அவள் வாசவியின் மகள் என்று அறிந்து அதற்கும் சத்தம் போட்டார். “தகப்பன் ஆராம்? இல்ல ஆர் எண்டு தெரியாம வயித்தில வாங்கினவளாமா அவளின்ர அம்மா? இந்தக் கேவலத்தையே பரம்பரை பரம்பரையா செய்றாளவே போல…” அதற்குமேல் அவர் பேசுவதை எல்லாம் கேட்க முடியாமல் வீட்டிலிருந்து வெளியே வந்திருந்தான் நிலன்.
அவனுக்குக் கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது. அதை யார் மீது காட்டுவது என்றுதான் தெரியவில்லை. காரை எடுத்துக்கொண்டு திரும்பவும் சக்திவேலுக்கே வந்து வேளையில் தன்னைப் புகுத்த முயன்றான்.
*****
எத்தனையோ நாள்களுக்குப் பிறகு அவளே எதிர்பாரா கணத்தில் தையல்நாயகிக்குத் திரும்பவும் வந்திருந்தாள் இளவஞ்சி.
வீடு திரும்பிய உணர்வு வந்த அதே நேரத்தில் தையல்நாயகியின் தற்போதைய நிலை என்ன என்று அவளுக்குத் தெரியவில்லை.
அனைத்துப் பிரிவுத் தலைவர்களையும், முக்கிய பொறுப்பில் இருப்பவர்களையும் அழைத்துப் பேசினாள். அவள் இல்லாத இந்த இடைப்பட்ட நாள்களில் நடந்தவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். முக்கியமாகச் சக்திவேலர் இங்கே வந்து என்ன குழப்பங்களை விளைவித்தார் என்பதை ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும் விரிவாகவும் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.
அவர் அறிய முயன்றது முழுக்க முழுக்க அவள் மூலப் பொருள்களை எங்கிருந்து தருவிக்கிறாள், எப்படி உற்பத்திகளைக் கையாள்கிறாள், அவளின் உத்திகள் என்ன, அவளின் வெளிநாட்டு ஆர்டர்கள் என்ன, மாத லாபம் என்ன போன்றவைதான்.
கேட்டறிந்துகொண்டவளுக்கு கோபச் சிரிப்புத்தான் உண்டாயிற்று. அவளின் அடி மடியிலேயே கை வைக்கப் பார்த்திருக்கிறார். அவள் என்ன அந்தளவில் ஏமாளியா, அல்லது தையல்நாயகியின் தயாரிப்பு அவ்வளவு இலகுவாகச் சோடை போய்விடுமா?
அவர் கேட்டவை எல்லாம் அவளின் பிரத்தியேகமான மடிக்கணணியில்தான் புதைந்துகிடந்தன. சுவாதி மிதுனிடம் தையல்நாயகியை ஒப்படைத்துவிட்டுப் போனாலும் அவர்களைப் பற்றி அவளுக்குத் தெரியுமே.
எப்படிக் கொண்டு போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் அதையெல்லாம் வெளியில் விடுவாளா? ஆடை உற்பத்தி என்பது இன்று தயாரித்து நாளை கொடுப்பதன்று. அதில் அவள் எடுத்த ஆடர்களே அடுத்த மூன்று மாதத்திற்கு இருந்தன. அதேபோல்தான் மூலப்பொருள்களும்.
அந்த மூன்று மாதங்கள்தான் அவள் சின்னவர்களுக்கு வைத்தருந்த கெடுவும். சுவாதியாகக் கேட்டுக்கொண்டு வரட்டும், அதன் பிறகு என்ன செய்வது என்று பார்க்கலாம் என்று எண்ணியிருந்தாள்.
அன்றைக்கு அவள் வேறு வேலைகள் எதுவும் பார்க்கவில்லை. ஒருமுறை தையல்நாயகியை முழுமையாகச் சுற்றி வந்து, குறைநிறைகளைக் கேட்டறிந்து, அவசரமாகச் செய்யவேண்டியவற்றைக் குறிப்பெடுத்து என்று முழுமையாகத் தையல்நாயகியைத் திரும்பவும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கே அந்த நாள் போயிற்று.
உடலளவில், மனத்தளவில், மூளையால் என்று மொத்தமாகக் களைத்துப்போயிருந்தாள். ஆனாலும் அடுத்த நாளிலிருந்து பார்க்க வேண்டிய வேலைகளை ஆனந்தியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.
அப்போதுதான் நிலன் முறைப்புடன் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போன கார் திறப்பு கண்ணில் பட்டது. சின்ன சிரிப்புடன் அதை எடுத்தாள்.
அவள் மீது கோபமாக இருந்த நேரத்திலும் அவன் அக்கறை பிடித்திருந்தது. அவளும் அவனைக் கட்டிக்கொண்டு அழுதாளே. கைப்பையையும் எடுத்துக்கொண்டு அவள் வெளியே வந்தபோது விசாகன் நின்றிருந்தான்.
இவளைக் கண்டுவிட்டு, “மேம்! நான் உங்களோடதான் இருப்பன்.” என்றுகொண்டு ஓடி வந்தான்.
“ஆர் உங்கள அனுப்பினது?” என்றாள் இறுக்கமான குரலில்.
அவன் அமைதியாக நிற்க, “ஆர் உங்களை அனுப்பினது எண்டு கேட்டனான் விசாகன்!” என்றாள் திரும்பவும் அழுத்தம் திருத்தமாக.
“நிலன் சேர்தான்.” என்றவன் வேகமாக நிலனுக்கு அழைத்து விடயத்தைச் சொல்லிவிட்டு, அவளிடம் தன் கைப்பேசியை நீட்டினான்.
