Chitrasaraswathi
New member
Nice update
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Wow.... semma thirupthi....ஆனால், தையல்நாயகியில் கொஞ்சமும் அவனுக்கு வராதாம் என்பது பேரதிர்ச்சி. பிறகு எதற்கு இந்தத் திருமணம் என்று கொதிக்க ஆரம்பித்திருந்தார். அதைவிட தையல்நாயகி முற்றிலுமாக நிலனைச் சேரப்போவதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
அவன் அவரின் பாசமான மருமகன்தான். அதற்காகச் சொத்தை விட்டுக்கொடுக்க முடியுமா என்ன? அவர் மகனுக்கும் அதில் பாதிப் பங்கு இருப்பதாகவே எண்ணினார்.
நிலனோடு பேசி, அவனை இளவஞ்சியிடம் பேச வைத்து, தையல்நாயகியில் பாதியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டார்.
வேறு சொத்துகள் பல சுவாதிக்கு வரும் என்றாலும் தையல்நாயகி காலத்துக்கும் பொன் முட்டையிடும் வாத்தாயிற்றே.
அதைவிட சக்திவேலின் நான்கில் மூன்று பங்கும் தையல்நாயகியில் சரிபாதியும் மகனுக்குச் சொந்தம் என்றானால் அவர் மகன் எத்தனை பெரிய கோடீஸ்வரனாகிவிடுவான். நினைத்துப் பார்க்கையிலே அவர் விழிகள் பேராசையில் மின்னின.
முதலில் இங்கிருக்கும் சொத்துகளை எல்லாம் சட்டப்படி மகன் பெயருக்கு மாற்றிவிட விரும்பினார். நோய்வாய்ப்பட்டுவிட்ட கணவரும், வயோதிபத்தின் தள்ளாமையில் இருக்கும் தகப்பனும் நல்லபடியாக இருக்கையிலேயே அனைத்தையும் முடித்துவிடுவதுதானே புத்திசாலித்தனம்.
எனவே இதைப் பற்றிச் சக்திவேலரிடம் பேசினார்.
அவருக்கும் மகளின் ஆசையில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவருக்கு இருந்த ஒரே கேள்வி, மூன்றில் ஒரு பங்கை ஜானகிக்குக் கொடுத்த பிறகும் பிரபாகரன் இப்போது போலவே தொழிலைக் கட்டிக்க காப்பாரா என்பதுதான்.
பாலகுமாரனுக்கு என்றுமே ஆளுமை இருந்ததில்லை. சக்திவேலர்தான் அதுவரையில் கட்டிக்காத்து வளர்த்தார். அதன் பிறகு பிரபாகரன். இப்போது நிலன். அவனோடு சேர்ந்து மிதுன் தோள்கொடுப்பான் என்கிற நம்பிக்கை கூட இல்லை. அவன் ஆசையும் ஆர்வமும் வேறு.
அப்படியிருக்க தொழிலில் நான்கில் மூன்று பங்கை ஜானகிக்கு கொடுக்க, அந்த மனஸ்தாபத்தில் மகன் விலகினால் சக்திவேல் என்னாகும் என்று யோசிக்கவே முடியவில்லை.
அதில் இந்தப் பேச்சை அவர் வீட்டுச் சபைக்குக் கொண்டுவந்தார்.
பிரபாகரனும் அன்று ஜானகி சக்திவேலின் நான்கில் மூன்று பங்கு தன் மகனுக்குச் சேர வேண்டும் என்று சொன்னதில் இருந்தே இதைக் குறித்து யோசிக்க ஆரம்பித்திருந்தார். தந்தை பேச்சைத் தொடங்கவும் பேசிவிடலாம் என்றே எண்ணினார்.
“என்ன தம்பி செய்வம்? மாத்தி எழுதுவமா? நானும் இன்னும் எத்தினை நாளைக்கு இருப்பன் எண்டு தெரியாதே.” என்று அவர் முடிக்க முதலே, “கதைக்க வேண்டியதை மட்டும் கதைங்க அப்பப்பா. தேவை இல்லாததுகளக் கதைக்காதீங்க!” என்றான் நிலன் பட்டென்று.
சக்திவேலர் முகத்தில் முறுவர் அரும்பிற்று. இதனாலதான் என்னதான் இருவரும் முட்டிக்கொண்டாலும் அவர் பேரா பேரா என்று சாவது. “என்னடா பேரா? உனக்கு அரியண்டம்(தொல்லை) தராம போய்ச் சேந்திடுவன் எண்டு பயமா இருக்கோ?” என்றார் வேண்டுமென்றே.
சின்ன முறைப்புடன், “இதெல்லாம் லேசுல போற கட்டை இல்ல. நானும் போக விடமாட்டன். நீங்க கதைக்க வந்ததக் கதைங்க.” என்றான் அவனும் விடாமல்.
பிரபாகரனும் தந்தையின் கேள்விக்குப் பதிலாக, “அப்பா, இருக்கிற சொத்தில நாளில மூண்டு பங்கு ஜானுக்குக் குடுக்கிறதில எனக்கு எந்தக் குறையும் இல்ல. ஆனா, சக்திவேல் அப்பிடிப் பிரிக்கிறது எப்பிடி அப்பா?” என்று கேட்டார்.
“என்ன அண்ணா கதைக்கிறாய்? அதுதானே முறை. இவரின்ர பாதி இவருக்கு. மிச்சப் பாதில எனக்குப் பாதி வரோணும்தானே? என்னவோ புதுசா அப்பா சொன்ன மாதிரிக் கேக்கிறாய்.” என்று பாய்ந்தார் ஜானகி.
தையல்நாயகியில் கிடைக்காதாம் என்பதையே ஏற்க முடியாமல் கொதித்துக்கொண்டு இருக்கிறவர் இதை விடுவாரா?
ஆனால், பிரபாகரனின் மொத்த வாழ்க்கையும் சக்திவேலிலேயே போயிருக்கிறது. பாலகுமாரனுக்கும் சேர்த்து அவர் உழைத்திருக்கிறார். அது போதாது என்று அவர் மகனும்.
சரியாகப் பங்கு பிரிக்கவேண்டுமானால் ஜானகி சொன்னது போல்தான் பிரியும். என்றாலும் அவர்கள் சும்மா இருக்க இவரும் மகனும் மாடாக உழைத்ததற்கு பொருளே இல்லையா என்று முரண்டியது அவர் உள்ளம்.
அவர் மட்டுமென்றால் பேசாமல் இருந்துவிடுவார். சொத்துக்காக ஆளாகப் பறக்கிற மனிதர் இல்லை அவர்.
அவருக்கும் இரண்டு பிள்ளைகள் உண்டே. அவர்களுக்குச் சேர வேண்டியதைச் சரியாகச் சேர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டே என்று நினைத்தவர் அதையேதான் ஜானகிக்கு பதிலாக்கினார்.
அதை ஏற்க மறுத்தார் ஜானகி. அதைவிடத் தந்தையின் அமைதி அவரைப் பதற வைத்தது. “அப்பா என்னப்பா அண்ணா இப்பிடி எல்லாம் சொல்லுறான். நீங்களும் பேசாம இருக்கிறீங்க? சக்திவேலில எனக்கும் பங்கு வரோணும் தானேப்பா? நானும் உங்கட மகள் தானே? அண்ணா உழைச்சான் எண்டுறதுக்காக எனக்கு வரவேண்டியதை நான் விட்டுக் குடுக்கேலுமா? வருத்தக்கார புருசனோட இருக்கிறன் எண்டதும் என்னை ஏமாத்த பாக்கிறானா அண்ணா?” என்றதும் பிரபாகரன் அடிபட்டுப் போனார்.
பரிதாபத்தை உண்டாக்கி தான் நினைத்ததைச் சாதிக்க நினைப்பதுமல்லாமல் அவரை என்னவோ பேராசை பிடித்தவர் போன்று சித்தரிக்க முயல்கிறாளே அவர் தங்கை.
“நானும் நிலனும் இல்லாட்டி சக்திவேல் இப்ப இருக்கிற மாதிரி இருந்திருக்குமா எண்டு அப்பாட்டக் கேள் ஜானு. சக்திவேலை ஆரம்பிச்சு அந்தக் காலத்தில பெருசா வளத்தது அப்பா எண்டா இண்டைக்கு அது மலை மாதிரி எழும்பி நிக்கிறது நனையும் என்ர மகனும் காரணம். இனியும் நாங்க விலகினா நாளுல மூண்டு பங்க வச்சு நீ என்ன செய்வாய்? பாத்திருக்க எல்லாமே அழிஞ்சு போகும்.” என்றதும், “தம்பி!” என்று அதட்டினார் சக்திவேல்.
