• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 12

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 12


அந்த வீடு மழையடித்து ஓய்ந்தது போல் ஓய்ந்துபோயிருந்தது. அகரனுக்குத் தந்தையை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

இளந்திரையனுக்கு மகன், வருங்கால மருமகள் இருவர் மீதும் மிகுந்த கோபம். அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ வார்த்தைகளை விட அவர் ஒன்றும் அவர்கள் இல்லையே!

அதில், “சியாமளாவக் கூட்டிக்கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு வாங்க தம்பி!” என்று அகரனிடம் சொல்லிவிட்டு, ஆதினியைத் தேடி மாடி ஏறினார்.

எப்போதும் அன்பும் பரிவுமாக அரவணைத்துப் போகிறவர் அவளைத் திரும்பியும் பாராமல் சொல்லிவிட்டுப் போனதில் சியாமளாவுக்கு மளுக்கென்று கண்ணீர் இறங்கிற்று. அகரனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் முகம் இன்னுமே கோபத்தில் கடுத்திருந்தது.

இரு சக்கர வாகனத்தின் திறப்பை எடுத்துக்கொண்டு விருட்டென்று வெளியே நடந்தான். அவளை வா என்று அழைக்கவுமில்லை; வருகிறாளா என்று திரும்பிப் பார்க்கவுமில்லை.

திகைத்து நின்றாள் சியாமளா. அவளுக்கு ஆதினியின் மீது அவ்வளவாக நல்லபிப்பிராயம் இல்லை என்பது மெய்யே! இருந்தாலும் கூடத் தவறான எண்ணத்தில் எதையும் செய்யவில்லை.

அவளைத் திருத்தி, அண்ணனுக்கு ஏற்றவளாக மாற்ற வேண்டும் என்றுதான் நினைத்தாள். அது இப்படியாகிப் போனது. இப்போது குணம் கெட்டவள் போன்ற விம்பம் உருவாகியிருப்பது அவளுக்கு. இதில் அவனும் கோபப்பட்டால் என்ன செய்வாள்?

அவனது பைக், அவன் மனத்தைச் சொல்வது போல் உறுமிக் கேட்டது. நெஞ்சு நடுங்க ஓடிப்போய் ஏறிக்கொண்டாள். விருட்டென்று அவன் எடுத்த வேகத்தில் ஒரு முறை பின்னே சென்று வந்தவள் இறுக்கமாக அவன் தோளைப் பற்றிக்கொண்டாள்.

அகரனின் உள்ளம் தன் பின்னால் இருப்பவள் மீது உக்கிரம் கொண்டிருந்தது. அதை இருசக்கர வாகனத்தைச் செலுத்துவதில் காட்டினான்.

உணவகத்தில் வைத்து ஆதினியின் பொறுப்பற்ற தனங்களையும், தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என்கிற குணத்தையும், பக்குவமற்ற செயல்களையும் சியாமளா சொன்னபோது, அவளிடம்தான் கோபப்பட்டிருந்தான்.

ஆனால், திருமணத்தின் பிறகும் அவள் இப்படியே இருந்தால் எல்லாளனின் நிலை என்ன என்று சியாமளா கேட்டபோது, அவனிடம் பதில் இல்லாமல் போயிற்று.

இத்தனை நாள்களும் ஆதினியின் அண்ணாவாக மாத்திரமே அனைத்தையும் யோசித்து நடந்திருக்கிறான். அவளின் செயல்கள் அனைத்தையும், ‘சிறு பிள்ளைத்தனம்’ என்பதன் கீழ் மட்டுமே கொண்டுவந்து, ரசித்தும் இருக்கிறான்.

இன்று, தாய் தந்தையும் இல்லாமல், இருக்கிற ஒரே தங்கையைக் கட்டிக் கொடுத்துவிட்டுத் தனியாக இருக்கப் போகிற நண்பனின் இடத்திலிருந்து யோசித்தபோது, தங்கை அவனுக்குப் பொருத்தம் இல்லையோ என்று அவனுக்கும் தோன்றிவிட்டது.

அது அவனுக்குள் ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்திருந்தது. அது அவள் மீதா, இல்லை, அவளை அப்படி வளர்த்த அவர்கள் மீதா என்கிற தெளிவு அவனுக்கு வந்திருக்கவில்லை.

அந்தக் கோபத்தோடுதான் வீட்டுக்கு வந்து அமர்ந்திருந்தான். அதற்குத் தூபம் போடுவது போல் ஆதினியும் அடம் பிடித்து அகங்காரமாகக் கத்த, அவனும் வெடித்திருந்தான்.


