You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 46


அன்று மாலை அவளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தான் அனந்தன். நிரல்யாவிடத்தில் ஒருவித அமைதி. எதையோ தனக்குள் வைத்து உழல்கிறாள் என்று தெரிந்தது. மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். சுருக்கமாகப் பதில் வந்ததே தவிர்த்து, காலையில் அவனோடு இருந்துவிட்டுப் போன நிரல்யாவாய் இல்லை அவள்.

“என்ன நிரல், ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” அதற்குமேல் பொறுமை இல்லாமல் நேராகவே விசாரித்தான்.

“எப்பிடி மச்சான், அந்தச் சின்ன வயதில அம்மாவும் அப்பாவும் இனி இல்லை எண்டதைத் தாங்கினீங்க? அதுவும் ஒரே நேரத்தில ரெண்டு பேரும் இல்லாம…” திடீர் என்று அவளிடமிருந்து வந்த கேள்வியில் அவன் கையில் பஜிரோ தளம்பப் பார்த்தது.

“என்ன திடீர் எண்டு?” என்றான் தன்னைச் சமாளிக்க முயன்றபடி.

“இல்ல, நிவிக்கு அங்கிள் இன்னும் இருக்கிறார். அண்ணா இருக்கிறார், ஒரு மகள் இருக்கிறா. அத விட அன்ட்ரிக்கு ஆகவும் ஏலாம வந்திட்டுது எண்டு அவளுக்கே தெரியும். ‘அம்மாக்கு சுகமா உயிர் போயிடாதா எண்டு சில நேரம் இருக்கடி’ எண்டு அண்டைக்கு அவளே சொன்னவள். ஆனா இப்ப அம்மா இல்லாம இனி என்ன செய்வன் எண்டு அப்பிடி அழுறாள். எனக்கு உங்கட நினைவுதான் வந்தது.” என்றதும் அதற்குமேல் முடியாமல் பஜிரோவை வீதியின் ஓரமாக நிறுத்திவிட்டு, அப்படியே அமர்ந்திருந்தான் அனந்தன்.

அவனுடைய அந்த அமைதி, சும்மா இருந்தவனுக்குத் தாய் தந்தையை நினைவூட்டி விட்டோமோ என்று தோன்ற வைத்துவிட,“சொறி மச்சான், அது ஒரு மாதிரி மனதைப் போட்டுப் பிசஞ்சுகொண்டே இருந்தது. அதான் கேட்டனான்.” என்றாள் மெல்லிய குரலில்.

“அப்பிட எல்லாம் ஒண்டும் இல்ல. வா, கொஞ்சத் தூரம் நடந்திட்டு வருவம்!” என்று, ஒரு பக்கம் வற்றிக்கொண்டிருக்கும் ஆறும் மறுபக்கம் ஓங்கி வளர்ந்து நின்று நிழல் பரப்பிய மரங்களுக்குமிடையில் அமைந்திருந்த குளக்கட்டின் ஒடுக்கமான பாதையால் அவளை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

சற்றுத் தூரம் நடந்த பிறகு, “ஒரு பயங்கரமான இழப்பையோ நிகழ்வையோ யோசிச்சுப் பாத்தாய் எண்டு வை, உன்னால தாங்கவே ஏலாத மாதிரி இருக்கும். இப்பிடியெல்லாம் நடந்திடக் கூடாது எண்டு மனம் பதறும். அதுவே அது நடக்கேக்கை எவ்வளவு வலிச்சாலும் உன்னை மீறியே அதைக் கடந்து வந்திடுவாய்.” என்றான் அவன் பொதுவாய்.

ஆக வலித்திருக்கிறது. துடித்திருக்கிறான். வேறு வழியே இல்லாமல் கடந்தும் வந்திருக்கிறான். நெஞ்சு அடைப்பது போலிருக்க தவிப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவள் பார்வையை உணர்ந்தவன் போன்று பற்றியிருந்த அவள் கரத்தை அழுத்திக்கொடுத்தான் அவன்.

“எதிர்பாக்கவே இல்லைதான் நிரல். நம்பவே ஏலாம இருந்தது. அதைவிட அவேன்ர பொடிய வேற பாக்காததால அவேக்கு ஒண்டும் நடக்காம இருந்து, திரும்பி வந்திடாயினமா(வந்துவிட மாட்டார்களா) எண்டெல்லாம் நினைச்சுப் பாத்திருக்கிறன்.” என்றதும் தொண்டை அடைக்க, அதற்கு மேல் நடக்க முடியாமல் நின்றுவிட்டாள்.

அவனும் நின்று திரும்பி அவள் முகம் பார்த்து, “அந்த நேரமெல்லாம் எனக்கு ஆறுதலா இருந்தது ஆர் தெரியுமா?” என்று கேட்டான். அவள் தெரியாது என்பது போல் தலையை அசைக்க, “நீ!” என்றான் அவன்.

அவள் நம்ப முடியாமல் விழிகளை விரித்தாள்.

அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு. “ஆரம்பம் என்னோட நீ கொஞ்சம் மல்லுக்குத்தான் நிப்பாய். அதைக் கவனிச்சிட்டு மாமி உனக்கு என்னவோ சொல்லியிருக்க வேணும். அதுக்குப் பிறகு உனக்கு என்னவோ நீ பெரிய மனுசி மாதிரியும் நான் என்னவோ சின்ன பிள்ளை மாதிரியும் ஒரு நினைப்பு. என்ர புக்ஸ் அடிக்கித் தாறது, என்னோட வந்திருந்து கதைக்கிறது, அறைக்கையே முடங்கி இருந்தாலும் பிடிவாதமா கூட்டிக்கொண்டு போய் விளையாடுறது, நான் ஒழுங்கா சாப்பிடுறனா எண்டு என்னைக் கவனிக்கிறது எண்டு எல்லாம் செய்வாய்.” என்றான் அவளை நோக்கிக் கனிவுடன் புன்னகைத்தபடி.

அவளிடத்தில் அதன் எதிரொலியாய் மெல்லிய முறுவல்.

“அம்மா அப்பா இனி இல்லை எண்டுறது ஒரு பக்கம் எண்டால், இனி ஆர் என்னை வச்சுப் பாப்பினம் எண்டுற பயம் முதல் இருந்தது. உங்கட வீட்டுக்கு வந்த பிறகு உங்களுக்குப் பாரமா இருந்திடக் கூடாது, நீங்களும் வெளில போ எண்டு சொல்லிட்டா எங்க போறது எண்டு அடுத்த பயம். நானும் அம்மா அப்பாவோடயே செத்திருக்கலாம் எண்டு நிறைய நாள் நினைச்சிருக்கிறன். அந்த நேரம் அம்மா அப்பாக்குப் பிறகு என்ர வாழ்க்கையைச் சந்தோசமாக்கினது, என்னைச் சிரிக்க வச்சது, எனக்குத் துணையா இருந்தது எல்லாமே நீதான். அந்தளவுக்கு மாமிக்கு மேலால என்னை ஓடி ஓடிக் கவனிச்சது நீ.”

அவன் சொல்வது உண்மைதான். ஒருமுறை அவள் துடுக்குத்தனத்தில் ‘உங்கட அம்மாவும் அப்பாவும் எங்க? நீங்க ஏன் எங்கட வீட்டை வந்து இருக்கிறீங்க?’ என்று கேட்டபோது, அவளைத் தனியாக அழைத்துச் சென்று, “அவன் தாயில்லாப் பிள்ளையாச்சி. அப்பிடி எல்லாம் கேக்கக் கூடாது. பிறகு கவலைப்படுவான். அவனுக்கு இனி அம்மா அப்பா எல்லாம் நாங்கதான். நாங்கதான் அவனைப் பாக்கோணும், பாசமா இருக்கோணும். அம்மா இல்லையே, இருந்திருந்தா எனக்கு இது நடந்திருக்காதே எண்டு நினைக்க வைக்கக் கூடாது.” என்று அமிர்தவல்லி சொல்லிக் கொடுத்திருந்தார். அதன் பிறகு அவளும் தன் அறிவுக்கு எட்டியவரையில் அவன் தாயை உணரும் வகையில் நடந்ததில்லை.

“சாதாரணமாப் பாத்தா நீ என்னை வெறுத்திருக்க வேணும். உங்கட வீட்டுக்கு நீ ஒரேயொரு பிள்ளை. அவ்வளவு செல்லம். அவ்வளவு காலமும் வாங்குறது எல்லாமே உனக்கு மட்டும்தான். திடீர் எண்டு அது எல்லாத்திலையும் பங்கு போடுறதுக்கு எண்டு நான் ஒருத்தன் வந்து நிக்கிறன். மாமா மாமியும் பிரிச்சுப் பாக்காம உனக்கு என்ன செய்தாலும் எனக்கும் சரியாச் செய்வீனம். நீ பொறாமைப் படவும் இல்லை, என்னை வெறுத்து ஒதுக்கவும் இல்ல. உன்ர பங்குக்கு உன்னட்ட இருக்கிறதிலையும் பாதியக் கொண்டுவந்து எனக்குத் தருவாய். ஒருக்கா நான் என்ர உள்ளுடுப்ப தோச்சுக்கொண்டு இருக்கேக்க நான் தோச்சுத் தரவா எண்டெல்லாம் கேட்டிருக்கிறாய். எனக்குத்தான் அப்ப கூச்சமாப் போச்சு.” என்றதும் தளும்பிவிட்ட கண்ணீருடன் சிரித்தாள் நிரல்யா.

“ஒருக்கா என்ர ஷு வெடிச்சிட்டுது. எனக்கு அதச் சொல்லிப் புது ஷு வேணும் எண்டு கேக்க ஒரு மாதிரி வெக்கமா இருந்தது. ஆனா நீ அடுத்த நாளே அதப் பாத்திட்டு மாமிட்டச் சொல்லி, மாமா வாங்கித் தந்தவர். உனக்குத் தெரியுமா தெரியா நிரல். உன்ர அன்பில ஒரு தீவிரம் இருக்கும். உனக்குப் பிடிச்ச ஒருத்தருக்காகக் கடைசி வரைக்கும் நிக்கிற ஆள் நீ. இந்தளவுக்கு என்னோட அன்பா இருந்த நீதான் நான் மாமாவோட சேர்ந்து தொழில்ல இறங்கினதும் என்னை விட்டு முழுசா விலகி நிண்டதும். அதுவும் எனக்காகவே என்னட்டச் சண்டை பிடிச்சாய் பார்… உன்ன எப்பிடியடி நான் விடுவன்? அப்பிடி அம்மா அப்பா இல்லாத உலகத்தில அந்த இழப்புத் தெரியாம என்னை வாழ வச்சவள் எல்லா நீ!” என்றதும், “தேங்க்ஸ் மச்சான்!” என்று இருக்கும் இடம் மறந்து அவன் மார்பில் சாய்ந்து விம்மினாள் அவள்.

அதெல்லாம் அவள் கவனமெடுத்தோ தெரிந்தோ செய்தவை அன்று. அந்தச் சின்ன வயதில் அவளுக்குத் தோன்றியவற்றைச் செய்திருக்கிறாள். ஆனால், அதையே தான் வாழ்வதற்கான ஆதாரமாகப் பற்றிக்கொண்டு எழுந்து நின்றிருக்கிறான் அவன். இது தெரியாமல் என்னவெல்லாம் நடந்துவிட்டது அவர்கள் வாழ்க்கையில்?

பார்வை தம்மைச் சுற்றிவர, “ஆக தேங்க்ஸ் சொல்லுற பழக்கம் இன்னும் உன்ன விட்டுப் போகேல்ல.” என்றவனின் கைகளும் அவளை அணைத்துக்கொண்டன.

“சொல்லோணும் மாதிரி இருந்தா நான் சொல்லுவன். நீங்க கேட்டுத்தான் ஆகோணும்.” செல்லப் பிடிவாதத்துடன் சொன்னாள் அவள்.

“உனக்கு வரவர என்னில இருக்கிற பயம் விட்டுப் போச்சு நிரல். என்றதும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவன் கைகளுக்குள் இருந்தவாறே அவனை நிமிர்ந்து பார்த்து, “எனக்குப் பயம் விட்டுப் போகேல்ல. ஆனா, இந்த அடிதடி தன்ர கைய வெளில மட்டும்தான் நீட்டுவார் எண்டு தெரிஞ்சிட்டுது எனக்கு.” என்றாள் சிரிப்புடன்.

“அதையெல்லாம் விட்டு எவ்வளவோ காலமாச்சு. இப்பவும் அடிதடி எண்டு சொல்லுவியா நீ?”

“ஓ! ரெண்டு கிழமைக்கு முதலும் ஆரையோ கொண்டு வந்து கடைக்குப் பின்னால வெளுத்தீங்களாம் எண்டு கேள்விப்பட்டன். பொய்யா என்ன?” என்றாள் புருவங்களை உயர்த்தி.

அவன் முகம் நொடியில் தீவிரமாயிற்று. “உனக்கு எப்பிடித் தெரியும் அது?” என்றான் புருவங்கள் சுருங்க. அது நடந்தது ஒரு நாள் இரவு. அதுவும் கடையைப் பூட்டிய பிறகு. அன்று அவனுக்கு நம்பிக்கையான இருவரைத் தவிர்த்து வேறு யாரும் அங்கிருக்கவில்லை. அப்படி இருந்தும் அவளுக்குச் செய்தி போயிருக்கிறது என்றால் அதை அவன் கவனித்தேயாக வேண்டும்!

“சொல்லு நிரல்!” என்றான் அதட்டி.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவளுக்கும் கோபம் வந்தது. இந்த அனந்தனை அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காதே! “ஆகாகா நல்லாருக்கே கதை! இவர் கேப்பாராம், உடனேயே நாங்க சொல்லுவமாம். இந்த வேலைய விடுங்க மச்சான் எண்டு சொன்னாக் கேக்கிறேல்ல. நடந்ததைக் கேட்டா மட்டும் கோவம் வருமா உங்களுக்கு?”

“விளையாடாத நிரல். இப்ப உண்மையா அப்பிடி இல்ல. ஆனா விட்ட குறை, தொட்ட குறை எண்டு சில பழைய விசயங்களை இப்பிடித்தான் ஹாண்டில் பண்ண வேண்டி இருக்கு. அத வச்சுத் திரும்ப ஏதாவது சண்டைக்கு வாறேல்ல நீ!” என்று கண்டிப்புடன் எச்சரித்தவன், “முதல் சொல்லு நீ, உனக்கு ஆரு இதையெல்லாம் சொன்னது?” என்று அதட்டினான்.

அவளுக்கு முகம் சுருங்கி போயிற்று. ஆக, இன்னுமே அவன் நல்லதற்கு ஒன்று சொன்னால் கேட்கமாட்டான். கோபம் வந்துவிடும். பழைய அனந்தனைப் பார்ப்பது போலிருக்கவும் விழிகள் கலங்க வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.

அவனுக்கே அது ஒரு மாதிரி ஆகிப்போயிற்று.

“நிரல்!”

அவள் அதன் பிறகு அங்கே நிற்கவில்லை. அவனுக்குத் தன் முகத்தைக் காட்டப் பிடிக்காமல் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் பஜிரோவினுள் ஏறி அமர்ந்துகொண்டாள்.

அவனும் வந்தான். “இப்ப என்னடி கோவம் உனக்கு?” பஜிரோவில் ஏறி அமர்ந்து கதவைச் சாற்றியபடி அதட்டினான்.

“...”

“நிரல், என்னைப் பார்!”

“...”

அவளின் அந்தப் பிடிவாதம் அவனுக்கும் கோபத்தை உண்டாக்கிற்று. “பார் எண்டு சொன்னா பாக்க மாட்டியா?” என்றபடி அவள் தாடையைப் பற்றித் திருப்பினான்.

“விடுங்க நீங்க!” அப்போதும் குறையாத கோபத்துடன் அவன் கையைத் தட்டிவிட்டுவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று சொல்லியும் கேட்காதவளை என்ன செய்ய? என்னதான் அத்தனையையும் வெட்டினாலும் வெட்ட வெட்டத் தழைக்கும் சில பிரச்சனைகளும் உண்டே.

சில கணங்களுக்கு இருவரிடத்திலும் அமைதி. பின் திரும்பி அவளைப் பார்த்தான். வாடிக்கிடந்த அவள் முகம் அவனைத் தொந்தரவு செய்தது. அவள் மடியில் கிடந்த கையை எடுத்து அதில் எதையோ மாட்டினான்.

திரும்பிப் பார்த்தவள் விழிகள் விரிந்து, பின் நிமிர்ந்து அவனை நோக்கின.

“நினைவிருக்கா?”

“இது எப்பிடி உங்களிட்ட?”

“உன்ரய இன்னொருத்தன் கொண்டு போக விடுவனா?”

இமைக்காது அவனையே பார்த்தாள் நிரல்யா. அவன் மீதிருந்த கோபத்தில் அவள் யாரோ ஒருவருக்குக் கழற்றிக் கொடுத்த கைச்செயின். அதைக் கொடுத்துக் கிட்டத்தட்டப் பத்து வருடங்களாகப் போகிறது. இத்தனை வருடங்களும் பக்குவமாக வைத்திருந்தானா?

“சிசிடிவில பாத்தியா?” அவள் மனவோட்டத்தை அறியாதவன் சின்ன சிரிப்புடன் வினவினான்.

முதல் நாள் பெய்த மழையினால் உண்டான சேற்றில் நிறையக் கால்களின் அடையாளம், அதுவும் தாறுமாறாகக் இருந்ததைப் பார்த்துவிட்டுத்தான் சிசிடிவி புட்டேஜ் எடுத்துப் பார்த்தாள். அவன் அணிவித்துவிட்ட கைச்செயினில் இருந்த முத்துக்களை வருடிக் கொடுத்தபடி அதைச் சொன்னாள்.

முன்னரும் அவள் இப்படித்தானே! அந்தக் காட்சிகள் கண் முன்னே வந்து போகச் சின்ன சிரிப்புடன் பஜிரோவை கிளப்பினான் அனந்தன்.



*****

அன்று காலையிலேயே அனந்தனின் பஜிரோ நிரல்யாவோடு ஏழாலையை நோக்கி விரைய ஆரம்பித்தது. இப்போதெல்லாம் அவனோடான இந்த பஜிரோ பயணங்கள் அவளுக்கு மிக மிகப் பிடிக்க ஆரம்பித்திருந்தன. அதன் சிவப்பு நிறமும், அதைப் பார்த்து பார்த்துக் கவனமாக அவன் வைத்திருக்கும் பாங்கும், அதில் அவன் பயணிக்கும் அழகும் என்று அவளுக்கும் அதன் மீது ஒரு சொந்தம் உருவாக ஆரம்பித்திருந்தது.

அது எங்காவது நின்றிருந்தால் அனந்தன் அங்கே நிற்பான். அனந்தன் எங்காவது நின்றிருந்தால் அதுவும் அங்கே நிற்கும் என்கிற அளவில் அவனையும் பஜிரோவையும் பிரிக்க முடியாது.

அன்று அன்னை தந்தையைப் பற்றி அவன் சொன்ன பிறகு இவள்தான், “உங்கட ஊருக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போறீங்களா மச்சான்? எனக்கு நீங்க பிறந்து வளந்த இடத்தைப் பாக்க ஆசையா இருக்கு.” என்று கேட்டிருந்தாள்.

அவள் கேட்டு அனந்தன் எதை மறுத்திருக்கிறான்?

ஒரு வழியாகக் கிளிநொச்சி தாண்டி, யாழ்ப்பாணத்தைத் தொட்டு, ஏழாலைக்குள் பஜிரோ நுழைந்தபோது அவன் முகத்தில் பிரத்தியேக மகிழ்ச்சி. போகிற வழியிலேயே அவன் படித்த கல்லூரி, நண்பர்களோடு விளையாடிய மைதானம், பிடித்ததை வாங்கிச் சாப்பிட்ட கடைகள் என்று அனைத்தையும் காட்டிக்கொண்டே சென்று, புதிதாகப் பெரிய கேட் போடப்பட்டிருந்த ஒரு ஓட்டு வீட்டின் முன்னால் நிறுத்தினான்.

“இதா உங்கட வீடு மச்சான்?”

“ஓம், ஒரு ஆச்சியும் அப்புவும் மட்டும் இருக்கினம். நல்ல மனுசர்.” என்று சொன்னபடி இறங்கிச் சென்று, கேட்டை விரியத் திறந்து வைத்துவிட்டு வந்து, பஜிரோவை கொண்டுபோய் உள்ளே நிறுத்திவிட்டு கேட்டையும் சாற்றிவிட்டு வந்தான்.

கிட்டடியில் திருத்தி அமைத்திருக்கிறான் என்று வீட்டைப் பார்க்கவே தெரிந்தது.

இதற்குள், “வாங்கோப்பு, இண்டைக்கு வருவன் எண்டு சொன்னீங்களே, இன்னும் காணேல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்க வந்திட்டீங்கள்.” என்றபடி வந்தார் தடி ஊன்றி நடக்கும் அப்பு. அவர் பின்னால் ஆச்சியும் வந்து வரவேற்றார்.

குறைந்தது இருவரும் எண்பதை நெருங்குகிறவர்களாக இருப்பார்கள். ஆனாலும் நெற்றியில் பெரிய பட்டை இட்டிருந்த ஐயாவும், வெள்ளைக் கம்பி முடிகளைக் கொண்டையாக்கி, நெற்றியிலும் உச்சியிலும் திலகமிட்டு, சேலை அணிந்திருந்த ஆச்சியும் மங்களமாக நடந்து வந்ததைப் பார்க்க, ஓடிப்போய்க் கட்டிக்கொள்ள வேண்டும் போன்று இருந்தது அவளுக்கு.

அவர்களிடம் அவளை அழைத்துச் சென்று, “இவள்தான் என்ர மனுசி அப்பு. சொல்லி இருக்கிறன் எல்லா. பெயர் நிரல்யா.” என்று அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“சந்தோசம் சந்தோசம். எங்களுக்குத் தம்பி உங்கட போட்டோ முதலே காட்டி இருக்கிறார். வாங்கோ பிள்ளை!” என்று அவள் கரம் பற்றி அழைத்துப் போனார் ஆச்சி.

மெல்லிய வியப்புடன் பார்வை அவனிடம் சென்று வர அவரோடு நடந்தாள் அவள். இரண்டு அறைகள், விறாந்தை, சமையலறை என்று மட்டுமே இருந்தாலும் எல்லாமே விசாலமாக இருந்தன. அதன் பிறகு புதிதாகக் குளியலறை சேர்த்துக் கட்டியிருந்தான் அனந்தன்.

செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து தந்து தாகம் தணித்த ஆச்சி, “கைகால் முகம் கழுவிக்கொண்டு வாங்கோவன், கையோட சாப்பிட்டுட்டு இருக்கலாம்.” என்று சொன்னார்.

வருவதாக அழைத்துச் சொல்லும்போது சமைக்க வேண்டாம் என்று அவன் சொன்னதை அவர்கள் கேட்கவே இல்லை. அவன் என்ன சொன்னாலும் சமைத்து வைத்திருப்பார்கள் என்று தெரிந்திருந்தவனும் இடையில் எதையும் சாப்பிடவும் இல்லை.

அவர்கள் சொன்னதுபோலக் கிணற்றடிக்குச் சென்று, கைகால் முகம் கழுவிக்கொண்டு வந்தனர். அப்புவோடு சேர்த்து மூவரையும் தரையில் இருத்தி குத்தரிசிச் சோறு, கோழிக்கறி, கத்தரிக்காய்ப் பால்கறி, அவித்த முட்டை என்று விருந்து பரிமாறினார் ஆச்சி.

“ஏன் ஆச்சி இவ்வளவு? ஒரு கறி சோத்தோட விட்டிருக்கலாம் நீங்க.” என்றான் அனந்தன் அப்போதும் மனம் கேளாமல்.

“நல்ல கதையா இருக்கேப்பு. மனுசியோட முதல் முதலா வாறீங்கள். ஒரு சோறு கறி தாறதோ?” என்றவர் சட்டிக்குள் இருந்த ஈரல் துண்டுகளைத் தனியாகப் பொறுக்கி இருவருக்கும் போட்டார்.

“அப்புக்கும் வைங்கோ ஆச்சி.”

“அவருக்குச் செமிக்காது. நீங்க சாப்பிடுங்கோ.” அவர்களுக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருந்து அவர் பார்த்து பார்த்துப் பரிமாறிய அழகும் உணவின் சுவையும் என்று வயிறு நிறைய உண்டார்கள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
ஒரு அறை, விறாந்தை, குசினி என்று அவர்கள் புழங்க, மற்ற அறையை அவன் தன் பாவனைக்கு என்று பூட்டி வைத்திருந்தான்.

உணவு முடிந்த பிறகு பெரியவர்கள் ஓய்வுக்காகச் சரிந்துகொள்ள, அந்த அறைக்கு அவளோடு சென்றான் அனந்தன். அங்கே அவனுடைய அம்மாவும் அப்பாவும் புகைப்படங்களாகச் சுவற்றில் மாட்டப்பட்டிருக்க, ஒரு கட்டில் மேசை, சின்ன அலமாரி என்று கச்சிதமாக இருந்தது அறை.

ஒன்றும் சொல்லாமல் அவர்கள் முன்னே சென்று நின்றவன், அந்தப் படங்களில் படிந்திருந்த தூசினைத் துடைத்துவிட்டான். அவன் விரல்கள் மெதுவாய் அன்னையின் முகத்தை வருடி மீண்டன. பேச்சற்றுப் போனவளாக அவனையே பார்த்து நின்றாள் நிரல்யா. பெரிய படங்களாக அவர்கள் இருந்த காட்சி ஏதோ ஒரு வகையில் அவளையே தாக்குகையில் அவன் நிலை?

அந்த மேசையைத் தட்டி, பெட்டின் கவரை மாற்றி, ஆச்சியிடம் தும்புத்தடியை வாங்கி வந்து நிலத்தை எல்லாம் கூட்டிவிட்டான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நிரல்யா அவன் செய்யும் ஒவ்வொன்றையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

“என்ன பாத்துக்கொண்டு இருக்கிறாய்? கொஞ்ச நேரம் வந்து படு. வெயில் தணிய வெளில போகலாம்.” என்றபடி அணிந்திருந்த டி ஷர்ட்டை கழற்றிவிட்டு, எட்டி பேனையும் தட்டிவிட்டுக் கட்டிலில் சரிந்தான் அவன்.

அவளுக்கு உறக்கம் வரும்போல் இல்லை. என்னவோ அன்று அவன் சொன்னவைகளும் இப்போது புகைப்படமாகிப் போன அவன் பெற்றோரும் சிந்தைக்குள் நின்றனர். அவள் எப்படி அவள் பெற்றோருக்கு ஒற்றைப் பிள்ளையோ அப்படித்தானே அவனும் இந்த வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்திருப்பான்? ஆனால் இன்று?

அந்த எண்ணங்கள் மனத்தைப் பிசைவது போலிருக்க, “இந்த ஆச்சி அப்புக்குப் பிள்ளைகள் ஒருத்தரும் இல்லையா?” என்று பேச்சுக் கொடுத்தாள்.

“ஒரேயொரு மகன் இருக்கிறார். அவருக்கும் வருத்தம்போல. மனுசிதான் வேலை செய்து அவரையும் பிள்ளைகளையும் பாக்கிறா. அதால இவே இங்கயே இருக்கினம்.”

“அப்ப சிலவுக்கு என்ன செய்வினம்?”

“ரெண்டு வயசான சீவன் சாப்பிட என்ன பெரிய சிலவு?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

“நீங்களா பாக்கிறீங்க?”

“அப்பிடிச் சொல்லாத நிரல். இந்த வீட்டையும் காணியையும் பாக்கிறது அவேதான். அதைவிட… எப்பிடிச் சொல்ல உனக்கு, ஆருமே இல்லாத இந்த வீட்டுக்கு என்னால வரவே ஏலாம இருக்கும். இப்ப நான் வந்தா வரவேற்கவும் கதைக்கவும் எண்டு அவே இருக்கிறது மனதுக்கு அவ்வளவு இதமா இருக்கும். எனக்குத்தான் அவே துணையே தவிர நான் அவேக்கு ஒண்டும் செய்யேல்ல.” என்றான் அவன்.

இன்னும் எத்தனை முகங்கள் இவனுக்குள் இருக்கிறது என்று அவனைப் பார்த்தாள் நிரல்யா. பார்வையைச் சுழற்ற அங்கிருந்த தட்டில் ஒரு குட்டி ஆல்பம் கண்ணில் பட்டது.

சின்ன குறுகுறுப்புடன் அதை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.

அவனும் அவன் பெற்றோரும் இருந்தனர். இன்று அவள் அறிந்து வைத்திருக்கும் அனந்தனுக்கும் அன்றைய அனந்தனுக்கும் தொடர்பே இல்லை போலும். அந்தளவில் இளகிய முகம், சிரிக்கும் கண்கள், குறும்பு கொப்பளிக்கும் முகம் என்று மனத்தைப் பறித்தான் குட்டி அனந்தன்.

அவள் உதட்டில் அரும்பிய சிரிப்பைக் கண்டுவிட்டு, “அப்பிடி என்ன சிரிப்பு? எனக்கும் காட்டு.” என்று அவளை இழுத்துக் கட்டிலில் சரித்தான் அவன்.

இருந்தது ஒரேயொரு தலையணை. இருவர் தலையும் அதிலிருக்க, ஆல்பத்தை இருவரும் ஒன்றாகப் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு புகைப்படத்தில் மேற்சட்டை இல்லாமல், வேட்டி மட்டும் அணிந்து, நெற்றியில் பெரிய பட்டை இட்டு, பயபக்தியாய் நின்று கும்பிட்டபடி ஏதோ பாடிக்கொண்டிருந்தான் அவன்.

“அது கோயில்ல தேவாரம் பாடேக்க எடுத்தது. இது பேச்சுப் போட்டி. இது கராத்தே…” என்று சொல்லிக்கொண்டு வந்தவன், “இது அம்மாவோட கோவிச்சுக்கொண்டு போய்த் தனியா இருக்கேக்க அம்மா எடுத்திருக்கிறா. அதான் முகத்தைக் காட்டாம மறைச்சுக்கொண்டு இருக்கிறன்.” என்று சொல்லிச் சிரித்தான்.

“அப்ப அப்பவே ரவுடிதான் நீங்க. கராத்தே எல்லாம் பழகி இருக்கிறீங்க.” என்றதும் பொய்யாக முறைத்தான்.

“அப்பாவும் அப்பிடித்தான் சொல்லுவார். ‘சும்மாவே கைய நீட்டுவான். இதில நீ அவனுக்குக் கராத்தேயும் பழக்கிறியா’ எண்டு. அம்மா அதையெல்லாம் காதில விழுத்தவே மாட்டா. எனக்கு என்ன விருப்பமோ அது நடக்கும். 20 வது பிறந்தநாளுக்கு பைக் வாங்கித் தாறன் எண்டு சொன்னவா. ஆனா அந்தப் பிறந்தநாளுக்கு அவா இல்ல.” என்றவனின் பேச்சு அதோடு நின்று போயிற்று.

வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள திரும்பி அவனையே பார்த்தாள் நிரல்யா. எப்போதும் பெரிய மனிதனாக மட்டுமே பார்த்துப் பழகியவன் இன்றைக்கு அன்னைக்கு ஏங்கும் குட்டிக் குழந்தையாய்த் தெரிந்தான்.

“மாமிய மிஸ் பண்றீங்களா?”

“எப்பவும் இல்ல. சில நேரங்கள்ல.” என்றவன் எப்போதெல்லாம் என்று சொல்லப் போகவில்லை.

“மாமிய உங்களுக்கு நிறையப் பிடிக்குமா?”

“பிடிக்காம?” என்று திருப்பிக் கேட்டான் அவன். “ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சக் காலம் இருந்திருக்கலாம்.” என்றான் தன் பாட்டுக்கு. “அவே இருக்கேக்கையும் இந்த அறைலதான் படுப்பம். அப்பா நேரத்துக்கே நித்திரை கொண்டிடுவார். நானும் அம்மாவும் குசுகுசு எண்டு இரவிரவாக் கதைப்பம். ‘நான் நாளைக்கு வேலைக்குப் போறேல்லையா? ரெண்டு பேரும் பேசாமப் படுங்க’ எண்டு அப்பா பேசினாலும் கேக்கிறேல்ல நாங்க.” என்றவனிலேயே அவள் பார்வை இருந்தது.

“என்ன?” என்றான் அவன். ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தவள் எப்போதும் அவன் அவளுக்குத் தரும் ஆறுதலை இன்று அவனுக்குக் கொடுக்க விரும்பியவளாக ஆல்பத்தை கரையாக வைத்துவிட்டு அவனை நெருங்கி, அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

மெல்லிய வியப்புடன் அவள் முகம் பார்த்தான் அனந்தன்.

“சின்ன பிள்ளைல மாதிரி உங்களை ஓடி ஓடிக் கவனிக்கோணும் மாதிரி இருக்கு மச்சான். மாமின்ர நினைவே வராம உங்களப் பாத்துக்கொள்ளோணும் மாதிரி இருக்கு. எப்பிடி எண்டுதான் தெரியேல்ல.” என்று முணுமுணுத்தாள் அவள்.

அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தான். அவள் பார்வையைத் தழைத்துக்கொண்டு, அவன் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். இந்த ஒரு கணத்துக்காகத்தானே காத்திருந்தான். “நிரல்!” என்றான் கேள்வியாக. அவள் இன்னும் அவனோடு ஒன்றினாளே தவிர விலகினாள் இல்லை.

“நிரல்!” என்றான் மீண்டும்.

அவளிடம் மாற்றமில்லை. அதன் பிறகு அவன் தயங்கவில்லை. அவளை அள்ளிக்கொண்டான். தன் மனைவி முழுமையாகத் தன்னிடம் வந்துவிட்ட சந்தோசத்தில் அவளை ஆரத்தழுவி, ஆயிரம் முத்தங்கள் பதித்தான். அவளுக்கும் இயல்பான கூச்சங்களும் தடுமாற்றங்களும் இருந்தனவே தவிர்த்து வேறு எந்த நினைவுகளும் அலைக்கழிக்கவில்லை. மனதார அவனை ஏற்றாள். மனமொப்பி அவனுக்கு இசைந்தாள்.

அவள் கூச்சம் அவனுக்கு ஆசையூட்டியது. அவள் போடும் வலுவற்ற தடைகள் அவனுக்குச் சிரிப்பு மூட்டின. மச்சான் எனும் சிணுங்கல் மயக்கமூட்டிற்று. அவளைக் கொண்டாடித் தீர்த்தான்.

தொடரும்...
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 47


அந்த ஆச்சிக்கும் அப்புக்கும் மகன், பேரப்பிள்ளைகள் என்று இருந்தாலும் அவர்களை வந்து பார்க்கவோ, அவர்களோடு வந்திருந்து கதைக்கவோ யாரும் இல்லை. மகன் குடும்பம் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என்றுதான் வந்து போவார்கள். அதில் பேரன் போன்றவன் தன் மனைவியுடன் அங்கு வந்தது மிகுந்த சந்தோசத்தைத் தந்திருந்தது.

அதில், காலையிலேயே தண்ணீரில் நனைய வைத்திருந்த கடலைப் பருப்பை வடித்து, பதமாக அரைத்து எடுத்து, வெங்காயம், செத்தல் மிளகாய்(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை எல்லாம் சின்ன சின்னதாய் வெட்டிப் போட்டு, கூடவே அளவாக அரைத்த உள்ளி இஞ்சியோடு உப்பும் சேர்த்துப் பிசைந்தார். இதற்குள் ஐயா துப்பரவு செய்து தந்த இறாலை குட்டி குட்டியாக நறுக்கிப் போட்டுக் கலந்து பருப்பு வடைகளைக் கட கட என்று சுட்டு எடுத்தார்.

“பிள்ளைகள் இன்னும் எழும்பக் காணேல்ல. சுட சுடச் சாப்பிட்டா நல்லாருக்கும்.” என்றபடி தேநீருக்கும் தண்ணீரை அடுப்பில் வைத்தார் ஆச்சி.

“வேலை வேலை எண்டு ஓடுற பிள்ளைகள். நிம்மதியா நித்திரை கொண்டு வரட்டும், விடு.” என்றார் அப்பு. அவர்கள் எழுந்து வந்ததும் ஆற்றிக் கொடுப்பதற்கு ஏற்பத் தேநீர்க் கோப்பைகளைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு இருவரும் வந்து, முற்றத்தில் இருந்த ஜாம் மரத்தின் கீழே அமர்ந்துகொண்டார்கள்.

தம் வாழ்க்கையை நல்லபடியாக ஆரம்பித்து வைத்த இருவரும் களைப்பில் நன்றாகவே உறங்கிப் போயிருந்தார்கள். ஆனாலும் பகல் பொழுதுகளில் உறங்கிப் பழக்கம் இல்லாததால் முதலில் விழித்தது அனந்தன்தான். தன்னை அண்டிக்கொண்டு தன் கைகளுக்குள் சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தவளைக் கண்டவனின் உதட்டினில் மெல்லிய புன்னகை. மனம் நிறைந்து தளும்பிற்று. மெல்ல அவள் கன்னம் வருடினான். தேகம் கூசிச் சிலிர்க்க, இன்னும் அவனுடன் நன்றாக ஒண்டினாள் அவள். அவன் உதட்டு முறுவல் விரிந்தது.

இன்றைய நாள் இப்படியான ஒரு நாளாக மாறிப்போகும் என்று அவன் எண்ணவே இல்லை. அதுவும் அவளாக அவனிடம் வந்தது… அந்த உணர்வு தந்த தித்திப்பில் இன்னும் அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து, உதட்டில் அழுத்தி முத்தமிட்டான்.

“மச்சான்…” மெலிதாய் அவள் சினுங்க மீண்டும் ஒருமுறை அழுத்தி முத்தமிட்டான்.

அதோடு அவள் உறக்கம் கலைந்து போயிற்று. கண்களைத் திறந்தாள். கலைந்திருந்த கேசம், உறக்கம் கலைந்த விழிகள், உதட்டு முறுவல் என்று உள்ளத்தை அள்ளினான் அவன். அவன் முகத்தில் பிரத்தியேகமாகத் தெரிந்த வெளிச்சம் அவள் முகத்தைச் சூடாக்கிற்று. உடலை ஆக்கிரமித்திருந்த சுகமான வலி, சற்றுமுன் அவன் அவளை மொத்தமாய் வாரிச் சுருட்டிக்கொண்டதை வேறு சொல்ல, உதடு கடித்து தன் வெட்கம் மறைக்க முயன்றாள் அவள்.

“வெக்கத்தை மறைக்கிறியாடி கள்ளி?” என்று கேட்டு அவளை மொத்தமாய் அபகரித்தான் அவன். முதல் முறை சுவை அறியத் துடித்தவன் இந்த முறை ருசி கண்ட பூனையாய் அவள் மெய் தொட்டு, உயிர் தீண்டத் தொடங்கினான். அவளின், “மச்சான்” மட்டும் அதட்டலாய், தவிப்பாய், வெட்கமாய், கூச்சமாய் என்று பல விதங்களில் வெளிவந்து, அவனை இன்னுமே அவளில் கிறங்க வைத்தது.

ஆசைகள் அடங்கி, மோகங்கள் தீர்ந்து, தேகங்கள் களைத்து விழுந்தபோது அவள் தலைகோதி முத்தமிட்டு, மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான் அனந்தன். “அம்மா அப்பாவோட வாழ்ந்த வீட்டில என்ர வாழ்க்கையும் ஆரம்பிக்கும் எண்டு நினைக்கவே இல்ல நிரல்!” என்றான் ஆசையாய் அவள் முகம் பார்த்து.

“நானும்தான்.” அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, தாடிக்குள் கொண்டுபோய் முகத்தை உரசியபடி சொன்னாள்.

அவன் உதட்டில் சிரிப்பு மலர்ந்தது. “உனக்குத் தாடி பிடிக்காதே!” என்றான் அவளை அறிந்தவனாக.

“பிடிக்காதுதான். இப்ப ஏனோ பிடிக்குது.”

“ஏனாம்?”

அது அவளுக்குச் செய்யும் சில்மிஷங்களால் இருக்கலாம். அதைச் சொல்லவா முடியும்? “தெரியா.” என்று முணுமுணுத்தாள்.

“தெரியாது? ஆனா உனக்கு ஏன் இப்ப பிடிக்குது எண்டு எனக்குத் தெரியுமடி!” என்றவன் மீண்டும் சேட்டைகளை ஆரம்பிக்க, “கடவுளே போதும்!” என்று வேகமாக அவனைத் தள்ளிவிட்டுக் கட்டிலை விட்டே எழுந்து ஓடினாள் அவள்.

அங்குத் தங்கும் எண்ணத்துடன் வராததால் அவளிடம் மாற்றுடைகள் இல்லை. அதில், குளித்து, அணிந்திருந்தவற்றைக் கழுவிக் காயப் போட்டுவிட்டு, அங்கே இருந்த அவன் ஷோர்ட்ஸ், டி ஷர்ட் எடுத்து அணிந்துகொண்டாள். அவன் பார்வை கல்மிஷத்தோடு அவளில் பதிய, அவள் முகத்தில் சிவப்பேறியது. அவனிடம் மாட்டிக்கொள்ளாமல் ஓடிப்போய் ஆச்சியின் அருகில் அமர்ந்துகொண்டாள்.

அவர் சுட்டு வைத்திருந்த வடைகளோடு தேநீரையும் அருந்தினர். ஓரளவு காய்ந்திருந்த அவள் உடைகளை அயர்ன் செய்து, மீண்டும் அணிந்துகொண்டு வீதியில் இறங்கினர்.

நெருங்கிய நண்பர்கள் வீடு, உறவுகள் என்று நடந்தே சென்று தலையைக் காட்டினார்கள். அவன் திருமணமாகி மனைவியோடு வந்திருப்பதைக் கண்டு எல்லோருக்கும் மிகுந்த சந்தோசம். பழைய கதைகளைப் பேசி மகிழ்ந்தார்கள். இளகி மலர்ந்திருந்த முகத்தோடு அவன் பேசிச் சிரித்த அழகை காணாதது போன்று கண்டு ரசித்துக்கொண்டாள் நிரல்யா.

திரும்பி வருகையில் இருவரிடத்திலும் அழகான மௌனம். இருவரும் ஒன்றாக நடப்பது என்பது எப்போதும் அவர்களுக்குப் பிடித்த ஒன்றுதான். ஆனால் இன்று அவர்களுக்குள் பூத்திருந்த புது உறவின் பூரிப்போடு, வெயில் இறங்கிய பொழுதில், காலாற நடந்துவிட்டு வந்தது இனிய நிகழ்வாய் மாறிப் போயிற்று. இனிப் புறப்பட வேண்டும். இருவருக்குமே மனமேயில்லை.

அந்த வீடும் அறையும் அங்கு அரங்கேறிய உறவும் போகாதே என்று இழுத்துப் பிடித்தன. சுந்தரலிங்கத்துக்கு அழைத்து மறுநாள் வருவதாகச் சொன்னான் அனந்தன். அவன் குரலிலிலும் பேச்சிலும் மறைக்க முயன்றும் தெரிந்த ஏதோ ஒன்றை மனிதர் கண்டுகொண்டார் போலும்.

“அவசரம் ஒண்டும் இல்ல நந்தா. ரெண்டு மூண்டு நாளைக்கு நிண்டுபோட்டே வாங்க.” என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டு வைத்தார் அவர்.

அடுத்த நாள் மாலை வந்து சேர்ந்தவர்களின் முகங்களே அவர் ஊகித்தது உண்மைதான் என்று சொன்னதில் அவருக்கு மிகுந்த சந்தோசம். அமிர்தவல்லியும் மகள், மருமகன் முகங்களைக் கண்டு சந்தோசத்தில் விழிகள் கலங்கி நின்றார். உள்ளம் மட்டும் இறைவனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகளைச் சொல்லி மாய்ந்தது. அன்று வரையில் என்னால் தானோ என் மகள் இத்தனை துன்பங்களையும் அனுபவித்தாள் என்று அவரை அரித்துக்கொண்டிருந்த வேதனை அப்போதுதான் முழுமையாய் அவரை விட்டு அகன்று போனது.

அதன் பிறகான நாள்கள் இல்லறத்தின் இனிமையையும் தாம்பத்தியத்தின் சுகத்தையும் அவர்கள் இருவருக்கும் சொல்லிக்கொடுத்த நாள்களாக மாறிப்போயின. இரவில் தெரியும் நிலவும், மொட்டை மாடி வாசமும், உலகையே மறக்க வைக்கும் கணவனின் அணைப்பும் என்று நிரல்யாவின் உலகம் அனந்தனால் நிறைந்து தளும்பின.

சில நேரங்களில் தவிர்க்கவே முடியாமல் பழைய நினைவுகள் அவளைத் தாக்கிச் செல்லாமல் இல்லை. தோற்றுப்போன முதல் காதல். நினைவு வருகிற பொழுதுகளிலெல்லாம் வலிக்காமல் இல்லை. ஆனால் உயிர் போகும் அளவுக்கு வலிப்பது மாறி, சுருக்கென்று தைக்கும் நிலைக்கு வந்திருந்தது. கூடவே அந்த நினைவுகளைக் கடக்கவும், அவற்றிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டிருந்தாள். கண்களில் கள்ளத்தனத்தைத் தேக்கி, மீசைக்குள் மறையும் கணவனின் விசமச் சிரிப்பு ஒன்று போதும் அவளின் அந்த நாளையே அழகாக்க.

மூன்று மாதங்கள் ஓடிப் போயிருந்தன. அன்று, “நிரா, எனக்கு உன்னை ஒருக்காப் பாக்கோணும். என்ர குடும்பத்தோட உன்ர வீட்டுக்கு வரலாமா?” என்று கேட்டு, குறுந்தகவல் அனுப்பியிருந்தான் சிசிர.

அவள் பதறிப்போனாள். ஏனோ என்று யோசனை ஓடிற்று. கைப்பேசியை தூக்கிக்கொண்டு அனந்தனிடம் ஓடினாள்.

அங்கே மேலே, மொட்டை மாடியில் மேற்சட்டை இல்லாமல், உடல் வியர்த்து வழிய த்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் அவன்.

அவள் விழிகளில் தெரிந்த கலக்கத்தைக் கண்டு நடையை நிறுத்தி, “என்ன?” என்றான். ஒன்றும் சொல்லாமல் அந்தக் குறுந்தகவலைக் காட்டினாள்.

அதை விழிகளால் மேய்ந்துவிட்டு, “வரச் சொல்லுறதை விட்டுட்டு என்னட்ட என்னத்துக்குக் காட்டுறாய்?” என்று துவாயை எடுத்து முகம், உடல் எல்லாம் துடைத்தான் அவன்.

“திடீர் எண்டு என்னத்துக்குப் பாக்க நினைக்கிறார்?” அவள் குரலில் மெல்லிய நடுக்கம்.

“அது அவன் வந்தாத் தெரியப்போகுது. வரச் சொல்லு.”

அப்போதும் அவள் அவன் முகம் பார்க்க, “என்னடி?” என்றவன் அவளை இழுத்துத் தன் கைகளுக்குள் கொண்டு வந்தான்.

“வரவா எண்டு கேக்கிறவனிட்ட வராத எண்டு சொல்லுவியா நீ? அதைவிடக் குடும்பமா வரவா எண்டுதானே கேக்கிறான்.” என்று அவளுக்கு விளங்க வைத்தான்.

அவள் முகமும் தெளிந்தது. “அப்ப வரச் சொல்லிச் சொல்லுறன் என்ன?” என்றாள் திரும்பவும்.

“சொல்லு எண்டுதானே சொல்லுறன்!” என்று அவள் தலையில் தட்டிவிட்டுக் குளிக்க நடந்தான் அனந்தன்.

தொடரும்...

இது போன அத்தியாயத்தோட சேர்த்து எழுத நினைச்ச பார்ட். எழுத நேரமில்லாம போயிற்றுது. அதால இப்ப போட்டு இருக்கிறன். இரவுக்கு அடுத்த அத்தியாயம் வருமா தெரியாது. வராட்டி நாளைக்கு வரும். ஓகேயா?
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 48



குடும்பமாக எங்கும் புறப்படுவதென்றால் கார் வாடகைக்கு எடுத்துக்கொள்வான் சிசிர. இன்றும் அப்படித்தான் வாடகைக்கு எடுத்த காரில் மனைவி பிள்ளைகளோடு திருகோணமலையிலிருந்து வவுனியாவுக்கு வந்து சேர்ந்தான்.

அவள் வீட்டுத் தெருவுக்குள் நுழைகையிலேயே அவன் இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தது. என்னென்னவோ நினைவுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வந்து நெஞ்சில் முட்டி மோதின. அவற்றைச் சமாளிக்க முயன்றவாறே காரைக் கொண்டு வந்து அவர்கள் வீட்டின் முன்னே நிறுத்தினான்.

அதுவரையில் அவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்கிற தவிப்புடன் நடமாடிக்கொண்டிருந்த நிரல்யா வாசலுக்கு வந்தாள். அவனைக் கண்டுவிட்ட நொடியில் அவள் இதயம் நின்று துடித்தது. ஒரு காலத்தில் உயிராக நேசித்த நபரை வெறுத்து ஒதுக்கி இருந்தாலே நேரில் சந்திப்பது என்பது இலகு கிடையாது. இங்கே அப்படி எதுவுமே நடக்காமல் அநியாயமாக ஒருவர் மற்றவருக்கு யாரோவாகிப்போய் நிற்கிறார்கள். அப்படி இருக்க எப்படி அவனைச் சாதாரணமாக எதிர்கொள்ள?

அங்கே அவன் காருக்குள் என்றால் இவள் வீட்டு வாசலில். இருவர் பார்வையும் மற்றவரில்தான். பொட்டு வைத்த வட்ட நிலவாய் முகம் இருக்க, தாலிக்கொடியைக் கழுத்தில் தாங்கித் தன்னையே பார்த்தபடி நின்றவளைக் கண்டு, நொடியில் மரத்தை அறுத்துச் செல்லும் மின்னலாய் சிசிரவின் நெஞ்சையும் கூரிய ஆயுதம் ஒன்று சரக்கென்று கீறிச் சென்றது. அந்த வலியை அடக்கிக்கொண்டு இறங்கி, மனைவியின் பக்கம் வந்து மகனை வாங்கிக் கொண்டான். ருக்க்ஷி இறங்கிய பிறகு மீண்டும் அவளிடம் மகனைக் கொடுத்துவிட்டு மகளைத் தூக்கிக்கொண்டான்.

அதுவரையிலும் கூட நின்ற இடத்திலிருந்து நிரல்யாவினால் அசைய முடியவில்லை. விழிகளை அவனிடமிருந்து அசைக்கவும் முடியவில்லை. நிற்க முடியாமல் உடலில் ஒரு நடுக்கம் பரவ, வாசல் நிலையைப் பற்றிக்கொண்டாள்.

ஏற்றுக்கொண்டுவிட்ட நிதர்சனம். அதைக் கடந்துவர ஆரம்பித்துவிட்ட போதிலும் இன்னும் வலித்தது. ஒருவருக்கு மற்றவர் துரோகம் செய்திருந்தாலோ, ஏமாற்றியிருந்தாலோ, அல்லது இருவருமாக மனமொப்பி நம்மால் இனியும் இணைந்திருக்க முடியாது என்று பிரிந்திருந்தாலோ இந்தளவில் தாக்கியிராதோ தெரியாது.

இதற்குள் காரின் சத்தம் கேட்டு, “வந்திட்டினமோ பிள்ளை?” என்றுகொண்டு வந்தார் சுந்தரலிங்கம். அவருக்கு அவன் வருகை ஏன், இதனை எப்படிக் கையாள்வது என்று தெரியாத நிலை. அமிர்தவல்லிக்கும் நெஞ்சில் ஒரு அந்தரிப்பு. எதையும் காட்டிக் கொள்ளாது வீட்டின் பெரியவர்களாக வாசலுக்கு வந்து, “வாங்கோ தம்பி! வாங்கோம்மா.” என்று வரவேற்றார்கள்.

இதற்குள் கொஞ்சமே கொஞ்சம் தன்னைச் சமாளித்துக்கொண்டிருந்தாள் நிரல்யா. அதுவும் மனைவி, அவள் கையில் கைக்குழந்தை, அவன், அவன் கையில் மகள் என்று நிறைவான குடும்பமாக வந்தவனைக் கண்டு உள்ளம் நிறைய, “வா…ங்கோ!” என்று தானும் வரவேற்றாள்.

சிசிர ஒரு கையில் சச்சினியைத் தூக்கி இருக்க மறு கையில் ஏதோ ஒரு பெட்டியைக் கொண்டுவந்து அவளிடம் நீட்டினான். கைகள் தானாக வாங்க கண்களில் கேள்வியுடன் ஏறிட்டவளிடம் “பிலேடெட் ஹாப்பி மேரீட் லைஃப் நிரா.” என்றான் அவள் விழிகளையே பார்த்து.

நொடியில் நிலைகுலைந்துபோனாள் நிரல்யா. விழிகள் மளுக்கென்று நிறைந்து தளும்ப, “நன்..றி!” என்று தடுமாறினாள்.

ருக்க்ஷியால் அவளிடமிருந்து விழிகளை அகற்ற முடியவேயில்லை. அவளைப் பற்றிச் சிசிர சொன்ன நாளில் இருந்தே அவளை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்கிற பேராவல் ருக்க்ஷிக்குள் இருந்தது. ஏன், பார்த்து என்ன செய்யப் போகிறாய், விலகி நிற்பதுதான் உன் வாழ்க்கைக்கே நல்லது என்று அறிவு எடுத்துச் சொன்னபோதிலும் தன் கணவனை அத்தனை ஆழமாக நேசித்த அந்தப் பெண்ணை எப்படியாவது பார்க்க மாட்டோமா என்கிற ஆசை அவளை விட்டுப் போகவே இல்லை.

ஆனால், அதைச் சொல்லி, நடந்தவற்றை எல்லாம் கடந்து வர முயன்றுகொண்டிருக்கும் கணவனை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றக் கூடாது என்றுதான் சொல்லாமலேயே இருந்தாள். அப்படி இருக்கையில் சிசிரவாகவே கேட்டதும் புறப்பட்டு வந்துவிட்டாள்.

இப்போது கணவன் சொன்ன வாழ்த்துக்குக் கலங்கி நின்றவளைக் கண்டு அவளுக்கும் நெஞ்சைப் பிசைந்தது. காட்டிக்கொள்ளாமல் வந்து கணவனோடு அமர்ந்துகொண்டாள். அமிர்தவல்லி அருந்தப் பானம் கொடுத்து உபசரித்தார்.

யாருக்கு என்ன கதைப்பது என்று தெரியாத நிலை. அங்கிருந்த யாருமே இயல்பாய் இல்லை. எல்லோரிடத்திலும் ஒருவிதச் சங்கடம். “இன்னும் நகைக்கடைலதான் வேலையா?” சும்மா கேட்டு வைத்தார் சுந்தரலிங்கம்.

“இல்லை அங்கிள் விட்டுட்டன். வாற கிழமை திரும்ப லண்டனுக்குப் போகப்போறன்.” என்றதும் அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் நிரல்யா. நெஞ்சுக்குள் எதுவோ அடைத்துக்கொண்டு வந்தது.

சிசிரவால் அவள் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. இது அன்று அவளைக் கூட்டிச் செல்வதற்காகச் செய்த ஏற்பாடு. அங்கே அவர்கள் வாழ்வதற்கு என்று ஒரு வீடு, அவள் பார்ப்பதற்கு வேலை என்று எல்லாம் பார்த்து வைத்துவிட்டுத்தான் லண்டனிலிருந்து வந்தான். கடைசியில் என்னவெல்லாமோ நடந்து போயிற்று.

இங்கே அவளுக்கருகில் இருந்துகொண்டு அவளை மறந்து தன்னால் வாழவே முடியாது என்று இந்த இடைப்பட்ட நாள்களில் அவனுக்குத் தெரிந்து போயிற்று. என்னதான் இருவரும் சேரவே முடியாத இரயில் தண்டவாளங்களாக மாறிவிட்டார்கள் என்று அறிவுக்குப் புரிந்தாலும் கரையானாக அவனைத் தின்னும் இந்த வலியிலிருந்து வெளிவர முடியவே இல்லை.

அப்படி அவளை இழந்துவிட்ட வலியை நெஞ்சில் சுமந்தபடி ருக்க்ஷியின் அருகில் செல்ல முடியாமல் விலகி நின்று அவன் அவளுக்குச் செய்வதும் பெரும் துரோகமாகவே பட்டது.

அதைவிட கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் இந்த வாழ்க்கை முறையும் பிடிக்கவில்லை. ஆக, எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் இதுதான் நல்ல முடிவு என்று தோன்றிவிட துணிந்து இறங்கிவிட்டான்.

அந்த ஆராய்ச்சிப் பண்ணைப் பொறுப்பாளரோடு பேசி, தனக்கு நடந்தவற்றை எடுத்துச் சொல்லி, மீண்டும் தனக்கு ஒரு வேலைக்கு முயன்று பார்க்கும்படி சொல்லியிருந்தான். அவருக்கு மிக மிகப் பிடித்த மாணவன் அவன் என்பதால் அவரும் முயன்றிருந்தார். அவன் இன்னும் முடிக்காத அவனுடைய கடைசி ஆராய்ச்சிக் கட்டுரையை மீண்டும் புதிதாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் திரும்பவும் அவனுக்கு அங்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்திருந்தது. அதைச் சொல்லிவிட்டுக் கடைசியாக அவளிடம் விடைபெறவே வந்திருந்தான்.

“ருக்க்ஷி, பிள்ளைகள்?” ஒரு வழியாகத் தன் அதிர்ச்சியை விழுங்கிக்கொண்டு வேகமாய் வினவினாள் நிரல்யா.

“இப்ப கொஞ்ச நாளைக்கு இங்கதான் இருக்கோணும். பிறகு அவேயையும் அங்கேயே கூப்பிட்டுடுவன்.”

“அதுதான் நல்லம். படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலையச் செய்தாத்தானே படிச்சதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.” என்று அந்தப் பேச்சைச் சுந்தரலிங்கம் தொடர்ந்தார்.

அவருக்கு அவன் இனி இங்கே இருக்கமாட்டான் என்பதில் ஒரு நிம்மதி. அவன் அவன் வாழ்க்கையையும் மகள் தன் வாழ்க்கையையும் பார்ப்பதுதான் நல்லது என்று எண்ணினார்.

நிரல்யா கையில் இருக்கும் பெட்டியை வைக்கச் செல்வதுபோல் உள்ளே சென்று தன்னைச் சமாளித்துக்கொண்டு வந்தாள்.

அங்கிருந்த எல்லோருக்குமே அவள் மனநிலை புரியாமல் இல்லை. அதுவும் சிசிரவுக்கு தொண்டைக்குழிக்குள் எதுவோ சிக்கிக்கொண்ட உணர்வு. ஆனால் இதுதானே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. இதைத் தவிர அவளுக்கும் சேர்த்து நல்லது என்று அவனால் வேறு எதைச் செய்துவிட இயலும்?

“குழந்தைக்கு எத்தின மாதமாச்சு?” என்று கேட்டுத் திடீரென்று உருவாகிவிட்ட இறுக்கமான சூழ்நிலையைச் சமாளித்தார் அமிர்தவல்லி.

“மூண்டு மாதம் முடியப் போகுது.” என்று செல்லத் தமிழில் பதில் சொன்னாள் ருக்க்ஷி.

அமிர்தவல்லிக்கு வியப்பு. “நல்ல வடிவாத் தமிழ் கதைக்கிறீங்கம்மா.” என்று பாராட்டினார். சிசிர, நிரல்யா இருவர் விழிகளும் தடுக்கவே முடியாமல் சந்தித்து மீண்டன.

“என்ர அப்பா தமிழ்தான். நாங்க இருக்கிற அயலட்டையும் தமிழ்தான்.” என்று சொன்னாள் ருக்க்ஷி.

“மகள் தம்பிய மாதிரி என்ன. பிள்ளைக்கு என்ன பெயர்?”

“பெயர் சச்சினி. நேசரி போறா. அம்மம்மாக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டுங்க மகள்.” என்று ருக்க்ஷி கணவனின் மடியில் அமர்ந்திருந்த சச்சினியைத் திரும்பிப் பார்த்துச் சொல்ல, அவளோ வெட்கத்துடன் தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் தோளில் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

அதைக் கண்ட அனைவர் முகத்திலும் மெல்லிய முறுவல். சிசிரவும் சின்ன முறுவலுடம் மகள் தலையைப் பாசமாக வருடிக் கொடுத்தான். அப்படியே அவள் காதுக்குள் பாட்டுப் பாடிக் காட்டும்படி சொன்னான்.

இந்தப் பக்கம் திரும்பாமல்,

அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சம் அச்சச்சோ
உச்சம் உள்ள மச்சம் எல்லாம் பத்திக்கிச்சோ என்று அவள் பாட, ஒருகணம் எல்லோருமே திகைத்து மறுகணம் சத்தமாகச் சிரித்திருந்தனர்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அதுவும் நிரல்யா அதுவரை நேரமும் நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்த அழுத்தம் எல்லாம் அகன்றுபோக, தன்னை மறந்து கலகலவென்று சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.

சிசிரவுக்கும் ருக்க்ஷிக்கும் வெட்கமாயிற்று. நேசரி பாட்டு ஏதும் பாடுவாள் என்றுதான் அவர்கள் எண்ணினார்கள். “சொறி அம்மா. மகளுக்குப் பொருள் தெரியாது. காதில விழுந்ததைப் பாடமாக்கிப் பாடிட்டா.” அவசரமாக மன்னிப்புக் கேட்ட சிசிரவின் விழிகள், மலர்ந்து சிரிக்கும் நிரல்யாவைத் தொட்டு மீண்டன.

இத்தனை நேரமாக அவள் இயல்பாக இருக்கப் போராடிக்கொண்டிருந்ததைக் கவனித்துக்கொண்டிருந்தவனுக்கு அவளின் சிரித்த முகம் பெரும் ஆறுதலைத் தந்தது.

அவளுக்குச் சச்சினியை மிக மிகப் பிடித்துப் போயிற்று. கூடவே சிசிரவைப் போன்று நன்றாகப் பாடுகிறாள் என்கிற எண்ணமும் ஒருவிதமாய்த் தாக்க, “மகே லங்கட்ட எனவத மெனிக்கே? (என்னட்ட வாறீங்களா செல்லம்?)” என்றாள் ஆசையாக.

“ம்ஹூம்!” என்று மறுத்தபடி மீண்டும் தகப்பனின் தோளில் முகம் புதைத்தாள் சச்சினி.

அவள் தலை வருடி, “யண்ட துவே.(போங்க மகள்.)” என்றான் சிசிர.

“ம்ஹூம்!”

“ஆவாநங் chocolate தெனவா.(வந்தா சொக்லேட் தருவன்.)” என்று ஆசைகாட்ட இறங்கிக் குடுகுடு என்று ஓடிவந்தாள் அவள். மீண்டும் அங்கே சிரிப்பு.

ஒரு குட்டிப் பாவாடையும் தொப்புள் தெரியுமளவுக்கு வயிற்றில் இடைவெளி விட்டு மேலே குட்டிச் சட்டை ஒன்றும் போட்டிருந்தாள் சச்சினி.

நிரல்யாவுக்கு ஏனோ உருவத்தில் மட்டுமல்லாமல் பாடும் திறமையில் செய்யும் சேட்டைகளில் எல்லாம் அவள் சிசிரவைப் போலவே இருப்பதாகப்பட்டது. ஆசையாக அள்ளி எடுத்து முத்தமிட்டுவிட்டுத் தாய் தந்தையரின் அறைக்கு அழைத்துச் சென்று, வெளியே அழைத்து வருகையில் அவளின் சுருண்ட குழல்கள் எல்லாம் ஒரு குட்டி பாண்டில் அடங்கி இருக்க, கைகள் நிறைய சொக்லெட்ஸ் இருந்தன.

அதோடு திரும்பவும் ஓடிப்போய்த் தகப்பனின் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள் அவள்.

இதற்குள் கைக்குழந்தை அமிர்தவல்லியின் மடிக்கு வந்திருக்க, “அப்ப காலிக்கு போறதே இல்லையா நீங்க?” என்று கேட்டுக்கொண்டிருந்தார் சுந்தரலிங்கம். நிரல்யா சிசிர இருவர் முகங்களும் மாறப்பார்த்தன. அப்போதுதான் தவறான கேள்வியைக் கேட்டது அவருக்கும் புரிந்தது.

ஆனால், அவருக்கு அவர்களிடம் என்ன கதைப்பது என்று உண்மையில் திணறலாகவே இருந்தது. தேடி தேடிப் பேசிக்கொண்டிருந்தார்.

“இல்ல அங்கிள். நாங்க இங்கயே செட்டில் ஆகிட்டோம்.” என்று சமாளித்துக்கொண்டு சிசிர பதில் சொல்ல, “தம்பிய என்னட்டத் தாங்கம்மா?” என்று கேட்டு வாங்கிக்கொண்டாள் நிரல்யா.

கொழுக் மொழுக் என்று ருக்க்ஷியின் முகச் சாயலில் இருந்த குழந்தை, தன் கொட்டைப் பாக்குக் கண்களை விழித்து விழித்து அவளைப் பார்த்தான்.

“கியூட் பேபி!” என்று கொஞ்சினாள்.

“தலையைக் கொஞ்சம் நிமித்தின மாதிரி வச்சிருக்கோணும் பிள்ளை. இல்லாட்டிச் சத்தி(வாந்தி) எடுக்கப் பாப்பார்.” என்று குழந்தையை எப்படிக் கையாளுவது என்று காட்டிக்கொடுத்தார் அமிர்தவல்லி. வெகு கவனமாகக் கற்றுக்கொண்டாள் நிரல்யா.

அப்போது அனந்தன் மாடியிலிருந்து இறங்கி வந்தான்.

திரும்பிப் பார்த்த எல்லோர் நெஞ்சிலும் மெல்லிய பதற்றம். சிசிரவிடம் ஒரு இறுக்கம். நிரல்யா மட்டும் அவன் வெளியே செல்லும் உடையில் இறங்கி வருவதைக் கண்டு புருவங்களைச் சுருக்கினாள். நேற்றுக் கொழும்பு சென்றவன் காலையில்தான் திரும்பி இருந்தான். அவள் கீழே வரும் வரையில் நல்ல உறக்கம் வேறு. இப்போது எங்கே போகப் போகிறானாம்? அவள் விழிகள் அவனைக் கேள்வியோடு ஏறிட்டன.

“இங்க வெளில சின்ன அலுவல் ஒண்டு இருக்கு நிரல். கொஞ்ச நேரம் தான். போயிற்று உடனேயே வந்திடுவன்.” என்று அவள் பார்வைக்குப் பதில் சொன்னவன் சிசிரவை பார்த்துத் தலையசைத்து ஒரு வரவேற்பைக் கொடுத்துவிட்டு, “வாங்கோம்மா!” என்றான் ருக்க்ஷியிடம்.

அவளுக்கு அவனைப் பார்த்ததுமே கணவனுக்கு அடித்தவன் இவன் என்கிற நினைவுதான் வந்தது. இப்போதும் அவனின் தோற்றம், இறுக்கமான முகம், பார்வையில் இருக்கும் கூர்மை எல்லாமே நடுக்கத்தைக் கொடுக்க, மீண்டும் கணவனை அடித்து விடுவானோ என்கிற பயம்தான் வந்தது.

சச்சினி அவனைக் குறுகுறு என்று பார்க்க, “மாமாட்ட வாறீங்களா?” என்று புன்சிரிப்புடன் கையை நீட்டினான். அவள் படக்கென்று முகத்தைத் திருப்பி எப்போதும்போலத் தகப்பனின் தோளில் முகத்தைத் மறைத்துக்கொண்டாள்.

“அவாவை வரவைக்கோணும் எண்டால் நீங்க சொக்லேட் குடுக்கோணும் மச்சான்.”

“அந்தளவுக்குப் பெரிய ஆளா அவா.” என்று கேட்டபடி அவளருகில் வந்து அமர்ந்தான் அனந்தன்.

அதற்குள் சிசிர திரும்பவும் லண்டன் செல்லப்போகும் விடயத்தை அவனிடம் பகிர்ந்துகொண்டார் சுந்தரலிங்கம்.

“ஓ!” என்று கேட்டுக்கொண்டவன், “பயண ஏற்பாடு எல்லாம் பாத்தாச்சா?” என்றான் சிசிரவிடம்.

அப்படி அவன் தன்னிடம் நேராகக் கதைப்பான் என்று சிசிர எதிர்பாராத போதும் சமாளித்து, “ஓம், அது அங்க ஒபீசிலையே பாப்பினம். விசா வந்திட்டுது, இனி வெளிக்கிடுறதுதான் வேலை.” என்று பதில் சொன்னான்.

அதன் பிறகு அவன் குடும்பத்தினர் என்ன செய்யப் போகிறார்கள் என்று கேட்டுக்கொண்ட அனந்தனின் கவனம், இப்போது நிரல்யாவின் மடியில் இருக்கும் குழந்தையிடம் சென்றது.

நல்ல முக வெட்டும், கருமை நிறக் கேசமுமாக உள்ளத்தை அள்ளினான் சின்னவன். ஒரு கை அவளுக்குப் பின்னால் இருந்த சோபாவைப் பற்றியிருக்க குழந்தையின் முகத்தருகே குனிந்து சொடக்கிட்டான்.

“என்ன பார்வை இது? மாமாவப் பாத்து முறைக்கிறீங்களா நீங்க?” என்று கேட்க, ஒருகணம் தன் கொட்டைப்பாக்கு விழிகளைத் திறந்து விழித்த குழந்தை, அடுத்த கணமே கைகால்களை அடித்துக் கெக்கபிக்கே என்று சிரிக்க ஆரம்பித்தான். குட்டி வயிறு குலுங்கும் அளவுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

அனந்தனையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்த நிரல்யாவும் அடக்கமாட்டாமல் நகைத்தாள்.

“உனக்கு என்ன சிரிப்பு?” என்று அதட்டியவன் உதட்டிலும் முறுவல் மலர்ந்து கிடந்தது.

“பின்ன என்ன மச்சான்? எல்லாரும் உங்களைப் பாத்துப் பயந்தா அவருக்குத் தாடியும் மீசையுமா இருக்கிற உங்களைப் பாக்க ஜோக்கர் மாதிரி இருக்குப் போல. பாருங்க இன்னும் சிரிச்சு முடிக்கேல்ல.” என்றவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிப்பினூடுதான் இவ்வளவையும் சொன்னாள்.

“அப்பிடியா, என்னைப் பாக்க உங்களுக்கு ஜோக்கர் மாதிரியா இருக்கு?” என்றவனின் கேள்விக்கும் அந்தக் குட்டிக் கண்ணன் குலுங்கிச் சிரித்தான். “என்னடியப்பா, இதுக்கும் சிரிக்கிறார். உண்மையாவே என்னைப் பாக்க அவருக்கு அப்பிடித்தான் இருக்கோ?” என்றவனின் கேள்வியில் கண்ணீர் வருமளவுக்குச் சிரித்தாள் நிரல்யா.

“சும்மா இரடியப்பா! அவரை விட மோசமா நீதான் சிரிக்கிறாய்!” என்று அவள் தலையைச் செல்லமாகத் தட்டிய அவனுக்கும் சிரிப்புத்தான்.

உதட்டில் தானாய் மலர்ந்த முறுவலும் விழிகளில் படர முயன்ற கண்ணீருமாக அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த சிசிரவுக்கு நெஞ்சம் தளும்பிப் போயிற்று.

அவள் சந்தோசமாய் இருக்கிறாள். அவனுடைய லஸ்ஸன கெல்ல சந்தோசமாய் இருக்கிறாள். அவன் உள்ளம் மாய்ந்து மாய்ந்து சொன்னது. வலியோடு கூடிய ஒரு சந்தோசம். அதைவிட, அருகில் கணவன், மடியில் ஒரு குழந்தை என்று அவள் இருந்த அந்தக் காட்சி அவன் இதயப் பெட்டகத்தில் மிக அழகாய்ச் சென்று அமர்ந்துகொண்டது.

தொடரும்...
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 49


உடலும் உள்ளமும் தளர அமர்ந்திருந்த இருக்கையிலேயே சாய்ந்தமர்ந்தான் சிசிர. என்னவோ அவனுக்கு அந்தக் கணங்களை விழிகளை மூடி உள்வாங்கி உணர வேண்டும் போலிருந்தது. இத்தனை காலத்துத் தவிப்பெல்லாம் கரை தொட்ட உணர்வு.

அந்த நாள்களில் எல்லாம் தகப்பனை விடவும் மச்சானின் பேச்சு வந்தால்தான் நடுங்குவாள். அவனை எண்ணித்தான் அதிகமாகப் பயப்படுவதும். இன்று அதே மச்சானோடு அவளுக்கு இருக்கும் அந்நியோன்யத்தையும் அவர்களின் மன நெருக்கத்தையும் கண்கூடாகக் கண்டவனுக்கு ‘உனக்காகவே காத்திருந்தவள விட்டுட்டியேடா’ என்கிற அந்தரிப்பு அகன்றது.

“உங்களுக்குச் சாப்பாடு தரவா? நீங்க இன்னும் காலமச் சாப்பாடு சாப்பிடேல்லை.” அவன் சிந்தனையோட்டத்தை நிரல்யாவின் குரல் இடையிட்டது.

அங்கே அவளின் கேள்விக்கு, “இல்ல நிரல். நான் இனி வெளிக்கிடோணும். நீ அவேயக் கவனி.” என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தான் அனந்தன்.

“அவே ஜூஸ் குடிச்சிட்டினம். இனிச் சாப்பிடுறதுதான். உங்களுக்குத் தேத்தண்ணி மட்டுமாவது கொண்டு வாறன்.” என்றவள் எழுந்து, குழந்தையை அமிர்தவல்லியிடம் கொடுத்துவிட்டுக் குசினிக்கு விரைந்தாள்.

“இல்லை, எங்களுக்குச் சாப்பாடு எல்லாம் வேண்டாம். இனி நாங்க வெளிக்கிடச் சரியா இருக்கும்.” பார்வை ஒருமுறை மனைவியிடம் சென்று வரச் சங்கடத்துடன் மறுத்தான் சிசிர.

“அவ்வளவு தூரத்தில இருந்து வந்துபோட்டுச் சாப்பிடாம போறதோ? நான் சமைச்சு வச்சிட்டன். சாப்பிட்டு, களையாறிப் பின்னேரமாப் போகலாம்.” என்று சொன்னார் அமிர்தவல்லி.

“இல்லை அம்மா…” என்றவனை இடையிட்டு, “எப்பிடியும் சாப்பாடு தராம மாமி அனுப்ப மாட்டா. சாப்பிட்டுப் போங்கோ!” என்று முடித்து வைத்தான் அனந்தன்.

இதற்குள், “மச்சான், இங்க ஒருக்கா வாங்க!” என்று அங்கிருந்து குரல் கொடுத்தாள் நிரல்யா.

அவனும், “என்ன நிரல்?” என்று எழுந்து சென்றான்.

பார்வை ஒருமுறை இங்கே விறாந்தைக்கு வந்து போக, அவன் கரம்பற்றிச் சற்றுத் தள்ளி அழைத்துச் சென்று, “குட்டித் தம்பிக்கு ஒரு காப்பும் சச்சினிக்கு சின்ன தோடும் எடுத்து வச்சனான். அதோட அவர் எனக்குத் தந்த சாறியையும் மூக்குத்தியையும் அவாக்குக் குடுப்பம் எண்டு நினைச்சன். நீங்க என்ன சொல்லுறீங்க?” என்றவள் தேநீருக்குப் பதிலாகக் கொஞ்சமாய்ப் புட்டும் பகலுக்கு என்று அமிர்தவல்லி சமைத்து வைத்திருந்த கறியையும் போட்டுக் கொடுத்தாள்.

“எனக்கு நேரம் போகுது நிரல்.”

“ரெண்டு வாய்தான், சாப்பிட்டுப் போங்க.”

“இது ரெண்டு வாயா உனக்கு?” என்று கேட்டாலும் அவள் விடமாட்டாள் என்று தெரிந்து அங்கேயே நின்று சாப்பிட்டான்.

“என்ன செய்ய மச்சான்? குடுக்கட்டா?” என்றாள் திரும்பவும்.

“சின்னாக்களுக்குக் குடுக்க நினைக்கிறதைக் குடு. அவாக்கு அதக் குடுக்காத. அது சரியில்ல. வேற ஏதும் உன்னட்ட இருந்தாக் குடு. அத நாங்க வேற ஆருக்கும் குடுக்கலாம்.” என்றவன் அவளுக்கும் ஒரு வாய் கொடுத்தான்.


அவன் தாடியில் கிடந்த ஒற்றைப் புட்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக்கொண்டவள், “அப்பிடியே இந்தத் தாடி மீசையால தட்டையும் கூட்டிவிட்டீங்க எண்டா எனக்குக் கழுவுற வேலை மிச்சம்.” என்றாள் வேண்டுமென்றே.

பார்வை ஒருமுறை குசினி வாசலுக்குச் சென்று வர அவள் காதருகில் குனிந்து, “அது ரெண்டையும் என்ர மனுசின்ர உதட்டைக் கூட்டுறதுக்குத்தான் வச்சிருக்கிறன்.” என்றுவிட்டுப் போய் சிங்கிள் தட்டைப் போட்டுவிட்டு அவன் கையைக் கழுவினான்.

“மச்சான்!” என்றவளுக்கு முகம் சிவந்து போயிற்று. வேகமாக அவள் பார்வையும் வாசலுக்குச் சென்று வர, அவனுக்கு ஒரு அடியைப் போட்டாள்.

சின்ன சிரிப்புடன், “சரி வா, நிறைய நேரம் இங்கயே நிண்டா சரியில்ல.” என்றவனின் கையில் தேநீர்க் கோப்பையைத் திணித்தாள் நிரல்யா. அவளோடு விறாந்தைக்கு வந்தவன் அருந்தி முடித்த கோப்பையை அவளிடம் நீட்டிவிட்டு எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

அவன் போவதையே பார்த்து நின்றவள், ஏதோ நினைவு வரவும் புறப்பட்டுவிட்டவனைப் பின்னால் கூப்பிடாமல் அவனிடம் ஓடினாள்.

“என்ன நிரல்?” பஜிரோவில் ஏறப்போனவன் நின்று வினவினான்.

“வரேக்க சின்ன ஆக்களுக்கு ஏதாவது விளையாட்டுச் சாமான் வாங்கிக்கொண்டு வாறீங்களா?”

அவனும் வாங்க நினைத்தான்தான். கொழும்பு சென்று வந்ததில் மறந்திருந்தான். “நான் வாறவரைக்கும் அவே நிப்பினமா?” என்றான் கேள்வியாக.

“கெதியா வந்திடுவன் எண்டு சொன்னீங்க.”

“சரி பாக்கிறன்.” என்றுவிட்டுப் புறப்பட்டான் அவன்.

அனந்தனே சிசிரவோடு இயல்பாகக் கதைத்ததில் தன் இறுக்கம் தளர்ந்த சுந்தரலிங்கம் சிசிரவோடு அவர்களின் நகைக்க கடையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருந்தார். அவரோடு கதைத்துக்கொண்டிருந்தாலும் தன்னையறியாது நிரல்யாவின் ஒவ்வொரு அசைவுகளையும்தான் சிசிர கவனித்தான். அது அவனை மீறியே நடந்தது. அவள் அவள் கணவனோடு மனத்தால் நெருங்கிவிட்டாள் என்று அவன் உணரும் தருணங்கள் ஒவ்வொன்றும் அவனுக்குள் வார்த்தைகளில் வடிக்கவியலா நிம்மதியைத் தந்தன.

இதற்குள் பெரியவர்களின் படுக்கை அறையில் வைத்து மகனுக்குப் பசியாற்றிவிட்டு வந்தாள் ருக்க்ஷி. “தம்பிய நான் வச்சிருக்கவா?” ஆசையாகக் கேட்டு வாங்கி வைத்துக்கொண்டாள் நிரல்யா.

நேரமாகிவிட்டதை உணர்ந்து அமிர்தவல்லி அம்மா உணவை எல்லாம் மேசையில் கொண்டு வந்து வைக்கப் போக, இயல்பாய் எழுந்து உதவி செய்தாள் ருக்க்ஷி.

“நீங்க போய் இருங்கோம்மா. இது எல்லாத்தையும் மேசைல கொண்டுபோய் வைக்கிறதுதான் வேலை. வேற ஒண்டும் இல்ல.”

“பரவாயில்ல அம்மா. அக்கா மகனை வச்சிருக்கிறா. நான் சும்மாதானே இருக்கிறன்.” என்றவள் குணம் அவருக்குப் பிடித்துப் போனது.

“உங்கட அவர் லண்டன் போயிற்றா ரெண்டு சின்ன ஆக்களோட தனியாச் சமாளிக்கிறது சிரமம்தான் என்னம்மா?”

“இவர் எங்களோட இல்லையே எண்டுதான் கவலையா இருக்கும் அம்மா. மற்றும்படி அம்மாவும் மாமாவும் இருக்கினம்தானே. அதால சமாளிப்பன்.” என்று புன்னகைத்தவளை இன்னுமே பிடித்துப் போயிற்று.

இங்கே சுந்தரலிங்கத்துக்கு அழைப்பு ஒன்று வரவும் அவர் எழுந்து போனார்.

அதுவரை அவள் அடிக்கடி தன்னைக் கவனித்ததைக் கவனித்திருந்த சிசிர, “என்ன பார்வை? அப்போத இருந்து என்னையே பாக்கிறாய்.” என்றான் சின்ன சிரிப்புடன்

“இல்ல, முதல விடவும் இப்ப நல்லாத் தமிழ் கதைக்கிறீங்க. நாங்க கதைக்கிற மாதிரியே. அதான்.”

தலையப் பின்னுக்குச் சாய்த்து நகைத்தவனின் விழிகள் கரிக்கவா என்றன. சமாளித்துக்கொண்டு அவளைப் பார்த்தான். என்ன கதைக்கப் பழகி என்ன பிரயோசனம்?

அவன் விழிகளில் எதைப் படித்தாளோ! நிரலுக்கு நெஞ்சு வெடிக்கும் நிலை. அவளுக்குத் தெரிந்து அன்றைக்கு ஒரு நாளைத் தவிர்த்து இந்தச் சிரிப்பு எப்போதும் அவன் முகத்தில் குறைந்ததே இல்லை. ஆனால், இன்றைய அந்தச் சிரிப்பின் பின்னே மறைத்து வைக்கப்பட்ட வலி இருப்பதாகப் பட்டது. அவளை அனந்தன் என்கிற கட்டுமரம் அமிழ விடாமல் ஏந்திக்கொண்டு வருவதில் அவள் தேறிக்கொண்டிருக்கிறாள். அவனுக்கு அப்படி இல்லை போலும். அவளும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவனைப் பார்த்து முறுவலித்தாள்.

“நீ சிங்களம் நல்லாக் கதைப்பியா?”

“நீங்க என்ன நினைக்கிறீங்க?”

அவன் பதில் சொல்லாமல் அதற்கும் சிரித்தான். அங்கே விளையாடிக்கொண்டிருந்த மகளை அழைத்து மடியில் அமர்த்திக்கொண்டான். அவன் கைகள் அவள் தலையை வருடி விட்டன. பார்த்துக்கொண்டிருந்த நிரல்யா எப்படி உணர்கிறாள் என்று வரையறுக்க முடியாமல் நின்றாள். சுந்தரலிங்கமும் வந்துவிட அவர்கள் பேச்சு நின்று போயிற்று. சின்னவனும் உறங்கி இருக்க அவனைக் கொண்டுபோய் பெற்றோரின் அறையில் கிடத்திவிட்டு வந்தாள்.

அமிர்தவல்லி சாப்பிட அழைக்க எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர்.

“நீயும் இரம்மா.”

“இல்லை அம்மா. எனக்குப் பசி இல்ல. மச்சான் வரட்டும். நான் சச்சினிக்குச் சாப்பாடு குடுக்கிறன்.” என்றவள் அந்தப் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொண்டாள். அதே சாப்பாட்டு மேசையிலேயே சச்சினியைத் தூக்கி இருத்திவிட்டு அவள் நாற்காலியில் அமர்ந்திருந்து அவளுக்கு உணவு கொடுத்தாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
உணவை முடித்து, குளியலறை பயன்படுத்தி, களைப்பாறி முடித்தும் அனந்தன் வருவதாக இல்லை. சிசிரவும் ருக்க்ஷியும் மறுக்க மறுக்க அவள் எடுத்து வைத்திருந்த நகைகளைச் சின்னவர்களுக்கு மாட்டிவிட்டாள்.

“இல்ல நிரா. உண்மையா இதெல்லாம் வேண்டாம்.” சிசிரவுக்குப் பெரும் சங்கடம்.

“அது என்ர ஆசைக்குச் செய்றது. ஒண்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்!” என்று அவள் கெஞ்சியபிறகு அவனால் மறுக்கவும் முடியவில்லை. அப்படியே தன்னிடமிருந்த இரண்டு புதுச் சேலைகளை ருக்க்ஷிக்கும் கொடுத்தாள். நேரமானது. மழை வேறு வரும்போலிருந்தது. இனிப் புறப்பட வேண்டும். சிசிரவின் உள்ளத்தில் ஒருவிதப் பரிதவிப்பு. நிரல்யாவையும் அது தொற்றிக்கொண்டது. எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயன்றுகொண்டிருந்தாள்.

வானம் நன்றாகக் கருக்க ஆரம்பிக்கவும் அதற்குமேல் இருக்காமல் புறப்பட்டார்கள். இனி சிசிர லண்டன் போய்விடுவான் என்பதில் எல்லோர் உள்ளத்திலும் ஒரு விதப் பாரம். பெரியவர்கள் மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அவனை மனமார வாழ்த்தி விடை கொடுத்தனர்.

அவளிடம் சொல்லவும் பகிரவும் அவனிடம் நிறைய இருந்தன. அதற்கான தனிமையும் வாய்ப்பும் அமையாமல் போனதில், “எப்பவும் நீ சந்தோசமா இருக்கோணும் நிரா.” என்று கரம் பற்றி வாழ்த்தினான். எவ்வளவு முயன்றும் முடியாமல் அவன் குரல் கரகரத்துப் போனது. பேச முடியா நிலையில் நின்றவள் தலையை மேலும் கீழுமாக அசைத்து ஏற்றுக்கொண்டாள்.

தான் ஏதாவது தவறு செய்திருந்தால் தன்னை மன்னித்துக்கொள்ளும்படி அவன் பெரியவர்களிடம் கேட்டுக்கொண்டபோது சுந்தரலிங்கம் அதற்குமேல் முடியாமல் ஆரத்தழுவி அவன் தோள் தட்டிக்கொடுத்தார். அமிர்தவல்லி அம்மா அழுதேவிட்டார். ஆரம்பத்தில் அவன் வருகையைப் பெரிதாக விரும்பாதவர் அவன் புறப்பட்டபோது பெற்ற மகனே பிரிவது போன்ற துயரில் கண்ணீர் சிந்தினார்.

ருக்க்ஷியும் அவளை வந்து அணைத்துக்கொண்டாள். “உங்களைப் பாத்தது சந்தோசமக்கா. இவரால உங்களுக்கு ஏதாவது மனச்சங்கடங்கள் நடந்திருந்தா சொறி.” என்று சொன்னபோது, “சேச்சே! அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல.” என்று கண்ணீருடன் புன்னகைத்து மறுத்தாள் நிரல்யா.

அவளுக்குச் சச்சினியைப் பிரிய மனமேயில்லை. அள்ளி அணைத்துத் தூக்கித் தன்னால் முடிந்தவரையில் அவள் கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தாள். இந்த நேர இடைவெளிக்குள் அவளோடு நன்றாகச் சேர்ந்துகொண்டிருந்த அவளும், “பாய் நெந்தா!(பாய் அத்தை!)” என்று அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டபோது முடியாமல் விம்மி இருந்தாள் நிரல்யா.

வேகமாக முகம் திருப்பித் தன்னைச் சமாளித்துக்கொள்ளப் போராடினான் சிசிர.

இதற்குள் மழை அடித்து ஊற்ற ஆரம்பித்திருந்தது. ஓடிப்போய்க் குடை எடுத்து வந்து கொடுத்தாள். மீண்டும் ஒரு விடைபெறலோடு முதலில் மனைவியையும் மகனையும் கவனமாக அழைத்துச் சென்று காரில் ஏற்றிவிட்டு அவன் நிமிர, இன்னொரு குடையோடு சச்சினியையும் தூக்கிக்கொண்டு வந்திருந்தாள் நிரல்யா.

“நீ ஏன் நிரா மழைக்க வந்தனி?” என்று கேட்டபடி மகளை வாங்கி முன் பக்க சீட்டில் அமர்த்தி, பெல்ட் மாட்டிவிட்டு நிமிர்ந்தபோது, அவன் ஆசைப்பட்ட அவளோடான தனிமை அவனுக்குக் கிடைத்திருந்தது. ஒரு காலம் அவர்களை இணைத்து வைத்த மழையே அதை உருவாக்கிக் கொடுத்திருந்தது.

எப்போதும்போல அவர்களுக்கிடையில் மழை. எப்போதும் ஒற்றைக் குடைக்குள் இருவராய் நிற்பவர்கள் இன்று இரண்டு குடைகளில் தனித்தனியாய் நின்றிருந்தனர்.

இருவர் கண்களிலும் மெல்லிய நீர்ப் படலம். உதடுகளில் உள்ளத்தையம் அதன் அழுகையையும் மறைக்கும் சிரிப்பு. அந்த முறுவலின் பின்னிருப்பது படுபயங்கரமாகத் தோற்றுப்போன காதலின் வலி.

ஆயிரம் கதை பேசும் அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் நிரல்யா உடையப் பார்த்தாள். ஆனால் அவள் உடைந்தாள் அவன் நொருங்கிப் போவான். அதற்கு விடக் கூடாது. அவன் பாவம். வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு புருவங்களை உயர்த்தி என்ன என்று கேட்டாள்.

அவன் உதட்டு முறுவல் இலேசாய் விரிந்தது. பார்வை அவளிலேயே இருக்க ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தான். நொடிகள் சில கடந்தன. மெல்ல அவள் கரம் ஒன்றைப் பற்றினான். நிறைய சொல்ல ஆசைப்பட்டான். வார்த்தைகள்தான் வருவேனா என்று அடம் பிடித்தன.

ஆனால், அவன் சொல்ல ஆசைப்பட்ட அத்தனையும் அந்தத் தொடுதல் வழியே அவளுக்குள் உணர்வுகளாகக் கடந்து போயின. மெலிதாய் அவள் தேகம் நடுங்கிற்று. அதுவரை உள்ளத்தின் ஆழத்தில் நிரந்தரமாய்ப் போட்டு மூட நினைத்த நினைவுகள் எல்லாம் வீறு கொண்டு எழுந்தன. கண்களில் கண்ணீர் துளிர்க்க அவனையே பார்த்தாள்.

இப்போது அவனால் அவள் பார்வையையும் அது கடத்தும் உணர்வுகளையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பார்வையை ஒருமுறை எங்கோ சுழற்றிவிட்டு மீண்டும் கொண்டுவந்து அவளில் நிறுத்தினான்.

“கவனமாப் போயிற்று வாங்க சிசிர. மனுசி பிள்ளைகளோட எப்பவும் நீங்க சந்தோசமா இருக்கோணும்.” சின்ன புன்னகையோடு உடைந்து கரகரத்த குரலில் சொன்னாள் நிரல்யா.

“நீயும்!” என்றான் அவன்

“நான் சந்தோசமாத்தான் இருக்கிறன் சிசிர. நினைச்சே பாக்கேல்லை. ஆனா வாழ்க்கை நிறைவா, நிம்மதியா இருக்கு.” என்று கண்ணீருடன் புன்னகைத்தாள்.

அவன்தான் நேரிலேயே கண்டானே! தலையசைத்து அவள் சொன்னதை ஏற்றுக்கொண்டவன், “எப்பிடியும் அடுத்த கிழமை வெளிக்கிட்டுடுவன். இனி இங்க திரும்பி வாற ஐடியா இல்ல நிரா. ருக்க்ஷி அங்க வந்த பிறகு மெல்ல மெல்ல அப்பாவையும் மாமியையும் அங்கேயே கூப்பிட்டு, அங்கேயே செட்டில் ஆகுவம் எண்டு இருக்கிறன்.” என்று அவன் சொன்னபோது சுளீர் என்று ஒரு வலி தோன்றாமல் இல்லை. வார்த்தைகளை நம்ப முடியாமல் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள்.

“லண்டனுக்கு வந்தா கட்டாயம் எங்கட வீட்டுக்கு நீ வரோணும் நிரா. அதே மாதிரி சந்தோசமான நியூஸ் ஒண்டு நான் கேள்விப்படவும் வேணும்.” என்று அவள் கண்களையே பார்த்து அவன் சொன்னபோது, “கெதியில கேள்விப் படுவீங்க.” என்றாள் மெல்லிய முகச் சிவப்போடு.

அவன் முகத்தில் படக்கென்று வெளிச்சம் பரவியது. குறுகுறு என்று அவளையே பார்த்தான். தவிர்க்கவே முடியாமல் ஒருகணம் பேராதனை நாள்கள் நினைவில் வந்துவிட, “சிசிர!” என்று அதட்டிச் சிரித்தாள் நிரல்யா.

தன் கேசம் கோதி வாய் விட்டுச் சிரித்த சிசிர, “உன்ர வெக்கம் வடிவா இருக்கு நிரா!” என்றான் அவளையே பார்த்து.

“கடவுளே சிசிர, வெளிக்கிடுங்க!” முகச் சிவப்பு அதிகரிக்கப் பொய்யாக அதட்டினாள்.

“உண்மையாச் சந்தோசமா இருக்கு நிரா. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.” என்றவனின் குரலில் அத்தனை நெகிழ்வு.

“அப்ப வரட்டா!” என்றான் விடைபெற மனமேயில்லாமல்.

இத்தனை நேரமாக அவன் பேசிய வார்த்தைகளை விட அவ்விரு வார்த்தைகள்தான் கனமிகுந்தவையாய்த் தோன்றின. தலையசைத்து விடைகொடுக்க முயன்றாள்.

புறப்படப் போகிறான் மொத்தமாய்… எத்தனை முறை விடைபெற்றாலும் விடைபெற முடியவேயில்லை அவனுக்கு. நடுங்கும் கரத்தினால் மீண்டும் அவள் கரத்தைப் பற்றினான். பெரும் தவிப்புடன் நிமிர்ந்து அவனை நோக்கினாள் நிரல்யா.

“நான், என்ர மனுசி, என்ர பிள்ளைகள், என்ர குடும்பம் எல்லாரும் இனி நல்லாருப்பம் எண்டு தெரியும் நிரா. ஒரு வளமான வாழ்க்கை அமையும். என்ர பிள்ளைகள் கனவில கூட நினைச்சு பாக்காத ஒரு நாட்டில வாழப்போயினம். அப்பா மாமிக்கு நல்ல மருத்துவம், நிம்மதியான நித்திரை எல்லாம் கிடைக்கப் போகுது. ஆனா, இது எல்லாத்துக்கும் காரணம் ஆர் எண்டு பாத்தா அது நீ. நீ காட்டின அன்பு. அதுதான் என்னை அவ்வளவு தூரத்துக்குத் தைரியமா ஓட வச்சது, உயரவும் வச்சது. அந்த உன்ர அன்புக்கு நன்றி நிரா! ஆனா அந்த அன்புக்குப் பதிலா நான் ஒண்டுமே உனக்குச் செய்யேல்ல. இனிச் செய்ற இடத்திலையும் நான் இல்ல. குறைஞ்சபட்சமா என்னட்ட இருந்து இந்த நன்றியை மட்டும் வாங்கிக்கொள். காலத்துக்கும் மறக்க மாட்டன்.”

“சிசிர ப்ளீஸ்!” அவள் உதடுகள் முணுமுணுத்தன.

“சொறி, நீ அழாத ப்ளீஸ்! உன்ன அழ வைக்க இதைச் சொல்லேல்ல. திரும்பவும் உன்னப் பாக்கக் கிடைக்குமா, கதைக்கக் கிடைக்குமா எண்டு தெரியாது. அதான்… மனதில இருக்கிற எல்லாத்தையும் சொல்லிப்போட்டுப் போகோணும் மாதிரி இருக்கு.”

அவள் கையைப் பற்றியிருந்த அவன் கையில் மெல்லிய நடுக்கம். அந்த நடுக்கம் அவளையும் தொற்றி, உள்ளத்தை ஒரு ஆட்டு ஆட்டியது. இப்படி ஒரு மழை நாளில் ஆரம்பித்த அழகான உறவு. இதோ, அதே போலொரு மழை நாளில் விடைபெற்றுக்கொண்டது.

இதற்குமேலும் எதையாவது கதைத்தால் முற்றிலும் உடைந்துவிடுவோம் என்று தெரிந்து, கடைசியாகச் சின்னதாய் ஒரு தலையசைப்புடன் விடைபெற்று, காரைச் சுற்றிச் சென்று காரில் ஏறினான் சிசிர.

அதுவரை அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியாதபோதும் அவர்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ள ருக்க்ஷிக்கு மொழி தேவையாய் இருக்கவில்லை. அவர்களையே பார்த்திருந்த அவள் விழிகளிலும் ஏன் என்றில்லாமல் கண்ணீர் வழிந்து ஓடிற்று. கணவன் காருக்குள் ஏறவும் வேகமாகத் துடைத்துக்கொண்டாள்.

கொட்டும் மழையில் குடையின் கீழ் கண்ணீர் சிந்தும் விழிகளோடு அவர்களையே பார்த்து நின்றவளிடம் மீண்டுமொரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு மெதுவாகக் காரை அவன் நகர்த்திய வேளையில் அனந்தனின் பஜிரோ வந்து நின்றது. அவன் அந்த மழைக்குள் இறங்கி வரவும் வேகமாகச் சென்று அவனைத் தன் குடைக்குள் நுழைத்துக்கொண்டாள் நிரல்யா.

அவள் கையிலிருந்த குடையைத் தான் வாங்கிக்கொண்டு, மறு கையால் அவள் தோளணைத்துப் பிடித்து மழையில் நனையாமல் பாதுகாத்துக் கொண்ட அனந்தன், சிசிரவைப் பார்த்து மெலிதாகத் தலையசைத்து விடைகொடுத்தான்.

அவர்கள் இருவரையும் தன் விழிகளுக்குள் நிரப்பியபடி அதே மெல்லிய தலையசைப்பைக் கொடுத்து முழுமையாக விடைபெற்றுக்கொண்டான் சிசிர.

தொடரும்...

மக்களே, திருப்பி வாசிக்க இல்ல. பிறகு பாத்து ஏதும் எடிட் பண்ண இருந்தா பண்ணி விடுறன். என்னைக் கேட்டால் இதோட கதை முடிந்துவிட்டது. ஒரு பீல் குட் உணர்வுக்காக இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்கள் இன்னும் வரலாம். அதோடு கதை முடிந்துவிடும். கருத்திடும் அனைவருக்கும் நன்றி. இந்த அத்தியாயம் எப்படி இருக்கு என்று சொல்லுங்க.

முக்கியமான விசயம்: நாளைக்கு ஞாயிறு. திங்கள், செவ்வாய் இரண்டு நாள்களும் எனக்குக் கொஞ்சம் வேலைகள் இருக்கு. சோ அடுத்த மூன்று நாள்களும் பெரும்பாலும் அத்தியாயங்கள் வராது. அதனால் இனி புதன்தான்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 50


அந்தப் பரிசுப் பெட்டியையே பார்த்திருந்தாள் நிரல்யா. அவள் உள்ளம் முழுவதிலும் சற்று முன்னர் விடைபெற்றுப் போனவன்தான் வியாப்பித்திருந்தான். அவன் பார்வை, அவன் சிரிப்பு, அவன் கண்ணீர், அவன் நடுக்கம், கடைசியாகத் தலையசைத்து அவன் விடைபெற்றது என்று ஓடிக்கொண்டே இருந்தது.

அவர்கள் பிரிந்துவிட்டதையும் தாண்டி அவளை விட்டுவிட்டோம் என்கிற வலிதான் அவனுக்குள் அதிகம் என்று விளங்கிற்று. கூடவே அவள் எதிர்காலம் குறித்தான பயமும். இனி அவன் தவிப்பு அடங்கும். மொத்தமாக இங்கிருந்து போகிறான் என்பது அவளைப் பெரிதாக அசைத்ததுதான். ஆனால், அங்குப் போனால் எதிர்காலத்தில் தலையெடுத்துவிடுவான் என்கிற எண்ணம் நிறைவைத் தந்தது. அவனுக்காக அவளிடம் மன்னிப்புக் கேட்ட ருக்க்ஷியும் நிச்சயம் பெரும் துணையாக இருப்பாள் என்கிற நம்பிக்கையோடு அவள் நிமிர, வெளியில் அலைந்ததாலும் மழையில் நனைந்ததாலும் குளிக்கச் சென்ற அனந்தன், குளியலறையிலிருந்து வெளியே வந்தான்.

“பிரிச்சுப் பாக்காம என்ன செய்றாய்?” தலையைத் துவட்டியபடி வினவினான்.

“பிரிக்க வேண்டாம் மச்சான். நிச்சயமா என்ர மனதை நெருடாத, எனக்குப் பிடிச்ச ஏதோ ஒண்டுதான் உள்ளுக்க இருக்கும். ஆனாலும் நான் பிரிக்கேல்ல. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்.” என்றாள் அவன் முகம் பார்த்து.

அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு.

அதைக் கண்டுவிட்டு, “என்ன சிரிப்பு உங்களுக்கு?” என்றாள்.

இங்க வா என்றான் கையசைவால். எழுந்து அவனருகில் வந்தவளை மென்மையாய் அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “இப்ப ஓகேயா நீ?” என்றான் முதல் கேள்வியாக.

“இல்லாட்டி விடுவீங்களா?” சின்னப் புன்னகையோடு திருப்பிக் கேட்டாள் அவள்.

“எப்பிடி விடுவன்? என்ர நிரல் எப்பவும் சந்தோசமா இருக்கோணும்.”

அவன் முகத்தையே சில கணங்களுக்கு இமைக்காது பார்த்தவள் தன்னால் முடிந்தவரையில் அவனை இறுக்கி அணைத்து, “தேங்க்ஸ் மச்சான்!” என்றாள் உள்ளம் நெகிழ.

ஒன்றும் சொல்லாமல் அவள் தலையில் பொய்யாகக் குட்டினான் அவன். அவள் அசையவில்லை. சிசிர புறப்பட்ட பின் மனம் தத்தளிக்க அவனோடு அறைக்கு வந்தவளை ஒரு கேள்வி கூடக் கேளாது தன் அணைப்பிலேயே வைத்திருந்து முதுகை வருடிக்கொடுத்து ஆற்றுப்படுத்தியது அவன்தான். அவள் சற்றுத் தேறிய பிறகுதான் குளிக்கச் சென்றான்.

இப்போதும், “நீ கடந்து வந்த விசயங்கள் எதுவுமே சின்ன விசயங்கள் இல்ல நிரல். ஆனாலும், எந்த முடிவு எடுத்தாலும் அதில தெளிவாய் இருக்கிறாய். என்ர நிரல் கெட்டிக்காரி எண்டு எனக்கு உண்மையாவே பெருமையா இருக்கு!” என்றான் அவள் மூக்கோடு மூக்கை உரசி.

அவள் விழிகள் இலேசாய்ப் பனித்தன. “எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் மச்சான். நீங்க இல்லாட்டி நான் இல்ல. அது மட்டும் வடிவாத் தெரியுது. இண்டைக்கு அம்மா அப்பா திரும்பவும் எழும்பினதுக்கு, நான் வாழுற இந்த வாழ்க்கைக்கு எல்லாம் நீங்க மட்டும்தான் காரணம்.” என்றாள் உள்ளத்திலிருந்து.

“ம்ஹூம்! இன்னும் இருக்கா சொல்லுறதுக்கு?” என்றான் அவன் விளையாட்டாக.

“உங்களுக்கு இது உறுத்துறதே இல்லையா?”

“எது?” என்றான் விழிகளில் கூர்மையுடன்.

“என்னை மாதிரி ஒருத்தியோட வாழுறது?”

“ஏன், உனக்கு என்ன குறை?” அவன் குரலில் நன்றாகவே சூடேறிற்று. அதுவரை இருந்த இலகு பாவம் மறைந்திருந்தது.

அவள் ஏதோ சொல்ல வரவும், “எதையாவது மடச்சி மாதிரிக் கதைச்சாய் எண்டு வை, பளார் எண்டு ரெண்டு போட்டு விட்டுடுவன்!”என்றான் விரல் நீட்டி

அவளுக்குச் சிரிப்பு வந்தது. சொல்ல வந்த விசயம் மறந்து போக, “அறைவீங்களோ? எங்க அறைங்க பாப்பம். தைரியம் இருந்தா அறைங்கோவன்!” என்றபடி தன் கன்னத்தைக் கொண்டுபோய் நீட்டினாள்.

குறையாத கோபத்தோடு அவளை ஒரு பார்வை பார்த்தவன் அறைந்திருந்தால் கூட அந்தளவுக்குச் சிவந்திருக்காது. அந்தளவில் பற்களை அவள் கன்னத்தில் பதிய வைத்துச் சிவக்க வைத்தருந்தான்.

“அம்மா!” என்று அலறியவள், “சரியான கடிமாட்டு மச்சான்!” என்றாள் கன்னத்தைத் தேய்த்துவிட்டபடி.

“தேவை இல்லாமக் கதைச்சா அப்பிடித்தான்.”

“மச்சான், எனக்கு உறுத்தாதா? உங்கட மனதில என்ன இருக்கு எண்டு எனக்கு எப்பிடித் தெரியும்? நீங்க இப்பிடிக் கோவப்பட்டா நான் என்ன செய்ய?” என்றாள் கெஞ்சலாக.

ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டவன், “இப்ப உனக்கு என்ன தெரியோணும்? கேளு!” என்றான் ஒரு முடிவோடு.

“உங்களுக்குக் கோபம் வரேல்லையா மச்சான்?”

“ஏன்?”

“அவர் வந்தது, என்னோட கதைச்சது, நான் அழுதது…”

“அப்பிடி நடக்காம இருந்திருந்தாத்தான் கோவம் வந்திருக்கும். நீ நடிக்கிறாய், மறைக்கிறாய் எண்டு நினைச்சிருப்பன்.” என்றான் அவன் கொஞ்சமும் யோசிக்காமல்.

அவளுக்கு விளங்கவில்லை. அவனைக் கேள்வியோடு ஏறிட்டாள்.

“எனக்கு நடந்தது எல்லாம் தெரியும் நிரல். அப்பிடி இருந்தும் அவன் உன்னைப் பாதிக்கவே இல்லை எண்டு நீயும், நீ அவனைப் பாதிக்கவே இல்லை எண்டு அவனும் காட்டி இருந்தா அது நடிப்பு. இதுதான் உண்மை. இந்த விசயம் இப்பிடித்தான் எங்களை விட்டுக் கடந்து போகும். விளங்குதா உனக்கு?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

அவன் குணத்தை எண்ணி உள்ளூர மலைத்தபடி ஆம் என்பதுபோல் தலையை அசைத்தாள் அவள்.

“அதைவிட நான் உனக்கு வெறும் மனுசன் மட்டும் இல்ல. உன்னில ஆசைப்பட்டவன். நீ கிடைக்க மாட்டியா எண்டு ஏங்கினவன். முதலே சொன்ன மாதிரி எனக்கு அந்த இழப்பின்ர வலி என்ன எண்டு தெரியும். ஒரு கட்டத்தில உனக்குப் பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுத் தருவம் எண்டு உனக்காக ஓடினாலும் அந்த வலி எனக்குள்ள இருந்தது நிரல். என்ன, அதை வெளில காட்டிக்கொள்ளாத கெட்டித்தனமும் என்னட்ட இருந்ததால அது வெளில தெரியேல்ல. அத அனுபவிச்சதாலேயே இன்னும் ஈஸியா எனக்கு உங்களை விளங்குது. சோ நிறைய யோசிக்காத. அவன் அவன்ர வாழ்க்கையப் பாக்கட்டும். நாங்க எங்கட வாழ்க்கையப் பாப்பம். சரியா?” என்றான்.

சரி என்பதுபோல் தலையை அசைத்தவள் கண்ணீரும் புன்னகையுமாகத் தன்னால் முடிந்தவரையில் அவனைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள் நிரல்யா. உள்ளத்தில் மிகுந்த நிறைவும் நிம்மதியும். அது தந்த நிறைவில் அவன் மார்பில் அழுத்தி முத்தமிட்டாள்.

சின்ன சிரிப்புடன் குனிந்து அவள் முகம் பார்த்தவன் மனமும் நிறைந்தே கிடந்தது.

*****

கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்திருந்தது. சிசிர நல்லபடியாக இலண்டன் போய்ச் சேர்ந்து வேலையிலும் சேர்ந்துவிட்டானாம் என்று ருக்க்ஷி அழைத்துச் சொல்லியிருந்தாள்.

அன்று ஏழாலைக்கு வந்திருந்தார்கள். அந்த ஊர், அந்த வீடு, அன்னை தந்தையோடு வாழ்ந்த வாழ்க்கை இதையெல்லாம் திரும்பப் பார்ப்பதும், பழைய நினைவுகளை மீட்பதும் அனந்தனுக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிந்ததிலிருந்து நிரல்யாவும் இங்கே வர ஆசைப்படுவாள்.

கூடவே, அங்கே வீட்டிலும் அவர்களைத் தொந்தரவு செய்ய யாருமில்லைதான் என்றாலும் இவர்களைக் கண்டதும் மலரும் ஆச்சி அப்புவின் முகங்களும், அவர்கள் சமைத்துத் தரும் எளிய உணவின் சுவையும், அவர்களின் உலகமாய் மாறிப்போகும் அந்த ஒற்றை அறை வாழ்க்கையும் என்னவோ அவளுக்குப் பெரும் உவகையைத் தந்துவிடும்.

இது எல்லாவற்றையும் விட இங்கே வந்துவிட்டுப் போகிற ஒவ்வொரு முறையும் கணவன் மனைவிக்கிடையிலான அன்னியோன்யம் அதிகரித்துப் போவதையும் உணர்ந்தவள் இப்போதெல்லாம் அடிக்கடி இந்தப் பயணத்தை விரும்பினாள். அப்படி அவள் விருப்பத்தின் பெயரில் இந்த முறையும் ஒரு நாள் தங்கிச் செல்ல வந்திருந்தார்கள்.

ஆச்சி பால் புட்டுச் செய்திருந்தார். அவர்களின் அந்தக் காலத்து கைப்பக்கும் தேவாமிர்தமாய் வயிற்றில் இறங்கிற்று. உணவை முடித்துக்கொண்டு வந்து கட்டிலில் சரிந்தவர்களிடம் இதமான மயக்கம். தேடல், தேவை, மயக்கம், கிறக்கம் எல்லாம் முடிந்து அவன் கைகளுக்குள் அடங்கியிருந்தாள் அனந்தனின் நிரல்.

அழகான இரவு, அறைக்குள் சூழ்ந்திருந்த அமைதியான இருள், மேலே சுற்றும் காற்றாடி, அவன் மார்பில் தலை வைத்து அவள், அவள் தலையை வருடியபடி அவன். ஒருவரின் கதகதப்பு மற்றவரினுள் பரவி ஒருவித சுக மயக்க நிலையிலேயே இருவரையும் வைத்திருந்தது.

அவளின் ஒற்றைக் கை உயர்ந்து வந்து அவன் தாடி மீசைக்குள் புகுந்து விளையாடியது. விழிகளை மூடி அவள் தரும் அந்தச் சுகத்தை அனுபவித்தான் அவன். அவள் விரல்கள் அவன் உதட்டருகில் வரவும் பிடித்து மெலிதாயக் கடித்துவிட்டான். சரக்கென்று இழுத்துக்கொண்டவள் அவன் வாயிலேயே மெலிதாய் ஒரு அடியைப் போட்டாள். அவன் உடல் மௌனச் சிரிப்பில் குலுங்கிற்று. பின்னே, பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று சொல்லிச் சொல்லியே அவன் மீசை தாடியோடு அளவுக்கதிகமாக மெனக்கெடுவது அவள்தான்.

அவன் சிரிப்பில் உண்டான கோபத்தில் மீசையை பிடித்து நறுக்கென்று இழுத்துவிட்டாள்.

“அடியேய்!” சத்தம் இல்லாமல் அலறியவன் அவள் கையைப் பற்றிக்கொண்டான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“விரலைக் கடிச்சுப்போட்டுச் சிரிக்கிறீங்க என்ன?”

“எப்ப பாத்தாலும் மீசை தாடியோட விளையாடினா என்ன செய்ய?” அவளை அருகில் சரித்துத் தானும் அவள் புறமாக ஒருக்களித்துப் படுத்தபடி வினவியவனின் முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது.

அவள் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. அவன் முகத்தையே அந்த இருளில் இமைக்காது பார்த்தாள். யன்னலினூடு கசிந்து வந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் பார்வையை உணர்ந்தவன், “என்ன?” என்றான்.

ஒன்றும் சொல்லாது அவன் கையை எடுத்துத் தன் வயிற்றின் மீது வைத்தாள். முதலில் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பின் விழிகள் நம்ப முடியா ஆச்சரியத்தில் விரிந்தன. அதன் பின் உண்மையா என்று கேள்வி கேட்டன. இதழ்கள் சந்தோச முறுவலில் விரிய அவள் விழிகள் ஆம் என்பதாக மூடித் திறந்தன. அவனால் நம்பவே முடியவில்லை. தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று. கை நடுங்க அவள் வயிற்றை மெல்ல வருடினான். அந்த வருடலுக்குத்தான் எத்தனை சக்தி? அவள் தேகம் முழுவதும் சிலிர்த்து அடங்க, அவள் விழிகள் தானாய்க் கலங்கின. ஆனாலும் சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போய் தவிப்பவனையே இமைக்காது பார்த்து ரசித்தாள்.

ஆசையாய் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். அவன் தேகத்தில் மெல்லிய நடுக்கம். அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அவள் சொன்ன விசயத்தை உணர்ந்து உள்வாங்கிக்கொண்டிருந்தான்.

அவள் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். அவன் ஆசைப்பட்ட ஒன்றைப் பரிசளித்துவிட்ட சந்தோசத்தில் உள்ளம் தளும்ப, உவகையில் துள்ள, அவன் அந்தச் சந்தோசத்தை அனுபவிக்கட்டும் என்று அவன் கேசத்துக்குள் கைகளை நுழைத்துக் கோதிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவன் இதயத்தின் துடிப்புச் சீரானது. தன் இரு கரங்களால் அவன் முகம் பற்றி நிமிர்த்தி, அவன் முகத்தையே இமைக்காது பார்த்தாள்.

இலகுவில் தன் உணர்வுகள் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாதவனின் விழிகள், இன்று மெலிதாகப் பனித்திருந்து அவளிடம் ஓராயிரம் கதை பேசின.

சில கணங்களுக்கு ஆசையாக அவன் முகத்தையே பார்த்தவள் அவன் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். அவன் விழிகளில் மெல்லிய வியப்பு. அதை உணர்ந்தவாறே அவன் விழிகளிலும் முத்தமிட்டாள்.

எப்போதுமே அவன்தான் அவளை அரவணைத்து ஆற்றுப்படுத்துவான். எப்போதாவதுதான் அவள் அவனைத் தாங்க வருவாள். அப்படியான பொழுதுகள் அவனுக்கு அற்புதமானவை. இப்போதும் அப்படியான ஒரு நிகழ்வுதான் நெகிழ்வுடன் அரங்கேறிக்கொண்டிருந்தது. அவனைத் தந்தையாக்கி, வாழ்க்கையைப் பூரணமாக்கித் தந்தவள்
விழிகள் பனிக்க அவன் உதட்டினில் தன் உதட்டினை தன்னால் முடிந்தவரையில் அழுத்தி எடுத்துவிட்டு அவன் முகம் பார்த்துச் சிரித்தாள்.

அவன் அவன் வசத்தில் இல்லை. சந்தோசத்தில் அழ வேண்டும் போலிருந்தது. மீண்டும் அவளைக் கட்டிக்கொண்டு அவள் முகத்தோடு முகம் புதைத்தான். இருவரும் ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை. பேசத் தோன்றவில்லை. உள்ளங்களை விடவுமா ஆத்மார்த்தமான வார்த்தைகளை உதடுகள் பேசிவிடப் போகின்றன? ஒருவரின் அணைப்பில் மற்றவர் கட்டுண்டு கிடந்து உணர்வுகளைப் பரிமாறினர். அதனூடு தம் இதயத்தைச் சொல்லிக்கொண்டனர்.

அவர்கள் வீடு வந்து செய்தி சொன்னபோது சுந்தரலிங்கத்தையும் அமிர்தவல்லியையும் கையால் பிடிக்கவே முடியவில்லை. விட்டால் அவர்கள் குழந்தைகளாகிவிடுவார்கள் போலும். துள்ளிக்கொண்டு திரிந்தனர். சுந்தரலிங்கம் ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்ட அணைப்பின் இறுக்கத்திலும் அதில் தெரிந்த நடுக்கத்திலும், “மாமா!” என்றான் சந்தோசமாக.

“நீ வரமப்பு எங்களுக்கு!” என்றார் மீண்டும்.

“எனக்கும் நீங்க அப்பிடித்தான் மாமா!” என்றான் அவனும் எப்போதும்போல.

அமிர்தவல்லி அம்மா மகள் முகம் வருடிக் கண் கலங்கினார். இப்படி ஒரு நெகிழ்வான தருணத்தைத் தருவதற்காகக் காலம் எப்படியெல்லாம் அவர்களைச் சுழற்றி அடித்துவிட்டது? உள்ளம் நெகிழ மகள் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தார். “அம்மா!” என்று அவரைக் கட்டிக்கொண்டவள் சந்தோசத்தில் விம்மினாள்.

மீண்டும் கடையில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு மாதச் சம்பளம் சந்தோசப் பகிரலாயிற்று. “சொன்ன மாதிரியே சந்தோசச் செய்தி சொல்லிட்டாய் நிரா. என்னவோ நானே வானத்தில பறக்கிற மாதிரி இருக்கு!” என்று ருக்க்ஷி மூலம் செய்தி அறிந்த சிசிர குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.

“நன்றி சிசிர!” என்று சிரிக்கும் ஒரு ஸ்மைலியையும் சேர்த்து அனுப்பி இருந்தாள் நிரல்யா.

இப்போது நிரல்யா ஆறு மாதங்களை எட்டி இருந்தாள். ருக்க்ஷி இரண்டு குழந்தைகளோடும் இலண்டன் சென்று சேர்ந்திருந்தாள்.

“மச்சான்! மச்...ச்…சான்!” என்று அவனை ஏலம் விட்டபடி அறைக்கு அவனைத் தேடிக்கொண்டு வந்தாள் நிரல்யா.

கட்டிலில் குறுக்காக விழுந்து கிடந்த அனந்தன், கால்கள் இரண்டும் கீழே இருக்க, கண்களை மூடிக் கையைத் தலைக்குக் கொடுத்து அசையாமல் படுத்துக் கிடந்தான்.

“ரவுடி மச்சான்! அந்தக் கத்துக் கத்துறன். ஒரு குரல் குடுத்தாத்தான் என்னவாம்? எருமை மாட்டுக்கு மேல மழை பெஞ்ச மாதிரிப் படுத்துக் கிடக்கிறீங்க.” என்று திட்டியபடி அறைக்கு வந்தவளுக்கு மெலிதாய் மூச்சு வாங்கியது.

உதட்டோரம் சிரிப்பில் துடித்தாலும் மீசைக்குள் அதை மறைத்தபடி அசையாமல் படுத்துக் கிடந்தான் அவன்.

“இவ்வளவு கிட்ட வந்து கூப்பிட்டும் வேணுமெண்டு அசையாம கிடக்கிறீங்க என்ன? திமிர் பிடிச்ச மச்சான்!” கோபத்துடன் வந்து அவனுக்கு அடியைப் போட்டவளை மெல்ல இழுத்து, கவனமாகத் தன் மீதே அமர்த்திக்கொண்டு, “என்னடி பிரச்சினை உனக்கு? மானங்கெட்ட மச்சான், வெக்கம் கெட்ட மச்சான், கேடுகெட்ட மச்சான், ரவுடி மச்சான், திமிர் பிடிச்ச மச்சான் எண்டு இன்னும் எத்தின மச்சான் வச்சிருக்கிறாய்?” என்று அதட்டினான்.

“ஆருக்குத் தெரியும். வாயில வாறது எல்லாம் சொல்லுவன்.” என்றுவிட்டு, “வெளில கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொன்னீங்க?” என்று அவனருகில் தானும் சரிந்து பதிலுக்காக அவன் முகம் பார்த்தாள்.

“அலுப்பா இருக்கு நிரல்.” அவள் புறம் திரும்பி, அவள் வயிற்றை வருடியபடி கண்களை மூடிக்கொண்டு சொன்னான் அவன்.

அவளுக்குச் சட்டென்று கோபம் வந்தது. “ஏன், ரவுடி வேல வெளில கூடவோ? இண்டைக்கு எத்தின பேருக்கு அடிச்சனீங்க?” என்றாள் பட்டென்று.

படக்கென்று விழிகளைத் திறந்து அவளை முறைத்தான் அவன்.

“என்ன முறைப்பு? நீங்க முறைச்சா மட்டும் நாங்க பயந்திடுவமா? இல்ல, வீட்டில இருந்தா எங்களுக்கு ஒண்டும் தெரிய வராது எண்டு நினைச்சீங்களா? பாக்கிறது அடிதடி வேல. இதில இவருக்கு அலுப்பா இருக்காம்! அங்க இன்னும் நாலு பேர் உங்களிட்ட அடிவாங்க லைன்ல நிக்கிறாங்களாம். போங்க, போய் அடிச்சிட்டு வாங்க!” என்றாள் கொதித்துப்போய்.

அன்றொருநாள் டவுனில் அவளோடு நடந்து செல்கையில் பைக்கில் வந்தவன் மோதிவிடப் பார்க்கவும் பயந்துபோய் இவளோடு அவன் விலகப் பார்த்து, அதுவே கால் இடறி விழப் பார்த்து என்று மிகவுமே பயந்து போனான். குழந்தைக்கோ அவளுக்கோ ஏதும் என்றால் என்று தோன்றியதும் அவனுக்கு நெஞ்சு நடுங்கிப் போயிற்று. நிதானமிழந்து, அவசரப்பட்டு அந்த பைக் காரனுக்குக் கையை நீட்டிவிட்டான். அன்றிலிருந்து இப்படித்தான் அவள் வாயில் அரைபட்டுக்கொண்டு இருக்கிறான் அவன்.

எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் கேட்பதில்லை. அது கொடுத்த சினமும் சேர, “என்னடி வரவர வாய் கூடிக்கொண்டே போகுது உனக்கு. என்னில இருந்த பயமெல்லாம் போயிற்றுதா?” என்றான் மிரட்டலாக.

“உங்களப் பாத்துப் பயமா?” என்றுவிட்டு அவனை அவள் பார்த்த கேவலமான பார்வையில், “என்னடி இப்பிடிக் கேவலப் படுத்திறாய்?” என்றான் சிரித்துக்கொண்டு.

“பின்ன என்ன? புள்ளப் பூச்சியைப் பாத்துப் பயமா எண்டு கேட்டா?” என்றவள் கேள்வியில் அவள் முகத்தின் மீதே கவிழ்ந்து சிரித்தான் அவன்.
 
Status
Not open for further replies.
Top Bottom