நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 28 (முடிவு )

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 28

அங்கே நின்றிருந்த விக்ரமை கண்டதும் அவளின் நடை அப்படியே நின்றுபோனது.

அதுவரை நேரமும் பிள்ளைகள் மீதான பாசத்தில் தளும்பிய மனம் முழுவதிலும் அவனது ஆடசி ஆரம்பிக்க, அவனிடமிருந்து பார்வையை விலக்கமுடியாமல் நின்றாள் யாமினி.

அவனோ கைகளை விரித்துக் கண்களால் அழைத்தான். எப்போதுமே அப்படி அவன் அழைத்துவிட்டால் அடுத்த நொடியே அந்தக் கைகளுக்குள் சரண் புகுந்துவிடுவதுதான் அவளின் இயல்பு!

இன்றோ முடியவில்லை!

கால்கள் நகர்வேனா என்றது. நெஞ்சமோ அவனிடம் ஓடு ஓடு என்று உந்தியது. அந்தக் கைகளுக்குள் புகுந்து, மார்புக்குள் ஒளிந்து, அவன் தரும் இன்பங்களை எல்லாம் அனுபவித்துவிடச் சொல்லி உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்தாலும் நின்ற இடத்தைவிட்டு அசைய முடியவில்லை அவளால்!

மெல்ல அவனின் கால்கள் அவளை நோக்கி முன்னேறின. அது கருத்தில் பதிந்தாலும் காதலோடு கலந்துவிட்ட விழிகளின் கட்டுப்பாட்டில் சிலையாக நின்றிருந்தாள் யாமினி.

அவளை நெருங்கி, சிற்றிடையை வளைத்தகரம் தன்னோடு அவளை அணைத்துக்கொண்டபோது, அதற்காகவே அன்றய நாள் முழுவதும் தவியாய்த் தவித்தவள் அவன் கைகளில் துவண்டுபோனாள்.

சின்னச் செவ்விதழ்களோடு சேர்ந்துவிட்டுப் பிரிந்த உதடுகள், “உனக்கும் விருப்பம் தானேடா?” என்று அவளின் காதோரமாகக் கிசகிசுத்தபோது, அதற்குமேலும் தாளமாட்டாமல் அவன் தோளில் முகம் புதைத்துத் தன்னை முற்றிலுமாக அவனிடம் கொடுத்தே விட்டாள் யாமினி.

அதற்காகவே அத்தனை நாட்களாகக் காத்திருந்தவன், தன்னவளை அப்படியே அள்ளிக்கொண்டான். அடுத்த அறையின் மஞ்சத்தில் கிடத்தி, தன் தேவைகளை அவளிடம் தேடத் துவங்கினான்.

கணவனின் சின்னச் சின்னச் சீண்டல்களிலேயே துடித்துப் போகிறவள் யாமினி. இன்று தடைகளற்று அவளின் பெண்மைக்குள் அவன் பயணித்தபோது, முற்றிலுமாகத் தன்னை மறந்தாள்.

அவனது விரல்களும் இதழ்களும் மெல்ல மெல்ல எல்லைகளை மீறி, ஈருடலாய் இருந்தவர் ஓருடலாய் மாறும் வேளையில் கூசிச் சிலிர்த்தவளை, மீளமுடியாத மயக்கத்தில் இருந்தாலும் மெல்லிய அதிர்வோடு விக்ரம் பார்த்ததை அவள் உணரவில்லை. உணரும் நிலையில் அவள் இல்லை. அவனின் சிருங்காரச் சேட்டைகள் இந்த உலகத்தையே மறக்க வைத்துவிட்டதில் அவன் கைகளில் கரைந்து காணாமலேயே போயிருந்தாள் யாமினி.

அதுநாள் வரை தன் நினைவுகளில் நீக்கமற நிறைந்திருந்தவளை தன் உயிரிலும் ஊனிலும் நிரப்பிக்கொண்டான் விக்ரம். எத்தனையோ நாட்களாய்க் காத்திருந்த காதல்.. தாம்பத்யம் எனும் சொர்க்கவாசலைத் திறந்து வைத்ததில், அங்கே காமன் கச்சேரி முடிவின்றிக் களைகட்டியது!


அடுத்தநாள் காலை சுகமான அயர்ச்சியோடு கண்விழித்தாள் யாமினி. விழித்ததும் கண்டது அவளை அணைத்துக்கொண்டு அயர்ந்து உறங்கும் கணவனின் முகமே. சற்று நேரம் ஆசையோடு அந்த முகத்தை ரசித்துவிட்டு மெல்ல எழுந்து வந்தாள்.

பிள்ளைகளை எட்டிப்பார்க்க, இருவரும் இன்னுமே நல்ல உறக்கத்தில் இருந்தனர். உடலையும் மனதையும் ஆக்கிரமித்திருந்த சந்தோசத்தோடு குளித்துவிட்டு வந்து ஒரு தேநீரை ஊற்றிக்கொண்டு பால்கனியில் சென்று அமர்ந்துகொண்டாள்.

அவள் அமர்ந்திருந்தது இருவர் அமரக்கூடிய வகையிலான ஒரு பெஞ்ச். அதன் கைப்பிடியில் சாய்ந்து, கால்களைத் தூக்கி பெஞ்சிலேயே வைத்துக்கொண்டாள். அணிந்திருந்த முழுநீள பாவாடையால் சில்லென்று தாக்கிய குளிரைத் தடுக்கக் கால்களை மூடிக்கொண்டாள். இரண்டு கைகளாலும் பற்றியிருந்த தேநீர் கப் அவளின் முழங்கால்களில் வீற்றிருக்க, சில்லிடும் அந்த இனிமையான பொழுதுக்கு இதமாகத் தொண்டையை நனைத்துக்கொண்டு இறங்கியது சூடான தேநீர்.

அழகான காலைப்பொழுது! நம்மூராக இருந்திருக்கச் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கியிருப்பான். இங்கோ இன்னும் பனிமூட்டங்கள் விலகாமல் பரவிக்கிடக்க, சூரியக்கதிர்கள் மெல்ல மெல்ல எங்கிருந்தோ ஊடுருவத் தொடங்கியிருந்தது.

ஓங்கி வளர்ந்த மரங்கள். அவற்றைத் தழுவியிருந்த பனிப்புகார்கள். அசைந்தாடிய காற்று. அன்றலர்ந்த முகமும் கனவுகளைச் சுமந்த விழிகளுமாகச் சிற்பமென அவள்!

அவளின் நினைவுகளோ முந்தய இரவையே சுற்றிச் சுழன்றது. வெட்கமின்றிக் காதோரம் அவன் பேசிய பேச்சுக்களும், அவளைச் சீண்டிச் சிணுங்க வைத்த செய்கைகளும், அவள் போட்ட தடைகளைக் கெஞ்சிக் கொஞ்சி அவன் உடைத்ததும் என்று மீண்டும் மீண்டும் மனம் அவர்களின் சங்கமத்திலேயே மூழ்கிக் கழிக்க, அவளுக்கே அவளின் நினைவுகளை எண்ணி வெட்கமாய்ப் போயிற்று!

‘யாமினி! வரவர வெக்கமே இல்லாம போகுது உனக்கு!’ என்று உள்நெஞ்சு எடுத்துச் சொன்னாலும் கேட்டால் தானே!

நினைவுகள் அங்கேயே நிற்க, அதன் தவிப்புத் தாளமாட்டாமல் கீழுதட்டை கடித்தவள் மெல்லத் தன் விரல்களைத் தடவிப் பார்த்தாள். அங்கே அன்று காலையில் அவள் அணிந்துகொண்ட ‘விக்ரமின் யாமினி’ அவளின் நடு விரலை இதமாகப் பற்றியிருந்தது. அன்று எண்ணியது போலவே இன்று அவள் முழுமையாக விக்ரமின் யாமினியாக மாறியே போனாளே!

அவளின் இதயம் போற்றும் தலைவனின் நாயகி அவள்!

நெஞ்சில் நினைவுகள் இனித்துக்கொண்டு இறங்க, இன்று எப்படியாவது அவன் விரலுக்கு அதைப் பரிசளித்துவிட வேண்டும்!!

முடியுமா?

அதுவும் அவளைக் கட்டிப்போடும் அந்தக் கண்களைச் சந்தித்துக்கொண்டே!

கட்டாயம் முடியவேண்டும்! அவன் மீது அளவற்ற நேசம் கொண்டுவிட்ட நெஞ்சு அவளுக்கு ஆணை பிறப்பித்தது!

அப்போது அருகே வந்து அமர்ந்தான் விக்ரம்.

இன்னுமே தடுமாறிப் போனாள் யாமினி. அதுவும் கள்ளுண்ட வண்டாய் முந்தைய நாளின் மயக்கம் தீராது அவளை விழுங்கிய விழிகளை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.

மனைவியைப் பார்த்தவனின் இதழ்களிலோ புன்சிரிப்பு! “என்ன மேடம், ஒருக்கா நிமிந்து என்னைக் கண்ணால பாக்கிறது..” என்றான் உல்லாசமாக.

செவ்வானமாகவே மாறிவிட்ட முகத்தோடு அவள் விழிகளைத் தாழ்த்த, “என்னட்ட என்ன வெக்கம்?” ஆசையோடு அணைத்து இதழில் அழுத்தமாக முத்தம் பதித்தான் விக்ரம்!

மனம் மயங்க சுகமாக அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் யாமினி. அவனின் கரத்தை மெல்லப் பற்ற வசீகரச் சிரிப்புடன் பார்த்தான் அவன். மெல்லத் தன் விரலில் கிடந்த மோதிரத்தைக் கழற்றி அவன் விரலுக்குப் போட்டுவிட்டாள்.

“ஹே! என்ன இது?” ஆச்சரியமாகக் கையை உயர்த்திப் பார்த்துக் கேட்டான் அவன்.

“உங்கட பிறந்தநாளுக்கு வாங்கினான். பிடிச்சிருக்கா?” கண்களில் நாணம் மின்னினாலும் ஆவலோடு கேட்டாள்.

அதிலிருந்த ‘வி’யும் அதற்குள் கொடியெனப் படர்ந்திருந்த ‘வை’யும் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்து மனைவியின் மனதை அவனுக்குச் சொல்லிற்று! அழகாகப் புன்னகைத்தான்.

“பிடிக்காம இருக்குமா? அதுவும், இந்த யாமினி இந்த விக்ரமுக்குத்தான் சொந்தம் எண்டு சொல்லித் தந்த மோதிரம் எல்லா.” என்றான் குறும்போடு கண்ணடித்து.

“அதுசரி இதை ஏன் அண்டைக்குத் தரேல்ல? இதைவிட அண்டைக்குத் தந்த பரிசுதான் உனக்குத் தரோணும் மாதிரி இருந்ததா?” என்று வேண்டுமென்றே கேட்டான் அவன்.

“ஐயோ.. இல்ல!” என்று ஆரம்பித்தவள் அவன் விழிகளில் தெரிந்த சிரிப்பில், “நீங்க ஆக மோசம்!” என்றபடி அவன்மார்பில் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

அவனோ கணவனாகப் பல தண்டனைகளை ஆசையும் ஆவலுமாக வழங்கி அவளைச் செங்கொழுந்தாகச் சிவக்க வைத்தான்.

“அப்படியே நீ என்னைக் காதலிக்கிறதையும் டொச்சில் சொல்லு.” என்றான் அவன்.

“நான் மாட்டன்!” என்று அவசரமாக மறுத்தாள் யாமினி.

மோதிரத்தைப் போட்டுவிட்டு பரிசாக அவள் வாங்கிக்கொண்டவைகளே போதும்!

அவனோ, “சொல்லாம விடமாட்டன்.” என்று அதற்கும் பல தண்டனைகள் தன் இதழ்களால் கொடுத்தான்.

அவனது கைகள் வேறு அவளின் பொன்மேனியில் விளையாடத் தொடங்கியது.

“அப்..பா! ப்ளீஸ்…!” என்று சிணுங்கியவள் மேனி அவன் தேடல்களுக்கு இசைந்துகொடுக்கத் தொடங்கிற்று!

இப்படி வெட்கமற்று அவனின் இழுப்புக்கு இசைகிறோமே என்று அவள் வெட்க, அவனோ, “சொன்னா விடுவன்!” என்று இன்னுமே தாபத்தோடு அவளை அணைத்தான்.

“சொன்னாலும் விடமாட்டீங்க.” என்றாள் அவள், அவனை அறிந்தவளாக.

அதைச் சொல்வதற்குள் அவள் பட்டுவிட்ட பாட்டைக்கண்டு உல்லாசமாகச் சிரித்தான் விக்ரம். செய்வதையும் செய்துவிட்டுச் சிரிப்பு வேறா என்று அவள் முறைக்க, அவளின் காதோரமாகக் குனிந்து, “ரொம்பவே வதைக்கிறேனா?” என்றான் சின்னச் சிரிப்போடு.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வெட்கமாய்ப் போயிற்று அவளுக்கு! ஆம் என்றால் என்ன செய்வானாம்?

ஆனாலும் அவன் கேட்டதைச் சொல்லப்போவதில்லை அவள். இன்று மட்டுமல்ல என்றுமே! அதனாலேயே சொல்லு சொல்லு என்று அவனும் காலம் பூராகக் கேட்கப் போகிறான்.

அவள் சொல்லாமல் விளையாட்டுக் காட்டப்போவதும், அதன் காரணமாகவே அவன் தனக்குப் பிடித்தவிதமாய் அவளை விதம் விதமாய்த் தண்டிக்கப் போவதும் அவர்களின் வாழ்வு நீடிக்கும் காலம் வரைக்கும் தொடரத்தான் போகிறது! இருவருமே அதைத்தான் விரும்பினர்!

தன் கைகளுக்குள் அடங்கிக் கிடக்கும் தன்னவளை ஆசையோடு அணைத்துக்கொண்டான் விக்ரம்!

விரலுக்கு வாகாகப் பொருந்திக்கொண்ட மோதிரத்தை சுழற்றிப் பார்த்துவிட்டு, “அளவு எப்படிச் சரியா வந்தது?” என்று கேட்டான்.

“எழுத்து மோதிரத்துக்கு நீங்க யாழ்பாணத்தில அளவு குடுக்கேக்க பாத்தனான்.” என்றாள் அவள்.

“ஓ..!” என்று நன்றாகவே இழுத்துவிட்டு, “அந்தளவுக்குக் கவனிச்சு மோதிரம் வாங்கித்தந்த என்ர யாமினிக்கு நான் என்ன தர?” என்று கேட்டவனின் கண்கள் விஷமத்துடன் சிரித்தன.

திரும்பவும் தொடங்கப் போகிறான் என்று விளங்க, “எனக்கு ஒண்டுமே வேண்டாம். ஆள விடுங்கோ.!” என்று ஓடப் பார்த்தவளை அப்படியே தன் கையணைப்புக்குள் அடக்கிக்கொண்டான் விக்ரம்.

சொர்க்கசுகமாய்ச் சில நிமிடத்துளிகள் கடக்க, “தேத்தண்ணி போடவா?” என்று கேட்டவாறு தன் கப்பை அவள் எடுக்க, அவள் விலகுவதை விரும்பாமல்,

“அத இங்க கொண்டா!” என்று வாங்கிப் பருகினான் அவன்.

சொல்லாமல் கொள்ளாமலே இருவருக்கும் முந்தய நாள் மகள் செய்த செயல் நினைவில் வந்து சிரிப்பு மூட்டியது.

“எப்படி எங்களைக் கவனிக்கிறாள் எண்டு பாத்தியா?” என்றான் விக்ரம் மகளை எண்ணிக் கனிந்த முகத்தோடு.

“அதாலதான் சொல்றனான், அவேக்கு முன்னுக்கு நாங்க கவனமா இருக்கோணும் எண்டு.” என்றாள் யாமினி.

“ம்ம்..” என்று கேட்டுக்கொண்டவனின் விழிகள் மனைவியிடத்தில் யோசனையோடு படிந்தது.

அவள் கேள்வியாக ஏறிட, அவளைச் சுற்றிக் கையைப் போட்டு, “உனக்கு முதல் கல்யாணம் நடந்ததா யாமினி?” என்று கேட்டான் விக்ரம்.

ஒருகணம் அவன் கேட்ட கேள்வியே விளங்கவில்லை அவளுக்கு.

மெல்ல விளங்க ஆம் என்பதாகத் தலையசைத்தாள்.

“அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லன்.”

இதென்ன திடீரென்று? காரணம் விளங்காமல் குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள்.

அவ்வளவு நேரமும் இருந்த உல்லாசம் குறைந்திருக்க ஏதோ ஒரு தீவிரம்.. எதையோ அறிந்துகொள்ள முனைகிறவனின் ஆராய்ச்சியும் அவனிடத்தில் கலந்திருந்தது.

“முதலே சொல்லேல்ல எண்டு கோவமா?” கலக்கத்தோடு அவனை நோக்கிக் கேட்டாள்.

“இந்தப் பார்வதான் எனக்குக் கோபத்த வரவைக்குது. எதுக்குக் கலக்கம்? எனக்கு என்ர மகள் பற்றின உண்மை தெரியோணும். எனக்குத் தெரியாதது எண்டு என்ர மனுசிட்ட எதுவும் இருக்கக் கூடாது எண்டு மட்டும்தான் கேக்கிறன்” என்றான் விக்ரம், தெளிவாக அவள் விழிகளைப் பார்த்து.

அவளுக்கும் விளங்கியது. தன்னைப் பற்றியும் மகளைப் பற்றியும் அறிய நினைக்கிறான். அவ்வளவே! கலக்கமும் பயமும் நீங்க, “சந்தனா என்ர அண்ணாண்ட பிள்ள. அவே அடிபாட்டுல செத்திட்டீனம். அவே மட்டுமில்ல.. என்ர கழுத்தில தாலி கட்டினவரும்.” என்றாள் மெல்ல.

அதிர்வோடு மனைவியைப் பார்த்தான் விக்ரம்.

“அம்மா அப்பா ஆரம்ப அடிபாட்டுலேயே போய்ச் சேந்திட்டீனம். அண்ணி நிறைமாதம்.. அண்ணாவுக்கும் அண்ணிக்கும் என்ன தெரிஞ்சதோ தெரியாது அன்றைக்குத்தான் ஏற்கனவே பேசிவச்ச மாப்பிள்ளையாம் எண்டு ஒருத்தரக் காட்டி என்ர கழுத்துல தாலி கட்ட வச்சவே. இந்த நேரத்துல என்னத்துக்கு எண்டு நான் கேட்டும் விடேல்ல. எனக்குத் துணைக்கு எண்டு நினச்சீனமோ தெரியேல்ல.. அண்டைக்கே..” என்றவளின் கண்ணோரங்களில் இரண்டு நீர் மணித்துளிகள் உருண்டோட அணைத்துக்கொண்டான் விக்ரம்.

என்ன சொல்லி தேற்றுவான்? தேற்றும் வலிகளைத் தாண்டிய துயரல்லவா!

உனக்கு நானிருக்கிறேன் என்று காட்டுபவனாக அவளை அணைத்து, முதுகை இதமாக வருடிக்கொடுத்தான்.

அந்தத் தெம்பில் தொடர்ந்தாள் யாமினி. “சந்தனா வலி வந்தோ ஆபரேஷன் செய்தோ பிறந்த குழந்தை இல்லையப்பா. அண்ணிட வயித்த செல் கிழிச்சு பிறந்த குழந்தை. அண்ணாவும் அண்ணியும் கடைசியா சொன்ன வார்த்த ‘பிள்ள கவனம்’ எண்டதுதான். கொஞ்ச நேரத்திலேயே அவரும்.. அவரும் காயப்பட்டுப் போய்ட்டார்.” என்றவள், கணவனை நிமிர்ந்து பார்த்து, “உங்களுக்குத் தெரியுமா.. அந்த நேரமெல்லாம் எனக்கு அழுகை வரவே இல்ல!” என்றாள் வறண்ட சிரிப்போடு.

வாயடைத்துப்போய் விக்ரம் பார்க்க, “எதுக்கு எண்டு அழச் சொல்றீங்க? ஒண்டா ரெண்டா? அழுகையையும் தாண்டின விரக்தி. அம்மா அப்பா இல்ல, அண்ணா அண்ணி இல்ல.. இனி இவர்தான் எதிர்காலம் எண்டு நினைக்கக்கூட அவகாசமில்லாம அவரின்ர முகம் கூட எனக்கு நினைவுல இல்ல.. அவரும் போய்ட்டார். பிழைக்குமா பிழைக்காத எண்டு தெரியாத பிஞ்சு கைல. அவளுக்குப் போத்தில்பால் கூட எப்படிக் குடுக்கோணும் எண்டுகூட எனக்குத் தெரியாது. எப்படி எண்டே தெரியேல்ல ஊரோட ஒத்து ஓடி ஓடி ஒருமாதிரி நானும் அவளும் தப்பீட்டம்.” என்றவள் கணவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

என்னவோ அன்று அனுபவித்த அத்தனை துன்பங்களையும் துயரங்களையும் அவனின் ஒற்றைத் தோள் வாங்கிக் கொண்டது போலிருந்தது அவளுக்கு!

“எப்பவும் எனக்காகவே யோசிச்ச அண்ணா அண்ணியின்ர பிள்ள அநாதை எண்ட பெயர் வாங்கக் கூடாது எண்டுதான் என்ர மகளா வளத்தனான். அதால எனக்கு என்ன கெட்டபெயர் வந்தாலும் கவலையில்லை. அவளுக்கு நான்தான் அம்மா!”

அப்படியே அமர்ந்துவிட்டான் விக்ரம்! ஏதோ இருக்கிறது என்று நினைத்தான்தான் என்றாலும் இப்படி எதிர்பார்க்கவில்லை.

அதைவிட ஒரு பெண்ணின் வைராக்கியம், அவளின் தாய்மை, சுயநலமில்லா பாசம்.. அத்தனையும் அவன் வாயை அடைத்துப்போட்டது!

அவர்கள் இருவருக்குள்ளும் நேசம் அரும்பிய பின்னரும் அவள் விலகி விலகிப் போனபோது, முதல் திருமண வாழ்வின் நினைவுகளிலிருந்து அவள் இன்னும் வெளியே வரவில்லை என்று எண்ணியவனை அவளின் வெட்கங்கள், கூச்சங்கள் அவ்வப்போது வந்து கேள்வி எழுப்பியதுதான். பெண்ணின் குணங்கள் எந்த நிலையிலும் ஒன்றுதானே என்றெண்ணி அதனைப் பெரிது படுத்தவில்லை அவன்!

ஆனால், முதல்நாள் அவள் சொன்ன ‘தம்பிக்காகக் காத்திருந்தேன்’ என்பது, அவள் திருமணமானவளா என்கிற சந்தேகத்தை உருவாக்கியதே தவிர, சந்தனாவின் தாய் இவள் தானா என்கிற எண்ணமே அவனுக்கு வரவில்லை! யாமினியை போன்ற ஒருத்திக்குத் திருமணமாகாமல் சந்தனா வர வாய்ப்பில்லை என்றாலும் கூடவே அவனுக்கு அப்படியொரு எண்ணம் வரவேயில்லை.

அந்தளவுக்குப் பெற்ற தாயாகத்தானே அவளைப் பேணினாள் யாமினி.

அதனால்தான் உன் இறந்தகாலம் எனக்குத் தேவையில்லை என்று அன்று சொன்னதையும் மீறிக் கேட்டான்.

உண்மை தெரிந்துவிட்ட இந்த நிமிடமோ, இரண்டு பிள்ளைகளையும் தான் சுமந்து பெறாத போதிலும், பெற்றவளைக் காட்டிலும் பாசம் வைத்து தாயாகவே மாறிவிட்டவளின் தூய்மையான அன்பின் முன்னே பிரமித்துப் போனான்!

அதுவரை நேரமும் தன் இறந்தகால நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தவள், பிறகுதான் உணர்ந்தாள் அவனும் அமைதியாகவே இருக்கிறான் என்பதை.

வேகமாக நிமிர்ந்து, “என்னப்பா? சந்தனா.. அவள்..” என்று அவள் தடுமாறும் போதே..

அதற்குமேல் கதைக்கவிடாமல், “இத்தனை நாள்ல என்னப்பற்றி நீ கொஞ்சமாவது விளங்கி வச்சிருப்பாய் எண்டு நம்புறன். அத பொய்யாக்கிப் போடாத.” என்றான் விக்ரம் வேகமாக.

அவள் மீண்டும் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். “நீங்க இப்படி மௌனமா இருந்தா எனக்குப் பயமா இருக்காதா?”

“அதுக்குக் கண்டதையும் யோசிப்பியா நீ? என்ன மாதிரியே கல்யாணமான ஒருத்தி.. அதுவும் குழந்தை இருக்கிறவள் தான் வேணுமெண்டு நினைச்சன். இப்ப பாத்தா இப்படி..” என்று அவன் சொல்ல,

“அதுக்கு என்ன?” என்றாள் யாமினி விளங்காமல்.

“நான் ஏற்கனவே வாழ்ந்தவன் யாமினி. ஆனா நீ..” என்று அவன் சொல்லி முடிக்க முதலே,

“எனக்கு அதுல ஒண்டும் வித்தியாசம் தெரியேல்ல..” என்று அவசரமாகச் சொல்லிவிட்டாள் அவள்.

“ஓ…!!!” என்று இழுத்தவனின் விழிகளில் விசமம் குடிகொண்டது.

“அப்ப.. ஒரு வித்தியாசமும் தெரியேல்ல..” என்றான் விக்ரம் அடக்கப்பட்ட நகைப்புடன்.

கடவுளே….! எப்ப பாத்தாலும் இவரிட்ட வாயக்குடுத்து மாட்டுறதே என்ர வேலையாய் போச்சு!

“நான் ஒன்றுமே சொல்லேல்ல!” என்றபடி அவன் மார்புக்குள் ஒளிந்துகொண்டாள் யாமினி!!

பொங்கிய சிரிப்போடு நினைவெங்கும் நீங்காமல் நிறைந்துபோனவளை தன் மார்புக்குள் நிறைத்துக்கொண்டான் விக்ரம்!!

முற்றும்!!
 

Goms

Active member
கடைசியில் யாமினிக்கு இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கல.

கதை ஆரம்பத்தில் ஒரு தாய் அன்பு பொய்த்து விட்ட குறை, கதை முடிவில் உண்மையான தாய் அன்புக்கு ஈடு இணை இல்லை, வேறுபாடும் இல்லை அப்படின்னு நிரூபிச்சிட்டீங்க நிதாமா.

விக்ரம், யாமினி இடையே ஆரம்பித்த அன்பு எப்படி அழகிய காதலில் முடிந்தது என்று சொன்ன விதம் அருமை 🥰 🥰 🥰
 
Top Bottom