• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 17

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 17


எண்ணங்கள் ஆளுமையும் ஆதிக்கமும் கொண்டவை. மொத்தமாய் மனித மனங்களைச் சிதைத்துவிடும் வல்லமை அவைக்கு உண்டு. மனநோய் என்பது தாங்க முடியா எண்ணங்களின் இரும்புக் கரங்களுக்குள் அகப்பட்டுக்கொள்கிற பொழுதுகளில் உண்டாவது.

அந்தளவில் வலுக்கொண்ட எண்ணம்தான், நான் இந்த வீட்டுப் பிள்ளை இல்லை, இங்கிருக்கும் எதிலும் எனக்கு உரிமை இல்லை என்று இளவஞ்சியை நினைக்க வைத்து, அனைத்திலிருந்தும் விலகி நிற்க வைத்தது.

ஆனால் இன்றைக்கு அந்தத் தளையிலிருந்து விடுபட்டிருந்தாள். தன் அன்னைக்கும் அப்பம்மாவிற்கும் நடந்த அநியாயத்தை அறிந்து, அவள் உள்ளம் நெருப்பெனத் தகித்துக்கொண்டிருந்த அந்தப் பொழுதிலும், நீ இந்த வீட்டுப் பிள்ளைதான், உனக்கு அனைத்திலும் சகல உரிமை உண்டு என்கிற அந்த எண்ணம், நெஞ்சில் இருந்த அடைப்பை எல்லாம் நீக்கி, சீரான சுவாசத்தைத் தந்தது போல் உணர்ந்தாள்.

விடுவிடுவென்று குளியலறை சென்று முகத்தை அடித்துக் கழுவினாள். துவாயில் முகத்தை அழுத்தித் துடைத்துவிட்டு நிமிர்ந்தபோது, அவள் உலகமே வெளிச்சமிட்டுக்கொண்டது போன்றதொரு தெளிவு அவளுள்.

தயாராகி வெளியே வந்தாள்.

அதுவரையில் இனி என்னாகுமோ என்கிற நடுக்கத்தில் வெளிறிப்போன முகமும், படபடக்கும் நெஞ்சும், பரிதவித்த விழிகளுமாக மாடியையே பார்த்துக்கொண்டிருந்தார் குணாளன்.

படிகளில் வேகமாக இறங்கிக்கொண்டு இருந்தவள் நடை, அவரைக் கண்டு ஒரு கணம் நின்றுபோயிற்று. ‘மணமாக முதலே தந்தையானவன்.’ அப்பம்மாவின் வரிகள் நினைவில் வந்து நிற்க நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி.

மணமாக முதலே தந்தையாவதற்கு எவ்வளவு பெரிய விசாலமான மனம் வேண்டும்? ஒப்பற்ற அன்பு இருந்தாலேயொழிய முடியாது. அப்படியான மனிதரைப் போய் ஒதுக்கி, முகம் திருப்பி, பேசாமல் இருந்து என்று எப்படியெல்லாம் காயப்படுத்திவிட்டாள்?

என்னவோ அவர் மலையாக உயர்ந்து நிற்க, தான் மடுவாகி மிகவும் சிறுத்துத் தெரிவது போல் ஒரு தோற்றம். நெஞ்சம் ஒரு நொடி அழுத்தம் கூடித் துடித்தது.

இந்த மனிதர் இல்லாமல் போயிருந்தால் அவள் என்ன ஆகியிருப்பாள்? நிச்சயம் அவளின் அப்பம்மா அவளை விட்டிருக்கப் போவதில்லைதான். ஆனால், அவரின் பேத்தியாக மட்டும்தானே வளர்ந்திருப்பாள். அம்மா, அப்பா, தங்கை, தம்பி என்று அழகான ஒரு கூடு அவளுக்கு அமைந்திருக்காதே. ஏன், அந்த நாள் வருகிற வரைக்கும் அவளாக ஒரு பொழுதிலேனும் தன்னை வேற்று ஒருத்தியாக உணர்ந்ததே இல்லையே.

