• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 25

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 25


ரெயின்கோர்ட் தயாரிப்பிற்கு முத்துமாணிக்கம் கார்மெண்ட்ஸை நம்பியிருந்தாள் இளவஞ்சி. அது இல்லை என்றானதும் இங்கேயே அதற்கென்று ஒரு தனிப்பிரிவினை அமைப்பதற்கான திட்டத்தினை அப்போதே போட்டிருந்தாள்.

கூடவே முத்துமாணிக்கம் கைவிட்டுப் போன நேரத்தில்தான் அவ்வளவு காலமும் சக்திவேல் தருகிற இடர்களிலிருந்து மீள்வது எப்படி என்பதில் மட்டுமே கவனம் செலுத்திய தான், அவர்களுக்குத் திருப்பியடிக்கத் தவறியிருக்கிறோம் என்கிற உண்மையே புலப்பட்டிருந்தது.

அதனால் அவர்கள் சிறந்து விளங்குகிற ஆண்களின் உடை உற்பத்தியில் இறங்கி, அதன் மூலமே அவர்களுக்குத் திருப்பியடிக்க வேண்டும் என்று அப்போதே முடிவும் செய்திருந்தாள்.

ஆனால், அந்த நேரம் அவள் வாழ்வில் நடந்த குளறுபடிகள், அதனால் அவள் தையல்நாயகியை விட்டு விலகியது போன்ற காரணங்களினால் அவள் போட்ட திட்டங்கள் திட்டங்களாகவே நின்றுபோயிருந்தன.

இப்போது அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்துவது பற்றிப் பேசுவதற்குத்தான் அன்றைய கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தாள்.

தையல்நாயகி இருக்கிற இடத்தில் அவளுக்கு அதற்கான போதிய இடம் இல்லாது போனாலும் கொஞ்சம் தள்ளி உட்புறமாகக் கிடைக்கிறபோதெல்லாம் நிலங்களை வாங்கிப்போட்டுக்கொண்டிருந்தாள்.

அங்கே தொழிற்சாலையை நிறுவுவது, அதற்கு எடுக்கும் காலம், வாங்கவேண்டிய மெஷின்கள், இவற்றுக்கான செலவு, அனுபவம் மிக்க ஆண்களுக்கான ஆடை வடிவமைப்பாளர்கள், அதற்கான தொழிலாளர்கள் என்று பேசுவதற்கும், கலந்தாலோசிப்பதற்கும் நிறைய இருந்தன.

அனைத்தையும் ஒற்றை நாளில் முழுமையாகப் பேசி முடிக்க முடியவில்லை. ஆனாலும் முடிந்தவரையில் தன் திட்டங்களை எல்லாம் தெளிவாக விளக்கி, அவர்களிடமிருந்து அவர்களின் காத்திரமான கருத்துகளையும் கேட்டுக் குறித்துக்கொண்டாள்.

தையல்நாயகி தன் பயணத்தில் அடுத்த பெரிய காலடியை எடுத்து வைக்கப்போவதை அறிந்து அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும்.

ஆனால், அவளின் திட்டங்களைச் செயலாற்ற இன்னுமின்னும் நிறையத் தரவுகள், விளக்கங்கள், தெளிவுகள் எல்லாம் தேவையாய் இருந்தன. அந்தப் பொறுப்பை எல்லாம் அதற்குத் தகுந்தவர்களிடம் ஒப்படைத்து, கூட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தபோது பொழுது பகலை எட்டியிருந்தது.

காலையில் ஒழுங்காக உண்ணவும் இல்லை. விட்ட இடைவேளையின் போதும் ஜூஸ் மட்டுமே பருகியிருந்தாள். மனநிலை வேறு கொஞ்சமும் சரியில்லை. இப்படி வேலையில் கவனத்தைக் குவிக்க முடியாமல் அல்லாடுவது இதுதான் முதல் முறை.

ஆனாலும் கூட்டத்தை வெற்றிகரமாக முடித்தாள். அவளோடு கூட வந்த ஆனந்தியிடம் அடுத்ததாக அவள் செய்ய வேண்டிய ஆயத்தங்களைக் கடகடவென்று சொல்லிவிட்டு அலுவலக அறைக்கு வந்தால் அது வெறுமையாக இருந்தது.

இவ்வளவு நேரம் அவளுக்காக அவனால் காத்திருக்க முடியாது. அவனுக்கும் அங்கே வேலைகள் வெட்டி முறிக்கும் என்றும் தெரியும். என்னிடம் இருந்து தள்ளி நில்லு என்று வேறு சொல்லியிருக்கிறாள். ஆனாலும் தனக்காகக் காத்திருக்க மாட்டானா என்கிற சின்ன ஆசை சிறுபிள்ளைத் தனமாக அவளுக்குள் இருந்தது.

