அவள் ஆரணி - 47

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 47



பூவினி மடியிலேயே உறங்கி இருந்தாள். கட்டிலில் கொண்டுபோய்க் கிடத்த மனமற்று அப்படியே அமர்ந்திருந்தான் நிகேதன். சிந்தனையில் எதுவும் இல்லை. சிந்திக்கிற திறன் கூட அவனிடமிருந்து அகன்றிருந்தது. அவனின் உள்ளும் புறமும் எல்லாமே வெற்றிடமாய் வெறுமையாய் மாறிப்போன உணர்வு.

அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ அவனறியான். ஆரணி திரும்பி வரும் அரவம் கேட்டது. நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அழுதழுது கசங்கிப் போயிருந்தது அவளின் முகம். கண்ணிரண்டிலும் தெரிந்த இரத்தச் சிவப்பும், கண் மடல்களின் வீக்கமும் அவள் சாதாரணமாக அழுத்திருக்கவில்லை என்று சொல்லிற்று. கண்ணீர்விட்டுக் கதறியிருக்கிறாள்! ஆக, அவனுடைய காதலும் தோற்றுப்போயிற்று! பின், ஏன் இந்த ஓட்டம்? ஏன் இந்த உழைப்பு? யாருக்காக? எதற்காக? இல்லை யாரிடம் எதை நிரூபிப்பதற்காக?

அப்படியே தலையைச் சுவரில் சாய்த்து விழிகளை மூடிக்கொண்டான். நிகேதன் என்கிற ஆண்மரம் அடியோடு தறிக்கப்பட்ட நொடி அது! நெஞ்சைப் போட்டு அழுத்தும் பாரத்தை வெளியேற்றுவதுபோல் ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டான். குழந்தையைத் தூக்கிக்கொண்டுபோய்க் கட்டிலில் கிடத்தி போர்வையால் மூடிவிட்டான். இரு பக்கமும் தலையணைகளை வைத்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பூ முகம் அவன் காயத்தைத் தேற்ற முனைந்தது. சற்று நேரம் அவளையே பார்த்திருந்தான். அறையின் ஒரு பக்கமாக ஆரணி நிற்பதையும் அவன் அறிந்துதான் இருந்தான். அவளைப் பாராமல், “ஹயர் இருக்கு..” என்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

அவனையே கவனித்துக்கொண்டிருந்த ஆரணியின் இதயத்திலும் பெரும் பாரம். போகும்போது எப்படி அமர்ந்து இருந்தானோ அதே இடத்தில் வரும்போதும் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தவனைக் கண்டு ஒருகணம் நெஞ்சுக்குள் பகீர் என்றுதான் இருந்தது.

குசினிக்குள் ஓடிப்போய்ப் பாத்திரங்களைத் திறந்து பார்த்தாள். சமைத்துவைத்தவை எல்லாம் அப்படியே இருந்தது. சாப்பிடவும் இல்லையா? கண்ணைக் கரித்துக்கொண்டு வரவும் வந்து அமர்ந்துகொண்டாள். என்ன வேதனை இது? அவளின் காயங்களும் அவளுக்குத்தான் வலியைக் கொடுக்கிறது. அவன் கலங்கி நிற்பதும் அவளைத்தான் வருத்துகிறது.

------------------------

அவள் போனபின்னும் நீண்ட நேரமாக அப்படியே அமர்ந்திருந்தார் சத்தியநாதன். அன்று, அவள் வந்து தன் காதலைச் சொன்னபோது அவர் ஒன்றும் கண்ணை மூடிக்கொண்டு மறுக்கவில்லை. அவனைப் பற்றி விசாரித்தார்; அவனுடைய குடும்பப் பின்புலத்தைப் பற்றி ஆராய்ந்தார். அதன்படி, அவளின் தெரிவு தவறு என்பது அவரின் தீர்க்கமான முடிவு!

என்னிடம் அனைத்தும் இருக்கிறது என்பதற்காகத் தகுதியற்ற ஒருவனை மகள் விரும்பிவிட்டாள் என்று அவளுக்கு அவனையே கணவனாகக் கொண்டுவர அவரால் முடியாது. பணம் இன்று வரும் நாளை போகும். அதைச் சம்பாதிக்கும் திறன் எவன் ஒருவனிடம் இருக்கிறதோ அவன் தான் வீழ்ந்தாலும் எழுந்து நிற்பான்; தடைகளைத் தாண்டுவான்! கடின உழைப்பின் சுவையை நுகர்கிறவனாக இருக்க வேண்டும்! அப்படியான ஒருவனாக, நான் நினைக்கிற வேலை கிடைத்தால் மாத்திரமே போவேன் என்று இருந்த அன்றைய நிகேதன் அவருக்குப் படவில்லை. ஆக, மறுத்தார்.

அதற்காக ஆரணி வீட்டை விட்டே வெளியேறியது அவருக்கு விழுந்த மிகப்பெரிய அடி. எது நடந்தாலும் எதிர்கொள்ளும் திடத்தை இத்தனை வருட வாழ்க்கை கற்பித்திருந்தாலும் அவர் தனக்குள் இடிந்துபோனார் என்பது மெய்யே! ஆனாலும், அவர் கலங்கவில்லை. தளர்ந்துவிடவில்லை.

அவளும் அவரிடம் சவால் விட்டுவிட்டுத்தானே போனாள்.

திருமணமாகிவிட்டது, பிள்ளை பிறந்துவிட்டது, எனக்கும் வயதாகிறது, இனி வேறு வழியில்லை என்பதனால் நான் அனைத்தையும் மறந்தேன் மன்னித்தேன் என்று தன்னையே ஏமாற்றிக்கொண்டு அவளைச் சேர்க்க அவர் ஒன்றும் சாதாரணத் தந்தை இல்லை. அவர் சத்தியநாதன். ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு. அதைப்போலத்தான் அவரும்.

அவள் திருமணம் முடித்தபோதும், இத்தனை வருடங்கள் ஓடியபோதும், அவர் அறிந்தே அவள் பல சிக்கல்களை எதிர்கொண்டபோதும், தாய்மை உற்றபோதும், ஒரு குழந்தைக்கு அன்னையே ஆனபோதும் கூட அவர் தன் முடிவில் இருந்து மாறவில்லை. இறங்கி வரவில்லை. தனக்கான பதில் கிடைக்கிற வரைக்கும் பொறுமையாகக் காத்திருந்தார். சீரும் சிறப்புமாய்ப் பெற்றெடுத்து வளர்த்த தந்தையைத் தூக்கி எறிந்துவிட்டுப் போன நீயேதான் திரும்பியும் வரவேண்டும் என்கிற தந்தைக் கோபத்துடன் நீண்ட நெடு நாட்களாகக் காத்திருந்தார்.

இதோ இன்று வந்து பதில் சொல்லிவிட்டுப் போகிறாள் பெண்!

இப்போதும் அவள் தன் தெரிவு தவறு என்று சொல்லவில்லை. செய்தது பிழை என்றுதான் சொல்லிவிட்டு போயிருக்கிறாள். ஆக, அவரின் பெண் சோடை போகவில்லை. நரைத்தடர்ந்த மீசையை நீவி விட்டுக்கொண்டார். யார் அவள்? அவள் ஆரணி! சத்தியநாதனின் பெண்! என்னைத் தேடி வராதே. உன் இரக்கம் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போனவளின் சுயமரியாதைக் கோபம் கூட அவருக்குப் பிடித்திருந்தது. உதட்டோரமாகச் சிறு சிரிப்பொன்று பெருமிதமாக முகிழ்த்துவிட்டுப் போக, ஒரு கம்பீரச் செருமலுடன் தன் வழமையான அலுவல்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.

இரண்டு நாட்கள் அதன்போக்கில் நகர்ந்தன. அத்தியாவசியம், தேவை, பூவினி இவை குறித்து மாத்திரமே நிகேதனும் ஆரணியும் பேசிக்கொண்டார்கள். மற்றும்படி ஒருவிதமான சோக மௌனம் அவர்களுக்குள் இழையோடிக்கொண்டிருந்தது.

