• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சோறு - ஹேமா (இதழ் 1)

ரோசி கஜன்

Administrator
Staff member

சமீபத்தில் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தோம்.

உள்ளே நுழையும்போதே எண்ணற்ற ஒளி விளக்குகள் ஜொலிக்க, தேவலோகம் போல மிளிர்ந்தது திருமண மண்டபம். வாசலிலேயே இரு வீட்டு பெற்றோர்களும் நின்று இருகரம் கூப்பி விருந்தினர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் காலமெல்லாம் மலையேறிப் போயிருக்க, ஈவன்ட் மேனேஜ்மென்ட்டின் ஒரே மாதிரி சீருடை அணிந்த பெண்கள் செதுக்கி வைத்த புன்னகையுடன் பன்னீர் தெளித்து வரவேற்றார்கள். எதிர்பட்ட யாரையும் அறியாத சங்கோஜத்துடன் நாங்களே தாமதம் என்று நுழைந்த வரவேற்பு கூடத்தில் இன்னமும் அழகு நிலையத்தில் இருந்து பெண்ணும் மாப்பிளையும் வந்திருக்கவில்லை.

ஏற்கனவே வந்தமர்ந்து எங்களை மாதிரியே திருதிருவென விழித்துக் கிடந்த உறவினர் நண்பர்களை இனம் கண்டு, இரைந்த இசைக்குழுமத்தின் சத்தத்தை மீறி நலம் விசாரித்து, எங்களுக்குள் அளவளாவி நாங்கள் களைத்துப் போன நேரம், நல்லவேளை, பொண்ணும் பையனும் வந்துவிட்டார்கள். கூடவே அழகு நிலைய அலங்கரிப்பில் மறைமுக போட்டியிட்டபடி சம்பந்தி அம்மாக்களும்.

பரிசை கொடுத்துவிட்டு வந்த வேலையைக் கவனிக்க அருகே சென்றவர்களை மேடைக்கு விடாமல் கடமையே கண்ணாக புகைப்படக் கலைஞர் தன் ஃபோட்டோ ஷுட்டை ஆரம்பித்து விட, அதற்கு மேல் நேரமில்லை. சரி, சாப்பிட்டு விட்டு வந்து ‘அட்டனன்ஸ்’ போடலாம் என்று நாங்களும், எங்களைப் போலவே பலரும் எழுந்து உணவு பரிமாறும் இடத்திற்கு சென்றோம். சாப்பிடும் இடம் பெரிய உணவுத் திருவிழாவைப் போல இருந்தது. பஃபே விரும்புவர்களுக்கு ஓரிடமும், உட்கார்ந்து சாப்பிட விரும்பும் முதியவர்களுக்கு இன்னொரு பக்கம் பந்தி பரிமாறலும் நடந்து கொண்டிருந்தன.

அம்மா அப்பாவை பந்தியில் உட்கார வைத்து விட்டு பஃபேவிற்கு சென்றோம். வண்ண விளக்குகள் அணிந்த செயற்கை மரங்களுக்கு இடையே பெரிய பெரிய ஸ்டால்கள் அமைத்திருக்க, குஜராத்தி கடி, மகாராஷ்டிர ஆலுவாடி, வட இந்திய பானிபூரி, பேல்பூரி முதல் நம் ஊர் பாரம்பரிய கம்மங்கூழ், நீர் தோசை, இளநீர் பாயாசம் வரை, ஐஸ்க்ரீம், குல்பி தொடங்கி ஜிகிர்தண்டா, சுக்கு காப்பி வரை என கிடைக்காத வகைகள் இல்லை. பிரமாண்டமான ஏற்பாடுகள், பிரமிக்க வைக்கும் உணவு வகைகள்.

நான் பல நாள் சுவைக்க வேண்டும் என்று நினைத்த பல மாநிலத் தேர்வுகள். ஆனால், சிறிது பொழுதிலேயே வயிறும் மனமும் நிறைவதற்கு பதிலாக விசித்திரமாக மனதை பிசைந்தது எனக்கு. இயல்பான ஆர்வத்துடன் ஆசை ஆசையாய் தட்டை நிறைத்துக் கொண்டவர்கள் பலரும் வயிற்றில் இடுவதற்கு பதிலாக பாதிக்கு முக்கால்வாசி உணவை குப்பையில் வீசிவிட்டு அடுத்த ஸ்டாலுக்கு நடக்க, அங்கிருந்த குப்பைக் கூடைகள் நிமிடத்திற்கு நான்கு நிறைந்து கொண்டிருந்தன.
இதுவா உபசரிப்பு? இத்தனை நூறு வகைகள் ஒரு நேர விருந்தில் அவசியமா? தன் படோபடத்தைக் காண்பிக்க திருமண வீட்டார் தான் இவ்வளவு ஆடம்பரம் செய்கிறார்கள் என்றால், நம் மக்களுக்கும் ஏன் இவ்வளவு அலட்சியம்? எவ்வளவு தேவையோ அந்த அளவில் மட்டும் வாங்கி தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக் கூடாதா?

மண்டப அலங்காரங்கள், பூ வேலைப்பாடுகள், உடைகள் என்று மற்ற எந்த விஷயத்தில் ஆடம்பரம் இருந்தாலும், அந்தத் தொகை யாரோ ஒரு நூறு பேருக்கு வேலையும் வாழ்க்கையும் கொடுக்கிறது. ஆனால், யாருக்கும் பயனில்லா வகையில் இப்படி உணவை வாரி இறைப்பது எந்த விதத்தில் நியாயம், அதுவும் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினி சாவு நடக்கும் நம் நாட்டில்? இப்படி பல கேள்விகள் எனக்குள்.
அம்மா அப்பாவை அழைக்க பந்தி வரிசைக்கு சென்றால், “ஒரு இலை ஐநூறு ரூபாயாம்டி” அம்மா என் காதில் முணுமுணுத்தார். அவர் எதிரே தனி இலையில் அமர்த்தி வைக்கப்பட்டு இருந்த நான்கு வயது குழந்தை இலை முழுக்க பரிமாறி இருந்த எதையும் தொடாமல் அப்பளத்தை மட்டும் கடித்திருக்க, அதை அதி பெருமையாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள் அதன் பெற்றோர்கள். அந்த பிள்ளை மெல்லும் நாலு பருக்கையை தன் மடியில் அமர்த்தி ஊட்டி விடத் தோன்றாமல் முழு இலையை வீணாக்குகிறார்களே?! உண்மையில் படிப்பு, வசதி என்ற பெயரில் நல்ல நாகரீகம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் நம் இளைய தலைமுறையினர்.

பெரிய விருந்துகளில் தான் என்று இப்படி என்று இல்லை, ஹோட்டல்களில், அலுவலக கேன்டீன்களில், சிறிய அளவில் நடக்கும் கெட்-டூ-கெதர்களில் என எல்லா இடங்களிலும் இப்படி பண்ட விரயம் தான், முன்னெப்போதும் பார்க்காத அளவுகளில். அங்கு வீணாகும் பிளாஸ்டிக் தட்டுகள், பாதி குடித்த நீருடன் அங்கங்கு வீசி எறியப்படும் தண்ணீர் ‘பெட்’ பாட்டில்களைப் பற்றி இன்னொரு நான்கு பக்கத்திற்கு எழுதலாம்.

வீட்டிற்கு விருந்துக்கு வருபவர்களிலும் இப்படிப்பட்ட வகைகள் உண்டு. சிலர் பரிமாறுகிறபோது அமைதியாக இருந்துவிட்டு, ‘நான் ஸ்வீட் சாப்பிட மாட்டேன், சுகர்’ என்று வைத்த இனிப்பு வகைகளை அப்படியே வீணாக்குவார்கள், சிலர் கருவேப்பிலை, மிளகு ஒதுக்கும் சாக்கில் கொத்து கொத்தாய் சோற்றை புறம் தள்ளுவார்கள்.

அசைவ விருந்தில் எடுத்துக் கடிக்க நாகரீகம் பார்த்து கோழி கொத்துவது போல கொத்தி வீணாக்கும் ஒரு வகை, நாசுக்காக முள்கரண்டி கொண்டு கொரிப்பவர்கள் இன்னொரு வகை. ஒரு வயது குழந்தைக்கு எல்லாவற்றையும் பரிமாறி ‘அவ தட்டிலேயே விளையாடுவா’ என்று மேலே கீழே கொட்டி துவம்சமாக்கும் பிள்ளையைக் கண்டு பூரிக்கும் மற்றொரு வகை. சமயத்தில், சிவாஜி படத்தில் வரும் வடிவுக்கரசி போல நாமே பிசைந்து வாய் நிறைய ஊட்டி விட்டு விடலாமா என்று கூடத் தோன்றும். அபூர்வமாக வெகு சிலரே, சமைத்தவரின் சிரமம் உணர்ந்து வீணாக்காமல் சாப்பிடுவது.

நாம் சிறுவர்களாக இருந்தபோது சோற்றின் மகத்துவத்தைப் பற்றி சொல்ல நம் வீட்டில் பெரியவர்கள் இருந்தார்கள். குழந்தைகளுக்கு எடுத்து சொல்லும் பொறுமையும், தார்மீகப் பொறுப்பும், முக்கியமாக நேரமும் அன்றைய பெரியவர்களுக்கு இருந்தது. இன்றைய பெற்றோரான நாம் நம் பிள்ளைகளுக்கு டேபிள் மேனர்ஸ் பற்றி கற்றுத் தர தயாராக இருக்கிறோமே தவிர, உணவின் மேன்மையை பற்றி சொல்லித் தருவதில்லை.
நம்மால் உருவாக்க முடியாத எதையும் வீணாக்க நமக்கு உரிமை இல்லை, நம் தட்டின் கடைசிப் பருக்கையையும் தேடிப் புசிப்பதில் எந்த கவுரவ குறைச்சலும் கிடையாது என்று குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்ல எங்கோ இந்த தலைமுறை தவறவிட்டு விட்டோம்.

