இருள் மறைத்திருந்த வெறும் தரையில், தலைக்குக் கைகளைக் கொடுத்தபடி மல்லாந்து படுத்திருந்தான் அதிரூபன். அன்பெனும் ஆயுதம் கொண்டு உயிருடன் இருக்கையிலும் அவனை ஆட்டிப்படைத்தவள் இன்று மறைந்துபோயும் விட்டபாடில்லை. அவள் தேடித்தந்த உறவுதான் இது. உதற முடியாத உறவு. உதறக் கூடவே கூடாத உறவு. ஆனால், ஏற்றுக்கொள்ள முடியாத உறவு.
அவளுடைய மகன் தாரகன்! அவனுக்கும் மிருணாவுக்கும் பிறந்தவன். அவனை மாமா என்கிறான்! உயிர் கசிந்து கண்ணீராய் வெளியேறியது!
‘ஏன் மிருணா எல்லாத்திலையும் அவசரம் உனக்கு?’
‘கொஞ்சம் பொறுப்போம் எண்டு எவ்வளவு கெஞ்சியிருப்பன். கேட்டியா? ஒற்றைக்காலில் நிண்டு உன்ர விருப்பத்தைச் சாதிச்சியே.. ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைகளடி உனக்கு. விட்டுட்டுப் போய்ட்டியே.’ நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது அவனுக்கு!
இணையத்தில் தேடி அவள் கண்டுபிடித்தது வாடகைத்தாய் விசயத்தை. கேட்ட அதிரூபனுக்கு ஒருநாளும் இல்லாத கோபம் வந்துவிட்டது.
“உனக்கு என்ன விசரா பிடிச்சிருக்கு? கண்டபாட்டுக்கு உளறிக்கொண்டு இருக்கிறாய்?” வந்த கோபத்துக்குச் சீறிவிட்டான்.
அவனது கோபம் எதற்காக என்று உணரும் நிலையில் அவளில்லை.
“இல்லையப்பா நான் சொல்லுறதைக் கேளுங்கோ. உங்கட வீரியமான உயிரணுவையும் என்ர சினைமுட்டையையும் டெஸ்ட் டியூபில சேர்த்து அது கருவானதும் பிறகு என்ர கருப்பைல வச்சு டெஸ்ட் டியூப் பேபி பெறலாம். ஆனா, எனக்கு அது சரிவராது. என்ர கர்ப்பப்பைதான் நல்லா இல்லையே. அதுவே, அதே கருவை இன்னொரு பொம்பிளையின்ர கருப்பைல வச்சும் பெறலாம். கருப்பை மட்டும் தான் வேற. குழந்தை எனக்கும் உங்களுக்கும் தான் பிறக்கப்போகுது.” என்று பெரிதாக விளக்கம் கொடுத்தாள் அவள்.
அவனுக்கோ அவளின் விளக்கத்தில் தலை முதற்கொண்டு உடல் முழுவதும் விறைத்துக்கொண்டு வந்தது.
“என்ன சொல்லுறீங்கள். ஓம் எண்டு சொல்லுங்கோவன். சங்கரி டொக்டரை போய்ப் பாப்பமா?” விடாமல் அவள் நச்சரித்தபோது, முடியாமல் எழுந்துவிட்டான் அவன்.
“உன்ர வயித்தில பிறந்தா பிறக்கட்டும். இல்லையோ எங்களுக்குக் குழந்தையே வேணாம்!” முதன் முறையாக அவள் ஆசைப்பட்டுக் கேட்டதை உறுதியாக மறுத்துவிட்டுப் போனான் அவன்.
அதனை எதிர்பாராதவள் திகைத்து நின்றுவிட்டாள். அதிர்ச்சி நீங்கியபோது எவ்வளவு நேரமானதோ. அப்போதுதான் அங்கே கணவன் இல்லை என்று உணர்ந்து அறைக்கு ஓடிப்போய் அழுது, கெஞ்சி, மன்றாடி என்ன கேட்டும் அசையவில்லை அதிரூபன். தன் குழந்தை இன்னோர் வயிற்றிலா? அவனால் கற்பனையே செய்ய முடியவில்லை. நினைவே அசூசையாகக் கசந்தது.
அவனது குழந்தையை அவள் சுமக்க அவளையும் குழந்தையையும் அவன் சுமந்து பெறுவது அல்லவோ சந்தோசம்!
“அப்பா, என்ர சினைமுட்டை சரியில்லாட்டி அந்தப் பொம்பிளையோட கர்ப்பப்பைக்குள் உங்கட உயிரணுவைச் செலுத்தி கருவை உருவாக்கலாம். அதுதான் கூடாது. இது எனக்கும் உங்களுக்கும் தான் பிறக்கப்போகுது. அது எங்கட பிள்ளைதான். என்ன என்னால சுமக்கேலாது. எனக்காக எங்கட குழந்தையை இன்னொருத்தி சுமக்கப் போறாள்.” தொண்டை அடைக்கச் சொன்னாள்.
நெஞ்சில் சுமக்கும் கணவனின் குழந்தையை வயிற்றில் சுமப்பது என்பது ஒவ்வொரு பெண்ணும் ஏங்கிக் கேட்கும் வரம்! அந்த வரத்தை இன்னொரு பெண்ணிடம் கொடுப்பது எந்தப் பெண்ணாலும் இயலாத ஒன்று! அதற்கு அவள் தயாராவதற்குத் தனக்குள்ளேயே எவ்வளவு போராடினாள் என்பது அவள் மட்டுமே அறிந்தது. குழந்தை மீதான ஆசை தானே அதற்கும் அவளைத் துணிய வைத்தது. அதை ஏன் கணவன் புரிந்துகொள்கிறான் இல்லை?
அவள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவன் அசைய மறுத்தான். இரண்டு வாரமாகப் போராடிப் பார்த்தவள், கடைசியாக, “கடைசிவரைக்கும் என்னை மலடியாத்தான் பாக்கவேணும் எண்டு ஆசைப்படுறீங்க என்ன? உங்கட ஆசைப்படியே நடக்கட்டும்! மலடியாவே இருந்திட்டுப் போறன்!” என்று விரக்தியோடு சொல்லிவிட்டுப் போனபோது, நெஞ்சு குலுங்கிவிட்டது அவளின் கணவனுக்கு.
அதிர்ந்துபோய் உடலும் உள்ளமும் இறுக அசைவற்றுப்போனான் அவன்.
என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். கடவுளே..! அவனுடைய மிருணா மலடியா?
அந்த வார்த்தையின் கனம் தாங்கமாட்டாமல், எப்போதும்போல மனைவியிடம் அதற்கும் தோற்றுத்தான் போனான் அதிரூபன்.
சங்கரியிடம் போனபோது, அவரும் அவனைப்போலவே சொன்னார்.
“இவ்வளவு அவசரம் எதுக்கு மிருணா. உங்க ரெண்டுபேருக்கும் காலமும் இருக்கு வயசும் இருக்கு. அதைவிட, கருப்பை மட்டும்தான் உனக்குத் தாங்குற சக்தி இல்லாம இருக்கு. அதை மாத்தலாம். உனக்கே குழந்தை பிறக்க நிறையச் சாத்தியக்கூறுகள் இருக்கு.” என்று எவ்வளவு எடுத்துக்கூறியும் அவள் கேட்கவில்லை.
அதிரூபனையே படியவைத்தவளுக்கு அவர் எம்மாத்திரம். கடைசில் அதிரூபனே, “அவளுக்குப் பிடிச்சமாதிரியே செய்ங்கோ டொக்டர்.” என்றுவிட்டான்.
இந்த வாடகைத்தாய் முறையை அவர் செய்கிறார் தான். ஒன்றும் புதிதல்ல. சற்றுநேரம் சிந்தனையில் புருவங்களைச் சுருக்கிட்டுச் சொன்னார் சங்கரி.
“எனக்குத் தெரிஞ்ச ஒரு குடும்பம் இருக்கு. தகப்பன் சரியில்ல. மூண்டு பொம்பிளைப் பிள்ளைகள். மூத்த பிள்ளையின்ர மனுசன் மோசம் போய்ட்டார். ஒரு பிள்ளையும் இருக்கு. அவளைக் கேட்டுப் பார்க்கலாம். அதுக்குக் கொஞ்ச காசு குடுக்கவேண்டி இருக்கும்.” என்றவர், அதற்கான அத்தனை விதிமுறைகளையும் எடுத்துரைத்தார்.
அவர் சொன்ன எல்லாவற்றுக்கும் தலை ஆட்டுவதை மட்டுமே செய்தான் அவன்.
வீட்டுக்கு வந்ததும், “என்னோட கோபமாப்பா?” என்று, கலங்கிய கண்களோடு கேட்டவளைப் பார்க்க மனம் கனத்துப்போயிற்று!
“உன்ர விருப்பம் தான் என்ர விருப்பமும். உனக்கு இது சந்தோசம் எண்டா எனக்கும் சந்தோசம் தான். கண்டதையும் நினச்சு கவலைப்படாத.” மனதை மறைத்து மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான் அதிரூபன்.
அவள் மனம் நிறைந்துபோயிற்று! அவளுக்காக என்னவும் செய்யும் கணவன். நேசம் பொங்க எம்பி அவனது கன்னத்தில் முத்தமிட்டவளைப் பார்க்க கண்கள் கரித்தது. ஆனாலும் மறைத்துக்கொண்டான்.
குழந்தைக்கான அவளின் ஏக்கமும் அவனுக்குத் தெரியாமல் இல்லையே!
அடுத்தநாள் அதிரூபனை அழைத்துப் பேசினார் சங்கரி. “நான் சொன்ன அந்தப்பிள்ளைக்கு விருப்பம் இல்லை அதிரூபன். ஆனா, அவளின்ர தங்கச்சி ஓம் எண்டு சொல்லியிருக்கிறாள். என்ன செய்வம்?”
“டொக்டர், எங்களைவிட உங்களுக்குத்தான் இது பற்றின எல்லா விசயமும் தெரியும். ஒரு பிரச்சனையும் இல்லை எண்டால் சரிதான்.” என்றான் அவன்.
“சட்டப்படி திருமணமாகாத பெண்ணை வாடகைத்தாயாகப் பயன்படுத்த கூடாதுதான் அதிரூபன். ஆனா, அந்தக் குடும்பத்துக்கு இந்தக் காசு உதவியா இருக்கும். அதோட, அந்தத் தகப்பன் அந்தப் பிள்ளைகளுக்குக் கல்யாணமும் செய்து வைக்கப் போறேல்ல. ஒரே குடி. மூத்தவளும் விரும்பித்தான் கட்டினவள். பிரச்சனை ஒண்டும் வராது. தாய் என்னட்டத்தான் வீட்டு வேலைகள் செய்றவா. அவாவுக்கும் விருப்பம் தான்.” என்றார்.


