• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 7

இரத்தப்பசை இழந்த முகமும், செய்வதறியா நிலையும் என்று காட்டில் தொலைந்துபோன குழந்தையைப் போலக் குணாளனையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் இளவஞ்சி.

தன் வாழ் நாளில் எந்த நிலையில் அவளைப் பார்த்துவிடவே கூடாது என்று குணாளன் நினைத்திருந்தாரோ, அந்த நிலையில் அவளைப் பார்த்த மனிதர் துடித்துப்போனார். அவர் உள்ளத்தோடு சேர்ந்து உயிரும் அழுதது.

ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டு, யார் என்ன சொன்னாலும் நீ என் மகளம்மா என்று சொல்லி அழ நினைத்தார். இந்தப் பாழாய்ப் போன நரம்புத் தளர்ச்சி அவரின் துடிப்பிற்கு ஏற்ப அவரை இயங்க விட மறுத்தது.

தன்னோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட வேண்டும் என்று அவர் நினைத்த உண்மை, இப்படித் தன் மனைவியாலேயே வெளியில் வரும் என்று நினைக்கவே இல்லை.

அவளுக்குத் தெரிந்தது போதாமல் நிலன் வீட்டினருக்கும் தெரிந்துபோயிற்றே. இத்தனை வருடங்களாக இரகசியமாக இருந்த ஒன்று இனிப் பரகசியமாகிவிடும். அவர் சீராட்டிப் பாராட்டி வளர்த்த மகள் இனிப் பலர் வாயிலும் விழுந்து எழும்பப்போகிறாள். அதுவும் அந்தச் சக்திவேலர் ஒருவர் இதை அறிந்தால் போதுமே!

“அம்மாச்சி! அப்பாவ அப்பிடிப் பாக்காதீங்கோம்மா. ஆர் என்ன சொன்னாலும் நீ என்ர மகள்தானம்மா.” என்றார் கண்ணீரோடு.

அவர் என்னவோ நான் பெறாவிட்டாலும் நீ என் மகள்தான் என்று அடித்துச் சொல்வதாக நினைத்தார். அதுவே அவள் அவர் மகள் இல்லை என்று அவரும் சேர்ந்து உறுதிப்படுத்தியது போலாகிவிட அவள் நெஞ்சின் உள்ளே சுருக்கென்று ஆழமாய் எதுவோ பாய்ந்தது.

எப்போதும் எதிரில் நிற்பவர் தன்னை உணர்ந்துவிடவோ, தன் மனத்தில் ஓடுவதைக் கணித்துவிடவோ கூடாது என்பதில் மிகுந்த கவனமாய் இருப்பாள். கம்பீரம் அவளது கவசமென்றால் நிதானம் எப்போதும் அவளோடு கூடவே இருப்பது.

இன்றைய அவளின் கட்டுப்பாடு உடைந்ததற்கு காரணம், தன்னைத் துரத்துவது காணாமல் தன் தங்கையையும் வலை போட்டுச் சிக்க வைத்துவிட்டார்களே என்கிற சினமும், அவள் வாழ்க்கை சிக்கலில் மாட்டிவிடக் கூடாதே என்கிற பதற்றமும்தான்.

ஆனால், அவள் இவளின் தங்கையே இல்லையாம். இல்லை, அப்படிச் சொல்வது கூடத் தவறு! இவள் அந்த வீட்டின் பிள்ளையே இல்லையாம்.

உள்ளே உள்ளம் அழ நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள்.

நிலனால் அவளை அப்படிப் பார்க்கவே முடியவில்லை. அவனுக்கும் இது மாபெரும் அதிர்ச்சிதான். அதைவிடவும் அவளைச் சுற்றி அத்தனை பேர் இருந்தும் ஒற்றையாய் நிற்கிறவளைக் கண்டு அவன் இதயம் கண்ணீர் வடித்தது.

உனக்கு யார் உறவாய் இல்லாவிட்டால் என்ன, நான் இருக்கிறேன் என்று சொல்ல நினைத்தான். தன் கைகளுக்குள் வைத்து அவள் மனத்தின் காயத்தை ஆற்றத் துடித்தான். அத்தனை பேரின் முன்னாலும் அதைச் செய்ய முடியாமல் தன் தாய் தந்தையரைப் பார்த்தான்.

அவர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சிதான் என்று அவர்கள் முகங்களே சொல்லின. அதற்குமேல் எதைப் பற்றியும் யோசிக்காமல், “வஞ்சி!” என்றபடி அவளிடம் வந்தான்.

அவ்வளவு நேரமாக நிமிர்ந்து நின்று அவர்களைப் பந்தாடிக்கொண்டிருந்தவள் வார்த்தைகள் அற்ற ஊமையாக அவனைப் பார்த்தாள். அப்போதுதான் அவன், அவர்கள் இங்கே வந்திருக்கும் காரணம், தன் நிலை, தான் இந்த இடத்தில் அதிகப்படி என்பதெல்லாம் உறைத்தன.

ஆழ மூச்சு ஒன்றை எடுத்து விட்டுவிட்டு, “நான் கதைச்ச எல்லாத்துக்கும் சொறி அங்கிள். சுவாதிய என்ர தங்கச்சி எண்டு நினைச்சுத்தான் கதைச்சனான். ஆனா, எனக்கும் இந்த வீட்டுக்கும் உறவே இல்லை எண்டு இப்பதான் தெரிய வந்திருக்கு. அதால என்ன எண்டாலும் அவேயலோடயே கதச்சு முடிவெடுங்கோ.” என்று குணாளன் ஜெயந்தியைக் காட்டிச் சொல்லிவிட்டு நடந்தவள் நின்று, “சொறி மிதுன்!” என்றுவிட்டுப் போகவும் மிதுனுக்கே அவளைக் கண்டு பரிதாபமாயிற்று.

குணாளன் உடைந்தே போனார். “அம்மாச்சி இளவஞ்சி!” தன்னை மறந்து அவளைத் தடுக்கப் போனவர் தடுமாறி விழப்போக, ஓடிப்போய் அவரைப் பற்றி அமர்த்தினான் நிலன்.

“நீங்க இருங்க அங்கிள். நான் பாக்கிறன்.” என்று அவன் வெளியே வந்து பார்ப்பதற்கிடையில் அங்கே வந்த விசாகனோடு காரில் புறப்பட்டிருந்தாள் இளவஞ்சி.

இன்னுமே அவள் உள்ளம், தான் அறிந்துகொண்ட உண்மையை ஜீரணிக்க முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தது. நெஞ்செல்லாம் விண்டு விண்டு வலித்தது.

எத்தனை சாதாரணமாக ஆரம்பித்த நாள், எவ்வளவு பெரிய அதிர்ச்சிகளை எல்லாம் அவள் தலையில் கொட்டிவிட்டது?

அவள் சரியில்லை என்று காரில் ஏறுகையிலேயே விசாகன் கவனித்திருந்தான். அவளாக ஏதாவது சொல்வாள் என்று அவன் காத்திருக்க, அவள் இங்கேயே இல்லை என்பதை அதன் பிறகுதான் கண்டுகொண்டான்.

என்னாயிற்று என்று எப்படிக் கேட்பது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க, “விசாகன், உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? இந்தப் பூமிப் பந்தே எங்களுக்குச் சொந்தமில்லையாம். அப்ப சொந்தமெண்டு நாங்க நினைச்சுக்கொண்டு இருக்கிறதெல்லாம்?” என்றாள் அவள் திடீரெண்டு.

“மேம்!”

“ஆரை நம்புறது, ஆரைச் சொந்தம் எண்டு நினைக்கிறது எண்டு ஒண்டுமே விளங்கேல்ல விசாகன்.” என்றாள் விரக்தியோடு.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாது அவளைப் பார்த்தான் விசாகன்.

இதற்குள் தொழிற்சாலை வந்திருந்தது. காரிலிருந்து இறங்கியவள் ஒரு கணம் அப்படியே நின்றாள்.

அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள். இங்கு மட்டும் அவளுக்கு உரிமை உண்டா என்ன? அவர்களுக்குச் சொந்தமான சொத்து சுகத்தை எல்லாம் ஆண்டு அனுபவிக்கிறவள் அவளாமே!

இப்படியே எங்காவது போய்விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். அப்படியே போவதாக இருந்தால் கூட அத்தனையையும் முறையாக அவர்களிடம் ஒப்படைக்காமல் முடியாதே!

தன்னைச் சமாளித்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.

எப்போதும்போல் அவளை வரவேற்க வாசலிலேயே புன்னகை முகமாகக் காத்திருந்தார் தையல்நாயகி. அவரைப் பார்த்த நொடியில் முற்றாக உடைந்துவிடப் பார்த்தாள் இளவஞ்சி.

‘என்னச் சுத்தி என்ன நடக்குது அப்பம்மா? நீங்க கூட இதைப் பற்றி ஒரு வார்த்த சொல்லேல்லையே?’அவள் உள்ளம் அழுதது.

‘உங்கள நான் அப்பம்மா எண்டு சொல்லக் கூடாதோ? என்னை வளத்த அம்மா எண்டு சொல்லோணுமோ?’

அதற்குமேல் அங்கேயே நின்றாள் நிச்சயமாக உடைந்துவிடுவோம் என்று தெரிய, அவளின் அலுவலக அறைக்குச் சென்று கைப்பையை வைத்துவிட்டு, தொழிற்சாலையினுள் விடுவிடு என்று நடக்க ஆரம்பித்தாள்.

உள்ளத்தின் போராட்டத்துக்கு ஏதோ ஒரு வடிகால் அவளுக்குத் தேவையாய் இருந்தது.

இதுவரை காலமும் அவள் தையல்நாயகியின் பேத்தி. குணாளன் ஜெயந்தியின் மூத்த மகள். சுவாதி, சுதாகரின் தமக்கை. தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலையின் முதலாளி. மதிப்பும் மரியாதையும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்தவள்.

இன்றானால் இது எதுவும் அவள் அடையாளங்கள் இல்லையாம். அனாதையாம். எடுத்து வளர்த்தார்களாம். எல்லோரும் அவளைத் தையல்நாயகியின் வார்ப்பு என்பார்களே. அது பொய்யா என்ன?

அவள் நடையின் வேகம் கூடிற்று. தன்னைத் துரத்தி துரத்தி வதைக்கும் இந்த எண்ணங்களிலிருந்து தப்பிக்க நினைத்தாள். முடியவேயில்லை.

இத்தனை வருடத்து வாழ்க்கையில் பெரிதாக அவள் மேடு பள்ளங்களைப் பார்த்ததில்லை. ஆனால், தொழிலில் வயதுக்கு மீறிய சவால்களைச் சந்தித்தவள். அத்தனையையும் நல்ல முறையில் கடந்து வந்தவளும் கூட.

ஆனால் இன்று அவளுக்குக் கிடைத்த அதிர்ச்சி அவை அத்தனையையும் மீறியதாய் இருந்தது. கோபுரத்தின் உச்சியில் இருந்தவளைப் பிடித்து யாரோ அதலபாதாளத்தில் தள்ளிவிட்டாற்போல் வலித்தது.

அவளைப் பெற்றவர்கள் யார்? அவளை ஏன் தூக்கி எறிந்தார்கள்? அவள் எப்படி இவர்கள் கையில் வந்தாள்? ஓராயிரம் கேள்விகள் அவளைச் சுற்றிவளைத்தன. அத்தனைக்குமான பதில்களையும் சொல்ல வேண்டியவர் குணாளன். ஆனால், அவளால் அவர் முகம் பார்த்து இதையெல்லாம் கேட்க முடியும் போல் இல்லை.

அங்கிருந்த யாரினதும் இரக்கப் பார்வையையோ, பரிதாபப் பார்வையையோ எதிர்கொள்ள இயலாமல்தான் மன்னிப்பைக் கேட்டுவிட்டு ஓடி வந்திருந்தாள்.

ஆனால், அவளைக் கொள்ளும் இந்தக் கழிவிரக்கத்தை என்ன செய்ய?

இன்னும் வேகமாக நடந்தாள். எதிர்ப்பட்ட ஊழியர்கள் மிகுந்த பணிவுடன் நடந்துகொண்டனர்.

இத்தனை நாள்களும் அதையெல்லாம் அன்போடு ஏற்றுக்கொண்டவளின் உள்ளம் இன்று, இதெல்லாம் உனக்கானது இல்லை, உனக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை, நீயும் இவர்களில் ஒருத்தி என்று அறைந்து சொன்னது.

அவள் யாரில் ஒருத்தியாக இருக்கிறாள் என்பது அவளுக்கு ஒரு விடயமே இல்லை. ஆனால், இத்தனை நாள்களும் என்னுடையது என்கிற சொந்தத்தோடும் உரிமையோடும் நடந்த இடத்தில் இன்று கால்கள் கூசின.

சொல்லி ஆறுவதற்கோ, தோள் சாய்வதற்கோ யாருமே இல்லாமல் தனித்தே நிற்கிறாள். அப்படி யாரிடமும் சொல்வதோ, ஆறுதல் தேடுவதோ அவளுக்குப் பழக்கமும் இல்லாத ஒன்றாயிற்றே.

தனக்குள்ளேயே விழுங்கிக்கொள்ள முயன்றாள்.

*****
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
இங்கே அவள் வீட்டில் யாருக்கு என்ன கதைப்பது என்று தெரியாத நிலை. குணாளன் மொத்தமாய் இடிந்து போயிருந்தார். ஜெயந்தியின் புறம் திரும்பவேயில்லை. சுவாதிக்குமே இளவஞ்சி தன் தமக்கை இல்லை என்கிற விடயம் பெரும் அதிர்ச்சியாய் இறங்கியிருந்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

பிரபாகரன் குடும்பத்தினருக்கு வந்தபோது இருந்ததை விடவும் தற்போதைய நிலவரம் மிகுந்த இறுக்கமாக இருப்பது நன்றாகவே தெரிந்தது. அதைவிட இந்த நேரத்தில் திருமணம் குறித்துப் பேசுவது அநாகரீகம் என்று புரிந்துகொண்ட பிரபாகரன், “எல்லாம் சரியாகும் குணாளன். ரெண்டு நாள் போகட்டும். எல்லாரும் அமைதியா இருந்து கதைங்கோ.” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார்.

இனி எதுவும் சரியாகும் என்கிற நம்பிக்கை குணாளனுக்கு இல்லை. அவருக்கு இளவஞ்சியைத் தெரியும். இனி, அவர்களை எல்லாம் அரவணைத்துப் போன அந்த மகள் அவருக்குக் கிடைக்கவே மாட்டாள்!

கலங்கிப்போன மனமும் விழிகளுமாக அவர்களை நோக்கி, “உங்கட வீட்டில எல்லாரோடயும் கதைச்சு எவ்வளவு கெதியா ஏலுமோ அவ்வளவு கெதியா இந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்ங்கோ. நடத்தி வைப்பம்.” என்று சொன்னார்.

“இளவஞ்சி?” என்றார் பிரபாகரன் கேள்வியாக.

“அவா என்ர மகள்தான். ஆனா இனி அது எனக்கு மட்டும்தான். அதால அவாட்ட இருந்து இனி ஒரு வார்த்த மறுப்பா வராது.” உடைந்து கரகரத்த குரலில் சொன்னார்.

சரி என்பதுபோல் தலையசைத்த பிரபாகரன் நிலனைப் பார்த்தார். நேரிலேயே பேச வந்துவிட்டோம், முடிந்தால் அவன் திருமணத்திற்கும் சேர்த்துக் கேட்போம் என்று எண்ணிக்கொண்டிருந்தவர் இப்போது வாயைத் திறக்க முடியாமல் நின்றார்.

நிலனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. அவர்களிடம் மன்னிப்பைக் கேட்டுவிட்டுப் போனவள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தான்.

அவள் மீது காதல் என்றெல்லாம் இல்லை. ஆனால் இன்று, அத்தனைக்குப் பிறகும் அழாமல் நிமிர்ந்து நின்று மன்னிப்பைக் கேட்டுவிட்டுப் போனவள் அவன் உள்ளத்தினுள் மிக அழுத்தமாக நுழைந்துவிட்ட உணர்வு. அந்த நிமிடமே அவளைப் பார்க்க நினைத்துத் தன் வீட்டினரை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

ஆனால், அவன் நினைத்ததை அவனால் செயலாற்ற முடியவே இல்லை.

அவளின் அலுவலகத்திற்கே நேராகச் சென்றவனைச் சந்திக்க மறுத்தாள் இளவஞ்சி. அன்று மட்டுமல்ல. அதன் பிறகு வந்த நாள்களிலும் அவனால் அவளைப் பார்க்கவே முடியவில்லை.

தன்னைத் தானே தனிமைச் சிறையில் போட்டுப் பூட்டியிருந்தாள்.

அன்று மாலை வீடு வந்தவள், “நான் இந்த வீட்டில இருக்கலாமா? இல்லை, வெளில போகோணுமா?” என்றாள் குணாளனிடம்.

துடித்துப்போனார் மனிதர். “அம்மாச்சி, அப்பா ஏற்கனவே நல்லா உடஞ்சிட்டனம்மா. நீயும் சேர்ந்து உடைக்காத. இப்பவும் சொல்லுறன். நீ எனக்குப் பிறக்காம இருக்கலாம். ஆனா என்ர பிள்ளைதான். இளவஞ்சிதான் என்ர மூத்த மகள்.” என்றார் தழுதழுத்த குரலில்.

அதன் பிறகு அவள் அந்த வீட்டில் யாரோடும் எதுவும் கதைப்பதேயில்லை.

ஜெயந்திக்குப் பிரத்தியேகமாக அவள் மீது எந்த வெறுப்பும் இல்லை. பெற்ற மகளாகத்தான் பாவித்தார். பாசமாகத்தான் வளர்த்தார். பிரிவினை காட்டியதும் இல்லை. ஆனால், உண்மை என்கிற ஒன்று எப்போதும் அடி நெஞ்சில் உறங்கிக்கொண்டேதானே இருக்கும். அதில் ஆத்திரத்திலும் அவசரத்திலும் நிதானமிழந்து வார்த்தைகளை விட்டுவிட்டார்.

இப்போது அவரும் அவள் முகம் பார்க்க முடியாமல் தவித்தார். எப்படியாவது அவளிடம் மன்னிப்பைக் கேட்டுத் தன்னை விலக்கிவிட அவர் முயல, “நீங்க ஒண்டும் பொய் சொல்லேல்லையே. இன்னுமே சொல்லப்போனா இத்தனை காலமும் நான் வாழ்ந்த வாழ்க்கைதான் பொய். நீங்க சொன்னதாலதான் நான் ஆர் எண்டுற உண்மை எனக்குத் தெரிய வந்ததும்.” என்றுவிட்டு நடந்தவள் நின்றாள்.

“கார்மெண்ட்ஸ் கணக்குவழக்கெல்லாம் எப்ப வேணுமெண்டாலும் நீங்க செக் பண்ணலாம். இல்ல, உங்கள்ள ஆருக்காவது கார்மெண்ட்ட மொத்தமா உங்கட பொறுப்பில எடுக்க விருப்பம் எண்டாலும் சொல்லுங்க, எல்லாத்துக்கும் நான் ரெடியாத்தான் இருக்கிறன்.”

“என்னம்மா இது? அண்டைக்கு நடந்ததுக்காக நானும்தான் கவலைப்படுறன். இப்பிடி எல்லாம் கதைக்காதாயம்மா.” என்றார் அவர் கண்ணீருடன்.

அவர் பேசவே இல்லை என்பதுபோல் பாவித்து, “அப்பம்… அது தையல்நாயகி அம்மா கடைசி நேரத்தில கூட நீதான் பொறுப்பா இருக்கோணும், கார்மெண்ட்ஸ உடைய விடாமப் பாக்கோணும் எண்டு திரும்ப திரும்பச் சொன்னவா. அதால மட்டும்தான் இன்னும் அங்க போய் வாறன். எப்ப நீங்க பொறுப்பெடுக்க ரெடி எண்டாலும் சொல்லுங்க நான் விலகிடுவன்.” என்றுவிட்டுப் போனாள்.

இங்கே ஒரு பக்கம் மிதுன் சுவாதி திருமண வேலைகள் மிக வேகமாக நடக்க ஆரம்பித்தன. நிலனுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட விருப்பமில்லை. அதைவிட, இதை விட்டால் அவளைப் பிறகு தன்னிடம் கொண்டுவர முடியாமலேயே போய்விடுமோ என்கிற பயமும் அவனைத் தொற்றிக்கொண்டது.

அதற்கு முதல் அவளோடு அவன் பேச வேண்டும். என்ன முயன்றும் அது மட்டும் நடப்பதாக இல்லை.

பொறுத்து பொறுத்துப் பார்த்தவன் கடைசியில் காரியத்தில் இறங்கியிருந்தான்.

அன்று காலை, வழமை போன்று விசாகனோடு தொழிற்சாலைக்குப் பயணித்துக்கொண்டிருந்தாள் இளவஞ்சி. அப்போது அவர்களை முந்திய நிலனின் கார், வேகத்தைக் குறைத்து இருபக்கத்து சிக்னல் லைட்டுகளையும் ஒரே நேரத்தில் ஒளிர விட்டு சமிக்ஜை செய்தது.

தன்னைப் பின்தொடர்ந்து வரச் சொல்கிறான். எத்தனை முறை தவிர்த்தாலும் விடாமல் துரத்துகிறவன் மீது கோபம் உண்டாக, “நீங்க நேரா தையல்நாயகிக்கு விடுங்க விசாகன்.” என்றுவிட்டு வீதியோரத்தில் பார்வையைப் பதித்துக்கொண்டாள் இளவஞ்சி.

ஆனால், அவளின் கார் நிலனின் காரைப் பின்தொடர்ந்தது.

“விசாகன், நீங்க தையல்நாயகிக்கு விடுங்க.” தான் சொன்னது அவனுக்கு விளங்கவில்லையா என்றெண்ணித் திரும்பவும் சொன்னாள் இளவஞ்சி.

அவன் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால், நிலனின் கார் ஒரு வீட்டின் முன்னே சென்று நிற்க, அதன் பின்னால் கொண்டுபோய் இந்தக் காரையும் நிறுத்தினான்.

நம்ப முடியாமல் விசாகனையே பார்த்தாள் இளவஞ்சி. கடந்த சில நாள்களில் நிறையப் பார்த்துவிட்டதாலோ என்னவோ அளவுக்கதிகமாக அதிரவெல்லாம் இல்லை அவள். ஆனாலும் உள்ளே ஒரு வலி குடைந்தது.

அவன் இப்படிப் பொய்த்துப் போயிருக்க வேண்டாம் என்றே நினைத்தாள். அவனோடு அவனை நம்பி எங்குப் பயணிக்கவும் அவள் யோசித்ததேயில்லை. அவன் அவன் எல்லையில் நின்றாலும் அவள் அவனை ஒரு நண்பனாகத்தான் பாவித்திருக்கிறாள். அவ்வளவு நம்பிக்கை.

என் குடும்பம் என்று நினைத்தவர்கள் அவள் குடும்பத்தினர் இல்லையாம். நம்பிக்கையானவன் என்று அவள் நம்பிய ஒருவன் அவளை முற்றிலும் ஏமாற்றியிருக்கிறான். பிறகு என்ன அவள் பெரிய வெற்றிகரமாகத் தொழிலை நடத்துகிறவள்? விரக்தி நெஞ்சைச் சூழ்ந்தது.

இதற்குள் அவன் காரிலிருந்து இறங்கி அவர்களிடம் வந்த நிலன், அவள் பக்கத்துக் கதவைத் திறந்து, “இறங்கு வஞ்சி!” என்றான்.

ஒருமுறை நிதானமாக அவன் முகத்தையே பார்த்துவிட்டு இறங்கினாள் இளவஞ்சி.

விசாகனுக்கு உள்ளே உள்ளம் உதறாமல் இல்லை. கோபப்படுவாள், ஏதாவது சொல்வாள் என்று அவளையே பார்க்க, “இது எத்தின நாளா?” என்றாள் அவள் நிலனிடம்.

சிறிதாய்த் தயங்கினாலும், “நாலு வருசம்.” என்றான் நிலன்.

“சோ, என்ர கைய விட்டுப் போன பல டீலுகளுக்குப் பின்னால இருந்தது விசாகன்?”

ஆம் என்பதுபோல் தலையை அசைத்தான் நிலன்.

“முத்துமாணிக்கம் அங்கிள் கார்மெண்ட்ஸ விக்கப்போறார் எண்டுற விசயம் தெரிய வந்ததும் இப்பிடித்தான்.”

பதிலெதுவும் சொல்லாமல் இறுக்கமாக நின்றான் நிலன்.

ஒரு நொடி யோசித்துவிட்டு, “அண்டைக்கு சுவாதி எனக்குத்தான் ஃபோன் பண்ணிச் சொன்னவள். அங்க போறவரைக்கும் நான் அவளோட கதைச்சுக்கொண்டேதான் போனனான். ஆனா எனக்குப் பின்னால நீங்களும் வந்திட்டீங்க. சோ, நியூஸ் தந்தது விசாகன்?” என்றாள் அவன் மீதே பார்வையைப் பதித்து.

உதடுகள் கோடாக அழுந்த அதற்கும் ஆம் என்பதுபோல் தலையை அசைத்தான் நிலன்.

அவனையே இமைக்காது ஒரு கணம் பார்த்தவள் விசாகனின் புறமாகத் திரும்பி கையை நீட்டினாள்.

காரின் திறப்பைக் கேட்கிறாள். என்ன செய்யட்டும் என்பதுபோல் நிலனைப் பார்த்தான் விசாகன்.

“அவன் இருக்கட்டும் வஞ்சி.” என்றான் நிலன்.

அவள் நீட்டிய கையை இறக்கவும் இல்லை, அவன் சொன்னது காதில் விழுந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் இல்லை.

“வஞ்சி!”

அவள் அசையவில்லை.

“அவன் நம்பிக்கையானவன்தான். இருக்கட்டும் விடு.”

அப்போதும் அவளிடம் மாற்றமில்லை.

கடைசியில் நிலன்தான் இறங்கி வந்தான். தற்போதைய முக்கிய விடயம் அது இல்லை என்பதில், “இப்போதைக்குக் குடு.” என்றான் விசாகனிடம்.

அதன் பிறகே கொடுத்தான் விசாகன்.

“சம்பளம் வாங்கிறது என்னட்ட. விசுவாசம் அங்க!” உதட்டோரம் ஒரு விதமாய் வளையச் சொன்னாள் இளவஞ்சி.

விசாகனின் முகம் கறுத்துப்போனது. அவள் பார்வையை நேரடியாகச் சந்திக்க முடியாமல் தடுமாறினான். அதுவும் இந்தக் கொஞ்ச நாள்களாக அவள் எப்படி உடைந்திருந்தாள் என்று அவனுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியிருக்க தானும் அவளுக்குத் துரோகமிழைத்தது குத்தியது.

“அடுத்தது என்ன?” என்றாள் நிலனை நேராக நோக்கி.

இந்த நேரத்திலும் நிதானமாகச் சூழ்நிலையைக் கையாள்கிறவளை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. தனக்கு என்று வருகிறபோதெல்லாம் அவள் இப்படித்தான் போலும். தன்னுடையவர்கள் என்று வருகையில்தான் பதறிவிடுகிறாள்.

“உன்னோட கதைக்கோணும், வா!” என்று அந்த வீட்டினுள் அழைத்துப்போனான்.

தொடரும்…
 
Last edited:

sarjana

Member
Ys நான் இதை எதிர்பார்த்தேன்.
நிச்சயம் நிலன் வஞ்சியின் நல்லதுட்குதான் இப்படி நடந்திருப்பான்.
 
Adei visaka thuroki..... appo nilan than hero va..... matrathellam flow le poovom apa than nalla irukum.... naa yethavathu varum nu yoshicha.... iruthalum intha azhutham pothum nithama.... paavam vanji.....konjam time koduthu adiko......
 
Top Bottom