You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 18


யாழ் பல்கலையின் விவசாயப் பீடம், கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்திருந்தது. நிரல்யா அங்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடியிருந்தன. இந்தமுறை சுந்தரலிங்கம் எங்கும் தங்கிப் படிப்பதற்கு அனுமதிக்கவில்லை. இங்கிருந்து தினமும் அவளை அழைத்துச் சென்று, திருப்பிக் கூட்டிக்கொண்டு வருவதற்கு என்றே பிரத்தியேகமாக ஒருவர் காருடன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அது இலகுவே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரப் பயணம். தினமும் போய் வருவதற்கு மட்டும் மூன்று மணி நேரங்களைச் செலவழிக்கவேண்டியிருந்தது. ஆனாலும் பரவாயில்லை என்றுவிட்டார் சுந்தரலிங்கம்.

ஆரம்பத்தில் அந்த வேலையை அனந்தன்தான் பார்த்தான். அவனுக்கு இங்கே கடையையும் வட்டித் தொழிலையும் பார்த்து, அவளோடும் தினமும் அலைவது மிகுந்த சிரமம் என்பதில் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்.

இன்று வாகன ஓட்டி விடுமுறை எடுத்திருந்ததால் அனந்தன்தான் அவளை அழைத்துச் செல்வான். சரியான நேரத்துக்குத் தயாராகி அவள் கீழே வந்தபோது, அங்கே அனந்தன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

இப்படி உண்ணும் வேளைகளில் மட்டுமே அந்த வீட்டிற்குள் அவனைக் காண முடியும். மற்றும்படி அவசியம் தவிர்த்து விறாந்தைக்குக் கூட வரமாட்டான். பெரும்பான்மை அவர்களின் கடை மற்றும் வட்டித் தொழில் சம்மந்தமான பேச்சுகள் என்பதால் முற்றத்தில் நின்று, பெண்கள் இருவரினதும் காதுகளை எட்டாத வகையில் சுந்தரலிங்கத்தோடு கதைத்துவிட்டு, வீட்டின் பின் பக்கமாக மேலே ஏறிவிட்டான் என்றால் அந்த வீட்டுக்கும் அவனுக்குமான தொடர்பு அறுந்துவிடும்.

அவளும் வந்து அமர, சம்பலோடு சேர்த்து இடியப்பமும் சொதியும் பரிமாறினார் அமிர்தவல்லி. அவளும் உண்பதில் கவனம் செலுத்தினாள்.

“இண்டைக்கு கம்பஸ் எத்தினைக்கு முடியும் பிள்ளை?” என்ற அமிர்தவல்லியின் கேள்விக்கு, “மூண்டு மணியாகும் அம்மா.” என்று பதில் சொன்னாள் நிரல்யா.

“உனக்கு ஓகேயாப்பு?”

“அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல மாமி.”

அவ்வளவுதான் அந்த மூவரும் பேசிக்கொண்டவை. அவள் இங்கேயே வந்துவிட்டதில் பெரியவர்களுக்கு நிம்மதிதான் என்றாலும் அந்த வீட்டின் பழைய சந்தோசம் காணாமலேயே போயிற்று.

முன்னர் எல்லாம் உணவு வேளைகளில் அனந்தன்தான் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுவிட்டுப் போவான். இப்போது அவளும்.

அந்தளவில் ஒரு இறுக்கம் அந்த வீட்டிற்குள் படர்ந்தே கிடந்தது. யாரும் இயல்பாய் இல்லை. இயல்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டனர்.

உண்மையிலேயே அவனை மறந்துவிட்டாளா, இல்லை அவர்கள் அறியாமல் இன்னும் அந்தத் தொடர்பு இருக்கிறதா என்கிற கேள்விகள் அவர்கள் மனத்தில் அரித்துக்கொண்டே இருந்தன. அவளைப் பழையபடி நம்பப் பயந்தனர்.

உடைந்த பாத்திரத்தை எப்படி ஒட்டினாலும் அடையாளம் தெரியும் என்பதுபோல், என்னதான் அனைத்தையும் தம் கட்டுக்குள் கொண்டு வந்தாயிற்று என்று எண்ணினாலும் ஒரு பயம் இல்லாமல் இல்லை. அவள் மீதான கண்காணிப்புத் தொடர்ந்துகொண்டே இருந்தது. அதுவே அவளை அங்குப் பழையபடி இருக்கவிடாமல் செய்ததென்றால் மற்றவர்களால் அவளோடு எப்போதுபோல இருக்க முடியாமல் போயிற்று.

அவளின் வயதிற்குக் கண்ணனுக்குக் குளிர்ச்சியாக ஒருவனைப் பக்கத்தில் பார்த்ததும் மனத்தை அலைபாய விட்டுவிட்டாள். இப்படித் தள்ளி வந்துவிட்டால் கண்ணில் படாதது கருத்திலும் பதியாமல் போய்விடும் என்றுமட்டும் நம்பினர்.

ஆனாலும் கூட அவள் படிப்பு எப்போது முடியும், எப்போது அனந்தனுக்குக் கட்டி வைக்கலாம் என்று காத்துக்கொண்டு இருந்தார் சுந்தரலிங்கம்.

இப்போதெல்லாம் அவள் தொடர்பான எந்த முடிவுகளும் அவளிடம் இல்லை. சுந்தரலிங்கம் எடுக்க அதை அனந்தன் நடைமுறைப்படுத்தினான். அவர்கள் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளையாகிப்போனாள் நிரல்யா.

வெளியே செல்வது, பழைய நண்பர்களைச் சந்திக்க நினைப்பது, தேவையான பொருட்கள் வாங்க கடைகளுக்குப் போவதெல்லாம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தன. என்ன என்றாலும் அமிர்தவல்லி அல்லது அனந்தன் உடனிருப்பார்கள்.

உணவு முடிந்ததும் புறப்பட்டனர். இன்னும் அதே சிவப்பு நிற பஜிரோ. யன்னல்களைத் திறந்துவிட்டிருந்தான். அவன் வீதியில் கவனமாய் இருக்க, அவள் நகரும் தெருவோரத்தில் பார்வையைப் பதித்திருந்தாள்.

வெயில் முற்றிலும் வந்துவிடாத காலை நேரத்துக் காற்று மனத்துக்கு இதமாய் வீசினாலும் சிசிரவின் நினைவுகள் வந்து அவள் இதயத்தைக் கனமாக்கின.

இந்த மூன்று மாதங்களில் இன்னும் ஒரு தடவை கூட இருவரும் பார்க்கவோ, பேசவோ இல்லை. புதுக் கைப்பேசி, மடிக்கணனி எல்லாம் இங்கே பல்கலையில் சேர்ந்ததும் சுந்தரலிங்கம் வாங்கிக் கொடுத்திருந்தார். ஆனாலும் கூட அவள் அவனோடு கதைக்க, ஏன் குறுந்தகவல் அனுப்பக் கூடப் போகவில்லை. காரணம் அருகில் இருக்கிறவன்.

அன்று, பேராதனை பல்கலையில் சிசிரவிடம் கண்ணீரோடு விடைபெற்று வெளியே வந்தவளை நண்பர் நண்பிகள் சூழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட ஆயத்தமானவளைத் தனியாகச் சந்தித்திருந்தான் மகிந்த.

அருகில் இருக்கிறவன் காலி வரைக்கும் சென்று, அவர்களின் தேநீர்க் கடையை அடித்து நொறுக்கியிருக்கிறான் என்று அவன் மூலம் அறிந்ததும் விக்கித்துப்போனாள். நம்பவே முடியவில்லை. நடந்த விடயத்தில் சரி சமமான பங்கு அவளுக்கும் உண்டு. அப்படியிருக்க அவனை அடித்து, பல்கலையில் வைத்து அவமானப்படுத்தியது போதாது என்று எளிய மனிதர்களின் வாழ்வாதாரத்தில் கையை வைத்திருக்கிறார்கள் என்றால் என்ன மனிதர்கள் இவர்கள் என்று கொதித்துப்போனாள்,

இதில், “இத நீ அவனிட்டப் போய்க் கேக்காத. உனக்குத் தெரிய வேண்டாம் எண்டுதான் சொன்னவன். அப்பிடி இருந்தும் நான் சொல்லுறதுக்குக் காரணம், கடையத் திரும்பப் போடுறதுக்கு அவன்ர பைக்கை வித்திட்டான். இப்ப வெளிநாட்டுக்குப் போற செலவுக்கு இருக்கிற காணிய விக்கப் போறானாம். அது அவன்ர அம்மம்மா அவன்ர அம்மாக்குக் குடுத்தது. அது ஒண்டுதான் அவேக்குச் சொந்தம் எண்டு இருக்கிறதும். அத வித்துப்போட்டு இவன் வெளிநாட்டுக்குப் போயிடுவான். அவன்ர அம்மாவும் அப்பாவும் ஒரு பொம்பிளைப் பிள்ளையோட எங்க போய் இருப்பினம் சொல்லு?” என்று மகிந்த கேட்டபோது அவளிடம் பதில் இல்லை.

மளுக்கென்று நிறைந்து வழிந்துவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டு, திரும்ப திரும்பக் கலங்கிய விழிகளைச் சிமிட்டித் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றாள்.

எல்லாம் அவளால்தானே. அவள் மீது அவன் கொண்ட நேசத்தினால் உண்டானது. நீயும் வேண்டாம் உன் குடும்பத்தினால் உண்டான அவமானமும் வேண்டாம் எண்றுவிட்டுப் போக அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? அப்படி இல்லாமல் அவள் வேண்டும் என்பதற்காகத் தன் குடும்பத்தையும் சேர்த்து வருத்த நினைக்கும் அவனுக்கு என்ன செய்யப் போகிறாள் அவனுடைய நிரா?

அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் சொல்லியே ஆகவேண்டியது என்பதில் தொடர்ந்து சொன்னான் மகிந்த. அதற்கு முதல் அவன் சரண்யாவைப் பார்க்க, அவள் இவளுக்கு அருந்தத் தண்ணீர் கொடுத்தாள்.

நிரல்யா தண்ணீரை அருந்திக் கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும், “பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு இருக்கிறதையும் கைய விடுற கதையாப் போகப்போகுது எண்டு பயமா இருக்கு நிரல்யா. எவ்வளவு சொன்னாலும் கேக்கிறான் இல்ல. போயே தீருவன் எண்டு நிக்கிறான். அங்க போன பிறகும் சிலவுக்கு இவன் என்ன செய்வான்? வேலை பாத்துக்கொண்டே படிக்கிறது எல்லாம் ஈஸி இல்ல. அப்பிடி வேலை செய்து உழைக்கிற காசு காணுமா எண்டும் தெரியாது. இங்க காணிய வித்துப்போட்டு வாடகை வீட்டுக்குப் போனா வாடகையும் கட்டி, அந்தக் குடும்பம் வாழுற அளவுக்கான வருமானம் தேத்தண்ணிக் கடையில இருந்து வருமா எண்டும் தெரியாது. அவன்ர தங்கச்சி இப்பதான் ஸ்கூல் முடிச்சிருக்கிறாள். இனி அவளின்ர படிப்புக்கும் சிலவு இருக்கு. என்னைக் கேட்டா குடும்பத்தையும் பாத்துக்கொண்டு அவன் இங்க படிக்கிறதுதான் நல்லம் எண்டு சொல்லுவன். அவன்ர அம்மா அப்பா பாவம். உலகம் தெரியாத, ஊரோடயே வாழ்ந்த மனுசர். இவன் சொல்லுறதக் கண்ணை மூடிக்கொண்டு செய்வினம். நீ ஒருக்கா அவனோட கதைக்கிறியா? என்ன சொன்னாலும் கேக்காம தன்ர முடிவிலையே நிக்கிறான்.” என்று சொன்னான்.

அவளுக்கு எதையும் யோசிக்க முடியவில்லை. அவன் சொல்ல சொல்ல மூளை எல்லாம் விறைத்த நிலை. இன்னுமே தன் வீட்டினரின் ஈவிரக்கமற்ற செய்கையை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் நின்றாள். நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று விளங்கவே இல்லை. கூடவே, சொந்தமாய் இருக்கிற ஒற்றைக் காணியை விற்று, தன் குடும்பத்தைப் பெரும் சிரமத்தில் தவிக்க விட்டு என்றாலும் வெளிநாடு போகும் அளவுக்கு அவன் மனநிலை இருந்த போதிலும் அந்தக் கோபத்தைத் தன்னிடம் காட்டாதவனின் அன்பு அவள் விழிகளை மீண்டும் பனிக்க வைத்தது. அதுதான் அவள் அவ்வளவு கெஞ்சியும் போயே தீருவேன் என்று நின்றிருக்கிறான்.

வசதிதான் இல்லை. அதற்கென்று முதுகெலும்பும் இல்லையா என்ன? இல்லை, அவன் சாப்பிடும் சோற்றில் உப்புத்தான் இல்லையா? இப்போது அவளுக்கும் அவன் வெளிநாடு போவதுதான் சரி என்று பட்டது. ஆனால் எப்படி?

“சீனியர், எனக்குத் தெரியும் எண்டு நீங்களும் அவருக்குச் சொல்ல வேண்டாம். ஆனா…” என்றவளுக்கு இதற்கு என்ன செய்வது என்று அவசரத்துக்குப் பிடிபட மாட்டேன் என்றது. ஆனால், ஏதாவது செய்தேயாக வேண்டும் என்கிற வைராக்கியம் நெஞ்சில் உண்டாயிற்று.

அதில், “என்ன செய்றது எண்டு இந்த நிமிசம் எனக்கும் தெரியேல்ல சீனியர். ஆனா ஏதாவது செய்வன். அவரைக் காணிய விக்க விடாதீங்க.” என்றவள் அவன் கைப்பேசி எண்ணை எழுதி வாங்கி, மறைத்து வைத்துக்கொண்டாள்.

“அங்க கம்பஸ்ல சேர்ந்ததும் என்னோட படிக்கிற யாராவது ஒருத்தின்ர நம்பர்ல இருந்து உங்களோட கதைக்கிறன். அவருக்கு எவ்வளவு தேவை, எப்ப தேவை எண்டு சொல்லுங்க. அதுக்கு நான் ஏற்பாடு செய்றன். மற்றது அந்தக் காச நீங்கதான் அங்க வந்து வாங்கவேண்டி வரும். சீனியர் நீங்க எனக்கு அண்ணா மாதிரி. இந்த உதவியக் கட்டாயம் செய்வீங்களா? அவர் பாவம்.” என்று கண்கள் கலங்கிவிடவும் அவனுக்கும் நெஞ்சுக்குள் என்னவோ அடைக்கும் உணர்வு.

அவர்கள் இருவரையும் அவனும்தானே பார்த்துக்கொண்டு இருக்கிறான். அதில், “கட்டாயம்! உங்க ரெண்டு பேருக்காகவும் நிச்சயமாச் செய்வன். இப்ப மட்டும் இல்ல, எப்ப என்ன உதவி எண்டாலும் எனக்குச் சொல்ல மறக்காத. நான் இருக்கிறன் உங்களுக்கு. உன்ர பிரெண்டும் இருப்பாளா எண்டு கேள்.” என்றான் பக்கத்தில் மெலிதாகக் கலங்கிவிட்ட விழிகளோடு நின்றிருந்த சரண்யாவைப் பார்வையால் காட்டி.

“நான் எப்பவும் இருப்பன்.” என்றாள் அவள் அவனை நேராகப் பார்த்து.

“பிறகு என்ன, நீயும் உன்ர நம்பரை தா. ஏதும் அவசரம் எண்டால் கதைக்க உதவும்.” என்று அவள் கைப்பேசி எண்ணையும் வாங்கிக்கொண்டான் மகிந்த.

அதன் பிறகு அவளின் நண்பர்கள் ஜீப் வரையிலும் கூட வந்து, எதிர்காலத்துக்காய் வாழ்த்தி, கண்ணீரும் அணைப்புமாகவே அவளுக்கு விடைகொடுத்திருந்தனர்.

அந்தக் கண்ணீர் அவளை அனந்தனின் சந்தேகப் பார்வையிலிருந்து காப்பாற்றியிருந்தது. அல்லது, அவளின் அழுத முகத்தை மட்டுமே காரணமாக வைத்து எதையும் கேட்கவிடாமல் செய்தது என்றும் சொல்லலாம். அவளும் தப்பித்துக்கொண்டாள். ஆனால், அவன் மீதான வெறுப்பொன்று அவள் மனத்தில் படிந்து போயிற்று.

வீட்டுக்கு வந்த பிறகு சிசிரவைச் சந்தித்துப் பேசியதை, சத்தியத்தை மீறியதைச் சொல்லிவிடுவானோ என்று அவள் பயந்ததற்கு மாறாக, வாயைத் திறக்காமல் இருந்து அவளைக் காப்பாற்றியிருந்தான் அனந்தன்.

இப்படி ஏன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி நடக்கிறான் என்று புரியவே இல்லை.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
நாள்கள் ஓடிக்கொண்டே இருந்தன. இந்த மூன்று மாதங்களில் உயிர் தோழியாக மாறிவிட்ட, கிளிநொச்சியிலேயே வசிக்கும் நிவேதாவின் கைப்பேசியின் மூலம் அவசியம் என்றால் மட்டும் சரண்யாவுக்கும் மகிந்தவுக்கு மெயில் மட்டுமே அனுப்பினாள். ஒரேயொரு முறை அவள் குரலைக் கேட்க வேண்டும் என்று சிசிர சரண்யா மூலம் செய்தி அனுப்பியும் அசையவில்லை. எப்படி, எங்கிருந்து, யாரை, ஏதன் மூலம் அனந்தன் கண்காணிப்பானோ என்கிற பயம் அவளை அவ்வளவு கவனமாக இருக்க வைத்தது.

அப்படி அவன் குரலைக் கேளாமல், அவனைப் பாராமல் இருப்பது இலகுவாய் இல்லைதான். பகல்கள் ஒருவிதப் பரிதவிப்பிலும் இரவுகள் மௌனக் கண்ணீரிலும் கரைந்தாலும் காலி வரைக்கும் சென்று அவர்கள் கடையையே உடைத்துவிட்டு வந்தவன், இவள் கதைப்பதை அறிந்தால் என்னவும் செய்வான், அதில் சிசிரவின் வெளிநாட்டுப் பயணத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்குவதும் அடங்கும் என்பதில் இன்னும் கவனமாய் இருந்தாள்.

இப்படி இருக்கையில் ஒருநாள் சிசிரவின் பயணம் சரி வருவதற்கு எவ்வளவு பணம் வங்கியில் போட்டுக் காட்ட வேண்டும் என்று செய்தி அனுப்பி இருந்தான் மகிந்த.

பெரும் தொகைதான். “உன்னால் முடியுமா? அல்லது சிசிரவிடம் உண்மையைச் சொல்லவா?” என்றும் கேட்டிருந்தான்.

தற்போது வரையிலும் பணம் மாறித் தருவது தான்தான் என்றும், அதற்குப் பதிலாகக் காணியின் உறுதிப் பாத்திரத்தை அடமானத்துக்குத் தரவேண்டியிருக்கும் என்றும் சிசிரவிடம் சொல்லிச் சமாளித்திருந்தான் மகிந்த.

என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு மகிந்தவைக் கிளிநொச்சிக்கு வரச் சொன்னாள் நிரல்யா. அப்போதும் அவனை நேரில் சந்திக்க முயலவில்லை அவள். பெரும் பயத்தில் நெஞ்சே உலர்ந்து போனபோதும் கூட, தேவைப்படும் என்று தோன்றிய நகைகளை எடுத்து ஒரு பையில் போட்டு, கவனமாக எடுத்து வந்தவள் அதை நிவேதாவிடம் கொடுப்பித்து, அவள் மூலம் அவனிடம் சேர்ப்பித்திருந்தாள்.

பார்த்தவன் பயந்து போனான். இந்த வேலையே வேண்டாம், இது ஆபத்து என்று அவன் சொன்னதை அவள் காதிலேயே வாங்கவில்லை.

“சீனியர், இது இருக்கா இல்லையா எண்டு தேடுறதுக்குக் கூட என்ர வீட்டில ஆக்கள் இல்ல. அதைவிட இது எனக்குச் சொந்தமான நகைதான். இன்னும் சொல்லப்போனா அவருக்குச் சேருறதில ஒரு நியாயமும் இருக்கு. என்ர வீட்டு ஆட்கள்தான் அவேன்ர கடைய உடைச்சு, வாழ வழியில்லாமச் செய்தவே. அதால அவேன்ர காசில இருந்து குடுக்கிறது பிழையே இல்ல. ப்ளீஸ், இதை இப்பிடியே குடுத்திடாதீங்க. வித்துக் காசாக்கிக் குடுங்க. அவர் நல்லா வரவேணும். அத நானும் நீங்களும் பாக்கோணும் சீனியர்.” என்று குரல் கரகரக்க அவள் சொன்னபோது அவனால் மறுக்க முடியாமல் போயிற்று.

அதன் பிறகும் கூட எப்படி இருக்கிறான், என்ன செய்கிறான் என்று எதுவும் தெரியாது. பயணம் சரி வந்துவிட்டதாம், அவன் புறப்படப் போகிறானாம் என்று சரண்யா சொன்னபோதும் யாருமறியாமல், இரவில் தலையணையில் முகம் புதைத்துக் கண்ணீர் உகுத்தாளே தவிர்த்து அவனோடு கதைக்கவே இல்லை.

அவ்வளவு பயம். இந்த நாட்டிலிருந்து அவன் வெளியேறும் வரையில் தன் வீட்டினரால் எந்த நிமிடத்திலும் அவனை எதுவும் செய்ய முடியும் என்பதால் அவனைப் பார்க்க, அவன் குரலைக் கேட்க, எப்படி இருக்கிறான் என்று அவன் வாயிலாகவே அறிய நெஞ்சு முழுக்க ஆசை இருந்தாலும் அடக்கிக்கொண்டாள்.

“அவர் லண்டனுக்குப் போனபிறகு கதைக்கலாமாம் எண்டு சொல்லிவிடுங்க அண்ணா. எந்தக் காரணத்தைக் கொண்டும் அவரின்ர பயணம் நிண்டுடக் கூடாது எண்டும் சொல்லிவிடுங்க.” என்று மஹிந்தவிடம் சொல்லியிருந்தாள்.

அவள் சொன்னதன் படி அவள் குரலைக் கேளாமல், அவளோடு கதைக்காமல் புறப்பட்ட அவளின் சிசிர, போவதற்கு முதல், “நிரா, மகே லஸ்ஸன! அண்டன்ன எபா!(அழ வேண்டாம்.) ஐ மிஸ் யூ, ஐ மிஸ் யூ, ஐ மிஸ் யூ, ஐ மிஸ் யூ சோ மச்! கவனமா இரு. எங்க இருந்தாலும் உன்ர சிசிர உனக்காக இருக்கிறான். எங்க போனாலும் உன்னட்ட வருவான். எனக்காக வெய்ட் பண்ணுவாய் தானே நிரா?” என்று கரகரத்து உடைந்த குரலில் ஒரு வொயிஸ் மெசேஜ் நிவேதாவின் நம்பருக்கு அனுப்பியிருந்தான்.

அழுகையில் துடித்த இதழ்களை அழுத்தி மூடிக்கொண்டு, துடைக்க துடைக்கப் பெருகும் கண்ணீரைத் துடைத்தபடி, அவன் குரலையே திரும்ப திரும்பக் கேட்டபடி பல்கலையின் ஒரு மரத்தின் கீழே தரையில் அமர்ந்திருந்தாள் அவன் நிரா!

தொடரும்…

கருத்திடும் எல்லோருக்கும் நன்றி. இந்த அத்தியாயம் எப்பிடி இருக்கு என்று சொல்லுங்க.

 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 19


பல்கலை வளாகத்தில் ஒரு கரையாக இருந்த மரத்தின் கீழிருந்த வாங்கிலில்(பெஞ்ச்) லாப்டாப் திறந்து வைக்கப்பட்டிருக்க, மண் தரையில் சப்பாணி(சம்மணம்) கட்டி அமர்ந்திருந்த நிரல்யா, வாங்கிலில் முழங்கையை ஊன்றி, தலையைக் கையில் தாங்கி இருந்தாள். பார்வை திறந்திருந்த மடிக்கணணியிலேயே இருந்தது. அவள் கை கால்களில் எல்லாம் ஒரு நடுக்கம். விழிகள் இப்போதே கலங்காவா என்று கேட்டுக்கொண்டே இருந்தன. உணர்வுகள் பெரும் அலையாகப் பொங்கிக்கொண்டிருந்தன.

காரணம் அவளின் சிசிர. அவன் இலண்டன் சென்று சேர்ந்து இரண்டு நாள்களாயிற்று. இன்று நேரத்தையும் சொல்லி, அவளுக்கு அழைப்பதாக நிவேதாவின் கைப்பேசிக்குச் செய்தி அனுப்பியிருந்தான்.

தெமலத என்று கேட்டுக்கொண்டு ஓடிவந்து, அவள் குடைக்குள் புகுந்து, என்னவோ குடைக்கே அவன்தான் சொந்தக்காரன் போன்று அவளோடு நடந்து, அவளைச் சீண்டிச் சிரிக்க வைத்து, நெஞ்சில் நேசத்தை விதைத்து, பாடல் மூலம் மனத்தைச் சொல்லி, கடைசியாய் அவள் இதழ்களில் மூழ்கித் தன் கட்டுப்பாட்டை இழந்து, தடுமாறிச் சமாளித்துக்கொண்டவன் பக்கத்தில் இல்லாமல் கடல் கடந்து போய்விட்டான் என்பதை அவளால் சில நேரங்களில் நம்பவே முடிவதில்லை. இதோ இன்றும் அப்படி ஒரு மனநிலையில்தான் அவன் அழைப்புக்காய்க் காத்திருக்கிறாள்.

