• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 5


அடுத்த மூன்று மாதங்கள் எப்படி என்றில்லாமல் ஓடிப்போயிருந்தன. அன்று நிலனின் கடை திறப்பு விழாவிற்குச் சென்று வந்தவளிடத்தில் அங்கே என்ன பேசினார்கள் என்று கேட்கும் தைரியம் அவள் வீட்டினருக்கு இல்லை.

ஆனால், பனங்காயை மொய்க்கும் ஈயைப் போன்று, அவளாக ஏதாவது சொல்வாளா என்று அவள் முகத்தை முகத்தைப் பார்த்து ஏமாந்துபோனதுதான் மிச்சம்.

அவர்கள் பக்கமிருந்தும் எந்தச் சத்தமுமில்லை. இந்தப் பெண் எதையாவது ஏடாகூடமாகப் பேசிவிட்டாளா என்று கலங்கினார் குணாளன்.

அங்கே நிலனையும் சக்திவேலர் விட்டுவைக்கவில்லை. அதுவும் அவள் அன்று அவரிடம் அப்படிப் பேசிவிட்டுப் போனதிலிருந்து இரண்டு மடங்காகக் குதித்தார்.

“துளியும் மரியாத தெரியாதவள். என்ர அனுபவமே அவளின்ர வயச விடக் கூட. ஆனா அவள், என்ர பேரனைக் கட்டுற ஐடியா இல்லையாம் எண்டு என்னட்டயே சொல்லிப்போட்டுப் போறாள். எவ்வளவு திமிர்? இந்த அவமானமும் அசிங்கமும் தேவையா பேரா உனக்கு? நீ ஆரு, உன்ர உயரம் என்ன? நீ போய்…” என்றவரை, “தாத்தா!” என்று தடுத்தான் நிலன்.

“என்னடா தாத்தா? அவளைச் சொன்னா மட்டும் கோபம் வருது உனக்கு. அவள் என்னைச் சொல்லேக்க பேசாமத்தானே நிண்டனி?” என்று காய்ந்தார் அவர்.

அவருக்குத் தையல்நாயகியையே பிடிக்காது. அவரை எழும்பவிடாது வேரோடு அழிக்க இவர் எடுத்த முயற்சிகள் பல. அப்படியிருந்தும் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழையாக வளர்ந்து நின்றிருந்தார் அவர். இன்றுவரை அதுவே அவருக்குப் பெரும் அடி. அது போதாது என்று அவர் பேத்தியும் தையல்நாயகியை இரண்டு மடங்காக வளர்த்துவைத்திருக்கிறாள்.

இதெல்லாம் போதாது என்று அவளைத்தான் மணக்கப் போகிறேன் என்று நிலன் திடீரென்று வந்து நிற்கவும் நெஞ்சுவலி வராதது ஒன்றுதான் குறை. அந்தளவில் அதிர்ந்துபோனார். ஆத்திரத்தில் அவர் வீட்டையே இரண்டாக்கியபோதும் அவன் அசரவில்லை.

“முப்பத்திரெண்டு வயசு தாத்தா எனக்கு. இப்ப வரைக்கும் உங்கள மீறி ஒரு காரியம் நான் செய்ததே இல்ல. ஆனா கலியாணம் உங்களுக்காக மட்டும் செய்யேலாது தாத்தா. எனக்குப் பிடிச்சிருக்கோணும். எனக்கு அவளத்தான் பிடிச்சிருக்கு.” என்று அவனும் தன் பிடியில் நின்றுவிட்டான். அவரின் பேரனாயிற்றே!

கெஞ்சல், கொஞ்சல், எடுத்துரைப்பு என்று அவரின் எந்தவிதமான உத்திகளும் பலிக்கவில்லை. இத்தனை காலமாக இல்லாமல் திடீரென்று எப்படி இது என்று கேட்டதற்கும் அவளைப் பிடித்திருக்கிறது என்று மட்டும்தான் சொன்னான்.

அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரே தொழில் துறையில் இருப்பவர்கள். தொழில்துறைச் சந்திப்பு, அரசாங்கமோ தனியாரோ விடும் ஏலங்கள் என்று பெரும்பாலானவற்றுக்கு அவனோடு அவரும் செல்வதுதான் வழக்கம்.

அதுவும் அவள் வருகிறாள் என்று தெரிகிற எந்த இடத்திற்கும் அவனைத் தனியே அவர் அனுப்பியதேயில்லை.

இத்தனை காலமும் அவளோடு பேச இவனும், இவனோடு பேச அவளும் முயற்சி செய்ததேயில்லை. அவரவர் அவரவர் பாட்டுக்குத்தான் இருந்திருக்கிறார்கள். அவளும் மூத்த மனிதர், இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர் என்று சம்பிரதாயத்திற்கேனும் சக்திவேலரைத் தேடி வந்து பேசமாட்டாள்.

அப்படியிருக்க இந்தப் பிடித்தம் எப்படி உண்டாயிற்று என்கிற கேள்வி அவரைப் போட்டு அரித்துக்கொண்டே இருந்தது. அவளுக்கும் அவன் மீது அப்படி ஒரு எண்ணமோ என்று யோசித்துக்கொண்டிருக்க, அப்படி எதுவுமே இல்லை என்று கடை திறப்பு விழாவிற்கு வந்து காட்டிவிட்டுப் போயிருக்கிறாள் அவள்.

அதுவும் சேர்ந்து அவரை எரிச்சல் படுத்திற்று. தன் பேரன் அவளைத் தேடி தேடித் போய்ப் பேசியதும், அவள் தவிர்த்ததும் என்று அவருக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை.

இந்த விடயத்தில் ஜானகியும் தந்தையின் பக்கமே. தெரியாமல் அடித்த காற்றில் கூரையில் போய் அமர்ந்துகொள்ளும் இலையைப் போன்று, அதிர்ஷ்டவசத்தில் பணக்காரியாகி நிற்கும் அவளும், கோபுரத்தில் இருக்கும் அவர்களும் ஒன்றா என்பது போன்ற ஒரு நினைப்பு அவருக்கு.

சந்திரமதிக்கு அவளை மருமகளாக்குவதில் மிகுந்த விருப்பமே. அவர்களின் தொழிலை வீட்டின் மொத்த ஆண்களுமாகச் சேர்ந்து பார்க்க, தனியொருத்தியாய் அவர்களை எல்லாம் எதிர்த்து நிற்கும் அவள் மீது பிரமிப்பும் பெருமதிப்பும் அவருக்கு உண்டு.

பிரபாகரனுக்கு மகன் பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது மட்டுமே பிரதானமாயிருந்தது. தந்தைக்கு விருப்பமில்லை என்று தெரிந்தும் அவர்கள் வீட்டுக்குப் பெண் கேட்டுவிட்டது அவர்தான். ஆனால், அவரையுமே அவனுக்கு அவளைப் பிடித்திருப்பது உண்மைதானா என்கிற கேள்விதான் அரித்துக்கொண்டிருந்தது.

அவளோடு பேசிப் பழகி அல்லது அவள் இருக்கிற பக்கம் ஆர்வமாகப் பார்வையைத் திருப்பி என்று அவன் எதையும் செய்து அவர் பார்த்ததில்லை. இன்னுமே சொல்லப்போனால் அவளைப் போலவே அவனும் கவனமெடுத்து அவளைத் தவிர்த்ததைத்தான் கவனித்திருக்கிறார்.

இதைவிட, அவனுடைய இருபத்தி எட்டாவது வயதில் திருமணத்திற்கு பார்க்கலாமா என்று கேட்டபோது சம்மதித்திருந்தான். அப்போது இரண்டு மூன்று வரன்கள் வந்தபோது அவர்களின் புகைப்படங்களை வாங்கிப் பார்த்தும் இருக்கிறான்.

ஜானகியின் கணவர் பாலகுமரன், சக்திவேலரின் தங்கை மகன். இயல்பிலேயே அமைதியான மனிதர். இரண்டு வருடங்களுக்கு முதல், இதயச் சத்திர சிகிச்சை செய்ததிலிருந்து இன்னுமே உடைந்து அமைதியாகிப்போனார்.

சக்திவேலரின் புறுபுறுப்பு ஓய்வதாக இல்லை என்றதும் அவளோடு இன்னொரு முறை பேச முயன்றான் நிலன். அதற்கு அவள் அனுமதிக்க வேண்டுமே! கைப்பேசியில் அவனை முற்றிலுமாகத் தடை விதித்திருந்தாள்.

அவள் செய்கையில் அவனுக்கு மெல்லிய கோபம் கூட உண்டாயிற்று. அவளின் அலுவலகத்திற்கே சென்று பேசலாமா என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க, இந்தப் பக்கம் சக்திவேல் ஐயா மும்முரமாக அவனுக்குப் பெண் தேடும் வேட்டையில் இறங்கியிருந்தார்.

இப்படி இருக்கையில்தான் அன்று மதியம் அலுவலகத்தில் இருந்த இளவஞ்சிக்கு அழைத்தாள் சுவாதி.

“சொல்லு சுவாதி!” தன் முன்னே இருந்த கணனியில் தயாராகிக்கொண்டிருந்த டிசைன் ஒன்றின் மீது கவனமிருக்கச் சொன்னாள் இளவஞ்சி.

“அக்…கா… அக்கா நான் கலியாணம் கட்டப்போறன்.” அந்தப் பக்கமிருந்த சுவாதிக்கு தொண்டை உதடுகள் எல்லாமே பயத்தில் உலர்ந்துவிட, சத்தம் வருவேனா என்றிருந்தது.

“என்ன?” அப்படி ஒரு விடயத்தை இம்மியளவும் எதிர்பாராதவள், தான் கேட்டதைத்தான் அவள் சொன்னாளா என்று குழம்பி அதிர்ந்தாள்.

“இஞ்ச ரெஜிஸ்ட்டர் ஒபீஸுக்கு வந்திருக்கிறன் அக்கா, ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய.”

“என்ன சொல்லுறாய்? உனக்கு என்ன விசரா?” முதற்கட்ட அதிர்வு நீங்க, அந்த இடத்தை ஆத்திரம் பற்றிக்கொள்ளச் சீறினாள் தமக்கை.

“அக்கா சொறி அக்கா!” சுவாதி அழுதாள்.

சும்மா விளையாடுகிறாளோ என்று நினைக்க முடியாதபடிக்குச் சுவாதியின் கலங்கிய குரலும் திணறிய பேச்சும் இவளைப் பதற வைத்தன. இப்படி ஒரு சூழ்நிலையை அதுவரையில் கையாண்டிராததில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது இவளும் கலங்கி நின்றாள்.

“செய்றதையும் செய்துபோட்டு சொறி சொல்லுவியா? அறிவிருக்காடி முதல் உனக்கு? ஆர் அவன்? வீட்டில சொல்லாமச் செய்ற அளவுக்கு என்ன அவசரம்? முதல் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்தளவு தூரத்துக்குப் போவாய்?” இதற்குள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அலுவலக அறையை விட்டு விரைந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்திருந்தாள்.

இவளைக் கண்டுவிட்டு ஓடி வந்தான் விசாகன்.

‘காரை எடு!’ என்று அவனிடம் சைகையில் சொல்லிவிட்டு, “சொல்லு! ஆர் அவன்? ஒருத்தருக்கும் தெரியாம கலியாணம் கட்டுற அளவுக்கு அப்பிடி என்ன அவசரம் உங்களுக்கு?” என்று சீறினாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“அக்கா… அது மிதுன்…” அவளின் இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்லும் தைரியம் அவளுக்கு இல்லை.

“எந்த மிது…” எனும்போதே பிடிபட்டுவிட இளவஞ்சியின் நடை நின்றுபோயிற்று. இது அடுத்த அதிர்ச்சி. “நிலன்ர தம்பி மிதுனா?” என்றாள் அப்படி இருந்துவிடக் கூடாது என்கிற படபடப்புடன்.

“ஓ…ம் அக்கா…”

“உன்ன!” அந்த நிமிடமே அவளைக் கன்னம் கன்னமாக அறையும் ஆத்திரம் எழுந்தது. போயும் போயும் யாரைக் காதலித்திருக்கிறாள்? அவனுக்கு ஓராயிரம் பெண் தோழிகள். யாப்பாணத்தில் புதிது புதிதாக உதயமாகியிருக்கும் அத்தனை இரவு நேரத்து கிளப்புகளுக்கும் தவறாது போகிறவன். அப்படியானவனைக் காதலித்தது போதாது என்று கலியாணம் வரை போயிருக்கிறாள்.

ஆனால், அவள் புத்தி வேகமாக வேலை செய்தது. ஆத்திரப்படுவதை விட நடக்கவிருக்கும் அபத்தத்திலிருந்து தங்கையைக் காப்பதே முதன்மையானது என்று புரிய, வேகமாகப் பேசினாள்.

“சுவாதி, நீ பிழை விட்ட வரைக்கும் போதும். இனியாவது அக்கா சொல்லுறதைக் கேள். அவசரப்படாத. ஆசைப்படுறது வேற. அதுக்காக இப்பிடி வீட்டுக்குத் தெரியாம கலியாணம் செய்ய நினைக்கிறது பெரிய பிழை. அவனுக்குத்தான் அறிவில்ல எண்டா உனக்குமா என்ன செய்யோணும், செய்யக் கூடாது எண்டு தெரியாது?” அதட்டல் பாதி அனுசரணை மீதியாக அவளுக்குப் புத்தி சொல்லியபடி விசாகனை வேகமாகப் பதிவாளர் அலுவலகத்துக்குப் போகச் சொன்னாள்.

“அக்கா… அது அவர்தான் ரெஜிஸ்ட்ரேஷன மட்டும் முடிச்சுப்போட்டுச் சொன்னா ஒருத்தராலயும் எங்களப் பிரிக்கேலாது எண்டு சொன்னவர்.”

‘ராஸ்கல். நன்றாகத் திட்டமிட்டுக் காரியம் சாதிக்கப் பார்த்திருக்கிறான்.’ பல்லைக் கடித்தாலும் அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

“சரி விடு, ஏதும் நடக்க முதல் எடுத்துச் சொன்னியே. அந்தளவுக்குப் புத்தி இருந்திருக்கு உனக்கு. இப்ப அக்கா அங்கதான் வந்துகொண்டு இருக்கிறன். நான் வாறதுக்கிடையில எங்கயும் சைன் போட்டுடாத. விளங்குதா உனக்கு? நான் வாறதையும் அவனிட்டச் சொல்லாத. உன்ர ஃபிரெண்ட்ஸ் வரோணும் எண்டு ஏதாவது சொல்லு. திரும்ப திரும்பச் சொல்லுறன், அவசரப்பட்டுடாத. எங்கட மொத்த வீட்டின்ர மானம் மரியாதையும் போயிடும். என்னவோ நீதான் தங்கட வீட்டுப் பெடியனக் கெடுத்துக் காரியம் சாதிச்ச மாதிரி அவன்ர வீட்டில சொல்லுவினம். இதெல்லாம் தேவையா உனக்கு? நான் லைன்லயே இருக்கிறன். எங்க அவன்?” என்று அவளை வேறு சிந்திக்கவே விடவில்லை அவள்.

பேசி பேசித் தன் கட்டுப்பாட்டிலேயே சுவாதியை வைத்திருந்தாள்.

நெஞ்சு பதைக்க, இதயம் துடிக்க, ஆத்திரத்தில் இரத்தம் கொதிக்க அங்கே அவள் சென்று சேர்ந்தபோது, மாலை, தாலி என்று முழுமையான ஒரு திருமணத்திற்கான தயார்படுத்தல்கள் நடந்துகொண்டிருந்தன.

அவற்றையெல்லாம் கண்டவள் இன்னுமே கொதித்துப்போனாள்.

இவள் கார் உள்ளே நுழையவும், அவ்வளவு நேரமாக நடுங்கிக்கொண்டு நின்ற சுவாதி, “அக்கா!” என்றுகொண்டு ஓடி வந்தாள்.

இறங்கிய வேகத்திலேயே பளார் என்று அவள் கன்னத்தில் ஒன்று போட்ட இளவஞ்சி, திறந்திருந்த கார் கதவு வழியாக அவளைத் தள்ளிக் கதவை அறைந்து சாற்றினாள்.

இந்தத் திருப்பத்தை மிதுன் எதிர்பார்க்கவில்லை. யாருடன் பேசுகிறாய் என்று கேட்டபோது தோழியோடு என்று பொய் சொன்னவள் மீது சினம் பொங்கிற்று. இந்தப் பக்கம் திருமணத்திற்கு தன்னிடம் சம்மதித்துவிட்டு அந்தப் பக்கம் தமக்கையிடம் சொல்லியிருக்கிறாள்.

அதோடு கூடவே வந்ததும் வராததுமாக இளவஞ்சியின் செய்கை வேறு ஆத்திரத்தை உண்டாக்க, “நீங்க ஆரு அவளைக் கூட்டிக்கொண்டு போக? அவள் மேஜர். எங்கட கலியாணத்தை தடுக்க உங்களுக்கு ரைட்ஸ் இல்ல.” என்று கொதித்துக்கொண்டு வந்தவனை இளவஞ்சியை நெருங்க விசாகன் விடவில்லை.

“என்ன கதைக்கிறதா இருந்தாலும் தள்ளி நிண்டு கதைக்கோணும்!” என்று தள்ளிவிட்டான்.

“விடுங்க விசாகன். அப்பிடி என்ன கிளிக்கிறான் எண்டு நானும் பாக்கிறன். இந்த ஊர் மேயிற பரதேசிக்கு என்ர தங்கச்சி கேக்குதா? நீ மேஜரோ? அவ்வளவு பெரிய மனுசன் என்னத்துக்கடா ஒளிச்சு மறச்சு அவளக் கட்ட நினைச்சனி? இருக்கடா உனக்கு!” என்றுவிட்டு அவள் காரை நோக்கி நடக்க, சரக்கென்று வந்து நின்றது நிலனின் கார்.

பதற்றத்துடன் இறங்கி ஓடி வந்தவனிடம், “அப்பிடி என்ன அண்ணனுக்கும் தம்பிக்கும் எங்கட வீட்டுக்கையே பொம்பிள கேக்குது? ரெஜிஸ்ட்ரேஷன முடிச்சுப்போட்டுச் சொன்னா ஒருத்தராலயும் ஒண்டும் செய்யேலாது எண்டு சொன்னவனாம். எவ்வளவு தைரியம் அவனுக்கு?” என்று அவனிடமும் கொதித்தாள்.

“வஞ்சி! கொஞ்சம் நிதானமா இரு. எனக்கும் ஒண்டும் விளங்கேல்ல.” என்று அதட்டினான்.

“சந்தி சிரிக்கப் பாத்தது என்ர தங்கச்சின்ர வாழ்க்கை. நான் அமைதியா இருக்கோணுமோ? என்ன வேணும் உங்க எல்லாருக்கும்? என்னத்துக்கு இப்பிடி எங்களையே சுத்தி சுத்தி வாறீங்க? ஒருத்தியத் தொழில்ல நேருக்கு நேர் நிண்டு வெல்ல முடியேல்ல எண்டதும் இந்தளவுக்குக் கேவலமா இறங்குவீங்களா? கேவலமா இல்ல? தரம் கெட்ட குடும்பம்!” என்று சீறிவிட்டு அவள் காரில் பறந்துவிட, “என்னடா இது?” என்றான் நிலன் மிதுனிடம் வெறுப்பும் வேதனையாக.

“அண்ணா…”

“என்ன வேலை பாத்து வச்சிருக்கிறாய் மிதுன்? பிடிச்சிருந்தா வீட்டில சொல்ல மாட்டியா? என்னட்டயாவது சொல்லியிருக்கலாமே.”

“அண்ணா…”

“அப்பப்பா எப்பிடியடா இதத் தாங்குவார்? அவர் செல்லம் குடுக்கிறதாலதான் நீ கெட்டுப்போறாய் எண்டு அம்மா சொன்னாலும், என்ர பேரன் அப்பிடியெல்லாம் இல்ல எண்டு நிக்கிற மனுசன். அப்பா அம்மா? அவேயக்கூட யோசிக்கேல்லையா நீ?”

“அண்ணா…” அவனும் நெஞ்சு முழுக்கக் கலக்கத்தோடுதான் அத்தனை ஆயத்தங்களையும் செய்தான். இப்போது தமையனும் இப்படிக்கு கேட்க குன்றிப்போனான்.

“உன்னை நம்பின எங்க எல்லாரையும் கேவலப்படுத்திப்போட்டாய் மிதுன்.” என்றதும் மிதுனின் விழிகள் கலங்கிப் போயிற்று. அவன் நண்பர்களுக்குக் கூட என்ன செய்வது என்று தெரியாத நிலை.

ஆனால், இனியும் எதையும் சொல்லாமல் இருக்க முடியாது என்று தெரிய, தமையனை நெருங்கி, “அண்ணா, அவள் பிரக்னட்டா இருக்கிறாள். அதான்…” என்று எச்சில் விழுங்கினான்.

உச்சபட்ச அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான் நிலன். சீ என்று போயிற்று அவனுக்கு. இத்தனை மோசமாக நடந்தவன் தன் தம்பியா என்றிருந்தது.

அவன் பார்வையில் என்ன உணர்ந்தானோ, மிதுனின் முகம் கன்றிச் சிவக்க, தலை தானாகக் குனிந்து போயிற்று.

சொல்லாமல் கொள்ளாமல் திருமணத்தைப் பதிவு செய்கிறவரை வந்ததற்கே கொதிநிலையின் உச்சத்திற்குச் சென்றுவிட்ட இளவஞ்சி இதையும் அறிந்தால் என்ன செய்வாள் என்று நிலனால் கணிக்கவே முடியவில்லை.

முதலில் இதையெல்லாம் இரு வீட்டிலும் சொல்லி, சம்மதம் வாங்கி, சுவாதி தாய்மையுற்றிருக்கும் விடயம் வெளியே கசிய முதல் இந்தத் திருமணத்தை ஒப்பேற்றுவதை நினைக்கவே அவனுக்குத் தலையைச் சுற்றியது.

“அண்ணா சொறி அண்ணா.”

“சத்தியமா உன்னைக் கன்னம் கன்னமா அறையோணும் மாதிரி இருக்கு. என்ர தம்பியா எண்டு இருக்கு. நீயும் கேவலப்பட்டு அந்தப் பிள்ளையையும் ரெண்டு வீட்டுக்கும் முன்னால கூனிக்குறுகி நிக்க வச்சிருக்கிறாய். என்ர கண்ணுக்கு முன்னால நிக்காம அங்கால போ!” என்று அவனைத் துரத்தி விட்டுவிட்டுத் தனியாக வந்து தந்தைக்கு அழைத்தான்.

அவர்தான் இதை நிதானமாகக் கையாளாகக் கூடியவர். அவரோடு பேசி, அவரின் அதிர்ச்சியையும் கோபத்தையும் சமாளித்து, அவரை அன்னையோடு புறப்பட்டு வரச் சொல்லிவிட்டு, மிதுனோடு இளவஞ்சி வீட்டிற்குப் புறப்பட்டான்.

சும்மாவே அவனை மணக்கவே மாட்டேன் என்று நிற்கிறாள். இனி?

ஒரு நெடிய மூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறிற்று.




தொடரும்…


மை அன்பானவர்களே,


குட்டியா ஒரு போட்டி அறிவிப்பு. பெருசா எதுவும் இல்லை. உங்களை மகிழ்வித்து நானும் மகிழ்வதற்கான ஒரு வழி!

அழகென்ற சொல்லுக்கு அவளே நாவலை இப்ப தொடரா எழுத ஆரம்பித்து இருக்கிறேன்தானே.

அந்தக் கதையை வாசித்து, தளத்தில் லைக் பண்ணி, கொமெண்ட் பண்ணி என்னுடன் தொடர்ந்து வரும் வாசகர்களிடம் கதை முடிந்ததும் மூன்று கேள்விகள் கேட்பேன்.

அந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்கள் சொல்லும் நபர்களில் ஐந்து நபர்களைக் குலுக்கள் முறையில் தெரிவு செய்து, ஆளுக்கு 500 இந்தியன் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

அதுக்காகக் கடினமான கேள்வி எல்லாம் கேட்பேன் எண்டு நினைச்சிடாதீங்க. என்னுடைய ஒரே எண்ணம் என் வாசகர்களை மகிழ்விப்பது. முதலில் புத்தகம் குடுக்கலாம் எண்டு நினைச்சேன்.

புத்தகம் பிரிண்ட் போட்டு, ஒவ்வொருவரிடமும் அட்ரஸ் வாங்கி, அதை அனுப்பி, கிடைத்துவிட்டதா என்று காத்திருப்பது என்று அது பெரும் பயணம் எனக்கு. இதில் சிலருக்கு அட்ரஸ் தர ஒரு தயக்கம். அதில் நியாயமும் உண்டு என்பதில் என்னால் அவர்களைத் தவறாக எண்ண முடியவில்லை. சிலருக்கு நான் கொடுக்க நினைக்கும் புத்தகத்தை விட வேறு புத்தகத்தில் விருப்பம்.

இதையெல்லாம் யோசித்துவிட்டுத்தான் பணப்பரிசு கொடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன். பணம் என்கையில் குட்டியாகத் தன்னும் பிரயோசனமாக இருக்குமே என்கிற எண்ணமும்.

போனமுறை உன் அன்புக்கு நன்றி கதைக்கு பேஸ்புக் வாசகர்களைத் தெரிவு செய்ததுபோல் இந்தமுறை தளத்தில் தொடர்ந்து லைக் பண்ணி கருத்திடும் வாசகர்களுக்கு வாய்ப்பு.

ஒன்றும் ஒன்றும் எத்தனை என்று கேட்பதுபோல்தான் கேள்விகள் இருக்கும். பிறகு அதுக்கும் 11 என்று யாராவது சொன்னால் நான் அழுதுவிடுவேன்.

இதுவரை வந்த நான்கு அத்தியாயங்களில் சாம்பிளுக்கு ஒரு கேள்வி. நிலன் திறந்த புடவைக்கடை எத்தனை மாடிகள் கொண்டது? மூன்று. கேள்விகள் இப்படித்தான் இருக்கும்.

திரும்பவும் சொல்கிறேன், இது nithaniprabu novels தளத்தில் தொடர்ந்து கருத்திடும் வாசகர்களுக்கு மட்டுமேயான போட்டி.

கதை முடிந்த பிறகு வாசிக்கிறவர்களை முடிந்தவரையில் தவிர்த்துவிடுவேன். அந்தந்த ஐடியை கிளிக் பண்ணிப் பார்த்தாலே அவர்கள் எப்போது கருத்திட்டார்கள் என்று காட்டும். அதனால் என்னோடு தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை.

நான் எப்போது முற்றும் போடுகிறேனோ அப்போதே கேள்விகளையும் கேட்பேன். சரியாக 24 மணித்தியாலங்கள் முடிகையில் அந்தப் போட்டியும் முற்றுப் பெற்றுவிடும்.

பதில்களையும், நிதனிபிரபு நாவல்கள் தளத்தில் என்ன ஐடியில் இருக்கிறீர்கள் என்றும் எழுதி எனக்கு மெயில் அனுப்பினால் சரி.

எந்த நாட்டில் இருந்தாலும் தெரிவு செய்யப்படுகிறவருக்கான பரிசுப் பணம், இலங்கை அல்லது இந்தியாவில் மட்டுமே வழங்கப்படும்.

ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். விளக்குகிறேன். எனக்கும் இதுதான் முதல் அனுபவம். முயற்சித்துப் பார்க்கிறேனே.

இதேபோலவே யூடியூபில் நிதனிபிரபு ஓடியோ நாவல் சேனலிலும் போட்டி நடக்கவிருக்கிறது. அதை என் சேனலில் அடுத்த நாவல் பதிவேற்றம் செய்கையில் அறிவிக்கிறேன்.

அங்கும் ஐவருக்கு இந்தியன் ரூபாய் 500 கொடுக்கும் எண்ணம் உண்டு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி, ஓடியோ நாவல்களைக் கேட்பது மட்டுமே.

இது என் சேனல்: https://www.youtube.com/@nithaniprabunovels/featured


இது என் வாசகர்களுக்கான சிறு நன்றி பகிர்தல் மட்டுமே!
 
Last edited:
Top Bottom