அவளுடைய அன்னை ஜெயந்தியின் தியாகமும் பெரிதுதானே. கணவனின் பிள்ளைக்கு அன்னையாக இருப்பதற்கே ஒரு மனம் வேண்டும். இங்கானால் அவள் யார் என்றும் தெரியாமல், வந்த வழியும் அறியாமல், கணவர் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக அந்த இளம் வயதிலிருந்தே அன்னையாகவே மாறிப்போனவரிடமும் அவள் ஒன்றும் பெரிய மனத்தோடு நடக்கவில்லையே.

அவர் நினைத்திருந்தால் என்றைக்கோ அதைச் சொல்லியிருக்கலாம். எத்தனையோ வழிகளில் வேற்றுமை காட்டியிருக்கலாம். அவளைத் தனித்துவிட்டிருக்கலாம். அதற்கெல்லாம் மாறாகத் தான் பெற்ற குழந்தைகளைக் கூட அவளின் சொல் கேட்டு நடக்க விட்டாரே.

இப்போதும் கூட அவள் என்ன சொல்லப்போகிறாளோ என்று அவளையே பரிதவிப்புடன் பார்த்து நின்ற இருவரையும் கண்டு உள்ளமும் விழிகளும் கசிந்துபோயின. வேகமாக இறங்கி வந்து, ஜெயந்தியை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

“நீங்க ரெண்டு பேரும் எனக்குச் செய்தது எவ்வளவு பெரிய விசயம். அது விளங்காம…” என்றவள் வாயில் வேகமாகக் கையை வைத்துத் தடுத்து, மறுப்பாகத் தலையையும் அசைத்தார் ஜெயந்தி.

“அப்பிடிச் சொல்லாதயம்மா. நான்தான் அவசரப்பட்டு வாய விட்டுட்டன் எண்டுறதுக்காக நீயும் எங்களைப் பிரிச்சுப் பாத்திடாத. எங்கட மகளுக்கு நாங்க செய்யாம வேற ஆர் செய்றது சொல்லு? உன்ர தங்கச்சி காதலிச்சுக் கலியாணம் வரைக்கும் போயிருக்கிறாள் எண்டுறதே பெரிய அதிர்ச்சி. இதில குழந்தையுமாம் எண்டதும் நிலகுலஞ்சே போனேன் பிள்ளை. இனி என்ன நடக்கப் போகுதோ எண்டுற பயத்தில இருக்கேக்க நீ அப்பிடிச் சொல்லவும் பதறிப்போய்…” என்றவருக்கு மேலே பேச முடியவில்லை. “ஆனா நீ எங்கட மகள்தானம்மா.” என்றார் திரும்பவும்.

அவளும் மறுக்கவில்லை. அவள் அவர்களின் மகள்தானே! இதில் மறுத்துப் பேச என்ன இருக்கிறது?

கண்ணீருடன் சோபாவில் அமர்ந்திருந்து அவளையே பார்த்திருந்த மனிதரின் முன்னே மண்டியிட்டவள், அவர் கரங்கள் இரண்டையும் பற்றி, அதில் முகம் புதைத்தாள்.

இழைத்த தவறுகளுக்கு மன்னிப்பைக் கேட்டாளா, இல்லை இத்தனை காலங்களும் அவர் அவளுக்குச் செய்தவற்றுக்கு நன்றி சொன்னாளா அவளுக்கே தெரியாது.

ஆனால், மனிதர் பரிதவித்துப்போனார். அவரால் அவரின் பெண்ணை அப்படிப் பார்க்கவே முடியவில்லை.

“அம்மாச்சி என்னம்மா இது? இப்பிடியெல்லாம் நடந்து அப்பாவை அழ வைக்காதீங்கோ குஞ்சு.” குணாளனின் உடைந்து கரகரத்த குரலில் மெல்ல நிமிர்ந்தவளின் விழிகள் இலேசாகக் கண்ணீரில் நனைந்திருந்தன.

அதற்கே தவித்துப்போனார் அந்தத் தந்தை. “இல்லையாச்சி! இப்பிடி நீங்க கலங்கக் கூடாது! இத நான் பாக்கக் கூடாது! பாக்கவே கூடாது.” என்றார் அரற்றலாக.

அவளின் அப்பம்மாவும் இதைத்தானே எழுதியிருந்தார். புன்னகையுடன் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, “இது அழுகை இல்லையப்பா. சந்தோசக் கண்ணீர். நான் பிறக்கக் காரணமா இருந்த மனுசர் என்னைக் கைவிட்டாலும் அந்தக் கடவுள் எனக்கு எவ்வளவு அருமையான அம்மாவையும் அப்பாவையும் தந்திருக்கிறார் எண்டுற சந்தோசம். ஆனா, இனி ஒண்டுக்கும் யோசிக்காதீங்க அப்பா. நான் இருக்கிறன். உங்கட மகள் இருக்கிறாள். இனியும் நீங்க எதுக்கும் கவலைப் படக் கூடாது!” என்றுவிட்டு எழுந்து அவள் புறப்பட, அவள் கரம் பற்றி நிறுத்தினார் குணாளன்.

“உங்க ரெண்டு பேரையும் அந்த வீட்டுக்குக் குடுத்ததால அப்பாவோட கோவமா பிள்ளை?” என்றார் அவள் முகத்தையே இமைக்காது பார்த்தபடி.

அது இத்தனை நாள்களும் இருந்ததுதான். இன்று இல்லை. அவரின் அளப்பரிய அன்பின் முன்னே அவளுக்கு அது ஒரு விடயமாக இல்லை. அனைத்தையும் சமாளிக்கத்தான் அவள் இருக்கிறாளே. பிறகென்ன?

“அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லையப்பா.” என்றாள் மனத்திலிருந்து.

நம்ப மாட்டேன் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “சுவாதியப் போலவேதானம்மா வாசவியும் அழுதுகொண்டு வந்து நிண்டவள். அண்டைக்கு அவள் ஆசைப்பட்ட அந்த வாழ்க்கையை எங்களால அமைச்சுக் குடுக்கேலாமப் போச்சு. அதால அவளும் இல்லாமப் போயிட்டாள். சுவாதியும் அப்பிடி ஒரு முடிவை எடுத்துட்டா? வாசவியப் பாத்த கோலத்தில பெத்த மகளையும் பாக்கிற தைரியம் எனக்கு இல்லையம்மா” என்று அவர் முகத்தை மூடிக்கொண்டு அழவும் ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டாள் அவள்.

எவ்வளவு பெரிய வேதனையை யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே போட்டு அழுத்திக்கொண்டு அத்தனையையும் செய்திருக்கிறார். இது எதுவும் தெரியாமல் அவரைத் தண்டித்துவிட்டாளே. நெஞ்சு சுட்டது.

ஜெயந்திக்கும் இன்றுதான் இதெல்லாம் தெரிய வந்துகொண்டிருந்தது. அதில் அதிர்ந்துபோய் நெஞ்சைப் பற்றிக்கொண்டார் அவர்.

“நான் தூக்கி வளத்த முதல் குழந்தை அவள். அவளை மாதிரி…” என்றவரை மேலே பேச விடாமல் அவர் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவள் அவர் கண்களையும் துடைத்துவிட்டாள்.

“எனக்கு உங்களில் எந்தக் கோவமும் இல்லை அப்பா. மனதைப் போட்டு வருத்தாதீங்கோ.” என்றாள் இதமாக.

அவர் விடுவதாக இல்லை. எப்படியாவது தன் பக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். இத்தனை நாள்களும் அவள் விலகி நிற்க, எதையும் சொல்ல முடியாமல் மனத்துக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்தவை எல்லாம் அவள் வந்ததும் வெளியே வந்தன.

“அதே மாதிரித்தானம்மா உனக்கும். அவேயா கேட்டுக்கொண்டு வரவும் அடி நெஞ்சில இருந்த கோவம், ஆரை வேண்டாம் எண்டு சக்திவேலர் சொன்னாரோ, அவளின்ர மகளை அந்த வீட்டுக்கே மருமகளாக்கிப் பார் எண்டு சொல்லும். இன்னொரு நேரம் என்ர பிள்ளையும் அங்க போய்த் துன்பம் அனுபவிப்பாளோ எண்டு இருக்கும். ரெண்டு மனதா தடுமாறிக்கொண்டு இருந்தனான். அதே நேரம் என்னால உனக்குப் பிடிச்சவனா, உனக்கு ஏற்றவனா ஒருத்தனைக் கண்டுபிடிக்கவும் முடியேல்ல. இதுல நிலன உனக்குப் பிடிக்கும் எண்டதும்…” என்றுவிட்டு அவளையே பார்த்தார்.

