“பூங்குன்றன் ப்ளீஸ் அமைதியா இருங்கோ! நிவி கதைச்சதுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். அவளும் அவளா இல்ல பூங்குன்றன்.ப்ளீஸ்!” தன்மையாகச் சொன்னார், யோகன்.
“அங்கிள்…ப்ளீஸ்! அம்மாவுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன்.” மிகுந்த குற்றவுணர்வோடு சொன்னான், சேந்தன்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே. அப்படி நின்ற கணவரைக் காண மதிவதனியின் கால்கள் கிடுகிடுவென்று நடுங்கின. கண்ணீர் வழிய நின்றார். இத்தனை வயதில், போவோர் வருவோர் பார்க்க, சினேகிதிகளின் முன்னால் கணவரிடம் ஏச்சு வாங்க வேண்டுமா? அவமானமாக இருந்தது. சின்ன மகள் மீதான வெறுப்பு அளவு கணக்கின்றிப் பெருகிப் போயிற்று. அன்றே தன் சினேகிதிகளின் பிள்ளைகளோடு தொடர்பு வேண்டாம் என்று எச்சரித்தாரே! அவள் இசையாமளா இவன் விரும்புகிறேன் என்பான்.
“விமலா கூட்டிக்கொண்டு நடவுங்க, தயவு செய்து ஒருத்தரும் கதை வளக்க வேணாம். நடவுங்க, எல்லாம் பாத்தது காணும். எங்க வச்சு எதைக் கதைக்கிறது எண்டு இல்லையா?” சேந்தனை ஒரு பார்வை பார்த்தபடி, பூங்குன்றனோடு விறுவிறுவென்று நடந்தார், யோகன். மீண்டும் மன்னிப்புக் கேட்டார்.
“சேந்தன் சொன்னதுக்குப் பதில் சொன்னன் யோகன். நீங்க என்ர இடத்தில இருந்தாலும் இந்தப் பதில் தான் சொல்லி இருப்பீங்க என்ன?” அங்கு நின்ற நிவேதாவைக் கோபமாகப் பார்த்தபடி சொல்லிச் சென்றார், பூங்குன்றன்.
“அம்மா, இது நீங்களே இல்ல. நீங்க முகத்த நீட்டிக்கொண்டு இருக்கவும்தான், கவினியப் பிடிச்சிருக்கு எண்டு இங்க வச்சுச் சொல்ல வேண்டி வந்தது. அதோட இன்னொண்டு, இதைக் கதைச்சுப் பெரிசு பண்ணி எந்தப் பிரயோசனமும் இல்ல அம்மா. ஒருக்காலும் என்ர முடிவில மாற்றம் வரப் போறதில்ல. பேந்தென்ன?” கடினக் குரலும் இடுங்கிய விழிகளுமாக முறைத்துவிட்டு விலகிச் சென்றான், சேந்தன்.
அவருக்கு அறிமுகமே இல்லாத மகனின் தோரணையில் கண்ணீரோடு அதிர்ந்து நின்றார், நிவேதா. மொத்தக் கோபமும் மதிவதனியில்தான். கண்டறியாத சினேகிதி! மதிவதனியைக் கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது. நிற்கும் இடம் வீதி என்ற ஒன்று அவர் வாயைக் கட்டிப் போட்டது.
பூங்குன்றனோ, வாகனத்தைச் சென்றடைந்த வேகத்தில், “இனியும் இந்தப் பயணத்தத் தொடருறதில எனக்கு விருப்பம் இல்ல. நீங்க எங்க வேணும் எண்டாலும் போங்க, நான் மகளிட ரிசப்சனுக்கு வாறன்.” தன் பையை எடுக்க முனைந்தார்.
எல்லோர் மனத்திலும் அந்த எண்ணம்தான். “கொழும்புக்கே போவம் மாமா. சொறி, என்னால உங்கள் எல்லோருக்கும் வீண் தொந்தரவு. சொறி!” முகம் இறுகச் சொன்னான், சேந்தன். இத்தனைக்குள்ளும் ‘அங்கிள்’ என்ற விளிப்பு மாமாவாகி இருந்தது.
“ப்ளீஸ் பூங்குன்றன், வாங்க எல்லாரும் கொழும்புக்கே போவம்.” அவர்களுள் பிணக்கென்று விளங்கி, தள்ளி அமைதியாக நின்றிந்த சாரதியை அழைத்துத் தம் முடிவைச் சொன்னார், யோகன்.
“இவ்வளவுக்கு வந்தாச்சு , பக்கத்திலதான் ராவணன் வீழ்ச்சி. போற வழிதான், பார்த்திட்டுக் கொழும்புக்குப் போகலாம்.” என்றபடி அவர் வாகனத்தை எடுக்க, “சரிதான் ,அப்பிடியே செய்வம்.”என்றிருந்தான், இனிதன்.
ஒருவருமே எதையும் இரசிக்கும் மனநிலையில் இல்லை. இருந்தாலும் அந்த மனநிலையைச் சற்றேனும் மாற்ற முடிந்தால் என்றிருந்தது, அவனுக்கு.
இதோ, இராவணன் நீர்வீழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். நிவேதா வாகனத்தை விட்டு இறங்கவில்லை. ஒருவரையும் பார்க்கவில்லை, கண்களை இறுக மூடித் தலை சாய்த்திருந்தார்.
மற்றவர்கள் இறங்கி, பாதையைக் கடந்து கம்பியால் போடப்பட்டிருந்த தடுப்பருகில் சென்று நின்று கொண்டார்கள். கிட்டதட்ட 82 அடியுயரத்தில், ஓங்கி நின்ற இரு மலைகளின் உச்சிகளுக்கு இடையால் பாலருவியாய் வளைந்து நெளிந்து வந்து சோவென்று விழுந்து கொண்டிருந்தது, ராவணா நீர்வீழ்ச்சி.
“இந்த ஃபோல்சுக்கு பின்னால இருக்கிற குகைக்கதான் சீதா சிறை வைக்கப்பபட்டிருந்தாவாம். இதில இருந்து உருவான சின்னக் குளத்தில தான் அவா குளிப்பாவாம்.” சாரதி சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்படியே அருகால் முன்னேறி நடந்து நீர்வீழ்ச்சி அருகில் சென்ற சேந்தன், அங்கிருந்த ஒரு கற்பாறையில் அமர்ந்துவிட்டான். மனத்தில் இருந்த கலவரமும் வெம்மையும் அந்த இடத்தில் ஆட்சி செய்த குளிர்மைக்குச் சவாலாக இருந்தது. அவன் முடிவில் மாற்றமில்லை. சரிதான். அவள் பதில் என்னவாக இருக்கும்? கைப்பேசி அவள் வட்ஸ்அப்புக்குச் அழைத்துச் சென்றிருந்தது.
அதற்குள், “அண்ணா! உண்மையாவா? கவினியப் பிடிச்சிருக்கா? ” என்றுகொண்டே அருகில் வந்தமர்ந்த இயல் உண்மையில் ஆச்சரியப்பட்டாள். ஆதினி என்ற புள்ளியில் நின்றவளுக்கு இந்தச் செய்தியில் இன்னுமே வியப்பே! மற்றும்படி கவினிதான் அவளுக்கு மிகப் பிடித்தவள் ஆச்சே!
பதில் சொல்லாத சேந்தன் பார்வை, கவினியின் வட்ஸ் அப்பில். எட்டிப் பார்த்த இயலுக்கு, தமையன் கவினியோடு தொடர்பில் இருப்பது விளங்கிற்று.ஆனால், கவினிக்கு ஆதினி விடயம் தெரியுமே! பொருத்தமான சோடி என்றும் சொல்லி இருக்கிறாளே! ஒரே குழப்பமாக இருந்தது.
“எனக்குச் சரியான சந்தோசம் அண்ணா.உங்கட விருப்பத்த அவவிட்டச் சொல்லிட்டிங்களா? கவினிக்கும் விருப்பம் தானே?” தெளிவுபடுத்திக்கொள்ளக் கேட்டாள். அவன் வாய் திறந்தால் தானே.
“எதுக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க அண்ணா, ஆதவன்ட ரிசப்சன் முடியவிட்டுக் கதைக்கலாம்.” தன் புத்திக்கு எட்டியதைச் சொன்னாள். அதற்கும் தமையனிடம் எதிரொலி இருக்கவில்லை.
தங்கை பார்க்கிறாள் என்று தெரிந்தே, ‘நான் உங்களை விரும்புகிறன் எண்டு எல்லாரிட்டையும் சொல்லிட்டன் கவினி.’ என்று தட்டி அனுப்பினான், சேந்தன்.
கவினியும் உடனே பார்த்துவிட்டாள். மறுநொடியே இனிதனுக்கு அழைத்திருந்தாள். இவர்களுக்குப் பின்னே நின்றிருந்தவன், “சொல்லு கவினி” என்றதைக் கேட்டுத் தமையனும் தங்கையும் எழுந்து கொண்டார்கள்.