• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 26

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 26

தொழிலில் எப்போதுமே அடிமட்ட வேலையிலிருந்து அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்பார் தையல்நாயகி. குறைந்தபட்சமாக அது பற்றிய தெளிவான அறிவாவது இருக்க வேண்டும் என்பார்.

அப்போதுதான் அனைத்தும் நம் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். யாராலும் இலகுவாய் நம்மை ஏய்த்துவிடவும் முடியாது. இல்லையோ அவர்கள் சொல்வதற்கு தலையாட்டும் இடத்திற்கு நாம் நகர்ந்துவிட, அவர்களின் கை ஓங்கிவிடப் பார்க்கும். தலைமை என்பது அதுவன்று! அனைத்தையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது என்பார்.

அதன்படிதான் ஆண்கள் உடைத் தயாரிப்பிற்கான பயிற்சி நெறிக்கு அவள் புறப்பட்டதும்.

தையல்நாயகியை விட்டு விலகி இருந்த நாள்களிலேயே இதைக் குறித்தான தேடல்களை ஆரம்பித்திருந்தாள். இனியும் தேடி என்ன காணப்போகிறாய் என்று அன்றைய நாள்களில் அறிவு கேட்டபோதும் அதை அவளால் தவிர்க்க முடியவில்லை. சரியாக இப்போது சந்தர்ப்பம் அமையவும் அதைப் பற்றிக்கொண்டாள்.

கணவனிடம் சொல்லாமல் வருவது தவறு என்று அவளுக்குத் தெரியாமல் இல்லை. அது அவளால் இலகுவாய் முடிந்திருக்கவும் இல்லை. இதுவரையில் எத்தனையோ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறாள்.

அப்போதெல்லாம் ஏதோ ஒன்றைப் புதிதாக அறிந்துகொள்ளப் போகிறோம், தையல்நாயகி அடுத்த நிலையை நோக்கி நகரப்போகிறது என்கிற துள்ளோடுதான் போவாள்.

இந்த முறைதான் கண்ணில் நீருடன் புறப்பட்டிருக்கிறாள். அதுவும் பயணத்தின்போது, அவள் காரில் ஒலித்த,
‘எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கெனக் கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கெனத் தருவது வரம் எனக்கு’ என்கிற வரிகளில் சத்தமாக விம்மிவிடப் பார்த்தாள்.

ஏன் இப்படியாகிப்போனோம் என்று அவளுக்குப் புரியவேயில்லை. மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அத்தனை ஆயத்தங்களைச் செய்ததும் அவள்தான். இந்தப் பயணத்தை அடி நெஞ்சிலிருந்து வெறுத்ததும் அவள்தான்.

அவள் புறப்பட முதல் எப்படியாவது அறிந்து தன்னிடம் வந்துவிட மாட்டானா என்றெல்லாம் நினைத்திருக்கிறாள். அவன் என்று வந்துவிட்டால் முற்றுமுழுதாக அவள் அறிவு மழுங்கித்தான் போகிறது.

ஆனால், உயிரைக் குடையும் இந்த வலிக்கு மத்தியிலும் இந்த விலகளும் இடைவெளியும் வேண்டும் என்றே நினைத்தாள்.

தான் என்று வந்தால் அவன் எப்படிக் கட்டுப்பாட்டை இழப்பான் என்றும், தன்னில் எந்தளவில் கட்டுண்டு கிடப்பான் என்றும் அவளுக்குத் தெரியும். அப்படியானவன் அன்று தன்னை நெருங்கிவிட்டு விலகியது அவள் நெஞ்சில் பெரும் அடியாக விழுந்துபோயிற்று.

அதற்குக் காரணம் அவள் வார்த்தைகள் என்றால், அந்த வார்த்தைகளை அவள் விடுவதற்கு காரணம் அவள் நெஞ்சில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் தீ.

அது அணையாமல் அவளால் அமைதியாக முடியாது. அப்படி அவள் அமைதியாகாமல் அவர்களின் இல்லறம் என்றுமே சிறக்காது. திரும்ப திரும்ப அவள் காயப்படுத்துவதும் அவன் காயப்படுவதும் மட்டுமே நடக்கும்.

உண்மையைச் சொல்லப்போனால் எடுத்த முடிவுகளைச் செயலாற்ற விடாமல் நிலனின் அன்பும் அனுசரணையும் அவளைப் பலவீனப்படுத்திக்கொண்டிருந்தன. அவன் இல்லாத பொழுதுகளில் கொழுந்துவிட்டு எரியும் கோபத்தீ, அவனைக் கண்டுவிட்டால் தடுமாறத் தொடங்கிவிடும்.

அவனின் அளவற்ற நேசத்தை அனுபவித்துக்கொண்டே அவளால் அவன் குடும்பத்திற்கு எதிராய் எதையும் செய்ய முடியவில்லை. அவனா, அவர்கள் மீதான பகையா என்று அல்லாடுகிறாள். தனக்குள் போராடி போராடி ஓய்ந்து போகிறாள்.

தான் ஆற்றப்போகும் காரியங்களால் அவன் என்னாவான் என்கிற சிந்தனைதான் பிரதானமாய் ஓடிற்று. இதனால் உள்ளத்தின் புழுக்கமும் அழுத்தமும் இன்னுமின்னும் அதிகமாகியதே ஒழியக் குறைவதாக இல்லை.

அவள் தந்தை சொன்னது போன்று சில இழப்புகளையும், நியாயமே இல்லாமல் அனுபவித்த துன்பங்களையும் எதன் மூலமும் ஈடு செய்ய முடியாதுதான். எந்த நியாயமும் அதற்கு நிகராய் வந்து நிற்காதுதான்.

ஆனால், அவள் நெஞ்சம் கொஞ்சமாவது ஆற வேண்டாமா? இந்த உள்ளத்தின் கொதிப்பு அடங்க வேண்டாமா? மிகுதி வாழ்க்கையைத் தன்னும் அவள் நிம்மதியாக வாழ வேண்டாமா?

அன்னை என்று நினைத்தால் இப்போதும் ஜெயந்திதான் அவள் கண் முன்னே வந்து நிற்பார். அதற்காக வாசவியை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை. அவர்தான் அவளைப் பெற்றவர் என்று தெரிய முதலே மிக மிக மென்மையானவர், மிகவுமே பதுமையானவர் என்று குணாளனும் தையல்நாயகியும் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் தனக்குத் தானே தேடிக்கொண்ட முடிவை முதல் கூடப் புரிந்துகொண்டிருப்பாளோ தெரியாது.

ஆனால் இன்று உயிர் நேசமும், அது தரும் ஆத்மார்த்தமான வாழ்க்கையும், அவர்கள் மீது நாம் வைக்கிற பாசமும் ஒருவரை எத்தனை பலவீனமானவராக மாற்றும் என்பதற்கு உதாரணமாக அவளே அவள் முன்னால் நிற்கையில் பூஞ்சை உள்ளம் கொண்ட வாசவி என்னாகியிருப்பார் என்று நன்றாகவே புரிந்தது.

காதலில் தோற்பது என்பது கூட வேறு. இங்கே அவர் காதல் என்று சொல்லிக்கொண்டு வந்த கயவனிடம் ஏமாந்திருக்கிறார். அது போதாது என்று வயிற்றில் குழந்தையை வாங்கி, அதற்காகக் கேட்கக் கூடாத பேச்செல்லாம் கேட்டு, கையில் குழந்தையோடு நின்றிருக்கிறார்.

அது மட்டுமா? தன் அன்னை உயிராக வளர்க்கும் தொழிலில் ஒரு பகுதியைக் கூட அந்த மோசக்காரனிடம் ஏமாந்து அடிக்குமேல் அடி என்று அவர் வாங்கியவைதான் எத்தனை? அதனால்தானே தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளும் அளவுக்குப் போனார்.

இதையெல்லாம் எண்ணியெண்ணி நீ உயிராகப் போற்றும் பெண்மணியை இறப்பின் இறுதி வரையில் நிம்மதியே இல்லாமல் வாழவைத்த மனிதர்கள் உன் கண்முன்னே இருந்தும் பேசாமல் இருக்கப் போகிறாயா என்று அவள் அறிவு சதா கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கையில் அவளும்தான் என்ன செய்ய?

இதெல்லாம் அவளைப் போட்டுச் சுழட்டி அடிக்கையில் எப்படி அந்தக் குடும்பத்தை மன்னிப்பாள்? எப்படி நிலனோடு நிம்மதியாக வாழ்வாள்?

