நீ தந்த கனவு - 33

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 33


கடந்த மூன்று வருடங்களாக எல்லாளனோடு இணைந்து பணியாற்றுகிறான் கதிரவன். அவன் ஒரு வழக்கை எப்படிக் கையாள்வான், எப்படியெல்லாம் கொண்டுபோவான், சந்தேகிக்கும் குற்றவாளிகளை என்ன விதமாக மடக்குவான் என்பதெல்லாம் கதிரவனுக்குத் தெள்ளத் தெளிவு! அப்படியான எல்லாளனின் விசாரணைகள் எப்படி இருக்கும் என்றும் தெரியும்.

இன்று காலையில் நடந்ததும் அப்படியான கடுமை மிகுந்த ஒரு விசாரணைதான். ஒரு விரிவுரையாளனாக இருந்துகொண்டு தன்னிடம் கற்ற மாணவிக்குப் போதை மருந்தைப் பழக்கியிருக்கிறான் என்று அறிந்ததிலிருந்து, கதிரவனுமே உக்கிரம் கொண்டிருந்தான்.

அப்படி இருக்கையில்தான் பகல் பொழுதில் சாதாரண உடையில் காவல் நிலையத்திற்கு மீண்டும் வந்திருந்தான் எல்லாளன். முதலில் அதனை அவன் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், அதன் பிறகு நடந்தவை? நடந்துகொண்டு இருப்பவை?

அவன் மட்டுமல்ல, அன்றைக்குப் பணியில் இருந்த அனைவருமே அந்தச் சிறை அறையைத்தான் நம்ப முடியாமல் திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தனர். நடப்பது புதிது மாத்திரமன்று, எல்லாளனின் இளகிய சிரிப்பும் பேச்சும் கூடப் புதிதாய் இருந்தன.

அதிலிருந்தே அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று அறிய முடிந்தது. அப்படியான நண்பனையா காலையில் அத்தனை கடினத்தோடு கையாண்டான் என்று நினைக்கையில், எல்லாளன் மீதான மதிப்பும் மரியாதையும் இன்னுமே அதிகமாயிற்று. கூடவே, எல்லாளனின் மனத்துக்கு இந்தளவில் நெருக்கமான ஒருவன், இப்படியான காரியங்களில் ஈடுபடுவானா என்கிற கேள்வியும் குடைந்தது.

நேரம் போய்க்கொண்டிருந்தது. அவனுக்கான அடுத்த கட்டளைகள் என்ன என்று தெரியாது. அவர்களுக்குள் இடையிட்டுக்கொண்டு போக மனமற்று, அங்கேயே குட்டி போட்ட பூனை போன்று சுற்றிக்கொண்டிருந்தான்.

இதை, எல்லாளன் கவனித்திருக்க வேண்டும். “கதிரவன்!” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான்.

“சேர்!” அடுத்த நொடியே அவன் முன்னே நின்றான்.

“இவன், என்ர சின்ன வயசு நண்பன், காண்டீபன்.”

“ஹாய் சேர்!” என்றான் சிறு தலையசைப்புடன்.

அந்த மரியாதை எல்லாளனினால் தனக்குக் கிடைக்கிறது என்று உணர்ந்து, “ஒரு குற்றவாளிக்கான மரியாதையே போதும் கதிரவன்.” என்றான் காண்டீபன் சிறு புன்னகையோடு.

அதுவே அவன் குணத்தைச் சொல்ல, “ஓகே சேர்.” என்றான் இப்போது, இறுக்கங்கள் அற்ற இயல்பான சிரிப்போடு.

“ஏதும் அவசர வேல இருக்கா?” என்று விசாரித்தான் எல்லாளன்.

“மாதவன், அஞ்சலிக்கு அடுத்த ஸ்டெப் என்ன எண்டு சொன்னா, அதப் பாப்பன் சேர். சாகித்தியனும் இன்னும் இஞ்சதான் இருக்கிறான். மற்றது…” என்று இழுத்துவிட்டு, “ஆதினி மேம் இன்னும் மூண்டு மணித்தியாலத்தில வந்திடுவா. கூப்பிடப் போகோணும் எண்டு சொன்னீங்க.” என்று, அதையும் நினைவூட்டினான்.

“ஓ, அதுக்கிடையில அவ்வளவு நேரம் போயிற்றுதா?” கேட்டுக்கொண்டே கைக் கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான். அதுவும், ஆமாம் என்றது.

“ஓகே! நீங்க...” என்றபடி நிமிர்ந்தவனுக்குக் கதிரவன் பயபக்தியுடன் ஆதினியைப் பற்றிச் சொன்னது அப்போதுதான் கவனத்திற்கு வந்தது. முறுவல் அரும்ப, “உனக்குத் தெரியுமா, கதிரவனும் ஆதினியும் திக் ஃபிரெண்ட்ஸ்.” என்றான் காண்டீபனிடம்.

“சேர்!” என்று கதிரவன் அதிர, “எனக்கும் தெரியும். அவவின்ர ஸ்கூட்டியை விழுத்திப்போட்டு இவர் பட்ட பாட்டப் பாத்தனான்.” என்று சிரித்தான் காண்டீபன்.

அந்த நாள் கதிரவனுக்கு மறக்குமா? என்ன சொல்வது என்று தெரியாது திணறி நின்றான்.

“நீங்க நினைக்கிற அளவுக்கெல்லாம் அவா இல்ல கதிரவன். அருமையான பிள்ளை. இவன்தான் சும்மா சும்மா அவாக்கு எதையாவது சொல்லிக் கோபப்படுத்தி, அவாவையும் பதிலுக்கு எதையாவது செய்ய வைக்கிறது. பிறகு, அவாவைப் பிழை சொல்லுறது. நீங்க கொஞ்சம் ஃபிரெண்ட்லியா மூவ் பண்ணிப் பாருங்க. உங்களுக்கு நல்ல ஒரு நண்பி கிடைப்பா!” என்றான் காண்டீபன்.

அவளோடு ஒரு நட்பா? நினைக்கையிலேயே அவன் நெஞ்சம் ஆட்டம் கண்டது. அதைக் காட்டிக்கொள்ளாமல், “ஓகே சேர்.” என்றான்.

அவனுடைய பாவனையில், அடுத்த ஐந்து வருடத்தில், எல்லாளனின் அடுத்த பதிப்பாக அவன் இருப்பான் என்று தெரிய, “கொஞ்சம் இலகுவா இருங்க கதிரவன். இவனோட சேர்ந்து சேர்ந்து உங்களுக்கும் இவன்ர குணம் வருது எண்டு நினைக்கிறன்.” என்ற காண்டீபனைக் கதிரவனுக்கு மிகவுமே பிடித்துப் போனது.

கதிரவனை அனுப்பிவிட்டு, நேரமாவதை உணர்ந்து எழுந்து கொண்டான் எல்லாளன். இனி அவன் போக வேண்டும்; இருக்கும் வேலைகளைப் பார்க்க வேண்டும். ஆனால் காண்டீபன்? அந்தச் சிறைக்குள் வரும் போது இருந்த இறுக்கம், மீண்டும் அவனைக் கவ்விக்கொண்டது.

அவன் நினைத்தால் கைது செய்த அடையாளமே தெரியாமல் வெளியே விட்டுவிட முடியும். ஆனால், சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டவன் அவன். அவனால் அது நிச்சயம் முடியாது! ஆனால், இனி நடக்கப் போகிறவை? மீண்டும் தனக்குள் போராட ஆரம்பித்தான்.

அப்போதுதான் மின்னலாக வெட்டியது அந்த விடயம். “டேய் உன்னைப் பற்றிச் சத்தியநாதனுக்கு ஏதும் தெரியுமா?” என்றான் அவசரமாக.

“எனக்கு எப்பிடியடா அது தெரியும்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

“நிச்சயமா அவனுக்கு என்னவோ தெரிஞ்சிருக்கு!” என்றவனுக்கு இப்போதுதான் அனைத்தும் புரிவது போலிருந்தது.

தன் நிலைக்குக் காண்டீபன்தான் காரணம் என்று தமயந்தி நிச்சயமாகச் சத்தியசீலனிடம் சொல்லியிருப்பாள். அவன் காண்டீபன் ஏன் இதைச் செய்தான் என்று தேடிப் போயிருப்பான். அதில், அவனுக்கும் எல்லாளனுக்குமான உறவை இலகுவாகவே அறிந்திருப்பான். அதனால்தான் இந்த வழக்கை இவன் புறம் தள்ளி இருக்கிறான். மனம் உள்ளூர அதிர்ந்து அடங்கிற்று.

இவ்வளவு தானா? அல்லது, இதற்கு மேலும் போவானா? கலங்கிப்போனான் எல்லாளன்.

அவன் முகம் சரியில்லை என்று கண்டு, “அளவுக்கதிகமா என்னை மனதுக்க எடுக்காத மச்சான். இதெல்லாம் தெரியாம நான் எதையும் ஆரம்பிக்கேல்ல. அதால எல்லாத்துக்கும் ரெடியாத்தான் இருக்கிறன். உன்னைப் பாத்திட்டன், உன்னோட கதைச்சிட்டன். இனி எனக்காக நீயும் இருக்கிறாய். அவ்வளவும் போதும்.” என்றான் காண்டீபன்.

எல்லாளனுக்கு அது போதாதே! மனத்தில் இருப்பத்தைச் சொல்லி, அவனைக் கலங்கடிக்க விருப்பம் இல்லை. அவன் மனது, கடமைக்கும் நட்புக்கும் இடையில் கிடந்து அல்லாடியாது.

“டேய்! என்னைப் பற்றி யோசிக்காம ஆதினியப் போய்ப் பார். அவளோட இந்த நாளைக் கொண்டாடு! போ!” என்று துரத்தினான் காண்டீபன்.

அதற்குப் பதிலேதும் சொல்லாது, காண்டீபனை நோக்கிக் கைகளை விரித்தான் எல்லாளன். மெல்லிய திகைப்புடன் அவனையும் அவன் விரித்திருந்த கரங்களையும் பார்த்த காண்டீபனின் முகம் கலங்கிப்போயிற்று. வேகமாக விழிகளை அகற்றிக்கொண்டான். தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.

“டேய், வாடா!”

“இல்ல மச்சான், நீ போ!”

“இப்ப வரப் போறியா இல்லையா நீ?”

காண்டீபனின் நிலை மிக மோசமாகிக்கொண்டிருந்தது. நண்பனைப் பார்க்க மறுத்தான்.

“என்ன நடந்தாலும் சரி, நீ வராம இஞ்ச இருந்து நான் போகமாட்டன்!” உறுதியான குரலில் சொன்னான் எல்லாளன்.

வேறு வழியற்று, மனமே இல்லாமல் எழுந்து, எல்லாளனின் அணைப்புக்குள் வந்தான் காண்டீபன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனைப் போல் அல்லாமல் ஆரத்தழுவிக்கொண்டான் எல்லாளன். உள்ளுக்குள் தவிக்கும் மனத்தை ஆற்றுப்படுத்தும் அளவுக்கு இறுக்கி அணைத்தான். இளம் வயதில் உணர்ந்த நண்பனின் அந்தத் தேகச் சூடு, மனத்தை நிறைத்தது.

நொடிகள் சில கடந்த பின், அவனைத் தன் முகம் பார்க்க வைத்து, “உன்னைத் தேடி வரேக்க, நீயா இப்பிடி எண்டு அதிர்ச்சியா இருந்தது. உன்ன நல்லா சாத்திற(அடிக்கிற) அளவுக்கு ஆத்திரமும் இருந்தது. ஆனா இப்ப சொல்லுறன், உன்ர கைல படிஞ்சிருக்கிற அந்தக் கறைல எனக்கும் பங்கிருக்கு. உன்ர இந்த நிலைக்கு நானும்தான் காரணம். உங்களை எல்லாம் தேடி நான் வந்திருந்தாப் போதும். இதெல்லாம் நடந்திருக்காது. சரி விடு, நடந்ததை மாத்தேலாது. ஆனா, சட்டத்துக்கு மாறா நான் எதுவும் செய்ய மாட்டன் மச்சான். அது உனக்கும் பிடிக்காது எண்டு எனக்குத் தெரியும். எப்பிடியும் நீ தண்டனை அனுபவிக்க வேண்டித்தான் வரும். அதை என்னால முடிஞ்ச வரைக்கும் குறைக்கப் பாக்கிறன். மாமா, மாமி, மிதிலா, குழந்தை எண்டு ஆரைப் பற்றியும் கவலைப்படாத. நான் இருக்கிறன்.” என்றதும் அவனைப் பாய்ந்து அணைத்துக்கொண்டான் காண்டீபன்.

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் விழிகள் கலங்கிப் போயின. அதோடு எல்லாளனின் முகம் பார்த்துச் சிரித்தான்.

“தெரியும் மச்சான். நீ இருக்கிறாய் எண்டுற நம்பிக்கைலதான் நானும் இஞ்ச பயமில்லாம இருக்கிறன். மிது… மிது இன்னுமே வெளி உலகத்துக்கு முகம் காட்டப் பயப்பிடுவாள். அவளை மட்டும்…” என்றவனை மேலே பேசவிடாமல், “டேய், இனி உன்ர தொங்கச்சி வேற இஞ்சதான் இருப்பாள். பிறகென்ன? உன்ன நான்தான் உள்ளுக்குப் போட்டனான் எண்டு தெரிஞ்சதும் என்னை என்ன செய்யப்போறாளோ தெரியாது. எனக்கு அது வேற பயமா இருக்கு.” என்றதும் கலங்கிய கண்களோடு நகைத்தான் காண்டீபன்.

“பரவாயில்ல மச்சான், சம்சாரி ஆக்கிட்டாய். இனி வாழ்ந்திடுவாய்.”

“போடா…” என்று திட்ட வந்திவிட்டுத் திட்டாமலேயே அங்கிருந்து வெளியே வந்தவனின் மனது, கனத்துத்தான் கிடந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் கதிரவனை அழைத்தான்.

“மாதவன், அஞ்சலியை ஒண்டும் செய்ய வேண்டாம் கதிரவன். ஆனா, அவேக்குப் பாதுகாப்பு முக்கியம். சத்தியநாதன் எதையும் செய்யப் பாக்கலாம்.” என்றான்.

“ஓகே சேர், சாகித்தியன்?”

அவனைப் பற்றித்தான் எல்லாளனுக்கும் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. அவன் செய்தது பெரும் குற்றம். போதைப் பொருட்களோடுதான் அவனைப் பிடித்ததும். வழக்காகப் பதிவு செய்தால் தண்டனை நிச்சயம். ஆனால், அந்தக் குடும்பம் என்னாகும்? அந்தத் தாய் தகப்பனின் நிலை என்ன?

“என்ன செய்வம் கதிரவன்? இன்னும் எஃப்.ஐ.ஆர் போடேல்லத்தானே?”

“இல்ல சேர், இன்னும் போடேல்ல. நடந்தது எனக்கும் உங்களுக்கும் மட்டும்தான் தெரியும். ஏற்கனவே சாமந்தியப் பறி குடுத்திட்டு, இப்பதான் அந்த ஐயாவும் அம்மாவும் வெளில வந்துகொண்டு இருக்கினம். இப்ப இவன் கைது எண்டு தெரிஞ்சா என்ன நடக்குமோ தெரியா. அவனும் போதை பாவிக்கிறவன் இல்ல. தாய் தகப்பனுக்காகவும் தங்கச்சின்ர மானம் இன்னும் போக வேண்டாம் எண்டும்தான் இந்த வேலையப் பாத்திருக்கிறான். இதையெல்லாம் யோசிச்சு வெளில விடலாம்.” என்று கொஞ்சம் தயங்கிச் சொன்னான்.

“ஆனா சேர், சாமந்தின்ர வீடியோ இன்னும் அவங்களிட்ட இருக்கலாம். அத விடவும் இன்னும் வேற என்ன எல்லாம் இருக்கோ தெரியாது. அதை வச்சுத் திரும்பவும் மிரட்டினா இவன் என்ன செய்வான் எண்டு சொல்லுறதுக்கு இல்ல. இவன் பணியாட்டி இவன்ர அப்பா, அம்மா எண்டு அந்தக் குரூப் போகவும் சான்ஸ் இருக்கு. எல்லாரும் சாதாரண மனுசர்கள். மானம் எண்டுற ஒண்டுக்கு முன்னால எவ்வளவு பெரிய தைரியசாலியா இருந்தாலும் பணிஞ்சிடுவினம். கேஸ் போடாம வெளில விடுறதும் ரிஸ்க்தான், சேர்.” என்று சாதக பாதகங்கள் இரண்டையும் தெளிவாகச் சொன்னான் கதிரவன்.

உண்மையில் சாகித்தியன் குற்றவாளிதான். ஆனால், அந்தப் பாதை அவனாகத் தேர்ந்து எடுத்ததன்று; திணிக்கப்பட்டது; கட்டாயப்படுத்தப்பட்டது.

எவனோ ஒருவன் செய்கிற அத்தனை அக்கிரமங்களுக்குள்ளும் மாட்டிக்கொண்டு முழிப்பது சாகித்தியன், மாதவன் போன்ற எளிய மனிதர்கள் அவர்களைத் தண்டிப்பதால் அவர்களின் குடும்பங்கள் பாதிப்படைவதைத் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பிறகு எதற்குத் தண்டிக்க?

குற்றங்களைக் குறைக்கத்தானே தண்டனைகள்? இவர்கள் இல்லாவிட்டால் இன்னும் யாராவது என்று அவர்கள் போய்க்கொண்டே இருப்பார்கள். இந்தக் குற்றங்கள் குறைய வேண்டுமானால் அவர்களைத்தான் பிடிக்க வேண்டும்.

ஒரு முடிவுடன் எழுந்து, “அவனையும் கூட்டிக்கொண்டு வாங்க!” என்றவன், நேராகச் சென்று நின்றது, சாகித்தியனின் வீட்டில்தான்.

ஏற்கனவே நேற்றிலிருந்து மகனைக் காணவில்லையே என்று நடுங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாளன், கதிரவனைக் கண்டதும் கலவரமாகப் பார்த்தனர். மகன் முகம் வேறு என்னவோ பெரிதாக நடந்திருக்கிறது என்று சொல்லிற்று.

சாகித்தியனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர்களிடம் அனைத்தையும் சொன்னான் எல்லாளன்.

நம்ப முடியாத அதிர்வில் நெஞ்சைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டனர், சாகித்தியனின் பெற்றோர்.

“இத நான் வழக்காப் பதிவு செய்தா ரெண்டு தொடக்கம் அஞ்சு வருசம் தீரும். அதுவும் கடூழியச் சிறைத் தண்டனை. இப்ப நான் என்ன செய்ய?” என்று அவர்களிடமே வினவினான் எல்லாளன்.

என்ன சொல்வார்கள்? அவன் சொல்வதுபோல் நடந்துவிடுமோ என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தவிப்புடன் அவனைப் பார்த்தனர்.

அவனுக்கு அவர்கள் மீதும் கோபம் உண்டாயிற்று. “என்னை ஏன் பாக்கிறீங்க?” என்றான் சினத்துடன்.

“கண்ணுக்குத் தெரியிற உடம்பு பலமா இருக்கோணும், நோய் நொடி வந்திடக் கூடாது எண்டு பாத்து பாத்துச் சத்தான சாப்பாடாப் போட்டுப் பிள்ளைகளின்ர உடம்ப வளத்துவிடுற அம்மா அப்பா, அந்தப் பிள்ளைகளின்ர மனதைப் பற்றி யோசிக்கிறதே இல்ல. யோசிக்கிறது எல்லாம் அழ வச்சிடக் கூடாது, கவலைப்பட விட்டுடக் கூடாது, இல்லை எண்டு சொல்லிடக் கூடாது, பேசினா தண்டிச்சா நொந்து போயிடுவினம் எண்டு மட்டும்தான். பாசமா வளக்கிறம் எண்டுற பெயர்ல முதுகெலும்பே இல்லாத, பலவீனமான பிள்ளைகளைத்தான் வளத்து விடுறீங்க. ஒரு அவமானத்தைத் தாங்கேலாது, ஒரு தோல்வியத் தாங்கேலாது, ஒரு பிரச்சினை வந்தாத் தைரியமாக் கையாளத் தெரியாது, துணிஞ்சு முடிவெடுக்கத் தெரியாது, சின்னதா ஒரு விமர்சனத்தைக் கூடத் தாங்கிறதுக்குத் தைரியம் இல்ல. எல்லாப் பிள்ளைகளுக்கும் உடம்பு மட்டும்தான் தடிமாடு மாதிரி வளந்து நிக்குது!” என்றான் எரிச்சலுடன்.

“உடற்பயிற்சி கடுமையா செய்தா எப்பிடி உடம்பு, ‘பிட்’ டா இருக்குமோ, அப்பிடி மனங்களுக்கும் கடுமையான பயிற்சிகள் வேணும். அதுக்குத் தோல்விகள், அவமானங்கள், மறுப்புகள் எல்லாம் சரியான முக்கியம். அதைப் பிள்ளைகளுக்குக் குடுங்க. பிரச்சினைகளுக்கு முகம் குடுக்க குடுக்கத்தான் தைரியமும் தன்னம்பிக்கையும் வரும். அத விட்டுப்போட்டு, வெயிலும் படாம, மழையும் விழாம வீட்டுக்கையே வச்சிருந்தா, வெளி உலகம் தெரியாத பிள்ளை, நான் தைரியமானவள் துணிவானவள் எண்டு அசட்டுத்தனத்தோட வெளில வந்து, ஒரு சின்ன பிரச்சினை எண்டதும் அதை எதிர்கொள்ள முடியாம தவறான முடிவுக்குத்தான் போகும்.” யார் மீதிருந்த கோபத்தை யார் மீது தீர்த்தானோ தெரியாது, இப்போதெல்லாம் அவன் மனத்தை அழுத்தும் கோபத்தை எல்லாம் வெளியேற்றி இருந்தான்.

இப்படி ஒரு வெடிப்பை அவனிடமிருந்து கதிரவனே எதிர்பார்க்கவில்லை எனும்போது, மற்ற மூவரும் வாயைத் திறக்கவே பயந்தனர்.

“சொல்லுங்க, இப்ப நான் என்ன செய்ய?” என்றான் திரும்பவும்.

அவர்களால் என்ன சொல்ல முடியும்? கண்ணீருடன் அவனிடம் கையேந்தினர்.

பெற்றவர்களை அப்படிப் பார்க்க முடியாமல், “சேர், இனி நான் எப்பவும் இப்பிடிச் செய்ய மாட்டன்!” என்று உடைந்து கரகரத்த குரலில் சொன்னான் சாகித்தியன்.

“உன்னை இனியும் நம்புவன் எண்டு நினைக்கிறியா நீ?”

“இல்ல சேர். இனி நீங்க என்ன நம்பலாம். அம்மா அப்பாக்குத் தெரிஞ்சா தாங்க மாட்டினம் எண்டுதான்…” என்றவனைக் குறுக்கிட்டு, “இப்ப தெரிஞ்சிட்டுதுதானே. என்ன நடந்தது?” என்று கேட்டான் எல்லாளன்.

அதுதானே? தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்தானே? அவர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று இவனாகவே எண்ணிக்கொண்டு என்னவெல்லாம் செய்துவைத்திருக்கிறான்? அதை வெளியே சொல்லப் பயந்துகொண்டு நின்றான் சாகித்தியன்.

“நீயா எல்லாத்துக்கும் ஒரு முடிவை எடுக்காத சாகித்தியன். முதல் கேக்கேக்க அதிர்ச்சியாத்தான் இருக்கும். ஆனா, ரெண்டு நாளில எல்லாத்தையும் கடந்து வருவினம். இண்டைக்கு நான் செய்ததை அண்டைக்கு நீ செய்திருந்தா இந்த விசயம் இவ்வளவு பெருசாகி இருக்காது. அம்மா தாங்க மாட்டா, அப்பா தாங்க மாட்டார், மானம் போயிரும், மண்ணாங்ககட்டி போயிடும் எண்டு நீயா ஒரு முடிவை எடுத்திட்டு, முட்டாள் தனமான காரியங்கள் செய்றத இனியாவது நிப்பாட்டு. இல்ல...” என்றவன் வேறு பேசாமல் பார்த்த பார்வையில், அப்படியே ஒடுங்கி நின்றான் சாகித்தியன்.

அவனின் பெற்றோரின் புறம் திரும்பி, “இவனை நான் இங்கயே விட்டுட்டுப் போறன். இவனை நான் பாக்கேல்லை, பிடிக்கேல்ல, இங்க ஒண்டுமே நடக்க இல்ல, சரியா? அப்பிடியே நீங்களும் இருங்க. ஆனா, இவனை மிரட்டினவங்கள் திரும்பவும் மிரட்டலாம். ஃபோட்டோ, வீடியோ எண்டு அனுப்பலாம். இவன் மசியாட்டி அடுத்த கட்டமா உங்களிட்டக் கூட வரலாம். உங்களின்ர பயம்தான் அவங்களின்ர ஆயுதமே! தயவு செய்து அப்பிடி ஏதாவது நடந்தா என்னட்ட வாங்க. இல்ல, திரும்பவும் இப்பிடி ஏதாவது வேல பாப்பீங்களா இருந்தா, இப்ப விட்டுட்டுப் போறதுக்கும் சேர்த்துத் தண்டனை தருவன்!” அழுத்தம் திருத்தமாக உரைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
 
Top Bottom