• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 18

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 18


பல்கலைக் கழகத்தில் எப்போதும் அமரும் மரத்தடி வாங்கிலில் அமர்ந்திருந்தாள் ஆதினி. அவள் சிந்தை முழுக்க நிறைந்திருந்தவன் அஜய்.

இனிமையாகப் பழகுவான், மரியாதை மிகுந்தவன் என்று எண்ணியிருந்த ஒருவன் பொய்த்துப் போனானே. அவளை விடவும் சின்ன பெண்ணிடம் போய்…

“என்ன பலமான யோசனை?” அவள் சிந்தனைக்குள் ஊடு புகுந்தது காண்டீபனின் குரல்.

திரும்பி அவனைப் பார்த்தவள் விழிகளில் கேள்வியும் குழப்பமும்.

“என்ன?”

“நீங்க நல்லவரா கெட்டவரா?”

எந்த முலாமும் பூசப்படாத நேரடிக் கேள்வியில் ஒரு கணம் திகைத்துவிட்டுச் சிரித்தான் அவன்.

“திடீரெண்டு ஏன் இந்தச் சந்தேகம்?”

“கனகாலமா நண்பன் எண்டு நம்பிப் பழகினவன் முழுக் கெட்டவனா இருக்கிறான். என்னை மாதிரி இன்னொரு பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கைல விளையாடி இருக்கிறான். அதுதான் ஆர நம்புறது, ஆர நம்பக் கூடாது எண்டு தெரியுதே இல்ல.” என்றவள், “உங்கள நான் நம்பலாமா?” என்று, அதையும் அவனிடமே கேட்டாள்.

அதுவரை நேரமும் அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து போயிற்று. நீயும் உனக்குள் பல முகங்களை வைத்திருக்கிறாயா என்று கேட்கிறாள். முகத்தைத் திருப்பிப் பார்வையை எங்கோ பதித்தான். சற்று நேரம் அமைதியிலேயே கழிந்தது.

“தயவுசெய்து நீங்களும் கெட்டவனா இருந்திடாதீங்க அண்ணா. எனக்கு இப்ப எல்லாம் ஆரோட கதைக்கவும் பயமா இருக்கு.” என்றாள் கலங்கிப்போய்.

வேகமாகத் திரும்பி அவள் முகம் பார்த்தான் காண்டீபன். எப்போதும் தலையைக் கலைத்து விடுகிறவன் இன்று அவள் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தான். அதில், கலங்காதே என்கிற செய்தி இருக்க, ஆதினியின் மனம் தானாக அமைதியடைந்தது.

“இந்த நல்லவன் கெட்டவன எத வச்சுத் தீர்மானிக்கிறது?” என்று நிதானமாக வினவினான்.

இந்தளவுக்கெல்லாம் அவள் எங்கே யோசித்தாள்? பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள்.

“எல்லாருக்கும் நல்லவனா இருக்கிற வரம் எல்லாருக்கும் கிடைக்கிறேல்ல ஆதினி. எனக்கும் கிடைக்கேல்ல.”

அதைச் சொல்லும்போது அவன் குரலில் என்ன இருந்தது? அதைக் கண்டு பிடிக்கவும் அவளுக்குத் தெரியவில்லை. விழிகளில் பெரும் குழப்பம்.

அவன் மனம் கனிந்து போயிற்று. இந்த உலகத்தின் கொடூர முகத்தை அறியாதவள். அவள் கடந்து வந்த பாதையில் சூறாவளியோ, சுழற்றி அடிக்கும் காற்றோ வீசியதே இல்லை.

கூடப்பிறந்த தமையன் முதன் முறையாகக் கையை நீட்டியதற்கும், நெருங்கிப் பழகியவர்கள் விட்ட நான்கு வார்த்தைகளிலும் மனமுடைந்து, வெறுப்பின் விளிம்பில் ஓடிப்போய் நிற்கிறவளுக்கு, அவன் சொல்வதில் இருக்கும் உள்ளர்த்தம் விளங்கப்போவதில்லை.

ஆதூரத்துடன் அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்துவிட்டு, “நிறைய யோசிக்காத. உனக்கு நான் எண்டைக்கும் நல்லவன்தான், சரியா? சரி சொல்லு, என்னவாம் உன்ர எல்லாளன்?” என்று பேச்சை மாற்றினான்.

“அவர் ஒண்டும் என்ர எல்லாளன் இல்ல!” கடுப்புடன் வந்தது பதில்.

“இத அவனிட்டச் சொல்லி இருக்கிறியா?”

“ஏன், எனக்கென்ன பயமா? எப்பவோ சொல்லிட்டன்.” அலட்சியமாகத் தலையைச் சிலுப்பிக்கொண்டு சொன்னாள்.

“ஓ! அதுக்கு அவன் என்ன சொன்னவன்?”

அந்தக் கேள்வி அவன் ரோல்ஸைத் திணித்ததை நினைவூட்டி அவள் முகத்தைச் சூடாக்கிற்று.

அவளையே குறுகுறு என்று பார்த்துக்கொண்டு இருந்தவன், “என்னவோ வில்லங்கமாச் சொல்லியிருக்கிறான் போலயே!” என்றான் கேலி இழையோடும் உரலில்.

“சேர், நீங்க ஒரு வாத்தி. எழும்பிப் போய்ப் பாடம் எடுக்கிற வேலையப் பாருங்க. போங்க!” முகம் சிவக்கப் பொய்க் கோபத்துடன் துரத்தினாள்.

அவன் உதட்டோரத்தில் மெல்லிய முறுவல்.

“சேர்ர்ர்ர்ர்ர்...”

“சரிசரி விடு! உன்ர ரகசியம் உன்னட்டையே இருக்கட்டும். இப்ப சொல்லு, என்ன நடந்தது?” என்று கேட்டு, அஜயைப் பற்றித் தெரிந்துகொண்டான்.

அவள் மனது ஏன் குழம்பி இருக்கிறது என்று விளங்கிற்று. அதில், “அவனைப் பற்றி நிறைய யோசிக்காத. அவன் மட்டுமே இந்த உலகம் இல்ல. நிறைய நல்ல மனுசர் எங்களைச் சுத்தி இன்னும் இருக்கினம். என்ன, எப்பவும் கொஞ்சம் கவனமாவும் விழிப்பாவும் இரு, போதும்.” என்று சொன்னான்.

இப்போதும் அவளுக்கு அவன் சொன்னதன் முழுமையான அர்த்தம் பிடிபடவில்லை. அதில் உண்டான சலிப்புடன் எழுந்து, வாங்கிலில் இருந்த தன் பொருட்களைச் சேகரித்துக்கொண்டே, “என்னவோ தெரியா சேர். இனி ஆரையும் அவ்வளவு ஈசியா நம்புவனா தெரியாது. உங்களையும்தான்.” என்றாள்.

அவன் உதட்டினில் பொருள் விளங்காப் புன்னகை ஒன்று உதயமாயிற்று. ஒற்றைத் தலையசைப்பால் அவளைத் தன்னருகே அழைத்தான்.

வந்தவளிடம், அவள் கண்களையே பார்த்து, “கனவுல கூட இந்தக் குட்டிப் பிள்ளைக்கு ஒரு பாவமும் செய்ய மாட்டன். உனக்குத் தெரியாது, நீ எனக்கு எத்தினையோ வருசமாத் தணியாம இருந்த தாகத்தைத் தணிய வச்சுக்கொண்டு இருக்கிறாய். அதால, எந்தக் கவலையும் இல்லாமப் போ. நானே நினைச்சாக் கூட என்னால உனக்கு ஒரு தீமையச் செய்யேலாது.” என்றான், அவள் மனதை வருடும் பட்டுப் போன்ற மென் குரலில்.

ஆதினியின் மனம், மந்திரத்துக்குக் கட்டுண்டது போன்று அவன் வார்த்தைகளில் கட்டுண்டு நின்றது. அவன் சொன்னதற்குத் தலையசைத்துவிட்டுப் புறப்பட்டாள்.

கேட்டவள் போய்விட்டாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

கேள்வியை உள்வாங்கியவன் எங்கோ பார்வை நிலைகுத்தியிருக்க, அப்படியே அமர்ந்திருந்தான்.

அவனுடையது கலைப்பீடம். அவளுடையது சட்டம். இருவரும் சந்திக்கச் சாத்தியமும் இல்லை; அவசியமும் இல்லை. ஆனாலும் அவள் முகம் பார்க்கவும் அவளோடு பேசவும் என்று தினமும் வருவான்.

இன்றைக்கு அவள் அவனைத் தூக்கி அவனின் இறந்தகாலக் கிடங்கிற்குள் எறிந்துவிட்டுப் போய்விட்டாள். அதற்குள் மூழ்கப்போன மனத்தைப் பிடிவாதமாக வெளியே இழுத்துக்கொண்டு எழுந்து, தன் வகுப்பு நோக்கி நடந்தான்.

அங்கே ஒரு திருப்பத்தில் அழுது வீங்கிய முகத்துடன் அவனுக்காகக் காத்திருந்தாள் அஞ்சலி. ஒரு நொடி நடை நிற்கப் புருவங்களைச் சுருக்கியவன், வேகமாக அவளருகில் வந்து, “மாதவன் பிடிபட்டுட்டாரா?” என்று தாழ்ந்த குரலில் வினவினான்.

ஆம் என்று தலையை அசைத்தவளின் கன்னங்களில் கண்ணீர் உருண்டு ஓடியது.

ஒரு கணம் அமைதி காத்துவிட்டு, “இது எப்பயாவது ஒரு நாள் நடக்கும் எண்டு எதிர்பாத்ததுதானே? பிறகு என்ன? முகத்தைக் கழுவிக்கொண்டு விரிவுரைக்கு நடவும்!” என்றுவிட்டு அவளைக் கடந்து போனான் காண்டீபன்.

“நான் இண்டைக்கு வீட்டுக்குப் போகட்டா சேர்?”

முதுகுப்புறமிருந்து வந்த கேள்வியில் நடந்துகொண்டு இருந்தவன் நின்று திரும்பி, “போய்? என்ன செய்யப்போறீர்? தனியாக் குந்தி இருந்து அழப்போறீரா? இல்ல...” என்று இழுத்தான்.

அதற்குமேல் அவன் பார்வையை எதிர்கொள்ளத் தைரியமற்றுத் தலை குனிந்தாள் அஞ்சலி.

“பேசாம நடவும் வகுப்புக்கு!” என்று அதட்டியவன் மீண்டும் அவளருகில் வந்து, “தமயந்திக்குக் கொஞ்ச நாளைக்கு ஒண்டும் குடுக்க வேண்டாம். வீட்டிலயும் எதையும் வச்சு எடுக்காதயும். எல்லாளன் கொஞ்சம் அமைதியாகட்டும். லொலி கேட்டா சும்மா லொலிய குடும்.” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு நடந்தான்.

அன்று அவனுடைய விரிவுரைகள் நண்பகலோடு முடிந்திருந்தன. குறிப்பு எடுக்க வேண்டிய வேலை இருந்தது. எப்போதும் பல்கலைக்கழக நூலகத்தில் அமர்ந்துதான் அதை முடிப்பான். இன்று ஏனோ மனம் எதிலும் இலயிக்க மாட்டேன் என்றது.

ஆதினியின் கேள்வி, மாதவன் சிறைப்பட்டது என்று எல்லாம் சேர்ந்து அவன் அமைதியைக் குலைத்திருந்தது. காலையில் மாத்திரமே உண்டுவிட்டு வந்த வயிறு வேறு என்னைக் கவனி என்றது. பேசாமல் வீட்டுக்குப் புறப்பட்டான்.

உச்சி வெய்யில் இன்னுமே தணியவில்லை. மாமரத்தின் நிழலின் கீழே வண்டியை நிறுத்திவிட்டு வந்தவனை அமைதியான வீடே வரவேற்றது. பகல் என்பதில் பெரியவர்கள் இருவரும் உணவை முடித்துக்கொண்டு உறங்கியிருந்தார்கள்.

மனைவியைத் தேடி விழிகளைச் சுழற்றினான். அவள் உறங்கமாட்டாளே என்று எண்ணியவனின் எண்ணத்தை மெய்யாக்கிக்கொண்டு, வீட்டின் பின்பக்கமிருந்து வந்துகொண்டிருந்தாள் மிதிலா. இவனைக் கண்டதும் அவள் விழிகளில் மெல்லிய வியப்பு.

நீர்த் திவலைகளைச் சுமந்திருந்த முகமும், தோளில் கிடந்த துவாயும் அப்போதுதான் குளித்திருக்கிறாள் என்று சொல்ல, அவன் விழிகளில் ரசனை படர்ந்தது.

அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வேகமாக அறைக்குள் ஓடினாள் மிதிலா. கண்ணும் முகமும் சிரிக்க அவளின் பின்னே அறைக்குள் புகுந்து, சத்தமில்லாமல் கதவைச் சாற்றிவிட்டு அவளைப் பின்னிருந்து அணைத்தான்.

மிதிலாவுக்குத் தேகமெங்கும் நடுக்கமொன்று ஓடி மறைந்தது.

“நான் இன்னும் சாப்பிடேல்லை.” அவள் காதோரமாகச் சொன்னான்.

“உடுப்பை மாத்திக்கொண்டு வாங்கோ. சாப்பாடு போடுறன்.”

அவனிடமிருந்து நாசுக்காக விலக முயன்றபடி சொன்னவளைத் திருப்பி, தன் முகம் பார்க்க வைத்தான் காண்டீபன்.

“இது ஒரு வருசப் பசி எண்டு தெரியாதா உனக்கு?”

அவன் பார்வையில் தெரிந்த தீவிரத்தில் அவளுக்கு நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

“மாமா இப்ப எழும்பிடுவார்.” எழும்பாத குரலில் மெல்ல இயம்பினாள்.

“எழும்பினாக் கூப்பிடுவார். நான் இருக்கிறன் எண்டு தெரிஞ்சா அதுவும் செய்யமாட்டார்.” விடாப்பிடியாகச் சொன்னவனைக் கலவரத்துடன் நோக்கினாள் மிதிலா.

“உங்களுக்குப் பசிக்கேல்லையா?”

“பசிக்குது எண்டுதானே சொல்லுறன்.” பார்வை அவளைக் கொய்ய, வலிவும் வனப்பும் மிகுந்த நீண்ட விரல்கள் பட்டுக் கன்னத்தை வருடின.

எப்போதும் இப்படிப் பிடிவாதம் பிடிக்கமாட்டானே. மனம் தவித்தது. அலைபாய்ந்த விழிகள் என்னை விட்டுவிடேன் என்று கெஞ்சின.

அதற்குப் பதில்போல், “பொறுத்தது காணும் எண்டு நினைக்கிறன்மிதிலா.” என்றான் அவன்.

திக் என்றது அவளுக்கு. தேகம் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது. “ப்ளீஸ்.” விழிகளில் நீர் கோக்க இயலாமையுடன் கெஞ்சினாள்.

அவன் சொன்னது போல, அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடமாகப் போகிறது. இன்னுமே ஒருமித்த மனதாக அவனோடு இணைய முடியாமல் மனதெங்கும் ஆயிரம் கசடுகள்.

அவளின் யாசிப்பில் அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. “என்ன பிளீஸ்? சொல்லு! என்னத்துக்குப் பிளீஸ்? ஆரும் எங்கயும் ஆருக்காகவும் தேங்கி நிக்கேல்ல. அவே அவே, அவே அவேன்ர வாழ்க்கையைப் பாத்துக்கொண்டுதான் இருக்கினம். நீயும் நானும் மட்டும் அதே இடத்தில நிக்கிறதால இந்த உலகமும் நிண்டுடாது மிது. அது போய்க்கொண்டேதான் இருக்கும். விளங்குதா உனக்கு?” என்று அடிக்குரலில் சீறியவன், “இல்ல…” என்று ஏதோ சொல்ல வரவும் நடுங்கும் விரல்களால் அவன் உதட்டினை மூடி, தளும்பிவிட்ட விழிகளோடு சொல்லாதே என்று மறுத்துத் தலையசைத்தாள் மிதிலா.

“நான் ஆருக்காகவும் எதுக்காகவும் விலகி நிக்கேல்ல. எனக்கும் உங்களோட வாழோணும். நிறையக் காலம். நிறையப் பிள்ளைகளோட. ஆனா... இன்னும் கொஞ்ச நாள்... பிளீஸ் தீபன்.” என்றவளை அடுத்த நொடியே எலும்புகள் நொறுங்கிவிடுமோ எனுமளவுக்கு இறுக்கி அணைத்திருந்தான் காண்டீபன்.

தீபன்! ஆடிப்பாடித் திரிந்த காலத்தில் வாய்க்கு வாய் அவள் சொன்ன தீபனை மீண்டும் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு கேட்டிருக்கிறான். இது போதுமே! தன் மகிழ்வைச் சொல்லுகிறவனாக அவள் இதழினில் ஆழ்ந்து முத்தமிட்டான்.

நொடிகள் கரைந்தபின் நிறைவுடன் விலகி, “போய்ச் சாப்பாட்டைப் போடு! வாறன்.” என்றான், விழிகளினோரம் படர்ந்துவிட்ட மெல்லிய நீர்ப் படலத்துடன்.

அவள் முகத்திலும் கண்ணீரும் சிரிப்பும் ஒருங்கே மலர்ந்திருந்தன. சரி என்பதாகத் தலையை அசைத்துவிட்டுத் துள்ளிக்கொண்டு ஓடினாள்.
 
Top Bottom