Baladurga Elango
Well-known member
Nice update
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Adidhoolமனம் இலகுவானதில் அவள் கவனம் மிதுன் புறம் திரும்பிற்று.
“இனி என்ன செய்றது எண்டு யோசிச்சியா?”
“அக்கா எனக்கு சினி பீல்ட் தான் சரியா வரும்.” கொஞ்சம் தயங்கினாலும் சொன்னான்.
நிலனும் இதைத்தானே சொன்னான். அதில், “ஏகன் கவியரசு அண்ணாவை போய்ப் பாக்கிறியா?” என்ற அவளின் கேள்வியில்
அவனுக்குத் தலையைச் சுற்றும் போலிருந்தது.
அவர்கள் பரம்பரைப் பணக்காரர்கள்தான் என்றாலும் ஏகன் கவியரசுவைச் சந்திப்பதெல்லாம் சாத்தியமில்லா விடயமாயிற்றே.
“உண்மையாவா அக்கா? ஆனா, அவரைப் பாக்கிறது எல்லாம் ஈஸி இல்ல.” அவன் உயரம் தெரியாமல் சொல்கிறாளோ என்றெண்ணிச் சொன்னான்.
சின்ன முறுவல் அரும்ப, “துவாரகி அக்காவை எனக்குப் பழக்கம். அவாவோட கதைச்சனான். அவான்ர பாங்க்ல எனக்கு எக்கவுண்ட் இருக்கு. ஏகன் அண்ணா இப்ப இந்தியால நிக்கிறாராம். இலங்கை வந்தபிறகு சொல்லுறன் எண்டவா. அப்ப சொல்லுறன் போய்ப் பார்.” என்றுவிட்டு,
“ஆனா விளையாடக் கூடாது மிதுன். ஏதாவது சின்னதா தன்னும் அவே உன்னைப் பற்றிக் குறைவா சொன்னா அதுக்குப் பிறகு இத நீ மறந்திடோணும். உன்ர விளையாட்டுக்குணம் எல்லாத்தையும் விட்டுப்போட்டு எப்பிடி மேல வரலாம் எண்டு பார்.” என்று அதட்டல் பாதி அக்கறை மீதியாகச் சொன்னாள்.
அவன் இன்னும் ஏகன் கவியரசுவைச் சந்திக்கப் போகிறேனா என்கிற அதிர்ச்சியில் இருந்தே மீளவில்லை என்பதில் சரி என்று வேகமாகத் தலையாட்டினான்.
அவளோடு வந்து, அவளின் அலுவலக அறைக் கதவைத் திறந்துவிட்டு, அவள் உள்ளே வந்து அமர்ந்ததும், “நான் நிக்கோணுமா அக்கா, இல்ல போகவா?” என்று அனுமதி கேட்டு, அவள் போகச் சொன்ன பிறகுதான் புறப்பட்டான்.
ஒரு கணம் யோசித்துவிட்டு, “மிதுன்!” என்று அழைத்து நிறுத்தினாள்.
திரும்பிப் பார்த்தவனிடம், “நீயும் சுவாதியும் செய்தது பெரிய பிழைதான். ஆனா அதுக்காக என்னவோ வாழ்க்கைல நேராக்கவே முடியாத ஏதோ ஒண்டச் செய்த மாதிரி இருந்து வரப்போற பிள்ளையைச் சந்தோசமா கொண்டாட மறந்திடாத. எல்லாரும் இருந்தும் அநாதையாகிப்போன நிலை எங்கட வீட்டில எனக்கு மட்டுமே நடந்ததா இருக்கட்டும்.” என்றாள் அவனைப் பாராமல்.
அப்படியே நின்றுவிட்டான் மிதுன். அவனுக்கு இதற்கு என்ன சொல்வது என்று கூடப் பிடிபட மாட்டேன் என்றது.
“குழந்தை என்ன பாவம் செய்தது? அதைக் கொண்டாட பழகு. எப்பிடி வந்திருந்தாலும் அது உன்ர குழந்தை. நீ அப்பா. நீயும் சந்தோசமா இருந்து சுவாதியையும் சந்தோசமா வச்சிரு.” என்றதும் அவன் விழிகள் பனித்துப்போயின.
அவன் அந்தக் குழந்தையைப் பற்றிப் பேசுவதற்கு வெட்கியது உண்மைதானே. இன்று வரையிலும். அதற்கு அந்தக் குழந்தை செய்த தவறு என்ன? தன் தவறு பொட்டில் அறைந்தாற்போல் உரைக்க, “இனி இல்லை அக்கா.” என்றுவிட்டுப் போனான் அவன்.
அவன் போய்க் கொஞ்ச நேரத்தில் அண்ணன்காரன் முறைப்புடனும் தங்கை நடுக்கத்துடனும் அவளிடம் வந்தனர்.
“உனக்கு ஏதாவது தேவை எண்டா அத நேரா கேக்கத் தெரியாதா?” என்று கீர்த்தனாவை அதட்டினாள்.
“அது அண்ணி…” தமையனிடம் பார்வை சென்று வர என்ன சொல்வது என்று தெரியாமல் திக்கியது கீர்த்தனாவிற்கு.
“இதெல்லாம் சொல்லித்தராம உன்ர அண்ணா தடிமாடு மாதிரி என்னத்துக்கு வளந்து நிக்கிறாராம்?”
‘தடிமாடா’ எச்சில் விழுங்கினாள் சின்னவள்.
அவள் தமையன், மனைவியைப் பயங்கரமாக முறைத்தான்.
இதற்குள் ஆனந்தி மூவருக்கும் சிற்றுண்டியும் தேநீரும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனாள்.
“சாப்பிடுங்க!” என்று உபசரித்தாள். நிலன் தொடவேயில்லை. அவள் தன் புறம் திரும்பாததால் மிகுந்த கோபத்தில் இருந்தான். அவன் சாப்பிடாததால் அவளும் சாப்பிடவில்லை.
அவர்கள் இருவரையும் கவனித்த கீர்த்தனாவுக்குத் தான் இன்றைக்கு பலிகடாவா என்கிற கிலி பிறந்தது. ஆனால் மறுக்க முடியாதே. வேகவேகமாக ஒரு வடையை உள்ளே தள்ளிவிட்டுத் தேநீரையும் பருகி முடித்தாள்.
“என்ன வேணும் இப்ப உனக்கு?”
“அது அண்டைக்கு கடைக்குப் போட்டு வந்த பிளவுஸ் அண்ணி…”
“அதைவிட வடிவானதுகளும் செய்யலாம். ஆனந்தி கூட்டிக்கொண்டு போவா. அங்க போய் உனக்கு விருப்பமான டிசைன் சொல்லு, அளவையும் குடுத்துப்போட்டுப் போ. பிறகு அந்த பிளவுசுக்கு மச்சிங்கா சாறி வாங்கு. இல்ல உன்னட்ட இருக்கிற சாறிக்கு பொருத்தமான துணி இருந்தா பாத்துச் சொல்லு.” என்று சொல்லித் திரும்பவும் ஆனந்தியை அழைத்து அனுப்பிவைத்தாள்.
இப்போது அவளின் அலுவலக அறையில் அவர்கள் இருவரும் மட்டுமே.
நிலன் அசையவேயில்லை. கைகளைக் கட்டிக்கொண்டு நாற்காலியில் வசதியாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
அவளால் நிறைய நேரத்துக்கு அவனைப் புறக்கணித்துவிட்டு வேலையில் கவனம்போல் நடிக்க முடியவில்லை. காலையில் நேரத்துக்கே அங்கே போக வேண்டியிருந்தது. இதில் அவன் சேட்டைகளை எல்லாம் சமாளித்துத் தயாராவதற்கு நேரமாகியிருந்தது. அதில் ஜெயந்தி எவ்வளவோ சொல்லியும் சாப்பிடாமல்தான் புறப்பட்டிருந்தார்கள். நிச்சயம் அவன் இடையில் சாப்பிட்டிருக்க மாட்டான் என்றும் தெரியும். அதுவும் இங்கே வருகிறான் என்கையில் அவளோடு சேர்ந்து சாப்பிடத்தான் எண்ணியிருப்பான். அதில், “தேத்தண்ணி ஆறுது.” என்றாள் அவனைப் பாராமல்.
அப்போதும் அசைந்தான் இல்லை அவன்.
“நிலன்! சாப்பிடுங்க எண்டு சொன்னாத்தான் சாப்பிடுவீங்களா? சாப்பிடுங்க.” என்றாள் தன் நடிப்பை எல்லாம் கைவிட்டுவிட்டு.
அப்போதும் அவன் அப்படியே இருந்தான். முதல் வேலையாகப் போய்க் கதவை லொக் பண்ணிவிட்டு வந்து, அவன் தட்டை இன்னுமே கொஞ்சம் அவன் முன்னே எடுத்து வைத்து, “சாப்பிடுங்க.” என்றாள் சமாதானமான குரலில்.
“அவருக்கு உன்னோட கதைக்கோணுமாம்.” இறுக்கமான குரலிலேயே அறிவித்தான்.
“நிலன் ப்ளீஸ்! இதைப் பற்றி என்னோட கதைக்காதீங்க எண்டு நிறையத்தரம் சொல்லிட்டன்.” என்றாள் சினம் மிக.
“அப்பிடிக் கதைக்காம இருக்கேலாது வஞ்சி. இது கதைச்சுத் தீர்க்க வேண்டியது. இல்லையா எண்டைக்காவது ஒரு நாள் பெரிய சண்டையா வெடிக்கும்.”
அவன் அவருக்காகவே கதைக்கவும் அவளுக்குக் கோபம் வந்தது. “என்ன கதைக்கோணும் உங்களுக்கு? இதாலதான் இந்தக் கலியாணம் வேண்டாம் எண்டு சொன்னனான். நீங்கதான் கேக்கேல்லை.” என்றதும் சட்டென்று அவனுக்கும் உச்சிக்கு ஏறிப்போயிற்று.
“என்னடி கலியாணம் வேண்டாம் உனக்கு? இன்னுமே அதையே சொல்லுற அளவுக்கு என்ன நடந்தது உனக்கு? கதைச்சு பேசிப் பிரச்சினையைத் தீர் எண்டு சொன்னா கலியாணத்தை பற்றிக் கதைப்பியா நீ?” என்று அவன் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழவும் பயந்துபோய் இரண்டடி பின்னால் நகர்ந்தாள் இளவஞ்சி.
இப்படி ஒரு கோபத்தை அவனிடம் அவள் பார்த்ததில்லை. அந்த அதிர்ச்சியும் சேர்ந்ததில் அமைக்கவும் மறந்து அவனையே பார்த்திருந்தாள்.
“அவரும் எங்களோடதான் வந்தவர். அங்க காருக்கு இருக்கிறாரா. உன்னோட கதச்சே ஆகோணுமாம். வந்து என்ன எண்டு கேள்.” என்றான் அவன் அதே இறுக்கத்தோடு.
தையல்நாயகியில் பாலகுமாரனா? அவள் நெஞ்சத்தில் தீ பற்றி எரிந்தது.
அதை அறியாமல், “வா! என்றான் அவன் திரும்பவும்.
அவனையே சில கணங்களுக்கு வெறித்துவிட்டு, “ஆக,
நீங்க காட்டின நெருக்கம் இணக்கம் எல்லாம் இதுக்குத்தான் என்ன?” என்றாள் அவள் கசப்பும் வெறுப்புமாய்.
இப்போது அவனிடத்தில் அதிர்ச்சி. முகம் கூட ஆத்திரத்தில் சிவந்து போயிற்று. “விளங்கேல்ல!” என்றான் புருவங்களை சுளித்து.
“விளக்கமா சொல்லு வஞ்சி. நான் காட்டின இணக்கமும் நெருக்கமும் என்னத்துக்கு?” என்றான் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கடித்துத் துப்பி.
அவள் நெஞ்சே அதை ஏற்க மறுத்ததால் அவளால் பேச முடியவில்லை.
“சொல்லு வஞ்சி!”
எப்படிச் சொல்லுவாள். அது மிகத் தவறான ஒன்றாயிற்றே.
சில கணங்களுக்கு அவளையே பார்த்தவன், “நீ என்னைக் கொச்சைப்படுத்ததேல்ல. எனக்கும் உனக்குமான உறவைக் கொச்சைப்படுத்தி இருக்கிறாய்.” என்றுவிட்டுப் போனவன் அதன் பிறகு வரவேயில்லை.
ஒரு வாரமாக அவனைக் காணாமல் முற்றிலுமாகச் சோர்ந்து துவண்டு போனாள் இளவஞ்சி.
தொடரும்
பாதி வீக்கெண்ட் போயே போச்சுஆனாலும் பரவாயில்லை ஹாப்பி வீக்கெண்ட் மக்களே!
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.