ஒவ்வொரு பருக்கையிலும் அது சேர வேண்டியவர் பெயர் எழுதி இருக்கும். நம் பசியை மதித்து தட்டில் நிறையும் சோற்றுப் பருக்கைகளை வீணாக்குவதை விட கொடிய பாவம் எதுவுமில்லை. ஒவ்வொரு தானியமும் நம் வீடு வருவதற்கு பின்னால் எண்ணற்றவர்களின் உழைப்பும், வியர்வையின் உவர்ப்பும் உள்ளன என நம் வீடுகளில் பாட்டியும், அம்மாவும், அப்பாவும் திரும்ப திரும்ப சொல்லியபடி இருப்பார்கள்.

கீழே தவறி விழுந்த பருக்கைகளை நீரில் கழுவி உணவுடன் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் நம்மில் பலரது வீடுகளில் இன்றளவும் உண்டு. உணவகங்களில் சாப்பிட்டது போக எஞ்சியிருக்கும் உணவைக் கட்டி வீட்டிற்கு எடுத்து வந்து அடுத்த வேளை உபயோகிக்கும் நல்ல வழக்கம் கொள்கையாக அல்லாமல் இயல்பாகவே போன தலைமுறைக்கு இருந்தது. கௌரவம் என்ற பெயரில் நாம் மறந்துவிட்ட அந்த வழக்கத்தை இப்போது சில உணவகங்களே முன்னெடுப்பது ஆரோக்கியமான விஷயம்.

விவசாய நிலப் பரப்புகள் குறைந்து, நீர் ஆதாரங்கள் வற்றி, வானம் பார்த்த பூமியாக நம் விளைநிலங்கள் மாறிக் கொண்டிருக்கையில், ‘உணவு சிக்கனம், தேவை இக்கணம்’ என்று அனைவருமே உள்ளார உணர வேண்டிய தருணமிது. நாகரீகமும் நாசுக்கும் உணவை வீணடிப்பதில் இல்லை. நம்மால் இயன்ற அளவில் பசித்த வயிறை குளிர வைப்பதில் தான் தழைத்து எழும்புகின்றன ஜீவ காருண்யமும், இவ்வுலகின் ஆதி நாகரீகமும் என நம் பிள்ளைகளுக்குப் போதிப்பது இன்றைய காலத்தின் தேவை.
ஒருமுறை ரமண மகரிஷி தன் ஆசிரம சமையலறையில் கீரை ஆய்ந்து கொடுத்தாராம். இலைகளை கிள்ளிவிட்டு அவர் வேறு பக்கம் சென்ற நேரத்தில் அங்கு வேலை செய்யும் பெண் தண்டுகளை குப்பையில் எறிந்து விட்டார். திரும்பி வந்த ரமணர் பதறியவராய் மண்ணில் கிடந்த கீரைத் தண்டுகளை சேகரித்து அவற்றை கழுவி உணவில் சேர்க்க சொன்னாராம். இயற்கை நமக்கு உவந்தளிக்கும் உணவுப் பொருளை வீணாக்காமல் முழுமையாக உபயோகிக்கும் உயரிய அறம் உணர்த்தும் சம்பவம் இது.

உண்மையில் பசி என்ற உணர்வு தான் பிரம்மத்தின் அடையாளம். அந்த உணர்வுக்கு முன் வேறெந்த உயரிய பொருளும், உணர்வும் மதிப்பிழந்து போகும். நம் பசிப்பிணி தீர்த்து வயிற்று அக்னியை தணிக்கும் ஒவ்வொரு கவள சோற்றின் மகத்துவத்தை மதிப்போம். உணவை வீணாக்காமல் இருக்க நம் மனதளவில் உறுதி எடுப்போம்.
 

Goms

Active member
சரியாக சொல்லி இருக்கீங்கமா.
நான் இதை 7 வருடம் கழித்து படிக்கிறேன். அப்படியும் இன்னும் மாற்றம் வரவில்லை. அதுவும் அடுத்தவருடன் ஒப்பிட்டு, அவர் கல்யாணத்தில் போட்டதைவிட இன்னும் சில வகைகளை அதிகப்படுத்தும் வழக்கம் வளர்ந்துள்ளது. அதில் நிறைய வகைகள் ருசியாகவும் இருக்காது. என்ன செய்ய? பேசாமல் உணவு ஹாலில் "உணவை வீணாக்காமல் உங்களுக்குப் பிடித்தவற்றை ருசித்து உண்ணுங்கள்" என்று ஏதாவது பேனர் வைத்து பார்க்கலாம்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Latest posts

Top Bottom