அவளை நிறைய நேரம் காத்திருக்க விடாமல் அவனும் அழைத்தான். வேகமாக அழைப்பை ஏற்றவள் நொடியில் உணர்வுகளின் பிழம்பாகிப்போனாள். மளுக்கென்று விழிகள் நிறைந்து போயின. கண்ணீர்த் திரையின் பின்னே கலங்களாய்த் தெரிந்தான் சிசிர.

பேச எதுவுமே இல்லாத நாள்களில் தினமும் சந்தித்து ஏராளமாய்ப் பேசினார்கள். இன்று ஓராயிரம் விடயங்கள் நெஞ்சில் முட்டி மோதின. பகிர, சொல்ல, கேட்க என்று நிறைய இருந்தன. ஆனால், வார்த்தைகளுக்கு முதல் கண்ணீரே முந்திக்கொண்டது. சில நொடிகளுக்கு இருவராலும் பேசவே முடியவில்லை.

“நிரா, மகே லஸ்ஸன கெல்ல. கொஹொமத ஒயா? சனீப்பென்த? (எப்பிடி இருக்கிறாய், சுகமா இருக்கிறியா?)” உடைந்து கரகரத்த குரலில் ஆவலாய் வினவினான் சிசிர.

அவளுக்கு அவன் குரலைக் கேட்டதற்கும் கண்ணீர்தான் பெருகி வழிந்தது. வேகமாகத் துடைத்துக்கொண்டு ஆம் என்பதுபோல் தலையசைத்தாள்.

“அண்டன்ன எபா நிரா. மோனவஹரி கதாக்கறன்ன அநே. கொச்சர கள் த ஒயாகே கட ஹண்ட அஹளா? (ஏதாவது கதை ப்ளீஸ். எத்தின நாளாயிற்றுது உன்ர குரலைக் கேட்டு?)” அவனால் அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. அவளை அள்ளியணைத்து, தன் கைகளுக்குள் வைத்து ஆறுதல் சொல்ல ஆசைப்பட்டான். முடியாமல் போனதில் அவன் உள்ளமும் பரிதவித்துப் போயிற்று.

“நல்லாருக்கிறன். நீங்க?” அவள் குரல் நடுங்கிற்று. கையெட்டும் தூரத்தில், தோள் சாயும் நெருக்கத்தில் இருந்தவன் இன்று கடல் கடந்து நிற்கிறான். அந்த நிதர்சனத்தை உள்வாங்கி, இனி இதுதான் அடுத்த சில வருடங்களுக்கு நிரந்தரம் என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் அவள் குட்டி இதயம் கண்ணீர் விட்டு அழுதது.

“ம் இருக்கிறன். எல்லாமே புதுசா இருக்கு. போக போகப் பழகிடும் எண்டு நினைக்கிறன்.” சின்ன சிரிப்புடன் சொன்னான் அவன்.

“ஊர் ஓகேயா?”

“ஊருக்கு என்ன? அதெல்லாம் நல்லாருக்கு. உனக்கு எப்பிடிப் போகுது கம்பஸ், படிப்பு எல்லாம்? அங்க மாதிரி இங்கயும் எல்லாம் ஓகே ஆயிற்றுதா?” அவர்கள் இதயங்கள் பேசிக்கொண்ட உணர்வுகள் வேறு. கண்கள் பரிமாறிக்கொண்ட செய்திகளும் வேறு. ஆனால் உதடுகள் என்னென்னவோ பேசின.

“முதல் உண்மையாவே ஏலாம இருந்தது. இங்க பிடிக்கவே இல்ல. இங்க கிளாஸ்ல இருந்தாலும் அங்க எங்கட வகுப்பு, பிரென்ட்ஸ், நாங்க செய்த சேட்டைகள் எண்டு பேராதனை நினைவுதான். ஆனா இப்ப பழகிட்டுது. என்ன, ஒவ்வொரு நாளும் மூண்டு மணி நேரம் கார்லையே போகுது.” என்று சொன்னாள்.

“எல்லாம் என்னால என்ன?” என்றான் அவன் வருத்தத்தோடு.

“அப்பிடிப் பாத்தா சொந்த நாடு, வீடு, அம்மா அப்பா எண்டு எல்லாரையும் விட்டுட்டு நீங்க அங்க போய் இருக்கிறது என்னால எண்டு நானும் சொல்லலாம்.” கண்களில் வந்து அமர்ந்துகொண்டு சின்ன முறைப்புடன் சொன்னாள்.

“அதுக்காக நீ செய்தது பெரிய விசயம் நிரா. உன்ர வீட்டுக்குத் தெரிய வந்திருந்தா என்ன ஆகியிருக்கும் சொல்லு? காணிப் பத்திரம் வாங்கினது எல்லாம் சும்மாவாம், அந்தக் காச நீதான் தந்தியாம் எண்டு மகிந்த நான் இங்க வந்த பிறகுதான் சொல்லுறான். எனக்கு என்ன செய்றது எண்டே தெரியேல்ல. திகைச்சுப் போனன். அதைச் செய்ய முதல் என்னட்ட ஒரு வார்த்த கேட்டிருக்கலாம். வேண்டாம் எண்டு சொல்லியிருப்பன்.”

“அப்பிடித்தான் கேக்கமாட்டன். ஏன் கேக்கோணும்? நீங்களும் உங்களுக்கு நடந்ததை எல்லாம் என்னட்டச் சொல்லேல்ல தானே?” அவளின் சிறுபிள்ளைக் கோபத்தில் அவன் சிரித்தான். கூடவே பழைய நிராவைப் பார்ப்பது போலிருந்ததில் மனத்தில் மெல்லிய இதம் படர்ந்தது.

“அது உன்னை இன்னும் கவலைப்பட வைக்க வேண்டாம் எண்டு மறைச்சது. அதுவும் இதுவும் ஒண்டா?”

“எல்லாம் ஒண்டுதான்.” கண்கள் அவன் சிரிப்பை அப்படியே சேமிக்கச் சொன்னாள்.

“இல்ல நிரா. நீ செய்தது பெரிய பிழை. அது பிடிபட்டா நடக்கிற பிரச்சினை ஒரு பக்கம் எண்டால், உன்ர அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கவலைப்பட்டிருப்பினம் சொல்லு? எங்கட மகளா இப்பிடி எண்டு துடிச்சுப் போயிருப்பினம்.” என்றதும் கரகரவென்று கண்ணீர் வழிந்தது அவளுக்கு.

சத்தியத்தை மீறி, நகையை எடுத்து என்று ஒரு மகளாக அவள் அவர்களுக்குச் செய்தது, செய்துகொண்டிருப்பது மன்னிக்கவே முடியாத தவறு என்று அவளுக்கும் தெரியாமல் இல்லையே. ஆனால், நெஞ்சில் நிறைந்திருக்கும் நேசத்தின் முன்னே வேறு யோசிக்கவும் முடியவில்லை.

மீண்டும் அழுகிறவளைப் பார்க்க அவனுக்கு மனம் தவித்துப் போயிற்று. கிட்டத்தட்ட ஆறுமாதங்களின் பிறகு பார்க்கிறான். கடைசியாகப் பார்த்தபோதும் அழுதாள். இப்போதும்.

“ப்ளீஸ்மா அழாத. நீ குடுத்த நகையெல்லாம் எதுக்கும் இருக்கட்டும் எண்டு மகிந்த ஃபோட்டோ எடுத்து வச்சிருந்திருக்கிறான். அதை எனக்கும் அனுப்பி விட்டவன். கட்டாயம் அதே மாதிரி உனக்கு நானே உழைச்சு, என்ர சொந்தக் காசுல வாங்கித் தருவன். நீ கொண்டுபோய்த் திரும்ப வை. அப்ப எல்லாம் ஓகே ஆகிடும். சரியா? இனி அழாத பிளீஸ். இப்ப எல்லாம் நான் பாக்கிறது உன்ர அழுத முகத்தை மட்டும்தான். எனக்கு என்ர நிரா எப்பவும் சிரிச்சுக்கொண்டு சந்தோசமா இருக்க வேணும்.”

“அதுக்கு நீங்க எனக்குப் பக்கத்திலயே இருக்கோணும்.” என்று சொல்லியபடி அவள் கண்களைத் துடைக்கவும் வருத்தத்தோடு முறுவலித்தான் அவன்.

“எனக்கும் என்ர நிராக்குப் பக்கத்திலேயே இருக்கத்தான் ஆசையா இருக்கு. காலம் முழுக்க இருக்கோணும் எண்டுறதுக்காகத்தான் இந்த நாலஞ்சு வருசத்த பல்லைக் கடிச்சுத் தனியா ஓட்டுவம் எண்டு வந்திருக்கிறன்.” வருத்தத்தில் தோய்ந்து வந்த அவன் குரலில் நிமிர்ந்து பார்த்தாள் நிரல்யா. அவளுக்கு இருக்கும் அதே பிரிவுத் துயர் அவனுக்கும்தானே? ஆனாலும் அவளைத் தேற்றுகிறான்.

அதில் அழுத்தமாக முகத்தைத் துடைத்துக்கொண்டு, “இல்ல, இனி அழாம இருக்கப் பாக்கிறன். எனக்கும் இப்பிடி அடிக்கடி அழுற என்னைப் பிடிக்கேல்ல. ஆனா எனக்கு ஒரு ஆறுதலுக்குக் கதைக்கக் கூட ஆக்கள் இல்ல சிசிர. நிவேதா இருக்கிறாள்தான். எண்டாலும் அவளிட்ட எல்லாம் சொல்ல ஒரு பயம். அம்மாவோட பழையமாதிரி கதைக்கேலாம இருக்கு. செய்த பிழை எல்லாம் நெஞ்சுக்கையே நிண்டு குத்துது. இவ்வளவு நாளும் உங்களளோடயும் கதைக்காம இருந்து… என்னவோ எனக்குப் பைத்தியம் பிடிக்காம இருக்கிறதே பெரிய விசயம்.” என்றதும் மெலிதாகத் திகைத்துப் போனான் சிசிர.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அதில், “சரி போன காலம் எல்லாத்தையும் விடு. இனி அப்பிடி இருக்காது. இனி நீ எப்ப ஃபிரீயா இருந்தாலும் எனக்கு ஒரு மெசேஜ் போட்டுவிடு. நானும் ஃபிரீயா இருந்தாக் கட்டாயம் எடுப்பன். என்ன கதைக்கோணும், சொல்லோணும் எண்டாலும் சொல்லு. அழவேணும் மாதிரி இருந்தாலும் அழு. ஓகேயா? மனதுக்க இருக்கிறது எல்லாம் வெளில வந்திட்டா நோர்மல் ஆகிடுவாய். சரிதானே?” என்று தன் பதற்றத்தைக் காட்டாமல் கேட்டான்.

அவள் சரி என்பதுபோல் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள். பார்க்கவே பாவமாய் இருந்தது அவனுக்கு.

“தயவு செய்து தைரியமா இரு நிரா. அதைவிட இனி நிறைய யோசிக்காத. இங்க வாற வரைக்கும் நாங்க சேருவமா, உன்ர வீட்டு ஆக்களிட்ட எப்பிடிக் கதைக்கிறது எண்டு ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது நிரா. இப்ப அப்பிடி இல்ல. நாங்க கட்டாயம் சேருவம் எண்டுற நம்பிக்கை எனக்கு மலையளவுக்கு வந்திருக்கு. கட்டாயம் படிப்பை நல்லமாதிரி முடிப்பன். அதே மாதிரி நல்ல வேலையும் கிடைக்கும். அங்க இருக்கேக்கையே என்னை மாதிரி இங்க வந்து படிக்கிற சிலரின்ர டீடெயில்ஸ் எடுத்துக்கொண்டுதான் வந்தனான். அவேயோட கதைச்சு, இங்க இருக்கிற காலத்தை இன்னும் பிரயோசனமான எப்பிடி மாத்தலாம் எண்டு கேக்க வேணும். சோ, இனி எங்களுக்கு எல்லாமே நல்லதாத்தான் நடக்கும். அதால நீயும் சந்தோசமா இருக்க வேணும்.”

அவன் நம்பிக்கையாய்ப் பேசியது அவளுக்கும் புதுத் தெம்பைத் தந்ததில் கண்ணீர் தானாய் நின்றிருந்தது.

அதில், “உங்கட அம்மா அப்பா எப்பிடி இருக்கினம்? அவேயும் பாவம் என்ன, நீங்க இல்லாம கவலைப்படுவினம்.” என்று அவன் வீட்டினரைப் பற்றி விசாரித்தாள்.

சட்டென்று அவனுக்குப் பதில் சொல்ல இயலாமல் போயிற்று. கடைசியாக விடுதியில் இருந்த அவன் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, கையோடு அவனையும் கூட்டிக்கொண்டு போவதற்காகப் பேராதனைக்கு வந்திருந்த அவன் அப்பா மத்தும பண்டாரவுக்கு இங்கு நடந்தவற்றையெல்லாம் யாரோ சொல்லியிருந்தார்கள். அதனால்தான் தன் கடையையும் அடித்து உடைத்திருக்கிறார்கள் என்று ஊகித்து அறிந்துகொண்ட மனிதர் பயந்து நடுங்கிப் போனார்.

