• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 27

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 27


இளவஞ்சி போய் மூன்று வாரங்களாகிப் போயின. நிலன் தினமும் அவள் நலன் விசாரித்துக்கொள்வான். இரவில் வீடியோ கோலில் பேசுவான். இரண்டுமே கிட்டத்தட்ட உத்தியோக பூர்வப் பேச்சுப் போலவே இருக்கும்.

அதைத் தாண்டிக் கணவன் மனைவிக்கான பேச்சுக் கொஞ்சமும் இல்லை. இருவருமே கவனமெடுத்து அதைத் தவிர்த்தனர். அவள் தன்னிடம் சொல்லாமல் போனதைப் பற்றிக் கூட அவன் பேசுவதில்லை. இனி அது பற்றிய பேச்சை அவளாகத்தான் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.

அவள் அதைப் புரிந்துகொண்டாளா இல்லையா என்று தெரியாது. ஆனால், அவளாக வந்து விளக்கம் தரவோ, அவனைச் சமாதானம் செய்யவோ முயலவில்லை.

அது இன்னுமே அவனைக் காயப்படுத்திற்று. தன்னோடான வாழ்க்கை அவளுக்குத் திருப்தியாய் இல்லையோ, அதில் அவள் மகிழ்ச்சியாய் இல்லையோ, அன்று அவன் கேட்டதுபோல் கட்டாயத்தின் பெயரில்தான் அவனை மணந்தாளோ என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்து வந்து அவனைப் புரட்டிப் போட்டன.

திரும்ப திரும்ப அதைப் பற்றிப் பேசிச் சண்டை பிடிக்காத நிலனின் இந்த விலகல் அவள் எடுத்திருந்த முடிவிற்கு வசதியாக இருந்தபோதிலும் வலிக்காமல் இல்லை. ஆனாலும் தாங்கிக்கொண்டாள்.

இப்படி இருக்கையில்தான் ஆண்களுக்கான தொழிற்சாலை அமைக்க என்று இளவஞ்சி முடிவு செய்த காணியில் பற்றைகளை, தேவையற்ற மரங்களை, புற்களை எல்லாம் அழித்து, அந்த நிலத்தைத் தொழிற்சாலை எழுப்புவதற்கான இடமாக மாற்றும் வேலை ஆரம்பமாயிற்று. அதை மேற்பார்வையிடும் பொறுப்பை மிதுனிடம் கொடுத்திருந்தாள்.

அவளின் வரைபடமும் தொழிற்சாலை அமைப்பும் அரசாங்கத்திற்கு காட்டப்பட்டு, அனுமதி கிடைத்த அடுத்த நிமிடம் கட்டட வேலையை ஆரம்பித்துவிடும் வேகம் இருந்தது அவளுக்கு.

இதை அறிந்த சக்திவேலர், “உன்னையே கட்டிப்போட்டு உனக்கு எதிரா அவள் வேலையை ஆரம்பிக்கப் போறாளாம். நீ பாத்துக்கொண்டு இருக்கிறியோ பேரா?” என்று நிலனிடம் கோபப்பட்டார்.

“அதென்ன அப்பப்பா என்னையே கட்டிப்போட்டு எண்டு சொல்லுறீங்க? என்னைக் கட்டினா அவள் அவளின்ர தொழிலை வளக்கக் கூடாதா?”

கூடாது என்றார் அவர். “அவள் அதை ஆரம்பிச்சா எங்களுக்கு வாற ஓடர்ல பாதி அவளுக்குப் போகும். எங்களுக்கு உற்பத்தி குறையும். ஏற்கனவே பொம்பிளைகளின்ர உடுப்பில அவளை விழுத்தேலாம இருக்கு. இதுலயும் அப்பிடி நடந்தா என்ன செய்வாய்?”

“அவளை விடத் தரமா, ட்ரெண்டியா எப்பிடிக் குடுக்கிறது எண்டு பாப்பன்.” என்றான் அவன் இலகுவாக.