உண்மையிலேயே அவளுக்கு அவனைப் பிடிக்குமா என்று கேட்கிறார். இனியுமா அவரைத் தவிக்க விடுவாள்?

“பிடிக்கும்தான் அப்பா.” என்றாள் சிறு முறுவலுடன்.

குழந்தையாய் அவர் முகம் மலர்ந்து போயிற்று. “உண்மையாத்தானே குஞ்சு? அப்பாக்காகச் சொல்லேல்லையே?” என்று திரும்ப திரும்பக் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்.

அவர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள் இளவஞ்சி. தையல்நாயகியை நோக்கிப் போகிறோம் என்கிற அந்த உணர்வே ஒருவிதப் பரவசத்தையும் பரபரப்பையும் உண்டாக்கிற்று. அவளின் ராஜாங்கம். அரசன் இல்லா அரியணை எப்படி அதன் சோபையை இழந்துவிடுமோ, அப்படித் தன் ராஜாங்கம் இல்லாமல் ஒன்றுமே இல்லாதவளைப் போல் ஆகியிருந்தாளே.

எதிரில் பேருந்து ஒன்று மிக வேகமாக வரவும் ஒதுங்கி வழி விட்டவள் சட்டென்று தடுமாறி, ஓரமாகக் காரை நிறுத்திவிட்டாள்.

இப்படி ஒரு பேருந்தில்தானே அவள் அன்னை அடிபட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதே போலொரு வீதியில்தானே இரத்தம் உறைய மடிந்து கிடந்திருப்பார்.

நெஞ்சம் திரும்பவும் கொந்தளிக்க ஆரம்பித்தது. கூடவே மலர்கள் இல்லத்தின் நினைவும் வந்தது. அவள் கணிப்புச் சரியாக இருந்தால் அந்த மலர்கள் இல்லத்தில்தான் அவள் இருந்திருக்க வேண்டும்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அந்தளவில் மாதத்தில் இரண்டு முறை அங்கே போய் வருவாள். அதுவும் தையல்நாயகி அம்மா பழக்கிய பழக்கம்தான். என்றைக்கும் அந்த இல்லத்தையும் அங்கிருப்பவர்களையும் கைவிட்டுவிடாதே என்பார்.

அவரின் காலம் தொட்டே வயோதிபர் இல்லங்களுக்கு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிக் கொடுப்பது வழமையாக அவர்கள் செய்வதுதான். புண்ணியத்திற்கு புண்ணியமாகவும் வரிவிலக்கிற்கு ஏதுவாகவும் இருக்கும் என்று சொல்லுவார்.

ஆனால், அந்த இல்லத்தை அவர் தன் மனத்திற்கு மிக நெருக்கமாக உணர்வார் என்று அவளுக்கே தெரியும். அங்கிருக்கும் பல கட்டிடங்கள் அவரும் அவருக்குப் பிறகு அவளும் கட்டிக்கொடுத்தவை.

அந்த இல்லத்திற்குத் தேவையான பெரும்பான்மைச் செலவை அவளேதான் கவனிக்கிறாள். அப்படித்தான் அங்கே வளர்ந்த பிள்ளைகளுக்குத் தையல்நாயகியில் வேலை கொடுக்க ஆரம்பித்ததும்.

உதவியாக எண்ணித்தான் இவ்வளவு காலமும் செய்தாள். இன்றுதான் தன் உயிர் பாதுகாக்கப்பட்ட இடம் அது என்று புரிந்தது.

அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் காரை அவள் ஸ்டார்ட் செய்தபோது, அடுத்த பக்கத்தின் கதவைத் திறந்து, உள்ளே ஏறி அமர்ந்தான் நிலன்.

சட்டென்று அவள் முகத்தில் ஒரு இறுக்கம். அவன் பக்கம் அவள் திரும்பவே இல்லை. சிலைபோல் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான் நிலன். நேரம்தான் சென்றுகொண்டிருந்ததே ஒழிய அவள் திரும்புவதாக இல்லை.

அதற்குமேல் அமைதியாக இருக்க முடியாமல் அவள் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பி, “என்னைப் பிடிக்கும் எண்டு சொன்னியாம். உண்மையா?” என்றான்.