அவரால் சக்திவேல் அழியும் என்று வாய் வார்த்தையால் சொல்வதைக் கூடத் தாங்க முடியவில்லை.
“சொறி அப்பா. உங்களுக்குச் சக்திவேலில இருக்கிற பாசமும் பற்றும் எனக்கும் இருக்கு. உங்களுக்கு மாதிரியே எனக்கும் தம்பிக்கும் அது அடையாளம். ஆனா, அதில நாலா பிரிச்சு ஒரு பங்குதான் எங்களுக்கு எண்டுறதை என்னால ஏற்கேலாம இருக்கு. எனக்குப் பாதி வேணும். இவ்வளவு காலமும் நானும் தம்பியும் அதக் கவனிக்காம இருந்திருந்தா சக்திவேல் என்னவாகியிருக்கும் எண்டு யோசிங்க. அதே போல இனி நானும் அவனும் கவனிக்காம விட்டா என்னாகும் எண்டும் யோசிங்க. வேணுமெண்டா மற்ற சொத்து எல்லாத்தையும் ஜானுக்கே குடுங்க. ஆனா தொழில்ல பாதி எனக்கு வேணும். என்ர பிள்ளைகளுக்கு எண்டு நானும் ஏதாவது குடுக்கோணுமே அப்பா.” என்றுவிட்டுப் போனார் பிரபாகரன்.
நிலனுக்கும் ஜானகியின் பேச்சில் மிகுந்த வருத்தம். இத்தனை காலமும் உழைத்த தந்தையைப் பார்த்து இப்படி எல்லாம் சொல்வாரா என்று கோபம் கூட வந்தது. ஆனால், என்னதான் அவன் தலைமகனாக இருந்தாலும் வீட்டின் மூத்தவர்கள் இதைப் பற்றிக் கதைக்கையில் தான் தலையிடக் கூடாது என்றெண்ணி அமைதியாக இருந்தான். கூடவே அவனுக்கும் தந்தையின் பேச்சில் தவறு இருப்பதாகப் படவில்லை.
தகப்பனின் தொடர் அமைதியில் ஜானகி நிலைகுலைந்துபோனார். என்ன கேட்டும் சக்திவேலர் எந்த வாக்குறுதியையும் தர மறுத்தார்.
பயந்துபோன ஜானகி கணவரின் பெயரில் இருக்கிற சொத்துகளை முதலில் மகனின் பெயருக்கு மாற்ற எண்ணினார். என்னதான் கணவர் பெயரில் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று என்று நெருங்கிய உறவினர்கள். இன்றே இத்தனை அமைதி காக்கும் அவரின் அப்பா நாளைக்கு இந்தத் தொழில் முழுவதும் தன்னதுதான் என்று சொல்லமாட்டார் என்று என்ன நம்பிக்கை?
இன்றைய நிலையில் ஜானகி யாரையும் நம்பத் தயாராயில்லை. அந்தளவில் அமைதியான சுபாவம் கொண்ட பிரபாகரனின் பேச்சும், அதற்கு அமைதியாக இருந்த சக்திவேலரின் நடத்தையும் அவருக்குப் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்திருந்தன.
அதற்கான ஆயத்தங்களைப் பார்க்கும்படி சக்திவேலரிடம் சொன்னார்.
அதைக் குறித்து பிரபாகரனிடம் பேசியபோது அவரும் அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். சரி முதலில் அந்த வேலையை முடிப்போம் என்று அந்தப் பத்திரங்களைக் கொண்டுபோனால் அது பாலகுமாரனின் பெயரிலேயே இல்லை என்கிறார்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில்.
அந்த அதிர்ச்சி போதாது என்று மூன்று வாரங்களுக்கு முதல் அது இளவஞ்சி பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து சக்திவேலருக்கும் ஜானகிக்கு தலையில் இடியே விழுந்திருந்தது.
தொடரும்
ஹாப்பி வீக்கெண்ட் மக்களே! திங்கள் சந்திப்போம்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.