“அவள் ஏன் தொடங்கிக்கிறாள் எண்டு உனக்கு விளங்கேல்லையா பேரா?”

“ஏன் விளங்காம? அதைத் தொழில் போட்டியா பாக்கோணுமே தவிர செய்யாத எண்டு சொல்லேலுமா? இதுவே அவள் ஆரோ ஒரு வஞ்சியா இருந்தாலும் இதைத்தான் சொல்லுவீங்களா?” என்று அவனும் விடாமல் கேட்டான்.

பேரனுக்கு இதை எப்படி விளங்க வைப்பது என்று தெரியாமல் நின்றார் சக்திவேலர். “இதுக்குத்தான் தையல்நாயகிய சக்திவேலுக்கு கீழ கொண்டுவர நினைச்சனான். நடுவில புகுந்து கெடுத்துப்போட்டாள். அவள் அப்பிடியே அவளின்ர அப்பம்மா மாதிரி. இது சரி வராது. நீ குணாளனுக்கு ஃபோனை போடு. என்ன எண்டு கேக்கிறன்.” என்று நின்றவரை அவன் விடவில்லை.

“தொழிலுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை அப்பப்பா. அப்பிடியே இருந்தாலும் இதையெல்லாம் நீங்க கதைக்கேலாது.”

“அப்ப நீ கதை.”

“நானும் கதைக்கேலாது. அது அவளின்ர தொழில். அவள் ஆரம்பிக்கிறாள். இதுல நான் சொலல் என்ன கிடக்கு?”

“நீ அவவின்ர மனுசனடா. நீ சொன்னா அவள் கேட்டுத்தான் ஆகோணும்!”

‘ஆரு அவள்?’ என்று உள்ளே நக்கலாக ஓடினாலும், “என்ன அப்பப்பா, ஆம்பிளைத் திமிரக் காட்டச் சொல்லுறீங்களோ?” என்றான் சிறு சிரிப்புடன்.

“பேரா இது விளையாட்டு இல்ல. இத நீ வளர விட்டியோ அது சக்திவேலுக்கு அழிவிலதான் முடியும். போட்டி போட நினைக்கிறதை விடப் போட்டிக்கே ஆள் இல்லாம செய்றதுதான் கெட்டித்தனம். சக்திவேல் என்ர மூச்சு. அது சின்னதா சரியிறதக் கூட என்னால பாக்கேலாது.”

“அப்ப நீங்க என்னை நம்பேல்லையா அப்பப்பா. அவள் அழிக்க நினைச்சா நான் விட்டுடுவனா?” என்று கேட்டுவிட்டுப் போனான் அவன்.

பிரபாகரனுக்கும் இந்த விடயத்தில் இளவஞ்சி மீது திருப்திதான். அவள் யாரோவாகவும் அவர்கள் யாரோவாகவும் இருந்து அவள் இதைச் செய்திருந்தால் கூட மகன் சொன்னது போன்று போட்டியாக நினைத்திருப்பார்.

இங்கே அவள் அவர்கள் வீட்டு மருமகள். ஆண்களின் உடைகள்தான் அவர்களின் பிரதான உற்பத்தி என்று அவளுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் இதை அவள் ஆரம்பிப்பதை அவர் விரும்பவில்லை.

மகனிடம் தானும் பேசிப் பார்த்தார். சக்திவேலரிடம் சொன்னதையேதான் அவரிடமும் சொன்னான்.

அவர்களிடம் என்னதான் பேசிச் சமாளித்தாலும் இந்த விடயத்தில் இனியும் தன் தலை உருளும் என்று அவனுக்கு நான்கே தெரிந்தது. அன்று அவள் ஆண்கள் உடைத் தயாரிப்பிற்கான பயிற்சிக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னபோது அவனுக்குப் பிடிபடாதபோதும் பிறகு பிடிபட்டிருந்தது.