விழியாகலாது அவனையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, ஆம் என்பதுபோல் தலையை அசைத்தாள்.

“அப்ப நீயே சொல்லு, உனக்குப் பிடிச்சவன் இதையெல்லாம் தெரிஞ்சுதான் உன்னைக் கட்டி இருப்பானா?”

அவள் பதில் சொல்லவில்லை. அசையாத பார்வையை அவனை விட்டு விலக்கவும் இல்லை.

“சொல்லு வஞ்சி!”

வார்த்தைகளுக்கு அவன் கொடுத்த அழுத்தத்தைக் கவனித்தாலும், “அப்ப என்னத்துக்கு இந்தக் கலியாணம் நடந்தது?” என்று தன் அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டாள் இளவஞ்சி.

“இனியும் அதைச் சொல்லாம இருக்கிறதால ஒண்டும் வரப்போறேல்ல. நீ இண்டைக்குத் தெரிஞ்சுகொண்டதுகளோட ஒப்பிடேக்க அது ஒண்டுமே இல்லையும்தான். ஆனா அதை நான் உனக்குச் சொல்ல முதல் எனக்கு உன்ர பதில் வேணும்.” என்றான் அவனும் பிடிவாதமாக.

“கோழைக்கெல்லாம் உண்மையச் சொல்லுற தைரியம் வந்திருக்காது.” என்றாள் அவள்.

அப்படிச் சொன்னவளையே சில கணங்களுக்குப் பார்த்தவன் இழுத்து அணைத்துக்கொண்டான்.

நடுவில் கிடந்த கியர் பொக்ஸ் பெரும் தொந்தரவு கொடுத்தாலும் அதைச் சட்டை செய்யாது அவளைத் தன் இறுகிய அணைப்பில் அடக்கினான்.

அவளைத் தேடிக்கொண்டு அவன் அவர்கள் வீட்டுக்குப் போனபோது, அந்த வீடே உணர்வுகளின் தத்தளிப்பில் மிதந்திருந்தது. இனி மறைக்க எதுவுமில்லை என்று நினைத்தாரா, இல்லை எப்படியும் தெரியவந்துவிடப்போவதை மறைத்து என்ன காணப்போகிறேன் என்று நினைத்தாரா தெரியவில்லை. நிலனிடமும் அனைத்தையும் பகிர்ந்துகொண்டிருந்தார் குணாளன்.

கொஞ்ச நேரத்திற்கு இவர் என்ன சொல்கிறார் என்றுதான் இருந்தது அவனுக்கு. அந்தளவில் நம்பவே முடியா பெரும் அதிர்ச்சி. அதிர்ச்சி நீங்க நீங்க அந்த இடத்தை ஆத்திரம் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது. கூடவே இளவஞ்சிக்காக அவன் உள்ளம் அழுதது. என்னவோ தானே அநாதையாய் அநாதை இல்லத்தில் கிடந்ததுபோல் துடித்துப்போனான்.

அங்கிருந்து புறப்பட்டவன் எப்படியும் தையல்நாயகிக்குத்தான் போவாள் என்று கணித்து வருகையில்தான் அவன் காரைக் கண்டான்.

மிதுனை அழைத்து, தந்தையின் காரை எடுத்துக்கொண்டு போகச் சொல்லிவிட்டு, ஓடி வந்து இந்தக் காரினுள் ஏறிக்கொண்டான்.

அவளைப் பார்த்த கணம் அள்ளியணைக்கத்தான் அவன் உடலும் உள்ளமும் துடித்தன. ஆனால், அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று தெரியாமல் அவளையே பார்த்தான்.

இப்போது தன் கைகளுக்குள் அடங்கிவிட்டவளை உயிருக்குள்ளேயே பொத்திக்கொள்ள வேண்டும் போலொரு துடிப்பு. அவள் முகத்தைக் கைகளில் தாங்கி, முகம் முழுக்க முத்தமிட்டு, “சொறி!” என்றான், அவள் விழிகளோடு தன் பார்வையைக் கலந்து.

சட்டென்று நிலைகுலைந்துபோனாள் இளவஞ்சி. என்னவோ அவள் உள்ளத்தின் வேதனை அடுக்குகள் எல்லாம் படபடவென்று வெடித்துச் சிதறுவது போலிருந்தது. அழுகை வந்தது. ஆத்திரம் வந்தது. காரணமே இல்லாதபோதும் அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு சண்டை பிடிக்க வேண்டும் போலிருந்தது.