அதில் ஏமாந்துபோனதில் ஒரு நொடி மனம் சுருண்டு போனது. பேசாமல் வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள். முழங்கைகளை மேசையில் ஒன்றி முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டவளால் தன்னை அழுத்தும் கணவனின் எண்ணங்களிலிருந்து வெளிவரவே முடியவில்லை. இத்தனை தூரத்திற்கு தனக்குள் ஊடுருவியிருப்பான் என்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.

இளம் வயதிலேயே அவள் மனத்தை அசைத்தவன் என்பது காரணமா, அவளுக்கு ஏற்றாற்போல் விட்டுக்கொடுத்து, விளங்கி நடந்தவனின் நற்பண்பு காரணமா, எல்லையற்று அவன் காட்டிய நேசமும் பாசமும் காரணமா தெரியவில்லை. முற்றிலுமாக அவளை முடக்கிக்கொண்டிருந்தான் நிலன்.

ஆனால் அவளின் இந்தத் தவிப்பும் ஏக்கமும் இல்லாமல் போகும் என்கிற நம்பிக்கை அவளுக்கு இல்லை. இந்தத் திருமணமே ஒரு பிசகு. இது நடந்திருக்கவே கூடாது. இப்படி அவள் யோசிப்பதற்கு அவன் காரணமென்று. அவன் குடும்பம்.

எப்படி அது அவன் குடும்பம் என்பது என்றைக்கும் மாறாதோ அப்படியே அந்தக் குடும்ப மனிதன் மீதான அவள் வெறுப்பும் ஆவேசமும் தீரப்போவதில்லை. பிறகு எங்கே அவர்கள் இருவரும் கருத்தொருமித்த காதல் வாழ்க்கை வாழ்வது?

அவளுக்குத் தெரிந்து அவள் ஆசைப்பட்ட ஒன்று அமைதியான நிம்மதியான இல்லற வாழ்க்கையை மட்டுமே. அது நடக்கவே நடக்காது என்று இப்போது தெரிந்துபோயிற்று. அப்படி நடக்க வேண்டுமானால் அந்தப் பாலகுமாரன் செய்தவற்றை அவள் மன்னிக்கவும் மறக்கவும் வேண்டும். அது அவளால் முடியவே முடியாத ஒன்று.

ஆக என்றுமே அவள் இல்லற வாழ்வு நல்லபடியாக அமையப்போவதில்லை. ஏதோ ஒரு வகையில் அவள் சாபம் வாங்கிப் பிறந்திருக்க வேண்டும். இல்லாமல் அத்தனை வசதி வாய்ப்புகளையும் கொண்ட ஒருத்திக்கு எல்லோரையும் போல் ஒரு வாழ்க்கையை வாழக் கொடுப்பினை இல்லாமல் போகாதே.

அப்போது கதவைத் தட்டி அவள் அனுமதியைப் பெற்றுக்கொண்டு வந்தான் விசாகன். அவன் கையில் உணவுப் பார்சல்.

“நிலன் சேர் கட்டாயமா உங்களச் சாப்பிடச் சொன்னவர் மேம்.”

அவளிடத்தில் மெல்லிய சீற்றம். “இன்னுமே அவருக்குக் கையாளா இருக்கிறத நீங்க விடேல்லையா?” என்றாள் சுள்ளென்று.

சட்டென்று அவன் முகம் சுருங்கிப் போயிற்று.

“இல்ல மேம். சாப்பாட்டை மட்டும் அவேன்ர வீட்டுக்குப் போய் எடுத்துக்கொண்டு வந்து உங்களுக்குத் தரச் சொன்னவர். நீங்க மீட்டிங் முடிச்சு வந்ததும் தனக்கும் சொல்லிப்போட்டு உங்களிட்ட இதக் குடுக்கச் சொன்னவர். உங்களைப் பற்றியோ தையல்நாயகியப் பற்றியோ அவரும் கேக்கேல்லை. கேட்டாலும் இனி நானும் சொல்லமாட்டன்.” என்றான்.

இதற்குள் அவளுக்கு ஒரு குறுந்தகவல் வந்து விழுந்தது. ‘சாப்பாட்டுல கோவத்தைக் காட்டுறேல்ல வஞ்சி. அப்பிடிக் காட்டினியோ உண்மையா எனக்கும் உனக்கும் பெரிய சண்டை வரும். சாப்பிடு ப்ளீஸ்.’ என்று அனுப்பி இருந்தான் அவன்.