மனைவி தன்னுடன் நேரடியாகப் போட்டியில் இறங்கப்போகிறாள் என்று புரிந்தபோது முறுவல் பூத்திருந்தான். போட்டி அவனுக்கும் பிடித்த ஒன்றுதானே. அதுவும் கட்டிய மனைவியோடு என்றால் கசக்குமா?


*****

அத்தனை காலமும் நான் என்றே வாழ்ந்து பழகியவர் ஜானகி. பிறந்ததிலிருந்து இன்றுவரை யாரையும் அனுசரித்துப் போனதும் இல்லை. அப்படி ஒரு நிலை வந்ததும் இல்லை.

இதே வீட்டில்தான் பிறந்தார். இங்கேதான் வளர்ந்தார். மணமுடித்ததும் இங்கேதான். மிச்ச வாழ்க்கையும் இங்கேதான்.

ஆசைப்பட்ட கணவர், நினைப்பதை எல்லாம் நடத்தித் தரும் தந்தை, அனுசரித்தே போகும் தமையன், குறையாத செல்வம் என்று எதிலும் குறையே இல்லை.

அவரின் அதட்டல் உருட்டல்களுக்கு அடங்கியே போய்விடுவதால் பாலகுமாரனின் இயலாமைகள் ஒரு பிரச்சனையாக அவருக்கு இருந்ததில்லை. இன்னுமே சொல்லப்போனால் தான் நினைத்ததை எல்லாம் நடத்திக்கொள்வதற்கு அது வசதியாகத்தான் இருந்திருக்கிறது.

இப்படி இத்தனை காலமும் மொத்த வீடும் அவர் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பிரபாகரன் தமையனான இருந்தாலும் அதட்டி உருட்டும் ரகமில்லை. அவருக்கு ஏற்ற மனைவிதான் சந்திரமதி. நிலனும் கூடத் தவறு என்றால் தவறு என்பானே தவிர்த்து நான் என்று நிற்கிறவனில்லை.

இப்படி இருந்த ஜானகியின் நிம்மதி, மகனின் திருமணத்திலிருந்து குலைந்துபோயிற்று. அவனைக் கைக்குள்ளேயே வைத்து வளர்த்தார். அப்படியான மகனின் திருமணப் பேச்சை அவர் இல்லாமலேயே தமையன் பேசி முடித்தது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

ஆனாலும் மகன் அவளைத்தான் கட்டுவேன் என்று நின்றதும், தையல்நாயகியில் குறைந்தது பாதியாவது வருமே என்கிற மனக்கணக்கிலும்தான் விருப்பம் இல்லாதபோதிலும் சம்மதித்தார்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆனால், தையல்நாயகியில் கொஞ்சமும் அவனுக்கு வராதாம் என்பது பேரதிர்ச்சி. பிறகு எதற்கு இந்தத் திருமணம் என்று கொதிக்க ஆரம்பித்திருந்தார். அதைவிட தையல்நாயகி முற்றிலுமாக நிலனைச் சேரப்போவதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

அவன் அவரின் பாசமான மருமகன்தான். அதற்காகச் சொத்தை விட்டுக்கொடுக்க முடியுமா என்ன? அவர் மகனுக்கும் அதில் பாதிப் பங்கு இருப்பதாகவே எண்ணினார்.

நிலனோடு பேசி, அவனை இளவஞ்சியிடம் பேச வைத்து, தையல்நாயகியில் பாதியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

வேறு சொத்துகள் பல சுவாதிக்கு வரும் என்றாலும் தையல்நாயகி காலத்துக்கும் பொன் முட்டையிடும் வாத்தாயிற்றே.

அதைவிட சக்திவேலின் நான்கில் மூன்று பங்கும் தையல்நாயகியில் சரிபாதியும் மகனுக்குச் சொந்தம் என்றானால் அவர் மகன் எத்தனை பெரிய கோடீஸ்வரனாகிவிடுவான். நினைத்துப் பார்க்கையிலே அவர் விழிகள் பேராசையில் மின்னின.

முதலில் இங்கிருக்கும் சொத்துகளை எல்லாம் சட்டப்படி மகன் பெயருக்கு மாற்றிவிட விரும்பினார். நோய்வாய்ப்பட்டுவிட்ட கணவரும், வயோதிபத்தின் தள்ளாமையில் இருக்கும் தகப்பனும் நல்லபடியாக இருக்கையிலேயே அனைத்தையும் முடித்துவிடுவதுதானே புத்திசாலித்தனம்.

எனவே இதைப் பற்றிச் சக்திவேலரிடம் பேசினார்.

அவருக்கும் மகளின் ஆசையில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவருக்கு இருந்த ஒரே கேள்வி, மூன்றில் ஒரு பங்கை ஜானகிக்குக் கொடுத்த பிறகும் பிரபாகரன் இப்போது போலவே தொழிலைக் கட்டிக்க காப்பாரா என்பதுதான்.

பாலகுமாரனுக்கு என்றுமே ஆளுமை இருந்ததில்லை. சக்திவேலர்தான் அதுவரையில் கட்டிக்காத்து வளர்த்தார். அதன் பிறகு பிரபாகரன். இப்போது நிலன். அவனோடு சேர்ந்து மிதுன் தோள்கொடுப்பான் என்கிற நம்பிக்கை கூட இல்லை. அவன் ஆசையும் ஆர்வமும் வேறு.

அப்படியிருக்க தொழிலில் நான்கில் மூன்று பங்கை ஜானகிக்கு கொடுக்க, அந்த மனஸ்தாபத்தில் மகன் விலகினால் சக்திவேல் என்னாகும் என்று யோசிக்கவே முடியவில்லை.

அதில் இந்தப் பேச்சை அவர் வீட்டுச் சபைக்குக் கொண்டுவந்தார்.

பிரபாகரனும் அன்று ஜானகி சக்திவேலின் நான்கில் மூன்று பங்கு தன் மகனுக்குச் சேர வேண்டும் என்று சொன்னதில் இருந்தே இதைக் குறித்து யோசிக்க ஆரம்பித்திருந்தார். தந்தை பேச்சைத் தொடங்கவும் பேசிவிடலாம் என்றே எண்ணினார்.

“என்ன தம்பி செய்வம்? மாத்தி எழுதுவமா? நானும் இன்னும் எத்தினை நாளைக்கு இருப்பன் எண்டு தெரியாதே.” என்று அவர் முடிக்க முதலே, “கதைக்க வேண்டியதை மட்டும் கதைங்க அப்பப்பா. தேவை இல்லாததுகளக் கதைக்காதீங்க!” என்றான் நிலன் பட்டென்று.

சக்திவேலர் முகத்தில் முறுவர் அரும்பிற்று. இதனாலதான் என்னதான் இருவரும் முட்டிக்கொண்டாலும் அவர் பேரா பேரா என்று சாவது. “என்னடா பேரா? உனக்கு அரியண்டம்(தொல்லை) தராம போய்ச் சேந்திடுவன் எண்டு பயமா இருக்கோ?” என்றார் வேண்டுமென்றே.

சின்ன முறைப்புடன், “இதெல்லாம் லேசுல போற கட்டை இல்ல. நானும் போக விடமாட்டன். நீங்க கதைக்க வந்ததக் கதைங்க.” என்றான் அவனும் விடாமல்.

பிரபாகரனும் தந்தையின் கேள்விக்குப் பதிலாக, “அப்பா, இருக்கிற சொத்தில நாளில மூண்டு பங்கு ஜானுக்குக் குடுக்கிறதில எனக்கு எந்தக் குறையும் இல்ல. ஆனா, சக்திவேல் அப்பிடிப் பிரிக்கிறது எப்பிடி அப்பா?” என்று கேட்டார்.

“என்ன அண்ணா கதைக்கிறாய்? அதுதானே முறை. இவரின்ர பாதி இவருக்கு. மிச்சப் பாதில எனக்குப் பாதி வரோணும்தானே? என்னவோ புதுசா அப்பா சொன்ன மாதிரிக் கேக்கிறாய்.” என்று பாய்ந்தார் ஜானகி.

தையல்நாயகியில் கிடைக்காதாம் என்பதையே ஏற்க முடியாமல் கொதித்துக்கொண்டு இருக்கிறவர் இதை விடுவாரா?

ஆனால், பிரபாகரனின் மொத்த வாழ்க்கையும் சக்திவேலிலேயே போயிருக்கிறது. பாலகுமாரனுக்கும் சேர்த்து அவர் உழைத்திருக்கிறார். அது போதாது என்று அவர் மகனும்.

சரியாகப் பங்கு பிரிக்கவேண்டுமானால் ஜானகி சொன்னது போல்தான் பிரியும். என்றாலும் அவர்கள் சும்மா இருக்க இவரும் மகனும் மாடாக உழைத்ததற்கு பொருளே இல்லையா என்று முரண்டியது அவர் உள்ளம்.

அவர் மட்டுமென்றால் பேசாமல் இருந்துவிடுவார். சொத்துக்காக ஆளாகப் பறக்கிற மனிதர் இல்லை அவர்.

அவருக்கும் இரண்டு பிள்ளைகள் உண்டே. அவர்களுக்குச் சேர வேண்டியதைச் சரியாகச் சேர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டே என்று நினைத்தவர் அதையேதான் ஜானகிக்கு பதிலாக்கினார்.

அதை ஏற்க மறுத்தார் ஜானகி. அதைவிடத் தந்தையின் அமைதி அவரைப் பதற வைத்தது. “அப்பா என்னப்பா அண்ணா இப்பிடி எல்லாம் சொல்லுறான். நீங்களும் பேசாம இருக்கிறீங்க? சக்திவேலில எனக்கும் பங்கு வரோணும் தானேப்பா? நானும் உங்கட மகள் தானே? அண்ணா உழைச்சான் எண்டுறதுக்காக எனக்கு வரவேண்டியதை நான் விட்டுக் குடுக்கேலுமா? வருத்தக்கார புருசனோட இருக்கிறன் எண்டதும் என்னை ஏமாத்த பாக்கிறானா அண்ணா?” என்றதும் பிரபாகரன் அடிபட்டுப் போனார்.

பரிதாபத்தை உண்டாக்கி தான் நினைத்ததைச் சாதிக்க நினைப்பதுமல்லாமல் அவரை என்னவோ பேராசை பிடித்தவர் போன்று சித்தரிக்க முயல்கிறாளே அவர் தங்கை.

“நானும் நிலனும் இல்லாட்டி சக்திவேல் இப்ப இருக்கிற மாதிரி இருந்திருக்குமா எண்டு அப்பாட்டக் கேள் ஜானு. சக்திவேலை ஆரம்பிச்சு அந்தக் காலத்தில பெருசா வளத்தது அப்பா எண்டா இண்டைக்கு அது மலை மாதிரி எழும்பி நிக்கிறது நனையும் என்ர மகனும் காரணம். இனியும் நாங்க விலகினா நாளுல மூண்டு பங்க வச்சு நீ என்ன செய்வாய்? பாத்திருக்க எல்லாமே அழிஞ்சு போகும்.” என்றதும், “தம்பி!” என்று அதட்டினார் சக்திவேல்.

அவரால் சக்திவேல் அழியும் என்று வாய் வார்த்தையால் சொல்வதைக் கூடத் தாங்க முடியவில்லை.

