• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 4


அன்று, மாலை மங்கும் நேரத்தில் மகளும் அவளும் திரும்பி வந்தனர். அன்று மட்டுமல்ல சில நேரங்களில் காலையில் போய் மதியம் வந்தாள். சில நேரங்களில் முற்பகல் போய் மாலையில் வந்தாள்.

சில நாட்களாகக் கவனித்துவிட்டு, “எங்கடா போறா ஒவ்வொரு நாளும்?” என்று அசோக்கிடம் விசாரித்தான்.

“தோட்ட வேலைக்கு மச்சான். சாப்பிட காசு வேணுமே.”

“என்னடா சொல்ற?” அதிர்ச்சியாகப் போயிற்று விக்ரமுக்கு.

“அப்ப அந்தக் குழந்த?”

“அதுக்கு என்ன? தாய்க்குப் பக்கத்திலையே விளையாடும். இந்தப் பிள்ளையும் அத வேற யாரிட்டையும் விடாது. மகளை யாரிட்டையும் விடக் கூடாது எண்டுதான் படிச்சிருந்தும் தோட்ட வேலைக்குப் போகுதாம். அங்க எண்டா குழந்தையப் பக்கத்திலையே வச்சிக்கொண்டு வேலை பாக்கலாம்தானே.”

“அது கஷ்டம் இல்லையாடா?”

“கஷ்டம் இல்லையாவா? உச்சி வெயிலுக்க, நாள் முழுக்கக் கிடந்து வேலை செய்யோணும். புல்லுப் புடுங்கோணும், பாத்தி கட்டோணும், குருவி கலைக்கோணும், சொல்ற வேலை எல்லாம் செய்யோணும். ஒரு நாள் போகாட்டியும் காசு இல்ல. நாங்க ஏதாவது உதவி செய்யவா எண்டு அம்மா கேட்டும் வேண்டாம் எண்டு சொல்லிட்டாளாம். என்ர பிள்ளைய நான் உழைச்சுப் பாப்பன் எண்டவளாம்.” என்றான் அசோக்.

மனதுக்குப் பாரமாய்ப் போயிற்று அவனுக்கு. குழந்தைக்காகவே தோட்ட வேலைக்குப் போய், தன்னையே வருத்தி உழைத்துக் குழந்தையே உலகம் என்று வாழ்கிறாள். அவள் மீது புது மரியாதையே உருவாகிற்று அவனுக்கு.

இவளும்தானே இளம் பெண். கணவன் என்கிறவனே இல்லாமல் பிள்ளைக்காக வாழவில்லையா?

கிட்டத்தட்ட ஒரு வாரம் பத்து நாட்களாகக் கவனித்தான். அவர்கள் இருவரையும் தேடி யாருமே வரவில்லை. நண்பர்கள், தெரிந்தவர்கள், பழகியவர்கள், சொந்தம் என்று யாருமே வரவில்லை.

ஜேர்மனில் இருந்த நாட்களில் ஊரில் இருந்தாலாவது கதைக்கப் பேச நாலுபேர் அயலட்டையில் இருப்பார்கள் என்று நினைத்திருக்கிறான். இங்கே பார்க்கையில் நம்மூரில், நம் அயலட்டையில் அநாதை போல் வாழ்வதை விட வெளிநாட்டில் தனியாக இருப்பது மேல் என்று தோன்றிற்று.

அவனுக்கு ஒருவிதமான தனிமை என்றால் அவளுக்கு ஒருவிதமான தனிமை போலும்.

உடனேயே அசோக்கிடம் அவளைத் திருமணத்துக்குக் கேட்கச் சொன்னான்.

“உனக்கென்ன மறை ஏதும் கழண்டு போச்சே.” என்று துள்ளிக் குதித்தான் அவன்.

“அந்தப் பிள்ளையெல்லாம் உனக்குச் சரியா வராது!”

“எனக்குப் பிடிக்கேல்ல!”

அதுவரை அமைதியாக இருந்தவன், “டேய்! நான் எனக்குத்தான் கேக்கச் சொன்னான்.” என்றான் கேலியாக.

“சிரிப்பு வரேல்ல.” என்றான் முறைத்துக்கொண்டு.

கதிரையிலிருந்து எழுந்து நண்பனின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு, “ஏன் உனக்கு இவ்வளவு கோபம்? அந்தப் பிள்ளைக்கு என்ன குறை?” என்று வினவினான் விக்ரம்.

“அவள் குழந்தைக்கு அப்பா…” என்றதுமே இப்படிப் பேசாதே என்பதுபோல் தலையைக் குறுக்காக ஆட்டினான் விக்ரம்.

“நீயும் இப்பிடிக் கதைக்காத அசோக். நாங்க வந்து மூண்டு கிழமை ஆகுது. இத்தனை நாள்ல அந்தப் பிள்ளைல ஏதாவது பிழையாத் தெரிஞ்சதா உனக்கு? இங்கால ரெண்டு ஆம்பிளையள் இருக்கிறோம். அதுவும் வெளிநாட்டுல இருந்து வந்திருக்கிறோம் எண்டு ஏதாவது எங்களக் கவரும் விதமா நடந்தவாவா? ஒரு சொக்லேட் கூடி கேட்டு வரேல்ல. தான் உண்டு தன்ர பாடு உண்டு எண்டு இருக்குது அது. அதுன்ர வாழ்க்கைல நடந்த எல்லாத்தையும் உனக்குச் சொன்னாத்தான் நீ நம்புவியா? இல்ல நீதான் உன்ர வாழ்க்கைல என்ன நடக்குது எண்டு எல்லாருக்கும் சொல்லுவியா? சும்மா ஊர் கதைக்குது எண்டு நீயும் கதைக்காத.” என்றான்.

“சரிதான்டா. அவள் நல்லவளாவேஇருக்கட்டும். ஆனா, நான் உனக்கு வேற பொம்பிள பாக்கிறன்.”

“பாக்கிறதா இருந்தா அவளைப் பார். இல்லாட்டி எனக்குக் கல்யாணமே வேணாம். வா திரும்பிப் போவம்.” ஒரேயடியாக அவன் சொல்லவும் திகைத்துப் போனான் அசோக்.

“டேய் என்னடா இது? திரும்பவும் நீ பிடிச்ச முயலுக்கு மூண்டுகால் எண்டு நிக்கிற?”

“அது அப்பிடித்தான்! கட்டினா அவளைத்தான் கட்டுவன். இல்லாட்டி வேண்டாம்!”

“என்ன லவ்வா?”

சிரித்துவிட்டான் விக்ரம். “லவ் பண்ற வயசாடா இது? அந்தப் பிள்ளையின்ர முகத்தைக்கூட நான் இன்னும் ஒழுங்கா பாக்கேல்ல.”

“பிறகு என்னத்துக்கு அவள்தான் வேணும் எண்டு நிக்கிறாய்?”

“தெரியேல மச்சான். தன்ர மகளுக்காகத் தோட்ட வேலைக்குப் போற ஒருத்தி என்ர மகனையும் பாசமாப் பாப்பாள் எண்டு ஒரு நம்பிக்கை.”

“ஒரு கல்யாணத்துக்கு இது போதாது விக்கி. மனதுக்குப் பிடிக்கோணும். அப்பதான் அது நிலைக்கும்.”

“கல்யாணத்துக்குக் காதல்தான் வேணும் எண்டு கட்டின வாழ்க்க மட்டும் நிலைச்சதா என்ன?” என்றான் விரக்தியோடு.

எண்ணங்கள் யாஸ்மினை நோக்கி மிக வேகமாகப் பாய்ந்தன!

அதை உணர்ந்த அசோக் சட்டென்று பேச்சை மாற்றினான். “அப்ப அந்தப் பிள்ளையக் கொஞ்சமாவது பிடிச்சிருக்கா உனக்கு?”

“அந்தப் பிள்ளைய நான் எங்க பாத்தன். அந்தக் குட்டியைத்தான் பாத்துப் பிடிச்சது. சாரா மாதிரியே இருக்கிறா.”

தலையில் அடித்துக்கொண்டான் அசோக். “மகளைப் பாத்து அம்மாவ செலக்ட் பண்ணினவன் இந்த உலகத்திலேயே நீயாத்தான் இருப்ப.” என்றுவிட்டுத் தாயிடம் கதைக்கப் போனான்.

வேற வழி? விக்ரமின் பிடிவாதத்தை அவனையன்றி வேறு யார் அறிவார்?

அவளிடம் கதைக்கச் சென்ற மரகதமோ, சுவரில் அடித்த பந்தாகப் போனதை விட வேகமாகத் திரும்பி வந்தார்.

“வெளிநாட்டு மாப்பிள்ள, ஒரு குறை சொல்லேலாத நல்ல பிள்ள. அவனக் கட்ட இவளுக்குக் கசக்குதாம். நானும் இனியாவது அவளின்ர வாழ்க்க நல்லாருக்கட்டும் எண்டு கெஞ்சியும் பாத்தன். ஒண்டுக்கும் மசியிறாள் இல்ல. அவளுக்கு இந்த வாழ்க்கையே போதுமாம். அதுசரி! எதுக்கும் ஒரு குடுப்பின வேணும். ஓட்டுற மண்தான் ஓட்டும்!” என்று புலம்பித்தள்ளிவிட்டார் அவர்.

அதைக் கேட்டுவிட்டு அவருக்கு மேலாகத் துள்ளினான் அசோக். “நான் சொன்னனான். கேட்டியா நீ? அவள்தான் வேணும் எண்டு ஒற்றக்கால்ல நிண்ட. இப்ப பாரு அவள் உன்னை வேணாமாம். தேவையாடா உனக்கு இது?”

நண்பனை ஒருத்தி நிராகரித்துவிட்ட கோபம் அவனுக்கு.

“டேய்! சும்மா கத்தாத! அந்தப் பிள்ளையோட நானே நேர கதைக்கிறன்.” என்றுவிட்டுப் போனவனை, இவனுக்கு என்ன விசரா பிடிச்சிருக்கு என்பதாகப் பார்த்தான் அசோக்.

‘இவன்ர பிடிவாதத்துக்கு மட்டும் அளவே இல்ல. அண்டைக்கும் அவள்தான் வேணும் எண்டு அந்த யாஸ்மின கட்டினான். இண்டைக்கு இவள்தான் வேணும் எண்டு நிக்கிறான்!’ என்றபடி அமர்ந்திருந்தான் அசோக்.

சமைக்க வேண்டும், மகளைக் குளிப்பாட்டி, அவளுக்கு உணவு கொடுத்து வேலைக்குப் போக வேண்டும். இதில் அழுக்கான உடைகள் வேறு தோய்க்கக் கிடந்தன. ஆனாலும் அப்படியே வராந்தைச் சுவரில் சாய்ந்து, தரையில் அமர்ந்திருந்தாள் அவள், யாமினி!

மரகதம் வந்து கேட்டதில் மனம் குழம்பியே போயிற்று.

‘என்னவோ கடவுளாப் பாத்துத் தாற அருமையான வாழ்க்கைய எட்டி உதைக்கிறேனாம் எண்டு சொல்லிப்போட்டுப் போறா. நான் கேட்டனானே எனக்கு வாழ்க்கை தாங்கோ எண்டு.’ மனம் புகைந்தது.

‘அவர் நல்லவராம், வல்லவராம், பூ மாதிரி என்னை வச்சுப் பாப்பாராம். உண்மையாவே இருக்கட்டும். எனக்கு விருப்பம் இல்லை எண்டு சொன்னா விடவேண்டியதுதானே. என்னத்துக்கு வற்புறுத்தோணும்?’ மனம் ஆறவேயில்லை அவளுக்கு.

அதைவிட இது என்ன வேதனை என்று இருந்தது. இனியும் எப்படித்தான் ஒதுங்கி இருப்பது என்றும் தெரியவில்லை.

‘யார பாத்தாலும் கல்யாணம் கல்யாணம் கல்யாணம்! ஒரு பொம்பிள தனியா இருந்திடக் கூடாதே! இவேக்குக் கண் பொறுக்காது!’ அங்கே சின்னதாகப் படங்களில் இருந்தவர்களைக் கண்ணீரோடு பார்த்தாள்.

‘இதே ஊருல எவ்வளவு மதிப்போட வாழ்ந்தோம். இண்டைக்கு என்ர நிலமையப் பாத்தீங்களா? நீங்க எல்லாரும் இல்லை எண்டதும் கேவலமாப் பாக்கீனம். என்னவோ எனக்கு வாழ்க்கை தாறாராம் அவர். அந்தளவு மோசமாப் போச்சாம்மா என்ர நிலைமை?’

சாந்தம் தவழும் முகத்தில் புன்னகையோடு தன்னைப் பார்த்த தாயிடம் கேட்டாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
தகப்பனைப் பார்த்தாள். எப்போதும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி வளர்த்த அப்பா. தீர்க்கமான பார்வையால் அவளுக்கு மீண்டும் பலத்தை உருவாக்கினார்.

‘நான் ஏனப்பா கவலைப் படவேணும்? கேக்கிறவன் கேட்டா எனக்கு என்ன. நான் எப்பிடி எண்டு எனக்குத் தெரியும். என்ர குடும்பத்துக்குத் தெரியும். வேற யாரும் வந்து சர்ட்டிபிகேட் தரத் தேவையில்ல.’ என்று தகப்பனிடம் சொன்னவளின் மனம் சற்றே தெளிந்தது.

கண்ணைக் கையால் துடைத்துக்கொண்டு எழும்பவும் விக்ரம் உள்ளே வரவும் திகைத்துப்போனாள்.

“யார்… யார் நீங்க?” மனம் கலங்கியிருந்ததில் குரல் தடுமாறி வந்தது.

“நான்தான் விக்ரம்.” என்றான் அவளையே பார்த்து.

‘ஓ…’ என்று திகைத்தாள் அவள்.

‘ஆன்ட்டி சொன்ன வெளிநாட்டு மாப்பிள்ளை’

அப்போதுதான் அவனையே பார்க்கிறாள். அவனானால் அவளைக் கல்யாணத்துக்கே கேட்டுவிட்டான்.

சட்டென அவள் முகத்தில் ஒருவித இறுக்கம். பார்வையில் கண்டிப்பு!

விழிகளை நேரே அவன் முகத்தில் வைத்து, “ஆன்ட்டிட்ட பதில் சொல்லிட்டேனே. பிறகு என்ன?” என்று கேட்டாள்.

அந்தப் பார்வை, அந்தக் குரல் வேறு யாரையும் அதற்குமேல் பேச விடாது. எல்லையைத் தாண்டாதே என்று எச்சரித்தது!

விக்ரம் அதை உணர்ந்து முறுவலித்தான்.

“காரணம் தெரியோணும். சும்மா வேண்டாம் எண்டால் எப்படி?” என்றான் அவனும் அவள் விழிகளையே பார்த்து.

“கல்யாணம் செய்ற எண்ணம் எனக்கு இல்ல.” முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னாள்.

“அதுதான் ஏன்?”

இதென்ன தொனதொனப்பு! மெல்லிய சினம் வர, “எனக்கு என்ர மகளே போதும்.” என்று அந்தக் குட்டியைப் பார்த்துச் சொன்னாள்.

இவன் பார்வையும் அவளிடம் சென்றது. இவன்தான் காரில் போய்வருகிறவன் என்று கண்டுகொண்டாள் போலும். கருமணிகளை உருட்டி உருட்டி அவனையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இங்க வாங்க செல்லம்.” தங்களின் பேச்சை விட்டுவிட்டு அவளை அழைத்தான்.

அவள் அசையாமல் இருக்க, “இங்க பாருங்கோ. செல்லத்துக்குச் சொக்லேட்ஸ். இந்தாங்கோ, ஓடிவந்து வாங்குங்கோ.” என்று ஆசை காட்டினான்.

அவள் விறுவிறு என்று தாயிடம் ஓட, இடையிலேயே மறித்துப் பிடித்துத் தூக்கிக்கொண்டான் விக்ரம்!

அவள் தாயை நோக்கி உதடுகளைப் பிதுக்கத் தொடங்கவும், “ஹேய் செல்லம்! இங்க பாருங்க, இங்க பாருங்க.” என்றபடி மேலே மேலே தூக்கிப்போட்டுப் பிடித்தான்.

உடம்பெல்லாம் கூசிவிட்டதில் கிளுக்கிச் சிரித்தாள் அவள். இரண்டு மூன்று தடவை அவன் அப்படிச் செய்யவும், அவளின் சிரிப்பு அந்த வீடு முழுவதுமே அலையலையாகப் பரவியது! அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கிச்சுக் கிச்சு மூட்டினான் விக்ரம். சின்னவளோ அடங்காமல் சிரித்தாள்.

தனக்குக் கிடைத்த புதுக் குதூகலத்தில் அவனோடு சேர்ந்துகொண்டாள் அந்தச் சுட்டி.

வெண் பற்கள் பளீரிட, மகளை மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடுகிறவனை அதிர்ந்துபோய்ப் பார்த்திருந்தாள் யாமினி.

அவளை ஒரு கையில் தூக்கி வைத்துக்கொண்டு, “சொக்லேட் வேணுமா செல்லத்துக்கு?” என்று அவன் பொக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுக்கவும், வாங்கி வாயில் போட்டுக்கொண்டாள். இதில் ஒரு கையால் அவன் கழுத்தை வேறு வளைத்துப் பிடித்துக்கொண்டிருந்தாள்.

பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அதிசயம்தான். லேசில் யாரிடமும் சேரமாட்டாள். அப்படிச் சேர்வதற்கு யாரும் இல்லையும் கூட! இவளும் குழந்தை விளையாடட்டும் என்று எங்கும் அனுப்பியதும் இல்லை. எல்லாமே அவளுக்கு இவள்தான். இன்று இவனோடு ஓட்டிக்கொண்டாளே!

அவள் குழந்தையையே பார்க்க, “உனக்கு இன்னொரு கல்யாணம் நடந்தா, வாறவன் இவாவை ஒதுக்கிப் போடுவானோ எண்டுற பயத்திலதான் மறுக்கிறாய் எண்டால், அந்தக் கவலை உனக்கு வேண்டாம். இனி இவாவும் எனக்கு மகள்தான். இவாவப் பிடிச்சதாலதான் உன்னயே கேக்கச் சொன்னனான்.” என்றான் அவன்.

விழிகள் ஆச்சரியத்தில் விரிய அவனைப் பார்த்தாள் அவள்.

அவளிடம் கட்டிக்கொள்ளச் சொல்லிக் கேட்கும் முதல் ஆண் இவன் அல்லன். இதற்கு முன்னே பலர்.

‘உன்னை நான் ராணி மாதிரி வைத்திருப்பேன்.’ என்று கேட்டவர் சிலர்.

‘கடைசிவரைக்கும் கைவிடமாட்டேன்.’ என்றவர் சிலர்.

‘இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படித் தனியாவே இருந்து கஷ்டப்படுவாய்.’ என்று ‘அக்கறை’ காட்டியவரும் உண்டு!

எல்லோருக்குமே அவள் மீதுதான் அக்கறையும் கவலையும் கவனமும் வந்தது. அவள் கூடவே இருக்கும் குழந்தை கண்ணில் படவேயில்லை. முதன் முதலாகக் குழந்தைக்காகத் தன்னை மணந்துகொள்ளக் கேட்டவனை மரியாதையோடு பார்த்தாள்.

“எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். பெயர் டெனிஷ்.” என்று சொல்லும்போதே அவன் இதழ்களில் அழகான புன்னகை ஒன்று மிளிர்ந்தது.

‘அப்பாவும் மகனும் நல்ல நெருக்கம் போல. மகன் பெயரச் சொல்லேக்கையே பாசத்துல குரல் குழையுது.’ தன்பாட்டுக்கு நினைத்துக்கொண்டாள்.

“அவனும் இவாவை மாதிரியேதான். ஒரு இடத்துல இருக்கமாட்டான்.” என்றான் அந்தக் குட்டியைப் பார்த்தபடி.

அந்தக் கண்களில் தெரியும் பாசமும் கனிவும் பொய்யில்லை. ஏனோ அவளுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. அவளைத் தவிர இந்தச் சின்ன மொட்டைப் பாசமாகக் கைகளில் ஏந்தியவர் யாருமே இல்லை.

என்றாலும் தன் முடிவில் உறுதியாக நின்றவள், “நீங்க வேற யாரையாவது பாருங்கோ. உங்களுக்குப் பொருத்தமா.” என்றாள் தெளிவாக.

“ஏன்? உன்னைப் பாத்தா என்ன?” தடாலடியாகக் கேட்டான் அவன். அதுவும் அவளையே பார்த்தபடி.

யாமினி முழித்தாள். என்ன கேள்வி இது. இதற்கு என்ன பதிலைச் சொல்வது? அவன் பார்வையில் வேறு அசௌகர்யமாக உணர்ந்தாள்.

எல்லோரிடமும் கடின முகத்தைக் காட்டுகிறவளால் மகளைத் தூக்கியபடி நின்று கேட்பவனிடம் முடியவில்லை. அதுவும் மகளும் அவன் தோளில் ஒய்யாரமாய்ச் சாய்ந்து கிடப்பதைப் பார்த்துக்கொண்டே.

“இல்ல… அது சரியா வராது. அதோட கல்யாணம் கட்டுற எண்ணமே எனக்கு இல்ல.” திரும்பவும் அழுத்திச் சொன்னாள்.

“ஏன் இல்ல? உனக்கு ஒண்டும் பெரிய வயது இல்லையே. என்ன ஒரு இருபத்தியேழு. இருபத்தியெட்டு இருக்குமா?”

“இருபத்தியாறு.”

“நான் நினைச்சதை விடச் சின்னப்பெண். பிறகு என்ன?”

‘முப்பதியிரண்டுக்கு இருபத்தியாறு ஓகே.’ மனம் கணக்கு போட்டது.

சற்றே சினம் துளிர்த்தது அவளுக்கு.

“திரும்ப திரும்ப இதென்ன கேள்வி? எனக்கு என்ர மகள் மட்டும் போதும். அவள் மட்டும்தான் என்ர வாழ்க்கை. ஒரு கல்யாணத்தக் கட்டி, அதால ஒரு பிரச்சினை வந்து அவளைப் பாதிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல. அப்பிடியெல்லாம் இல்ல அது இது எண்டு எதுவும் சொல்ல வேண்டாம். நான் யாரையும் நம்ப மாட்டன். எனக்கும் கல்யாணம் கட்ட விருப்பம் இல்ல. அதால என்ன விட்டுட்டு வேற யாரையும் பாருங்கோ!” என்று படபடத்தாள் அவள்.

பின்னே, எவ்வளவு நேரம்தான் பொறுமையோடு சொல்வது?

அப்படியே போய்விட்டால் அது விக்ரம் அல்லவே!

“எனக்கும்தான் மகன் இருக்கிறான். நாளைக்கு என்ன கைக்க போட்டுக்கொண்டு நீ அவன ஒதுக்கிவிட்டா என்ன செய்றது எண்டு நான் யோசிக்கேல்லையே.” என்றான்.

“நான் ஒண்டும் அப்படியான பெண் இல்ல!” கோபமாகச் சொன்னாள்.

“எனக்கும் அது தெரியும்!”

‘எப்படி?’ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

“நம்பிக்கை! இந்தச் சின்ன வயசில, எல்லாருக்கும் இருக்கிற ஆசாபாசங்கள் உனக்கும் இருக்கும். ஆனாலும் மகளுக்காகக் கல்யாணம் வேண்டாம் எண்டு கிட்டத்தட்ட சந்நியாசி மாதிரி வாழுற நீ, தோட்ட வேலைக்குப் போய் மகளைக் காப்பாத்திற நீ என்ர மகனையும் நல்லா பாத்துக்கொள்ளுவாய் எண்டுற நம்பிக்கை. அந்த நம்பிக்கைல தான் கேட்டனான். உன்ர மகளுக்கு அப்பா இல்ல. என்ர மகன் அம்மா இருந்தும் இல்லாம வாழுறான். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அதுகள் ரெண்டுக்கும் ஒரு முழுமையான குடும்பம் கிடைக்குமே. அதையேன் வேண்டாம் எண்டு சொல்லுறாய்?”

“என்ர பிள்ளைக்கு ஒரு அப்பாவ நான் தேடேல்ல. எல்லாமா இருந்து அவள நான் பாப்பன். உங்கட மகனுக்கு ஒரு அம்மா வேணும் எண்டா வேற யாரையும் நீங்க பாருங்கோ. ” என்றாள் தன் முடிவில் உறுதியாக.

ஆனால், எல்லாமாக இருந்து என்ர பிள்ளையை நான் பார்ப்பேன் என்று சொல்லும் அவளை எப்படித் தவற விடுவான் அவன்?

“திரும்பவும் சொல்றன். இந்தச் செல்லம்தான் எனக்கு முதல் பிடிச்சதே. அவாவில வச்ச பாசம்தான் உன்னக் கட்டோணும் எண்டுற முடிவ எடுக்க வச்சது. உன்ர முகத்தையே நான் இண்டைக்குத்தான் பாக்கிறன். நான் கேக்கிறது எனக்கு ஒரு மனுசிய மட்டுமில்ல. இந்தப் பிள்ளைக்கு அப்பாவா இருந்து எல்லாம் செய்ற சந்தர்ப்பத்தையும் எனக்குத் தா எண்டுதான். நல்லா யோசி. நல்ல முடிவாச் சொல்லு.” என்று சொல்லிவிட்டு அந்தக் குட்டியை இறக்கி விட்டுவிட்டு வாசல்வரை சென்றவன் நின்று திரும்பி, “இனி நான் வேற பொம்பிளை பாப்பன் எண்டு நினைக்கேல்ல.” என்றுவிட்டுப் போனான்.
 

Goms

Active member
Wow சீக்கிரம் பொண்ணு கேட்டுட்டானே. அவள் மனசை விக்ரம் மாத்துவானா?🤔
 
Top Bottom