• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 21

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 21


இருள் பரவ ஆரம்பித்த வேளையில்தான் வீட்டுக்கு வந்தான் காண்டீபன். அவன் முகமே சரியில்லை. யாரோடும் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான்.

“தம்பி ஏனம்மா ஒரு மாதிரி இருக்கிறான்?” தன்னிடம் கூட ஒரு வார்த்தை பேசாமல் சென்ற மகனைக் கவனித்துவிட்டு வினவினார் சம்மந்தன்.

“என்ன எண்டு எனக்கும் தெரியேல்ல மாமா. இருட்டுது, எங்க நிக்கிறீங்க எண்டு கேட்டு கோல் பண்ணின பிறகுதான் இப்பவும் வந்திருக்கிறார்.” என்றவளுக்கும் என்னவோ என்கிற யோசனைதான்.

பகலும் சாப்பிட வரவில்லை. கேட்டதற்கு வெளியே பார்த்துக்கொண்டதாகச் சொல்லியிருந்தான். இப்போது முகமும் சரியில்லை.

இப்படி ஓடிய யோசனைகளோடு அவனுக்குப் பிடித்த ஏலக்காய்த் தேநீரைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.

காண்டீபனின் மனம் ஒரு நிலையில் நில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. சிலவற்றை அவன் நினைப்பதே இல்லை. தன் மனத்தை மிக இறுக்கமாகப் பூட்டி வைத்திருப்பான். இன்றைக்குப் பார்த்த புகைப்படங்கள் அதை உடைத்துப் போட்டிருந்தன.

என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் சுழன்றடித்தன; விரும்பத்தகாத காட்சிகள் எல்லாம் விரிந்தன. காலம் ஆடிய கோரத் தாண்டவத்தில் வதைபட்டுப் போன நிகழ்வுகள் எல்லாம், அவன் தொண்டைக் குழியை நசித்தன.

அத்தனையையும் இறுக்கி மூடிய விழிகளுக்குள் அடக்கி, ஆழ் மனத்துக்குள் புதைக்க முயன்றான். வெற்றி கிட்ட மாட்டேன் என்றது.

ஆதினியிடம் அவன் சொன்னதெல்லாம் முழுப் பொய். மிதிலாவின் அன்னைக்கு எந்த வருத்தமும் இல்லை. அடுத்த அறையில் நிம்மதியான உறக்கத்தில் இருக்கிறார் அவர்.

அவனால் அவர்கள் முன்னே சென்று நிற்க முடியாது. அவர்கள் வாழ்வது அழகான கூடுகளில். சிதைந்து போன சித்திரத்துக்கு அங்கென்ன அலுவல்? அவனுக்கான சாபங்கள் அவனோடே முடியட்டும்.

மிதிலா ஏலக்காய்த் தேநீரோடு அறைக்குள் போனபோது,
அணிந்திருந்த உடையைக் கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்திருந்தான் காண்டீபன்.

அவள் வந்ததைக் கூட உணர்ந்தாற்போல் தெரியவில்லை.

அப்படி அவன் படுத்திருப்பது அவளை இன்னுமே கவலைக்குள்ளாக்கியது. அந்த வீட்டின் ஆணிவேரே அவன்தான். அவர்களை எல்லாம் ஆலமரமாகத் தாங்குகிறவனும் அவன்தான்.

தன் சிரிப்பால், கேலியால், சீண்டலால் அவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பவன். அங்கிருந்த மேசையில் கோப்பையை வைத்துவிட்டுச் சென்று அவனருகில் அமர்ந்தாள்.

அவளை அவன் உணராமல் இருக்கப் போவதில்லை. இருந்தும் முகத்தில் இருந்த கையைக் கூட விலக்கவில்லை. என்னவோ?

“தீபன், ஏன் இந்த நேரம் படுத்திருக்கிறீங்க?”

அவனிடம் பதில் இல்லை.

“தீபன்?”

விழிகளைத் திறந்து பார்த்தான்.

“என்னப்பா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” எப்போதும் சீண்டிச் சிரிக்கும் அந்த விழிகளில் தெரிந்த அலைப்புறுதலில் இவள் மனது கலங்கிப் போயிற்று.

ஒன்றும் சொல்லாமல் அவள் கையைப் பற்றி இழுத்தான் அவன். மார்பில் வந்து விழுந்தவளை அப்படியே வளைத்துத் திருப்ப, கட்டிலின் மறு பக்கத்துக்கு வந்து சேர்ந்தாள் மிதிலா. என்ன நடக்கிறது என்று அவள் உணரும் முன்னேயே, இறுக்கி அணைத்து அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்திருந்தான் அவன்.

“தீபன்?” பயமும் பதற்றமுமாக அழைத்தாள்.

“நீ வேணும் எனக்கு!” கரகரத்து வந்தது அவன் குரல்.

மிதிலாவின் அத்தனை அசைவுகளும் நின்று போயின. அணைப்பும் முத்தங்களும் அவர்களுக்குள் இருப்பதுதான். தன் ஆசையையும் மறைமுகமாகச் சொல்லுவான்தான். ஆனால், இந்த நேரடி வேண்டுதல்? இது புதிது.

அவன் முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்க்க முயன்றாள். அதற்கு மறுத்தபடி இன்னுமின்னும் அவளுக்குள் புதைத்தான் அவன்.

அவளும் விடவில்லை. “நீங்க முதல் என்னைப் பாருங்கோ. என்ன பிரச்சினை எண்டு சொல்லுங்கோ?” அவன் முகத்தைத் தாங்கித் தன்னைப் பார்க்க வைத்தபடி வினவினாள்.

“நிம்மதி வேணும். அமைதி வேணும். அதுக்கு எனக்கு நீ வேணும் மிதிலா. தரமாட்டியா?” இப்போது அவள் முகம் பார்த்தே வினவினான் அவன்.

திகைப்புடன் பார்த்தாள் மிதிலா. அவன் சுயத்தில் இல்லை; எதையோ எண்ணி அலைபாய்கிறான்; அவன் மனதுக்குள் பெரும் சூறாவளி வீசுகிறது என்று, தவிப்புடன் அவளிடம் படிந்திருந்த விழிகள் காட்டிக்கொடுத்தன. அப்படியிருக்க எப்படி மறுப்பாள்? சின்ன விம்மலோடு அவனைத் தன் மார்பில் சேர்த்தாள்.

அதற்காகவே ஏங்கிப்போயிருந்தவன் அவளை அள்ளியணைத்து ஆரத்தழுவி முகமெங்கும் முத்தமிட்டான். இதழோடு இதழ் பொருத்தினான்.

அவள் சூறாவளிக்குள் சிக்குண்டுவிட்ட சிறு இறகாகிப்போனாள். அவன் கைகளில் குழைந்து, வளைந்து, கடைசியில் கரைந்தேபோனாள்.

அவளின் இணக்கம் அவனை ஆட்டிப்படைத்த அத்தனை அலைப்புறுதல்களையும் மறக்கடித்தது. அவள் மாத்திரமே அவன் உலகமானாள். அந்த உலகத்துக்குள் தன்னை மொத்தமாகத் தொலைத்தான்.

சூழ்ந்துவிட்ட இருளும் தொந்தரவற்ற பொழுதும் அவர்களுக்குக் கை கொடுத்தது. அவளிடமிருந்து அவன் விலகியபோது, அடித்து ஓய்ந்த சூறாவளிக் காற்றைப் போன்று, அவன் மனமும் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்திருந்தது.

மிதிலாவின் மனதிலும் பெருத்த அமைதி. அதுநாள் வரையில் அவளைப் போட்டு மருட்டிய அர்த்தமற்ற பயங்கள் எல்லாம் காணாமல் போயிருந்தன. இவ்வளவு காலமும் அவளைச் சூழ்ந்திருந்த வெறுமை அகன்று, இன்றைக்கு நிறைவாக உணர்ந்தாள்.


இதற்கா நானும் பயந்து அவனையும் தவிக்கவிட்டோம் என்று நினைக்கையில், உதட்டினில் சின்ன சிரிப்புக் கூட முகிழ்த்தது.

அந்தச் சிரிப்புடனேயே விழிகளை மாத்திரம் உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் முகத்திலும் அவள் காண ஆசைப்பட்ட அமைதி தெரிந்தது. ஆசையோடு அவன் கன்னம் வருடினாள்.

கொஞ்ச நேரம் விழிகளை மூடி அதை அனுபவித்தவன் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். இருவர் பார்வையும் விலகாமல் கலந்தன.

அவள் புறமாகச் சரிந்து நெற்றியில் முத்தமிட்டு, “கோபம் இல்லையே?” என்று வினவினான் காண்டீபன்.

தலையை மறுப்பாக அசைத்துவிட்டு, “வெளில போறத இணைக்க வெக்கமா இருக்கு. மாமா என்ன நினைப்பார்?” என்றாள் அவள்.

இதுவரையில் இவ்வளவு நேரத்தை அவர்கள் இருவரும் மட்டுமாகத் தனியறையில் செலவழித்ததில்லை. அதுவே, அவர்களுக்குள் நடந்ததை அவரிடம் சொல்லிவிடுமோ என்று வெட்கினாள்.

அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு உண்டாயிற்று. “இப்ப தெரியாட்டியும் இனி இது அடிக்கடி நடக்கேக்க தெரிய வரத்தானே போகுது. அதால இதையெல்லாம் யோசிக்காத.” என்றான் அவன்.

எதிர்காலத்தைக் கோடிட்டுக் காட்டுகிறானா? வெட்கமும் சிரிப்பும் சேர்ந்து வர இன்னும் அவனுக்குள் ஒன்றினாள்.

நிமிடங்கள் சில கழிந்தும் அவன் அமைதியாகவே இருக்கக் கண்டு, “திரும்ப என்ன யோசிக்கிறீங்க?” என்று வினவினாள் மிதிலா.

“இப்போதைக்குப் பிள்ள வேண்டாம் மிது. கொஞ்ச நாள் போகட்டும். அவசரம் ஒண்டும் இல்லையே!”

அதைப்பற்றியெல்லாம் அவள் எங்கே யோசித்தாள்? அதில், “உங்கட விருப்பம்.” என்றாள்.

*****

அன்று காண்டீபனின் வகுப்புக்குச் சாகித்தியன் வரவில்லை. இது முதல் முறையுமன்று. கடந்த இரண்டு வாரங்களாக மற்ற வகுப்புகளில் இருப்பவன் காண்டீபனின் வகுப்பை மாத்திரம் தவிர்க்க ஆரம்பித்திருந்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால், அஜயை வவுனியா பல்கலைக்கு இவன் சேர்த்துவிட்டதிலிருந்து இப்படித்தான்.

அன்று, இவன் வகுப்பு ஆரம்பிக்க முதல் அங்கிருந்து வெளியேறியவனைக் காத்திருந்து பிடித்தான் காண்டீபன்.

“உமக்கு என்னில என்ன கோபம்?”

காண்டீபன் சாகித்தியனின் மிகுந்த மரியாதைக்குரிய விரிவுரையாளன். அவனிடம் நேரடியாகத் தன் கோபத்தைக் காட்ட முடியாமல்தான் இத்தனை நாள்களாகத் தவிர்த்துக்கொண்டிருந்தான். இன்று, அவனே பிடித்து வைத்துக் கேட்கையில் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று.

அதில், “நீங்க செய்தது சரியா சேர்? போலீசும் கோர்ட்டும் எங்களுக்கு நியாயமா நடக்கேல்ல எண்டு பாத்தா, நீங்களும் இப்பிடிச் செய்யலாமா சேர்?” என்று குமுறினான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஆரா இருந்தாலும் நல்லாருக்கோணும் எண்டுதான் ஆசைப்படுறன். அதுவும், நீங்க எல்லாருமே இளம் பிள்ளைகள். நேர் வழில படிச்சு, செய்த பிழைகளைத் திருத்தி, முன்னுக்கு வரோணும் எண்டு நினைக்கிறது பிழையா?” என்று பதில் கேள்வி கேட்டான் காண்டீபன்.

“அந்தளவுக்கு அவன் நல்லவனா சேர்?”

“கை பிடிச்சுத் தூக்கி விடவே கூடாத அளவுக்குக் கெட்டவனும் இல்ல.”

“அந்தளவுக்குக் கெட்டவன் இல்லை எண்டா அவன் செய்தது பெரிய விசயம் இல்ல எண்டு சொல்லுறீங்களா?” உண்மையில் சாகித்தியனால் இவர்கள் சொல்கிற நியாயத்தை விளங்கிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. மனம் அந்தளவில் கொந்தளித்தது.

“இங்க பாரும், அவனுக்கு அவாவைப் பிடிச்சிருந்திருக்கு. அதக் கூடச் சொல்லாம, அவா படிச்சு முடிக்கட்டும் எண்டு இருந்திருக்கிறான். எல்லை மீறிப் போனது பெரும் பிழைதான். அதை அவன் திட்டம் போட்டோ, கெட்ட எண்ணத்தோடயோ செய்யேல்ல. பிறகு அதைத் தொடரவும் இல்ல. அத வச்சு உம்மட தங்கச்சிய அவன் வேற எதுக்கும் மிரட்டவும் இல்ல. அதேமாதிரி அவா செத்ததுக்கு அவன் காரணம் இல்லை சாகித்தியன். அவா பழகின போதையும் அதால வந்த டிப்ரஷனும்தான் காரணம். அத விளங்கிக்கொள்ளும் முதல்!” என்று ஆசிரியனாக அழுத்திச் சொன்னான் காண்டீபன்.

ஆக, எல்லோருமே அவன் தங்கையின் மீதுதான் தவறு என்கிறார்கள். மனம் வெறுத்துவிட, “ஓகே சேர். நான் போகவா?” என்றான் சாகித்தியன்.

“எனக்கு நீரும் அவனும் ஒண்டுதான் சாகித்தியன். இது எல்லாத்துலயும் இருந்து வெளில வந்து, நீர் நல்லாருக்கோணும் எண்டு எப்பிடி நினைக்கிறேனோ அப்பிடித்தான், அவனையும் நினைக்கிறன். இங்க அவனால படிக்கேலாது. அவனைத் தினமும் பாத்துக்கொண்டு உம்மாலயும் நிம்மதியாப் படிக்கேலாது. உமக்கு இருக்கிற கோவத்துக்கு நீர் அவனோட சண்டை சச்சரவுக்குப் போய், உம்மட வாழ்க்கையும் பாத மாறிப் போயிடக் கூடாது எண்டு, உம்மப் பற்றியும் யோசிச்சிட்டுத்தான் அவனை மாத்திவிட்டனான்.” என்றான் கடைசியாக.

“ஆர் என்ன சொன்னாலும் நம்பின எல்லாருமே கைய விட்டுடீங்க சேர்!” என்றான் அவன், மனம் விட்டுப் போன குரலில்.

“என்ன கதைக்கிறீர் நீர்? அப்பிடிச் செய்வமா? நீர் முதல், இந்தப் பிரச்சினைகளுக்க இருந்து கொஞ்சம் வெளில வந்து யோசியும். அப்ப எல்லாம் விளங்கும். அதைவிட, படிப்பில கவனத்தைச் செலுத்தும். முடிஞ்சதையே பிடிச்சுக்கொண்டு தொங்கி, தயவு செய்து உம்மட எதிர்காலத்தைப் பாழாக்கிப் போடாதயும்.” இதையெல்லாம் உள்வாங்கிக்கொள்ளும் அளவு நிதானத்தில் அவன் இல்லை என்று தெரிந்தாலும், தன்னால் முடிந்ததாக அவனுக்குப் புத்தி சொன்னான் காண்டீபன்.

*****


பல்கலைக்கழகத்தில் என்றும் போல் அன்றும் ஆதினியைத் தேடிக்கொண்டு வந்தான் காண்டீபன். புருவம் சுருக்கிக் கேள்வியாகப் பார்த்தாள் ஆதினி.

“என்ன, பார்வை எல்லாம் பலமா இருக்கு?”

“உங்கட டிப்பார்ட்மெண்ட்ல உங்களுக்கு வேலையே இருக்காதா?”

“இருக்காதே!” சின்ன சிரிப்புடன் சொன்னவன் அவள் மடியில் இருந்த, ‘டிபன் பொக்ஸை’ இயல்பாக எடுத்து, என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தான்.

புட்டுக்கு நல்லெண்ணையில் பொரித்த முட்டைப் பொரியலும் இரண்டு பொரித்த மிளகாய்களும் இருந்தன. “வாவ்! பாக்கவே வாயூறுதே!” என்றபடி அதை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க,
“நான் என்ன உன்ர மிதிலா அக்காவ விட வடிவாவா இருக்கிறன்? இந்தப் பார்வை பாக்கிறாய்?” என்றான் சிரிப்புடன்.

“நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்குமாம்!” என்று தலையைச் சிலுப்பிவிட்டு, “ஒவ்வொரு நாளும் என்னைத் தேடிக்கொண்டு வாறீங்க. என்ன விசயம்?” என்றாள் அவள்.

“இதத்தான் இவ்வளவு நேரமா யோசிச்சியா?” என்று கேட்டுச் சிரித்தான் அவன்.

“சிரிச்சுச் சமாளிக்காம உண்மையைச் சொல்லுங்க அண்ணா!”

அதற்கான பதில் போன்று அவர்கள் அமர்ந்திருந்த வாங்கிலில் இருவருக்கும் நடுவில் இருந்த சில பேப்பர்களை கண்ணால் காட்டினான் காண்டீபன்.

எடுத்துப் பார்த்தாள். அவை, கொழும்பு சட்டக் கல்லூரியில் அனுமதி கோருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் என்றதும் அவள் விழிகள் வியப்பில் விரிந்து போயின.

அவளே கவனமில்லாமல் விட்டிருந்த ஒன்றை அவன் மறக்காமல் செய்திருக்கிறான். அவள் உள்ளம் நெகிழ்ந்து போயிற்று.

இதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தான் அவன். அவளின் தண்ணீர் போத்தலையே எடுத்து, கையையும் டிஃபன் பொக்ஸையும் கழுவிவிட்டு, அண்ணாந்து கடகட என்று தண்ணீரைப் பருகினான். கழுவிய டிஃபன் பொக்ஸை மூடி அவளிடம் கொடுத்துவிட்டு,

“கொழும்பில இருக்கிற பல்கலைக்கழகம் போகாத. அங்க போனா நீ லோயரா வெளில வாறதுக்குக் குறைஞ்சது நாலு தொடக்கம் அஞ்சு வருசம் ஆகும். அதே, இலங்கை சட்டக் கல்லூரில சேர்ந்தா மூண்டு மூண்டரை வருசத்தில லோயர் ஆகிடலாம். அதுக்கான என்ட்ரென்ஸ் எக்ஸாம் வரப்போகுது. அந்த போர்ம்தான் இது. டேட் முடிய முதல் நிரப்பி அனுப்பு. இப்ப நீ இங்க ஒரு வருசம் முடிச்சிருக்கிறாய். அங்க நேரா செக்கண்ட் இயர் போகலாமா, இல்ல, அதுக்கு ஏதாவது எக்ஸாம் எழுதோணுமா எண்டு உன்ர அப்பாவைக் கேள். ஓம் எண்டுதான் கொழும்பில இருக்கிற என்ர பிரெண்ட் விசாரிச்சுச் சொன்னவன். எண்டாலும், உன்ர அப்பாக்கு அது இன்னும் வடிவாத் தெரிஞ்சிருக்கும். சோ, அவரிட்ட மறக்காமக் கேட்டு, ஓம் எண்டு சொன்னா, அதுக்கும் ரெடியாகு. மூண்டு வருசப் படிப்பை முடிச்சு, ஃபைனல் எக்ஸாம் எழுதிப்போட்டு, ஒரு ஆறு மாதம் பயிற்சிச் சட்டத்தரணியா ஒரு லோயரிட்ட வேலை பார். பிறகு என்ன, உயர் நீதிமன்றத்தில சட்டத்தரணியா சத்தியப் பிரமாணம் செய்ததும் சட்டப்படியான லோயர் ஆகிடுவாய்!” பெருமிதத்துடன் சொன்னவனை உள்ளம் நெகிழப் பார்த்தாள் ஆதினி.

“யோசிச்சுப் பார், இன்னும் மூண்டு, மூண்டரை வருசத்தில, கறுப்புக் கோட்ட மாட்டிக்கொண்டு, யுவர் ஓனர் எண்டு உன்ர அப்பாக்கு முன்னால நிண்டா எப்பிடி இருக்கும்?” அவள் குறித்தான பெரும் கனவைத் தன் விழிகளில் சுமந்தபடி சொன்னான் அவன்.

சில கணங்களுக்கு இமைக்காது அவனையே பார்த்தவள் அவன் கையைக் கட்டிக்கொண்டு, அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவளுக்கு அழ வேண்டும் போலிருந்தது. ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தாள்.

“டோய், என்ன?” உதட்டில் தரித்த மென் சிரிப்புடன் வினவினான் அவன்.

“தெரியா அண்ணா. உங்கள்ள இன்னுமின்னும் பாசம் வருது.” என்றாள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து.

“நல்ல விசயம்தானே!” என்றவன், “முக்கியமான விசயம், கொழும்பில எங்க தங்குறது, எப்பிடிப் போய் வாறது எண்டுறதைப் பற்றி அப்பாட்டக் கதை. அதே மாதிரி, அங்க இருக்கிற நல்ல லோயர் ஆரிட்டையாவது சும்மா ஹெல்ப்புக்கு இப்பவே போ. அது உனக்கு இன்னும் ஹெல்ப்பா இருக்கும். நிறைய அனுபவம் கிடைக்கும். கொழும்பில இருந்து திரும்பி வாற ஆதினி, சாதாரண ஆதினியா வரக் கூடாது. வழக்கறிஞர் ஆதினியாத்தான் உன்ன நான் பாக்க ஆசைப்படுறன், சரியா?” என்றான்.

“கட்டாயம் நடக்கும் அண்ணா. அந்த எள்ளுவயலின்ர வாய்க்காகவே நான் ஒரு லோயர் ஆகியே ஆகோணும்!” என்று சூளுரைத்தாள்.

“அவன் என்ன செய்தவன் உனக்கு?”

“என்ன செய்தவனா? வண்டு முருகனாக் கூட வரமாட்டேனாம் எண்டு சொன்னவன். அவனையெல்லாம்...”

“இதென்ன அவன் இவன் எண்டு? மரியாதையாக் கதைக்கப் பழகு!” சட்டென்று அதட்டினான் அவன்.

முகம் சுருங்க, “நீங்களும் அவரை மாதிரியே சொல்லுறீங்க.” என்றாள் ஆதினி.

“சொல்லாம? அவன் நல்ல பதவில இருக்கிறவன் எல்லா? இப்பிடிக் கதைச்சா நாளைக்கு அவனை ஆராவது மதிப்பீனமா?” என்றான் அப்போதும் மெல்லிய அதட்டலோடு.

அப்படி, அவனும் தன்னிடம் கோபப்படுவது பிடிக்காமல் அவள் முகம் திருப்ப, “ஒரு லோயர் எந்த இடத்திலையும் நிதானம் இழக்கக் கூடாது. கோபத்தையோ குமுறலையோ காட்டக் கூடாது. நீ என்ன நினைக்கிறாய், உனக்குள்ள என்ன ஓடுது எண்டு எதிராளிக்குத் தெரியவே கூடாது. அத விட்டுப்போட்டு நீ இப்பிடி இருந்தா அவன் சொன்ன மாதிரி...” என்றவன் மிகுதியைச் சொல்லாமல் சிரிக்க, “உங்களை…” என்றவளுக்கு அவன் கழுத்தை நெரிக்கும் கோபம்.

வாய்விட்டுச் சிரித்தான் காண்டீபன். “அதெல்லாம் சும்மா. உன்ர அப்பான்ர வாரிசு நீ. விறைப்பான லோயரா வருவாய், சரியா? இப்ப எழும்பி வகுப்புக்கு நட. நேரமாச்சு!” என்றுவிட்டுப் புறப்பட்டான் காண்டீபன்.
 

Goms

Active member
ஆதினிக்குள் கனவுகளை விதைக்கத் தொடங்கிவிட்டான் காண்டீபன்
 
Top Bottom