அதையெல்லாம் அடக்க அவள் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தபோது, “என்ர வீடு இவ்வளவு பெரிய துரோகத்தை உனக்குச் செய்திருக்கு எண்டு எனக்குத் தெரியாது வஞ்சி. ஆனா ஒண்டு. இது முதலே எனக்குத் தெரிஞ்சிருந்தாலும் உன்னைத்தான் கட்டி இருப்பன்.” என்றான் உறுதியான குரலில்.

அவனையே சில கணங்களுக்குப் பார்த்தவள் பிடிவாதமாக அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள். பார்வையையும் ஜன்னலுக்கு வெளியே திருப்பிக்கொண்டாள்.

இன்னுமே அவள் தன் உணர்வுகளை அவனிடம் காட்டத் தயாராயில்லை என்பது, அவனைத் தாக்கிற்று.

தான் தம் திருமணத்தின்போது அவளுக்கு நியாயமாய் நடக்கவில்லை என்று தெரிந்திருந்தாலும் அவளின் அந்த விலகல் அவனுக்குள் சிறு வலியைத் தோற்றுவிக்காமல் இல்லை.

காரை விட்டு இறங்கி, அவள் புறம் வந்து கதவைத் திறந்து, “இறங்கி அந்தப் பக்கம் போ!” என்றான்.

அவள் அசையாமல் அமர்ந்திருக்க, “இறங்கு வஞ்சி!” என்று பிடிவாதமாக அவளை இறக்கி, அந்தப் பக்கம் இருத்தி, தானே பெல்ட்டையும் மாட்டிவிட்டு வந்து, காரை எடுத்தான்.

என்றும்போல் அவளைக் கண்டதும் தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலையின் கேட், உருண்டோடிப்போய் ஒரு ஓரமாக நின்று வழிவிட்டது. அதனுள்ளே நுழைந்த நிலனின் கார் சீரான வேகத்தில் பயணித்து, அதற்கான இடத்தில் சென்று நின்றது.

இறங்க வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல் அதையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் இளவஞ்சி. அவளால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவேயில்லை. கத்தி அழ வேண்டும் போலிருந்தது. சந்தோசத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும்போலிருந்து. அந்தத் தொழிற்சாலையை மொத்தமாகக் கட்டிக்கொண்டு கொஞ்ச வேண்டும் போலிருந்தது. இன்னுமின்னும் பெயர் சூட்ட முடியா உணர்வுகள் எல்லாம் பொங்கி பொங்கி அலையடித்தன.

நிலனுக்கு இப்போதும் அவள் உணர்வுகள் புரிந்தது. நெஞ்சம் கனிந்துபோயிற்று. சிறு முறுவலுடன் அவள் தலைமீது கையை வைத்து ஆட்டிவிட்டு காரை விட்டு இறங்கினான். அவள் பக்கம் வந்து கதவைத் திறந்து பிடித்து, “இறங்கு வஞ்சி!” என்றான்.

அவனைப் பார்த்து அழகாய் முறுவலித்துவிட்டு இறங்கினாள் அவள்.

மொத்தத் தொழிற்சாலையும் ஓடி வந்து அவளுக்குப் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். எல்லோர் முகத்திலும் பூரிப்பும் ஆனந்தமும். இளவஞ்சி மறுபடியும் வந்து பொறுப்பேற்கப்போகிறாளாம் என்று ஆனந்தி அறிவித்த கணத்திலிருந்து அவர்கள் அவர்களாகவே இல்லை.


அன்பாய்ப் பேசி, ஆசையாய் வரவேற்றனர். அவள் மறுபடியும் வந்ததால் தமக்குண்டான மகிழ்வைப் பகிர்ந்தனர். இப்போதுதான் தையல்நாயகிக்கே களை வந்திருக்கிறது என்று அவர்கள் பேசிக்கொண்டது நெஞ்சில் இதத்தைப் பரப்பிற்று.

அங்கே தொழிற்சாலையின் வாசலில் என்றும்போல் இன்றும் அவளை வரவேற்க அவளின் தையல் பெண் தன் கனிந்த முறுவலுடன் காத்திருந்தார். அவ்வளவுதான். அன்னையைக் கண்டதும் குடுகுடு என்று ஓடும் குழந்தையாக அவரிடம் ஓட்டமும் நடையுமாக விரைந்தாள் இளவஞ்சி.

அவள் விழிகளில் மெல்லிய நீர்க்கசிவு. ஏன் என்றே தெரியாமல் அவள் இதழ்களும் புன்னகையில் விரிந்தன. உள்ளத்தில் நெகிழ்ச்சி. உடலில் ஒரு பரவசம்.

தொழிலில் மாத்திரமல்லாமல் வாழ்க்கையிலும் எத்தனை கடினமான சூழ்நிலைகளை எல்லாம் தாண்டி வந்த பெண்மணி அவர். தான் அவரின் பேத்தி என்பதை மிக மிகப் பெருமையாய் உணர்ந்தாள். என்னவோ அவரைப் புதிதாகப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

தான் அவர் வாரிசு இல்லை என்றதும் உடைந்து நின்றதை எண்ணி இன்று வெட்கினாள். இன்னும் தைரியமாகவும் திடமாகவும் தான் அதை அணுகியிருக்க வேண்டுமோ என்று நினைத்தாள்.

ஆணாதிக்கமும் நான் என்கிற அகங்காரமும் இன்றைக்கு விடவும் அன்றைக்கு ஓங்கி நின்ற காலம் அவருடைய காலம். அப்போதே இத்தனையையும் தளராமல் தாங்கி வந்த பெண்மணியின் பேத்தி, இன்னும் சிறப்பாய் அனைத்தையும் கையாண்டிருக்க வேண்டாமா?

பரவாயில்லை. யானைக்கும் அடி சறுக்குவது நடப்பதுதானே! திரும்பி நிலனைப் பார்த்தாள்.

சின்ன சிரிப்போடு நட என்பதுபோல் தலையை அசைத்தான் அவன். அவனைப் பார்த்து அழகாகப் புன்னகைத்துவிட்டு, அவன் கரத்தைப் பற்றி அழைத்துக்கொண்டு நடந்தாள் இளவஞ்சி.

அதோ ராணியின் அரியணை! முற்றிலும் கண்ணாடியால் உருவாக்கப்பட்டு, முழுமையான வெண்திரையினால் மறைக்கப்பட்டிருந்த குளிரூப்பட்ட அறை அவளுடையது.

அதன் கண்ணாடிக் கதவில் Ms. Ilavanji Kunaalan, Managing Director, Thaiyalnayagi Garments (Pvt)Ltd என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டதுமே அவள் எவ்வளவோ தடுத்தும் முடியாமல் விழிகளில் நீர் கோர்த்துக்கொண்டது.

நிலனோடு உள்ளே நுழைந்தாள். அவள் அறை அவள் விட்டுவிட்டுப் போனது போலவே இருந்தது. ஆனந்தி அப்படி ஆக்கிவைத்திருந்தாள். ஒரு கணம் அங்கேயே நின்று ஆழ்ந்து சுவாசித்தாள். இதுதான் அவள் உலகம். இங்கேதான் அவள் அவளாக இருப்பாள். அவளை உயிர்ப்புடன் வைத்திருப்பது இதுதான்.

கைப்பையை தன் மேசையில் வைத்துவிட்டு, மேசையைச் சுற்றிக்கொண்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்த கணத்தில் உடைந்தாள் வஞ்சி.

“வஞ்சி!” என்று நெருங்கியவனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, வயிற்றில் முகம் புதைத்தவளின் விழிகள் ஈரமாகிக் கசிய ஆரம்பித்தன.

 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
மக்களே, ஒரு விடயம் சும்மா உங்களோடு பகிரலாம் என்றும் நினைக்கிறேன்.

இந்த இணைய உலகத்தில் பலர் கதைகள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் இல்லையா. அப்படி இருக்கையில் ஒரே மாதிரியான கருக்களை எடுத்து அவரவர் கோணத்தில் எழுதுவது என்பது வேறு. ஆனால், அதே கதையையோ அல்லது அதே காட்சியை எடுத்து அப்படியே எழுதுவதற்கு பெயர் வேறு.

இதே மாதிரி ஒரு நிகழ்வு 2020ல் எனக்கு நடந்தது. 2017ல் நான் எழுதிய நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவல் அதே கருவோடு அப்படியே கதையாக வந்து புத்தகமாகவும் வெளிவந்திருந்தது.

இதில் கவலையான விடயம் என்னவென்றால் அந்தக் கதையைப் போல் என் கதை இருக்கிறதே என்று ஒரு கருத்தினை நான் பார்க்க நேர்ந்ததுதான்.

இதுதான் அது :

bf0327a3-9ec9-4eb4-b6af-359a248cdb55.jpeg




அதனால்தான் இப்போதும் என் வாசகர்களுக்கு இந்த விளக்கம்.

உன் அன்புக்கு நன்றி - என் வாழ் நாளில் என்னால் மறக்கவே முடியாத ஒரு கதை. அதைப்போலத்தான் அதை வாசித்த ஒவ்வொரு வாசக உறவுகளின் மனத்திலும் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் என்று எனக்குத் தெரியும்.

அந்தக் கதையிலிருந்து ஒரு காட்சியை இங்கே பகிர்கிறேன். ஏதாவது ஒரு காலத்தில் அல்லது என்றாவது ஒரு நாள் இதேபோல் காட்சிகளை வேறு கதைகளிலும் நீங்கள் பார்க்கலாம். இல்லை, ஏற்கனவே பார்த்திருக்கலாம். அப்போது வந்து என்ன இது அந்தக் கதையில் வருகிற காட்சி இங்கு வருகிறதே என்று சொல்லிவிடாதீர்கள்.

நான் அப்படியானவளும் அல்ல. என் எழுத்து அப்படியானதும் அல்ல. என் வாசகர்களுக்கு என்னைத் தெரியும் என்கிற நம்பிக்கையோடு அன்பும் நன்றியும் அனைவருக்கும்.

நட்புடன் நிதா. 7a3ee419-9bde-4493-bd3c-230ef84853fe.jpeg

a22cf265-b868-4a93-9367-208cb6c826dd.jpegadf1e25e-839b-483b-9dd0-026ef695cd94.jpeg
93b7cce7-ece9-476e-ab2b-4418bd6bdaef.jpeg
 
Last edited:

vidhyavjy

New member
நீங்க இப்படி எல்லாம் வருத்தப்படும் கூடாது... நீங்க தான் உண்மையானவர்... திறமைசாலி.... உங்கள் கதைகள் அவ்வளவும் படித்தவள் என்ற முறையில் நான் சொல்வது... கெத்தா நடங்க.... பாத்துக்கலாம் ❤❤❤
 
காலை வணக்கம் இங்கே நிதா அவர்களே
நான் நிறைய வாசிக்கும் இயல்புடையவள்....
நிறைய இல்லையென்றாலும் ஒரு சில தளங்களில் சில பல எழுத்தாளர்களின்
எண்ணங்களின் எழுத்துக்களை வாசித்து கொண்டிருக்கிறேன்....
உங்களின் எண்ணங்களும் எழுத்துகளும்
தனித்துவமானவை.....
யாமறிந்த கதைகளோடும் கதாபாத்திரங்கள் ஓடும் ஒப்பிட முடியாதவை.....
ஒவ்வொரு எழுத்தாளரும் தனித்துவமான
நடை உண்டு.....
உங்களுடையது உங்களில் மட்டுமே.......
நீண்ட உரையாடி விட்டது
பொருத்தருள்க......
நன்றி....
 
உங்கள் எழுத்து நடை உங்கள் கதைகள் உங்களுக்கு உரிய தனி திறமை நிதா. அது கடவுள் கொடுத்த கொடைtஉங்களுக்கு. நீங்கள் எதையும் நினைத்து கவலை பட வேண்டாம். காய்க்கிற மரம் தானே கல்லடி படும். Dont worry நிதா ❣
 

Nandhu15

Member
குணாளன் மாதிரி ஒரு அப்பா எல்லாருக்கும் கிடைக்கணும் 😊😊😊 அருமை 🫰🫰🫰 நிதனியின் கதை அவ்வளவு அருமையா இருக்கு அதான் சில பேர் காப்பி அடிக்கிறாங்க 🤪🤪🤪
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom