பூவே பூச்சூட வா 13(2)

அங்கு அவளை எதிர்பாராதவர் திகைத்துப்போனார். அதுவும் ஒரு வினாடிதான். ஊரையே ஏமாற்றி வாழ்ந்த திறமை கைகொடுக்க, “கண்ணம்மா! வந்திட்டியா செல்லம். நீ இல்லாம அப்பா எவ்வளவு தவிச்சுப்போனன் தெரியுமா? தேடாத இடமில்லை..” என்று நடித்துக்கொண்டு ஓடிவந்தவரைக் கண்டு அருவருத்தே போயிற்று!

வேகமாகக் கையை முன்னால் நீட்டி, “அங்கேயே நில்லுங்க!” என்றாள் வெறுப்போடு.

பிரேக்கிட்டதுபோல் நின்றார் அவர்.

“என்ன கொடுக்குமதி? அதுவும் இவருக்கு?” கண்களில் கோபம் தெறிக்க, தகப்பனைக் கையால் காட்டித் தன்னிடம் கேள்வி கேட்டவளின் மீது அவன் விழிகள் ரசனையோடு படிந்தது.

எவ்வளவு கோபம் அந்த முகத்தில்?

உள்ளடங்கிய சிரிப்பில் துடித்த உதடுகளை அடக்கிக்கொண்டான். சிரிப்பது தெரிந்தால் இருக்கிற கோபத்துக்குத் தன்மீது பாய்ந்தாலும் பாய்ந்துவிடுவாள். அதுவரை இருந்த இறுக்கம் கூட தளர்ந்துபோயிற்று!

“உனக்காக மாதம் மாதம் செலவுக்குக் குடுக்கிறனான்.” இதைப்பற்றி எப்போதுமே பேசப் பிரியப்படுவதில்லை அவன். ஆனால், அவரின் முன்னே தன்னிடம் கேட்டவளின் கேள்வியை ஒதுக்கி, அவளை விட்டுக்கொடுக்க மனமில்லை.

“எனக்காக என்ன.. “ என்று விளங்காமல் ஆரம்பித்தவள் புரிந்ததும் அனல் காக்கும் விழிகளால் அவனைத்தான் முறைத்தாள்.

‘அந்தாள் கேட்டா நீ குடுப்பியா?’ என்று கேட்ட அந்த விழிகளை இப்போது என்ன முயன்றும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

அவளோ அவனையெல்லாம் கவனிக்காமல் தகப்பனிடம் பொரியத் தொடங்கியிருந்தாள்.

“வெக்கமாயில்ல உங்களுக்கு? எனக்கு இருபத்தியிரண்டு வயசில தாரகன் பிறந்தவன். என்ர பிள்ளையை எந்தக் குறையும் இல்லாம வழக்கோணும் என்ற உணர்வு எனக்கு அந்த வயதிலேயே வந்திட்டுது. என்ர உழைப்பிலதான் அவனை வளத்திருக்கிறன். ஆனா நீங்க? ஒண்டுக்கு மூண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருந்தும், அவேக்குக் கல்யாணம் கட்டி வைக்கிற வயசு வந்தும் இன்னும் பொறுப்பு வரேல்லையே, நீங்க எல்லாம் என்ன மனுசன்? அடுத்தவரிட்ட காசு அதுவும் திமிரா வந்து கேக்கிறீங்க? வாய் கூசேல்லையா?”

“கேட்டா என்ன? தரத்தான் வேணும்! ஊருக்க அவமானப்பட்டது நாங்க. அதுக்குப் பதிலா என்ர மகளின்ர வாழ்க்கையை கெடுத்தவன் தரத்தான் வேணும்! ” அடித்துச் சொன்னார் அவர்.

யாருக்குமே தெரியாத விசயத்தால் ஊருக்குள் அவருக்குத் தலைகுனிவாமா? இருக்கும்! குடித்துவிட்டு வீதியில் விழுந்துகிடந்த நாட்களில் மலையளவு ஏறிப்போயிருந்த மரியாதை குறைந்துதான் போயிருக்கும்!

“மரியாதையா கதைங்க. இல்ல உங்கட மரியாதை கெட்டுப்போய்டும்!” வந்த ஆத்திரத்துக்கு விரல் நீட்டி எச்சரித்தாள். “அவருக்கு முன்னால நிண்டு கதைக்கிறதுக்குக் கூடத் தகுதி இல்லாத ஆள் நீங்க, காலுக்கு மேல காலைப் போட்டு, திமிராக் கதைக்க எவ்வளவு துணிவு உங்களுக்கு? முதல் அவர் எவ்வளவு நல்ல அப்பா எண்டு தெரியுமா? தன்ர பிள்ளைகள எவ்வளவு பொறுப்பா, பாசமா பாக்கிறார் எண்டு தெரியுமா?”

“வானதி விடு! நானாத்தான் கொடுக்கிறன். அவர் கேக்கேல்லை.” இதைப் பெரிதாக்க மனமின்றிச் சொன்னான் அதிரூபன்.

அவர்தான் மறைமுகமாகத் தூண்டினார் என்றாலும், அவன் விரும்பாமல் நடக்காதே!

ஆனால், அவளுக்கும் அவளைப் பெற்றவரைப் பற்றித் தெரியும்தானே!

அவனை இன்னும் முறைத்தாள் அவள். “அப்ப என்னத்துக்கு இங்க வந்து நிண்டு காசு கேக்கிறார்? நீங்க குடுத்தா இவர் வாங்கிடுவாரா? இனி நீங்க ஒரு ரூபாயும் குடுக்கக் கூடாது இந்த மனுசனுக்கு!”

ஆணித்தரமாய் உத்தரவிட்டாள். ஆத்திரத்தில் உடம்பெல்லாம் நடுங்குவது போலிருந்தது அவளுக்கு.

எவ்வளவு கேவலம்! அன்று தெரியாமல் தன் கருப்பையை வாடகைக்கு விடத் துணிந்தாள்தான். அதன்பிறகு என்னென்னவோ எல்லாம் செய்தும்விட்டாள் தான். அதற்கே, பெரும் துரோகம் இளைத்துவிட்டாளே என்று துடித்துக்கொண்டு அவள் இருக்க, அவளின் தகப்பனோ என்றோ வாடகைக்கு விட்ட கருவரைக்காக இன்றும் வாடகை வசூலிக்கிறார். குன்றிப்போனாள். அவள் அவனுக்கு செய்ததே இந்த ஜென்மம் முழுமைக்கும் போதுமே!

கதிரேசனுக்கோ புதையலைப்போல கிடைத்தவனைத் தடுக்கிறாளே என்று கொதித்துக்கொண்டு வந்தது.

“அவருக்குச் சொல்ல நீ யாரு. உன்னால எனக்குத்தான் ஊருக்க தலைகுனிவு. பிள்ளை பெத்துத் தாறன் எண்டு சொல்லிப்போட்டு, அந்தப் பிள்ளையைக் கொண்டு ஓடி ஒளிஞ்சவள் கதைக்கக் கூடாது.” என்றதும் அவமானத்தில் குறுகிப்போனாள்.

இவ்வளவு நேரமும் அவனுக்காகக் கதைத்தவளால், தான் செய்த பிழையை அவன் முன்னேயே அவர் சொல்லிக்காட்டிக் குத்தியபோது வாயைத் திறக்கமுடியாமல் போயிற்று! என்ன சொன்னாலும், இன்று அவனை அவர் பயன்படுத்தக் காரணமே அவள் பார்த்த காரியம்தானே!

கண்களைக் கண்ணீர் நிறைக்க உதடுகள் துடிக்க இயலாமையோடு அவனைப் பார்த்தவளைக் கண்டு சட்டென்று கோபம் மூண்டது அதிரூபனுக்கு. துணைபோல அவளருகில் வந்து நின்றான்.

“அது எனக்கும் அவளுக்குமான விசயம். அதைப்பற்றி நீங்க கதைக்கக்கூடாது. உங்களுக்குக் காசுதானே வேணும். பிடியுங்கோ! நடவுங்க! இனி நீங்க இங்க வரத்தேவையில்ல. நானே அனுப்பி வைப்பன். மாதம் மாதம் வரும்!” என்று அவன் கொடுக்கவும் இன்னுமே அவமானமாகப் போயிற்று அவளுக்கு!

வெடித்த விம்மலை வாயைப் பொத்தி அடக்கிக்கொண்டு உள்ளே ஓடிப்போனாள்.

ஆனால், கதிரேசனோ இவர்களை அடக்கி வைத்தால் தான் இனி மாதம் மாதம் சிரமமில்லாமல் பணம் வரும் என்று கணக்குப்போட்டுத் துள்ளத் தொடங்கினார்.

“இதெல்லாம் சரியா வராது. வீட்டுக்க அடைச்சு வச்சு என்ர மகளையே எனக்கெதிரா திருப்பிறியா நீ? இப்ப கையோட அவளைக் கூட்டிக்கொண்டு போகப்போறன்!” என்றார்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock