You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இன்னொரு ரகசியம் - சுதாராஜ்

நிதனிபிரபு

Administrator
Staff member
இன்னொரு ரகசியம் - சுதாராஜ்


அவளது பெயர் எனக்கு முதலிற் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அது தெரியவரும் என்றும் நினைத்திருக்கவில்லை. நூற்றுக்கணக்கான பெண்கள் மத்தியில் அவள் மட்டுமே சற்று வித்தியாசமாக என் கண்களிற் பட்டது உண்மைதான். எனினும் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென நான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.


எங்களது பல்கலைக்கழகம் விடுமுறை விட்டிருந்த நேரம். அப்போது பாடசாலைகளில் ஏ.எல். பரீட்சைகளும் ஆரம்பித்திருந்தன. எனது மாமனார் ஒரு சிறந்த ஆசிரியர். பரீட்சைகளை ஒழுங்காக நடத்தி முடிப்பதில் அனுபவம் பெற்றவர். பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவனான நான் விடுமுறையில் வந்து நின்றது அவருக்கு வாய்ப்பாயிருந்தது. பரீட்சை மண்டபத்தில் உதவியாளராக ஒரு பணியை என் தலைமேலிட்டார். அது ஒரு பெண்கள் கல்லூரி. மரங்களும் மரநிழல்களும் கொண்ட ஓர் இதமான சூழலில் பரீட்சை மண்டபம் அமைந்திருந்தது.

மாணவிகளுக்கு எழுதும் தாள்கள் கொடுப்பது, பரீட்சையை மேற்பார்வை செய்து நடத்தும் ஆசிரியர்களுக்குத் தேநீர் போன்ற சமாச்சாரங்களைக் கொண்டுவந்து கொடுப்பது, விடைத்தாள்களைப் பொதி செய்வதற்கு உதவி செய்வது போன்ற எடுபிடி வேலைகள்தான் எனக்குத் தரப்பட்டிருந்தது. எனினும் எனது மாமனாரே பரீட்சை மண்டபத்தின் முதன்மைப் பொறுப்பாளர் என்ற வகையில் அவரது தலைமைத்துவப் பணிகளையும் நான் சுவீகரித்துக்கொண்டேன். இது பெண் பிள்ளைகள் மத்தியில் ஒரு நாயகத்தன்மையை எனக்கு ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு நப்பாசைதான்!

பெண் பிள்ளைகளைத் தனிமையாகக் காணும்பொழுது நாங்கள் ராஜாக்களைப்போல உற்சாகமடைந்துவிடுகிறோம். ஆனால் இவ்வளவு பெண்கள் மத்தியில் புகுந்தது ஒருவித தயக்கத்தையே ஏற்படுத்தியது. எழுதுவதற்குத் தாள் வேண்டுமென ஒரு மாணவி மேசையிற் பென்சினால் தட்டினால் எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். எழுதும் தாளை அவளிடம் கொண்டு சென்று கொடுப்பதற்குள் மூச்சு வாங்கும். தாளை அவளிடம் கைநீட்டிக் கொடுக்கும்போது அவள் என்னைப் பார்க்கிறாளா நான் அவளைப் பார்ப்பதா என்றெல்லாம் பதற்றமாயிருக்கும். இந்தச் சங்கடங்களெல்லாம் புரியாதமாதிரி அந்த மாணவிகள் அடிக்கடி மேசையிற் தட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் என்ன, இவ்வளவு உற்சாகமாகப் பரீட்சை எழுதுகிறார்களா அல்லது எனக்கு விளையாட்டுக் காட்டுகிறார்களா என்றுகூட சந்தேகம் ஏற்படும். இவ்வாறு நாளொரு ‘வண்ணமும்’ பொழுதொரு ‘மேனியுமாக” கண்களுக்கு விருந்தாக பரீட்சை நாட்கள் கடந்துகொண்டிருந்தன. எனினும் இவ்வளவு வண்ண வண்ணப் பெண்களுக்கு மத்தியில் நான் ஒரு தனி இளைஞனாக எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றிப் பணியாற்ற வேண்டுமே என்ற பிரார்த்தனை மனதிலிருந்தது.

பரீட்சை மண்டபத்துக்கு அண்மையாகவே பெண்பிள்ளைகளின் விடுதி அமைந்திருந்தது. மண்டபத்தின் பக்கத்து விறாந்தைக்கு வந்து அந்தப் பக்கம் திரும்பினால் அவர்களது நடை உடை பாவனைகளைக் காணலாம். அல்லது பார்க்கலாம். அப்பழுக்கற்ற ஓர் இளைஞனாக என்னை நிலைநிறுத்திக்கொள்ள, அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்க்காமலிருப்பதற்கு இமாலயப் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. கண்கள் என்னை ஏமாற்றிவிட்டு அந்தப் பக்கம் திரும்பிவிடும்.
அப்போதுதான் அவளைக் காண நேர்ந்தது. இன்னும் சில பெண் பிள்ளைகள் சமீதமாக விடுதிப்பக்கம் ஒரு சுவர் மறைவிலிருந்து அவள் தோன்றினாள். அவள் என்னை நோக்கிக் கையசைத்தாள். இது நான் சற்றும் எதிர்பாராதது. பரீட்சை எழுத வரும் பிள்ளைகளில் ஏற்கனவே சற்று என்னைக் கவர்ந்திருந்த ஒருத்தியிடமிருந்து இப்படி வலிந்து ஒரு சமிக்ஞையா? அவள் கையசைத்ததும் அவளது சிநேகிதிகள் எல்லோருமாக உடைந்து சிரித்தார்கள். ‘கேலியா? எதற்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்..’ பின்னர் அந்தச் சுவருக்குள்ளேயே மறைந்து போனார்கள். இது என்ன விளையாட்டு?


ஒருவேளை அவர்கள் இந்தப் பக்கம் தங்கள் சிநேகிதிகள் யாருக்காவது கை காட்டியிருப்பார்களோ? தடுமாற்றத்துடன் அக்கம் பக்கம் பார்த்தேன். அப்படி யாரும் தென்படவில்லை. ஏதுமறியாதவன் போல மெல்ல நகர்வதற்கு முற்பட்டேன்.

அப்போது அவள் மீண்டும் வந்தாள். மேகத்தினுள் மறைந்திருந்து வெளிப்படும் நிலா போல அந்த ஒளிர் முகம்.! கண் இமைக்கும் நேரத்தில் அவளது கை அசைந்தது. எனக்குத்தான்! நான் பதிலுக்கு கையசைக்க வேண்டுமா? துருதுருக்கும் எனது கைகளைப் பொக்கட்டினுள் செலுத்திக் கட்டுப்படுத்தினேன். பொறுமை.. பொறுமை என மனதுக்குக் கட்டளையிட்டேன். நானும் பதிலுக்கு ஒரு சமிக்ஞை கொடுக்கலாமா என நினைத்தேன். அது எங்கு கொண்டுபோய்விடுமோ? ஏதாவது விபரீதம் ஆகுமுன் போய்விடலாம் என நழுவ முயன்றேன். அப்போது அவள் ஒரு முத்தத்தைத் தனது கைகளில் எடுத்துக் காற்றில் அனுப்பிவைத்தாள்! ஐயையோ! இதுவும் எனக்கா? அந்த முத்தம் என்னை வந்தடையமுன் நான் பரீட்சை மண்டபத்துக்குள் பாதுகாப்பாக நுழைந்துவிட்டேன்.

எழுதுவதற்கு யாராவது தாள் கேட்டால் தண்ணீரைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டால் தாள்களைக் கொடுத்தேன். சுய உணர்வுடன்தான் இருக்கிறேனா என்று தெரியாமல் என் கைகளை நானே கிள்ளிப் பார்த்தேன். வலித்தது மனசு.. காற்றில் அவள் அனுப்பிய முத்தம் எங்கு போய்ச் சேர்ந்திருக்குமோ என்று ஏக்கமாயிருந்தது.

அவள் விஞ்ஞானப்பிரிவு மாணவி. ஓரிரு பாடப்பரீட்சைகளுக்கு இங்கு ஏற்கனவே வந்திருந்தாள். இன்று வணிகப்பாடப் பரீட்சை நடைபெறுகிறது. அடுத்த விஞ்ஞானபிரிவுப் பரீட்சை எப்போது என அவசரமாக நேரசூசிகளைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். படபடப்பு இன்னும் அடங்கவில்லை. நடந்த சம்பவத்தை எனக்குள்ளேயே மூடிவைத்திருந்தேன். யாருக்காவது, ஒருவேளை அவளது ஆசிரியர்களுக்கே தெரியவந்தால் என்ன ஆகுமோ என்ற பயம் இன்னும் கவ்வியபடியிருந்;தது. ஒரு பாவமும் அறியாத என்னைக் கொண்டுபோய்க் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுவார்களே! இந்த விளையாட்டு விபரீதங்களிலெல்லாம் விழுந்துவிடக்கூடாது! ஆனால் என் மனதுக்குள்ளிருந்து ஈனஸ்வரமாக ஒரு குரல் ஒலித்தது. விழாமலே இருக்கமுடியுமா?
முடியவில்லை. அடுத்த விஞ்ஞானப்பிரிவுப் பரீட்சைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரண்டு நாட்கள் கடப்பதற்கு இன்னும் எத்தனை நாட்களாகும்.. விஞ்ஞானப்பிரிவுப் பரீட்சை எப்போது வரும், என்று ஒரே ஏக்கமாயிருந்தது.


மாலை அம்மா தந்த உணவைக்கூடச் சாப்பிட முடியவில்லை.

"ஏன் தம்பி சாப்பாடு… சரியில்லையா?”

"பொறுங்கம்மா…! இன்னும் ரெண்டு நாள் இருக்கு! கொஞ்சம் பொறுமையா இருங்க!”

"இரண்டு நாளா? என்ன அது? இரண்டு நாளைக்கு விரதமா?”

"இல்லையம்மா! இரண்டு நாளைக்குப் பிறகுதான் கணக்குப்பாடம்! என்ன நடக்குமோ… என்று யோசனையாயிருக்கு!”

"என்னடா இது? ஒன்றுமே விளங்கயில்ல… நீ எக்சாம் நடத்தத்தானே போகிறாய்..! எழுதவில்லையே!”
ஐயையோ! அம்மாவிடம் உளறுகிறேனா?


"இல்ல அம்மா.. கணக்கு முக்கியமான பாடம்தானே… வினாத்தாள் கஷ்டமாக வந்தால் எழுதுகிற பிள்ளைகள் பாவம்தானே… அதுதான் சொல்லிறேன்…”

அம்மாவை சமாளித்தேன். அம்மா என்னைப் பார்த்துப் பெருமைப்படுவது போலிருந்தது.. “நல்ல பிள்ளையடா நீ..! அவங்க யாரோ சோதன எழுதப்போறாங்க.. நீ எதுக்கு கவலப்படுறாய்..?”

அடுத்த நாள் பரீட்சை மண்டபத்துக்கு நேரத்துடனேயே செல்லவேண்டுமென எண்ணியிருந்தாலும் எனது உடை அலங்கரிப்புகளில் கவனம் செலுத்தியதால் சற்றுத் தாமாகிவிட்டது. விடுதிப்பக்கம் எதேச்சையாகக் கண்கள் சென்றன. அங்கே அவள் காத்து நின்றாள். என்னைக் கண்டதும்… அல்லது நான் அவளைக் கண்டதும் ஓடி மறைந்தாள்.

எனக்கு எந்த வேலைகளும் ஓடவில்லை. அவளது நினைவுகளே ஆக்கிரமிக்கத் தொடங்கின. அவள் அமர்ந்து பரீட்சை எழுதிய மேஜையைப் பார்த்துப் பார்த்து வந்தேன். அந்த மேஜையில் பேனாக் கிறுக்குகளும் தெரியாத பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. வகுப்பறைகளிலுள்ள மேஜைகளுக்கெல்லாம் இதே கதிதானோ? அடுத்த முறை அவளுக்கு நல்ல அழகான மேஜை போட்டு வைக்கவேண்டுமெனத் திட்டமிட்டேன்.

கணிதப்பாடப் பரீட்சைக்கு, பரீட்சை எழுதும் மாணவனின் மனோநிலையுடன் பரீட்சை நடத்தச் சென்றேன். ஒவ்வொரு பெண் பிள்ளைகளாக நுழையும்போது அவள் எப்போது வருவாள் என்று பார்த்து நின்றேன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
சில பூனைகள் இரகசியமாகப் பால் குடிக்கின்றன. மற்றவர்கள் முன்னால் நல்ல பிள்ளைகளைப் போல் பாசாங்கு செய்கின்றன. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று ஆச்சரியப்படுமளவிற்கு, பதுங்கிப் பதுங்கி வந்து தனது சுட்டிலக்க மேஜையில் அமர்ந்துகொண்டது நான் பார்த்திருந்த பூனைக்குட்டி! அவளுக்கு என்னைத் தெரியவே தெரியவில்லையாம்!

இந்தப் பூனைக்குட்டிக்கு ஏதாவது குறும்ப செய்யவேண்டும் என்று தோன்றியது எனக்கு! எல்லோருக்கும் எழுதும் தாள்களைத் தேவையான அளவு கொடுத்துவிட்டு அவளுக்கு ஒரே ஒரு தாள் மட்டும் கொடுத்தேன். மேற்கொண்டு தாள் தேவைப்படும்போது என்னை அழைக்கத்தானே வேண்டும்!

"டக்… டக்…டக்!”

மேஜையிற் பென்சிலால் தட்டப்பட்டது. ஓரக் கண்ணால் பார்த்தேன்.

"டக்…டக்…டக்!”

எனக்கு அந்தச் சத்தம் கேட்கவில்லையாம். நான் வேறு அலுவலில் ஈடுபட்டிருந்தேன்.

"டக்… டக்…டக்!”

நிமிர்ந்து பார்த்து, "என்ன?” என்பது போல தலையசைத்துக் கேட்டேன்.

"பேப்பர்!”

"முடியாது… தரமுடியாது!” தலையசைவாகவே தெரிவித்தேன்.

"டக்…டக்.. டக்!” அவளது முகம் மன்றாடுவது போல மாறியது.

"நோ!”

அவள் மேஜையிற் தட்டிக் கொண்டிருக்க, நான் அலட்சியம் செய்தேன்.

"ப்ளீஸ்!”

அவளது உதடுகள் விசும்பியது. நான் சற்று உற்றுப் பார்த்தேன். உதடு துடித்து விம்மலெடுக்க, கண்ணீர் எழுதிய பேப்பர் மேல் விழுந்தது.
நான் அதிர்ந்துபோனேன். விளையாட்டு வினையாகிவிட்டதா? தவறு செய்துவிட்டேன். விளையாடுகிற நேரமா இது? பரீட்சை எழுதும் பிள்ளையைக் குழப்பிவிட்டேனா? மன்னியுங்கள்… மன்னியுங்கள்… மன்னியுங்கள் என நூறு முறை மனதுக்குள் சொல்லிக்கொண்டு எழுதும் தாள்களை அவளிடம் கொடுத்துவிட்டு அப்பால் சென்றேன்.


அவள் கண்ணீருக்கு நான் காரணமாகிவிட்டது கவலையாயிருந்தது. அந்தக் குழப்பத்தில் பரீட்சை ஒழுங்காக எழுதியிருப்பாளோ என்ற குற்ற மனப்பான்மையும் உறுத்தியது. இனி, அவளது பக்கம் போவதில்லை என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அவள் எப்படி இருக்கிறாள்… எழுதுகிறாளா என்று கவனிப்பதற்கு மீண்டும் செல்ல வேண்டியிருந்தது. அவள் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அடேயப்பா…! இவ்வளவு கோபமா?

இரவு மனக் குழப்பமும் வேதனையும் நித்திரையைக் குழப்பிக்கொண்டிருந்தாலும், நான் கொஞ்சம் சீரியஸாகவே இருந்தேன். இந்தக் கூத்துக்களுக்கெல்லாம் முடிவு கட்டவேண்டும். இந்தத் தலையிடி தொல்லையெல்லாம் வேண்டாம். யாரும் என்னைச் சீண்டவும் வேண்டாம். பிறகு கோபப்படவும் வேண்டாம். மாமாவிடமே போய்ச் சரணடைந்துவிடுவோம். உங்கள் ஆசிரியப் பெருந்தகை வேலைகளையும் பரீட்சை நடத்தும் சமாச்சாரங்களையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள் சாமி! எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆளைவிட்டால் போதும்!

மாமா சற்று முற்போக்கான கொள்கை கொண்டவர். எதையும் ஈஸியாக எதிர்கொண்டு பழகியவர். இன்னும் மேலாகச் சொல்வதானால், இந்தப் பரீட்சை முடியும்வரை அவருக்கு உதவியாளராக அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் நான் உபயோகமான எடுபிடியாயிருந்தேன். அந்தப் பரீட்சை மண்டபத்தில் எதற்கும் நானே தேவைப்பட்டேன். அதனால் என்னை விட்டுவிட மாமா தயாராக இல்லை.

"வீட்டில் சும்மாதானே இருக்கப்போகிறாய்… அதைவிட இதுமேல்…! வேலைக்கு வேலையுமாச்சு! விளையாட்டுக்கு விளையாட்டுமாச்சு! இளம் பெடியன் சும்மா பொழுதைப் போக்கக்கூடாது… வா! இன்னும் கொஞ்ச நாட்கள்தானே!”

பரீட்சை மண்டபத்துக்குள் போகும்போதெல்லாம் எனக்கு அவள் நினைவுதான். படிப்பும் விளையாட்டும் வேடிக்கையும் குதூகலமும் என எப்படி உல்லாசமாகத் திரிந்தவன் நான்! இப்போது எல்லாம் போயிற்று! எனக்கு அழுகை வருகிறது. அழ வேண்டும் போலிருக்கிறது. அழுகை எனக்காகவா? எனது நிலைமையை எண்ணியா? அல்லது அவளுக்காகவா என்று தெரியவில்லை. அவள் என்மேற் காட்டிய கோபம் தாங்கமுடியாததாயிருந்தது. பரீட்சை எழுதும்போது அவள் கண்ணீர் விடும் அளவிற்கு எனது நடவடிக்கை இருந்திருக்கிறது. எனக்கு எந்த இங்கிதமும் தெரிந்திருக்கவில்லை. பெண்களைப் புண்படுத்தும் ஆண் மனோபாவம் என்னிடத்திலும் இருந்திருக்கிறது! எனக்கு உதைக்கவேண்டும். நான் அந்தமாதிரிக் கொடுமையான ஆளல்ல என்று அவளுக்குத் தெரியப்படுத்தவேண்டும். எப்படித் தெரிவிப்பது?
அந்தப் புறமாக எனது பார்வை அடிக்கடி சென்றது. அவள் வருவாளா? அவளது பார்வை எனக்குக் கிட்டுமா?


எனது நினைவுகள் வீண் போகவில்லை. நான் தோற்றுப் போகவில்லை. அந்த நிலவு மீண்டும் எனக்காக ஒளிர்ந்தது. சுவர் மறைவிலிருந்து வெளிப்பட்டு வந்து கையசைத்தது! கையசைத்து மறைந்தது. அது போதும் எனக்கு! அடக்கம் காப்பது என்பது சிலவேளைகளில் கஷ்டமான காரியம். எல்லாவேளைகளிலும் முடியாத காரியம். உள்ளார்ந்த உணர்வுகள் எங்காவது எப்போதாவது வெளிப்படத் தருணம் பார்த்தக்கொண்டேயிருக்கும். எனது மனநிலையில் அவள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை அவளுக்கு முழுமையாகத் தெரிவிக்கவேண்டுமே என்பதுதான் எனது தலையாய கவலையாயிருந்தது. அன்று மாலை எனது நண்பன் கண்ணன் என்னைத் தேடி வீட்டுக்கு வந்திருந்தான். அவனது தங்கையும் அதே கல்லூரியிற் பயில்வதும், அவளும் ஏ.எல். பரீட்சை எழுதுவதும், அப்போதுதான் எனக்கு தெரியவந்தது.

"என்ன…! பெரிய ஆள்தான்…!” என்ற கிண்டல் பேச்சுடன் கதையை ஆரம்பித்தான்.

யாருக்கும் தெரியாது என, எனக்குள் மட்டும் என்று மூடிவைத்திருந்த விடயங்களையெல்லாம் விசாரிக்கத் தொடங்கினான். அவனது தங்கை எல்லாவற்றையும் கூறினாளாம்.

"அந்தக் கேர்ளை நீ விரும்புகிறாயா?”

"எந்தக் கேர்ள்?”

அப்போதுதான் அவன் அவளது பெயரைக் கூறினான். அடி, நீதானா அந்தக் குயில்?

அந்தக் கேர்ளை விரும்புகிறாயா என்று நண்பன் கேட்டானே? அவளேதான் இந்தக் குறுக்கு வழியைக் கையாண்டிருக்கக்கூடும்.

ஆண்களாயிருந்தாலும் நாங்கள் இன்னும் முட்டாள்களாகத்தான் இருக்கிறோம். ஒரு பெண்பிள்ளையிடம் இருக்கும் சாதுர்யம் எனக்கு இல்லாமற் போய்விட்டது!

காற்றில் அனுப்பிய முத்தத்தைப் போல அந்தத் தகவல் என்னைத் தேடி வந்திருக்கிறது. அதை நான் பற்றிக்கொண்டுவிட்டேன். அதனால் என் கால்கள் நிலத்திற் பதிய மறுத்தன. எம்பி எம்பிப் பறக்க முற்பட்டன. நான் மாறிப்போனேன். எனக்குள் அவளது நினைவுகள் நிரம்பி நிரம்பிக்கொண்டிருந்தது. அவளது முகம்… நிலவு முகம்… என்னுள் ஒளிர்ந்து ஒளிர்ந்து வந்தது. அவளே எனக்கு எல்லாமாகத் தோன்றத் தொடங்கினாள்.

பரீட்சைகள் மிக சீக்கிரமாகவே முடிவுக்கு வந்தன. அவளது கடைசிப் பாடப் பரீட்சை முடிவுற்ற அன்று, அவளை அழைத்துச் செல்வதற்காக அவளது தாய் வந்திருந்தார். அது மிகவும் சோகமான ஒரு நாளாயிற்று. அன்று காற்று வீச மறுத்தது. மரங்கள் அசைந்து ஆடாது துக்கம் அனுஷ்டித்தன. அவள் பிரிந்து போகப்போகிறாள்!

இப்போது என் கண்ணீருக்கு அவள் காரணமானாள்! எனது நிம்மதியும் ஆறுதலும் அவளோடு சேர்ந்து போய்க்கொண்டிருந்தது.
இந்த மரங்களிடையிலும் மர நிழல்களிடையிலும், சுவர் மறைவிலும் கலந்துபோயிருந்த அவளது குறும்புகளை இன்னும் சற்றுநேரத்தில் நானும் விட்டுப் போய்விடுவேன். அவள் வெகுதூரம் செல்லும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன். ஓரிருமுறை திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.


அவ்வளவுதான்.

அவ்வளவுதானா?

வெளியில் நாங்கள் யாராக இருந்தாலும் வீட்டில் அம்மாவுக்குப் பிள்ளை.

சோர்ந்துபோயிருந்தேன்.

அம்மா வந்தாள்: "என்ன ராஜா… பசியா!” அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். ‘அம்மா… அம்மா…!” என்று அழவேண்டும் போலிருந்தது. அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவோமா? அம்மாவின் மடியில் தலைவைத்து அழவேண்டும். “அவள் என்னை விட்டுப் போய்விட்டாள்..” என்று சொல்லவேண்டும். அம்மா என் தலையை தடவித் தேற்றுவாள். சுகமாயிருக்கும். என்மேல் உயிரையே வைத்திருக்கும் அம்மாவைக் குழப்பிவிடுவது எவ்வகையில் நியாயமாகும். வேண்டாம் எல்லாம் எனக்குள்ளேயே அடங்கிப்போகட்டும்.

அடக்கமுடியாத உணர்வுகள் இரவு வேளையிற் குமுறலெடுக்கின்றன. உறக்கம் தடைப்படுகிறது. உருண்டும் பிரண்டும் அசைந்து உறங்கும்போது.. கனவுகள்! நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகுமா?

கனவோடு போகவில்லை. நண்பன் கண்ணன் மீண்டும் தூது வந்தான். அவளது முகவரியைத் தந்தான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
"இதை அவளே தந்துவிட்டாளா?” என ஆவலுடன் கேட்டேன்.

"அப்படித்தான் இருக்கவேண்டும்… தங்கச்சிதான் என்னிடம் கொடுத்தாள்… உன்னிடம் கொடுக்கும்படி! நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. இதையெல்லாம் தங்கையிடம் விபரமாக விசாரிக்கமுடியுமா?”

அது போதும் எனக்கு. அவளுடன் தொடர்புகொள்வதற்கு வழி கிடைத்திருக்கிறது. கடிதம் எழுதலாமா என யோசித்தேன். எப்படி எழுதுவது, இன்னும் அவளுடன் மனம் விட்டுப் பேசவில்லை. திடுதிப்பென்று கடிதம் எழுதுவதானால் எப்படி ஆரம்பிப்பது? அதை அவள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள், முட்டாள்தனமாக எதையாவது எழுதி மூக்குடைபடக்கூடாது.

அந்த விலாசத்தைத் தேடிச் சென்று அவளை சந்திக்கலாமா என்று எண்ணம் தோன்றியது! கொழும்பிலிருந்து சுமார் நூறு மைல் தூரத்திலுள்ள கிராமப் புறத்துக்குப் போகவேண்டும். வீட்டு இலக்கம் கூட இல்லை. அவளது தந்தையின் பெயரையும் வட்டார இலக்கத்தையும் வைத்துக்கொண்டு வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். அங்கு போய் வருவதென்பது ஒரு முழுநாள் பயணமாயிருக்கும். இதற்கு அம்மாவிடம் என்ன பொய்யைக் கூறி அனுமதி பெறுவது? இந்த எண்ணங்களுடனேயே சில மாதங்கள் கடந்தன.

இதற்காக ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டியிருந்தது. முதலில் இலங்கைத் தேசப்படமொன்று வாங்கி வந்தேன். அந்தக் கிராமத்தையும் அதையண்டிய இடங்கள் பற்றிய விபரங்களையும் அவற்றின் சரித்திர சாஸ்திர சம்பந்தமான தகவல்களையும் படித்தறிந்தேன்.

அவளது கிராமத்துக்கு அண்மையான நகரத்தில் என்னோடு பல்கலைக்கழகத்தில் படிக்கும் நண்பனின் வீடு உள்ளது. இப்போது விடுமுறையில் வீட்டுக்குப் போயிருந்தான். அவனோடு தொடர்புகொண்டால் உதவி செய்வான்.

கல்வி சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சிக்கு நான் அந்தக் கிராமத்துக்குப் போகவேண்டியுள்ளது எனக் கதை விடலாம். அந்த விளக்கத்தை அம்மாவிடம் கூறினேன். கல்வி சம்பந்தப்பட்ட விஷயமென்றால் அம்மா கண்களை மூடிக்கொண்டு சம்மதித்துவிடுவார். அனுமதி கிடைத்துவிட்டது.
ஏதோ ஒரு துணிவில் புறப்பட்டுவிட்டேன். இந்தப் பயணம் எந்த அளவில் வெற்றிகரமாக முடியப்போகிறது, அவளது வீட்டைத் தேடிச் சென்றால் வரவேற்பு எப்படியிருக்கும்? அவளது பெற்றோரை எப்படிச் சமாளிப்பது?


கல்வி சம்பந்தமாக விஷயம் என்று அவர்களுக்கும் கதையளந்துவிடலாம். ஒருவேளை, அவள்கூட எனது வரவை எப்படி எடுத்துக்கொள்வாளோ? அவளாகத்தானே விலாசத்தை அனுப்பிவைத்தாள். புரிந்துணர்வுள்ள அப்பா அம்மாவாக இலக்கலாம். என்னையே நான் தெம்பு படுத்திக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.

நண்பன் இர்ஷாத்துடன் ஏற்கனவே தொலைபேசியிற் தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறியிருந்தேன். அவனது வீட்டில் இரவு தங்கினேன். அடுத்த நாட் காலை எங்கள் கல்வி சம்பந்தமான தேடலுக்குப் புறப்படுவதாகத் தீர்மானித்தோம்.

காலையில் நண்பனுடன் மோட்டார் சைக்கிளிற் புறப்பட்டேன். மோட்டார் சைக்கிளின் சத்தம்போலவே எனது இதயமும் படபடத்து அடித்துக்கொண்டிருந்தது. பிரதான வீதியைக் கடந்து கிறவல் வீதியில் இறங்கி ஓடவேண்டியிருந்தது. போகும் வழியை விசாரித்து விசாரித்துக்கொண்டே போனோம்.

"இந்தப் பக்கம் போங்க…! அந்தப் பக்கம் போங்க…! வளைவில் திரும்புங்க…!” என மக்களெல்லாம் வழி காட்டினார்கள்.

அவளது கிராமத்திக்…திக்…திக்…திற்கு.. வந்தடைந்தோம்.

"மச்சான் திரும்பப் போய்விடலாமா?” என இர்ஷாத்திடம் கேட்டேன்.

"சும்மா பயந்து சாகாம… வாங்க மச்சான்..!” – அட, நான் விட்டாலும் அவன் விடமாட்டான்போலிருக்கிறது.

மணல் மேடுகளிலும் மண் ரோட்டுக்களிலும் புதைந்தும் மிதந்தும் இடத்தைத் தேடிப்போனோம். அவளது தந்தையின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்கவேண்டியிருந்தது. ஏற்கனவே விசாரித்ததில் அவர் இந்த இடத்தில் வசதி வாய்ப்புடன் இருக்கும் ஒரு பிரமுகர் என்று அறியக்கிடைத்தது.
மண் ரோட்டுக்கு இருபுறமும் மரக்கறித் தோட்டங்கள்… அண்மையில் மாளிகை போன்ற வீடு, சுற்று மதிலுடன். தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம் அவளது தந்தையின் பெயரைக் கேட்டு விசாரித்தேன்.


"அதுதான் வீடு!” எனக் கையைக் காட்டினார்கள்.

"சரி. போகலாம் வா!”

நான் தயங்கினேன்..

"கொஞ்சம் பொறுடா!”

"அவர் இப்ப வீட்டில இருப்பாரா?” ஒரு தற்காப்பு உணர்வுடன்தான் தோட்டக்காரரிடம் கேட்டேன்.

"இல்ல தம்பி… அவங்க காலையிலேயே போயிட்டாங்க… சுணக்கமாத்தான் வருவாங்க…! வீட்டில போய்க் கேட்டுப்பாருங்க!”
அப்பாடா அது போதும்.


வீட்டை அண்மித்து வாசல்வரை சென்று கேற்றின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறங்… ங்..ங்கினோம்…

பூட்டிய கேற்றின் முன் நின்று நோட்டம் விட்டேன். முன் பக்க வீட்டுக்கதவு மட்டும் சற்றுத் திறந்திருந்தது. ஜன்னற் சேலைகள்… காற்றோட்டத்துக்காகப்போலும் சற்று விலக்கிவிடப்பட்டிருந்தன.

கேற் தூணிலிருந்த அழைப்புவிசையை அழுத்தினேன். உள்ளே பெல் அடிக்கும் சத்தம் எங்களுக்கும் கேட்டது. அதையும் மீறிய விசையில் எனது இதயம் அடித்தது. மீண்டும் அழுத்தினேன். பெரிய வீடு. உள்ளேயிருந்து வருவதற்கு நேரமெடுக்கும் போலிருக்கிறது. நிதானித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

விலக்கி விடப்பட்ட ஜன்னற் சேலையூடாக அந்த வட்ட நிலவு தோன்றியது. என்னைக் கண்டதும் முகத்தைச் சட்டென உள்ளிழுத்துக்கொண்டாள். அந்தக் கை ஜன்னற் சேலையையும் இழுத்து மூடியது. சற்றும் தாமதியாமல் திறந்திருந்த ஒற்றைக் கதவையும் மறைந்திருந்தவாறே இழுத்து அடைத்தாள்.

நான் நண்பனைப் பார்த்தேன்.

"வா… போகலாம்!”

"என்னடா இது…? வந்த அலுவல்?” அவன் எதையும் கவனிக்கவில்லை போலிருக்கிறது. என்னைப் பரிதாபமாகப் பார்த்தான்.

"வந்த அலுவல் முடிஞ்சிட்டுது… வா போகலாம்…!”

திரும்பினோம்.

"தம்பி இந்த வயசில… எத்தனையோ ஆசைகள் வரும். ஆசாபாசங்களுக்கெல்லாம் அடிமைப்படக்கூடாது. அது உங்கட முன்னேற்றத்தைத் தடை செய்யும். தடங்கல்கள்.. இழப்புக்களையெல்லாம் பெரிசுபடுத்தக்கூடாது. எல்லாவற்றையும் ஈஸியாக எடுக்கப் பழகவேணும். இந்தப் பருவத்தில் இன்னொரு ரகசியம் இருக்கு. அதுதான் கல்வி. படிக்கவேண்டிய பருவத்தில் படிக்காமல் விட்டுவிட்டால்… பிறகு எப்போதுமே கிடைக்காது! வாழ்க்கை முழுக்க அதுக்காகக் கவலைப்படவேணும்”

அப்பா அடிக்கடி இப்படிச் சொல்லும்போதெல்லாம் அவை வெறும் வார்த்தைகள்… சும்மா உபதேசிக்கிறார் என்று அலட்சியம் தோன்றும். ஆனால் இப்போது அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

பென்சிலால் எழுதியதை இறேசரினால் சட்டென அழிப்பதுபோல் இதயத்தில் எழுதியதை அழிப்பது கஷ்டமாயிருக்கலாம். சற்று காலமெடுக்கக்கூடும். எல்லாம் சரியாகிவிடும் என மனதைத் தேற்றிக்கொண்டேன்.
 
Top Bottom