அவன் குளிக்கச் சென்றுவிட கீழே இறங்கி வந்து சமையற்கட்டை ஆராய்ந்தாள். இரவு ஜெயந்தி செய்த பிட்டும் கோழிக்கறியும் இருந்தன. அவனுக்குப் பிட்டுக்கு நல்லெண்ணையில் பொரிக்கும் முட்டை பிடிக்கும் என்று அவர்களின் வீட்டில் வைத்துக் கவனித்திருக்கிறாள்.
வேகமாக நான்கு சின்ன வெங்காயங்களை உரித்து, சின்ன சின்ன துண்டுகளாக வெட்ட ஆரம்பித்தாள்.
திடீர் என்று சமையற்கட்டிலிருந்து வந்த சத்தத்தில் எழுந்து வந்த ஜெயந்தி சத்தியமாக அங்கே இளவஞ்சியை எதிர்பார்க்கவில்லை.
இதெல்லாம் அவள் இதுவரையில் செய்ததில்லை. சமையல் தெரியும். தையல்நாயகியின் வளர்ப்பில் அப்படிச் சமையல் தெரியாமல் போகச் சாத்தியமே இல்லை. ஆனாலும் சமைக்க அவளுக்கு நேரம் இருந்ததும் இல்லை. அவரும் விட்டதில்லை. ஆனால் இன்றைக்கு?
“என்னட்டச் சொல்லியிருக்க செய்து தந்திருப்பனேம்மா. தள்ளுங்கோ.” என்று அவர் வர, “இல்லை நீங்க போய்ப் படுங்கோம்மா. கறி எல்லாம் இருக்கு. இவருக்கு முட்டையும் இருந்தா விரும்பிச் சாப்பிடுவார். அதான் செய்றன்.” என்று தடுத்தாள் அவள்.
மகிழ்ந்துபோனார் ஜெயந்தி. அவள் சொன்ன விடயமும் அதைச் சொன்ன விதமும் நிலனை அவள் கணவனாக ஏற்றுக்கொண்டதைச் சொல்ல, “சரியம்மா. பாவிக்கிற பாத்திரங்களை இப்பவே கழுவ வேண்டாம். சிங்குக்க போட்டு விடுங்கோ. நாளைக்கு நான் பாக்கிறன்.” என்றுவிட்டு ஒதுங்கிக்கொண்டார் அவர்.
இவள் முட்டையும் பொறித்து உணவை எடுத்துக்கொண்டு மேலே சென்றபோது அவன் குளித்து உடை மாற்றியிருந்தான்.
அவளுக்கும் இரண்டு வாய் கொடுத்துத் தானும் உண்டான் நிலன். அன்று காலையிலும் இப்படித்தானே. அவனுக்கு வயிறு நிறைந்ததோ இல்லையோ அவளுக்கு நெஞ்சம் நிறைந்துபோயிற்று.
எப்போதும் இவள் ஒரு கரையிலும் அவன் ஒரு கரையிலும் படுப்பதுதான் வழக்கம். இன்று அவன் அதற்கு அனுமதிக்கவில்லை. அவளைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டான்.
என்னவோ இளவஞ்சிக்கும் விலக மனமில்லை. ஆழ்மனம் ஆத்மார்த்தமான ஒரு ஆறுதலைத் தேடிக்கொண்டிருந்தது காரணமா, இல்லை அவள் எவ்வளவுதான் விலகி நின்றாலும் விடாமல், இதமாகக் கால் நனைத்துப்போகும் அலை போன்று அவளை அனுசரித்துப் போகும் அவன் குண இயல்பு காரணமா தெரியவில்லை. அவளும் அவன் கையணைப்பில் அடங்கிக் கிடந்தாள்.
இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. தொழிலைப் பற்றியோ, இரு வீடுகளைப் பற்றியோ, இல்லை அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் பற்றியோ பேச விருப்பமில்லை. பேசினால் சண்டையில்தான் முடியும். குறைந்த பட்சம் இருவரும் மற்றவர்பால் முறுக்கிக்கொள்ளும் நிலை வரும்.
அது பிடிக்காததால் அமைதியாக ஒருவர் மற்றவரின் அண்மையை அனுபவித்தனர். அதுவும் தன் மார்பில் அவளைச் சேர்த்து, கன்னம் வருடியவனின் வருடலில் அவள் தேகம் முழுவதிலும் ஒரு சுகம் பரவிப் படர்ந்தது.
அப்போதுதான் மிதுனின் நினைவு வரவும் இன்று அவனோடு பேசியதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டுவிட்டு, “அவனை நம்பி ஷோர்ட் பிலிம் எடுக்க விடலாமா நிலன்?” என்று விசாரித்தாள்.
அவள் வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாதபோதும் அவள் மனத்தைக் கணித்துவிட்ட நிலன் நெகிழ்ந்துபோனான். அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து, “இது தங்கச்சின்ர மனுசன் எண்டுறதால வந்த அக்கறையா, இல்ல…” என்று இழுத்தான்.
“நிலன்.”
“தங்கச்சின்ர மனுசன் எங்களை விட வயதில குறைஞ்சவனா இருந்தாலும் அதட்டி உருட்ட எல்லாம் மாட்டம் வஞ்சி.”
“நிலன்!” என்று அதட்டினாள் அவள். அவளுக்கு அதை உடைத்துப் பேசுவது பிடிக்கவில்லை.
அவள் நெற்றியில் முத்தமிட்டு, “இப்ப விளங்குதா உனக்கு? இதுதான் நீ. ஆருக்காகவும் எதுக்காகவும் உன்ர சுயத்தை இழந்திடாத.” என்றான் அவன்.
ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு, “அவனுக்கு என்ன செய்றது எண்டு சொல்லுங்கோ நிலன்.” என்றாள்.
“உன்னைக் கொண்டுபோய் உனக்கு விருப்பம் இல்லாத துறைல விட்டா ஆர்வமா செய்வியா? அவன் நல்ல நல்ல ஷோர்ட் பிலிம்ஸ் எடுத்திருக்கிறான் வஞ்சி. அதால அவன் அதிலயே போகட்டும். அவன் வேலைக்குப் போய் உழைச்சுத்தான் வீடு நிறையோணும் எண்டுற நிலைல நாங்களும் இல்லத்தானே.” என்று எடுத்துச் சொன்னான் நிலன்.
என்றாலும் குழந்தையே வரப்போகிற ஒருவனை அப்படி உனக்கு விருப்பமான துறையில் போ என்று விடுவது நல்ல முடிவுதானா என்று யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.
“என்ன யோசின?”
“அவன் பிறகு படம் எடுக்கிறன் எண்டு இருக்கிற எல்லா பெட்டைகளோடயும் ஊர் சுத்துவான்.”
“அந்தளவுக்குக் கவனிக்காம இருப்பனா நான்? கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒரு பிள்ளை இருந்தா காதல் எண்டுவான். மூண்டு மாதம் கனக்க. பிறகு பிரேக்கப் எண்டுவான். அவ்வளவுதான் அது. நடுவுக்க நடக்கிறதுதான் ஊரைச் சுத்தி எடுத்த ஃபோட்டோக்களை போடுறது.”
“சும்மா ஊர் சுத்துறது மட்டும்தான் நடந்திருக்குமா? வேற நடந்திருக்காதா?” இந்தக் கேள்வி அவனைச் சுவாதி விரும்புகிறாளாம் என்று அறிந்ததில் இருந்தே அவளுக்குள் இருந்ததில் வினவினாள்.
“வேற என்ன நடந்திருக்கும் எண்டுறாய்? கொஞ்சத்துக்கு முதல் எங்களுக்க நடந்ததே அதுவா, இல்ல இனி நடக்கப் போகுதே அதா?”
“உங்களை! நான் என்ன கேக்கிறன் நீங்க என்ன கதைக்கிறீங்க?” என்று அவன் தோளிலேயே ஒன்று போட்டாள்.
சிரித்தாலும் அவளையே அவன் விழிகள் வட்டமிட்டன. அவன் வரும்போது சோகச் சித்திரமாக அமர்ந்திருந்தது என்ன, தற்போது அவனுக்கு அடிக்கிற அளவுக்கு மாறியிருப்பது என்ன?
“நீ ஓகேயா?” என்றான் அவளின் ஒற்றைக் கன்னத்தைத் தன் உள்ளங்கையில் தாங்கி.
ஒரு கணம் அமைதியானாள் இளவஞ்சி. பின் அவன் விழிகளோடு தன் பார்வையைக் கலந்து, “நீங்க பக்கத்தில இருந்தா நான் ஓகேயாத்தான் இருக்கிறன்.” என்றாள் உள்ளத்திலிருந்து.
இது போதாதா அவனுக்கு. முத்தங்களாலேயே அவளை மூர்ச்சையாக வைத்திருந்தான். குளித்ததினால் உண்டான அவன் உடலின் புத்துணர்ச்சி அவளுக்குள்ளும் குளிர் பரப்பிக்கொண்டு போயிற்று. அதற்கு இதமாகக் கணவனின் கதகதப்பு இருக்க அவளும் அவனோடு ஒன்ற, “அப்ப இன்னுமே நெருக்கமா வரவா? நீ இன்னும் ஓகே ஆகிடுவாய்.” என்றான் கிசுகிசுப்பாக.
வெட்கமே இல்லாமல் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பானா என்று விலகப் போகையில்தான் கவனித்தாள், அவள் அணிந்திருந்த கோர்ட்டும் அவளிடம் இல்லை, மற்றையதின் நாடாவும் அவள் தோள்களிலிருந்து நழுவியிருந்தது.
இதெல்லாம் எப்போது நடந்தது என்று அவள் அதிர்ந்து பார்க்க, “நாங்க எல்லாம் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணா இருக்கிற மனுசர்.” என்று சிரித்தான் அவன்.
அவள் வேகமாகப் போர்வையை எடுத்துத் தன்னை மூடிக்கொள்ள அதற்குள் புகுந்துகொண்டான் அவன்.
பூவிலிருந்து தேன் பருகும் வண்டினைப் போன்று, தன் தேவதைப் பெண்ணின் தேகம் நோகாமல் தன் தேவைகள் தீர்த்தான். அவள் தடுமாறித் திணறிய பொழுதுகளில் எல்லாம் தட்டிக்கொடுத்து, ஆற்றுப்படுத்தி, தன்னோடு சேர்த்தணைத்து அந்தப் புத்தம் புதிய உணர்வுகளை அவளையும் அனுபவிக்க வைத்தான்.