You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

8. நிச்சயம் செல்வாய் நரகம்! - ரோசி கஜன் -இதழ் 1

ரோசி கஜன்

Administrator
Staff member
1542053215775.png
“ஆஆஆஆ...நோகுதம்மா! அய்யோ வேணாம்மா! இல்ல இல்ல வேணாம்மா! நான் எடுக்க இல்ல! சத்தியமா எனக்கு ஒண்டுமே(ஒன்றுமே) தெரியாது!”

உச்சஸ்தானியில் வீறிட்டலறினாள் சிறுமி பிரியா. தாயின் பிடியிலிருந்து விடுபட்டு ஓடிட தன்னால் முயன்றளவு போராடினாள்.

அவளுக்கு இப்போதுதான் ஒன்பது வயது நிறைந்து இரு மாதங்கள் கடந்திருந்தன. இருந்தும், இளையவர்கள் இருவருக்கு மூத்தவளாக இருப்பதாலோ என்னவோ, அவள் நடவடிக்கைகள் வயதுக்கு முதிர்ந்ததாகவே இருக்கும்.

“ஏன்டி! கண்டவேட வாய்க்குள்ள போய்வரத்தான் உன்னப் பெத்து(பெற்று) வளக்கிறனா?”

மகளின் அழுகைக்கும் மேலாகக் கத்தினாள் ரஞ்சி. ஆவேசமிகுதியில் சிறுமியின் கன்னத்தில் பளாரென்று இழுத்தாள். கோபம் தந்தும்பித் தெறிக்கும் அவள் பார்வையோ, சற்றே தள்ளி நிற்கும் தன் தாயிலும் தங்கையிலும்.

“இங்க பார் ரஞ்சி, சின்னப்பிள்ளயப் போட்டு எருமமாட்ட அடிக்கிறது போல அடிக்கிறாயே! இப்படிக்கேட்டா அவள் எப்படி உண்மையை சொல்லுவாள்?” சிடுசிடுத்தார், ரஞ்சியின் தாய்.

“பார் பார்! நீதான் எடுத்தாய் என்று முடிவு செய்திட்டுத்தான் கேட்கீனம்.

ஏன்? நான் ஒரு இழிச்சவாய்; அப்ப என் பிள்ளைகள் என்றால் இளப்பம்.”

வாய், வார்த்தைகளைத் தெறிக்க விட, இடக்கரத்தால் இறுகப் பற்றியிருந்த மகளை, அவள் சுழல சுழல துவைத்தெடுத்தது ரஞ்சியின் வலக்கரம்.

சிறுமியோ, தாயிடமிருந்து தப்பமுடியாது நிலத்தில் சுருண்டு விழுந்து குழறி அழுதாள்.

‘தொம்! தொம்!’ சிறுமியின் முதுகு பிரிந்தது. அது போதாதென்று, தொடையில், மேல்கையில், கன்னத்தில் என, கிடைத்த இடமெல்லாம் நுள்ளு!

“ஐயோ! அம்மம்மா காப்பாத்துங்கோவன்! நோகுது சித்தி! அம்மாவைப் பிடியுங்கோ!” வீரிடலோடு இறைஞ்சினாள் சிறுமி.

அவர்களும் நெருங்கவில்லை. சிறுமியே என்றாலும் அவள் செய்த காரியத்தில் அத்தனை விசனம் கொண்டிருந்தார்கள்.

“நல்ல சித்தியும் சொத்தியும். அம்மம்மாவா? அவேக்கு (அவர்களுக்கு) என்னிலேயே இளப்பம்; நான் பெத்த உன்னில் எப்படி அன்பிருக்கும்?

சின்னதா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதும் கள்ளிப்பட்டம் கட்டுறதிலிருந்தே அவேண்ட(அவர்களின்) அன்பு தெரிய இல்லையா? பிறகும் அவயக் (அவர்களை) கூப்பிடுறாய்!”

சட் சட்டென்று மகளின் வாயில் இரண்டு போட்டாள் ரஞ்சி.

அப்போதுதான் தோட்டத்திலிருந்து வந்த அவள் கணவன், ஓடிவந்து, மகளை மனைவியிடம் இருந்து பிரித்தெடுத்தான்.

“உங்களுக்கென்ன பைத்தியமே? சின்னப்பிள்ளயப் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க?” அடங்க மறுத்த கோபத்தோடு சாடினான்.

“ஒமோம்! சரியாச் சொல்லுறீங்க! எனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிட்டு. எல்லாம் யாரால என்று நினைக்கிறீங்க? உங்களாலதான்.”

குரல் உயர்த்திய மனைவியை உறுத்துப் பார்த்தான் அந்த மனிதன்.

“இந்தப் பார்வைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. வெளிநாடு போற வழியைப் பாருங்க, இல்லையோ, வெளியூரில சரி ஒரு நல்ல சம்பளத்தில ஒரு வேலயத் தேடுங்க என்றால்...கொஞ்சம் சரி காதில வாங்குறீங்களா?

இப்படி, இங்க கிடந்து குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்டினால் எல்லாருக்கும் இளப்பமாகத்தானே இருக்கும்?

அதுவும், வெளிநாட்டுக் காசு அந்த மாதிரிப் புழக்கத்தில உள்ள இடம் இது! பாருங்க, சும்மா வந்து போனதுக்கே கள்ளிப்பட்டம்.” மூச்சு வாங்க, அடங்கா ஆத்திரத்தோடு கணவனைச் சாடியவள், உக்கிரப்பார்வையோடு தாய் சகோதரியிடம் திரும்பினாள்.

“என் பிள்ளைகள் இந்த வீட்டுக்கு வந்தால் உள்ளறைக்கு எல்லாம் போறவையா? இல்லையே! விறாந்தையைத் தாண்ட விடுவீங்களா என்ன? பிறகு எப்படி சாமியறையில் இருந்த சாமி உண்டியலை இவள் உடைச்சிருப்பாள்?”

“இதேன் ரஞ்சி இப்படிப் பிரிச்சுக் கதைக்கிறாய்? எனக்கு எல்லாப் பேரப்பிள்ளைகளும் ஒன்றுதான்.” சிடுசிடுத்தார், ரஞ்சியின் அன்னை.

“ஆங்! இப்படிப் பேச்சுக்கு இனிக்க இனிக்க சொல்லுங்க. உங்களைப்பற்றி எனக்குத் தெரியாதா? நான் இந்த வீட்டில கழிவு தானே? பொரிச்ச மீனில சதையே இல்லாத தலையை எனக்குத் தந்திட்டு, உங்கட செல்லப்பிள்ளைகளுக்கு துண்டு துண்டா குடுக்கிற வஞ்சகக் குணம் எனக்குத் தெரியாதா என்ன?”

மருமகனின் முன்னால் மகள் இப்படிக் கதைக்க(பேச), முகம் சிறுத்துப் போனது, ரஞ்சியின் அன்னைக்கு.

எதிரியோடு கதைக்கும் பாவனையில் நின்ற சகோதரியைக் கோபத்தோடு பார்த்தபடி முன்னால் வந்தாள், ரஞ்சியின் இளைய சகோதரி; எப்போதும் சற்றே பெரிய துண்டாகப் பொரித்த மீனின் வால் பகுதி இவளுக்குத்தான்.

“இங்க பாரு ரஞ்சிக்கா, இப்படி அறம் கொட்டுறத முதல் நிப்பாட்டு! அம்மாவோட இப்படிக் கதைக்க, பார்த்துக்கொண்டு நிப்பன் என்று மட்டும் நினைக்காத!” எச்சரித்தாள்.

“என்னடி பெரிசாச் செய்வாய்? அதை முதல் செய் பாப்பம்! வந்திட்டாள் கதைக்க!(பேச)”

“ஏய்! முதல் கத்தாத! இப்பிடி மீன், முட்டை என்று கண்டதையும் சொல்லி கதையை மாத்தாத!

உன்ர மகள் சின்னப்பிள்ள; சரி, செய்யக்கூடாத வேலயத் தெரியாமல் செய்திட்டாள் என்றால் அது பிழையென்று எடுத்துச் சொல்லவேணும்.

இனிமேல்பட்டு அப்படிச் செய்யாதே என்று சொல்லிக் குடுக்க வேணும். அதைவிட்டுட்டு, எங்களோட சண்டை போடுறாய்! எங்களுக்கு அப்படி இவளில என்ன கோபம்? கள்ளி என்று சொல்ல வேணும் என்று ஆசையா என்ன? முதல், சரியாத் தெரியாமல் சொல்லுறோம் என்று நினைக்கிறாயா?” கோபமாகத் தொடங்கி, பொறுமையாகவே எடுத்துச் சொல்ல முயன்றாள் அப்பெண்.

“பார்! இவ்வளவு அடிகுடுத்திட்டன். இந்தச் சனியன் எடுக்க இல்லை என்று கதறுது. அப்படியிருந்தும் ‘நீதான் எடுத்தாய்’ என்று சொல்லீனமே! உன்னைக் கொன்று போட்டால்தான் அடங்குவீனம் போல!”

கத்தியவாறே, கணவனிடமிருந்து மகளை இழுத்து இரண்டு மொத்து மொத்த, மீண்டும் மகளை விடுவித்துத் தனக்குப் பின்னால் பிடித்துக் கொண்டான் ரஞ்சியின் கணவன்.

“இன்னொருக்கா இவளில கைவைச்சா நான் பொல்லாதவன் ஆகீறுவன் ரஞ்சி!” சீறவும் செய்தான்.

“உங்க மகளைக் கள்ளியாம்! நீங்க என்னடா என்றால் என்னை மிரட்டுறீங்க. உங்களைச் சொல்ல வேணும், எல்லாம் என் தலைவிதி!” தன் தலையில் அடித்து ஓவென்று அழுதபடி நகர்ந்தாள்.

பக்கத்தில் தான் அவர்களின் வீடும். விடுவிடுவென்று ‘கேட்’வரை சென்று நின்றவள், “அந்த உண்டியலை, உன்ர மகள்தாண்டி உடச்சிருப்பாள்; நீ இவளச் சாட்டுறாய்.” தங்கையைப் பார்த்துக் கத்தினாள்.

“உனக்கு இப்ப நான் சொல்லுறது விளங்க இல்ல ரஞ்சி, இப்படியே விட்டால் பிறகு நீதான் கஷ்டப்படுவாய்; உன்ர மகள் இன்றைக்கு பள்ளிக்கூடத்தில காண்டீனுக்கு எவ்வளவு காசு செலவளித்தாள் என்று ஒருக்காக் கேளன்; அப்போ உண்மை தெரியும்.” திடமாகவே சொன்னாள் இளையவள்.

“பெரிய அக்கறை! அதப்பற்றி நீ ஒன்றும் கவலைப்படாத! உன்ர பிள்ளைகளை நீ பார்; எனக்கு என் குடும்பத்தைப் பார்க்கத் தெரியும்.” சகோதரி சொன்னதன் பின்பகுதியைக் காதில் வாங்கவே இல்லை, ரஞ்சி.

கேட்டை அடித்துச் சாத்திவிட்டு, கணவனும் மகளும் பின்னால் வர வெளியேறியவள், “இனி உயிரே போனாலும் நானும் என்ட பிள்ளைகளும் இந்த வீட்டு வளவுக்குள்ள வர மாட்டம்! சொல்லிப்போட்டன்.” என்றுவிட்டே நகர்ந்தாள். இப்படி, இதற்கு முதல் எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டாள்.

இவ்வளவுக்குப் பிறகும், சொந்தத் தாய், சகோதரியின் இத்தனை பெரிய குற்றச்சாட்டு சிறிதுமே மகள் மீது சந்தேகம் கொள்ள வைக்கவில்லை.

அத்தனை நம்பிக்கையா? அன்பா? அதுவும் தான். இல்லையென்று சொல்ல முடியாதுதானே? அதையும் மேவி, ‘அவள் என்ட மகள். அவளை எப்படி மற்றவர் குறை சொல்லலாம்? அது தாயோ உடன் பிறந்த சகோதரியோ யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். என் குழந்தையைக் குறை சொல்லும் தகுதி யாருக்குமே இல்லை.’ என்ற ஆவேசமே அங்கு முன்னணியில் நின்றது.

அடிவாங்கி, கைகால் கன்னங்கள் என்று வீங்கியிருந்த சிறுமிக்கு எண்ணெய் தடவிவிட்ட ரஞ்சியின் கணவனோ, ரஞ்சியோ ‘நீ அந்த உண்டியலை உடைத்தாயா?’ என்றோ ‘நாங்க தர இல்லையே, காண்டீனுக்குக் காசு ஏது?’ என்றோ கேட்கவில்லை.

அதற்கென்று சிறுமி அமைதியாக இருக்கவில்லை.

“அம்மா, போனகிழமை என் பிறந்தநாளன்று காண்டீனுக்கு என்று தந்த காசை நான் செலவழிக்க இல்ல. அதத்தான் இன்றைக்கு செழவளிச்சன்.” தேம்பித் தேம்பி அழுதபடி சொல்ல, மைத்துனி சொன்னதை கேட்டிருந்த ரஞ்சியின் கணவனுக்கும் அவர்களில் அடங்காக் கோபமே ஏற்பட்டது.

ரஞ்சிக்கோ, மகள் ஏன் இதைச் சொல்கிறாள் என்றிருந்தது.

“இப்ப நாம வெளியில வரேக்க உங்க தங்கச்சி என்ன சொன்னா என்று நீங்க கவனிக்க இல்லையா?” என்ற ரஞ்சியின் கணவன், கண்டீனில் வாங்கி உண்டது உண்டியல் காசு என்று சொன்னதைச் சொல்ல, விசுக்கென்று எழுந்தாள் ரஞ்சி.

முன்னரைவிடவும் எகிறிக் குதித்தாள். தம் வீட்டு வாயிலால் வெளியில் வந்து நின்று பக்கத்து வீட்டைப் பார்த்து கண்டபடி திட்டித் தீர்த்தாள்.

“சரி சரி, விட்டுத்துலையுங்க; இனிமேல்பட்டு அந்த வீட்டுப்பக்கமே போகவேணாம்.” தன்பங்குக்கு சொன்னான் ரஞ்சியின் கணவர்.

அது ஒரு மண் உண்டியல். சிவப்பில் கழுத்தோரம் ஆரம் போல் மஞ்சளில் பூ வேலைப்பாட்டோடு பார்க்கையில் வெகு அழகாக, பளபளப்பாக இருந்தது. பிரியாவுக்கு எப்போதும் அதை ஒருதரம் தொட்டுப்பார்க்க ஆசை. தனக்கே தனக்கென்று ஒரு உண்டியல் வைத்துக்கொள்ளவும் தான்.

“இதை எனக்குத் தாறீங்களா அம்மம்மா!” என்றும் கேட்டிருக்கிறாள்.

“அது சாமியுண்டியல்; முதல் உனக்கு என்னத்துக்கு?” என்றவர், அதோடு நிறுத்தவில்லை

“உன் அம்மா, கையில நாலு காசு அதிகம் கிடைச்சாலே செலவளிச்சுப் போட்டுத்தான் முதல் வேலை பார்ப்பாள்; வாழத் தெரியாதவள்; அதுதானே உன் அப்பா எவ்வளவு உழைச்சாலும் தங்குதில்ல.”

 

ரோசி கஜன்

Administrator
Staff member
தேவையே இல்லாது மகள் மீதிருக்கும் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

பிரியாவுக்கோ சரியான கோபம். ‘தரமாட்டன் என்று சொன்னால் விஷயம் முடியுதே! இப்ப ஏன் அம்மாவைத் திட்டுறார்?’ மனதுள் விழுந்த கோபமே, யாருமில்லாத போது அந்த உண்டியலை தொட்டுப் பார்க்க வைத்தது.

அதுவோ கைதவறி விழுந்துவிட்டது. சீமெந்திலான சாமி மேடையில் உடைந்து கிடந்த உண்டியலைக் கண்டதும் உடல் நடுங்கியதுதான். அதையும் மீறி, ஒரு அசட்டுத் துணிச்சலும் ஆசையும். தன் சின்னக் கைகளிரண்டும் கொள்ளும் அளவுக்கு பணத்தை எடுத்துவிட்டாள், தாள்களும் சில்லரையுமாக!

மறுகணம், சத்தமே செய்யாது தம் வீட்டுக்கு ஓடிவிட்டாள். பள்ளியில் எப்போதும் அவள் நண்பிகள் அதை இதை என்று வாங்கி உண்ணக் கொடுப்பார்கள். திருப்பி வாங்கிக் கொடுக்குமளவிற்கு இவளிடம் காசு இருப்பதில்லை. அதைப்பற்றியெல்லாம் நண்பிகள் எதுவுமே சொல்வதில்லைதான். என்றாலும், இவளுள் ஒரு மாதிரியான உணர்வுவெழும். தம் வீட்டு இல்லாமையை உணர்ந்த விசனம் என்றே கொள்ளலாம்.

இப்போதான் கையில் காசு உண்டே! நண்பிகளுக்குத் தாராளமாக வாங்கிக் கொடுத்தாள். அதை, அதே பள்ளியில் பயிலும் சித்தியின் மகள் அவதானித்ததைக் கவனிக்கவில்லை.

‘ச்சே! அவள் மட்டும் காணவில்லையோ என்னை எப்படிச் சாட்ட முடியும்?’ வாங்கிய அடியில் உடல் நோக நோக எண்ணினாலும், தாயும் தந்தையும் தன்னைச் சந்தேகம் கொள்ளவில்லையே என்ற ஒன்று மிகுந்த துணிவைக் கொடுத்தது, அவளுக்கு.

‘என்னைக் கள்ளி என்ற கோபத்தில தான் அம்மா அடிச்சவா!’ தாயில் கோபமே வரவில்லை அவளுக்கு.

அன்று தொடங்கியதுதான். கையாடல்! அதை மறைக்க பொய்யுரைப்பது கைவந்த கலையாகீற்று!

வீட்டில், பள்ளியில், உறவுவீடுகளில் என்று ஆரம்பித்து வேலைசெய்யும் இடத்தையும் விட்டு வைக்கவில்லை,. ஒன்று, பத்துகளில் ஆரம்பித்து லட்சங்களாக உருமாறியிருந்தன.

பலன்... அங்க இங்க யார் யாரையோ பிடித்துச் சம்பாதித்த வேலைக்கு வேட்டு வைத்தது, வேலை பார்த்த வங்கியில் செய்த களவு.

இதுவரை சின்ன சின்னதாக எத்தனை? அப்போதெல்லாம் சற்றும் சந்தேகம் வராதபடி மிகப் புத்திசாலித்தனமாக தப்பித்திருக்கிறாள்.

‘இதில் இப்படி மாட்டுப்பட்டுப் போனனே!’ பிடிபடாத போதிருந்த சுவாரஸியம் கையும் களவுமாகப் பிடிபட்டு நிற்கையில் அப்பட்டமாக வடிந்து போயிற்று!

இருந்தும், அதிலிருந்து மீள்வது ஒன்றும் கஷ்டமான வேலையாகவும் இருக்கவில்லை. பெரும்புள்ளிகளின் நெருங்கிய அறிமுகமிருக்கே! அவர்களுக்கு இதுவெல்லாம் தூசு! அவர்கள் செய்யாததா?

ஆனால், விஷயம் வெளியில் கசிந்துவிட்டது.

இப்படியான கடைநிலைச் செய்கைகளை தகாத விஷயங்களாகப் பார்க்கும் மனிதர்கள் மொத்தமாக அழிந்துவிடவில்லையல்லவா? அவர்கள் வாயில் அரைபடுவதை யாரால் தடுக்க முடியும்?

நன்றாகவே அரைபட்டாள். முகத்துக்கு நேரே சிரித்துக் கதைப்பவர்கள் இவளுரு மறைந்ததும் பலமாகத் தூற்றினார்கள். அறிந்தும் அறியாத பாவனையில் கடக்கக் கற்றுக்கொண்டாள் பிரியா. தன் செய்கைகளை எப்போதுமே நியாயப்படுத்திக்கொள்பவளுக்கு இத்தகைய பேச்சுகள் எல்லாம் எருமையில் பெய்த மழையே!

நாட்கள் கடந்தன. அன்று...

அந்த அரசினர் மருத்துவமனையில் கடந்த இருகிழமைகளாக பலத்த சுகயீனத்தில் சுருண்டிருந்தாள் ரஞ்சி. தன் இறுதி நாட்களை எண்ணுவதை அவள் மனம் உணர்ந்து சில நாட்களாகீற்று! சிலவருடங்களுக்கு முன்னர் சென்றடைந்த கணவனைச் சந்திக்கச் செல்ல ஆயத்தமாகிறாள்.

இவளைப்பார்க்கும் வைத்தியரோடு கதைத்துவிட்டு வந்த பிரியா, “ஒன்றுமில்லையன, இரண்டு மூன்று நாட்களில் வீட்ட போகலாம்.” என்றுவிட்டு, “என்ன நித்திரையாம்மா?” தாயின் தோளில் மெல்லத் தட்டினாள்.

விழித்தவளிடம், “நான் போயிட்டு பின்னேரம் போல வாறன்.” என்றுவிட்டு புறப்பட்டவள், விறுவிறுவென்று சென்று மறைந்த பின்னும் அவள் சென்ற பாதையையே பார்த்திருந்தாள், பெற்றவள்.

மூன்று பிள்ளைகள். பிரியாவுக்கு அடுத்தவள் வெளிநாட்டில். பேச்சுவார்த்தை இல்லாமல் போய் பலவருடங்களாயிற்று!

“உங்களுக்கு உங்க மூத்தமகள் வேணும் என்றால் நான் வேணாம் என்றுதான் அர்த்தம். அவளைப் போன்ற கழிசடையோடு ஒட்டி உறவாடுற உங்களோடு, பெத்த தாய் தகப்பன் என்றாலும் எனக்குத் தொடர்பு வேணாம். இந்தக் குடும்பத்தில பிறந்தன் என்ற ஒரு பரிசிகேடே(வெட்கக்கேடு) ஆயுளுக்கும் போதும்.” என்று, திருமணம் செய்ய முதலே முறித்துக்கொண்டு விட்டாள்.

“படிப்பும் பதவிகளும் தரும் மமதை! வேறென்ன? சித்தி, மாமா என்று அவயலைப் பிடித்துக்கொண்டு கிட! யாரு வேணாம் என்றது? எனக்கு என் மூத்தமகள் முக்கியம். நான் பெற்ற முதல் பிள்ளை. யார் என்ன சொன்னாலும் எனக்குத் தங்கம்.”

“அந்தத் தங்கம் இன்றைக்கு இந்த நிலையில் நிற்க முழுக்காரணமும் நீங்க தான். பெற்ற பிள்ளையை நேர் சீராக வளர்க்க முடியாதவர்களுக்கு எல்லாம் பிள்ளைகள் ஏனோ?! ச்சே!”

“ஓமடி! உன்னைப் பெற்று வளர்த்ததுக்கு இந்தப்பேச்சு எனக்குத் தேவைதான்.” இப்படி, இளையமகளோடு எப்போதுமே மல்லுக்கட்டு தான்.

“அவள், உன்னைப் போல தாய் தகப்பன் வேணாம் என்று ஒருநாளும் போகேல்ல. நாலு காசு தருகிறாய் என்றதும் பெரிதாக மானம், அவமானம், கௌரவம் என்று கதைத்துக்கொண்டு வந்திட்டாய். ஊரில் எங்க நடக்காததை அவள் செய்திட்டாள்?

“உங்களோடு கதைச்சுப் பிரயோசனம் இல்லை; அது தெரிஞ்சும் கதைக்க வரும் என்னச் சொல்லவேணும்.” சின்னவள், ஆற்றாமையோடு அலுத்துக் கொள்வாள்.

“புரிஞ்சாச் சரிதான்.” ஆணித்தரமாக வரும் ரஞ்சியின் வார்த்தைகள்.

“இந்த வீட்டில் என்னோடதான் அவளும் பிள்ளைகளும் இருப்பார்கள். பாவம், புருஷன் என்ற தறுதலை விட்டுட்டுப் போய்ட்டான், நாலு பிள்ளைகளோடு நடுத்தெருவில் நில் என்று விட முடியுமா?” உறுதியாகச் சொல்லியிருக்கிறாள் ரஞ்சி.

“ஏன் நடுத்தெருவில்? உழைக்கிறாள். தன்ர பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வாள் தானே? உங்களுக்கு என் வீண் வம்பு? அங்க இங்க இவளைப் பற்றி ஒரு மாதிரிக் கதைக்கிறார்கள் அம்மா. தனியா விட்டால்தான் பொறுப்பு வரும். அவளின் பிள்ளைகளை நீங்களே வளர்க்க, அவளுக்கு வேற வேற சிந்தனை.” கெஞ்சிப் பார்த்தாள் இளைய மகள்.

ரஞ்சியோ அவள் கணவனோ இதையெல்லாம் காதிலும் வாங்கியதில்லை. இளையமகள் தூரச்சென்று நாட்களாயிற்று! உணர்விலும்.

கடைசி மகன் உள்ளுரில் தான். அவனும் தனது இளைய சகோதரியின் பக்கமே! இவர்களோடு பேச்சுவார்த்தை இல்லை.

இளைய பிள்ளைகளின் விலகளை ஒரு வன்மத்தோடு எதிர்கொண்டிருந்தனர் ரஞ்சியும் , கணவரும். பிரியாவும் தான். ‘அவனவன் என்னென்ன செய்கிறான்? நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரியவில்லையா என்ன? பெரிதாக வந்துவிட்டார்கள்.’ தனக்கு தானே சமாதானம் செய்துகொண்டாள் அவள்.

தந்தை இறந்ததுக்கு இளையமகளிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு மட்டும் தான். மகனோ, மனைவியோடு வந்து நின்றவன் இறுதிக்கிரிகை முடிந்த கையோடு புறப்பட்டுவிட்டான். புறப்படுகையில் பிரியா சண்டையைத் தொடங்க ஒரே களேபரமாயிற்று.

“இதுதான் கடைசி! இனிமேல் பட்டு உங்க முகங்களிலும் விழிக்க மாட்டன்.” சீறலோடு சென்றவனை, அதன் பின்னர் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகச் சந்திக்கவில்லை.

ரஞ்சிக்கு ஏக்கமாக இருந்தது. இளையவர்களை சந்திக்க முடிந்தால்...ஆசையாக இருந்தது.



“அக்கா...அதில நீலகலர் சட்டையோடு போற பொம்பிளை அந்தப் பிரியா தானே ?” சட்டென்று கேட்ட பேச்சில், இடையிட்ட நினைவுகள் அறுபட, அவர்கள் புறமாகச் சென்றது ரஞ்சியின் விழிகள்.

“அவளே தான்; பார் என்ன பதிவிசா வந்து போறாள்; கழிசடை!”

“ஸ்ஸ்ஸ்...மெல்லக் கதை. அந்த மூன்றாம் கட்டிலில் கிடக்கிறதுதான் தாய்க்காரி.”

ஓ! இப்ப இல்லாததையா சொல்லிப் போட்டன். பெத்த பிள்ளையை ஒழுங்கா வளர்க்கத் தெரியாததுகள் எல்லாம் தாய் இல்லை பேய்கள்.”

உனக்கேன் வீண் வம்பு பேசாமல் இந்தப் பக்கம் வா..”

அவர்கள் அப்பால் நகர்ந்துவிட்டார்கள்.

ரஞ்சியின் வற்றிச் சுருங்கிக் கிடந்த கண்களில் கசிவு, இதயத்தைப் போலவே!

“அன்றைக்கு அம்மம்மா வீட்டு உண்டியலை இவள்தான் உடைத்திருப்பாள். அப்பவே சொல்லிக் கண்டிச்சிருந்தால் இன்றைக்கு இந்த வெட்கக்கேடு இல்ல. அப்ப இருந்தே அவள் செய்யிற ஒவ்வொன்றுக்கும் நீங்க துணை போயிருக்கிறீங்க. இப்பவும் போறீங்க. பெற்ற பிள்ளை என்ன செய்கிறாள் என்று கவனிக்காமல் மெத்தனமாக இருப்பது போல ஒரு பெரிய குற்றம் எதுவுமே இல்லை. இது என்றைக்காவது உங்களுக்குப் புரியும். அப்ப காலம் கடந்திருக்கும்.” கடைசியாக, சின்னமகள் சீறலாகச் சொல்லிச் சென்ற வார்த்தைகள் இதயத்தில் எதிரொலிக்க, ஏக்கத்தில் இயக்கத்தை நிறுத்தியது, அவளிதயம்.


முத்தெனப் பெற்றெடுக்கும் சிசுவினை
மெத்தனமாக வளர்க்காது
சொல் செயல் அனைத்தும் கவனித்து
நல்மனிதனாய் உருவாக்கி விடுவதே
பத்து மாதங்கள் சுமந்து பெற்றவளினதும்
அந்த வித்து விழ காரணமானவனிதும்
தலையாய கடமை!
தவறினால்...நிச்சயம் செல்வாய் நரகம்.


முற்றும்.


 

Preethipavi

New member
அருமையான கதை சகோதரி,
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என புரிய வைத்தமைக்கு நன்றி.
 
Top Bottom