“சொறி அப்பா. உங்களுக்குச் சக்திவேலில இருக்கிற பாசமும் பற்றும் எனக்கும் இருக்கு. உங்களுக்கு மாதிரியே எனக்கும் தம்பிக்கும் அது அடையாளம். ஆனா, அதில நாலா பிரிச்சு ஒரு பங்குதான் எங்களுக்கு எண்டுறதை என்னால ஏற்கேலாம இருக்கு. எனக்குப் பாதி வேணும். இவ்வளவு காலமும் நானும் தம்பியும் அதக் கவனிக்காம இருந்திருந்தா சக்திவேல் என்னவாகியிருக்கும் எண்டு யோசிங்க. அதே போல இனி நானும் அவனும் கவனிக்காம விட்டா என்னாகும் எண்டும் யோசிங்க. வேணுமெண்டா மற்ற சொத்து எல்லாத்தையும் ஜானுக்கே குடுங்க. ஆனா தொழில்ல பாதி எனக்கு வேணும். என்ர பிள்ளைகளுக்கு எண்டு நானும் ஏதாவது குடுக்கோணுமே அப்பா.” என்றுவிட்டுப் போனார் பிரபாகரன்.

நிலனுக்கும் ஜானகியின் பேச்சில் மிகுந்த வருத்தம். இத்தனை காலமும் உழைத்த தந்தையைப் பார்த்து இப்படி எல்லாம் சொல்வாரா என்று கோபம் கூட வந்தது. ஆனால், என்னதான் அவன் தலைமகனாக இருந்தாலும் வீட்டின் மூத்தவர்கள் இதைப் பற்றிக் கதைக்கையில் தான் தலையிடக் கூடாது என்றெண்ணி அமைதியாக இருந்தான். கூடவே அவனுக்கும் தந்தையின் பேச்சில் தவறு இருப்பதாகப் படவில்லை.

தகப்பனின் தொடர் அமைதியில் ஜானகி நிலைகுலைந்துபோனார். என்ன கேட்டும் சக்திவேலர் எந்த வாக்குறுதியையும் தர மறுத்தார்.

பயந்துபோன ஜானகி கணவரின் பெயரில் இருக்கிற சொத்துகளை முதலில் மகனின் பெயருக்கு மாற்ற எண்ணினார். என்னதான் கணவர் பெயரில் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று என்று நெருங்கிய உறவினர்கள். இன்றே இத்தனை அமைதி காக்கும் அவரின் அப்பா நாளைக்கு இந்தத் தொழில் முழுவதும் தன்னதுதான் என்று சொல்லமாட்டார் என்று என்ன நம்பிக்கை?

இன்றைய நிலையில் ஜானகி யாரையும் நம்பத் தயாராயில்லை. அந்தளவில் அமைதியான சுபாவம் கொண்ட பிரபாகரனின் பேச்சும், அதற்கு அமைதியாக இருந்த சக்திவேலரின் நடத்தையும் அவருக்குப் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்திருந்தன.

அதற்கான ஆயத்தங்களைப் பார்க்கும்படி சக்திவேலரிடம் சொன்னார்.

அதைக் குறித்து பிரபாகரனிடம் பேசியபோது அவரும் அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். சரி முதலில் அந்த வேலையை முடிப்போம் என்று அந்தப் பத்திரங்களைக் கொண்டுபோனால் அது பாலகுமாரனின் பெயரிலேயே இல்லை என்கிறார்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில்.

அந்த அதிர்ச்சி போதாது என்று மூன்று வாரங்களுக்கு முதல் அது இளவஞ்சி பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து சக்திவேலருக்கும் ஜானகிக்கு தலையில் இடியே விழுந்திருந்தது.


தொடரும் :)


ஹாப்பி வீக்கெண்ட் மக்களே! திங்கள் சந்திப்போம்.
 
பாவகுமாரன் இப்ப எதுக்கு சொத்து வஞ்சிக்கு எழுதி வச்சார்?! என்ன செய்து பாவத்தை போக்க இயலாது.
எம்மாம்பெரிய இடியை போட்டு... ஹாப்பி வீக்கெண்டா?! 🤔
 

Rani MK

New member
இது தான் vanji training போக

முதல் செய்த வேலையோ? correct தான்
 
பாலகுமாரனே மாற்ற நினைத்துதானே கொடுத்தார் அப்போ அவருக்கு வஞ்சி பெயரில் மாறியது தெரியாதா🤔🤔🤔
 
Top Bottom