*****

ஆதினியின் அறை இருளில் மூழ்கியிருக்க, அவள் கட்டிலில் சுருண்டிருந்தாள். கனத்துப்போன மனத்தோடு அவளருகில் வந்து அமர்ந்த இளந்திரையன், அவள் தலையை மெல்ல வருடிக்கொடுத்தார்.

ஆதினியின் விழிகள் உடைப்பெடுக்க ஆயத்தமாகின. ஆனாலும் அடக்கிக்கொண்டு கிடந்தாள்.

சும்மா இருந்த பெண்ணின் மனத்தில் தேவையில்லாத எண்ணங்களைப் புகுத்தி, இப்படிக் கண்ணீர் வடிக்க விட்டுவிட்டோமே என்று இளந்திரையனுக்கு மிகுந்த கவலையாயிற்று.

“அம்மா இல்லாமப் போயிட்டா எண்டு கவலைப் படுறீங்களாமா?” கனிந்தொலித்த அவர் குரல், அழக் கூடாது என்கிற அவளின் கட்டுப்பாட்டைத் தகர்த்து எறிந்தது. உடைந்து விம்மியபடி, “சொறி அப்பா!” என்றாள்.

அதற்கு ஒன்றும் சொல்லாமல், மெல்ல அவளைத் தேற்றினார். அழுகை நின்றதும் அருந்தத் தண்ணீர் கொடுத்து, நடந்தவற்றை முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

எல்லாளன், சியாமளா இருவரையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ்வில் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் தாங்கிப் பிடிக்க யாருமற்ற அநாதரவான நிலை அவர்களது. அதனாலேயே வயதுக்கு மீறிய பக்குவமும் பொறுப்பும் கவனமும் அவர்கள் இருவரிடமும் உண்டு. எப்போதுமே, வாழ்க்கையைத் தீவிரமாக நோக்குபவர்கள்.

ஆனால், ஆதினி அப்படியல்லள். தந்தையும் தமையனும் மட்டும்தான் என்றாலும் பிறந்ததில் இருந்தே செல்வாக்கும் செல்லமுமாக வளர்ந்த பெண். வாழ்க்கையை விளையாட்டாகப் பார்ப்பவள்.

இப்படி, வாழ்க்கை மீதான கண்ணோட்டம் இரு தரப்புக்கும் வேறு வேறு. அப்படியானவர்களை இணைக்க முயன்றது அவர் தவறோ? நெடிய மூச்சு ஒன்று அவரிடமிருந்து வெளியேறியது.

தன் வார்த்தைகளினாலோ என்று தவித்துப்போனாள் ஆதினி.
“சொறி அப்பா!” என்றாள் மீண்டும்.

அவர் முகத்தில் கண்களை எட்டாத மெல்லிய முறுவல்.

“அதெல்லாம் ஒண்டும் இல்ல. என்ன எண்டாலும் அப்பா உங்களுக்காக இருப்பன். உங்களுக்குப் பிடிக்காத எதையும் செய்யவும் மாட்டன், சரியா? மிச்சத்தை நாளைக்குக் கதைப்பம். எதையும் யோசிக்காமப் படுங்கோ!” என்றுவிட்டு எழுந்து போனார்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
போகிறவரையே பார்த்திருந்தவளுக்குக் கண்கள் கரித்துக்கொண்டு வந்தன. காரணமே இல்லாமல் காண்டீபனின் நினைவு வந்தது. அன்று, அவள் ஏனோ சரியில்லை என்று உணர்ந்தும், தன் கண்ணீரைப் பார்த்தும் எதுவும் விசாரிக்காமல், தலையைப் பிடித்து ஆட்டிவிட்டவனின் அருகண்மை வேண்டும் போலிருந்தது.

அவனோடு பேச நினைத்தாள். ஃபோன் நம்பர் இல்லை. அவன் பெயரைப் போட்டு கூகுளில் தேடியபோது மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அவனுடையதுதானா, அனுப்பினாலும் பார்ப்பானா என்று கேள்விகள் குடைந்தாலும், ஒரு முயற்சியாக, ‘அண்ணா, நான் ஆதினி. எனக்கு உங்களைப் பாக்கோணும். எங்க நிக்கிறீங்க?’ என்று எழுதி அனுப்பிவிட்டாள்.

*****

எல்லாளனின் வீட்டு வாசலில் தன் பைக்கை கொண்டுவந்து நிறுத்தினான் அகரன். அதுவரையில் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவில்லை.

சியாமளாவினால் அந்தக் கொடும் மௌனத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏதாவது கேட்டு, பேசி, திட்டி என்று அவன் தன் கோபத்தைக் காட்டிவிட்டால் பரவாயில்லை என்றெண்ணினாள்.

பைக்கிலிருந்து இறங்கி, அவன் முன் வந்து நின்று, “ப்ளீஸ் அகரன், நீங்களா ஒரு முடிவை எடுக்காம நான் சொல்லுறதக் கொஞ்சம் கேளுங்கோவன்!” என்று விழிகள் கலங்கக் கெஞ்சினாள்.

“ஓகே! நான் கேக்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. ஆதி சொன்னதெல்லாம் உண்மையா?”

அவன் குரலில் தென்பட்ட கடினம் கண்ணீரை வரவழைக்க, அவளின் தலை மிகுந்த பயத்துடன் மேலும் கீழுமாக அசைந்தது.

பார்வையாலேயே அவளை ஏறித்தபடி, “உன்ர கொண்ணனுக்கு அவளைக் கட்ட விருப்பம் இல்லையா? உனக்காகவா ஓம் எண்டு சொன்னவன்?” என்று, அடுத்த வினாவைப் பல்லைக் கடித்தபடி வீசினான்.

அப்படி இல்லை என்றுதான் அவன் சொன்னான். அப்படித்தான் என்பது அவளின் ஊகம். இதில் எதைச் சொல்லுவாள்? பதில் சொல்ல முடியாமல் இறைஞ்சுதலோடு அவனைப் பார்த்தாள்.

அதுவே அவன் கேள்வியின் பதில் என்ன என்று சொல்லி விட, “அந்தளவுக்கென்ன என்ர தங்கச்சி...” என்று சீற ஆரம்பித்தவன் அதையடக்கி, தன் தொடையிலேயே ஓங்கிக் குத்தினான்.

“ஐயோ அகரன்! என்ன செய்றீங்க?” பயந்து பதறினாள் சியாமளா.

“ஆக, திட்டம் போட்டுத்தான் அவளைப் பற்றி நீ என்னட்டக் கதைச்சிருக்கிறாய்!”

இதற்கு நேரடியான பதில் ஆம்தான். ஆனால், பொருள் அவன் நினைப்பதன்று! அவள் விளக்கம் சொல்வதற்குள் வண்டியை உதைத்துக் கிளப்பிக்கொண்டு சென்று மறைந்தான் அவன்.

*****

ஐங்கரன் டியூஷன் செண்டருக்கு எதிர்ப்புறத்தில் இருந்த பெட்டிக் கடையின் முன்னால் சின்ன கும்பல் ஒன்று கூடியிருந்தது. அங்கு வந்த எல்லாளன் யூனிஃபோர்மில் இல்லாத போதும், அவன் நடையும் பார்வையும் அங்கிருந்த மாணவர்களை விலகி நிற்க வைக்க, உள்ளே புகுந்தான்.

இரண்டு ஆண் பிள்ளைகள் கடைக்காரரோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தனர்.

“இங்க என்ன பிரச்சினை?” என்றான் அதட்டலாக.

“சொன்னாத் தீத்து வைப்பீங்களோ?” வாய்க்குள் இருந்த லொலிபொப்பை(lollipop) ஒரு பக்கமாகத் தள்ளிக்கொண்டு, கோணல் சிரிப்புடன் கேட்டான் ஒருவன்.

மற்றவன் இவனை யார் என்று இனம் கண்டுகொண்டான் போலும். “டேய் எரும! வாய மூடடா!” என்று சத்தம் இல்லாமல் நண்பனை அடக்க முயன்றான்.

“பொறடா மாமா! பிரச்சினையைத் தீத்து வைக்கப் போறாராமே. சொன்னாத்தானேடா தீத்து வைப்பார்.” அவன் நிதானத்தில் இல்லை என்று அப்பாட்டமாகத் தெரிந்தது. நிலையாக நிற்க முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தான்.

அவர்கள் இருவரையும் ஒற்றைப் பார்வையில் அளந்துவிட்டுத் திரும்பி, “இங்க என்ன கண்காட்சியா நடக்குது, கூடி நிண்டு பாக்க?” என்றான், கூட்டத்தைப் பார்த்து. அடுத்த நொடியே அடித்துப் பிடித்துக் கலைந்தது கூட்டம்.

இவன் நிற்கும் தைரியத்தில் கடைக்கார ஐயா கடையை விட்டு வெளியே வந்தார். “தம்பி, சிகரெட் கேட்டுச் சண்டை. இல்லை எண்டு எவ்வளவோ சொல்லீட்டன். கேக்கினம் இல்ல. கடையை உடைக்கப் பாக்கினம்.” என்று முறையிட்டார்.

“இதுக்கு முதல் எப்பயாவது வித்து இருக்கிறீங்களா?” கூர்மை மிகுந்த விழிகள் அவரைத் துளைக்க வினவினான் அவன்.

“இல்லத் தம்பி இல்ல! இதுவரைக்கும் ஆருக்கும் நான் வித்தது இல்ல. அந்த டியூஷன் செண்டர்ல படிக்கிற எந்தப் பிள்ளையை வேணுமெண்டாலும் விசாரிச்சுப் பாருங்கோ.” பயத்தில் வேகமாகச் சொன்னார்.

அவர் பொய் சொல்லவில்லை என்று புரிந்தது. இதற்குள், “சேர், இனி இப்பிடி நடக்கமாட்டம் சேர். சொறி சேர்!” என்றான், நிதானத்தில் இருந்தவன்.

அப்போதும் எதற்கென்று இல்லாமல் இளித்தான் மற்றவன். கண்களில் ஒருவிதப் பளபளப்பு. வியர்த்திருந்தான்.

“வாய்க்க இருக்கிற லொலிய வெளில எடு!” என்றான் எல்லாளன் அவனிடம்.

அதற்கும் கோணலாகச் சிரித்தான் அவன். “என்ர வாய். நான் காசு குடுத்து வாங்கின லொலி. அத எல்லாம் வெளில எடுக்கேலாது!” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, அவன் கன்னத்தில் பளார் என்று இறங்கியது, எல்லாளனின் கரம்.

லொலிபொப் வெளியே பறக்க, “அம்மா!” என்று அலறினான் அவன்.

“குடிச்சிருக்கிறியா?”

“இ…ல்ல.” கை கன்னத்தைப் பற்றியிருக்க நடுங்கினான்.

“அப்ப என்னடா ஆட்டம்? கிட்ட வா!” அவன் சட்டையைப் பற்றி அருகில் இழுத்து வாயை ஊதச் சொன்னான்.

கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிய வாயைத் திறந்தான் அவன். அதற்கே நாற்றம் பிடுங்கித் தின்றது. எல்லாளனுக்குள் மெல்லிய அதிர்ச்சி. மின்னலாக அவனது லொலி மீது பார்வை சென்று வர, கதிரவனுக்கு அழைத்து வரச் சொன்னான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து அவர்கள் இருவரையும் அள்ளிக்கொண்டு போனான் அவன்.

“ஆர் போலீசுக்கு சொன்னது?” விறுவிறு என்று அந்தப் பெட்டிக் கடைக்குள் புகுந்து, முழுக்கடையையும் அலசியபடி தன் விசாரணையை ஆரம்பித்தான்.

“நான்தான் தம்பி. பயத்தில…”

“இவன் எப்பவும் இப்பிடித்தானா?”

“எனக்கு வடிவாச் சொல்லத் தெரியேல்ல தம்பி. கொஞ்சம் பணக்கார வீட்டுப் பெடியன்தான். சேட்டைகளும் விடுவான். எண்டாலும் இப்ப கொஞ்ச நாளா ஆக மோசம். லொலி வேணும், ஊசி வேணும் எண்டு என்னென்னவோ கேக்கிறான். எனக்கு உண்மையா அதெல்லாம் என்ன எண்டு கூட விளங்கேல்ல.”

அப்போதுதான் சியாமளா அழைத்து நடந்ததைச் சொன்னாள்.

எரிச்சல் மிக, “இதுக்குத்தான் சொன்னனான், பேசாம இரு எண்டு! கேட்டியா நீ?” என்று எரிந்துவிழுந்தவனுக்கு இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று இதுவுமா என்று சலிப்பாயிற்று.
 

Gvijay1

Active member
First time padikkum pothu, story slowa poochu mam.. investigation scenes konjam Puriyala.. but ippo oru nalaike 4 epi padikurathala, scenes fasta move aaguthu... Thankyou mam.
 

Goms

Active member
கதையை ஏற்கனவே படிச்சு முடிச்சிருந்தாலும், திரும்ப படிக்கும்போது, இப்போ உங்க எழுத்துக்களை ரசிக்க முடியுது.
 
Top Bottom