எதுவானாலும் அவள் உள்ளத்தின் வெப்பம் தணிய வேண்டும். அதன் பிறகுதான் அவளால் அவளை அழுத்தும் பழைய வாழ்க்கையிலிருந்து வெளியே வர முடியும். அதுதான் அவனைக் கோபப்படுத்தும் விதமாகச் சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாள். அவன் கேட்டால் மட்டும் உண்மையைச் சொல்லும்படி விசாகனிடம் தெரிவித்திருந்தாள்.

அதைவிடவும் பெரிய காரியம் ஒன்றைச் சீனா புறப்படுவதற்கு முதல் துணிந்து செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறாள்.

எல்லாம் சரிதான். அவள் கணவன்? இதையெல்லாம் அறியும் போது அவன் என்னாவான்? விழிகளில் அரும்பிய கண்ணீரைச் சுண்டிவிட்டாள்.

பெரும்பான்மையான சீன மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று நாமெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவன்று. சீனர்களில் தொண்ணூற்றி ஐந்து சதவீதமானவர்கள் மத நம்பிக்கையற்றவர்கள். தம் மூதாதையர்களை மாத்திரமே நம்புகிறவர்கள்.

அதைப்போலத்தான் அவளும். தன்னைக் குறித்துத் திடமானவள் தைரியமானவள் என்று நம்பிக்கொண்டிருந்தாள். அப்படித்தான் எல்லோர் கண்களுக்கும் தெரிந்தாள். ஆனால் அவள் மிகுந்த பலகீனமானவள். அதுவும் அவள் கணவனின் முன்னே அலை அடித்துச் செல்லும் சிறு துரும்பளவு கூட அவள் திடம் இருப்பதில்லை.


*****
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member

இங்கே நிலன் அதிர்ச்சி என்கிற சொல்லையும் தாண்டிய ஒரு நிலையில் இருந்தான். மனம் மிக ஆழமாய் அடி வங்கிற்று. தன்னிடம் சொல்லாமல் தன்னிடம் விடைபெறாமல் அதுவும் ஒன்றரை மாதத்திற்கு போக முடிந்திருக்கிறதே. அதுவும் அவள் புறப்படுகையில் அவன் கொழும்பில்தான் இருந்தான்.

அந்தளவில் அவன் அவளுக்குப் பொருட்டே இல்லையா? கோபம் வந்தது. அவளைப் போட்டு உலுக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.

அவன் செய்ததற்குப் பதிலாக இதைச் செய்திருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அது அவள் இல்லை. எதையும் முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டுச் செய்கிறவள்.

பிறகும் ஏன் இப்படி நடக்கிறாள்? காரணத்தை அவனால் கணிக்க முடியவில்லை. அவளுக்கு உடனேயே புலனத்தின் வாயிலாக அழைத்தான். அழைப்புப் போகவில்லை.

திரும்ப விசாகனுக்கு அழைத்து, அவள் நம்பர் கேட்டு வாங்கி, மறுபடியும் அவளுக்கு அழைத்தான்.

சோங்சிங்(Chongqing) நகரத்தின் தரமான ஹோட்டல் ஒன்றின் இருபத்தி ஏழாவது மாடியில் ஒரு அறையின் யன்னலோர இருக்கையில் சாய்ந்திருந்த இளவஞ்சிக்கு அவன் அழைக்கிறான் என்கிற அந்த ஒற்றை வரியிலேயே மனத்தின் உணர்வுகள் எல்லாம் பெரும் அலையாய்ப் பொங்கின.

புதுமையாய் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்தாள்.

அவளுக்கு மாறான ஆக்ரோசத்தில் கொதித்தான் நிலன்.

“நீ இப்பிடி நடந்திருக்கக் கூடாது வஞ்சி. என்னைப் பற்றி என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறாய்? நீ என்ன செய்தாலும் உனக்குப் பின்னால வாற லூசு எண்டா? கட்டின மனுசி எங்க போயிருக்கிறாள், அவளின்ர நம்பர் என்ன எண்டு இன்னொருத்தனிட்ட கேட்டுத் தெரியிற நிலையில என்னை நிப்பாட்டிப்போட்டாய் என்ன?”

அவள் உதட்டைப் பற்றிக்கொண்டு கண்ணீரை அடக்கினாள்.

“சொல்லு, ஏன் இப்பிடி நடந்தனி? எனக்கு முறையான விளக்கம் வேணும் வஞ்சி. சொல்லு!”

விளக்கம் வேண்டும் என்றவன் அவளுக்குப் பேசச் சந்தர்ப்பமே கொடாமல் கத்திக்கொண்டிருந்தான்.

“ஒரு கிழமை கொழும்புக்குப் போனதுக்கே ஆயிரம் கேள்வி கேட்டனி எல்லா? முகத்தைத் தூக்கி வச்சுக்கொண்டு இருந்தனி எல்லா? இப்ப சொல்லு, நீ செய்தது மட்டும் சரியா?” அவனுக்கு ஆத்திரம் அடங்கவேயில்லை.

“ஏய் கதையடி!” என்று சீறினான்.

“என்ன கதைக்க?” அவனுக்கு மாறான அமைதியுடன் வினவினாள் அவள்.

சட்டென்று ஒரு கணம் நிதானித்தான் நிலன். “ஏன் என்னட்ட சொல்லாம போனனீ?” நம்பிக்கை இல்லாதபோதும் ஏதும் முறையான காரணம் இருக்குமோ என்றெண்ணி வினவினான்.

“இவ்வளவு நாளும் உங்களிட்டச் சொல்லிட்டா போனனான்?”

இறங்கவா என்று கேட்ட சினம் மறுபடியும் உச்சியைத் தொட்டுவிட, “அடி வெளுத்து விட்டுடுவன் ராஸ்கல்! என்னட்டயே உன்ர திமிரக் காட்டுறியோ? அண்டைக்கும் இளவஞ்சி குணாளன் எண்டு சொன்னணி என்ன? நீ இப்ப இளவஞ்சி குணாளன் இல்ல. இளவஞ்சி நிலன். என்னட்டச் சொல்லிட்டுத்தான் போகோணும் விளங்கிச்சா?” என்றான் சினத்துடன்.

“விலகி நில்லுங்க எண்டு சொன்னனான் நிலன்.”

அவளின் பதில்கள் ஒவ்வொன்றும் அவன் கோபத்தைக் குறைப்பதற்குப் பதிலாகக் கூட்டின.

“வஞ்சி, சத்தியமா சொல்லுறன், பக்கத்தில இருந்தியோ என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது. நீ முதல் வேலைய முடிச்சுக்கொண்டு வா, உனக்கு இருக்கு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

ஆனாலும் மனம் ஆறவேயில்லை. அவன் மாமனார் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே. சொல்ல விடாமல் இவள்தான் தடுத்திருப்பாள். அன்றே சொன்னாளே, அவள் தந்தை இனி அழைக்கமாட்டார் என்று. அவள் சொன்னால் கேட்டுக்கொண்டு சொல்லாமல் இருப்பீர்களா என்று அந்த மனிதரிடமும் கத்தும் ஆத்திரம் வந்தது. ஆனால் அவரிடம் கோபப்பட்டுப் பயன் என்ன?

பெரிய பெரிய மூச்சுகளை இழுத்துவிட்டவனுக்குத் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள நிறைய நேரம் பிடித்தது. கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் திரும்புகையில் எதை மனத்தில் வைத்துக்கொண்டு இப்படி எல்லாம் நடக்கிறாள் என்கிற கேள்வி உண்டாயிற்று.

கூடவே தனியாகப் போயிருக்கிறாளே, பாதுகாப்பாக இருக்கிறாளா என்கிற கவலையும்.

இவளைக் கேட்கக் கூடாது. அவனை மதிக்காமல்தானே போனாள் என்று பிடிவாதமாகப் பேசாமல் இருந்தான். அதுவும் கொஞ்ச நேரத்திற்குத்தான்.

அவள் மீது மலையளவு கோபம் உண்டுதான். அதற்காக அவளுக்கு ஒன்று என்றால் தாங்குவானா?

மனம் கேட்காமல், “எல்லாம் ஓகேயா?” என்று கேட்டுக் குறுந்தகவல் அனுப்பினான்.

கண்ணீர் அரும்பிற்று அவளுக்கு. இந்த அன்பில்தானே சிக்குப்பட்டு நிற்கிறாள். கொஞ்ச நேரம் அந்த இரண்டு சொல் கேள்வியில் நிறைந்து கிடந்த அவன் அன்பையே உள்வாங்கிவிட்டு, “ம்!” என்று அனுப்பிவிட்டாள்.

அவனுக்கு அந்த ‘ம்’ போதவில்லை. அவன் தவிக்கிற தவிப்பிற்கும் படுகிற பாட்டுக்கும் ‘ம்’மாம்! “ஏய் ஒழுங்கா உண்மையைச் சொல்லடி. எல்லாம் ஓகேயா?” என்று திரும்பவும் அனுப்பிவிட்டான்.

“ஓம், பாதுகாப்பான இடம்தான்.” கண்களைக் கண்ணீர் மறைக்க எழுதி அனுப்பினாள் அவள்.

“ஏன் போனனீ? அதுவும் ஒண்டரை மாதத்துக்கு.”

“ஒரு ட்ரெயினிங்.”

“என்ன ட்ரெயினிங்?” ஒரு வேகத்துடன் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“ஆம்பிளைகளின்ர உடுப்பும் தைக்கப்போறன்.” கொஞ்சம் தயங்கினாலும் மறைக்கும் எண்ணமில்லையாதலால் சொன்னாள்.

அவன் இருந்த மனநிலைக்கு அவள் தமக்கு எதிராக அதை ஆரம்பிக்கிறாள் என்று யோசித்துப் பிடிக்க முடியவில்லை. அந்தளவில் அவள் செய்கையில் சூடாகிப்போனது மட்டுமல்லாமல் காயப்பட்டுமிருந்தான்.

“அதுக்காக இப்பிடித்தான் சொல்லாமப் போவியா? என்னைப் பற்றி யோசிக்கவே இல்லையா வஞ்சி நீ? இத நான் கேள்விப் படேக்க எனக்கு எப்பிடி இருக்கும் எண்டு யோசிக்கவே இல்லையா நீ?” என்றவன் அதற்குமேல் டைப் பண்ண முடியாமல் அவளுக்கு அழைத்தான்.

நெஞ்சு வெடிக்கும் துயருடன் அதை ஏற்றாள் அவள்.

“கொழும்புக்குப் போகோணும் எண்டு எப்பவோ உனக்குச் சொன்னனான் வஞ்சி. ஆனா உன்னை விட்டுட்டுத் தனியா கொழும்புக்குப் போகேலாம இருந்தது. நீயும் இப்பதான் தையல்நாயகிக்க திரும்பப் போயிருக்கிறாய். வேலை நிறைய இருக்கும். உன்னையும் வா எண்டு கூப்பிடேலாது எண்டு தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தனான். உன்னில இருந்த கோவத்துல போனாலும் அந்த ஒரு கிழமைக்கே தலைகீழா நிண்டவன் நான். ஆனா நீ ஒண்டரை மாதம் சொல்லாம கொள்ளாம போயிருக்கிறாய் என்ன?”

அவன் கோபத்தைக் கூடத் தாங்கிக்கொண்டவளால் இந்த மனவருத்தத்தைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அப்படியே விழிகளை மூடிக்கொண்டு இருக்கையில் தலையைச் சரித்தாள். மூடிய விழிகளுக்குள்ளிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.

“உண்மையிலேயே உன்ர அம்மா அப்பா கட்டாயப்படுத்தினதாலதான் என்னைக் கட்டினியோ வஞ்சி? மற்றும்படி என்னைப் பிடிக்கேல்லையா உனக்கு? எனக்கும் உனக்குமான இந்த வாழ்க்கைல நீ சந்தோசமா இல்லையா?” என்றான் அடிபட்ட குரலில்.

விக்கித்துப்போனாள் இளவஞ்சி. அவனை இழுத்துத் தன் மார்புக் கூட்டுக்குள் பொத்திக்கொண்டு, அப்படியெல்லாம் இல்லை என்று கதற வேண்டும் போலாயிற்று.

பேசக்கூட முடியாதவளாய் வாயை மற்றக் கையால் மூடிக்கொண்டு கண்ணீரில் கரைந்தாள்.

அவனுக்கும் மேலே பேச வரவில்லை. நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. “கவனமா இரு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


தொடரும் :)
 
Last edited:

vidhya s

New member
தப்பு பண்ணுனவங்க எல்லாம் சந்தோசமா வாழ்றாங்க ஆனா நிலன் வஞ்சி இரண்டு பேருக்கும் எவ்வளவு மனக்கஷ்டம் போராட்டம்
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom