நீ தந்த கனவு - 34

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 34


ஆதினியின் வீடு நோக்கி ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான் கதிரவன். அவனருகில் அமர்ந்திருந்த எல்லாளனின் னென்றியில் சிந்தனை ரேககைகள் படர்ந்திருக்க, புருவங்கள் சுழித்திருந்தன; முகத்தில் பெரும் இறுக்கம். எதைக் குறித்துச் சிந்திக்கிறான் என்கிற சின்ன அனுமானம் கதிரவனுக்கு இருந்தது.

சற்று நேரம் அமைதியாகவே வாகனத்தைச் செலுத்திவிட்டு, “இதையே நாங்க காண்டீபன் சேருக்கும் செய்யலாம், சேர்.” என்று சொன்னான்.

கொஞ்சம் யோசித்துவிட்டு மறுப்பாகத் தலையை அசைத்தான் எல்லாளன்.

“சாகித்தியன்ர தாய் தகப்பனுக்கு அவனை விட்டா வேற ஆரும் இல்ல கதிரவன். அதைவிட, இது அவனா விரும்பிப் போன பாதை இல்ல. அவனைத் தூக்கி உள்ளுக்க போட்டா மொத்த எதிர்காலமும் பாழாப் போயிடும். குறைஞ்ச பட்சம் அஞ்சு வருசம் கடூழியத் தண்டனை கிடைக்கும். அப்பிடி நடந்தா அந்தத் தாய் தகப்பனுக்கு என்ன ஆகுமோ தெரியாது. அதாலதான் கரிசனையோடயும் மனிதாபிமானத்தோடயும் அவனை விட்டிருக்கிறன். காண்டீபன் அப்பிடி இல்ல. என்ன நடக்கும் எண்டு தெரிஞ்சே செய்திருக்கிறான். அவனுக்கும் இதையே நான் செய்தா, அதுக்குப் பின்னால இருக்கிறது, அவன் என்ர நண்பன் எண்டுற சுயநலம் மட்டும்தான். நாளைக்கு இதே மாதிரி மாட்டுற ஒருத்தனை மனம் முரண்டாம என்னால தண்டிக்கேலாமப் போயிடும். முக்கியமா காண்டீபனே இதுக்கு ஓம் எண்ட மாட்டான். எல்லாத்தையும் விட, கொஞ்ச நாளைக்கு அவன் உள்ளுக்கு இருக்கிறதுதான் நல்லம் போல இருக்கு!”

கடைசியாக அவன் சொன்னதன் பொருள் புரியாத போதும் விவரம் கேட்கப் போகவில்லை கதிரவன். சொல்ல நினைத்தால் நிச்சயம் சொல்வான் என்று தெரியும்.

இதற்குள் வீடு வந்திருந்தது. வாசலில் நின்றிருந்த இளந்திரையனின் வாகனம், அவர்களும் வந்துவிட்டதைச் சொல்லிற்று. புகையிரத நிலையத்துக்கே செல்லத்தான் எண்ணியிருந்தான். சாகித்தியன் வீடு சென்றிருந்ததில் நேரம் போயிருந்தது.

இவனை இறக்கி விட்டுவிட்டு அப்படியே புறப்படுகிறேன் என்று சொன்ன கதிரவனையும் இழுத்துக்கொண்டு வந்த எல்லாளனின் பார்வை, கருப்பு அங்கியை அணிந்து நின்றிருந்த ஆதினியைக் கண்டு, அவளிலேயே தங்கிற்று.

“வாங்கண்ணா, வாங்கோ!” இன்னும் தமையனைக் காணவில்லையே என்று, வாசலிலேயே கவனமாக இருந்த சியாமளாதான் இருவரையும் உள்ளே அழைத்தாள்.

அதில், வீட்டு வாசலுக்கு முதுகு காட்டி நின்றிருந்த அண்ணனும் தங்கையும் ஒன்றாகத் திரும்பிப் பார்த்தனர்.

“மச்சி, பாத்தியாடா என்ர தங்கச்சிய? லோயர் ஆகிட்டாள்.” அவள் தோளில் ஒரு கையைப் போட்டு அணைத்துக்கொண்டு, அளவற்ற பூரிப்பும் பெருமிதமுமாகச் சொன்னான் அகரன்.

அவன்தான் அந்த அங்கியை அணிய வைத்து அவளை அழகு பார்த்திருக்கிறான் என்று விளங்க, ‘வண்டு முருகனாக் கூட வரமாட்டாய்’ என்று தான் சொன்னது தனக்கே கேட்பது போலிருந்தது எல்லாளனுக்கு.

ஆதினிக்கும் அந்த நினைவு வந்திருக்க வேண்டும். அவள் பார்வை, ‘எப்படி?’ என்றது அவனிடம் சவாலாக.

அவ்வளவு நேரமாக அவனை அழுத்திக்கொண்டிருந்த அத்தனை பாரங்களும் அகல, இலேசாக அரும்பிய முறுவலை உதட்டுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு சென்று அமர்ந்தான் எல்லாளன்.

அவனுடனேயே வீட்டுக்குள் வந்த கதிரவன் அமரவில்லை. இளந்திரையனிடம், “ஹல்லோ சேர்!” என்றான் பணிவுடன்.

சிறு தலையசைப்புடன் அதை ஏற்றுக்கொண்டவர், “ஏன் நிக்கிறீங்க? இருங்கோ கதிரவன்.” என்று, தன் அருகில் இருந்த இருக்கையைக் காட்டினார்.

அதன் பிறகுதான் அமர்ந்தான் கதிரவன்.

ஆதினியும் அவனைப் பார்த்து முறுவலித்தாள்.

“எப்பிடி இருக்கிறீங்க கதிரவன்?”

“நான்... நான் நல்லாருக்கிறன் மேம். நீங்க?” அவள் இயல்பாகப் பேசியதும் கொஞ்சம் தடுமாறினான். கடைசியாகக் காவல் நிலையத்தில் வைத்துப் பார்த்தபோது நல்லபடியாக உபசரிக்காமல் விட்டது வேறு நினைவில் வந்து நின்றது.

அவளுக்கு அதெல்லாம் நினைவில் இல்லை போலும். இன்முகமாகவே இரண்டொரு வார்த்தைகள் கதைத்தாள்.

இளந்திரையனோடு பயணம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தாலும், மற்றவரின் கவனத்தை ஈர்க்காத வகையில், அவளைத்தான் கவனித்துக்கொண்டிருந்தான் எல்லாளன்.

ஸ்டேஷனுக்கு வராத கோபத்தில் தன்னைப் பார்ப்பதையும் தன்னோடான பேச்சையும் அவள் கவனமெடுத்துத் தவிர்ப்பது நன்றாகத் தெரிந்தது.

அப்போது சமநல நாயக்க அவள் ஸ்கூட்டியை கொண்டுவந்து வாசலில் நிறுத்தினார். அதைக் கண்ட அகரன், “ஆதிம்மா, பாத்தியா உன்ர சிலுக்க. நீ வர அதுவும் சேவிசுக்கு போயிட்டு வந்திட்டுது.” என்றான் உற்சாகமாக.

ஆதினி அவசரமாக எல்லாளனைத்தான் திரும்பிப் பார்த்தாள். அவன் உதட்டில் மலர்ந்திருந்த விசமச் சிரிப்பைக் கண்டு, கண்ணாலேயே முறைத்தவளுக்கு முகம் சூடாகிப் போவதைத் தவிர்க்கவே முடியாமல் போயிற்று.

வீட்டுப் பெண்ணாக எல்லோரையும் உணவுண்ண அழைத்தாள் சியாமளா. பயணம் செய்த களைப்பில் இப்போது தனக்கு ஒன்றும் வேண்டாம் என்று இளந்திரையன் ஓய்வெடுக்கச் சென்றுவிட, “நான் சாப்பிட்டனமா. நீ கதிரவனுக்குக் குடு.” என்றான் எல்லாளன்.

நிறைய நாள்களுக்குப் பிறகு எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள். நடுவில் நந்தியாக நிற்க வேண்டாம் என்றெண்ணி மறுத்துவிட்டுப் புறப்பட ஆயத்தமான கதிரவனை அகரன் விடவில்லை.

“நீயும் பிரெஷ் ஆகிக்கொண்டு வாவன் ஆதி. எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம்.” என்றாள் சியாமளா.

சரி என்றுவிட்டுப் போனவளுக்கு அவசரமாகக் கீழே வரும் எண்ணமே இல்லை.

களை தீரக் குளித்துவிட்டுக் கட்டிலில் சரிந்தாள். என் வீட்டில், என் அறையில், என் கட்டிலில் இருக்கிறேன் எனும் உணர்வே மனத்துக்குப் பெரும் உவகையைத் தந்தது.

அப்போது, “அத்த...” என்றபடி வந்தாள் மகிழினி.

நிற்சிந்தையாகக் கட்டிலில் சரிந்திருந்தவள் திரும்பிப் பார்த்தாள். அச்சு அசல் தமையனின் வார்ப்பில், கதவு நிலையைப் பற்றியபடி நின்றிருந்தாள் அவள். பார்த்தவளின் நெஞ்சினில் பாசம் சுரந்தது.

“அம்முக்குட்டி, ஏன் அங்கேயே நிக்கிறீங்க? அத்தேட்ட வாங்க!” என்றபடி எழுந்து அமர்ந்தாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
சின்னவளும் உள்ளே வந்தாள். அவளைத் தூக்கி மடியில் அமர்த்தி வருடிக்கொடுத்தாள். பட்டு மேனியின் உரசலில் இவளுக்குச் சிலிர்த்தது. அழுத்தமாக முத்தமொன்று கொடுத்தாள்.

இத்தனை நாள்களும் கைப்பேசியில் பாசம் கொண்டாடியவர்கள் இன்று, நேரில் கொஞ்சி மகிழ்ந்தனர். என்னென்னவோ நிறையச் சொன்னாள் மகிழ். அவள் மழலையைக் கேட்டு ரசித்தாள் ஆதினி.

அப்படி நகர்ந்த கதை, “அப்பா சொன்னவர், நீங்க அப்பாவோட கோவமாம் எண்டு. என்னோடயும் கோவமா?” என்பதில் வந்து நின்றது.

‘இந்த அண்ணா இருக்கிறாரே…’ என்று உள்ளூரக் கோபம் வந்தாலும், “சேச்சே! இந்தக் குட்டிச் செல்லத்தோட அத்த கோவிப்பனா? இஞ்ச பாருங்கோ.” என்று அழைத்துச் சென்று, அவளுக்கு வாங்கி வந்திருந்த விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொடுத்தாள்.

மகிழினிக்கு அவற்றோடு நேரம் போக, ஆதினிக்கு அவளோடு நேரம் போனது.

“ஆதினி, சாப்பிட வரேல்லையா?” சியாமளாவின் குரல் கீழிருந்து வரவும், “எங்கட மகிழ் செல்லம் சாப்பிட்டாச்சோ?” என்று விசாரித்தாள் இவள்.

“ம்ஹூம். எனக்குப் புட்டு வேணாம்!” முகத்தைச் சுருக்கினாள் சின்னவள். ஏற்கனவே குட்டி முகம். அது வேறு சுருங்கி இன்னுமே குட்டியாகிற்று. உதட்டினில் சிரிப்பு அரும்ப, “அப்ப என்ன வேணும்?” என்று விசாரித்தாள்.

“பிட்சா.”

“டன்! ஆனா, நாளைக்கு. இப்ப அத்த தீத்தி(ஊட்டி) விடவா?”

அவளும் தலையை அசைத்துச் சம்மதித்தாள்.

“சரி வாங்கோ, கீழ போவம்!” சின்னவளைத் தூக்கிக்கொண்டு படியிறங்கினாள்.

அங்கே, உணவு மேசையில் அகரனும் கதிரவனும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எல்லாளனைக் காணவில்லை.

தமையனை ஒரு பார்வை பார்த்தாள் ஆதினி. அந்தப் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தில் அவனுக்கு அடிவயிறு கலக்கும் உணர்வு. “என்னம்மா?” என்றான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு.

அவனுக்குப் பதிலைச் சொல்லாமல், “மகிழ் குட்டி, உங்களோட அத்த கோபமா?” என்று தன் கையிலிருக்கும் மருமகளிடம் வினவினாள் ஆதினி.

“இல்லையே!” இவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அழகாகப் பதில் சொன்னாள் அவள்.

“அப்ப அத்த ஆரோட கோவம்?”

“அப்பாவோட.”

“இத ஆர் உங்களுக்குச் சொன்னது?”

“அப்பா.”

பிறகென்ன? தன் மகளே தனக்கெதிராகச் சாட்சி சொல்வாள் என்று கனவிலும் எண்ணியிராத அகரன், பாவமாகத் தங்கையைப் பார்த்தான்.

ஆதினிக்குச் சிரிப்பு வரப் பார்த்தது. அடக்கிக்கொண்டாள்.

“ஆதிமா, கடவுள் சத்தியமா நானா ஒண்டும் பிள்ளையிட்டச் சொல்லேல்ல. அவவா காதுல விழுந்ததக் கேட்டு வச்சுச் சொல்லி இருக்கிறா.” அவசரமாக விளக்கம் சொன்னான் தமையன்.

“அவவின்ர காதில விழுற மாதிரிக் கதைச்சது ஆரு?” சும்மாவே அவளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாது. இன்று அவள் ஒரு சட்டத்தரணி. விடுவாளா?

அதற்குமேல் தன் பக்கத்துக்காக அகரன் வாதாடப் போகவே இல்லை. “சொறி மா. இனிக் கதைக்கவே மாட்டன்.” என்று சரணடைந்தான்.

நடப்பதைப் பார்த்திருந்த கதிரவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அகரனோடு சேர்ந்து வேலை பார்த்தது இல்லையே தவிர, அவனும் எல்லாளனைப் போலவே கண்டிப்பும் கடுமையும் நிறைந்தவன் என்று, அவனைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறான். அப்படியானவன் ஆதினியிடம் என்ன பாடு படுகிறான்?

இவனிடம் மாட்டிய குற்றவாளி யாராவது, இவனை இப்படிப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியதுமே சிரிப்பு வந்துவிட்டது.

வேகமாகத் தலையைக் குனிந்து, சாப்பிடுவது போல் சமாளித்தான்.

அவளுக்கு உணவு போட ஆயத்தமான சியாமளாவிடம், “இப்ப எனக்கு வேண்டாம் அண்ணி. நான் அம்முக்குட்டிக்குத் தீத்திப் போட்டுச் சாப்பிடுறன். நீங்க அவேக்குக் குடுங்க.” என்றபடி, ஒரு தட்டில் மகிழுக்கு அளவாகப் போட்டு எடுத்துக்கொண்டு, சோஃபாவுக்குச் சென்றாள்.

உணவைக் குழைத்து ஒரு வாய் கொடுக்கும் வேளையில் வீட்டுக்குள் வந்தான் எல்லாளன். அவன் முகமே சரியில்லை. இவள் இங்கே இருப்பதைக் கண்டதும் நேராக வந்து இவளருகில் அமர்ந்துகொண்டு, எப்போதும்போல் மகிழினியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான்.

மகிழினிக்கு உணவைக் கொடுத்தாலும் அவனறியாமல் அவனை ஆராய்ந்தாள் ஆதினி. சுழித்திருந்த புருவங்களும் நெற்றியில் படிந்திருந்த சிந்தனை ரேகைகளும் அவன் இங்கில்லை என்று சொல்லின. வீட்டுக்குள் வரும்போது கூட அவன் முகம் சரியில்லாமல்தான் இருந்தது. என்னாயிற்று இவனுக்கு? என்னவானாலும் கலங்க மாட்டானே!

“என்ன, ஏதும் பிரச்சினையா?” அதற்குமேல் பேசாமல் இருக்க முடியாமல் விசாரித்தாள்.

“வெளில ஒருக்காப் போக வேணும். நீயும் வா!”

“எங்க?”

“காண்டீபன்ர வீட்டுக்கு.”

அவள் விழிகளில் வியப்பு. “அண்ணாவை உங்களுக்குத் தெரியுமா?”

“ம்.”

“அப்ப வாங்க இப்பவே போவம். வந்து இறங்கிட்டன் எண்டு போட்ட மெசேஜுக்கு ஆள் பதிலே போடேல்ல. நேர்ல போயே கேக்கிறன்.”

இனி இவளையும் சமாளிக்க வேண்டும். அவளறியாமல் மூச்சை இழுத்து விட்டவன், “சாப்பிட்டுட்டு வா.” என்றான்.

“நீங்களும் வந்து கொஞ்சமாச் சாப்பிடுங்க.”

அவன் மறுத்தும் அவள் விடவில்லை. கொஞ்சமாகத்தான் என்றாலும் சாப்பிட வைத்தாள். பார்த்திருந்த சியாமளாவுக்கும் அகரனுக்கும் மனம் நிறைந்து போயிற்று.

இருவரும் உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டனர்.
 
Top Bottom