அல்ல, இல்லை - என்ன வேறுபாடு?

நிதனிபிரபு

Administrator
Staff member

அல்ல, இல்லை - என்ன வேறுபாடு ?


மிகுதியாய்ப் பரவிவிட்ட பிழைப் பயன்பாடுகளில் ஒன்று ‘அல்ல’ என்பது. ஒன்றினை மறுத்து இன்னொன்று இருக்கும் பொருளைச் சொல்வதுதான் அல்ல என்பது. அவ்வொன்றுக்கு மாற்றாக இன்னொன்று உள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும்.

‘இவை காய்கள் அல்ல’ என்று இருந்தால் கனிகளாகவோ பிஞ்சுகளாகவோ இருக்கலாம் என்று பொருள்.

அல்ல, இல்லை இரண்டும் ஏறத்தாழ ஒரே பொருளைத்தான் தரும். ஆனால், அல்ல என்னும்போது மாற்றாக இன்னொன்று உண்டு என்ற பொருள் வரும்.
இல்லை என்றால் மாற்றாகக்கூட எதுவுமே இல்லை என்ற பொருள் பெறப்படும்.

‘ஆற்றில் தண்ணீர் இல்லை’ என்றால் இல்லைதான். ஆற்றில் வேறு ஏதாவது இருக்குமா என்று எண்ணுவதற்கு அங்கே இடமே இல்லை.
இல்லாதது எனில் இல்லவே இல்லை. அல்லாதது எனில் அதுவன்றி இன்னொன்று உள்ளது.

இல்லை என்ற சொல்லை எல்லாப் பாலுக்கும் பயன்படுத்தலாம்.
அவன் இல்லை (ஆண்பால்)
அவள் இல்லை (பெண்பால்)
அவர்கள் இல்லை (பலர் பால்)
ஆடு இல்லை (ஒன்றன்பால்)
ஆடுகள் இல்லை (பலவின்பால்)

ஆனால், அல்ல என்ற சொல்லை ஒவ்வொரு பாலுக்கும் ஒவ்வொரு வகையில் பயன்படுத்த வேண்டும். அல் என்பது பால் அடையாளத்தை உணர்த்தும் விகுதியை இறுதியில் பெற்றுத்தான் வரும்.

அவன் நண்பன் அல்லன் - ஆணுக்குரிய அன் விகுதி ஈற்றில் வந்தது.

அவள் பாடகி அல்லள் - அள் விகுதி
அவர்கள் குழுவினர் அல்லர் - அர் விகுதி
ஆடு வளர்ப்பதற்கு அன்று - று அஃறிணை ஒன்றன்பால் விகுதி

ஆடுகள் விற்பனைக்கு அல்ல - அ பலவின்பால் விகுதி.

இப்படி ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கும் ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். ஆனால், நாம் எல்லாவற்றுக்கும் அல்ல அல்ல என்றே எழுதிக்கொண்டிருப்போம். அதன் இலக்கிய வழக்கு இன்னும் ஆழமாகச் செல்வது.

நான் அரசன் அல்லேன்
நீர் அமைச்சர் அல்லீர்
நாம் பயணியர் அல்லோம்
'நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்' என்றுதான் உள்ளது. இன்றைய வழக்கின்படி 'நாமார்க்கும் குடி அல்ல' என்றால் ஏற்போமா?

இப்படி முறையாக எழுத வேண்டும். மேடைப் பேச்சுத் தொடங்கி, திரைப்பாடல்கள் வரை எங்கெங்கும் ஒரே வழக்காக அல்ல அல்ல என்று எழுதுவது பிழையாகும். இது பொதுவழி அல்ல என்பது பிழை. ’இது பொது வழி அன்று’ என்பது சரி.

- கவிஞர் மகுடேசுவரன்
 
  • Like
Reactions: dsk
Top Bottom