அன்பு சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்

.
இன்றைய "இளம் பெண்களின் பார்வையில்" என்று குறிப்பிடுப்பதால், திருமணமும் குடும்ப வாழ்க்கையும் மனநிறைவு தரும், தனித்துவத்தைக் காக்கும் சுகமான உறவாகக் கருதப்படுகிறது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் விவாதிக்க விரும்புகிறேன்.
இன்றும் தமிழ் நாட்டில், 90 சதவீத திருமண பத்திரிக்கையில், "
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்று மேற்கோள் காட்டித் துவங்குவதை நாம் காணலாம். இதன் பொருள் "இல்வாழ்க்கையில் அன்பும், அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும், பயனும் அதுவே (அந்த வாழ்க்கையே) ஆகும்" என்பதாகும். அப்படியென்றால், ஒரு திருமணத்திற்கு அடிப்படை என்பது அன்பும், அறமும் (ஒழுக்கநெறி). (இன்றைய கால கட்டத்தில் பணமும் முக்கிய பங்கு வகிப்பதாக இருந்தாலும், பெண்களும் படித்து தங்கள் சொந்தக் காலில் நிற்பதால் நான் இதை அடிப்படையில் சேர்க்கவில்லை.

)
இன்றைய கால கட்டத்திலும் இது பொருந்துமா என்றால், ஆம், கண்டிப்பாக. ஒரு திருமணத்தின் அடிப்படைத் தேவை கணவன் தன்னிடம் அன்பாக நடக்க வேண்டும், ஒழுக்கம் தவறாது நடக்க வேண்டும் என்பதுதானே.


இன்றைக்கு பெண்கள் நிறையப் படித்திருக்கிறார்கள், நிறைய சம்பாதிக்கிறார்கள், நிறைய எதிர் பார்க்கவும் செய்கிறார்கள் என்பது உண்மைதான். தன் துணையைக் கூட தானே தேடிக் கொள்ள விரும்புகிறார்கள் தான். ஆனாலும், எப்படித் தேடுகிறார்கள்? இன்னாரைத் திருமணம் செய்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்குமா, தனக்கும், தன் வாரிசுகளுக்கும் சுகமான உறவைத் தருமா, கடைசி வரை கை கொடுக்கும் உறவாய் இருக்குமா, இருவரின் கருத்துகளும் ஒத்துப் போகுமா, வாழ்வில் இணைந்து முன்னேற முடியுமா, தன் தனித்துவத்தைக் காக்க விடுவாரா, தன் முன்னேற்றத்திற்குத் துணை செய்வாரா, குடும்பமாக இருந்தாலும் தன் கருத்தையும் சொல்ல சுதந்திரம் உண்டா என்று எத்தனையோ விதத்தில் அலசி ஆராய்ந்து பார்த்து தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே பெண் வீட்டினர் மாப்பிள்ளை பார்த்தாலும், தன் மகளுக்கேற்ற, மகளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற ஒருவனைத்தான் தேடுகிறார்கள்.
காதல் திருமணம் என்றாலும் இதை எல்லாம் பெரியவர்கள் பார்த்து சொல்ல வேண்டியதை சொல்லத்தான் செய்கிறார்கள்.அதன் பிறகு அவர்கள் முடிவு மாறுபடுமா என்பது அவர்கள் காதலின் உறுதியைப் பொறுத்தது.
அப்படி வரும்போது இன்றைய இளம் பெண்கள் திருமணத்தை மன நிறைவு தரும் குடும்ப வாழ்க்கையாகத்தான் கருதுகிறார்கள்.
பழைய காலம் மாதிரி, வெறும் புகைப்படத்தை மட்டுமே காட்டியோ, வெறும் தகவல் மட்டுமே சொல்லியோ, நேரில் சந்திக்க விடாமலோ, பேச சந்தர்ப்பம் கொடுக்காமலோ திருமணம் செய்வதில்லைதானே.

திரும்பக்கேட்டால், பெண் பார்த்து சென்று விட்டால் (வீட்டில் ஓரளவு விசாரித்துதான்), கைபேசியில் பேசுவதன் மூலம், பெற்றவர்களை விட அதிக தகவல்களை பெண்களே கூறுவார்கள்

(அதுவும் Facebook, insta, இன்னும் social media IDs எல்லாம் புகுந்து பார்த்து விடுகிறார்கள்



).
அப்படியெனும் போது, இன்றைய பெண்கள் தங்கள் தனித்துவதைக் காப்பது பற்றியும், தன் வேலையைத் தொடர்வது அல்லது மேற்கொண்டு படித்து முன்னேறுவது, எது என்றாலும் முதலிலேயே பேசி ஒத்து வந்தால் மட்டுமே சம்மதிப்பதால், திருமணத்தை சுகமான உறவாகத்தான் எதிர் பார்க்கிறார்கள் என்பது என் கருத்து.
அன்பும், காதலும் ஒருமித்து வாழும் பெற்றோரைப் பார்த்து வளரும் பெண்கள், தங்களுக்கும் இது போன்ற அருமையான அழகான வாழ்க்கை வேண்டும் என்று தானே நினைப்பார்கள்


பெண்களுக்கு எப்போவும் அப்பாதானே ஹீரோ. ஆனால் தனக்கு வருகிறவன் தன் தந்தை தன் மீது காட்டும் அன்பை விட அதிகமாகத் தன் மீது அன்பு காட்டி தன்னை சுகமாக தாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்களே தவிர, அதை எப்படி சுமையாகப் பார்ப்பார்கள்

தாய் தந்தை அன்பை பெறாதவர்கள் கூட, தானும் தன் கணவனும் சேர்ந்து தங்கள் குழந்தைகளை அன்போடு வளர்க்க வேண்டும் என்று தானே ஆசைப்படுவார்கள். திருமணத்தை சுமையாக நினைத்தால் குடும்பம் எப்படி அமையும்?
அதனால் இன்றைய பெண்கள் தங்கள் திருமணத்தை சுகமான உறவாகத்தான் கருதுகிறார்கள் என்பது என் கருத்து. இதுவே எந்த நாட்டில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் வளரும் சூழ்நிலைகள் மாறுபட்டாலும் திருமணம் என்று வரும்போது அவர்களின் அடிப்படை எதிர்பார்ப்பும் அன்பும், ஒழுக்கமும் தான் என்பதால், நான் என்னுடைய கருத்தில் உறுதியாக நிற்கிறேன்.