‘இப்ப மட்டும் சின்ன சண்டையா போய்க்கொண்டு இருக்கு. ஒரு கிழமையா பாக்க வரவே இல்ல. வந்திட்டார் மெசேஜ் அனுப்பிக்கொண்டு.’

உள்ளே மனம் முறுக்கினாலும் உணவில் கோபத்தைக் காட்டுவதோ, சிறுபிள்ளைத்தனமாக அர்த்தமற்றுப் பிடிவாதம் பிடிப்பதோ அவள் இயல்பு இல்லை என்பதில் அதை வாங்கி உண்டாள்.

உண்மையில் பசிக்களை போன பிறகுதான் அவளால் தெளிவாகச் சிந்திக்கக் கூடிய மாதிரியே இருந்தது.

*****

இங்கே நிலனாலும் வேலைகளில் ஒன்ற முடியவில்லை. வஞ்சி பேசியவை திரும்ப திரும்ப நினைவில் வந்துகொண்டேயிருந்தன.

அவள் மற்ற ஆண்களோடு தன்னை ஒப்பிட்டதும், விலகியே இருப்போம் என்று சொன்னதும் சினத்தைக் கிளப்பாமல் இல்லை. கூடவே, எதற்காக அவ்வளவு பாசத்தைக் காட்டினாய் என்றும் கேட்டாளே. எத்தனை திடமானவள்! வராமல் இருந்து என்னைத் தண்டிக்கிறாயா என்று கேட்கிறாள் என்றால் அவனுக்காக மிகவுமே ஏங்கிப் போயிருக்கிறாள் என்றுதானே அர்த்தம்?

அவனுக்கும் அவளோடு அந்தச் சண்டையைப் பேசித் தீர்க்காமல் வர விருப்பமில்லை. ஆனால், போன வாரம் கொழும்பு போய் வந்ததால் தேங்கிப்போன வேலைகள் நிறைந்து கிடந்தன. அதில்தான் புறப்பட்டு வந்தான்.

ஆனால், வேலைகளை ஒழுங்காகப் பார்க்க முடியாமல் மனைவியே மண்டைக்குள் நின்று சுழன்றாள். அவளைப் பற்றித் தெரிந்தும் பாலகுமாரனோடு பேசு என்று வற்புறுத்திய தன் மீதும் தவறு உண்டு என்று புரிந்தது நிலனுக்கு.
பேசித் தீர்த்துவிட்டால் அனைத்தும் முடிந்துவிடும் என்று நினைத்தான். கடைசியில் அவர்களின் பேச்சுவார்த்தை தடைப்பட்டுப் போயிற்று.

அன்றைக்கும் அவன் சக்திவேலை விட்டு வெளியில் வருகையில் இரவு பத்தைத் தாண்டியிருந்தது. வீட்டுக்குப் போக மனமில்லை. நேராக இளவஞ்சி வீட்டுக்கே போனான்.

அங்கே அவன் எதிர்பார்த்ததுபோல் அவளின் பால்கனி கூடைக்குள்தான் புதையுண்டு கிடந்தாள் அவள்.

இவனைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பவெல்லாம் இல்லை. காலையில் போன்று கோபப்படவும் இல்லை. அவனையே விடாது பார்த்தாள்.

அந்தப் பார்வை என்னவோ செய்தது. அன்று போலவே டீப்போவை இழுத்து அவள் முன்னே போட்டு அமர்ந்துகொண்டு, “என்ன வஞ்சி?” என்றான்.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தாள் அவள்.

இல்லை. ஏதோ உள்ளது.

“சும்மா சும்மா பிடிவாதம் பிடிக்கக் கூடாது. என்ன எண்டு சொன்னாத்தானே எனக்கும் தெரியும். என்ன எண்டு சொல்லு?” சற்றே அழுத்தி வினவினான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஏன் இந்தக் கலியாணம் நடந்தது நிலன்?”

திரும்பவும் முதலில் இருந்தா என்று தோன்றாமல் இல்லை. ஆனால், அவள் மனத்தில் எதையோ வைத்துக்கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறாள் என்று அவன் மனம் சொல்ல, “எனக்கு உன்னைப் பிடிச்சதால நடந்தது.” என்றான்

“உங்கட மாமாக்காக இல்லையா?”

