைக்காகத்தானே சேர்த்து இருப்பாய்.” என்றான் அவன் புன்னகையோடு.
“எனக்கு என்ன தேவை? சத்திக்கும் வித்திக்கும் எதற்காவது தேவைப்பட்டால் என்றுதான் சேர்த்தேன்.”
“அதை எனக்குத் தந்துவிட்டு, அவர்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் அப்போது என்ன செய்வாய்?”
“ஏன்? அவர்களுக்குத் தேவையானதை நீங்கள் செய்ய மாட்டீர்களா?” என்று அவள் கேட்க, வியப்போடு அவளைப் பார்த்தான் கீர்த்தனன்.
மெல்ல அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டுவந்தான். “யாரோ தன் தம்பி தங்கையின் விசயத்தில் என்னைத் தலையிடக் கூடாது என்று சொன்னார்களே..” என்றான் குறும்போடு.
“நான் சொன்னதும் நீங்கள் கேட்கிற ஆள்தானே?” என்றாள் அவளும்.
அவனது புன்னகை விரிந்தது. “நீ கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த பணம் சத்திக்கும் வித்திக்குமே இருக்கட்டும்.”
“இதென்ன பேச்சு? என் தம்பியும் தங்கையும் உங்கள் பொறுப்பு என்றால் உங்கள் தங்கைகள் என் பொறுப்பாக நான் நினைக்கக் கூடாதா? அவர்களுக்காக என்று நான் தந்தால் நீங்கள் வாங்க மாட்டீர்களா?” என்று தலை சரித்து அவள் கேட்டபோது, கீதனின் மனம் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்காத குறைதான்.
பின்னே, அவள் அவனை நோக்கி வரவேண்டும் என்று சில மணித்தியாலங்களுக்கு முன்னர்த் தான் அர்ஜூனிடம் சொல்லிவிட்டு வந்தான்.
அவன் குடும்பத்துக்காக ஒன்றைச் செய்ய நினைக்கிறாள் என்றால், அவனைத் தன் மனதுக்கு நெருக்கமாக நினைக்கிறாள் என்றுதானே அர்த்தம்.
ஆயினும், அவள் வேலை செய்து கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைத் தான் உறிஞ்சிவிடக் கூடாது என்று மட்டும் மனதில் உறுதியாக நினைத்தான் கீர்த்தனன்.
“என்ன தனா? நான் கேட்டதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே?”
“தேவை என்று வந்தால் கட்டாயம் உன்னிடம் கேட்கிறேன், சரிதானா?” என்று சமாளித்தவனுக்கு ஒன்றுமட்டும் மிக நன்றாகப் புரிந்தது!
எப்போதெல்லாம் அவன் தாயார் அழைத்து அவனுக்குத் தொல்லை கொடுக்க நினைக்கிறாரோ அப்போதெல்லாம் மனதளவில் தங்களுக்குள் ஒருவித நெருக்கம் உருவாகிறது என்பதைச் சந்தோசமாகவே உணர்ந்துகொண்டான் கீர்த்தனன்!

