• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பெயர்ச்சொல்

நிதனிபிரபு

Administrator
Staff member
வணக்கம் நண்பர்களே,

என்ன இது பெயர் சொல் தெரியாதா என்று நினைக்க வேண்டாம். சின்னதாக ஒரு அறிமுகம். கொஞ்சம் கொஞ்சமாய் மீட்டுப் பார்க்கவேண்டும். பிழையில்லாமல் எழுதவேண்டும் என்று எனக்குள் உருவாகி இருக்கும் ஆர்வத்தை இங்கேயும் பகிர விருப்பமுள்ளது. என்னைப்போல பலருக்கு உதவுமே என்கிற எண்ணம் தான். முழுவதும் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. பிழை இருப்பின் சொல்லவேண்டும். காரணம், கற்றுத் தெளிந்து எழுதவில்லை. கற்பதைத்தான் பகிர்கிறேன். எல்லோருமாகச் சேர்ந்து கற்கலாமே என்றுதான் இங்கு பதிவிடுகிறேன். அதோடு, இவை நான் இணையத்தில் இருந்து பெறுபவை தான். இப்படி கற்பதற்காக வழி செய்து தந்திருக்கும் இணையத்து நண்பர்கள் எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி. முடிந்தவரை எங்கிருந்து பெற்றேன் என்பதையும் கீழே குறித்துவிடுகிறேன்.

வாருங்கள், தமிழ் கற்போம்!


பெயர்ச்சொல்
எனக்கு வந்த முதல் சந்தேகமே 'பெயர்'க்கும் 'சொல்'லுக்கும் இடையே ச் வருமா என்பதுதான். ஆனால், மதிப்பிற்குரிய மகுடேஸ்வரன் அண்ணாவின் பதிவில் சொல்லி இருக்கிறார், இரண்டு பெயர்ச்சொற்கள் வரும்போது இரண்டாவதாக வரும் சொல்(வருமொழி) வல்லினத்தில் இருந்தால் அவற்றுக்குள் வலிமிகும் என்று. ஆக, ச் வந்திருப்பது சரிதான் என்கிற முடிவுக்கு நானும் வந்திருக்கிறேன்.
பெயர்ச்சொல் என்றால் என்ன?

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்

1. பொருட் பெயர்
2. இடப் பெயர்
3. காலப் பெயர்
4. சினைப் பெயர்
5. பண்புப் பெயர்
6. தொழிற் பெயர்


என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.

நன்னூல் விளக்கம்
'இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா
வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே'- நன்னூல் - 275


எடுத்துக்காட்டுகள்

பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்


(நன்றி களஞ்சியம்)
ஆக, இன்றைய பாடமாக பெயர்ச்சொல் பற்றி அறிந்துகொண்டோம். மீண்டும் சந்திக்கலாம்.
 
Last edited:
Top Bottom