• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 6

இளவஞ்சியை நிலன் வீட்டினர் திருமணத்திற்கு கேட்டுவிட்டிருந்ததில் இருந்துதான் மிதுன் என்கிற பெயர் சுவாதிக்கு அறிமுகமானது. அதுவும் அவன் சுகவாசி, பெண்களோடு சுற்றுபவன், உல்லாசி என்றெல்லாம் காதில் விழுந்தபோது, அப்படி என்ன பெரிய மன்மதக் குஞ்சு என்கிற குறுகுறுப்போடுதான் இன்ஸ்டாவில் அவனைத் தேடினாள்.

அங்கே அவனைப் பார்த்த கணம் அவளுக்குள் என்னவோ நிகழ்ந்தது உண்மை. அட்டகாசமாக, பார்க்கிற பெண்களின் இதயங்களைக் கொள்ளை கொள்கிறவனாக, மிகுந்த வசீகரனாக இருந்தான்.

அத்தனை புகைப்படங்களிலும் பெரும் நண்பர்கள் கூட்டமொன்று அவனைச் சுற்றியிருக்க, மலை உச்சியிலிருந்து விழும் அருவி போன்று உற்சாகமாகக் காட்சி தந்தான்.

வாயில் ஏதோ ஒரு கோக் டின்னை சரித்தபடி, யாரோ ஒருவரின் கழுத்தைச் சுற்றிக் கையைப் போட்டு இறுக்கியபடி, யாரையாவது தூக்கியபடி, கூட்டமாக உணவு உண்டபடி, எங்காவது டூர் சென்ற புகைப்படங்கள் என்று அவன் உலகமே வண்ணமயமாயிருந்தது.

வசதி வாய்ப்புகள் அத்தனையும் இருந்தும் அவளுக்கு மறுக்கப்பட்ட அவள் விரும்பும் அந்த உல்லாச வாழ்க்கையைத் தன் புகைப்படங்களில் அப்படியே அச்சொட்டாகக் காட்டிக்கொண்டிருந்தான் அவன்.

என்னால் இப்படியெல்லாம் நண்பர்களோடு நேரம் செலவழிக்கவோ, ஊர் சுற்றவோ முடியவில்லையே என்கிற ஏக்கம், அவனைத் தேடி தேடிப் பார்க்க வைத்தது.

அந்தளவில் கட்டுப்பாடு விதிப்பதிலும் கடுமை காட்டுவதிலும் இளவஞ்சி தையல்நாயகியின் நேரடி வார்ப்பு.

நாளடைவில் இவளாகத்தான் அவனைப் பின்தொடர ஆரம்பித்தாள். அவன் தன்னைத் திறந்த புத்தகமாகத்தான் வைத்திருந்தான். நண்பிகளிடமும் அவனைப் பற்றியும் அவன் விடும் சேட்டைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தாள்.

அதுவும் ஒவ்வொருவரின் கருத்துகளுக்கும் அவன் கொடுக்கும் பதில்களை வாசித்து ரசிப்பதில் அலாதிப் பிரியம் அவளுக்கு.

இப்படி, நாளாந்தம் அவனைப் பார்த்து பார்த்து, அவளுக்கு மிகவுமே தெரிந்த ஒருவன் போன்ற மாயை, அவள் மனத்தில் அவளறியாமலேயே வந்துவிட்டிருந்தது.

ஒருமுறை அவன் மாலைதீவின் கண்ணாடி போன்ற கடற்கரையில் ஒரு வாரத்தைக் கூத்தும் கும்மாளமுமாகக் கழித்துவிட்டு வந்ததைப் பார்த்தவளால் சும்மா இருக்கவே முடியாமல் போயிற்று.

‘ஹேய் மேன், ஊர்ல உள்ளவன்ர வயித்தெரிச்சல எல்லாம் வாங்கிக் கட்டாம போய்ப் பாக்கிற வேலையப் பாருடா!’ என்று எரிச்சலும் சிரிப்புமாகக் கருத்திட்டிருந்தாள்.

போட்ட பிறகு போட்டிருக்க வேண்டாமோ என்று நினைத்தாலும் என்ன பதில் வரும் என்று ஒரு குறுகுறுப்பு. அந்தளவில் யார், என்ன மாதிரியாகக் கருத்திட்டாலும் சிரித்துக்கொண்டே பதில் சொல்லுவான் போலும் என்று நினைக்குமளவில் ரசிக்கும் படியாகத்தான் இருக்கும் அவன் பதில்கள்.

