“எங்கம்மா உன்ர மனுசன் இருக்கிறார்? உனக்குப் போய்க் கதைக்கத் தயக்கம் எண்டால் சொல்லு, நான் வந்து சொல்லுறன். சும்மா பிடிவாதம் பிடிச்சு வாழ்க்கையை வீணாக்காத. அந்தப் பிள்ளையும் பாவம் எல்லோ. உன்னை எங்கயெல்லாம் தேடுதோ தெரியாது.” கவலையோடு எடுத்துச் சொன்னார் கலைவாணி.
தினமும் வந்து தனக்கு உதவியாக இருப்பவள் மீது பெற்ற பெண்ணைப்போலப் பாசம் வைத்துவிட்டதில், மனம் கேட்கவில்லை அவருக்கு. ஒற்றைத் தாயாய் நின்று மகனை வளர்த்தவருக்கு விளங்காதா அவளின் சிரமங்களும் துன்பங்களும். அதோடு, திடீரென்று மறைந்துபோன மருமகளின் நினைவு வேறு. யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? கிடைக்கும் வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்துவிட வேண்டாமா?
அவள் வரும்போதெல்லாம் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துச் சொல்வார். அன்றும் அவர் சொல்ல, அமைதியாகக் கேட்டுக்கொண்டாளே தவிரப் பதில் சொன்னாள் இல்லை.
“என்னம்மா பதில் சொல்லன்?”
“என்னைத் தேடுவாரா? அதெல்லாம் மாட்டார்! அப்பிடித் தேடுவாரா இருந்தா அவரின்ர கண்ணிலேயே படாம ஓடிப்போய்டுவன். ஆனா.. ப்ச்! என்ர கதையை விடுங்கோ. விட்டுட்டு உங்கட மகனைப் பற்றிச் சொல்லுங்கோவன் ஆண்ட்டி!” என்று கெஞ்சினாள் வானதி.
அவர் முகத்திலும் மெல்லிய புன்னகை அரும்பிற்று. எப்போதுமே அவள் இப்படித்தான். மகன் மருமகளைப் பற்றித் தூண்டித் துருவி கேட்டுக்கொண்டே இருப்பாள். அவருக்கும் மிகப்பெரிய ஆறுதல் அது. மனதிலிருப்பதைத் தங்கு தடையில்லாமல் அப்படியே கொட்டிவிட முடியும். மகனிடம் போல அவனை வருத்திவிடுமோ என்று பயந்து, யோசித்து யோசித்து வார்த்தைகளைக் கோர்க்கத் தேவையில்லை. அதேநேரம் அந்தப் பொன்னான நாட்களை மீண்டுமொருமுறை வாழ்ந்துவிட்டு வந்துவிடுவார். அவளும் அருமையான பெண். அவர் கலங்கும்போதெல்லாம் ஆறுதலும் சொல்வாள்.
“எல்லாப் பொருத்தமும் பாத்து நல்லாத்தான் திருமணமும் செய்து வச்சது. அவளும் அருமையான பிள்ளைதான். சந்தோசமாத்தான் போய்க்கொண்டு இருந்தது வாழ்க்கை. என்ன மூண்டு வருமாகியும் குழந்தை இல்ல..”
“அப்ப ரூபிணி?” இடையில் புகுந்தாள் வானதி.
“அதுக்குப் பிறகுதான் பிறந்தவள். ஆனா அவள் பிறக்கிறதுக்குள்ள எவ்வளவு துன்பம்.. என்ன பாடு.. என்ர பிள்ளை பாவம். சந்தோசமா வாழ்ந்ததுகளின்ர வாழ்க்கைல யாரின்ர கண் பட்டுச்சோ தெரியாது. எல்லாம் முடிஞ்சு போச்சு!” என்றவருக்கு நெடிய மூச்சு ஒன்று கனமாய் வெளியேறியது.
நிலத்தில் அமர்ந்திருந்து முருங்கை இலையை ஆய்ந்து கொண்டிருந்தவர் கலங்கிப்போன கண்களைத் துடைத்துக்கொண்டார். தானும் ஆய்ந்துகொண்டிருந்தவள் மெல்ல அவர் கையைத் தடவிக்கொடுத்தாள்.
“இங்க வந்தபிறகுதான் கொஞ்சம் தெளிஞ்சு தெரியிறான். அவன் சந்தோசமா இருக்கவேணும் எண்டு ஒரு வைராக்கியத்தோட வளத்தனான். இண்டைக்கு.. என்னைப்போலவே அவனும் தனியா நிக்கிறான்..”
அவரை வாட்டும் உண்மையின் கசப்பில் தடுமாறிப்போய் நின்றவரை, “கவலைப்படாதிங்கோ ஆண்ட்டி! கட்டாயம் நல்லது நடக்கும்!” என்று தேற்றிவிட்டு, “இங்க வந்த பிறகு எண்டால் இது உங்கட ஊர் இல்லையா? முதல் எங்க இருந்தனீங்க?” என்று மெல்லப் பேச்சை மாற்றினாள்.
“யாழ்ப்பாணம் தான் எங்கட சொந்த இடம். தம்பி பிறந்தது வளந்தது படிச்சது எல்லாம் அங்கதான்.”
“யாழ்பாணமா?அங்கயா இருந்தீங்க?” ஆர்வத்தை அடக்கமாட்டாமல் துள்ளலோடு கேட்டாள்.
“நீ அங்க போயிருக்கிறியா?” அவருக்கும் சொந்த ஊரின் மீதிருந்த பற்று ஆர்வமாய் விசாரிக்க வைத்தது.
“நானும் பிறந்தது வளந்தது எல்லாம் அங்கதான் ஆண்ட்டி. அம்மா அப்பா அக்காக்கள் எல்லாரும் இன்னும் அங்கதான் இருக்கீனம்.”
“பிறகு ஏனம்மா இங்க வந்து இருக்கிறாய்? மனுசனோட பிரச்சனை எண்டாலும் அம்மா அப்பாவோட எல்லோ இருக்கவேணும். நீ சின்னப்பிள்ளை வானதி. சும்மா அசட்டுத் தைரியத்தில யோசிக்காமல் நடக்கக் கூடாது!” சின்னக் கண்டிப்போடு எடுத்துச் சொன்னார்.
அவள் கேட்க வேண்டுமே!
“அது.. அத விட்டுட்டு உங்கட மகனைப்பற்றிச் சொல்லுங்கோ நீங்க.”
“இன்னும் என்ன சொல்லக் கிடக்கு? மிருணாக்கு பொறுமையே இல்ல. பிள்ளை வேணும் எண்டு ஒற்றைக்கால்ல நிண்டு சங்கரிட்ட போனதுதான்.” மகனின் சின்னவயது தொடங்கித் திருமணக் காலம் வரைக்கும் ஆர்வமாய்க் கதை கதையாய்ச் சொன்னவராலுமே அதன் பிறகான துன்பமான நாட்களைச் சொல்ல முடியவில்லை. சுருக்கமாக முடிக்க நினைத்தார்.
அவனைப்பற்றி ஆதியும் அந்தமுமாய் அறிய ஆவல் கொண்டவளுக்கோ அது போதாமல் இருந்தது.
“சங்கரி ஆண்ட்டியா? அவாவை தெரியுமா உங்களுக்கு?” மெல்லிய படபடப்பு அவள் குரலில்.
“தெரியாம? போனகிழமை(வாரம்? தம்பி அங்கதான் போய் வந்தவன்! சங்கரிட்ட போய் எவ்வளவோ செய்தும் சரி வரேல்லயம்மா. ரெண்டுபேருக்கும் ஒரு குறையும் இல்ல. மிருணாக்குக் கர்ப்பப்பை மட்டும் கொஞ்சம் வீக். இன்னும் கொஞ்சநாள் தொடர்ந்து வைத்தியம் செய்தா சரியா வர சான்ஸ் இருக்கு எண்டு சங்கரி எவ்வளவோ சொல்லியும் மிருணா கேக்கவே இல்ல. அவளுக்குப் பொறுமை கொஞ்சம் குறைவு. ஆசைப்பட்டது எல்லாம் உடன நடக்கவேணும். எங்கட சனமும் தெரியும் தானே, ஒருத்தருக்குச் சின்னக் குறை எண்டால் காணும், அதைப் பற்றியே கதைச்சு மனதை ரணமாக்கிறது. பிறகு என்ன வாடகைத்தாய வச்சு..” என்று அவர் சொல்லும்போதே அதிரூபன் வீட்டுக்குள் நுழைய, பேச்சை நிறுத்திவிட்டார் கலைவாணி.
“வாடகைத்தாய் மூலமா? ரூபிணியா?” அவளால் நம்பவே முடியவில்லை. அதிரூபன் வருவதைக் கூட உணராமல் அதிர்ந்து கேட்க,
“அது அப்பிடி இல்லையம்மா.. நான் பிறகு சொல்லுறன்!” சட்டென்று குரலைத் தணித்து மெல்ல ரகசியமாய்ச் சொன்னார் கலைவாணி.