நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
சோதனை மேல் சோதனை
உங்கள் கதாநாயகிகளில் மிகுந்த தைரியமுள்ள ஒரு சாதனைப் பெண்ணாக இளவஞ்சி இருக்கிறார்.இங்கே அவள் வீட்டில் யாருக்கு என்ன கதைப்பது என்று தெரியாத நிலை. குணாளன் மொத்தமாய் இடிந்து போயிருந்தார். ஜெயந்தியின் புறம் திரும்பவேயில்லை. சுவாதிக்குமே இளவஞ்சி தன் தமக்கை இல்லை என்கிற விடயம் பெரும் அதிர்ச்சியாய் இறங்கியிருந்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள்.
பிரபாகரன் குடும்பத்தினருக்கு வந்தபோது இருந்ததை விடவும் தற்போதைய நிலவரம் மிகுந்த இறுக்கமாக இருப்பது நன்றாகவே தெரிந்தது. அதைவிட இந்த நேரத்தில் திருமணம் குறித்துப் பேசுவது அநாகரீகம் என்று புரிந்துகொண்ட பிரபாகரன், “எல்லாம் சரியாகும் குணாளன். ரெண்டு நாள் போகட்டும். எல்லாரும் அமைதியா இருந்து கதைங்கோ.” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார்.
இனி எதுவும் சரியாகும் என்கிற நம்பிக்கை குணாளனுக்கு இல்லை. அவருக்கு இளவஞ்சியைத் தெரியும். இனி, அவர்களை எல்லாம் அரவணைத்துப் போன அந்த மகள் அவருக்குக் கிடைக்கவே மாட்டாள்!
கலங்கிப்போன மனமும் விழிகளுமாக அவர்களை நோக்கி, “உங்கட வீட்டில எல்லாரோடயும் கதைச்சு எவ்வளவு கெதியா ஏலுமோ அவ்வளவு கெதியா இந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்ங்கோ. நடத்தி வைப்பம்.” என்று சொன்னார்.
“இளவஞ்சி?” என்றார் பிரபாகரன் கேள்வியாக.
“அவா என்ர மகள்தான். ஆனா இனி அது எனக்கு மட்டும்தான். அதால அவாட்ட இருந்து இனி ஒரு வார்த்த மறுப்பா வராது.” உடைந்து கரகரத்த குரலில் சொன்னார்.
சரி என்பதுபோல் தலையசைத்த பிரபாகரன் நிலனைப் பார்த்தார். நேரிலேயே பேச வந்துவிட்டோம், முடிந்தால் அவன் திருமணத்திற்கும் சேர்த்துக் கேட்போம் என்று எண்ணிக்கொண்டிருந்தவர் இப்போது வாயைத் திறக்க முடியாமல் நின்றார்.
நிலனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. அவர்களிடம் மன்னிப்பைக் கேட்டுவிட்டுப் போனவள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தான்.
அவள் மீது காதல் என்றெல்லாம் இல்லை. ஆனால் இன்று, அத்தனைக்குப் பிறகும் அழாமல் நிமிர்ந்து நின்று மன்னிப்பைக் கேட்டுவிட்டுப் போனவள் அவன் உள்ளத்தினுள் மிக அழுத்தமாக நுழைந்துவிட்ட உணர்வு. அந்த நிமிடமே அவளைப் பார்க்க நினைத்துத் தன் வீட்டினரை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
ஆனால், அவன் நினைத்ததை அவனால் செயலாற்ற முடியவே இல்லை.
அவளின் அலுவலகத்திற்கே நேராகச் சென்றவனைச் சந்திக்க மறுத்தாள் இளவஞ்சி. அன்று மட்டுமல்ல. அதன் பிறகு வந்த நாள்களிலும் அவனால் அவளைப் பார்க்கவே முடியவில்லை.
தன்னைத் தானே தனிமைச் சிறையில் போட்டுப் பூட்டியிருந்தாள்.
அன்று மாலை வீடு வந்தவள், “நான் இந்த வீட்டில இருக்கலாமா? இல்லை, வெளில போகோணுமா?” என்றாள் குணாளனிடம்.
துடித்துப்போனார் மனிதர். “அம்மாச்சி, அப்பா ஏற்கனவே நல்லா உடஞ்சிட்டனம்மா. நீயும் சேர்ந்து உடைக்காத. இப்பவும் சொல்லுறன். நீ எனக்குப் பிறக்காம இருக்கலாம். ஆனா என்ர பிள்ளைதான். இளவஞ்சிதான் என்ர மூத்த மகள்.” என்றார் தழுதழுத்த குரலில்.
அதன் பிறகு அவள் அந்த வீட்டில் யாரோடும் எதுவும் கதைப்பதேயில்லை.
ஜெயந்திக்குப் பிரத்தியேகமாக அவள் மீது எந்த வெறுப்பும் இல்லை. பெற்ற மகளாகத்தான் பாவித்தார். பாசமாகத்தான் வளர்த்தார். பிரிவினை காட்டியதும் இல்லை. ஆனால், உண்மை என்கிற ஒன்று எப்போதும் அடி நெஞ்சில் உறங்கிக்கொண்டேதானே இருக்கும். அதில் ஆத்திரத்திலும் அவசரத்திலும் நிதானமிழந்து வார்த்தைகளை விட்டுவிட்டார்.
இப்போது அவரும் அவள் முகம் பார்க்க முடியாமல் தவித்தார். எப்படியாவது அவளிடம் மன்னிப்பைக் கேட்டுத் தன்னை விலக்கிவிட அவர் முயல, “நீங்க ஒண்டும் பொய் சொல்லேல்லையே. இன்னுமே சொல்லப்போனா இத்தனை காலமும் நான் வாழ்ந்த வாழ்க்கைதான் பொய். நீங்க சொன்னதாலதான் நான் ஆர் எண்டுற உண்மை எனக்குத் தெரிய வந்ததும்.” என்றுவிட்டு நடந்தவள் நின்றாள்.
“கார்மெண்ட்ஸ் கணக்குவழக்கெல்லாம் எப்ப வேணுமெண்டாலும் நீங்க செக் பண்ணலாம். இல்ல, உங்கள்ள ஆருக்காவது கார்மெண்ட்ட மொத்தமா உங்கட பொறுப்பில எடுக்க விருப்பம் எண்டாலும் சொல்லுங்க, எல்லாத்துக்கும் நான் ரெடியாத்தான் இருக்கிறன்.”
“என்னம்மா இது? அண்டைக்கு நடந்ததுக்காக நானும்தான் கவலைப்படுறன். இப்பிடி எல்லாம் கதைக்காதாயம்மா.” என்றார் அவர் கண்ணீருடன்.
அவர் பேசவே இல்லை என்பதுபோல் பாவித்து, “அப்பம்… அது தையல்நாயகி அம்மா கடைசி நேரத்தில கூட நீதான் பொறுப்பா இருக்கோணும், கார்மெண்ட்ஸ உடைய விடாமப் பாக்கோணும் எண்டு திரும்ப திரும்பச் சொன்னவா. அதால மட்டும்தான் இன்னும் அங்க போய் வாறன். எப்ப நீங்க பொறுப்பெடுக்க ரெடி எண்டாலும் சொல்லுங்க நான் விலகிடுவன்.” என்றுவிட்டுப் போனாள்.
இங்கே ஒரு பக்கம் மிதுன் சுவாதி திருமண வேலைகள் மிக வேகமாக நடக்க ஆரம்பித்தன. நிலனுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட விருப்பமில்லை. அதைவிட, இதை விட்டால் அவளைப் பிறகு தன்னிடம் கொண்டுவர முடியாமலேயே போய்விடுமோ என்கிற பயமும் அவனைத் தொற்றிக்கொண்டது.
அதற்கு முதல் அவளோடு அவன் பேச வேண்டும். என்ன முயன்றும் அது மட்டும் நடப்பதாக இல்லை.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவன் கடைசியில் காரியத்தில் இறங்கியிருந்தான்.
அன்று காலை, வழமை போன்று விசாகனோடு தொழிற்சாலைக்குப் பயணித்துக்கொண்டிருந்தாள் இளவஞ்சி. அப்போது அவர்களை முந்திய நிலனின் கார், வேகத்தைக் குறைத்து இருபக்கத்து சிக்னல் லைட்டுகளையும் ஒரே நேரத்தில் ஒளிர விட்டு சமிக்ஜை செய்தது.
தன்னைப் பின்தொடர்ந்து வரச் சொல்கிறான். எத்தனை முறை தவிர்த்தாலும் விடாமல் துரத்துகிறவன் மீது கோபம் உண்டாக, “நீங்க நேரா தையல்நாயகிக்கு விடுங்க விசாகன்.” என்றுவிட்டு வீதியோரத்தில் பார்வையைப் பதித்துக்கொண்டாள் இளவஞ்சி.
ஆனால், அவளின் கார் நிலனின் காரைப் பின்தொடர்ந்தது.
“விசாகன், நீங்க தையல்நாயகிக்கு விடுங்க.” தான் சொன்னது அவனுக்கு விளங்கவில்லையா என்றெண்ணித் திரும்பவும் சொன்னாள் இளவஞ்சி.
அவன் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால், நிலனின் கார் ஒரு வீட்டின் முன்னே சென்று நிற்க, அதன் பின்னால் கொண்டுபோய் இந்தக் காரையும் நிறுத்தினான்.
நம்ப முடியாமல் விசாகனையே பார்த்தாள் இளவஞ்சி. கடந்த சில நாள்களில் நிறையப் பார்த்துவிட்டதாலோ என்னவோ அளவுக்கதிகமாக அதிரவெல்லாம் இல்லை அவள். ஆனாலும் உள்ளே ஒரு வலி குடைந்தது.
அவன் இப்படிப் பொய்த்துப் போயிருக்க வேண்டாம் என்றே நினைத்தாள். அவனோடு அவனை நம்பி எங்குப் பயணிக்கவும் அவள் யோசித்ததேயில்லை. அவன் அவன் எல்லையில் நின்றாலும் அவள் அவனை ஒரு நண்பனாகத்தான் பாவித்திருக்கிறாள். அவ்வளவு நம்பிக்கை.
என் குடும்பம் என்று நினைத்தவர்கள் அவள் குடும்பத்தினர் இல்லையாம். நம்பிக்கையானவன் என்று அவள் நம்பிய ஒருவன் அவளை முற்றிலும் ஏமாற்றியிருக்கிறான். பிறகு என்ன அவள் பெரிய வெற்றிகரமாகத் தொழிலை நடத்துகிறவள்? விரக்தி நெஞ்சைச் சூழ்ந்தது.
இதற்குள் அவன் காரிலிருந்து இறங்கி அவர்களிடம் வந்த நிலன், அவள் பக்கத்துக் கதவைத் திறந்து, “இறங்கு வஞ்சி!” என்றான்.
ஒருமுறை நிதானமாக அவன் முகத்தையே பார்த்துவிட்டு இறங்கினாள் இளவஞ்சி.
விசாகனுக்கு உள்ளே உள்ளம் உதறாமல் இல்லை. கோபப்படுவாள், ஏதாவது சொல்வாள் என்று அவளையே பார்க்க, “இது எத்தின நாளா?” என்றாள் அவள் நிலனிடம்.
சிறிதாய்த் தயங்கினாலும், “நாலு வருசம்.” என்றான் நிலன்.
“சோ, என்ர கைய விட்டுப் போன பல டீலுகளுக்குப் பின்னால இருந்தது விசாகன்?”
ஆம் என்பதுபோல் தலையை அசைத்தான் நிலன்.
“முத்துமாணிக்கம் அங்கிள் கார்மெண்ட்ஸ விக்கப்போறார் எண்டுற விசயம் தெரிய வந்ததும் இப்பிடித்தான்.”
பதிலெதுவும் சொல்லாமல் இறுக்கமாக நின்றான் நிலன்.
ஒரு நொடி யோசித்துவிட்டு, “அண்டைக்கு சுவாதி எனக்குத்தான் ஃபோன் பண்ணிச் சொன்னவள். அங்க போறவரைக்கும் நான் அவளோட கதைச்சுக்கொண்டேதான் போனனான். ஆனா எனக்குப் பின்னால நீங்களும் வந்திட்டீங்க. சோ, நியூஸ் தந்தது விசாகன்?” என்றாள் அவன் மீதே பார்வையைப் பதித்து.
உதடுகள் கோடாக அழுந்த அதற்கும் ஆம் என்பதுபோல் தலையை அசைத்தான் நிலன்.
அவனையே இமைக்காது ஒரு கணம் பார்த்தவள் விசாகனின் புறமாகத் திரும்பி கையை நீட்டினாள்.
காரின் திறப்பைக் கேட்கிறாள். என்ன செய்யட்டும் என்பதுபோல் நிலனைப் பார்த்தான் விசாகன்.
“அவன் இருக்கட்டும் வஞ்சி.” என்றான் நிலன்.
அவள் நீட்டிய கையை இறக்கவும் இல்லை, அவன் சொன்னது காதில் விழுந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் இல்லை.
“வஞ்சி!”
அவள் அசையவில்லை.
“அவன் நம்பிக்கையானவன்தான். இருக்கட்டும் விடு.”
அப்போதும் அவளிடம் மாற்றமில்லை.
கடைசியில் நிலன்தான் இறங்கி வந்தான். தற்போதைய முக்கிய விடயம் அது இல்லை என்பதில், “இப்போதைக்குக் குடு.” என்றான் விசாகனிடம்.
அதன் பிறகே கொடுத்தான் விசாகன்.
“சம்பளம் வாங்கிறது என்னட்ட. விசுவாசம் அங்க!” உதட்டோரம் ஒரு விதமாய் வளையச் சொன்னாள் இளவஞ்சி.
விசாகனின் முகம் கறுத்துப்போனது. அவள் பார்வையை நேரடியாகச் சந்திக்க முடியாமல் தடுமாறினான். அதுவும் இந்தக் கொஞ்ச நாள்களாக அவள் எப்படி உடைந்திருந்தாள் என்று அவனுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியிருக்க தானும் அவளுக்குத் துரோகமிழைத்தது குத்தியது.
“அடுத்தது என்ன?” என்றாள் நிலனை நேராக நோக்கி.
இந்த நேரத்திலும் நிதானமாகச் சூழ்நிலையைக் கையாள்கிறவளை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. “உன்னோட கதைக்கோணும், வா!” என்று அந்த வீட்டினுள் அழைத்துப்போனான்.
தொடரும்…
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.