You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

வல்லினம் மிகும் இடங்கள்

நிதனிபிரபு

Administrator
Staff member
வல்லினம் மிகும் இடங்கள்

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளை அடுத்தும், எ என்னும் வினாவை அடுத்தும் வரும் வல்லினங்களாகிய க், ச், த், ப் மிகும்.

அ + பையன் = அப்பையன்
இ + செடி = இச்செடி
எ + பணி = எப்பணி

2. அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு; அப்படி, இப்படி, எப்படி என்னும் சுட்டு வினாச்சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.
அந்த + கோவில் = அந்தக்கோவில்
அங்கு + சென்றான் = அங்குச்சென்றான்
எங்கு + போனான் = எங்குப்போனான்

3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
நூலை + படி = நூலைப்படி
பாலை + குடி = பாலைக்குடி

4. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
அவனுக்கு + கொடுத்தான் = அவனுக்குக் கொடுத்தான்
பணிக்கு + சென்றான் = பணிக்குச் சென்றான்.

5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
தண்ணீர் + குடம் = தண்ணீர்க்குடம்
மரம் + பெட்டி = மரப்பெட்டி
பூட்டு + சாவி = பூட்டுச்சாவி
விழி + புனல் = விழிப்புனல்.

6. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
பச்சை + பட்டு = பச்சைப்பட்டு
பச்சை + கிளி = பச்சைக்கிளி

7. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ

8. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
மலர் + கண் = மலர்க்கண்
தாமரை + கை = தாமரைக்கை.

9. ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும்.
தீ + சுடர் = தீச்சுடர்
பூ + கூடை = பூக்கூடை

10. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
அழியா + புகழ் = அழியாப்புகழ்
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை

11. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
எட்டு + தொகை = எட்டுத்தொகை

12. ட, ற ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.
ஆடு + பட்டி = ஆட்டுப்பட்டி
நாடு + பற்று = நாட்டுப்பற்று

13. முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
பொது + தேர்வு = பொதுத்தேர்வு
திரு + குறள் = திருக்குறள்

14. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
சால + பேசினான் = சாலப்பேசினான்.
தவ + சிறிது = தவச்சிறிது.

15. ஆய், என, இனி, ஆக முதலிய இடைச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
என + கூறினான் = எனக் கூறினான்.
இனி + காண்போம் = இனிக் காண்போம்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வல்லினம் மிகா இடங்கள்

1. அது, இது, அவை, இவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும் எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
அது + பறந்தது = அது பறந்தது.
அவை + பறந்தன = அவை பறந்தன.
எது + தங்கம் = எது தங்கம்
எவை + சென்றன = எவை சென்றன.

2. ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துகளின்பின் வல்லினம் மிகாது.
அவனா + சென்றான் = அவனா சென்றான்.
அவனோ + பேசினான் = அவனோ பேசினான்.
அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்.

3. எழுவாய்த்தொடரில் வல்லினம் மிகாது.
மலர் + பூத்தது = மலர் பூத்தது
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது.

4. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்
இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்
எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்

5. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
ஊறு + காய் = ஊறுகாய்
சுடு + சோறு = சுடுசோறு

6. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
கபிலபரணர்
இரவுபகல்

7. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
தமிழ்+ கற்றார் = தமிழ் கற்றார்.
கடல் + கடந்தார் = கடல் கடந்தார்.

8. மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் ( ஒடு, ஓடு ) வல்லினம் மிகாது.
பூவொடு + சேர்ந்த = பூவொடுசேர்ந்த
கபிலரோடு + பரணர் = கபிலரோடுபரணர்

9. எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப்பின் வல்லினம் மிகாது.
ஒன்று + கொடு = ஒன்றுகொடு
இரண்டு + பேர் = இரண்டுபேர்

10. வியங்கோள் வினைமுற்றுக்குப்பின் வல்லினம் மிகாது.
வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
வாழிய + பல்லாண்டு = வாழிய பல்லாண்டு

11. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.
சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்பு பாம்பு

12. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.
கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
சிறிய + பெண் = சிறிய பெண்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஒரு சொல்லுக்குக் கடைசி எழுத்தாக கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உயிர்மெய் உகர எழுத்துகளில் ஏதேனும் ஒன்று வந்தால், அது குற்றியலுகரச் சொல். கொக்கு, பஞ்சு, பாட்டு, பத்து, பாம்பு, காற்று ஆகிய சொற்களின் கடைசி எழுத்துகளை நோக்குங்கள். அவை, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகளில் ஒன்றாக இருக்கின்றன.

அதனால் அச்சொற்கள் குற்றியலுகரச் சொற்கள். அவ்வாறு வரும் எல்லாச் சொற்களும் குற்றியலுகரம் ஆகிவிடுவதில்லை.

தனியாக ஒற்றைக் குறில் எழுத்தை அடுத்து கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகளில் ஒன்று வந்தால், அச்சொல் குற்றியலுகரம் ஆகாது.

பசு, நடு, பொது, புது, மது ஆகிய சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இச்சொற்களின் ஈற்றெழுத்துகள் கு, சு, டு, து, பு, று ஆகியவற்றில் ஒன்றாக
இருப்பினும், தனிக் குறிலெழுத்தை அடுத்துத் தோன்றியமையால் இவை குற்றியலுகரம் ஆகவில்லை. ஒலியில் குறுகாமல் முழுமையாகவே ஒலிப்பதால், இவை முற்றியலுகரங்கள் எனப்படும். தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் உகர
ஈற்றுப் பெயர்ச்சொற்களை அடுத்து வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வந்தால் அங்கே கட்டாயம் வலிமிகும்.

பசு + தோல் = பசுத்தோல்
பொது + பணி = பொதுப்பணி
நடு + காடு = நடுக்காடு
மது + கடை = மதுக்கடை

கு,சு,டு,து,பு,று அல்லாத பிற உகர உயிர்மெய் எழுத்துகளும் தனிக்குறிலை அடுத்து வந்து ஒரு சொல்லாகத் தோன்றும்தானே?

முழு, விழு, குழு, திரு, பளு, தெரு, அணு ஆகிய சொற்களைப் பாருங்கள். அவை தனிக்குறிலை அடுத்து கு,சு,டு,து,பு,று அல்லாத உகர ஈற்று உயிர்மெய் எழுத்துகளோடு இருக்கின்றன. அவையும் முற்றியலுகரங்களே.

அவற்றுக்கும் வருமொழி வல்லினத்தில் தொடங்கினால் கட்டாயம் வலிமிகும்.

முழு + தகுதி = முழுத்தகுதி
விழு + புண் = விழுப்புண்
குழு + பாடகன் = குழுப்பாடகன்
திரு + கோவில் = திருக்கோவில்
பளு + போட்டி = பளுப்போட்டி
தெரு + கூட்டம் = தெருக்கூட்டம்
அணு + குண்டு = அணுக்குண்டு

நம்மில் பலரும் அணுகுண்டு என்று வலிமிகுவிக்காமல்
எழுதிக்கொண்டிருக்கிறோம். அணுக்குண்டு என்று எழுதுவதே சரியானது. அதனைப் போலவே 'பசும்பால்' என்றும் எழுதுவதுண்டு. 'பசும்பால்' என்றால் காய்ச்சப்படாத அனைத்து வகை பச்சைப் பாலையும் (ஆடு, எருமை) குறிக்கும். 'பசுப்பால்' என்பதுதான் பசுவிடமிருந்து கறந்த பாலைக் குறிக்கும். தனிக்குறிலை அடுத்து உகர உயிர்மெய் எழுத்து வருகின்ற பெயர்ச் சொற்களுக்கு வலிமிகும் என்பதை நினைவில்
கொள்க.

- மகுடேசுவரன்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
பொதுவாக, இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையில் வலிமிகுவித்து விடுவது நலம். ஏனெனில் இரண்டுமுதல் ஏழு வரையிலான எல்லா வேற்றுமை உருபுகளின் உடன் தொக்க தொகைகட்கும் வலிமிகும்.

பிற தொகைகள் சிலவற்றுக்கும் தொடர்களுக்கும் வலிமிகுமா, மிகாவா என்பதைக் குறித்து நமக்கு அறிவு இருக்க வேண்டும்.


*
ஒரு சொல்லை அடுத்து வல்லின எழுத்துகளில் தொடங்கும் சொல் தோன்றினால், முதற்சொல்லின் ஈற்றில் வல்லின மெய் மிகுவது வலிமிகுதல் ஆகும்.
*
கசடதபற என்னும் வல்லின எழுத்து வரிசைகளில் ட,ற ஆகிய எழுத்து வரிசைகளில் சொற்கள் தொடங்குவதில்லை. அதனால் அவை கழிய, கசதப ஆகிய நான்கு வல்லின எழுத்துகளில் தொடங்குபவை ஒரு சொல்லை அடுத்து வந்தால்... வல்லின மெய்யெழுத்து மிகுமா, மிகாதா என்பதை முடிவு செய்யும் அறிவைப் பெறவிருக்கிறோம்.
*
எழுத்துகளால் ஆகியது, பொருள் தருவது - இதைச் சொல் என்கிறோம். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று சொற்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று சொற்களின் வகைமைகள் விரிகின்றன. நிற்க.
*
ஒரு சொல்லும் இன்னொரு சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் (சொற்களின் தொடர்வரிசை) ஆகும். தமிழ் என்பது சொல். தமிழ்மொழி என்பது சொற்றொடர்.
*
சொற்றொடர்களின் வகைமைகள் இவை. அந்தந்த வகைமைகளுக்கு வலிமிகுமா என்பதை எடுத்துக்காட்டின் வழியே புரிந்துகொள்ளலாம். அச்சொற்றொடர்களுக்கான எடுத்துக்காட்டாக தமிழ் என்ற சொல்லையே பயன்படுத்தி இருக்கிறேன். கீழே காண்க !
*
1. எழுவாய்த் தொடர் - எழுவாய் பயனிலையாய் இருப்பது.
தமிழ் சிறந்தது - வலிமிகாது.
*
2. விளித்தொடர் - முதற்சொல் விளிப்பது.
தமிழே பாட்டில் நடமாடு - வலிமிகாது
*
3. வினைமுற்றுத் தொடர் - வினைமுற்றின்பின் வருவது.
வாழ்கிறது தமிழ் - வலிமிகாது
*
4. பெயரெச்சத் தொடர் - பெயரெச்செத்தின்பின் வருவது.
எழுதிய தமிழ் - வலிமிகாது
*
5. வினையெச்சத் தொடர் - வினையெச்சத்தின்பின் வினை வருவது.
வரச் சொன்னான் - வலிமிகும்.
எழுந்து சென்றான் - வலிமிகாது.
இங்கே ‘தமிழ்’ எடுத்துக்காட்டாகாது.
*
6. இடைச்சொற்றொடர் - பெயர் வினைக்கு முன்பின் இடைச்சொல் வருவது.
தமிழ்கொல், மற்று தமிழ் - வலிமிகாது.
*
7. உரிச்சொற்றொடர் - உரிச்சொல்லடுத்து வருவது.
கடிதமிழ், நனிதமிழ் - வலிமிகாது.
*
8. அடுக்குத் தொடர் - ஒரே சொல் அடுத்தடுத்து வருவது.
தமிழ் தமிழ் - வலிமிகாது.
*
மேலுள்ள தொடர்களில் வேற்றுமைத் தொடர் விடுபட்டுள்ளது. அதை இனி பார்க்கப் போகிறோம்.
*
இத்தொடர்வகைகளை நாம் அன்றாடம் பேசுகிறோம் எழுதுகிறோம். இவற்றில் வினையெச்சத் தொடர் தவிர்த்த எவற்றுக்கும் வலிமிகவில்லை என்பதை நன்றாக அறிந்துகொள்ளுங்கள்.
*
அடுத்து, தொகை வகைமைகளைப் பார்ப்போம். வேற்றுமைத் தொகைகளை இறுதியாகப் பார்க்கப் போகிறோம் என்பதால் பிற தொகை வகைமைகளை முதற்கண் காண்போம்.
*
இரண்டு சொற்கள் சேர்ந்து வந்தால், தொடர்வகைகளைப்போல அப்படியே பொருள்கொள்ளாமல், அதில் மறைந்திருக்கும் தொகையுருபைச் சேர்த்துப் பொருள்கொள்வதே தொகை ஆகும். தொகுத்து, அதன்பின் பொருள்கொள்வது.
*
1. வினைத்தொகை - வினைவேரை அடுத்து பெயர் வருவது.
பொங்குதமிழ், பேசுதமிழ் - வலிமிகாது.
*
2. உவமைத்தொகை - உவமையாய் ‘போன்ற’ உவம உருபு மறைந்து வருவது.
மதுத்தமிழ் - வலிமிகும்.
*
3. பண்புத் தொகை -பண்பை விளக்கி ‘ஆகிய’ பண்புருபு மறைந்து வருவது.
செந்தமிழ், பசுந்தமிழ் - வலி மிகும்.
*
4. உம்மைத் தொகை - உம் சேர்த்துத் தொகுப்பது.
தமிழ் தெலுங்கு, தமிழ் தமிழர் - வலிமிகாது.
*
5. அன்மொழித்தொகை - எல்லாத் தொகை வகையும் கலந்தது.
எழுகதிராய்ச் செந்தமிழொளி பரவட்டும் - இடத்திற்கேற்ப வலிமிகும்.
*
ஆக, தொகை வகைமைகளில் வினைத்தொகைக்கு வலிமிகாது. உம்மைத்தொகைக்கு வலிமிகாது. உவமை, பண்புகளில் வலிமிகும். அன்மொழிக்கு இடத்திற்கேற்ப முடிவு செய்வோம்.
*
இனி மீதமுள்ள வேற்றுமைத் தொடர், வேற்றுமைத் தொகை, வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை ஆகிய மூன்றையும் ஒன்றாய்ப் பார்ப்போம்.
*
வேற்றுமை உருபு மறைந்து வருவது வேற்றுமைத் தொகை. வேற்றுமை உருபு தோன்றுவது வேற்றுமைத் தொடர்.
இரண்டு சொல்லுக்கும் இடையில் வேற்றுமை உருபோடு சேர்த்து, அவற்றுக்கிடையேயான பயனையும் சேர்த்துக் கருதிப் பொருள்கொள்வது ‘வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.’
*
எட்டு வேற்றுமைகள் உள்ளன. அவற்றின் உருபுகள் என்னென்ன ?
--------------------------
முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல், ஆன், ஒடு, ஓடு.
நான்காம் வேற்றுமை உருபு – கு
ஐந்தாம் வேற்றுமை உருபு – இன், இல்
ஆறாம் வேற்றுமை உருபு – அது, ஆது
ஏழாம் வேற்றுமை உருபு – கண்
எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
-------------------------
இரண்டாம் வேற்றுமைத் தொகை (ஐ) :
தமிழ் படித்தான் - வலிமிகாது.
இரண்டாம் வேற்றுமைத் தொடர் :
தமிழைப் படித்தான் - வலிமிகும்.
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை : தமிழ்க்கேணி - தமிழைச் சுரக்கும் கேணி - வலிமிகும்.
---------------------------
மூன்றாம் வேற்றுமைத் தொகை (ஆல்) :
தமிழ் தடுமாற்றம் - வலிமிகாது.
மூன்றாம் வேற்றுமைத் தொடர் :
தமிழால் தடுமாற்றம் - வலிமிகாது.
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை :
தமிழ்க் காவியம் - தமிழால் யாத்த காவியம் - வலிமிகும்.
----------------------------
நான்காம் வேற்றுமைத் தொகை (கு) :
தமிழ்க்கேடு - வலிமிகும்
நான்காம் வேற்றுமைத் தொடர்
தமிழுக்குக் கேடு - வலிமிகும்
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை :
தமிழ்த்தொண்டு - தமிழுக்குச் செய்யும் தொண்டு - வலிமிகும்.
------------------------------
ஐந்தாம் வேற்றுமைத் தொகை (இன்,இல்) :
தமிழ் கூறு - வலிமிகாது.
ஐந்தாம் வேற்றுமைத் தொடர்
தமிழில் கூறு - வலிமிகாது
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தமிழ்ப்பாட்டு - தமிழில் எழுதிய பாட்டு - வலிமிகும்.
-------------------------------
ஆறாம் வேற்றுமைத் தொகை (அது) :
தமிழ்த்திறன் - வலிமிகும்.
ஆறாம் வேற்றுமைத் தொடர்
தமிழினது திறன் - வலிமிகாது.
ஆறாம் வேற்றுமை உருபுக்கு உடன் தொக்க தொகை அரிது.
----------------------------------
ஏழாம் வேற்றுமைத் தொகை (கண்) :
தமிழ் தேடித்திரிவோர் - வலிமிகாது.
ஏழாம் வேற்றுமைத் தொடர்
தமிழின்கண் தேடித்திரிவோர் - வலிமிகாது.
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தமிழ்ப்பற்று - தமிழின்கண் தோன்றிய பற்று - வலிமிகும்.
---------------------------
விதிகளை அறிந்துகொண்டுவிட்டோம். இப்போது உங்கள் ஐயம் என்ன ? தமிழ் கலாச்சாரமா ? தமிழ்க் கலாச்சாரமா ?
‘தமிழ் கலாச்சாரம்’ என்னும் இத்தொடர் என்ன வகையாய்க் கருதத்தக்கது ?
எழுவாய்த் தொடரா ? இல்லை
விளித்தொடரா ? இல்லை
வினைமுற்று, பெயரெச்ச, வினயெச்ச, இடை, உரி, அடுக்குத் தொடர்களில் ஏதேனுமா ? இல்லை.
அடுத்து, ஏதேனும் தொடர் வகையா என்று பார்ப்போம்.
வினைத்தொகையா ? இல்லை
உவமை/ பண்பு/அன்மொழித் தொகையா ? இல்லை
உம்மைத் தொகையா ? ஆம். தமிழும் கலாச்சாரமும் என்று விரித்துப் பொருள்கொள்ளும்படி ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்றால் உம்மைத் தொகைதான்.
தமிழ் கலாச்சாரம் நன்னடத்தை நன்றியுணர்ச்சி கெட்டுப்போய்விட்ட காலமிது.
இவ்வாறு எழுதப்பட வேண்டும் அது. தமிழும் கலாச்சாரமும் நன்னடத்தையும் நன்றியுணர்ச்சியும் கெட்டுப்போய்விட்ட காலமிது’ என்று நாம் உம்மைத் தொகையாய் விரித்துப் பொருள்கொள்வோம். அங்கே வலி மிகாது. உம்மைத் தொகையாய் எழுதப்படவேண்டிய வாக்கியங்களைத்தாம் நாம் இப்போது காற்புள்ளியிட்டு எழுதுகிறோம்.
உம்மைத் தொகையாய்க் கருதி எழுதப்படவில்லை எனில்... அடுத்து வேற்றுமைத் தொடரா, தொகையா, உடன் தொக்க தொகையா என்று பார்க்க வேண்டும்.
தமிழ் கலாச்சாரம்.
தமிழைக் கலாச்சாரம் ? இல்லை. ஐ வராது. இரண்டாம் வேற்றுமை தொடர், தொகை, உடன் தொக்க தொகை இல்லை.
இப்படி ஒவ்வொரு வேற்றுமை உருபாகப் பொருத்திப் பார்த்துக்கொண்டே வரவேண்டும். எது பொருள் சிறக்கும்படி, கூற நினைத்த பொருளோடு பொருந்துகிறது என்று பார்க்க வேண்டும்.
தமிழின் கலாச்சாரம் என்று ஐந்தாம் வேற்றுமைத் தொகையாய்ப் பயன்படுத்தினால் வலிமிகாது. தமிழ் கலாச்சாரமும் இலக்கியமும் பன்னெடுங்கால வரலாற்றையுடையது.
தமிழில் ஒழுகும் கலாச்சாரம்’ என்ற பொருளில் கருதினால் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகிவிடும். இங்கே வலிமிகும். பெயரும் பெயரும் சேர்ந்து உருவாகும் தொடர்களை நாம் ‘உடன் தொக்க தொகையாக’ எப்படியும் பொருள்கொள்ள இடமிருக்கிறது. அதனால்தான் இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையே வலி மிகுவித்து எழுதுவது நல்லது.
அடுத்துள்ளது, தமிழைக் கற்கும்/கற்பிக்கும் பாடசாலை என்பதால் தமிழ்ப் பாடசாலைதான்.
பாடசாலை ஏன் வலிமிகவில்லை ?
பாடத்தினது சாலை (அது - ஆறாம் வேற்றுமைத் தொகை) என்பதால் பாடசாலைக்கு வலிமிகவில்லை.
மரண தண்டனை ஏன் வலிமிகவில்லை ?
மரணத்தால் தண்டனை (ஆல் - மூன்றாம் வேற்றுமைத் தொகை) என்பதால் வலிமிகவில்லை.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

ரண்டு சொற்களுக்கிடையே வல்லின ஒற்றெழுத்து இடுவதில் இன்னொரு வகையும் இருக்கிறது. இரண்டாம் சொல் வல்லினத்தில் தொடங்கினாலும் கட்டாயம் வலி மிகுவிக்கக் கூடாது. சில இடங்களில் வலிமிகுவிப்பது எப்படிக் கட்டாயமோ, அவ்வாறே சில இடங்களில் ஒற்று தோன்றாமல் - வலி மிகாமல் இயல்பாக இருப்பதும் கட்டாயம். ஒற்று வர வேண்டிய இடங்களை அறித்திருப்பதுபோலவே, ஒற்று வரக் கூடாத இடங்களையும் அறிந்திருக்க வேண்டும். ஒற்று வரக் கூடாத இடங்கள் எவை என்று பார்ப்போம்.

(இதுவும் வலி மிகல் பிழையில் - ஒற்றுப் பிழையில் - சந்திப் பிழையில் இன்னொரு வகை).

1. அது, இது, எது என்ற சுட்டுச் சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் கட்டாயம் வலி மிகாது. அது கடல்தான், இது பால், எது தெரிந்தது?

2. ஒருமைக்கு அது. பன்மைக்கு அவை. அங்கும் வலி மிகாது. அவை பறவைகள், இவை கருவிகள், எவை கத்தின?

3. அதே சுட்டு அன்று, இன்று, என்று எனக் காலப்பொருளில் வரும். அங்கும் வலி மிகாது. அன்று கிடைத்தது, இன்று பேசினான், என்று தருவாய்?

4. அத்தனை, இத்தனை, எத்தனை என்று எண்ணளவுப் பொருளில் வந்தாலும் வலி மிகாது. அத்தனை பாடல்கள், இத்தனை புத்தகங்கள், எத்தனை தருவாய்?

5. நேரடியாகவே அளவுச் சுட்டாக வரும் சொற்களை அடுத்தும் ஒற்று வராது. அவ்வளவு கெடுதல், இவ்வளவு சேர்ந்தது, எவ்வளவு கிடைக்கும்?


6. ஆறு என்பது வழி என்ற பொருள் தருவது. அதனைச் சேர்த்தும் சுட்டுவோம். அவ்வாறு கூறினான், இவ்வாறு செய்தது, எவ்வாறு போகிறாய்? இவற்றை அடுத்தும் வல்லின ஒற்று மிகாது.

7. ஆறு என்பதற்கு மாற்றாகப் 'படி' என்ற சொல்லும் வரும். அது சுட்டில் வந்தால் வலிமிகும். அப்படிச் செய்தான், இப்படிப் பேசு, எப்படிச் செய்தாய்? வினையெச்சச் சொல்லை அடுத்து வந்தால் வலி மிகாது. சொன்னபடி கேள், உள்ளபடி கூறினான், வாய்க்கு வந்தபடி பேசாதே, கூறியபடி கொடுத்தான்.

8. பல, சில என்கின்ற சொற்களை அடுத்து வலி மிகாது. பல பாடல்கள், சில கேள்விகள், பற்பல செய்திகள், சிற்சில தவறுகள்.

9. எட்டு, பத்து ஆகிய இரண்டு எண்ணுப் பெயர்களைத் தவிர வேறு எந்தப் பெயர்க்கும் வலிமிகவே கூடாது. ஒன்று கேட்டான், இரண்டு கிடைத்தது, மூன்று செலவுகள், நான்கு தூண்கள், ஐந்து காப்பியங்கள், ஆறு புத்தகங்கள், ஏழு படிகள், ஒன்பது கோள்கள். (பேரெண்களில் கோடிக்கு வலிமிகும்.)


10. எண்ணுப்பெயர்கள் அடுத்த சொல்லோடு சேர்வதற்காக மாறி நிற்கையிலும் வல்லொற்று தோன்றாது. ஒரு கடை, இரு கைகள், அறுசுவை, எழுபிறப்பு, ஏழ்கடல்.

11. நீ என்ற சொல்லை அடுத்து வலி மிகாது. நீ படித்தவன், நீ கொடு.

12. கட்டளைப்பொருள் தரும் வினைச் சொல்லை அடுத்து ஒற்று தோன்றாது. தா தமிழை, போ சாலையில், ஏறு கிளைமேல், நகர்த்து சுமையை, விடு கவலையை.

13. பெயரும் வினையுமாக அமைந்த சொற்றொடர்களில் வலி மிகாது. பூனை கத்தியது, ஆடு தாண்டியது, கிளி பேசியது.

14. வினையும் பெயருமாக அமையும் சொற்றொடர்களிலும் ஒற்று மிகாது. கத்தியது பூனை, நின்றது தேர், பறந்தன பறவைகள்.

15. எச்சமாக நிற்கும் வினையை அடுத்து ஒரு பெயர்ச்சொல் வந்தால் பெரும்பாலும் ஒற்றிடல் இல்லை. கொடுத்த பாரி, செய்கின்ற செயல், பாடிய பாட்டு. (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் விதிவிலக்கு – ஓடாக்குதிரை).


16. இரண்டு பெயர்ச்சொற்கள் உம்மைத் தொகையாக வருகையில் வலிமிகுவிக்கக் கூடாது. அப்பெயர்ச்சொற்கள் ஒரே இனமாக இருக்கும். காடுகரை, பட்டிதொட்டி, சேரசோழபாண்டியர்.

17. வினைத்தொகையை அடுத்து வலிமிகுதல் இல்லை. ஊறுகாய், குடிதண்ணீர், வெடிகுண்டு.

18. ஒடு, ஓடு, அது, இருந்து, நின்று போன்றவை வேற்றுமை உருபுகளாகவும் பயிலும். அவற்றை அடுத்தும் வலிமிகுவிக்கக் கூடாது. அன்பொடு பேசினான், ஆற்றோடு போனது, எனது கை, வானிலிருந்து கொட்டியது, ஊரினின்று கிளம்பினான்.

19. ஆ, ஓ, ஏ போன்ற நெடில்கள் வினா, வியப்பு, விளிப்பு என்று பல பொருள்களில் தோன்றும். அங்கும் வலிமிகுதல் இல்லை. அவனா சொன்னான்? கள்ளோ காவியமோ? அன்பே பெரிது. கண்ணே தூங்கு.

20. இரண்டு வினைச்சொற்கள் அடுத்தடுத்து வந்து எச்சமாக இருக்கையில் ந்து, ண்டு, ன்று என்னும் மென் தொடர்க்குற்றியலுகரமாகவும் முடிந்தால் வலி மிகாது. எழுந்து சென்றான், கண்டுகொண்டான், மென்று தின்றான். இவ்வகையில் ய்து என்று முடியும் வினைச்சொற்களையும் சேர்க்கலாம். செய்து கொடுத்தான், பெய்து கெடுத்தது.

இந்நிலைமைகளை மனத்தில் இருத்துங்கள். உங்கள் எழுத்தில் வலிமிகுதல் குற்றங்கள் முற்றிலும் நீங்கிவிடும்.

- மகுடேசுவரன்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வல்லெழுத்து மிகுமிடங்கள்
  • அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் 'எ' என்னும் வினாவெழுத்தின் பின்னும் வரும் வல்லினம் மிகும்.
அக்கனி, இப்பையன்,......எச்சிறுவன்?
  • அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு, வினாத் திரிபுகளின் பின் வரும் வல்லினம் மிகும்.
அந்தக் கனி,இந்தப் பையன்,... ... ...எந்தக் குதிரை?.
  • அப்படி,இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
அப்படிக் கற்றான்,இப்படிச் சொன்னான்,எப்படித் தருவான்.
  • அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
அங்குக் கண்டான்,இங்குப் பெற்றான்.எங்குச் சென்றனை?
  • இனி, தனி, திரு என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
இனிச் செய்யலாம்,தனித்தமிழ்,திருச்செந்தூர்திருக்குறள்

வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்கள்

  • இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
மயிலைக் கண்டேன்‌.மலையைச் சார்ந்தேன்.உணவைத் தந்தேன்.குறளைப் படித்தேன்.
  • நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
தந்தைக்குக் கொடுத்தான்தாய்க்குச் சொன்னான்தங்கைக்குத் தந்தான்
  • நான்காம் வேற்றுமைத் தொகையில் முன்நின்ற சொல் (நிலைமொழி) அஃறிணைப் பெயராக இருந்தால் பின்வரும் வல்லினம் மிகும்.
குறிஞ்சித் தலைவன்படைத்தளபதி.கூலிப்படை.
  • ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணைப்பெயராக இருப்பின் பின்வரும் வல்லினம் மிகும்.
நாய்க்குட்டிபுலித்தலைநரிப்பல்
  • ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
மனைப் பிறந்தாா்சென்னைப் பல்கலைக்கழகம்.

அல்வழிப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்கள்
  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
ஓடாக்குதிரை,கூடாச்சந்தை,ஆடாத்தசை,பாடாப் பாட்டு.
  • பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
இனிப்புப் பண்டம்,வட்டப்பலகை,வெள்ளைத்தாள்,சிவப்புச்சட்டை.
  • இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
ஆவணித் திங்கள்,சாரைப்பாம்பு,உழவுத்தொழில்,செவ்வாய்க்கிழமை.
  • அரை,பாதி, எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்ச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
அரைக்காசு,பாதிப்பணம்,எட்டுத்தொகை,பத்துப்பாட்டு.
  • உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
மலர்க்கை,தாமரைப்பாதம்,சங்குக்கழுத்து,புலிப்பாய்ச்சல்.
  • ஆய், போய் என்னும் வினையெச்சச் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்.
போய்க் கண்டேன்,நன்றாய்ச் சொன்னாய்.
  • இகர, அகர ஈற்று வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.
தேடிப் பார்த்தேன்,தேடப் போனேன்.
  • ஆக, என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகும்.
தருவதாகச் சொன்னான்,பார்ப்பதாகக் கூறினாள்,தாயெனக் கூறினார்,படி எனக் கூறினார்.
 
Top Bottom