“சத்தியமா இல்லை. அவர் என்ர மாமாவா இருந்தாலுமே அவருக்காக எல்லாம் கலியாணம் கட்டேலாது வஞ்சி. உன்னை எனக்குப் பிடிச்சிருக்காட்டி கடைசி வந்திருந்தாலும் இந்தக் கலியாணம் நடந்திருக்காது.”

“இப்ப என்னட்ட இருந்து என்ன எதிர்பாக்கிறீங்க நிலன்?”

“வஞ்சி?”

“நீங்கதானே பேசித் தீர்க்கச் சொன்னீங்க?”

“வஞ்சி என்னடி?” என்றான் அவள் எதை மனத்தில் வைத்து இதையெல்லாம் கேட்கிறாள் என்று கண்டிபிடிக்க முடியாமல்.

“சொல்லுங்க நிலன்.”

“அவரிட்ட கேக்க நினைக்கிறதுகளை கேளு. கதைக்க நினைக்கிறத கதை. சண்டை பிடிக்கிறதா இருந்தாலும் பிடி. உனக்கு அதுக்குப் பிறகு ரிலீபா இருக்கும். இவ்வளவு அழுத்தம் இருக்காது.” இதனால்தான் அன்றும் அவரை அழைத்துக்கொண்டு வந்தான். அதில் தெளிவாகவே சொன்னான்.

“இதெல்லாம் பேசினா தீருற கோவம் இல்ல நிலன். யோசிச்சுப் பார்த்தா என்ன செய்தாலும் எனக்குள்ள இருக்கிற கோபம் தீரும் மாதிரி இல்ல.” என்றாள் அவனைப் பாராமல்.

அவன் கொஞ்சம் பயந்துபோனான். “வேற என்ன செய்யப் போறாய்? வேற என்னதான் செய்றதும்? இத அவருக்காகக் கேக்கேல்லை. உனக்காகத்தான் சொல்லுறன். கோபதாபத்தை தள்ளி வச்சுப்போட்டு யோசி.” என்றான் அவளுக்குப் புரிய வைத்துவிடும் வேகத்துடன்.

“இந்தக் கலியாணம் நடந்திருக்க கூடாது நிலன். நடந்திருக்கவே கூடாது.” தலையையும் குறுக்காக அசைத்தபடி சொல்ல, அவனுக்குக் கோபம்தான் வந்தது.

“வஞ்சி கோவத்தை கிளப்பாத!” என்றான் அதை மறையாது.

“முதல் நீ என்னத்த மனதில வச்சுக்கொண்டு இப்பிடி எல்லாம் கதைக்கிறாய்? அதைச் சொல்லு. அண்டைக்கு அவரோட கதை எண்டு உன்னை நான் வற்புறுத்தினது பிழைதான். எனக்கு விளங்குது. அதுக்காக நீ கதைச்சதும் பிழைதான்.” என்றவனை இடையிட்டு, “சொறி!” என்றாள் அவள் குரலடைக்க.

ஒரு கணம் அவளையே பார்த்தவன் அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தான். அவளுக்குக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. “விடுங்க!” என்று அவனிடமிருந்து விடுபடப் போராடினாள்.

அவள் போராட்டம் பலவீனமானதா, இல்லை அவன் பிடி பலமானதா தெரியவில்லை. அவன் விடவில்லை. மாறாக மார்போடு சேர்த்தணைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அப்படியே அவன் மார்புக்குள் முகம் புதைத்துக்கொண்டாள் இளவஞ்சி. இந்த அன்பு, அரவணைப்பு, ஆறுதல் எல்லாம் நிரந்தரமில்லாதவை. அவன் இன்னுமின்னும் தன்னை பலகீனமாக்குகிறான் என்று கோபம் வந்தது. “எனக்கு உங்களைப் பிடிக்கேல்ல!” என்றாள் கண் முகமெல்லாம் சிவந்திருக்க.

அவன் உதட்டில் சிரிப்பு முளைத்தது. “எனக்கு இந்த வஞ்சிய இன்னுமின்னும் பிடிச்சிருக்கே!” என்றான் நெற்றியில் முத்தமிட்டு.

“அதுதான் ஒரு கிழமை சொல்லாம கொள்ளாம விட்டுட்டுப் போனீங்களா?” கேட்கக் கூடாது என்று நினைத்தாலும் கேட்டிருந்தாள்.

“ஏய் என்னடி என்னவோ உன்ன விட்டுட்டு எங்கயோ போன மாதிரிச் சொல்லுறாய்?” அவள் முறுக்கிக்கொண்டு கேட்ட அழகில் முறுவல் மலரச் சொன்னான் அவன்.

“ஆனாலும் போனீங்கதானே.”

“திரும்ப நானாவே வந்திட்டன்தானே.” அவளைக் கட்டிலில் சரித்து, முத்தங்கள் பதித்து, அவளோடு ஒன்றப்போனவன் சட்டென்று நிதானித்து அமைதியானான்.

அதன் காரணத்தை அறிந்தவளுக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலாயிற்று. அவன் சொன்னது போன்று அவன் அன்பையே கொச்சைப்படுத்திவிட்டாள். அதுதான் அவனால் அவளை அணுக முடியவில்லை. இமைக்காது அவனையே பார்த்தாள்.

அவனால் அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. அவள் நெற்றி முட்டித் தன்னை சமாளித்துக்கொள்ள முயன்றான்.

இருவர் உள்ளத்திலும் போராட்டம். மற்றவரை நன்றாகவே காயப்படுத்திவிட்டது புரிந்தது. எப்படி இதைக் கடக்க என்றுதான் தெரியவில்லை. “பசிக்குது வஞ்சி என்றான் நிலன் அப்படியே இருந்தபடி.

“எழும்பி உடுப்பை மாத்துங்க. எடுத்துக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு எழுந்துபோனாள் அவள்.

கட்டிலில் எழுந்து அமர்ந்தவன் தலையைப் பற்றிக்கொண்டான். தன் தயக்கம் அவளைக் காயப்படுத்திவிட்டது புரிந்தது. நெருங்காமல் இருந்தால் வேறு. நெருங்கி நிறுத்துவது? “ப்ச்!” தன்னை நினைத்தே சலித்தபடி எழுந்து குளித்து உடையை மாற்றிக்கொண்டு வந்தான்.

அவள் உணவைக் கொண்டு வர அவளுக்கும் கொடுத்து உண்டான். அவளைத் தன் கையணைப்பில் வைத்துக்கொண்டு முதுகுக்குத் தலையணையைக் கொடுத்துக் கட்டிலில் சரிந்துகொண்டான்.

இருவருக்குமே எதைப் பேசவும் தயக்கமாக இருந்தது. அவளும் கிடைக்கும் அவன் அண்மையை அனுபவித்துவிடுகிறவளாக அமைதியாகவே இருந்தாள்.

“இன்னும் ரெண்டு நாளில திரும்பவும் கொழும்புக்கு போகவேண்டி வரும்போல இருக்கு வஞ்சி.” என்றான்.

“ம்”

“நீயும் வாறியா?” என்றான் கைகளுக்குள் இருந்தவள் முகம் பார்த்து.

“போன கிழமை உங்களோட ஆர் வந்தது?”

“உன்னில் இருந்த கோவம் வந்தது.” என்றான் சின்ன முறுவலோடு.

“இப்பவும் அதோட போங்க.”

“இப்பதான் கோவம் இல்லையே.”

“ஓ!”

“வஞ்சிம்மா. அப்பிடி எல்லாம் இல்லையடி. அது ஏதோ நினைப்பில்… ப்ச் உனக்கே தெரியும் நீ எண்டு வந்தா நான் எப்பிடி ஆகிடுவன் எண்டு. ஆனா நீ…” என்றவனை மேலே பேச விடாமல் அவன் உதட்டின் மீது விரல் வைத்துத் தடுத்துவிட்டு, அவனைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள் இளவஞ்சி.

அப்போதும் அவளின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தானே தவிர்த்து அதைத் தாண்டிப் போகவில்லை. போக அவனால முடியவில்லை. அவள் செயற்பாடுகள் அவனை எங்கோ உறுத்தின.

அந்த உறுத்தல் சரிதான் என்று சொல்வதுபோல் அவன் கொழும்புக்குச் சென்று இரண்டாம் நாள் அவளுக்கு அழைத்து அவள் எடுக்கவில்லை என்றதும் விசாகனுக்கு அழைத்து விசாரித்தான்.

அப்போதுதான் தெரியவந்தது, ஒன்றரை மாத பயிற்சி ஒன்றுக்காக அவள் சீனா சென்றிருக்கிறாள் என்று.

திகைத்து நின்றுவிட்டான் நிலன்.

தொடரும்:)
 

sarjana

Member
இருந்தும் வஞ்சி கொஞ்சம் ஓவர்தான்.
அதெப்படி இவங்கள புரிஞ்சி சின்ன சின்ன விஷயத்திலும் நிலன் பணிந்து போகணும் அவங்க என்ன வேணாம் பேசலாம் செய்யலாம்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom