நீ தந்த கனவு - 38

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 38


மறைந்து போன வாகனம் கிளப்பிவிட்டுச் சென்ற புழுதி அடங்கும் முன்னே, எல்லாளனைச் சூழ்ந்துகொண்ட பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களும் கேள்விகளாகக் கேட்டு, மைக்கை அவன் வாய்க்குள்ளேயே புகுத்திவிட முனைந்தனர். பதிலாக மூச்சைக் கூட வெளியே விட மறுத்தான் எல்லாளன்.

அவனிடமிருந்து எதுவும் பெயராது என்றதும் பத்திரிகையாளர்களின் குறி பெண்கள் பக்கம் பாய்ந்தது. அதற்கும் அனுமதிக்காமல் கதிரவனைக் கொண்டு அவர்களை எல்லாம் அங்கிருந்து அகற்றினான்.

வீதியில் வந்த ஆட்டோ ஒன்றை மறித்து அதில் இருவரையும் ஏறச் சொன்னான். ஆதினிக்கு அவனை விட்டுப் போகவே மனமில்லை. மனம் அவனது அருகண்மைக்காக ஏங்கிற்று. நேற்றைய சண்டை நினைவிலேயே இல்லை. அவன் மார்பில் சாய்ந்து அழ நினைத்தாள். அது அவள் விழிகளில் தெரிந்திருக்க வேண்டும். அவள் கரம் பற்றி அழுத்தி, “தைரியமா இரு!” என்றான் எல்லாளன்.

கண்ணீரில் கரைந்துகொண்டிருந்த மிதிலாவைக் கண்ணால் காட்டி, “தனியா விடாத!” என்று சொல்லி, அவர்களை அனுப்பிவைத்தான்.

இதற்குள் காண்டீபன் கைதை நேரடிச் செய்தியாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தொடங்கியிருந்தனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ‘உங்களை நம்பும் எங்களைக் கெடுக்காதீர்கள்!’ போன்ற பதாகைகளோடு விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு எதிரான ஒரு நாள் கண்டனப் போராட்டத்தை ஆரம்பித்து இருப்பதாக வேறு, செய்தி வந்தது.

நடக்கும் அத்தனை விடயங்களுக்குப் பின்னால் சத்தியநாதன்தான் இருக்கிறான் என்று எல்லாளனுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இல்லாமல் இவ்வளவு வேகம் சாத்தியமே இல்லை. கூடவே, அவனைப் பெரும் குற்றவாளியாக்கி, முடிந்தால் ஆயுள்தண்டனை வாங்கிக் கொடுத்து, வாழ்நாள் முழுக்கச் சிறைக்குள்ளேயே அடைக்க முயற்சி செய்யப்போகிறான் என்றும் கணித்தான்.

பழிக்குப் பழி! அவன் மொழியில் சொல்வதானால் கணக்கு முடிக்கப் பார்க்கிறான்.

அடுத்த நிமிடமே எஸ்பியின் அலுவலகத்தில் நின்றான் எல்லாளன்.

“என்ன சேர் நடக்குது?” அவருக்கான சல்யூட்டை வழங்கிவிட்டு இறுக்கமாக வினவினான்.

அதற்குப் பதில் போன்று, அவரின் முன்னால் இருந்த கோப்பினை எடுத்து, அவன் புறமாகத் திருப்பி வைத்தார் அவர்.

எடுத்துப் பார்த்தான்.

கிட்டத்தட்டப் பத்து மாணவர்கள் தாம் பாதிக்கப்பட்டதாகக் காண்டீபன் பெயரில் புகார் அளித்திருந்தனர். அதுவும் ஒற்றை நாளில். அதில் தமயந்தியின் பெயர் மட்டும் இல்லை.

“இத நம்புறீங்களா சேர்?”

“சட்டத்துக்குத் தேவை சாட்சி. நம்பிக்கை இல்ல!” சுருக்கமாகச் சொன்னார் அவர். “பாதிக்கப்பட்ட மாணவர்கள் தந்த புகாரின் அடிப்படையில விசாரிச்சதில, நிறைய உண்மை வெளி வந்திருக்கு எல்லாளன். முக்கியமானது, காண்டீபன்ர ஸ்டூடன்ட் சாகித்தியன். அவனை நீங்க கைது செய்து, ஒரு நாள் முழுக்க ரிமாண்ட்ல வச்சு விசாரிச்சிருக்கிறீங்க. அப்பிடியே சத்தமில்லாம வெளில விட்டிருக்கிறீங்க. இன்னொரு ஸ்டூடெண்ட் அஞ்சலி. போதைப் பழக்கத்துக்கு அடிமையா இருந்திருக்கிறா. அவரின்ர கம்பஸ் மேசை லாச்சிக்க இருந்து போதை பொருட்கள் எடுத்திருக்கினம். இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?” என்றார் ஒருவிதக் கோபத்துடன்.

“தமயந்தி! தமயந்தி சத்தியசீலன். இந்தப் பெயர் இந்தக் கேஸ்ல எங்கேயுமே இல்லையே சேர். எங்க போனது?” அவனும் இறுக்கமாகவே வினவினான்.

“இப்ப இந்தக் கேஸ் எங்களிட்ட இல்ல எல்லாளன். பிறகும் ஏன் இதைப் பற்றிக் கதைக்கிறீங்க?”

“ஏன் எங்கள விட்டுப் போனது? அதுதான் என்ர கேள்வி சேர்.”

“காரணம் நீங்க!” என்றார் அவர். “காரணமே இல்லாம ஒருத்தனக் கைது செய்ற ஆள் இல்ல நீங்க. ஆனாலும் சாகித்தியன வெளில விட்டு இருக்கிறீங்க. சோ, உங்கட நண்பருக்காக நீங்க எதையோ மறைக்கிறீங்க எண்டு, உங்கள்ள நம்பிக்கை இல்லாமத்தான் கேஸ் மாறினது. இது எங்கட டிப்பார்ட்மெண்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? எஸ்எஸ்பி கூப்பிட்டுக் கிழிக்கிறார். இதுக்கே உங்களை நான் விசாரிச்சு இருக்கோணும். ஆனாலும் செய்யேல்ல. அதை நினைச்சுச் சந்தோசப் படுங்க!”

முகம் மாறினாலும் அவன் தலை குனியவில்லை. விறைப்பாகவே நின்று, “என்ர நண்பனுக்காக நான் ஒண்ட மறைக்க நினைச்சிருந்தா அவனைக் கைது செய்ததையே மறச்சிருப்பன். ஏன், கைது செய்யாமையே விட்டிருப்பன். அவனைத் தூக்கி உள்ளுக்க வச்சிட்டு, அவனிட்ட படிச்சவனை வெளில விட வேண்டிய தேவை என்ன, சேர்?” என்று, அவரின் பதவிக்கான மரியாதை இருந்த போதிலும் அணல் தெறித்தது, அவன் பேச்சில்.

“நான் அவனைக் கைது செய்ததுக்குக் காரணம் தமயந்தி. அது தமயந்திக்கே தெரியாது. ஆனா, ஒற்றை நாளில முழு யாழ்ப்பாணத்துக்கும் தெரிஞ்சிட்டுது. காரணம் பத்துப் பிள்ளைகளின்ர புகார். இந்தப் பத்துப் பிள்ளைகளும்
இவ்வளவு நாளும் எங்க இருந்தவையாம்? முக்கியமா, அவனை நான் கைது செய்யேக்க அவன் எந்தப் பொருளோடயும் இருக்கேல்ல. நீங்க நினைக்கிறீங்களா கம்பஸ், அவன்ர வீடு எல்லாம் நான் செக் பண்ணேல்ல எண்டு. என்ர கண்ணுக்கு மாட்டாத போதைப்பொருள் சி.ஐ.டி ன்ர கண்ணில எப்பிடி சேர் மாட்டினது?”

அவனுடைய கிடுக்கிப்பிடி கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், “எல்லாளன், அவன் ஒண்டும் நல்லவன் இல்ல. குற்றவாளி! படிக்கிற பிள்ளைகளின்ர வாழ்க்கையைப் பாழாக்கினவன். அத மறந்துடாதீங்க!” என்றார் அவர்.

“உண்மைதான். சட்டத்துக்கு முன்னால அவன் குற்றவாளிதான். அதுக்காக வெளில இருக்கிற நாங்க எல்லாரும் நல்ல மனுசர் எண்டு அர்த்தமில்லை.” என்றுவிட்டு, அவருக்கு ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு வெளியே வந்தவனின் முகம், ரௌத்திரத்தில் சிவந்து போயிருந்தது.

*****

பொழுது மாலையை நெருங்கும் நேரத்தில் காண்டீபன் வீட்டின் முன்னே பைக்கை கொண்டு வந்து நிறுத்தினான் எல்லாளன்.

“சந்தேகப்படுற மாதிரி ஏதும் நடமாட்டம்?”

“அப்பிடி எதுவும் கண்ணில படேல்ல, சேர்.”

“விசாரணை எண்டு ஆராவது வந்தவையா?”

“இல்ல சேர்.”
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவர் சொன்ன விபரங்களைக் கேட்டுக் கொண்டவன் விழிகள், சுற்றுப் புறத்தை வலு கூர்மையுடன் ஆராய்ந்தன.

“எதுக்கும் கவனமா இருங்க. புதுசா ஆர் வந்தாலும் உள்ளுக்கு விடாதீங்க. உங்களுக்குத் தெரியாம ஆரும் வெளில போகவும் வேண்டாம். சின்னதாச் சந்தேகம் வந்தாலும் அசட்டையா இருந்திடாதீங்க. உடனேயே எனக்குச் சொல்லுங்க.” என்றுவிட்டு உள்ளே நடந்தான்.

அதற்குள் பைக் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த ஆதினி, இவன் என்றதும் ஓடி வந்தாள்.

“காண்டீபன் அண்ணாவைப் பற்றி ஏதும் தெரிஞ்சதா?” விழிகளில் பெரும் எதிர்பார்ப்புடன் வினவினாள்.

இல்லை என்று மறுத்துத் தலையசைத்து விட்டு, “மிதிலாவும் மாமாவும் எப்பிடி இருக்கினம்?” என்று விசாரித்தான்.

“இருக்கினம்.” சோர்வுற்ற குரலில் சொன்னாள்.

அறைக்குள் இருக்கும் கட்டிலில் சுருண்டு கிடந்தபடி கண்ணீர் உகுக்கும் மிதிலா, இரத்தப் பசை இழந்த முகத்தோடு விழிகள் மூடிச் சாய்ந்திருக்கும் சம்மந்தன், நடப்பது எதுவும் தெரியாமல் தனக்கான உலகில் மட்டும் வாழும் மிதிலாவின் அன்னை என்று, அவர்களைப் பற்றி என்ன சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.

இவர்களின் அரவத்தில் விழிகளைத் திறந்த சம்மந்தன், வாயைத் திறந்து எதையும் கேட்காத போதும், நல்லதாக எதையாவது சொல்லிவிடு எனும் எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்தார்.

மிதிலாவும் ஓடி வந்து, அறை வாசலில் நின்றாள். அழுதழுது பார்க்கவே முடியாத அளவில் முகம் சிவந்து வீங்கியிருந்தது. எல்லோரும் ஏதாவது நல்லதாகச் சொல்லு என்று அவன் முகம் பார்க்கிறார்கள். அவன் யார் முகத்தைப் பார்ப்பான்?

“நான் விசாரிச்ச வரையில இப்ப வரைக்கும் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல மாமா. குறைஞ்சது பதின்நாலு நாள் விளக்கமறியலில வச்சிருக்கலாம். பிறகு கோர்ட்டுக்கு கொண்டுவந்தே ஆகவேணும். அங்க வச்சுத்தான் என்ன எண்டு பாக்கோணும்.”

இன்னும் பதின்நான்கு நாள்கள். பிறகும் அவனுக்கு என்னாகும் என்று தெரியாது. விழிகள் நிறைந்து விட மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டாள் மிதிலா.

அந்தச் செய்கை எல்லாளனை ஏதோ ஒரு வகையில் தாக்கியது. அதை மறைத்துக்கொண்டு, “வாங்க மாமா, பாத்ரூமுக்கு போயிட்டு வருவம்.” என்று அவரை அழைத்துச் சென்று, அவரின் தேவைகளைக் கவனித்தான். உடல் கழுவி, உடை மாற்றி, அவரை மீண்டும் தூக்கி வந்து கட்டிலில் கிடத்தினான்.

மிதிலாவின் அன்னையையும் பார்த்துவிட்டு வந்து, “சாப்பாட்டுக்கு என்ன செய்தனீங்க?” என்றான் ஆதினியிடம்.

“அண்ணாவும் அண்ணியும் சாப்பாடு கொண்டுவந்து தந்தவே. இரவுக்கும் கொண்டுவாறன் எண்டு அண்ணி சொன்னவா.”

வீட்டு வாசலில் வந்து நின்றவனின் விழிகள், அந்தக் காணியைச் சுற்றி வந்தன. சுற்றவர மதில் இருப்பது பாதுகாப்புதான். நாயும் இருப்பதில் பரவாயில்லை.

கிணற்றடியைக் கண்டுவிட்டுச் சென்று, டேங்கில் இருந்த தண்ணீரில் முகத்தை அடித்துக் கழுவினான். அதற்குள் ஒரு துவாயைக் கொண்டுவந்து நீட்டினாள் ஆதினி.

“நீங்க சாப்பிட்டீங்களா?”

“எங்க நேரம்?” என்றான் டவலில் முகத்தைத் துடைத்தபடி.

மாதவன், அஞ்சலி, சாகித்தியன் என்று எல்லோரையும் எச்சரித்து, சி.ஐ.டியினரின் விசாரணைகளுக்கு எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி, அந்தப் பத்து மாணவர்களையும் யார் என்று பார்த்து, அவர்கள் பற்றிய தகவல்களை எல்லாம் எடுத்து முடித்தபோது, அன்றைய நாளே முடிந்து போயிற்று.

கூடவே, காண்டீபனை எங்கே கொண்டுபோனார்கள், இப்போது அவனுக்கு என்ன நடக்கிறது என்று அறியும் வேலை வேறு இருந்தது. இதில், எங்கே சாப்பிட? முதல், பசி என்கிற உணர்வே இல்லை. ‘நீ இருக்கிறாய்தானே மச்சான்.’ என்ற நண்பனின் நம்பிக்கையை எப்படியாவது காப்பாற்றிவிடத் துடித்துக்கொண்டிருக்கிறான்.

அவன் புறப்பட ஆயத்தமாக, “ரெண்டு நிமிசம் அந்தக் கொட்டிலுக்க இருங்கோ. ஓடி வாறன்!” என்று, பிள்ளைகளுக்கு டியூசன் கொடுப்பதற்காக என்று காண்டீபன் அமைத்திருந்த சிறிய கொட்டிலைக் காட்டிவிட்டு, திரும்பி வீட்டுக்குள் ஓடினாள்.

“நான் போகோணும் ஆதினி.” என்றவனின் பேச்சைக் காதிலேயே விழுத்தவில்லை.

“இவள் ஒருத்தி சொல்லுறதைக் கேக்காம!” சலித்தபடி சென்று அமர்ந்தவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற யோசனை.

காண்டீபன் அவர்கள் கையில் இருப்பதால், இவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்தோடு எடுத்துவைக்க வேண்டியிருந்தது. என்னதான் நேர்மை, நியாயம், மனச்சாட்சி என்று உயிரைக் கொடுத்து வேலை பார்த்தாலும், பணத்துக்கு வேலை பார்க்கும் கூட்டம் எங்கும் உண்டு. இல்லாமல், அவன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல் நிலையத்தில் நடந்தவை, எப்படி வெளியில் போனது?

இதற்குள் உணவைக் கொண்டுவந்து தந்தாள் ஆதினி.

அதைப் பார்க்கத்தான் உண்மையில் பசி தெரிந்தது.

“நீ சாப்பிட்டியா?” தட்டை வாங்கியபடி வினவினான்.

“ம்ம். அண்ணி நிண்டு சாப்பிட வச்சிட்டுத்தான் போனவா.” அவனுக்கு முன்னிருந்த வாங்கிலில், அவனைப் பார்ப்பது போல் அமர்ந்துகொண்டு சொன்னாள்.

சாப்பிட்டுக்கொண்டே அவளைப் பார்த்தான் எல்லாளன். நேற்றுத்தான் வந்தாள். அதற்குள் அவர்களுக்குள் ஒரு சண்டை. இன்றானால் அடுத்த பிரச்சனை.

பழைய ஆதினியும் ஒரு பிரச்சனை என்றால் முன்னுக்கு நிற்பாள்தான். ஆனால், இந்த ஆதினியிடம் மிகுந்த நிதானம் தெரிந்தது; சூழலையும் மனிதர்களையும் புரிந்து நடக்கும் பக்குவம் தெரிந்தது. அது அவன் மனத்துக்கு மிகுந்த இதம் சேர்த்தது.

ஒரு வாயை எடுத்து அவளுக்கு நீட்டினான். வியப்புடன் விழிகளை விரித்தாலும் வாயைத் திறந்து வாங்கிக்கொண்டாள் ஆதினி.

“சோறு கொஞ்சம் போடவா?”

“இல்ல, போதும்.” என்றுவிட்டு, “நீ வீட்டுக்கு வெளிக்கிடேல்லையா?” என்று வினவினான்.

“இல்ல. இரவுக்கும் இங்கேயே தங்குவம் எண்டு நினைச்சன். அவே மூண்டு பேருக்குமே உதவி தேவ. தனியா சமாளிக்க மாட்டினம்.”

மாமாக்கு இவளால் எப்படி உதவ முடியும்? அதோடு, அவளையும் சேர்த்து இங்கே தனியாக விட அவனுக்கு விருப்பமில்லை. “திரும்ப ஒருக்கா ஸ்டேஷன் போகோணும். போயிட்டு நானும் வாறன்.” என்று சொன்னான்.

சரி என்று தலையை அசைத்தாள் ஆதினி.

“முழு நேரமும் நீயே இஞ்ச இருந்து, இவேயேக்(இவர்களை) கவனிக்கிறது சரியா வராது ஆதினி. மனுசனும் மனுசியும் மாதிரியோ, இல்ல ஒரு ஆம்பிளையும் ஒரு பொம்பிளையும் எண்டு இஞ்சயே தங்கி, மாமாவையும் பாத்துக்கொள்ளுற மாதிரி, நம்பிக்கையான ஆக்கள் இருக்கினமா எண்டு பாக்கோணும். மாமாக்கு ஒரு வீல் சேருக்கு வழி செய்தா நல்லம் எண்டு நினைக்கிறன்.” என்றான்.

அவளுக்கும் சரி என்றே பட்டது. அஞ்சலியைச் சென்று சந்திக்க வேண்டும். பல்கலையிலும் விசாரிக்க வேண்டும். காண்டீபனின் கேஸ் ஃபைல் படித்து, அதற்குத் தேவையானவற்றைத் திரட்ட வேண்டும். இது எல்லாவற்றுக்கும் அவள் இங்கேயே இருந்தால் சரி வராதுதான்.

“உனக்கு மாற்றுடுப்பு இருக்கா? இல்ல, இரவு வரேக்க எடுத்துக்கொண்டு வரவா?”

அந்த நெருக்கடியான நிலையிலும் அவன் தன்னைக் குறித்து யோசிப்பது மனத்துக்கு இதம் சேர்க்க, “அண்ணி வரேக்க கொண்டுவாறன் எண்டு சொன்னவா.” என்றாள் ஆதினி.

சரி என்று கேட்டுக்கொண்டு, சம்மந்தனிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான் எல்லாளன்.
 
Top Bottom