அவனும் அவளை ஏமாற்றவில்லை. ‘ஓகே அன்ட்ரி. டன் அன்ட்ரி. தேங்க் யு அன்ட்ரி. எப்பவும் உங்கட சப்போர்ட் எனக்கு வேணும் அன்ட்ரி.’ என்று போட்டுவிடவும் கொதித்து எழுந்துவிட்டாள் சுவாதி.

பதிலுக்குப் பதில் என்று ஆரம்பித்த வம்புச் சண்டை உள்பெட்டிக்குச் சென்று உள்ளூரில் சந்திப்பதில் வந்து முடிந்தது மாத்திரமல்லாமல், ஈராயிரக் குழவியான அவள், மணிக்கு இரண்டாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் காதலில் பயணித்ததன் பலன், காதலில் விழுந்த வேகத்திலேயே கட்டிலிலும் விழுந்திருந்தாள்.

அதுவரையிலும் கனவுலகில் மிதந்துகொண்டிருந்தவள் அப்போதுதான் பூமிக்கு வந்து சேர்ந்திருந்தாள். பயம், பதற்றம், வீட்டினரின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாத குற்றவுணர்ச்சி எல்லாம் மெல்ல மெல்லத் தலையை நீட்டின.

இதெல்லாம் போதாது என்று கருத்தரித்துவிட்டோம் என்று அறிந்த நிமிடத்தில் அவளுக்குள் பெரும் பூகம்பமே நிகழ்ந்திருந்தது. வெளியில் சொல்லத் தைரியமற்று, யாருக்கும் தெரியாமல் எங்காவது ஓடிவிடலாமா என்று அவள் அழுது புலம்பியதில்தான் மிதுன் திருமண முடிவுக்கு வந்தான்.

அவனும் இப்படியாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அவனுக்கும் தன் வீட்டினரிடம் இதைச் சொல்லத் தைரியமில்லை. விரைந்து திருமணத்தை முடித்துவிட்டு, நேசித்தோம், மணந்துகொண்டோம் என்று முடித்துவிட்டால் குழந்தையைக் கூட அதன் பிறகு உண்டானது என்று சமாளித்துவிடலாம் என்று எண்ணினான்.

அதைச் சொல்லித்தான் அவளிடம் சம்மதமும் வாங்கினான்.

ஆனால், மிதுன் அதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிய கணத்திலிருந்து, மிக அதிகமான குற்றவுணர்ச்சி சுவாதியைப் போட்டுக் கரையானாகத் தின்ன ஆரம்பித்திருந்தது. தன்னோடு தானே போராடி போராடிக் களைத்துப்போனாள்.

அறிவு வேறு, நீ செய்தவை எல்லாம் பெரும் தவறுகள் என்றால் இனிச் செய்யப்போவது அவற்றின் உச்சம் என்று அறிவுறுத்திக்கொண்டே இருந்தது. கடைசியில் இதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தமக்கைக்கு அழைத்து அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

இப்போது இளவஞ்சி சொன்ன விடயத்தைக் கேட்டு மொத்த வீடும் மூச்சடைத்துப்போய் நின்றது. ஜெயந்தி சுவாதியைப் போட்டு அடித்தார். குணாளன் வார்த்தைகளற்று அப்படியே அமர்ந்துவிட்டார். உள்ளம், என் மகளா என்று வேதனையில் துடித்தது.

அந்த வீட்டின் கடைக்குட்டி சுதாகரை வந்ததும் வராததுமாக விசாகனோடு தொழிற்சாலைக்கு அனுப்பியிருந்தாள் இளவஞ்சி. சுவாதி அவன் தமக்கை. அவள் பற்றின பிழையான பிம்பம் அவனுள் விழ வேண்டாம் என்று நினைத்தாள்.

“பாத்து பாத்து வளத்ததுக்கு இப்பிடித்தான் எங்கட தலைல மண் அள்ளிக் கொட்டுவியா?” என்று கேட்டு ஜெயந்தி அவளை அடிக்கவும், “இப்ப என்னத்துக்கு அம்மா அவளுக்கு அடிக்கிறீங்க? கலியாணத்தக் கட்டு கலியாணத்தக் கட்டு எண்டு என்னை அரியண்டப்படுத்தின நீங்க இவளைக் கவனிக்கவே இல்லையா? இவள் இந்தளவு தூரத்துக்குப் போற வரைக்கும் என்னம்மா செய்துகொண்டு இருந்தனீங்க?” என்று அன்னையிடம் அவள் சீறிக்கொண்டிருக்கையில் நிலனின் காரும், அதற்குப் பின்னால் பிரபாகரனின் காரும் வந்து நின்றன.

வீட்டினுள் வந்தவர்களை அங்கே நின்ற யாரும் வரவேற்கத் தயாராயில்லை. தொட்டதும் வெடிக்க காத்திருக்கும் கண்ணிவெடியின் நிலையில் இருந்தது அந்த வீடு.

அதுவும் சினத்திலும் சீற்றத்திலும் சிவந்து கொதித்துக்கொண்டிருந்த இளவஞ்சியின் முகத்தைக் கண்டு, பிரபாகரனே பேச்சை ஆரம்பிக்கத் தயங்கினார்.

ஆனால், இளவஞ்சி நாகரீகம் பார்க்கும் நிலையில் இல்லை. “இஞ்ச என்னத்துக்கு வந்திருக்கிறீங்க?” என்று அவர்கள் முகத்துக்கு நேராகவே கேட்டாள்.

பிரபாகரனுக்கு முகம் கறுத்துவிட, “வஞ்சி!” என்று அதட்டினான் நிலன்.

“அம்மாச்சி!” என்றார் குணாளன் இறைஞ்சலாக.

“என்னப்பா என்ன? வீடு தேடி வந்த மனுசர் விரோதியா இருந்தாலுமே இப்பிடிக் கேக்கக் கூடாது எண்டு எனக்கும் தெரியும் அப்பா. ஆனா, அண்ணனுக்கு நான் வேணும், தம்பிக்கு இவள் வேணுமெண்டா என்னப்பா இது? இன்னும் எத்தினையத்தான் நானும் பொறுத்துப் போறது?” என்ற அவளின் கேள்வியில் குணாளனுக்குமே அதுதானே என்றிருக்க, பிரபாகரனைக் கேள்வியாகப் பார்த்தார்.

அவர்கள் புறம் திரும்பி, “உடச்சுச் சொல்லுங்க. என்ன வேணும் உங்களுக்கு? உங்கட வீட்டிலயும்தானே ஒரு பொம்பிளைப் பிள்ளை இருக்கிறா. அப்பிடி இருந்தும் இன்னொரு பொம்பிளைப் பிள்ளையின்ர மானத்தோட விளையாடுவீங்களா? எதையும் நேரா கதைக்கத் தைரியம் இல்லாம ஏன் இவ்வளவு கேவலமா நடக்கிறீங்க?” என்று சீறினாள்.

அவள் பேச்சில் சந்திரமதிக்குக் கண்ணீரே வந்துவிட மிதுனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதிவாளர் அலுவலகத்தில் வைத்து அவள் நடந்துகொண்ட விதத்திலேயே மிகுந்த கோபம் கொண்டிருந்தான். இப்போது தன் வீட்டினரையும் அவள் அவமானப்படுத்தவும் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை.

“ஹல்லோ! பிழை செய்தது நான். என்ன கதைக்கிறதா இருந்தாலும் என்னோட கதைங்க. என்ர அப்பாட்ட இல்ல!” என்றவனிடம், “நீ வாயை மூடு!” என்று குரலை உயர்த்தினாள் அவள்.

“உன்ர அம்மா அப்பாவை இந்த நிலைல நிப்பாட்டினவனே நீ. நீ கோவப்படுவியோ என்னட்ட? அந்தளவுக்கு உன்ர குடும்பமும் குடும்பத்தின்ர மரியாதையும் உனக்கு முக்கியம் எண்டா வாலச் சுருட்டிக்கொண்டு பேசாம இருந்திருக்கோணும். என்ர தங்கச்சியோட பழகி இருக்கக் கூடாது.”

“நான் மட்டுமா பழகினனான்? அவளும்தானே என்னோட பழகினவள். என்னவோ அவள் பேபி மாதிரியும் நான் அவளை ஏமாத்தின மாதிரியும் கதைக்கிறீங்க?” என்றவனைக் கண்ணில் நீருடன் அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் சுவாதி.

இளவஞ்சிக்கோ கண்மண் தெரியாத ஆத்திரம். “சொன்னன் பாத்தியா? நீ ஒழுங்கா இருந்திருக்க இதெல்லாம் நடந்திருக்குமா? தேவையா உனக்கு இது?” என்று கேட்ட தமக்கைக்குப் பதில் சொல்ல இயலாமல் கண்ணீர் உகுத்தாள் சுவாதி.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
மிதுனை அவள் கண்ணீர் சுடாமல் இல்லை. ஆனாலும் அவள் புறம் திரும்பவில்லை அவன். தப்புச் செய்தது இருவரும். அதை முடிந்தவரையில் நேராக்கிச் சீராக்க முயன்றான் அவன்.

அவன் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையை தலையை ஆட்டிவிட்டுக் கடைசியில் காரியத்தையே கெடுத்தது அவள். இதில், அவன் பெற்றோர் அவன் முன்னாலேயே அவமானப்பட்டு நிற்க அவனால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?

நிலனுக்கு அத்தனையும் கையை மீறிக்கொண்டிருப்பது தெரிந்தது. அதில், “வஞ்சி! உன்ர கோவம் நியாயம்தான். ஆனாலும் கொஞ்சம் நிதானமா இரு. என்ன எண்டு கதைப்பம்.” என்று சமாதானம் செய்தான்.

“இதுல கதைக்க என்ன கிடக்கு? தொழில்ல போட்டி போடத் தைரியம் இல்லாம இப்பிடி எல்லாம் நடக்க வெக்…” என்றவளை, “வஞ்சி!” என்று உயர்ந்து ஒலித்த நிலனின் குரல் அடக்கிற்று.

“ஆத்திரப்பட்டு வார்த்தைகளை விடாத. நாங்களும் உன்ர நிலமைலதான் இருக்கிறம். இதுக்கும் தொழிலுக்கும் எந்தச் சம்மந்தமுமில்ல.” என்று அவன் சொன்னதை அவள் நம்பவே தயாராயில்லை.

தொழிலைத் தாண்டி அவர்களுக்குள் வேறு எந்தவித விரோதமுமே இல்லை.

“அம்மாச்சி இளவஞ்சி. தம்பி சொல்லுறது உண்மைதானம்மா. தொழிலுக்கும் இண்டைக்கு நடந்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இன்னுமே சொல்லப்போனா எங்கட மகனா இப்பிடியெல்லாம் நடந்தான் எண்டு நம்பேலாம இருக்கு. ஒரு பொம்பிளைப் பிள்ளைய இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டுட்டானே எண்டுதான் பதறியடிச்சு ஓடி வந்திருக்கிறம். நடந்ததை ஆராலயும் மாத்தேலாது. அதால இனி என்ன செய்றது எண்டு பாப்பமே.” அவ்வளவு நேரமாக அவளை நெருங்கவே பயந்துகொண்டிருந்த சந்திரமதி, கணவரின் கண்ணசைவில் மெல்ல அவளிடம் வந்து இதமாகப் பேசினார்.

உண்மையில் அவரின் அந்த இதமான குரலுக்கு அவளிடம் பலனிருந்தது.

அதில், “இன்னுமே எனக்கு நீங்க சொல்லுறதுல நம்பிக்கை இல்ல அன்ட்ரி. ஆனாலும் உங்கட சின்ன மகனுக்கு என்ர தங்கச்சியத் தர எனக்கு விருப்பம் இல்ல. பழக்கவழக்கம் சரியில்லாத, ஷோர்ட் பிலிம் எடுக்கிறன் எண்டுற பெயர்ல ஆம்பிளை பொம்பிளை வித்தியாசமில்லாம கூத்தடிச்சுக்கொண்டு திரியிறது எல்லாம் எங்களுக்குச் சரி வராது.” என்று தணிந்த குரலில் என்றாலும் நேராகவே சொன்னாள்.

குணாளனுக்கும் அவள் சொன்னதில் உடன்பாடு என்பதில் அவரும் மகளுக்கு மாறாகப் பேச வரவில்லை.

சந்திரமத்திக்குச் சுவாதியின் நிலையை எப்படி உடைத்துப் பேசுவது என்று தடுமாற்றமாயிருந்தது. அவளைப் பார்த்தார். ஜெயந்தியின் பின்னால் கூனிக் குறுக்கிக்கொண்டு கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.

பிரபாகரனுக்கு அது மனைவி பேசினால்தான் சரியாக இருக்கும் என்று தோன்றியதில் அவராலும் பேச முடியவில்லை.

“அம்மாச்சி…” என்று மீண்டும் ஆரம்பித்தவரைத் தடுத்து, “அன்ட்ரி ப்ளீஸ். உங்கட வீட்டில உங்களில மட்டும்தான் எனக்குக் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கு. தயவு செய்து இதுக்கு மேல இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம். முதல் நீங்க போய் உங்கட சின்ன மகனின்ர இன்ஸ்டாவ ஒருக்கா செக் பண்ணுங்க. அவனுக்கு இதுக்கு முதலே பல காதலிகள். இனியும் எத்தின வரும் எண்டு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அதில ஒருத்தியா இருந்து என்ர தங்கச்சியக் கண்ணீர் வடிக்க விட என்னால ஏலாது.” என்று உறுதியாக மறுத்தாள்.

“அதெல்லாம் தெரிஞ்சுதான் உங்கட தங்கச்சி என்னை விரும்பினவா.” தாயும் தகப்பனும் தன்னால் இன்னுமின்னும் தலைகுனிகிறார்களே என்கிற குற்றவுணர்ச்சியில் இடையிட்டுச் சொன்னான் மிதுன்.

பார்த்தாயா என்று சுவாதியைப் பார்வையாலேயே எரித்துவிட்டு, “அதாலதான் பளார் எண்டு அவளுக்கு ஒண்டு போட்டனான். கண்ணிருந்தும் குருடா இருந்திருக்கிறாளே!” என்று சீறினாள் இளவஞ்சி.

“அக்கா ப்ளீஸ். நான் செய்தது எல்லாம் பிழைதான். அதாலதான் கலியாணத்தையும் உங்களுக்குத் தெரியாம செய்ய வேண்டாம் எண்டு நினைச்சனான். ஆனா ஆனா… எனக்கு அவரோடதான் கலியாணம் நடக்கோணும்.” என்று சொன்னவளைத் திரும்பவும் ஒருமுறை வெளுக்கலாம் போலிருந்தது இளவஞ்சிக்கு.

ஆனாலும் தன்னை அடக்கி, “அதெல்லாம் கொஞ்சக் காலம் போக எல்லாம் மாறும். நான் மாத்துவன். நீ வாய மூடிக்கொண்டு பேசாம இரு!” என்று அவளையும் அடக்கினாள்.

இதற்குமேல் யாருக்கு அவளோடு என்ன பேசுவது என்று தெரியவில்லை. எல்லோரும் குணாளனைப் பார்க்க, “குறையா நினைக்காதீங்கோ. உங்கட மூத்த மகனுக்கு எங்கட மூத்தவாவ நீங்க கேட்ட நேரம் நானுமே ஓம் எண்டு சொல்ல சொல்லி மகளோட கதைச்சனான். அது வேற. அவர் பொறுப்பும் ஒழுக்கமுமான பிள்ளை. ஆனா உங்கட சின்னவர்… எங்களுக்குச் சரி வராது. விட்டுடுங்கோ.” என்றார் குணாளன்.

அப்படி விட முடியாதே. பெரியவர்கள் கையைப் பிசைய, “இந்தக் கலியாணம் நடக்கோணும் வஞ்சி.” என்றான் நிலன்.

“ஏன்?”

அவனாலும் அதை உடைத்துப் பேச முடியவில்லை. அவள் வீட்டினர் நிலையையும் கவனிக்க வேண்டுமே. சுவாதிக்கு நெஞ்சு வெடித்துவிடும் போல் அடித்துக்கொண்டது.

“சொல்லுங்க நிலன். உங்களுக்கு என்னக் கட்டியே ஆகோணும். உங்கட தம்பிக்குச் சுவாதியோட கலியாணம் நடந்தே ஆகோணும். இதுக்கெல்லாம் என்ன காரணம்? சொல்லுங்க!”

“சொல்லுங்க சொல்லுங்க எண்டா என்னத்தச் சொல்லச் சொல்லுறாய்? உன்ர தங்கச்சி உன்ர தங்கச்சி மட்டுமில்ல. இன்னும் கொஞ்ச மாதத்தில ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆகப்போறாள்.” என்று போட்டுடைத்தான் அவன்.

“என்ன?” என்று அதிர்ந்தவளின் சிந்திக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது அவன் தந்த அதிர்ச்சி.

கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை. திரும்பிச் சுவாதியைப் பார்த்தாள். முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள் அவள்.

அந்தக் கண்ணீர் இளவஞ்சியின் உள்ளத்தைத் தொடவேயில்லை. எல்லாம் விட்டுப்போன ஒரு உணர்வு. பெரும் தவறு ஒன்று நடந்துவிடாமல் தங்கையைக் காத்துவிட வேண்டும் என்று துடித்தாளே. இங்கானால் தப்பே நடந்து முடிந்துவிட்டதாம்.

ஒருமுறை இறுக்கமாக விழிகளை மூடித் திறந்துவிட்டு, “உங்கட காரியம் ஆகோணும் எண்டுறதுக்காக எவ்வளவு தூரத்துக்கும் இறங்குவீங்களா நிலன்?” என்றாள் வெறுத்துப்போன குரலில்.

“லூசா நீ? திரும்ப திரும்ப எங்களிலேயே பிழை சொல்லிக்கொண்டிருக்கிறாய்? உன்ர தங்கச்சிக்கு விருப்பம் இல்லாமயா இதெல்லாம் நடந்தது?” திரும்ப திரும்ப அவர்களையே அவள் குற்றம் சாட்டவும் சுள் என்று ஏறிவிடப் பட்டென்று கேட்டுவிட்டான்.

ஆனால், குணாளனும் ஜெயந்தியும் அறை வாங்கிய மனிதர்களாக அவமானக் கன்றலுடன் அவனைப் பார்க்க
ஐயோ என்றிருந்தது அவனுக்கு.

“சொறி சுவாதி. சொறி அங்கிள்! நான் அப்பிடிக் கதைக்க நினைக்கேல்ல வஞ்சி!” என்று அவள் கையை அவன் பற்ற வர, அதற்கு விடாமல் சட்டென்று தள்ளி நின்றவள், “இதுக்காக எல்லாம் கலியாணம் கட்டி வைக்கிறதுக்கு இது ஒண்டும் அந்தக் காலம் இல்ல. நீங்க நடவுங்க!” என்றாள் முகத்திலோ குரலிலோ எந்த உணர்வையும் காட்டாமல்.

இவ்வளவுக்குப் பிறகும் அவள் அப்படிச் சொன்னதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.

“அம்மாச்சி…” குணாளனுக்கு மனதே விட்டுப்போயிற்று. இனி என்ன பேசியும் பிரயோசனம் இல்லை என்று விளங்க, இந்தக் கலியாணத்தை முடித்துவிடவே நினைத்தார்.

“இல்லை அப்பா. இதுக்காகப் பாத்து அவளைக் காலம் முழுக்க அழு எண்டு விடேலாது. இதுக்கெல்லாம் என்ன செய்யோணும் எண்டு எனக்குத் தெரியும். நீங்க அமைதியா இருங்க.” என்று அவள் முடிக்கக் கூட இல்லை.

“சி! நீயெல்லாம் என்ன பொம்பிளை?” என்று சீறினார் ஜெயந்தி. “பெத்த பிள்ளைக்குச் சமனா உன்ன நாங்க வளத்துவிட்டா நீ என்ர பிள்ளையின்ர வாழ்க்கையை நாசமாக்கப் பாப்பியா?” என்றதும் தலையில் இடி விழுந்தவள் போல் நின்றாள் இளவஞ்சி.

அவளுக்கு அவர் சொன்ன ஒன்றுமே விளங்கவில்லை.

“ஜெயந்தி!” என்று தன்னை மீறிக் கத்தியிருந்தார் குணாளன்.

“என்னத்துக்கு கத்துறீங்க? இத்தின வருசத்தில ஒரு நாள், ஒரு பொழுது அவளுக்கும் என்ர பிள்ளைகளுக்கும் வேற்றுமை காட்டி இருப்பனா? இந்தச் சொத்து சுகம் முழுக்க என்ர பிள்ளைகளுக்குச் சேர வேண்டியது. ஆனா ஆண்டு அனுபவிக்கிறது அவள். அதுக்குக் கூட ஒரு வார்த்த சொல்லியிருப்பேனா? சொந்தப் பிள்ளை மாதிரித்தானே வளத்தனான். ஆனா இவள் என்ன சொன்னவள் எண்டு கேட்டனீங்கதானே? சுவாதின்ர வயித்தில இருக்கிறது எங்கட பேரக்குழந்தையப்பா. நடந்தது பிழைதான். பெரிய பிழைதான். அதுக்காக இப்பிடித்தான் கதைப்பாளா?”

அந்தக் குழந்தையை அழித்துவிடுவாளோ என்று பட்டதுமே தன் சுயத்தை மொத்தமாக இழந்துவிட்ட ஜெயந்தி 28 வருட இரகசியத்தை அப்படியே போட்டு உடைத்தார்.

ஆனால், தையல்நாயகிக்குப் பிறகு அந்தக் குடும்பத்தைத் தாங்கி நின்ற தூண் சுக்கு நூறாக நொருங்கிப்போனாள். விழிகளின் ஓரத்தில் மெலிதாய் நீர்ப்படலாம்.



தொடரும்…
 
Last edited:
Top Bottom