• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 23

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 23

காலையில் விழித்ததும் ஜெயந்திக்கு மூத்த மகளின் நினைவுதான். மருமகன் வேறு வந்திருக்கிறானே. விறுவிறு என்று காலை உணவைத் தடல்புடலாகத் தயார் செய்தார். கணவருக்குத் தேநீர் கொண்டுபோகையில் அவர் பார்வை அவரையும் மீறி மாடியில் சாற்றப்பட்டிருந்த அவளின் அறைக்கதவில் படிந்து மீண்டது.

அவர் முகத்தில் தென்பட்ட பரப்பரப்பைக் கவனித்துவிட்டு என்னவென்று விசாரித்தார் குணாளன்.

“இரவு நிலனும் இஞ்சதான் வந்தவர். அதான் வேகமா எழும்பிச் சமச்சிட்டன். ஆனா இன்னும் ரெண்டு பேரும் கீழ வரக் காணேல்ல.” என்று, இன்னுமே அந்தப் பரபரப்பு நீங்காமல், குரலைத் தணித்து இரகசியம்போல் சொன்னார்.

குணாளனின் பார்வை தானாகச் சுவர் மணிக்கூட்டிற்குத் தாவிற்று. இந்த நேரத்திற்கு இளவஞ்சி எழுந்துவிடுவது வழக்கம் என்றாலும், “விடு, வாற நேரம் வரட்டும்.” என்று சொன்னார்.

“ஓமோம். இப்ப நான் என்ன எழுப்பப்போறன் எண்டா சொன்னனான். தம்பியும் வந்தது சந்தோசமா இருந்தது. இரவு தம்பிக்கு இளா முட்டை பொரிச்சுக் குடுத்தவா.” என்று இரவு நடந்ததையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

இப்படிப் பூரித்துப் பேசும் இதே ஜெயந்திதான் நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்தவர். அவரின் இளவஞ்சி மீதான பாசத்தில் குணாளனுமே என்றும் குறை கண்டதில்லை. அன்று மட்டும்தான்.

“என்னப்பா, ஏன் என்னையே பாக்கிறீங்க?” கணவரின் பார்வையின் பொருள் புரியாமல் வினவினார் ஜெயந்தி.

அவரின் உதவியாளன் பாலன் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, “அண்டைக்கு நீ வாய விடாம இருந்திருந்தா இண்டைக்கு இவ்வளவு பிரச்சினைகள் நடந்தே இராது.” என்றார் குணாளன்.

சட்டென்று ஜெயந்தியின் முகம் சுருங்கிப்போயிற்று. “இன்னும் அதையே சொல்லிக் காட்டுவீங்களா?” என்றார் மனத்தாங்கலாக.

“சொல்லிக் காட்டேல்ல ஜெயந்தி. ஆனா நீ அண்டைக்கு அத மட்டும் சொல்லேல்ல. சொத்து சுகத்தை எல்லாம் இளாதான் அனுபவிக்கிறா எண்டும் சொன்னனீ.” என்று நினைவூட்டினார் குணாளன்.

ஜெயந்திக்கு முகம் கன்றிப் போயிற்று.

“இப்ப எனக்குத் தெரியவேண்டியது உண்மையாவே உனக்கு அப்பிடி ஒரு நினைப்பிருக்கா எண்டுறதுதான்.” என்றார் விடாமல்.

இல்லை என்பதுபோல் மறுத்துத் தலையசைத்தார் ஜெயந்தி. “அண்டைக்கு எந்தப் பேய் பிசாசு வந்து என்னை ஆட்டி வச்சது எண்டு தெரியாது. ஆனா மனசில இருந்து கதைக்கேல்ல நான். இதத் தவிர வேற என்ன விளக்கம் சொல்லுறது எண்டு உண்மையா எனக்குத் தெரியேல்ல.” என்றார் மிகவுமே வருத்தம் தோய்ந்த குரலில்.

குணாளனுக்கும் இப்போது அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சொத்தைப் பற்றித் தெளிவுபடுத்துகிறவராக, “தையல்நாயகி முழுக்க முழுக்க இளாக்குச் சொந்தம் ஜெயந்தி. அது எவ்வளவு பிரமாண்டமான வளைந்து நிண்டாலும் அவாக்கு மட்டும்தான். அதால கிடைக்கிற லாபம், வாங்கிப்போடுற சொத்து எல்லாமே மூண்டு பேருக்கும் சரி சமமாப் பிரியும். இத எண்டைக்கும் மறந்திடாத. தையல்நாயகில நாங்க நாலு பேரும் ஒரு துரும்பையும் அசைக்கிறேல்ல. ஆம்பிளைக்குச் சமனா நிண்டு, பாடுபட்டு உழைச்சு லாபம் பாக்கிற பிள்ளை அவா மட்டும்தான். ஆனா அதின்ர பலாபலனை நாங்க எல்லாரும் அனுபவிக்கிறம். சுவாதி எவ்வளவு சுகபோகமா வளந்தவா, இளா எப்பிடி வளந்தவா எண்டு யோசி.” என்று இறுக்கமான குரலிலேயே எடுத்துரைத்தார்.

இது அன்று தான் சொத்துப் பற்றிப் பேசியதற்கான விளக்கம் என்பதை மிகுந்த வருத்தத்தோடு உணர்ந்துகொண்ட ஜெயந்தி, தெரியும் என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு அமைதியாகிப்போனார். என்னதான் அவர் விளக்கம் கொடுத்தாலும் பேசியது பேசியதுதானே!


*****

இளவஞ்சியின் அறையில் தன் கைகளுக்குள் இருந்த மனைவியின் அசைவில்தான் விழித்தான் நிலன். விழித்தவன் விழிகள் ஆனந்தமாக அதிர்ந்து பின் சிரித்தன. அந்தளவில் அந்தரங்கக் கோலத்தில் அவன் கைகளுக்குள் அடித்துப்போட்டதுபோல் உறங்கிக்கொண்டிருந்தாள் அவனுடைய அருமை மனைவி.

இதே அவள்தான் முதல் நாள் இரவு அவன் இருக்கிறான் என்று கோர்ட்டை எடுத்து அணிந்தவள். சிரிப்பு மிக அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அப்போதும் அவள் விழித்துக்கொள்வதாக இல்லை. இரவு முழுக்க அவன் கொடுத்த தொந்தரவு அப்படி! பின்னே, நெடுநாள் விரதமிருந்தவனிடம் கொண்டுவந்து பிரியாணியை நீட்டினால் என்னாகும்?

இரவு எதையும் திட்டமிட்டு அவன் வரவில்லை. ஆனால், உள்ளத்தில் இருப்பதை எல்லாம் அவளிடம் கொட்டிவிட்டதே அவனுக்குள் இருந்த தடையை நீக்கி நெருக்கத்தை உண்டாக்கிற்று. கூடவே, அவளின் அழகுக் கோலமும் அவனுக்குள் இருந்த அடங்காத ஆசையும் சேர்ந்து எல்லாவற்றையும் மிக அழகாய் நிகழ்த்தி முடித்திருந்தன.

மெல்ல மெல்ல அன்று பார்க்க வேண்டிய வேலைகள் வரிசையாக நினைவில் வந்தன. எட்டிக் கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தான். இனி எழுந்து புறப்பட்டால்தான் சரியாக இருக்கும்.

ஆனால், உடலின் சுகமான அயர்ச்சியும் உள்ளத்தின் நிறைவும் அவனை அதன் பிறகும் அவளை விட்டு எழுந்துகொள்ள விடவில்லை. அவளை இன்னும் வாகாகத் தனக்குள் கொண்டுவந்து முகம் முழுக்க முத்துமுத்தாக முத்தமிட்டான்.

“நிலன்! படுக்க விடுங்க!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் அவள்.

பாவமாகப் போயிற்று அவனுக்கு. எழுந்ததும் அவளும் இன்றைய நாளுக்குப் பின்னால் ஓட வேண்டுமே.

அதில், “சரிசரி. ஒண்டும் செய்யேல்ல. நீ படு!” என்று அவளைத் தன் மார்பில் சேர்த்துத் தட்டிக்கொடுத்து, போர்வையையும் இழுத்து ஏசி குளிருக்கு இதமாகப் போர்த்திவிட்டான்.

இன்னும் கொஞ்ச நேரம் மனைவியின் அண்மையை அனுபவித்துவிட்டு மெல்ல எழுந்துகொண்டான். குளித்துவிட்டு வந்து, மாற்ற ஏதாவது இருக்குமா என்று சத்தமில்லாமல் அவள் அலமாரியைத் திறந்து பார்த்தான். அங்கே, அவனுக்குத் தோதான உடைகள் சில செட்டாகவே தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு புருவங்களை உச்சி மேட்டுக்கே உயர்த்தினான்.

நேற்றிரவும் அவன் கேட்டதும் எடுத்துத் தந்தாளே. ஆக, முதலே வாங்கி வைத்திருந்திருக்கிறாள். உள்ளே சில்லென்று ஒரு நீரூற்றுப் பொங்க, அதில் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டான்.

அவன் தயாராகி முடித்த வேளையில் பிரபாகரன் அழைத்தார். அவள் எழுந்துவிடக் கூடாது என்கிற கரிசனையோடு அவன் பால்கனிக்கு நடக்க, இங்கே இளவஞ்சி விழித்து இலேசாகப் புரண்டாள்.

மெல்ல மெல்ல நடந்தவை எல்லாம் நினைவில் வந்தன. பட்டென்று விழிகளைத் திறந்து பார்த்தாள். நிலனைக் காணவில்லை. கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தபோதும் உள்ளே மெல்லியதாகச் கூச்சம் பரவாமலும் இல்லை.

ஆனால், அவன் கழற்றிப் போட்டிருந்த முதல் நாளைய உடைகள், ஈரத் துவாய் எல்லாம் அவன் குளித்துத் தயாராகிவிட்டதைச் சொல்லின. தானும் வேகமாக எழுந்து குளியலறைக்கு நடந்தாள்.

அவள் குளித்து, பாத் ரோப் அணிந்து, தலைமுடியைத் துவாயினால் சுற்றிக்கொண்டு வந்த அழகைக் கண்டு நிலனால் தள்ளியிருக்க முடியவில்லை. உள்ளே வந்து அவளைப் பின்னிருந்து அணைத்து வாசம் பிடித்தான்.

இளவஞ்சி அவனை எதிர்கொள்ள மிகவுமே தடுமாறினாள். தொழில்துறையில் அத்தனை ஆண்களையும் நேர் பார்வையில் கூறு போடுகிறவள். நெஞ்சத்தில் நிறைந்து, நேற்றைய நாளில் ஊனிலும் உயிரிலும் கலந்து போனவனின் பார்வையைச் சந்திப்பது சவாலான ஒன்றாகிற்று.

அவளைத் தன் புறம் திருப்பி, பனியில் நனைந்த ரோஜாவாகக் குளித்ததில் சிவந்திருந்தவளின் முக வடிவைக் கண்டு ரசித்தவன், இதழ்களில் அழுத்தி முத்தமிட்டான். பின் முகம் முழுவதும்.

“நிலன்!” அவள் இதழ்கள் முணுமுணுத்தன.

திரும்பவும் அந்த இதழ்களைச் சிறை செய்தான்.

அணைப்பு இறுகி, முத்தங்கள் பெருகி, மூச்சுகள் சூடாக ஆரம்பிக்கையில் அவன் விடுத்த அழைப்பிற்கு அவளால் மறுக்க முடியாது போயிற்று. உணர்வுகள் பெருகி வழிய நாழிகைகள் நழுவி ஓடியிருந்தன. அவனைப் பாராமல் அவளும், சின்ன சிரிப்புடன் அவனும் எழுந்து தயாராகி வருவதற்குள் நன்றாகவே நேரமாகியிருந்தது.

அடுத்த ஒரு வாரம் மின்னலாகக் கடந்திருந்தது. நிலனின் இரவுகள் இங்கே இளவஞ்சியோடுதான். அதில் ஜானகிக்கு மிகுந்த கோபம். கொஞ்சம் கொஞ்சமாகத் தம் இரு பிள்ளைகளையும் தம்மிடமிருந்து பிரிக்கப் போகிறாள் என்று கோபப்பட்டார்.

அதையெல்லாம் அவன் பொருட்டில் கொள்ளவில்லை. அவனிடம் பேசி ஆகாது என்று மிதுனுக்கு அழைத்து, சுவாதியுடன் அவனை அங்கு வந்துவிடச் சொன்னார் ஜானகி.

அவன் மறுத்துவிட்டான். அங்கே வீட்டில் நடக்கும் அனைத்தும் அவனுக்கும் தெரியும். தங்குதல் இங்கு என்றாலும் தினமும் சுவாதியுடன் அங்குப் போய் வருவான்.

ஒரு நாளும் அவளை அங்கே தனியாக விட்டதில்லை. அவனுக்கு அறிமுகமான நாள்களில் பட்டாம் பூச்சியாகச் சிறகடித்துக்கொண்டிருந்தவள் இப்போது அப்படியே மாறிவிட்டது அவனையும் உறுத்திக்கொண்டிருந்தது.

தாய்மை உற்றதினால் உண்டான உடல் சோர்வா, இல்லை நடந்த நிகழ்வுகளால் அதிகமாகக் காயப்பட்டுப் போனாளா தெரியாது. எப்போதுமே ஒரு அமைதி அவளிடத்தில். எங்காவது கூட்டிக்கொண்டு போய் அவள் மனநிலையை மாற்றலாம் என்றால் குழந்தை தடுத்தது.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அதில் முடிந்தவரையில் யாரும், குறிப்பாகத் தன் அன்னை அவளைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தான்.

பிரபாகரன் சந்திரமதிக்கு மகன் அங்குத் தங்குவதைக் குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மகன் முகத்தில் தெரியும் வெளிச்சம் கண்டு இன்னும் சந்தோசமே.

அன்று இரவும் ஆசையாய் அவளை நாடி, தேடல்களில் தொலைந்து, தேவைகள் தீர்த்து, தேகங்கள் களைத்த நிலையில் அவளைக் கைகளுக்குள் வைத்திருந்தான் நிலன்.

அவள் கேசம் கோதி முத்தமிட்டுவிட்டு, “நாளைக்கு விடியவே நிலம் மாத்திப் பதியப் போகோணும் வஞ்சி.” என்று நினைவூட்டினான்.

அவ்வளவு நேரமாகக் கணவனின் கையணைப்பில் இவ்வுலகையே மறந்திருந்தவள் மனநிலை அப்படியே மாறிப்போயிற்று. அதை எந்தச் சூழ்நிலையில் தன்னைப் பெற்றவர் எழுதிக் கொடுத்தார் என்பதும், அதை வைத்துத் தான் உருவாவதற்குக் காரணமான மனிதர் என்னவெல்லாம் செய்தார் என்பதும் மனக்கண்ணில் மின்னி மறைந்தன. நிம்மதியே இல்லாமல் இவ்வுலகை விட்டு நீங்கிய தையல்நாயகி அம்மாவும் நினைவில் வரத் தனக்குள் இறுகினாள்.

“வஞ்சிம்மா!” என்று அவளை அள்ளி அணைத்துக்கொண்டான் நிலன். அவனுக்குள் பேசாமல் அடங்கினாலும் ஒன்றும் சொல்லவில்லை அவள்.

இருவருமே நாள் முழுக்க அவரவர் வேலைகளிலேயே மூழ்கிப் போகிறவர்கள். இந்த இரவுகள் மட்டுமே அவர்களுக்குச் சொந்தமானவை. அந்த நேரத்தில் இப்படியான பேச்சுகளை முடிந்தவரையில் இருவருமே தவிர்த்துவிடுவர். அப்படி இன்றைக்கும் நிலனால் இருக்க முடியவில்லை. முடிந்தவரையில் வேகமாக அவளுடையதை அவளிடம் சேர்த்துவிட முயன்றான்.

அதே நேரத்தில் ஒரு வஞ்சகத்தின் பெயரில் கைமாறியதை வாங்கத்தான் வேண்டுமா என்று அவளின் ரோசம் கொண்ட நெஞ்சம் கேள்வி எழுப்பிற்று. கூடவே அதைத் திருப்பித் தந்து, அந்த மனிதன் தன் பாவக்கணக்கைக் குறைக்கப் பார்க்க, அதற்கு அவள் துணை போவதா என்று உள்ளம் கொதித்தது.

ஆனால், அவளின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது தையல்நாயகி. அது எத்தனையோ பேரின் வாழ்வாதாரம். தலைமுறை தலைமுறையாக அவளின் அப்பம்மாவின் பெயரைச் சுமந்து நிற்பது.

அதனால் அவள் மறுக்கவில்லை. அதே நேரத்தில் வருகிறேன் என்று சொல்லவும் விருப்பமில்லை.

ஒன்றுமே சொல்லாமல் இருக்கும் மனைவியின் முகம் பார்த்தான் நிலன்.

சுனாமியையே தன் நெஞ்சுக்குள் அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறாள் என்று புரிந்தது. இது நல்லதும் அல்ல. இப்படி இருவரும் பார்த்து பார்த்துக் கவனமாகப் பேசுவது ஆரோக்கியமானதும் இல்லையே.

“வஞ்சி!”

“...”

“வஞ்சி ஏதாவது சொல்லன்.”

“...”

“வஞ்சிம்மா”

“ப்ச் உங்களுக்கு என்ன சொல்லி இருக்கிறன் நிலன்? எனக்கும் உங்களுக்குமான நேரத்தில இதை எல்லாம் கதைக்காதீங்க எண்டு எல்லா?” என்று கோபப்பட்டாள் அவள்.

தன்னோடான இணக்கமான பொழுதுகளை எதைக்கொண்டும் அவள் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று புரிந்தது. மனம் கனிய தன் அணைப்பை இதமாக இறுக்கினான்.

அடுத்த நாள் பாலகுமாரனை அழைத்துவரும் பொறுப்பை மிதுனிடம் கொடுத்துவிட்டு, வஞ்சியோடு நின்றுகொண்டான் நிலன். நிச்சயம் அவளால் இது இலகுவாய் முடியாது என்று தெரியும்.

அவன் எண்ணியது போலவே விடிந்ததிலிருந்து ஒருவித இறுக்கத்தோடுதான் இருந்தாள் அவள். புறப்பட்டு வெளியே செல்லப் போனவள் கரம் பற்றி நிறுத்தி அணைத்துக்கொண்டான் அவன்.

அதற்காகவே காத்திருந்தாள் போலும். “எனக்கு அந்தாளின்ர முகத்தில முழிக்கவே விருப்பமில்லை நிலன்.” என்றாள் அவன் முகம் பார்த்து.

அந்த முகத்தையே பார்த்தான் நிலன். அலைப்புறுகிற விழிகளும் அலைபாயும் மனமுமாய் நின்றாள். மென்மையாக முகம் தாங்கி, நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான்.

“ஒரு தொழிலையே நடத்திறவள் நீ. உனக்கு நான் ஒண்டும் சொல்லத் தேவையில்லை. ஆனா, எல்லா நேரமும் எங்களுக்குப் பிடிச்ச மனுசரோட மட்டுமே சந்திப்புகள் நடக்கிறேல்ல வஞ்சி. ஒரு கொஞ்ச நேரம். நீ சமாளிப்பாய். சும்மா மனதைப் போட்டு வருத்தாத!” என்று மட்டும் சொன்னான்.

வேறு நிறையப் பேசப்போகவில்லை. அவளுக்கே இதை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரியும். அவன் ஒருவன் தன்னைத் தாங்க இருக்கிறான் என்றதும் குழந்தையாகிப்போனாள்.

அவளும் அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள். தள்ளாடித் தடுமாறிக்கொண்டிருந்த மனத்திற்கு இந்த ஆறுதலும் ஆசுவாசமும் தேவையாய் இருந்தன.

ஒரு வழியாக அங்கே அவர்கள் சென்று, பதிவிற்கான ஆயத்தங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கையில் மிதுனோடு வந்து சேர்ந்தார் பாலகுமாரன். அவள் தேகத்தின் இறுக்கம் கூடிப்போயிற்று. அவர் புறம் திரும்பவேயில்லை.

கண்ணில் நீருடன் அவர் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது. அதைக் கண்டு அவள் முகம் சிவந்து கொதிக்க ஆரம்பித்தது.

அவள் கரம் பற்றி அமைதிப்படுத்தினான் நிலன். தன் கைப்பிடியிலேயே அவளை வைத்திருந்து பத்திரப்பதிவை நல்லபடியாக முடித்தான்.

அவளையே பார்த்திருந்த மிதுனுக்கு நெஞ்சை என்னவோ செய்தது. தூரத்திலிருந்து பார்க்கையில் திமிரான, அகங்காரமான, ஆணவமான பெண்ணாக நினைத்திருக்கிறான்.

பக்கத்திலிருந்து பார்க்கையில்தான் மனத்தின் கொந்தளிப்புகளை வெளியில் காட்டிவிடாமல் இருக்க அவள் போடும் அரிதாரங்கள் அவை என்று புரிந்தது.

ஓடிப்போய்க் குளிர்பானம் வாங்கி வந்தான். எல்லோருக்குமாகக் கொண்டு வந்தாலும் வேகமாய் ஒன்றை எடுத்து அவளிடம்தான் முதலில் கொடுத்தான்.

மறுக்காமல் வாங்கிப் பருகிவிட்டு, “போவம்!” என்றாள் நிலனிடம். என்னவோ அந்த மனிதர் நிற்கும் இடத்தில் நிற்பதே தேகமெல்லாம் பற்றி எரிவது போன்று காந்தியது.

“தம்பி, எனக்கு அவாவோட ஒருக்காக் கதைக்கோணுமப்பு…” என்றார் பாலகுமாரன் வேண்டுதலுடன்.

நிலன் திரும்பி அவளைக் கேள்வியாகப் பார்த்தான். அவ்வளவுதான். சினத்தில் முகம் சிவந்துவிட, “காரை எடு மிதுன்!” என்றுவிட்டுப் போய் மிதுனின் காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.

அவன் நிலனைக்கூட திரும்பிப் பார்க்கவில்லை. தமக்கை சொன்னதே வேத வாக்காகிவிட, ஓடிப்போய்க் காரை எடுத்தான்.

“தையல் நாயகிக்கு விடு!” என்றுவிட்டுக் கண்களை மூடிக்கொண்டு சாய்ந்துவிட்டாள். நடந்தவை எல்லாம் தெரியாத பொழுதுகளிலேயே அவரிடம் அவளுக்கு ஒரு ஒவ்வாமை இருந்திருக்கிறது. அப்படியிருக்க இன்று. அவளின் அப்பம்மா எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளும் நினைவில் வந்து அவளைச் சுழற்றி அடித்தன.

ஆனாலும் இப்படி இதையெல்லாம் உணர்வு ரீதியாக அணுகுவது மகா தவறு என்று அவள் அறிவு எடுத்துச் சொன்னது. அப்படி அணுகுகிறவளும் இல்லையே அவள். இந்த நிலன்தான் நேசத்தைக் காட்டி, அவளை நெகிழ்த்தி வைத்திருக்கிறான். அவன் மீது கண்மண் தெரியாத கோபம் உண்டாயிற்று.

அப்போது மிதுனுக்கு அழைத்தாள் கீர்த்தி.

“டேய் மிதுன், இண்டைக்காவது அண்ணிட்ட கேட்டியாடா?” என்றாள் எடுத்ததுமே. இருவருக்குமே கிட்டத்தட்ட ஒரே வயது என்பதில் அவனுக்கு இவள் டேய் தான். காரின் ப்ளூடூத்தில் நேரடியாக அவன் கைப்பேசி இணைக்கப்பட்டிருந்ததில் அவள் குரல் கார் முழுக்க நிறைந்து வந்தது.

அவள் பேச்சில் தான் அடிப்படவும் மிதுனைக் கேள்வியாக ஏறிட்டாள் இளவஞ்சி. அவனுக்கு இலேசாக உதறியது. “நீ வை. நான் பிறகு எடுக்கிறன்.” என்றான் அவசரமாக.

“எருமை எருமை எருமை! பிறகு பிறகு எண்டு எப்பயடா கேப்பாய்? இன்னும் ரெண்டு நாளில கலியாணம். அது முடிஞ்ச பிறகா? அண்ணாவும் மாட்டாராம். கேளனடா.” என்று கோபம் கெஞ்சல் என்று கலந்துகட்டினாள் அவள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்ன கேக்கோணும் உனக்கு?” திடீரென்று வந்த இளவஞ்சியின் குரலில், “ஐயோ அண்ணி, ஒண்டுமில்ல. அது சும்மா.” என்று உளறிக்கொட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.

மிதுனோடு இளவஞ்சியும் இருப்பாள் என்று சாத்திரமா பார்த்தாள்.

இளவஞ்சி உதட்டில் மெல்லிய முறுவல். “என்ன கேக்கோணுமாம்?” என்றாள் மிதுனிடம்.

“அக்கா அது உங்கட பிளவுஸ் மாதிரி…”

எந்த பிளவுஸ் என்று கேட்கப்போனவள் சட்டென்று ஓடிப் பிடித்தாள்.

ஆக, நிலன் சொன்னதுபோல் அவள் கேட்டிருக்கிறாள். அன்று அவள் சொல்லமாட்டேன் என்றதில் அவன் மறுத்திருக்கிறான். அவன் மறுத்ததினால் இவள் மிதுனைப் பிடித்திருக்கிறாள் என்று விளங்க, கீர்த்தனாவின் கைப்பேசி இலக்கத்தைக் கேட்டுத் தானே அவளுக்கு அழைத்தாள்.

“அண்…ணி.” கீர்த்தனாவிற்கு அந்த ஒற்றை வார்த்தையே தந்தியடித்தது.

“இப்ப உன்ர அண்ணா அங்க வருவார். அவரோட வெளிக்கிட்டு தையல்நாயகிக்கு வா!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

சிந்தை வேறு திசைக்குச் சென்றுவிட்டு வந்ததில் கொஞ்சம் இலகுவாகியிருந்தாள் இளவஞ்சி. கணவன் மீதான கோபம் கூடக் குறைந்து போயிற்று. மிதுனோடு அவள் புறப்பட்டு வந்ததில் அவனும் அவள் மீது கோபமாய் இருப்பான் என்று எண்ணிச் சின்ன முறுவல் கூட உண்டாயிற்று.

மனம் இலகுவானதில் அவள் கவனம் மிதுன் புறம் திரும்பிற்று.

“இனி என்ன செய்றது எண்டு யோசிச்சியா?”

“அக்கா எனக்கு சினி ஃபீல்ட் தான் சரியா வரும்.” கொஞ்சம் தயங்கினாலும் சொன்னான்.

நிலனும் இதைத்தானே சொன்னான். அதில், “ஏகன் கவியரசு அண்ணாவை போய்ப் பாக்கிறியா?” என்று வினவினாள்.

அதைக் கேட்டு அவனுக்குத் தலையைச் சுற்றும் போலிருந்தது. அவர்கள் பரம்பரைப் பணக்காரர்கள்தான் என்றாலும் ஏகன் கவியரசுவைச் சந்திப்பதெல்லாம் சாத்தியமில்லா விடயமாயிற்றே.

“உண்மையாவா அக்கா? ஆனா, அவரைப் பாக்கிறது எல்லாம் ஈஸி இல்ல.” அவன் உயரம் தெரியாமல் சொல்கிறாளோ என்றெண்ணிச் சொன்னான்.

சின்ன முறுவல் அரும்ப, “துவாரகி அக்காவை எனக்குப் பழக்கம். அவாவோட கதைச்சனான். அவான்ர பாங்க்ல எனக்கு எக்கவுண்ட் இருக்கு. ஏகன் அண்ணா இப்ப இந்தியால நிக்கிறாராம். இலங்கை வந்தபிறகு சொல்லுறன் எண்டவா. அப்ப சொல்லுறன், போய்ப் பார்.” என்றுவிட்டு,

“ஆனா விளையாடக் கூடாது மிதுன். ஏதாவது சின்னதா தன்னும் அவே உன்னைப் பற்றிக் குறைவா சொன்னா அதுக்குப் பிறகு இத நீ மறந்திடோணும். உன்ர விளையாட்டுக்குணம் எல்லாத்தையும் விட்டுப்போட்டு எப்பிடி மேல வரலாம் எண்டு பார்.” என்று அதட்டல் பாதி அக்கறை மீதியாகச் சொன்னாள்.

அவன் இன்னும் ஏகன் கவியரசுவைச் சந்திக்கப் போகிறேனா என்கிற அதிர்ச்சியில் இருந்தே மீளவில்லை என்பதில் சரி என்று வேகமாகத் தலையாட்டினான்.

அவளோடு வந்து, அவளின் அலுவலக அறைக் கதவைத் திறந்துவிட்டு, அவள் உள்ளே வந்து அமர்ந்ததும், “நான் நிக்கோணுமா அக்கா, இல்ல போகவா?” என்று அனுமதி கேட்டு, அவள் போகச் சொன்ன பிறகுதான் புறப்பட்டான்.

ஒரு கணம் யோசித்துவிட்டு, “மிதுன்!” என்று அழைத்து நிறுத்தினாள்.

திரும்பிப் பார்த்தவனிடம், “நீயும் சுவாதியும் செய்தது பெரிய பிழைதான். ஆனா அதுக்காக என்னவோ வாழ்க்கைல நேராக்கவே முடியாத ஏதோ ஒண்டச் செய்த மாதிரி இருந்து, வரப்போற பிள்ளையை மறந்திடாத. எல்லாரும் இருந்தும் அநாதையாகிப்போன நிலை எங்கட வீட்டில எனக்கு மட்டுமே நடந்ததா இருக்கட்டும்.” என்றாள் அவனைப் பாராமல்.

அப்படியே நின்றுவிட்டான் மிதுன். அவனுக்கு இதற்கு என்ன சொல்வது என்று கூடப் பிடிபட மாட்டேன் என்றது.

“குழந்தை என்ன பாவம் செய்தது? அதைக் கொண்டாடப் பழகு. எப்பிடி வந்திருந்தாலும் அது உன்ர குழந்தை. நீ அப்பா. நீயும் சந்தோசமா இருந்து சுவாதியையும் சந்தோசமா வச்சிரு.” என்றதும் அவன் விழிகள் பனித்துப்போயின.

அவன் அந்தக் குழந்தையைப் பற்றிப் பேசுவதற்கு வெட்கியது உண்மைதானே. இன்று வரையிலும். தன் தவறு பொட்டில் அறைந்தாற்போல் உரைக்க, “இனி இல்லை அக்கா.” என்றுவிட்டுப் போனான் அவன்.

அவன் போய்க் கொஞ்ச நேரத்தில் அண்ணன்காரன் முறைப்புடனும் தங்கை நடுக்கத்துடனும் அவளிடம் வந்தனர்.

“உனக்கு ஏதாவது தேவை எண்டா அத நேரா கேக்கத் தெரியாதா?” என்று கீர்த்தனாவை அதட்டினாள்.

“அது அண்ணி…” தமையனிடம் பார்வை சென்று வர என்ன சொல்வது என்று தெரியாமல் திக்கியது கீர்த்தனாவிற்கு.

“இதெல்லாம் சொல்லித்தராம உன்ர அண்ணா தடிமாடு மாதிரி என்னத்துக்கு வளந்து நிக்கிறாராம்?”

‘தடிமாடா?’ எச்சில் விழுங்கினாள் சின்னவள்.

அவள் தமையன், மனைவியைப் பயங்கரமாக முறைத்தான்.

இதற்குள் ஆனந்தி மூவருக்கும் சிற்றுண்டியும் தேநீரும் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனாள்.

“சாப்பிடுங்க!” என்று உபசரித்தாள். நிலன் தொடவில்லை. அவள் தன் புறம் திரும்பாததால் மிகுந்த கோபத்தில் இருந்தான். அவன் சாப்பிடாததால் அவளும் சாப்பிடவில்லை.

அவர்கள் இருவரையும் கவனித்த கீர்த்தனாவுக்குத் தான் இன்றைக்கு பலிகடாவா என்கிற கிலி பிறந்தது. ஆனால் மறுக்க முடியாதே. வேகவேகமாக ஒரு வடையை உள்ளே தள்ளிவிட்டுத் தேநீரையும் பருகி முடித்தாள்.

“என்ன வேணும் இப்ப உனக்கு?”

“அது அண்டைக்கு கடைக்குப் போட்டு வந்த பிளவுஸ் அண்ணி…”

“அதைவிட வடிவானதுகளும் செய்யலாம். ஆனந்தி கூட்டிக்கொண்டு போவா. அங்க போய் உனக்கு விருப்பமான டிசைன் சொல்லு, அளவையும் குடுத்துப்போட்டுப் போ. பிறகு அந்த பிளவுசுக்கு மச்சிங்கா சாறி வாங்கு. இல்ல உன்னட்ட இருக்கிற சாறிக்கு பொருத்தமான துணி இஞ்ச இருந்தா பாத்துச் சொல்லு.” என்று சொல்லித் திரும்பவும் ஆனந்தியை அழைத்து அவளோடு இவளை அனுப்பிவைத்தாள்.

இப்போது அவளின் அலுவலக அறையில் அவர்கள் இருவரும் மட்டுமே.

நிலன் அசையவேயில்லை. கைகளைக் கட்டிக்கொண்டு நாற்காலியில் வசதியாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

அவளால் நிறைய நேரத்துக்கு அவனைப் புறக்கணித்துவிட்டு வேலையில் கவனம்போல் நடிக்க முடியவில்லை. காலையில் நேரத்துக்கே அங்கே போக வேண்டியிருந்தது. இதில் அவன் சேட்டைகளை எல்லாம் சமாளித்துத் தயாராவதற்கு நேரமாகியிருந்தது. அதில் ஜெயந்தி எவ்வளவோ சொல்லியும் சாப்பிடாமல்தான் புறப்பட்டிருந்தார்கள்.

நிச்சயம் இடையில் சாப்பிட்டிருக்க மாட்டான். அதுவும் இங்கே வருகிறான் என்கையில் அவளோடு சேர்ந்து சாப்பிடத்தான் எண்ணியிருப்பான். அதில், “தேத்தண்ணி ஆறுது.” என்றாள் அவனைப் பாராமல்.

அப்போதும் அசைந்தான் இல்லை அவன்.

“நிலன்! சாப்பிடுங்க எண்டு சொன்னாத்தான் சாப்பிடுவீங்களா? சாப்பிடுங்க.” என்றாள் தன் நடிப்பை எல்லாம் கைவிட்டுவிட்டு.

அப்போதும் அவன் அப்படியே இருந்தான். முதல் வேலையாகப் போய்க் கதவை லொக் பண்ணிவிட்டு வந்து, அவன் தட்டை இன்னுமே கொஞ்சம் அவன் முன்னே எடுத்து வைத்து, “சாப்பிடுங்க.” என்றாள் சமாதானமான குரலில்.

“அவருக்கு உன்னோட கதைக்கோணுமாம்.” இறுக்கமான குரலிலேயே அறிவித்தான்.

அவளுக்கு முகம் மாறியது. “நிலன் ப்ளீஸ்! இதைப் பற்றி என்னோட கதைக்காதீங்க எண்டு நிறையத்தரம் சொல்லிட்டன்.” என்றாள் சினம் மிக.

“அப்பிடிக் கதைக்காம இருக்கேலாது வஞ்சி. இது கதைச்சுத் தீர்க்க வேண்டியது. இல்லையா எண்டைக்காவது ஒரு நாள் பெரிய சண்டையா வெடிக்கும்.”

அவன் அவருக்காகவே கதைக்கவும் அவளுக்குக் கோபம் வந்தது. “என்ன கதைக்கோணும் உங்களுக்கு? இதாலதான் இந்தக் கலியாணம் வேண்டாம் எண்டு சொன்னனான். நீங்கதான் கேக்கேல்லை.” என்றதும் சட்டென்று அவனுக்கும் உச்சிக்கு ஏறிப்போயிற்று.

“என்னடி கலியாணம் வேண்டாம் உனக்கு? இன்னுமே அதையே சொல்லுற அளவுக்கு என்ன நடந்தது? கதைச்சுப் பேசிப் பிரச்சினையைத் தீர் எண்டு சொன்னா கலியாணத்தப் பற்றிக் கதைப்பியா நீ?” என்று அவன் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழவும் பயந்துபோய் இரண்டடி பின்னால் நகர்ந்தாள் இளவஞ்சி.

இப்படி ஒரு கோபத்தை அவனிடம் அவள் பார்த்ததில்லை. அந்த அதிர்ச்சியும் சேர்ந்ததில் இமைக்கவும் மறந்து அவனையே பார்த்தாள்.

“அவரும் எங்களோடதான் வந்தவர். காருக்க இருக்கிறார். உன்னோட கதச்சே ஆகோணுமாம். வந்து என்ன எண்டு கேள்.” என்றான் அவன் அதே இறுக்கத்தோடு.

தையல்நாயகியில் பாலகுமாரனா? அவள் நெஞ்சத்தில் தீ பற்றி எரிந்தது.

அதை அறியாமல், “வா!” என்றான் அவன் திரும்பவும்.

அவனையே சில கணங்களுக்கு வெறித்துவிட்டு, “ஆக,
நீங்க காட்டின நெருக்கம் இணக்கம் எல்லாம் இதுக்குத்தான் என்ன?” என்றாள் அவள் கசப்பும் வெறுப்புமாய்.

இப்போது அவனிடத்தில் அதிர்ச்சி. முகம் கூட ஆத்திரத்தில் சிவந்து போயிற்று. “விளங்கேல்ல!” என்றான் புருவங்களைச் சுளித்து.

தான் அவசரப்பட்டுப் பேசிவிட்டது பேசிய நொடியிலேயே புரிந்துவிட்டதில் சங்கடத்துடன் உதட்டைப் பற்றினாள் வஞ்சி.

அவன் விடுவதாக இல்லை. “விளக்கமா சொல்லு வஞ்சி. நான் காட்டின இணக்கமும் நெருக்கமும் என்னத்துக்கு?” என்றான் பேச்சில் அனலேற.

எவ்வளவு பெரிய அபத்தத்தைப் பேசிவிட்டாள்? அவளால் வாயே திறக்க முடியவில்லை.

சில கணங்களுக்கு அவளையே பார்த்தவன், “நீ என்னைக் கொச்சைப்படுத்ததேல்ல. எனக்கும் உனக்குமான உறவைக் கொச்சைப்படுத்தி இருக்கிறாய்.” என்றுவிட்டுப் போனவன் அதன் பிறகு வரவேயில்லை.

ஒரு வாரமாக அவனைக் காணாமல் முற்றிலுமாகச் சோர்ந்து துவண்டு போனாள் இளவஞ்சி.


தொடரும் :)

பாதி வீக்கெண்ட் போயே போச்சு:cry: ஆனாலும் பரவாயில்லை ஹாப்பி வீக்கெண்ட் மக்களே!
 
Last edited:

Nandhu15

Member
ஏன் மா வஞ்சி வாய வச்சி கிட்டு சும்மாவே இருக்க மாட்டியா 🥲 பாவம் நிலன் நாலு நாள் நல்லா இருந்த பையன இப்படி கோப படுத்திட்டீயேமா 😏😏😏 இனி இந்த நிதனி மா வேற இதான் சாக்குனு ரொமான்ஸ் சீன் அ கண்ணுல காட்ட மாட்டாங்களேமா 🤪🤪🤪
 

Parameswari G.

New member
அவ மனசுல இருக்க ரணம் தெரிஞ்சும் கோபிக்கலாமா நிலா. அந்த ஆளுக்கு என்ன கதைக்கணுமாம். தேவையில்லாம பிரச்சினை பண்ணிட்டு 😡😡
 
Top Bottom