வாங்கி இவள் காதில் வைக்கவும், “வஞ்சி அவனோட போ!” என்றான் நிலன் அந்தப் பக்கத்திலிருந்து.
விசாகனின் செவியில் விழாத தூரம் வந்து, “போகாட்டி என்ன செய்வீங்க?” என்று திருப்பிக் கேட்டாள் இளவஞ்சி.
“எல்லாத்துக்கும் பிடிவாதம் பிடிக்கிறேல்ல. அதே மாதிரி எல்லா விசயமும் நீ நினைக்கிற மாதிரித்தான் நடக்கோணும் எண்டும் நிக்கிறேல்ல. எனக்கு உன்ர பாதுகாப்பு முக்கியம். நீ மண்டைக்க ஆயிரம் விசயத்த வச்சுக்கொண்டு காரை ஓட்டி ஏதாவது ஒண்டு நடந்தா நான் என்னடி செய்றது?” என்றான் அங்கே தனக்கு இருந்த சினத்தில் அவனும் எரிச்சலாக.
சட்டென்று அமைதியானாள் இளவஞ்சி.
“வஞ்சி?”
“ம்?”
“அவன் இனி உன்னோடதான் இருப்பான். இனி நான் இல்ல வேற ஆர் கேட்டாலும் மூச்சம் விடமாட்டான். இத தவிர வேற ஏதாவது விசயத்தில அவன் சரியில்லை எண்டா சொல்லு வேற ஆள் பாப்பம். உனக்கு அவனில கோவம் இருந்தாலும் அவன் எண்டா கொஞ்சம் ஈஸியா இருப்பாய் எண்டுதான் அவனையே கூப்பிட்டனான். அதால திறப்பை அவனிட்ட குடுத்திட்டுப் பேசாமப் போய் ஏறு போ!” என்று அவன் படபடவென்று பொறிய, “அங்க ஏதும் பிரச்சினையா?” என்றாள் இவள்.
“இல்லையே. அப்பிடி ஒண்டும் இல்லையே. ஏன் கேக்கிறாய்?” அவள் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் ஒரு நொடி தாமதித்தாலும் வேகமாகச் சமாளித்துக்கொண்டு வினவினான்.
“என்ன பிரச்சினை எண்டு கேட்டனான் உங்களை?”
“ஒரு பிரச்சினையா ரெண்டு பிரச்சினையா உன்னட்டச் சொல்ல? எனக்கு இப்ப அவசரமா ரெண்டு பொம்பிளைப் பிள்ளை வேணும். பிறகு ஒரு ஆம்பிளைப் பிள்ளை. அவே மூண்டு பேருக்கும் பத்து வயதானதும் கடைசியா ஒரு பிள்ளை. நீ வேற சொந்தமா ஃபாக்ட்டரி வச்சிருக்கிறாய்.” என்றதும் சிரித்துவிடப் பார்த்தாள் இளவஞ்சி.
அன்றைய நாள் முழுக்க இருந்த அழுத்தம், கவலை, கண்ணீர் எல்லாமே நொடியில் காணாமல் போன உணர்வு. காலையிலும் உணவை ஊட்டிவிட்டானே. அவர்களுக்குள் இதமானதொரு சூழ்நிலை உருவாகுகையிலேயே என்னவெல்லாமோ நடந்துவிட்டது.
“எங்க நிக்கிறீங்க? வேல கூடவா?” என்றாள் தன்னை மீறி.
“இஞ்ச சக்திவேலிலதான். வேல அது நிறைஞ்சு கிடக்கு.”
வேலை அதிகம் என்றால் இத்தனைக்கு முடிக்கப் போகிறானாம் என்கிற கேள்வி உண்டானாலும், “சரி, நான் ஃபோன விசாகனிட்ட குடுக்கிறன்.”என்றாள்.
அவனுக்கு அவள் இப்போது எங்கே போகப்போகிறாள் என்று அறியத் தோன்றியது. ஆனாலும் கேட்கவில்லை. அவளாக எங்கே போகிறாள் என்று பார்க்கலாம் என்று முடிவு கட்டிக்கொண்டு, “முதல் வேலையா உன்ர ஃபோன்ல இருந்து என்னை ஃபிரீ பண்ணி விடு.” என்றுவிட்டு வைத்தான் அவன்.
விசாகனுடைய கைப்பேசியோடு சேர்த்து காரின் திறப்பையும் நீட்டினாள் இளவஞ்சி. சட்டென்று உணர்ச்சிப் பிழம்பாகிப்போனான் விசாகன்.
“உங்களுக்கு நினைவு இருக்கா தெரியா மேம். அப்ப தையல்நாயகி மேம் இருந்த நேரமும் உங்களிட்ட தந்துதான் கார் திறப்பை என்னட்டத் தர வச்சவா. ஆனா நான் அதுக்கு நியாயமா நடக்கேல்ல. இந்தமுறை அப்பிடி இருக்க மாட்டன் மேம்!” என்றான் கலங்கிவிட்ட விழிகளில் உறுதி தெறிக்க,
ஒன்றும் சொல்லாமல் காரின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டாள் இளவஞ்சி. அவனிடம் எதையும் காட்டிக்கொள்ளாதபோதும் அப்படி அமர்ந்துகொண்டபோது எல்லாமே பழையபடி ஆகிவிட்டது போலொரு ஆசுவாசம்.
“மேம் எங்க விட?” காரை தையல்நாயகியிலிருந்து வெளியில் எடுத்தபடி வினவினான் விசாகன்.
“எங்க வீட்டுக்கு.” என்றாள் அவள்.
தொடரும்…