அன்று, நிகேதனுக்குப் புது இலக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்து யார் என்று கேட்டபோது சத்தியநாதன் பேசினார். அன்று, ஆரணி அவரைச் சந்தித்து அழுதுவிட்டு வந்ததின் பின் ஏதோ ஒரு வகையில் இதை அவன் எதிர்பார்த்ததில் பெரிய அதிர்ச்சி எல்லாம் உண்டாகவில்லை.

“சொல்லுங்கோ அங்கிள்.” என்றான்.

யசோதாவிடம் கிடைத்த பாடத்தில் மாமா என்று உரிமை கொண்டாடவும் இல்லை. யாரோவாக அந்நியப்படுத்தவும் இல்லை.

“உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும். ஒபிஸ்(ஆபீஸ்)க்கு வந்திட்டு போக ஏலுமா(இயலுமா)?” என்று கேட்டார் அவர். அவருமே தன் பேச்சில் எந்த உறவையும் உறுதிப்படுத்த முனையவில்லை என்பது புரிந்தது.

“வாறன் அங்கிள். ஆனா பின்னேரம் நாலுமணி போல எண்டா பரவாயில்லையா? இப்ப நான் ஹயர்ல நிக்கிறன்.” என்றவன் சொன்னதுபோலவே சரியாக நான்கு மணிக்கு அவர் முன்னே அமர்ந்திருந்தான்.

மாமன் மருமகன் இருவருக்குமான முதல் சந்திப்பு. உறவாகவும் இல்லை. உத்தியோகபூர்வமாகவும் இல்லை. இருவருமே தம் உணர்வுகளை மற்றவருக்குக் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாய் இருந்தனர். அவரின் பார்வை அவனை ஒருமுறை முழுதாக அளந்தது. பிரத்தியேகமாகத் தயாராகிக்கொள்ளவில்லையே தவிர, தன்னைக் குறைத்துக்காட்டவும் விரும்பாததால் நேர்த்தியாகவே வந்திருந்தான் அவன். அதில், தயக்கமற்று அவரின் பார்வையை எதிர்கொண்டான். இருவருக்குள்ளும் இருந்த நீயா நானா சத்தமில்லாமல் மோதிக்கொண்டது. இருவரின் கருப்பொருளும் ஒருத்திதான். எனவே, வார்த்தைகள் வெகு கவனமாக வெளிவர ஆரம்பித்தன.

“ரெண்டு நாளைக்கு முதல் ஆரா இங்க வந்தவள்.” என்றுவிட்டு அவனைப் பார்த்தார் அவர்.

முற்றிலுமாக அவன் நொறுங்கிப்போன நொடி அல்லவா அது. வெகு சிரமத்துடன் தெரியும் என்பதுபோல் சிறு தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு, அவர் மேலே பேசக் காத்திருந்தான்.

“செய்த பிழைய இப்பதான் உணர்ந்திருக்கிறா போல. வந்து மன்னிப்பு கேட்டவா.” என்றவரின் பார்வை அவனைக் கூர்ந்தது.

அவளுக்கு அந்த ஞானம் திடீரென்று எப்படி வந்தது என்று கேட்கிறார். அவர்களுக்குள் ஏதும் பிரச்சனையோ என்று ஆராய்கிறார் என்று உணர்ந்து முகம் கறுத்துவிடாமல் இருக்க பெரும் பாடுபட்டான் நிகேதன்.

“ஆராக்கு செய்யவேண்டியதை செய்ய ஆசைப்படுறன். என்ன ஏது எண்டு உங்கட எதிர்பார்ப்பை சொன்னீங்க எண்டா அதையே செய்யலாம்.”

அவனை விலை பேசுவதே தெரியாமல் விலை பேசுகிறார் அவன் மாமனார். அதற்கு வழிவகுத்துக் கொடுத்துவிட்டாள் அவனுடைய ஆரா. மெலிதாகச் சிரித்தான் நிகேதன். “நாங்க செய்தது பெரிய பிழைதான் அங்கிள். அதுக்காக நானும் உங்களிட்ட மன்னிப்பு கேக்கிறன். மற்றும்படி, உங்கட எதையும் எதிர்பாத்து அவளை நான் விரும்பவும் இல்ல; கட்டவும் இல்ல.” என்றான் அவன்.

அவரும் இலேசுப்பட்டவர் இல்லையே. “காணி வாங்கி இருக்கிறீங்களாம் எண்டு கேள்விப்பட்டனான். நீங்க விரும்பின மாதிரியே சகல வசதியோடயும் வீடு கட்டலாம். நீங்க பிளானை மட்டும் கொண்டுவாங்கோ. மிச்சத்தை நான் பாக்கிறன்.” என்றார் அப்போதும் விடாமல்.

“இல்ல அங்கிள். அது என்ர மனுசி பிள்ளைக்கு நான் கட்டப்போற வீடு. அதை, என்ர உழைப்பில நானே கட்டிக்கொள்ளுவன்.”

தன்மையாகப் பதில் சொன்னாலும் தன் சுயமரியாதையை இம்மியளவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நிற்பவனை, தனக்குள் மெச்சிக்கொண்டார் சத்தியநாதன்.

ஆனாலும் அவரும் விடுவதாயில்லை. “இதுல குறைவா நினைக்கிறதுக்கு ஒண்டுமே இல்ல. இப்ப உங்களுக்கும் ஒரு மகள் இருக்கிறா. நாளைக்கு அவவுக்கு ஒண்டும் குடுக்காமையா கட்டிக்குடுப்பீங்க? இல்ல, உங்கட தங்கச்சிய சும்மாவா கட்டிக் குடுத்தீங்க.” என்று வாதித்தார்.

பதிலுக்குப் பதில் என்று பேசாமல் அவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். பின் நிமிர்ந்து கவனமாக வார்த்தைகளைக் கோர்த்தான்.

“உங்களோட ஒப்பிடேக்க உங்கட மகளுக்குப் பெருசா நான் ஒண்டும் செய்ய இல்லைதான் அங்கிள். ஆனா, நான் உங்களை மாதிரி பரம்பரை பணக்காரன் இல்ல. அடிப்படை வசதிகூட இல்லாம இருந்தவன். எல்லாத்தையுமே பூச்சியத்தில இருந்து ஆரம்பிக்கவேண்டி இருந்தது. ஒரு தங்கச்சியின்ர பொறுப்பும் இருந்தது. ஆனாலும், அந்தப் பொறுப்பையும் முடிச்சு அண்டைக்கு விட இண்டைக்கு நான் எத்தனையோ மடங்கு உயர்ந்துதான் இருக்கிறன். ஒண்டுக்கு மூண்டு வாகனம் இருக்கு. ஒரு காணி வாங்கி விட்டிருக்கிறன். அளவான நகைகள் தான் எண்டாலும் என்ர மனுசி பிள்ளைய வெறுங்கழுத்தோட விட இல்ல. இதெல்லாம் என்ர சுய சம்பாத்தியம் அங்கிள். ஆறே ஆறு வருசத்தில நான் சேர்த்தது. இன்னும் ஆறு வருசத்துல இதைப்போல பல மடங்கு உயர்ந்திடுவன். உங்கட மகளுக்கு வசதி செய்து குடுக்க நீங்க ஆசைப்படுறதில நியாயம் இருக்கு. ஆனா, தயவு செய்து என்ர சுயமரியாதையை விலை பேசாதீங்கோ. என்னால முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் அவளை இன்னும் நல்லா வச்சிருப்பன்.” என்றான் ஒரு வேகத்துடன்.

ஆரணியின் செய்கையால் காயப்பட்டுப் போயிருந்த மனது அவரிடமாவது தன்னை நிரூபித்துவிடத் துடித்தது. அந்தத் துடிப்பை, சுயமரியாதை சீண்டப்பட்டதும் அவன் வெகுண்ட விதத்தை மிகவுமே ரசித்தார் சத்தியநாதன். அதன்பிறகு அவனை வற்புறுத்தவில்லை. எப்படியான ஒருவனை மகளுக்கு மணாளனாக்க வேண்டும் என்று எண்ணினாரோ அப்படி ஒருவனாக மாறி வந்து நிற்கிறான் அவன். வேறு என்ன வேண்டும் அவருக்கு? அதற்குமேல் எதையும் பேசாமல் அவனை நல்லமுறையில் விடைகொடுத்து அனுப்பிவைத்தார்.



 
Top Bottom