“அந்தப் பிள்ளையை மறந்திடு மகன். எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம். நாங்களெல்லாம் அன்றாடம் உழைச்சு இருக்கிறதைச் சாப்பிட்டுட்டு, நிம்மதியாப் படுத்து எழும்புற மனுசர். இந்த அடிதடி எல்லாம் சரியா வராது.” என்று சொல்லியிருந்தார்.

அவருக்கு இந்த இனம், மொழி எல்லாம் ஒரு விசயமாய் இல்லை. மகன் வாழ்க்கை நிம்மதியாய், சந்தோசமாய் இருக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டார்.

“அதுக்கெல்லாம் காலம் இருக்கு அப்பா. இப்ப அதைப் பற்றி நாங்க ஒண்டும் கதைக்க வேண்டாம்.” என்று சொல்லியிருந்தான் சிசிர.

அவர் முழுமையாகச் சமாதானம் ஆகாதபோதும், மகன் இனி நாட்டில் இருக்க மாட்டான் என்பதில் கொஞ்சம் நிம்மதியாகியிருந்தார்.

அவன் அன்னை வன்னியாராச்சி, தங்கை சிங்கித்தி இருவரும் இதை அறிந்து அதிர்ந்துதான் போயினர். ஆனாலும் மத்தும பண்டாரவைப் போல் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவளின் ஃபோட்டோவைக் காட்டச் சொல்லிக் கேட்டு, ஆசையாகப் பார்த்து ரசித்து, “வடிவான பெட்டை மகன்!” என்று சொல்லியிருந்தார் வன்னியாராச்சி.

“என்ன? என்ன யோசிக்கிறீங்க?” அவனின் திடீர் அமைதியின் பொருள் விளங்காமல் வினவினாள் நிரல்யா.

“இல்ல, அது வேற என்னவோ யோசினை.” என்று அவசரமாகச் சமாளித்துவிட்டு, “கடை போட்டுக் குடுத்திட்டுத்தான் வந்தனான் நிரா. நான் நிக்கேக்கையே யாவாரம் பரவாயில்ல. காணியும் விக்காததால சிரமம் இல்லாத வாழ்க்கை வாழுவினம். இவ்வளவு காலமும் என்ர படிப்புக்கு எண்டு இருந்த சிலவும் அவேக்கு இனி இல்லைதானே. அம்மா இப்ப வெளில வேலைகளுக்குப் போறேல்ல. சிங்கித்தியோட சேந்து இடியப்பம் அவிச்சுக் கடைக்குப் போடுறா. ஆக்கள் ஓடருக்கு கேட்டாலும் செய்து குடுக்கிறா. சிங்கித்தி அங்கேயே கொலிஜ்ல சேரப்போறன் எண்டு சொன்னவள். அவளுக்கு டீச்சிங்தான் விருப்பம். இதெல்லாம் உன்னாலதான் நடந்திருக்கு. தேங்க்ஸ்! இல்லாட்டி வாடகை வீடு, அதுக்கு வாடகை எண்டு நிறைய சிரமப்பட்டு இருப்பினம்.” என்றான் மனத்திலிருந்து.

அவள் முறைக்க அவன் உதட்டில் அழகான முறுவல். அடர் நீல நிறக் கண்கள் இரண்டும் பளீர் என்று மின்னி அவளை வசியம் செய்ய, “மகே லஸ்ஸான கெல்ல, என்னை முறைக்கிற அந்த ரெண்டு கண்ணையும் பக்கத்தில இருந்து பாக்க ஆசையா இருக்கு. ஆனா…” என்றவன் அவள் முகத்தை வழித்துத் தன் நெற்றியில் நெட்டி முறித்தான்.

அவள் கண்ணீருடன் சிரித்தாள். என்னவோ நொடியில் சோகங்கள் எதுவும் அண்டாத பழைய சிசிரவைப் பார்த்தது போல் இருந்தது. “எனக்கும் ஓடி வந்து உங்களைக் கட்டிப்பிடிக்க வேணும் மாதிரியே இருக்கு. பக்கத்தில இருந்த காலத்தில எல்லாம் தள்ளி இருங்க, தள்ளி இருங்க எண்டு சொல்லிப்போட்டு இப்ப நீங்க வேணும் எண்டு கிடந்து துடிக்கிறன் சிசிர.” என்று கண்ணீருடன் முறுவலிக்க முயன்றாள் அவள்.

ஒருகணம் அவனும் நிலைகுலைந்து போனான். ஆனாலும் வேகமாகச் சமாளித்துக்கொண்டு, “உனக்குத் தெரியுமா? உன்னைப் பற்றி வீட்டில தெரியவந்திட்டுது. அம்மாவும் தங்கச்சியும் நீ நல்ல வடிவு எண்டு சொன்னவே.” என்றான் அவள் மனநிலையை மாற்றும் விதமாக.

“உண்மையாவா? அவே ஒண்டும் சொல்லேல்லையா?” அவன் எதிர்பார்த்தது போலவே விழிகளை விரித்து ஆச்சரியத்துடன் கேட்டவள் அழகைக் கண்களால் பருகியபடி, “இல்ல. சொல்லேல்ல. அவேக்கு நல்ல சந்தோசம் மட்டும்தான்.” என்றான்.

“இப்பிடி என்ர வீட்டிலையும் ஓம் எண்டு சொல்லலாம்…” என்றாள் ஏக்கத்துடன். அப்படிச் சொல்லியிருக்க இந்தப் பிரிவு, வேதனை, அவர்களையும் ஏமாற்றுகிறோமே என்கிற குற்றவுணர்ச்சி எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு இருப்பாளே.

“இப்ப சொல்லாட்டி என்ன? பிறகு ஓம் எண்டு சொல்லுவினம் நிரா. எனக்கு நம்பிக்கை இருக்கு.”

அதன் பிறகும் என்னென்னவோ பேசினார்கள். கண்ணீரும் சிரிப்பும் சரிசமமாய் அவர்களுக்குள் கலந்திருந்தன. ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துப் பிரிவின் துயரை மெல்ல மெல்ல ஆற்றிக்கொண்டனர்.

அவளுக்கு வகுப்பு ஆரம்பமாக இருந்தது. அழைப்பைத் துண்டிக்க மனமேயில்லை.

அவனுக்கும் அது இலகுவாய் இல்லை. அனால், இதுதான் இனி. இருவரும் இதற்குப் பழக்கத்தான் வேண்டும்.

“வகுப்புக்குப் போ நிரா. நல்லா படிக்கோணும். இந்த போடர்ல பாஸாகிறது எல்லாம் இனிக் கூடாது. நீ கெட்டிக்காரி. நல்ல மார்க்ஸ் எடுக்க வேணும். அப்பதான் உன்ர அம்மா அப்பா சந்தோசப்படுவினம். எனக்கும் சந்தோசம். சரியா?” என்று கேட்டு, என்னென்னவோ ஆறுதல் மொழிகள் சொல்லி, சில பல முத்தங்களைப் பறக்க விட்டு, அழைப்பைத் துண்டித்தான் சிசிர.

அதன் பிறகும் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள் நிரல்யா. இனிச் சில வருடங்களுக்கு நினைத்த நேரம் பார்க்கவோ, பேசவோ முடியாது. இருவரும் சேர்ந்திருக்க முடியாது. விரல்களைக் கோர்த்து நடக்க முடியாது என்கிற நிதர்சனம் அவள் நெஞ்சைக் கனக்க வைத்தது. ஆனாலும் இத்தனை நாள்களும் மனத்தில் தூக்கிச் சுமந்திருந்த பாரங்களை எல்லாம் அவனிடம் கொட்டித் தீர்த்தத்தில் பெரும் ஆசுவாசமாகவும் உணர்ந்தாள்.

அடுத்து வந்த நாள்கள் எல்லாம் அவனின் அழைப்புக்காகக் காத்திருப்பதிலேயே நகர்ந்தன. அவனோடு வாழ்ந்த நினைவுகள் துணையாகவும் சுமையாகவும் மாறிப் போயின. பிரிவை அனுபவித்தபடி வாழக் கற்றுக்கொண்டாள்.



தொடரும்...
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 20



நிரல்யா சிசிரவின் நாள்கள் ஒருவித லயத்தில் விரைய ஆரம்பித்திருந்தன. மனதுக்கு நெருக்கமானவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நினைவுகளால் பக்கத்திலேயேதான் இருப்பார்கள். போகுமிடமெங்கும் துணையாக வருவார்கள். எண்ணங்களால் அவர்களோடு பேசிக்கொண்டேதான் இருப்போம். அப்படித்தான் இருந்தாள் நிரல்யா.

அவன் விழியெடுக்காமல் அவளையே பார்த்தது, கதைத்தது, சிரித்தது, கண்ணைச் சிமிட்டியது என்று ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மகிழ்ந்தாள். இந்த முறை கதைத்தவை அத்தனையும் அடுத்த முறை அவனோடு கதைக்கப் போகும் அந்தப் பொழுது வரையில் அவளுக்குத் துணையாய் இருந்தன. அதனாலேயே அவளிடத்தில் இருந்த கலக்கங்கள், குழப்பங்கள் எல்லாம் மெல்ல மெல்ல அகன்று வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தது.

வீட்டிலும் எந்தச் சலசலப்புகளும் இல்லாத ஒரு அமைதி நிரந்தரமாய்ச் சூழ்ந்து போயிற்று. நாளாக நாளாக அமிர்தவல்லியின் மனமும் சமன் பட்டுப் போயிற்று. மகள் தன் சத்தியத்தை மீறியிருக்க மாட்டாள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையும், செய்துவிட்ட தவறினால் உண்டான குற்ற உணர்ச்சியில் ஒதுங்கிப் போகிறாள் போலும் என்று யோசித்து அவளுக்கு இதமாய் நடக்க முயன்றார்.

அனந்தன் தான் உண்டு, கடை உண்டு, தன் வேலை உண்டு என்று முற்றிலுமாக ஒதுங்கியிருந்தான்.

சுந்தரலிங்கத்துக்கு அவனைக் குறித்து மிகுந்த கவலை. அன்று ‘எனக்கு அவளைப் பிடிக்கும் மாமா, அவளை மட்டும்தான் பிடிக்கும்’ என்று சொன்னபோது மகள் வாழ்க்கை மலர்ந்துவிடும் என்று நிம்மதியும் சந்தோசமும் கொண்டிருந்தார். பின்னான நாள்களில் யோசிக்க யோசிக்க அவனுக்கு அவள் மீது முதலே நாட்டமிருந்திருக்கிறது என்று ஊகித்துக்கொள்ள முடிந்திருந்தது.

அப்படி அவளைப் பிடித்திருந்தும் தவறாக நடக்காமல், அவளிடம் கூடச் சொல்லாமல், தனக்கான கோட்டுக்குள் நின்று அவன் பெயரையும் அவரின் நம்பிக்கையையும் மகளின் நல்வாழ்க்கையையும் காப்பாற்றியவனின் மீது இன்னுமின்னும் நம்பிக்கை பெருகிப் போயிற்று.

அவரிடம் மனத்தைத் திறந்த பிறகும் கூட, ஏன் அவரே அவளைக் கட்டிக்கொள்ள என்று சொன்ன பிறகும் கூட அவன் அவளை நெருங்கவே இல்லை. மனம் மாறட்டும், நடந்தவற்றிலிருந்து வெளியே வரட்டும், படிப்பை முடிக்கட்டும் என்று தள்ளித்தான் நிற்கிறான்.

இப்படியான அவன்தான் மகளுக்குச் சரியான துணை என்று இன்னுமின்னும் தெளிந்தார்.

அவனுக்காகவே அவளின் படிப்பு முடிந்ததும் அவனுக்குக் கட்டி வைத்து, உனக்குப் பிடித்தவளை நீயே வைத்துக்கொள் என்று கொடுத்துவிட வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார். அப்படி ஒரு பாசம் அவன் மீது. அதைவிட அவனும் சந்தோசமாய் இருந்து மகளையும் நன்றாக வைத்திருப்பான் என்கிற நம்பிக்கை மலையளவுக்கு.

இப்படி அவள் வீட்டினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க நிரல்யா சிசிரவின் நினைவுகளின் துணையோடு வாழப் பழகிக்கொண்டாள்.

வாரத்தில் குறைந்தது மூன்று தடவைகளாவது கதைத்துவிடுவார்கள். அவன் பகுதி நேரமாக வேலைக்கும் போக ஆரம்பித்துவிட்டதால் அவர்கள் கதைத்துக்கொள்ளும் நேரம் வேண்டுமானால் ஐந்து நிமிடமாகவோ பத்து நிமிடமாகவோ இருக்கலாமே தவிர்த்து அவனைப் பார்த்து, அவன் குரலைக் கேட்டு விடுவாள்.

அப்படி அவள் பார்த்த வரையில் ஒரு சில உடைகளையே அவன் திரும்ப திரும்பப் போடுவது தெரிந்தது. அதுவும் இங்கிருந்து கொண்டு போனவைகள்.

பார்க்கும் வேலை வாடகை, கரண்ட், உணவு என்று அத்தியாவசியச் செலவுகளுக்குப் போய்விடுமே. அதுதான் அந்த நாட்டின் காலநிலைக்கு ஏற்ற உடைகளை வாங்க முடியாமல் கொண்டுபோனவற்றையே வைத்துப் போடுகிறான் போலும். “சிலவுக்கு என்ன செய்றீங்க?” என்று அவள் கேட்டபோதும், “அதுதான் வேலைக்குப் போறனே.” என்றிருந்தான்.

அங்கே வருமானத்தைப் பெருக்க வழியில்லை. இங்கிருந்து உதவி செய்யவும் அவனுக்கு யாருமில்லை. தன் தேவைகளைத் தானே சுருக்கிக்கொண்டு அவளிடம் கூடச் சொல்லாமல் சமாளிக்கிறான். நெஞ்சம் பிசைந்தது அவளுக்கு. என்ன செய்யலாம் என்று யோசித்தவள் தான் வேலைக்குச் செல்லப் பிரியப்பட்டாள்.

அதில், அமிர்தவல்லியை அணுகி, “எனக்கு வேலைக்குப் போக விருப்பமா இருக்கு அம்மா. எங்கயாவது பார்ட் டைமா தேடட்டா?” என்று கேட்டுப் பார்த்தாள்.

இப்போதுதான் அவள் பற்றிய முடிவுகள் எதுவும் அந்த வீட்டில் சுந்தரலிங்கம் தவிர்த்து யார் கையிலும் இல்லையே! அமிர்தவல்லி விசயத்தை அவரிடம் கொண்டுபோக அவர் யோசித்தார்.

அடுத்தநாள் நகைக்கடையில் வைத்து அனந்தனிடம் பகிர்ந்துவிட்டு, “என்ன செய்வம் நந்தா?” என்று அவனிடம் ஆலோசனை கேட்டார்.

அவருக்கு மகளை வெளியே விடுவதில் விருப்பம் இல்லை. தங்களின் கடைக்கு வருவாளா என்கிற கேள்வி இருந்தது. கூடவே, அவள் பற்றிய முடிவுகளை அவனை எடுக்க வைக்கவே விரும்பினார்.

“இப்ப என்ன அவசரமாம் மாமா? கம்பஸ் போய்வாறதே அவளுக்குக் களைப்பா இருக்கும். இதில என்னத்துக்கு வேலை?”

“ஆசைப்படுறா போல. சும்மா இருந்தாலும் மனம் கண்டதையும் யோசிக்கும். என்ன செய்வம்?” தன் மனத்தைச் சொல்லாமல் திரும்பவும் விசாரித்தார்.

“அப்ப இங்கயே வரச் சொல்லுங்க.”

ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தார் அவர்.

“வேலை வேணும் எண்டா இங்க வரச் சொல்லுங்க. வெளில எல்லாம் விடேலாது மாமா. அவள் வெளில வேலைக்குப் போறதுக்கா இவ்வளவு பெரிய கடையத் திறந்த வச்சிருக்கிறம்?” என்று முடித்தான் அவன்.

அவர் எண்ணியதையே அவனும் சொன்னதில் மனம் மிகவும் நிறைந்து போனது அவருக்கு. அவரின் மகளுக்கு மட்டுமன்று அவரின் வீட்டுக்கு, அவரின் தொழிலுக்கு என்று எல்லாவற்றுக்கும் அவன்தான் பொருத்தமானவன். இதை அவரிடம் அவனை அறியாமலேயே மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருந்தான்.

அவளுக்கு இதில் மருந்துக்கும் உடன்பாடில்லை. ஒன்றில் வெளியே வேலைக்கு விடுவார், இல்லையா அதெல்லாம் தேவையில்லை, வீட்டில் இரு என்று சொல்லுவார் என்றுதான் நினைத்திருந்தாள். கூடவே, முன்னர் போன்று தவறான வழியில் பணம் ஈட்டும் இடத்துக்கு வேலைக்கு வரவே மாட்டேன் என்று சொல்ல நா எழும்பவில்லை. நீ மட்டும் திறமா என்று அவள் நெஞ்சே அவளைக் குத்தியது. இப்படி இறங்கிப் போனோமே என்று நெஞ்சில் வலித்தாலும் அவளின் சிசிரவுக்காகப் பொறுத்துக்கொண்டு சம்மதித்தாள்.

அன்று மாலை கடைக்கு வரச் சொல்லியிருந்தார் சுந்தரலிங்கம்.

“எத்தினை மணிக்கு?” அவரோடு அவள் சுமூகமாகவும் பாசமாகவும் கதைக்காமல் விட்டு எவ்வளவோ காலமாயிற்று. ஆனால், அப்போதெல்லாம் அதைப் பெரிது பண்ணாமல் அவளோடு சமாதானமாகிவிடவே முயல்வார் சுந்தரலிங்கம். இப்போது அவரே முற்றிலுமாக அவளைத் தவிர்த்துவிட்டதில் இயல்பாகக் கேட்க முடியாமல் அவள் குரலில் யாரோ ஒருவரிடம் கேட்கும் பெரும் தயக்கம் இருந்தது.

“நான் நிக்க மாட்டன். நந்தன்தான் நிப்பான். அவனிட்ட கேள்.” அவரும் அவள் முகம் பாராமல் சொல்லிவிட்டுச் சென்றார்.

அழைத்துக் கேட்போமா என்று யோசித்துவிட்டு உடனேயே அந்த யோசனையைக் கைவிட்டாள். மேலே இருக்கிறவனுக்குக் கீழிருந்து அழைத்தால் பிடிக்காது என்று அவளுக்கு நன்கு தெரியும். “ஏன், கேக்கிறதை மேல வந்து கேக்க மாட்டியோ?” என்று கோபப்படுவான்.

மேலே போவதா என்று ஒரு தயக்கம் இருந்தாலும் அதை ஒதுக்கி மேலேறினாள்.

கடைக்குச் செல்லத் தயாராகித் தன் அறையிலிருந்து வெளியே வந்த அனந்தன், தன் முன்னால் நின்றவளைக் கண்டு ஒருகணம் அப்படியே நின்றுவிட்டுக் கேள்வியாகப் பார்த்தான்.

இப்போதெல்லாம் அவன் தன்னுடன் கதைப்பதையே முற்றிலுமாக விட்டுவிட்டான் என்பதை உணர்ந்தபடி, “அது… கடைக்கு இண்டைக்கு வரச் சொல்லி அப்பா சொன்னவர். அதான் எத்தின மணிக்கு எண்டு…” என்று இழுத்தபடி அவனை ஏறிட்டாள்.

“இப்ப ஓகேயா உனக்கு?” கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தபடி வினவினான்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“ம் ஓகேதான்.”

“அப்ப இப்ப என்னோட வா. நாளைல இருந்து ஸ்கூட்டில போ.” என்றான் அவன்.

“ஓகே. ஒரு பத்து நிமிசம் வெய்ட் பண்ணுங்கோ. அதுக்கிடைல நான் வெளிக்கிட்டுடுவன்.” என்றுவிட்டுக் கீழே ஓடியவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் எப்போதும்போல் அவனின் பிரத்தியேகமான மொட்டை மாடிச் சுவரைப் பற்றியபடி நின்றான்.

சிந்தனையில் எதுவுமில்லை. அவள் வந்தது, தயங்கித் தன்னைப் பார்த்தது, கடைக்கு எத்தனைக்கு வர என்று கேட்டது, அவன் சொன்னதும் மெலிதாய் முகம் மலரக் கீழே இறங்கி ஓடியது என்று அவளின் ஒவொரு அசைவுகளும் மனக்கண்ணில் வந்து வந்து போயின.

அவள் சொன்ன அந்தப் பத்துநிமிடத்தில் மின்னலாகத் தயாராகி, வீட்டை விட்டு வெளியே வந்து மேலே பார்த்தாள். சில நொடிகள் அவள் விழிகளைக் கவ்வி நின்றவன் இறங்கிச் சென்று ஜீப்பை எடுக்க, அவளும் ஏறிக்கொண்டாள்.

அன்று திறப்பு விழாவுக்கு வந்ததற்குப் பிறகு இன்றுதான் வருகிறாள். முன் பக்கமெல்லாம் இன்னும் திருத்தியமைக்கப்பட்டு, பார்க்கிங் ஏரியா தனியாகப் பிரிக்கப்பட்டு, ஆங்காங்கே பூச்சாடிகள் அழகுற வைக்கப்பட்டு என்று கடையின் தரம் வெளியிலிருந்து பார்க்கையிலே இன்னும் உயர்ந்து தெரிந்தது.

உள்ளே சொல்லவே வேண்டாம். அன்று திறப்பு விழாவின்போது பார்த்த கடையா இது என்று நினைக்குமளவில் இன்னுமே நிறைய நிறைய நகைகள் அடுக்கப்பட்டு, வாடிக்கையாளர்களும் நகைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

ஒரேமாதிரியான உடைகள் அணிந்த பணியாளர்கள், அவர்களிடம் தெரிந்த நேர்த்தி, இன்முகமாய் வாடிக்கையாளர்களோடு அவர்கள் உரையாடும் பாங்கு எல்லாவற்றையும் கவனித்தவளுக்கு இதெல்லாம் அருகில் இருக்கிறவனின் ஏற்பாடு என்று யாரும் சொல்லாமலேயே தெரிந்து போயிற்று.

அங்கு வைத்தே அவள் பற்றிய குட்டி அறிமுகம் கொடுத்து, அவளும் இனி கடையைக் கவனித்துக்கொள்வாள் என்று அவன் சொன்னபோது எல்லோரும் அவளுக்குக் கைகொடுத்து வாழ்த்தினர். நிரல்யா ஜுவல்லர்ஸின் நிரல்யா அவள்தான் என்று அறிந்தவர்களின் குறுகுறு பார்வையும் சேர ஒருவிதக் கூச்சத்துடன் அவனோடு மேலேறினாள்.

அலுவலக அறைகள் இரண்டு இருந்தன. ஒன்றில் அவள் தகப்பனாரின் பெயர் இருக்க இன்னொன்றில் அவனுடையது. அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்று, அதுநாள் வரை அவன் அமர்ந்திருந்த இருக்கையை அவளுக்குக் காட்டினான்.

அது அவளுக்கே பொருந்தாமல் தெரிய, “இல்ல, நான் இங்க இருக்கிறனே.” என்று அவன் மேசைக்கு முன்னால் இருந்த கதிரையைக் காட்டினாள்.

“அது என்னைச் சந்திக்க வாற கஸ்ட்மர்ஸுக்காக போட்ட கதிரை.”

அது உனக்கானது இல்லை என்று அவன் சொல்லாமல் சொன்னதில், “உங்களுக்கு?” என்றாள் கேள்வியாக.

“இந்தப் பக்கம் எனக்கு ஒரு மேசை போடப்போறன்.” என்றான் அந்த அறையிலேயே ஒரு பக்கத்தைக் காட்டி.

அதில் நான் இருக்கிறேனே என்று சொல்ல முடியாமல் அவனையே பார்த்தாள்.

“போயிரு. எனக்கு வேலை இருக்கு!” அவன் சற்றே அழுத்திச் சொன்ன அடுத்த கணமே அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள்.

அவனால் ஒரு கணம் பார்வையை அவளிடமிருந்து அகற்ற முடியாமல் போயிற்று.

“ஒரு நிமிசம் இரு, வாறன்!” என்றுவிட்டுக் கதவைத் திறந்துகொண்டு வேகமாக வெளியே வந்தவன் மனநிலை என்ன என்று அவனாலேயே கணிக்க முடியவில்லை.

அந்த அறையை அவன் உருவாக்கியதே அவளுக்காகத்தான். எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு, அவளை அழைத்து வந்து அதிலே அமர்த்தி, அவன் செய்த மாற்றங்களை எல்லாம் சொல்லி, அவள் விழிகள் வியப்பால் விரியத் தன்னைப் பார்ப்பதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கினான்.

ஆனால் இன்று? அவன் நினைத்ததுபோல் இருத்திவிட்டான்தான். என்ன, அவள்தான் காட்டிலிருந்து தப்பி வந்த மான்குட்டி போன்று அவனைக் கண்டு மிரள்கிறாள்.

என்னிடம் என்னடி பயம் உனக்கு என்று கேட்கும் ஆவேசம் வந்தது. இந்தக் கோபம்தான் கொஞ்சம் கொஞ்சமாய் அவனிடமிருந்து அவளைப் பிரித்தது என்று தெரிந்ததால் அடக்கிக்கொண்டான். ஆனால், அதுதான் அவன் உள்ளத்தின் மொழி. அப்படித்தான் அவனால் பேச முடியும்! அதை அவள்தான் உணர்ந்து கொள்ளவில்லை.

அதுசரி எப்போது அவள் அவனை உணர்ந்திருக்கிறாள்? உணர்ந்திருக்க அவனைத் தாண்டி இன்னொருவன் அவள் கருத்தில் பதிந்திருப்பானா?

அவன் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு திரும்பி உள்ளே சென்றபோது, அடுத்து என்ன என்பதுபோல் அவனைத்தான் பார்த்தாள் அவள்.

“எவ்வளவு சம்பளம் எதிர்பாக்கிறாய்?” என்றான் எடுத்ததுமே.

இதை எதிர்பாராதவள் திகைத்து விழிக்க, “முதலாளியோ தொழிலாளியோ இங்க சம்பளம் இருக்கு.” என்றான்.

இது அவளுக்குப் புதுச் செய்தி. ஆனாலும்…

“சொல்லு!” என்றான் அவன் மீண்டும்.

“எனக்கு என்ன தெரியும்? என்ர வேலையப் பாத்து, எவ்வளவு நேரம் செய்றன் எண்டுறதைப் பாத்துத் தாங்க.” என்றாள் மெல்லிய குரலில்.

“அப்ப சம்பளம் வேணும் உனக்கு?” என்றதும் பதற்றத்தில் இரத்தம் முழுவதும் முகத்துக்குப் பாய, அவனிடமிருந்து வேகமாகப் பார்வையை அகற்றி, மேசையில் இருந்த பேனையை அவள் கை இறுக்கிப் பற்றிக்கொண்டது.

அவன் பார்வை அந்தப் பேனைக்கும் அவள் முகத்துக்கும் சென்று வர, அவள் பக்கம் வந்து, மேசையில் இருந்த கணனித் திரையை அவளுக்கு ஏற்பத் திருப்பி விட்டுவிட்டு, மேசையில் இருந்த மவுசை பற்றிச் சில பல போல்டர்களை திறந்துவிட்டான்.

“இதில நகைக்கடை, வட்…” என்று ஆரம்பித்து நிறுத்தியவன், “எங்கட யாவாரக் கணக்கு வழக்கு எல்லாம் இருக்கு. இப்போதைக்கு இதையெல்லாம் பார், அப்பிடியே நேரம் இருக்கேக்க கீழ போய் வேலைக்கு நிக்கிற ஆக்கள் கஸ்டமர்ஸ எப்பிடிக் கவனிக்கினம், பில் போடுற விதம், விலை குறைக்கிற விதம், முக்கியமா வாடிக்கையாளரோட கதைக்கிற விதம் எல்லாம் கவனி. உனக்கு வாற டவுட்ஸ கீழ சந்திரன் அங்கிள் இருக்கிறார். அவரைக் கேட்டா சொல்லுவார். என்னட்ட எண்டாலும் கேள். சாப்பிட, குடிக்க என்ன எண்டாலும் சந்திரன் அங்கிளிட்டச் சொன்னா ஏற்பாடு செய்வார்.” என்று கடகடவென்று ஒப்புவித்துவிட்டு, பஜிரோ திறப்பை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

ஒரு சூறாவளி வீசி ஓய்ந்ததுபோல் இருந்தது அவளுக்கு. கொஞ்ச நேரத்துக்கு எதுவும் செய்யத் தோன்றாமல் கணனித் திரையை மட்டுமே வெறித்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த முறை பேசியபோது சிசிரவிடம் தான் கடைக்குப் போகத் தொடங்கிவிட்டதைப் பகிர்ந்துகொண்டாள். அவனுக்கும் அது சந்தோசமே. அவள் தெளிவாய் இருப்பதும், முகம் மலர அன்றாடம் நடந்தவற்றை அவனிடம் பகிர்வதும் என்று கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தின் அழுத்தத்திலிருந்து மீண்டுகொண்டு இருந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்திருந்தது. மெல்ல மெல்ல கடையின் வேலையும், கணக்கு வழக்குகளும், கொடுக்கல் வாங்கல்களும் அவளுக்குப் பிடிபட ஆரம்பித்தன.

அப்போதுதான் ஒவ்வொரு மாதமும் அவர்கள் வட்டிக்கு விடும் தொகை குறைந்துகொண்டு போவதும், அப்படியே வட்டிக்குக் கொடுத்தாலும் அவை பத்திரப் பதிவின் மூலம் முறையாக நடக்க ஆரம்பித்திருப்பதையும் கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டாள். உள்ளூர பெரும் சந்தோசம் ஒன்று ஊற்றெடுத்தது.



தொடரும்....

உங்க எல்லார் பொறுமையையும் சோதிக்கிறேனா தெரிய இலை. ஆனால், ஒரு பயணம் மாதிரி சில வளைவுகளைக் கடந்துதான் போக வேண்டிய புள்ளிக்குப் போய்ச் சேர வேண்டி இருக்கு. அடுத்த எபில இருந்து கதை தன் அடுத்த வளைவை நோக்கி நகரும். கருத்திடும் அனைவருக்கும் நன்றி. இந்த எபி முக்கியமாய் அனந்தன் ஆர்மீ உங்களுக்காகவே;).
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 21


அதன் பிறகு வந்த நாள்களில் கட்டாயமாகத் தினமும் வேலைக்குப் போக ஆரம்பித்தாள் நிரல்யா. சுந்தரலிங்கம் கணிசமான தொகையைச் சம்பளமாகப் போட்டதும் இன்னொரு காரணமாகிவிட, அதற்குத் தகுந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினாள்.

மூன்று மாதச் சம்பளங்களைச் சேமித்து, நிவேதா மூலம் அனுப்ப முயன்றபோது சிசிர தடுத்தான். அவனுக்குத் தேவைகள் இருப்பது உண்மைதான். கேட்பதற்கு யாருமில்லாததால் இருப்பதை வைத்துச் சமாளிப்பதும் உண்மைதான். அதற்கென்று அவர்கள் வீட்டுப் பணத்தை வாங்குவதா?

அவனுக்காக என்று வீட்டுக்குத் தெரியாமல் அவள் நகையை எடுத்ததே அவன் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய்க் குத்திக்கொண்டிருந்தது. இலண்டன் வந்த பிறகே தெரிய வந்திருந்ததில் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. இல்லையோ நிச்சயம் தடுத்திருப்பான். அப்படியிருக்கப் பணத்தையும் வாங்குவது என்றால்? நிச்சயம் முடியாது.

“நிராம்மா, திரும்ப திரும்ப நாங்க பிழை செய்யக் கூடாது. எனக்கு வேண்டாம். நீ அனுப்பாத. நீ என்னில இருக்கிற பாசத்தில செய்றாய் எண்டு எனக்கு விளங்குது. அதே உன்ர அம்மா அப்பான்ர இடத்தில இருந்து யோசிச்சுப் பார்.” என்றான் இதமாக.

அவன் என்னவோ அவளுக்கு விளங்க வைக்கத்தான் சொன்னான். செய்த தவறினால் உண்டான குற்ற உணர்ச்சி அவன் சொல்லிக்காட்டியது போல் உணர்த்திவிட அவளுக்கு விழிகள் கலங்கிப் போயிற்று.

அதுவும் அவனுக்கு வேதனையாயிற்று. “ப்ளீஸ் மா, உன்னை நானே குத்திக் காட்டுவனா எண்டு யோசி? ஆனா, திரும்ப திரும்ப பிழை செய்யக் கூடாதுதானே? அதாலதான் சொல்லுறன். நாளைக்கு உன்ர வீட்டு ஆக்கள் இதைப் பற்றி ஒரு கேள்வி கேக்கிற இடத்தில நாங்க நிக்கக் கூடாது. விளங்குதா உனக்கு?”

“விளங்குது. அதாலதான் நான் வேலைக்குப் போய்ச் சேர்த்த காச அனுப்பினான். உங்களுக்குத் தெரியுமா, எனக்குப் பீரியட்ஸ் எண்டா கூட நான் வீட்டில நிக்கிறேல்ல. கம்பஸ்ல பீல்ட் வேக்குக்கு போயிற்று வந்தா விழுந்து படுக்கலாமா எண்டு இருக்கும். ஆனாலும் கடைக்குப் போவன். உங்களுக்கு நான் அனுப்புற காசு முழுக்க முழுக்க என்ர உழைப்பால வந்ததா இருக்க வேணும் எண்டுற வைராக்கியம் எனக்கும் இருக்கு சிசிர.” என்று அவள் சொன்னபோது அவனுக்கு மிகுந்த வருத்தமாய்ப் போயிற்று.

“இப்பிடி உன்ன வருத்தி நீ அனுப்பிற காசப் பாத்து நான் சந்தோசப்படுவன் எண்டு நினைக்கிறியா நிரா?” என்றான் மனத்தாங்கலோடு.

“ப்ளீஸ், அப்பிடியெல்லாம் நினைக்காதீங்க. எல்லாம் நீங்க ஒரு நிலைக்கு வந்து, நாங்க சேருற வரைக்கும்தானே. நகை எடுத்தது பிழைதான். எனக்குத் தெரியும். காணிய வித்தா இங்க உங்கட குடும்பம் வாழுறதும் கஷ்டம், அந்த எண்ணம் உங்களை அங்க நிம்மதியாப் படிக்கவும் விடாது எண்டு எல்லாத்தையும் யோசிச்சுப் போட்டுத்தான் எடுத்துக் குடுத்தனான். உங்கட கடைய அடிச்சு உடைச்ச கோவமும் இருந்தது. எண்டாலும் காதலியா நான் செய்தது சரியா இருக்கலாம். ஆனா, மகளா…” என்றவளுக்கு மேலே பேச முடியாமல் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன.

அவன் நல்ல நிலைக்கு வந்தால்தான் அவள் வீட்டில் பேச முடியும். அதற்கு அவன் இலண்டனுக்குப் போக வேண்டும். வேறு எந்த வழியும் இல்லையே என்றுதான் செய்தாள். செய்த பிறகு தினம் தினம் உள்ளுக்குள் வேகிறாள். எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும் இந்த முள்ளைத் தன் நெஞ்சிலிருந்து எப்படி நீக்கப் போகிறாள் என்று அவளுக்குத் தெரியவே இல்லை.

“ப்ளீஸ் மா ப்ளீஸ் அழாத. எனக்கு உன்ன விளங்குது. நீ செய்தது எல்லாம் எனக்காக எண்டும் தெரியும். அதெல்லாம் நடந்து முடிஞ்சுது. இனி அதைப் பற்றி நாங்க கதைக்க வேண்டாம். சரியா?” என்று கெஞ்சிக் கொஞ்சி அவளைத் தேற்றிவிட்டு, தான் புதிதாகச் செய்ய ஆரம்பித்திருக்கும் ஆராச்சி பற்றிச் சொன்னான்.

அங்கே விவசாய ஆராய்ச்சிப் பண்ணையில் உருளைக்கிழங்கு மற்றும் மலை நாட்டுக் காய்கறிகள் பற்றிய ஆராய்ச்சி ஒன்று செய்துகொண்டிருந்தான். சிறந்த தரத்திலான உருளைக்கிழங்கு உற்பத்தி, அதன் விளைச்சலை மேம்படுத்துதல், விதை உருளைக்கிழங்கு உற்பத்தி, இழைய வளர்ப்பு(உயிரணு அல்லது இழையமானது உயிரினத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் முறை.) நாற்றுகள் தயாரிப்பு என்று அவனுடைய ஆராய்ச்சி பரந்து பட்டிருந்தது. அதைச் சரியாகச் செய்து முடித்தால் இரண்டாம் வருடத்திலிருந்து அவர்களின் ஆராய்ச்சிப் பண்ணையிலேயே படித்துக்கொண்டு வேலையும் பார்க்கலாம் என்றதும் முழு மூச்சாக இறங்கியிருந்தான். மாதச் சம்பளமாக நல்ல தொகையும் கிடைக்கும் என்கையில் அதைத் தவறவிட அவன் தயாராகவே இல்லை.

“இன்னும் அஞ்சாறு மாதம்தான் நிரா. நான் சமாளிப்பன். அங்க வேலை கிடைச்சிட்டுது எண்டா எனக்குச் சிரமமே இருக்காது. அதுதான் நீ அனுப்பாத எண்டு சொன்னனான்.” என்றான்.

“அப்ப இங்க இருந்து உடுப்பு வாங்கிப் பார்சல் போட்டு விடவா?” அவனுக்குப் பணமாகப் பெற்றுக்கொள்வதில் சங்கடமாக இருக்கிறது போலும் என்றெண்ணி வினவினாள் அவள்.

சின்ன சிரிப்புடன், “வேணுமெண்டா ரெண்டு முத்தம் அனுப்பிவிடு, இல்ல மொத்தமா நீயே வந்தாலும் சந்தோசம்தான்.” என்று அவன் சொன்னதும் ஒருகணம் திகைத்துப் பின் சிரித்தாள் அவள்.

நனைந்திருந்த இமைகளோடும், கலங்கிச் சிவந்திருந்திருந்த விழிகளோடும் சிரித்தவளைக் கண்டு, “கடைசியா நாங்க மீட் பண்ணின நாள் நெஞ்சுக்கையே நிக்குது நிரா.” என்றான் ஏக்கம் நிறைந்த குரலில்.

“நிக்கும் நிக்கும்!” என்று கோபம் காட்டினாலும் அவள் கன்னங்கள் சூடாகிப் போயின. அன்று அவன் அவளிடம் தன் கட்டுப்பாட்டை இழந்ததும், வெட்கமும் சிரிப்புமாகச் சமாளித்துக்கொண்டதும் மறக்குமா என்ன?

“நீ சொல்லு, உனக்கு அண்டைக்கு எப்பிடி இருந்தது?”

“சிசிர!” என்ற அவளின் அதட்டல் அவனிடம் எடுபடவே இல்லை. அவளை முற்றிலுமாகச் சிவக்க வைத்து, பறக்கும் முத்தங்கள் சிலதைப் பெற்று, ‘நல்லாத்தான் இருந்தது’ என்ற பதிலை வாங்கி, அவள் மனநிலையை மொத்தமாக மாற்றிவிட்டே விட்டான்.

கடைசியில், “அப்பிடி வேலை கிடைச்சா அதுக்குப் பிறகு அனுப்பேல்ல. இப்ப போய் ஏதாவது உடுப்பு வாங்குங்க. நீங்க இப்பிடி ஒரே உடுப்பைத் திருப்பி திருப்பிப் போடுறதைப் பாக்க எனக்குக் கவலையா இருக்கு.” என்று அவள் கெஞ்சியபோது, மறுத்து, திரும்பவும் அவளை அழவைக்க மனமில்லாததால் விட்டுவிட்டான்.

இதோ மாதங்கள் ஓடி மறைய, அவன் ஆராய்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. அங்கயே வேலையும் கிடைத்துவிட்டதில் முதல் வேலையாக அவளுக்குத்தான் அழைத்துச் சொன்னான்.

“இனி எனக்குக் காசு அனுப்பாத நிரா. இப்ப கிடைக்கிற மாதிரி நாலு மடங்கு சம்பளம். போதும் போதும் எண்டுற அளவுக்கு எனக்குக் காணும்.” என்றான் உற்சாகமாக.

அவன் சொன்ன தொகையை இலங்கைக் காசின் பெறுமதிக்கு மாற்றிப் பார்த்தவள் மலைத்துப்போனாள். “படிப்பை முடிக்க முதலே இவ்வளவா?” என்று வாயைப் பிளந்தாள்.

வாய்விட்டுச் சிரித்தான் அவன். “எங்கட நாட்டுப் பெறுமதிக்கு, நான் இப்ப இருக்கிற நிலைக்கு உண்மையாவே பெரிய தொகைதான். ஆனா, இந்த நாட்டில இது ஒரு சம்பளமே இல்ல நிரா. ஆனா, படிப்பு முடிஞ்சதும் இந்த நாட்டுக் காசுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும்.”

அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு அவ்வளவு சந்தோசமாயிற்று. அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாய்த் தெரிந்தது.

ஒரு வழியாக அவளின் கடைசிப் பரீட்சைகள் முடிந்து போயின. இதற்காகவே காத்திருந்த சுந்தரலிங்கம், இரவு உணவைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவள் முன்னால் வந்து நின்று “அமிர்தம், கலியாணத்துக்கு ஏற்பாடு செய்யப் போறன். ரெடியா இருக்கச் சொல்லு!” என்று அறிவித்தார்.

திகைத்து நிமிர்ந்தவளுக்கு உடனேயே எதுவும் சொல்ல முடியாமல் போயிற்று. கடைசி செமஸ்ட்ரை எட்டியபோதே இதை எண்ணிப் பயப்பட ஆரம்பித்திருந்தாள்தான். என்றாலும் அவர்கள் சொன்னதுபோல அவள் இங்கேயே வந்துவிட்டதும், அதன் பிறகான காலப்பகுதியில் எந்தப் பிரச்சனைகளும் வராததிலும் அவசரமாகத் திருமணப் பேச்சை எடுக்காமல் இருப்பதற்கும் சாத்தியம் உண்டு என்று நினைத்திருந்தாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
நெஞ்சுக்குள் என்னவோ அடைக்க அன்னையைத் திரும்பிப் பார்த்தாள். அவர் நின்ற நிலை அவருக்கும் இதில் உடன்பாடே என்று சொல்ல, “இப்ப… இப்ப என்னப்பா அவசரம்?” என்றாள் தன்னைத் திடமாகக் காட்டிக்கொள்ள முயன்றபடி.

“என்ன அவசரம் எண்டா? அதான் படிப்பு முடிஞ்சே. பிறகு என்ன?” அவர் பேச்சில் ஒருவித இறுக்கம்.

அது அவள் வாயைக் கட்டிப்போட முயன்றாலும் அமைதியாக இருக்கும் நேரமில்லையே இது. “ஓம் படிப்பு முடிஞ்சுதுதான். அதுக்கு ஏன் இப்ப? கொஞ்சக் காலம் போகட்டுமே அப்பா.” என்றாள் கெஞ்சலாக.

“ஏன், என்ன செய்யப் போறாய்?”

“அது அது… படிச்ச படிப்புக்கு ஏதாவது வே…” என்று அவள் ஆரம்பிக்கையிலேயே, “வெளில எல்லாம் வேலைக்கு விடேலாது!” என்று முடித்து வைத்தார் அவர்.

“மேல படிக்க…” என்றவளை மீண்டும் இடை மறித்து, “நந்தனைத்தான் உனக்குப் பாத்திருக்கிறன். அதால என்ன செய்ய விருப்பம் எண்டாலும் கலியாணத்துக்குப் பிறகு அவனோட கதைச்சுச் செய்.” என்று முடித்துவிட்டுப் போனார் அவர்.

‘அவரா, மச்சானா?’ பெரும் அதிர்ச்சியாய் அது தாக்க யோசிக்கக் கூட முடியாதவளாய் ஒற்றைக் கையால் தலையைப் பற்றிக்கொண்டாள். மாப்பிள்ளை தேடுவதற்குக் கொஞ்சக் காலம் பிடிக்கும் என்று ஆறுதல் கொள்வதற்குக் கூட வழி இல்லாது போயிற்று.

எவ்வளவு நேரம் கடந்ததோ. “கை காயுது பிள்ளை. சாப்பிட்டு எழும்பு!” என்று அமிர்தவல்லி சொல்லவும் நிமிர்ந்தவளின் விழிகள் கலங்கிப் போயிருந்தன.

“ஏன் அம்மா இவ்வளவு அவசரமா?” என்றாள் உடைந்த குரலில்.

“என்ன பிள்ளை அவசரம்? உனக்கு இப்ப 23 வயசாகுது. கலியாணத்துக்கு ஏற்ற வயசுதான் இது. அதைவிட அவன் பாவம். 28 வயசாகியும் உனக்காக, நீ படிப்பை முடிக்கோணும் எண்டுறதுக்காகப் பொறுமையா இருந்தவன். அப்பா சொன்ன மாதிரி என்ன எண்டாலும் கலியாணத்தை முடிச்சுக்கொண்டு செய். நந்தா ஒண்டும் சொல்லமாட்டான். அவனுக்கும் நீ படிக்கிறதில விருப்பம்தான்.”

இந்த முடிவை அவர்கள் இன்று நேற்று எடுக்கவில்லை என்று அப்போதுதான் புரிந்தது. மனத்தில் இருப்பதை அவர்களிடம் சொல்லவும் முடியாமல், மறுப்பதற்கு முறையான காரணமும் இல்லாமல் இயலாமையுடன் அவரைப் பார்த்தாள்.

அவள் முகத்தில் எதைப் படித்தாரோ? “கண்டதையும் யோசிக்காம கலியாணத்துக்கு ரெடியாகு. நந்தா அருமையான பிள்ளை. அவனைக் கட்ட நீ குடுத்து வச்சிருக்க வேணும். நாங்களும் கவலை இல்லாம இருப்பம்.” என்று முடித்தார் அவர்.

அவளிடம் அப்படிச் சொன்னாலும் அவர் நெஞ்சிலும் இனம் புரியாத கலக்கம் சூழ்ந்தது. கணவரிடம் சொல்லி, முடிந்தவரையில் விரைவாக இந்தத் திருமணத்தை நடத்திவிட நினைத்தார்.

அறைக்கு வந்தவளுக்கு அழுகைதான் வந்தது. வீட்டிலேயே இருப்பதில் சிசிரவோடு அவசரத்துக்குக் கதைக்கவும் முடியவில்லை. ஒன்றில் வேலைக்குப் போய் வரும் வழியில் கதைக்க வேண்டும். இல்லையா கடையில் வைத்து. இரண்டுமே ஆபத்து என்பதில் வேக வேகமாய் மெயில் அனுப்பிவிட்டுக் கட்டிலில் விழுந்தாள்.

உறக்கம் வருவேனா என்று நின்றது. நெஞ்செல்லாம் ஒரு பயம் சூழ்ந்தது.

அடுத்தநாள், ‘எக்ஸாம்ஸ் முடிச்சுக்கொண்டு அங்க வாறன் நிரா. வந்து உன்ர அப்பாவோட கதைக்கிறன். அதுவரைக்கும்… ஒரு ஆறுமாதம் எப்பிடியாவது சமாளி நிரா. ப்ளீஸ்மா’ என்று பதில் மெயில் அனுப்பியிருந்தான் அவன்.

கடைசிக் கட்ட ஆராய்ச்சிகள், படிப்பு, பரீட்சைகள், கூடவே பார்க்கும் வேலை என்று இருக்க நிற்க நேரமில்லாமல் ஓடும் இந்த நேரத்தில் அவன் நிலையும் புரிந்தது. ஆனால், மாப்பிள்ளையைக் கூடக் கையில் வைத்துக்கொண்டு, அவள் ஒன்றைச் சொல்ல முதலே அதை முடித்து வைக்கும் தந்தையிடம் என்ன சொல்லிச் சமாளிப்பாள்? தலை வெடிக்கும் போலிருந்தது.

வேறு வழியில்லாமல், கடையில் அவரின் அறையிலேயே அவரைச் சந்தித்தாள். “ஒரு ஆறு மாதம் போகட்டுமே அப்பா. இவ்வளவு காலமும் படிப்பு படிப்பு எண்டு இருந்திட்டன். கொஞ்சக் காலம் ஃபிரீயா…” என்றவளை இப்போதும் முடிக்க விடவில்லை அவர்.

“ஏன், வெளிநாட்டுக்குப் போன அவன் திரும்பி வாறதுக்கு உனக்கு இந்த ஆறுமாதம் தேவைப்படுதா?” என்ற கேள்வி பெரும் இடியாய் அவள் தலையில் இறங்கிற்று.

அதிர்ச்சியில் சுவாசிக்கக் கூட முடியாதவளாய் அப்படியே நின்றுவிட்டாள் நிரல்யா. கிடுகிடு என்று தேகம் நடுங்கி வியர்க்க ஆரம்பித்தது.

அவளையே பார்த்திருந்தவரின் முகம் கோபத்தில் சிவந்து ஜொலித்தது. அவர்களுக்குள் தொடர்பு இருப்பது தெரியாதபோதும் சிசிர இரண்டு வருடப் படிப்பிற்காக இலண்டன் போயிருப்பதை அறிந்துதான் வைத்திருந்தார். இவள் கேட்ட ஆறு மாதமும் அவனுக்குப் படிப்பு முடிய மிச்சமாய் இருக்கும் ஆறு மாதமும் ஒத்துப்போனதில் தான் அப்படிக் கேட்டார். ஆனால், அவர் கேட்டதை மறுக்காமல் அவள் பயந்து நடுங்குவதைக் கண்டபோது, தான் விரைந்து செயலாற்ற வேண்டியதின் அவசியம் அவருக்குப் புரிந்து போயிற்று.

அதில், “நீ தலைகீழா நிண்டாலும் நீ நினைக்கிறது நடக்கவே நடக்காது. நந்தனோடதான் உனக்குக் கலியாணம். நான் சொல்லுற நாளில அவனுக்குக் கழுத்தை நீட்டுறதுக்கு ரெடியா இரு. போ!” என்றார் முடிவாக.

அதற்குமேல் அவர் முன்னால் நிற்கும் தைரியம் இல்லாமல் வெளியே வந்தவளுக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. கைகால்கள் எல்லாம் நடுங்கின. எல்லாமே அவள் கையை மீறிவிட்டது போன்ற ஒரு பயம் போட்டு ஆட்டியது.

அனந்தனோடு ஒரு திருமணத்தை, வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியவில்லை. எப்படித் தடுக்கப் போகிறாள்? என்ன செய்யப் போகிறாள்? கடவுளே கடவுளே என்று நெஞ்சு அரற்றியது. சிசிரவோடு கதைக்க, என்ன செய்ய என்று கேட்கக் கூட முடியவில்லை. ஏதாவது அவளேதான் யோசித்துச் செய்ய வேண்டும். என்ன செய்யப் போகிறாள்? மீண்டும் மீண்டும் அதே கேள்வி.

வீடு வந்தவளின் மெயிலுக்கு ஒரு வீடியோ அனுப்பி இருந்தான் சிசிர. அது இரகசிய மெயில். அதுவும் சரண்யாவின் பெயரில் திறந்தது. அவனோடு பேசுவது என்றால் மட்டுமே அதைத் திறப்பாள்.

அதில், “நிரா, மகே லஸ்ஸன கெல்ல” என்று அவன் சொல்லும்போதே அவள் விழிகள் நிறைந்து போயின. என் அழகி என்று கொஞ்சும் அவன் காலடிக்குப் போவதற்காக அவள் போராடும் போராட்டடம்தான் எத்தனை? அவளால் முடியவே இல்லை. மனமும் உடலும் ஓய்ந்து கிடந்தது. யாராவது என் மனத்தை, அதிலிருக்கும் ஆசைகளை, கனவுகளை விளங்கிக்கொள்ளுங்களேன் என்று கதறினாள். யார் காதிலும் விழவே இல்லை.

விழிகளைத் துடைத்துக்கொண்டு திரும்பவும் பிளே செய்தாள். “சுகமா இருக்கிறாய் தானே? ஒண்டுக்கும் யோசிக்காத. சரியா ஆறு மாதத்தில நான் வந்திடுவன். எவ்வளவோ கடந்து வந்திட்டம். நான் அடிவாங்கி, நீ தனியாக் கிடந்து அழுது, நீ எப்பிடி இருக்கிறாய் எண்டு எனக்குத் தெரியாம, நான் எப்பிடி இருக்கிறன் எண்டு உனக்குத் தெரியாம, கடைசியா பக்கத்தில பக்கத்தில இருந்தும் சந்திக்காம, இப்ப உன்ன விட்டுட்டுக் கடல் கடந்து வந்து எண்டு நிறையப் பார்த்தாச்சு. இனி நாங்க சந்தோசமா இருக்கிற காலம் வந்திட்டுது. இன்னும் ஆறுமாதம் தான். எதையாவது சொல்லிச் சமாளி. நான் வந்ததும் முதல் வேலையா உன்ர வீட்டில வந்து கதைக்கிறன். அடுத்த ஒரு மாதம் என்னால உன்னோட கதைக்க ஏலுமா தெரியாது. ஒரு தீவுல இருக்கிற பண்ணைக்குப் போறன். ப்ளீஸ் மா, இண்டைக்கு இரவாகிறதுக்கிடையில எனக்கும் ஒரு வீடியோ அனுப்பு. இந்த ஒரு மாதத்துக்கும் எனக்குத் துணையா இருக்கப் போறது அதுதான். அங்க இருந்து வந்ததும் உன்னோட கதைக்கிறன், சரியா” என்றதோடு முடிந்திருந்தது அந்த வீடியோ. அதுவும் அதிகாலைப் பொழுதில் பஸ்ஸில் பயணித்தபடிதான் இதைப் பதிவு செய்திருக்கிறான் என்று அவனுடைய சுற்றுப்புறம் சொல்லிற்று.

திரும்ப திரும்பப் போட்டுக் கேட்டாள். கேட்க கேட்க கண்ணீர் தளும்பிற்று. கூடவே, அவன் வார்த்தைகள் மனத்தில் ஒரு தைரியத்தை தந்தன. முகம் கழுவித் துடைத்து, அழுத தடத்தை மறைத்துக்கொண்டு, “என்னால முடிஞ்ச வரைக்கும் சமாளிக்கிறன் சிசிர. நீங்க கவனமாப் போயிற்று வாங்கோ. இங்க என்ன நடந்தாலும் உங்கட நிரா உங்கட நிராவாவே உங்களுக்காகக் காத்திருப்பா.” குரல் தழுதழுக்கப் பதிவு செய்து, உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவனுக்கொரு முத்தத்தையும் கொடுத்து அந்த வீடியோவை அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

பரீட்சசைகள் முடிந்ததிலிருந்து காலையிலேயே கடைக்குப் போவதை வழக்கமாக்கியிருந்தாள் நிரல்யா. அடுத்தநாளும் வழமை போன்று கடைக்குப் போய்விட்டு பகல் உணவுக்கு வந்தவளின் முகம் சோர்ந்து, சிவந்து கணகணத்தது.

“என்னம்மா ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? காய்ச்சல் ஏதுமா?” என்று பதறியபடி அமிர்தவல்லி அவளருகில் வருவதற்கிடையில், “ஒண்டுமில்லை அம்மா.” என்று உயிர்ப்பே இல்லாத குரலில் சொல்லிவிட்டு மாடியேறினாள் அவள்.

நடையில் ஒரு தள்ளாட்டம். விட்டால் ஒடிந்து விழுந்துவிடுவாள் போல் இருந்தாள். ‘என்னாயிற்று? காலையில் சாப்பிட்டுத்தானே போனாள்?’ அவர் நெஞ்சிலே என்னவோ ஒரு நடுக்கம் பிடித்தது.

எப்போதும் உடை மாற்றி, முகம் கழுவிக்கொண்டு சாப்பிடக் கீழே வருவாள். அப்படி வரட்டும் என்று காத்திருக்க முடியாமல், அடிவயிற்றை என்னவோ செய்ய அவள் பின்னால் தானும் மாடியேறினார்.

அங்கே கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள் நிரல்யா.

அதைக் கண்டதும் அவருக்கு மெல்லிய கோபம் வந்தது. “உடம்புக்கு ஏதுமா எண்டு கேட்டனான் எல்லா பிள்ளை. வாயத் திறந்து சொல்லுறதுக்கு என்ன?” என்று கடிந்தபடி அவளை நெருங்கினார். அவள் அணிந்திருந்த பாவாடை சட்டையின் பிளவுசின் முதல் இரண்டு பட்டன்கள் திறந்திருக்கக் கண்டு, “என்ன பிள்ளை இது…” என்று குனிந்தவர் அங்கிருந்ததைக் கண்டு, “என்ர அம்மாளாச்சி!” என்று நெஞ்சைப் பற்றிக் கூவியபடி இரண்டடிகள் பின்னால் எடுத்து வைத்திருந்தார்.

அந்தளவு அதிர்ச்சி. நெஞ்சு ஒரு முறை நின்று துடித்தது. நம்ப முடியாமல் மீண்டும் பார்த்தார். அவளின் இடப்பக்க மார்பில் ‘சிசிர’ என்று அவள் குத்தியிருந்த பச்சை, பச்சைப் புண்ணாய்க் கிடந்து அவர் நெஞ்சையே அறுத்தது.

தொடரும்...

திருப்பி வாசிக்க இல்ல. நாளைக்கு பார்த்து ஏதும் பிழை இருந்தால் எடிட் பண்ணி விடுறேன்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 22


சுந்தரலிங்கமும் அமிர்தவல்லியும் இடிந்துபோய் அமர்ந்திருந்தனர். தம் மகள் இந்தளவு தூரத்துக்குப் போவாள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இனி என்ன செய்வது, அடுத்து என்ன என்று யோசிக்க கூட முடியாத நிலை.

அதுவும் சுந்தரலிங்கம் தன் திட்டங்கள், எதிர்காலம் குறித்தான கனவுகள் அத்தனையும் நொருங்கிப் போனதில் முற்றிலும் நிலைகுலைந்து போனார். இனி எப்படி அனந்தனுக்குக் கட்டி வைப்பார்? முதலில் அவன் முகம் எப்படிப் பார்ப்பார்? எப்படியான ஒருவனை உதறிவிட்டால் இந்தப் பெண்? நினைக்க நினைக்கக் கோபமும் ஆற்றாமையும் சேர்ந்து பொங்கிற்று.

அமிர்தவல்லியால் தான் பார்த்த காட்சியை இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை. அதுவும், அதிர்ச்சியில் மூச்சே நின்றுவிட அவளையே வெறித்தவரிடம், “சிசிரவ என்னால மறக்கேலா அம்மா. அவர் இல்லாம எனக்கு வாழ்க்கை இல்ல. எனக்காக, நான் வேணும் எண்டுறதுக்காகப் படிக்க லண்டனுக்கு போயிருக்கிறார். அவர் வாற வரைக்கும் நான் நானா இருக்கோணும். அதுக்கு எனக்கு இதத் தவிர வேற வழி தெரியேல்ல.” என்று உடைந்து அழுதவளின் பேச்சு, அவர் தலையில் இடியாகவே இறங்கிற்று.

ஆக, அவர் தலையில் செய்த சத்தியத்தை மீறி இருக்கிறாள். உயிரைக் கொடுத்தாவது சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என்று அவர் சொல்லியும் அவனோடு தொடர்பில் இருந்திருக்கிறாள். எல்லாத்தையும் விட்டுவிட்டாள், மறந்துவிட்டாள் என்று இந்த இரண்டு வருடங்களும் நம்பிக்கொண்டு இருந்த அவரை முட்டாளாக்கிவிட்டாளே!

அவரால் அவர் பார்த்த காட்சியை, அவள் சொன்னதை எல்லாம் அதை இலகுவாகக் கடந்துவர முடியவே இல்லை. நெஞ்சுக்குள் என்னவோ அடைத்துக்கொண்டு நின்றது. ஐயோ ஐயோ என்று மனம் கிடந்தது ஆதரித்தாலும் பிடித்து வைத்த சிலைபோல் அப்படியே அமர்ந்திருந்தார்.

“அவளை அந்தப் பெடியனுக்கே கட்டிக் குடுங்கோ.” அவ்வளவு நேரமாக அவர்களைச் சூழ்ந்திருந்த கனமான அமைதியைக் கலைத்தபடி ஒலித்த மனைவியின் குரலில் திரும்பிப் பார்த்தார் சுந்தரலிங்கம்.

“இனியும் வற்புறுத்தி அனந்தனுக்குக் கட்டி வைக்கிறதில அர்த்தமே இல்ல. அந்தச் சிங்களப் பெடியனுக்குக் கட்டிக் குடுக்காட்டியும் பரவாயில்ல. இன்னொருத்தனுக்குக் குடுக்க இனி நான் விடமாட்டன். அவள் எங்களுக்கு மகளாவே இருக்கட்டும்.” என்றவர் குரல் மெல்ல மெல்ல உடைய ஆரம்பித்தது.

தவித்துப்போனார் சுந்தரலிங்கம். சில நேரங்களில் அவரிடம் சீறிச் சினந்து கோபப்பட்டிருக்கிறார்தான் என்றாலும் இப்படி அழ வைத்ததில்லை. அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து அவர்கள் பெற்ற மகள் அழ வைக்கிறாள்.

“முதல் அப்பிடி என்ன இவளோட வாழவேணும் எண்டு அவனுக்குக் கட்டாயம். அவனுக்கு ஏற்ற பிள்ளை எங்கட மகள் இல்லையப்பா. நாங்க அதுக்குக் குடுத்து வைக்கேல்ல. அவள் எங்களுக்கு நியாயமா நடக்க இல்லை எண்டு நீங்க அவனுக்கு நியாயம் இல்லாம நடந்திடாதீங்க. நீங்க கேட்டா அவன் இப்பவும் ஓம் எண்டு சொல்லுவான். ஆனா கேக்காதீங்க. பாவம் பிள்ளை. எங்களை நம்பி எங்களோடயே இருக்கிறவன். அவனுக்கு ஒரு நல்லதைச் செய்து வைக்க வேண்டியதும் எங்கட கடமை.”

அவனுக்கு அவளைப் பிடிக்கும் என்று சொல்ல முடியாமல் நின்றார் சுந்தரலிங்கம். அவர் மனம் அனந்தனைத் தேடிற்று. அவரின் உற்ற துணை அவன்தானே. மனைவிக்கு ஒன்றும் சொல்லாமல் எழுந்து புறப்பட்டார்.

அதன் பிறகும் அப்படியே அமர்ந்திருந்தார் அமிர்தவல்லி. அசையவில்லை. மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தும் எட்டிப் பார்க்க மனம் வரவில்லை. இவ்வளவையும் தைரியமாகச் செய்தவளுக்குத் தன்னைப் பார்த்துக்கொள்ளத் தெரியாதா என்று கோபம்தான் வந்தது.

நிரல்யாவுக்கு காய்ச்சல் நன்றாகவே காய்ந்தது. தன்னிடம் இருந்த ஒற்றை பனடோலை விழுங்கிவிட்டு அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டாள். அன்னை தன்னைப் பார்த்த பார்வையும், ஒற்றை வார்த்தை கூடப் பேசாமல் அறையை விட்டு வெளியேறியதையும் எண்ணிக் கண்ணீர் வழிந்தது. இனி என்ன பூகம்பம் வெடிக்குமோ, அப்பா என்ன சொல்வாரோ என்கிற பயங்கள் நெஞ்சை ஆட்டிப் படைத்தாலும் அதற்கு மேலே யோசிக்க முடியாமல் உடல் அனலாகக் கொதித்தது. ஏதோ ஒரு தைரியத்தில் பச்சை குத்திக்கொண்டாள்தான். இப்போது அசையக் கூட முடியவில்லை. எந்தப் பக்கம், எவ்வளவு கவனமாகத் திரும்பினாலும் அங்கே பச்சைப் புண்ணாக வலித்தது. ஆடாமல் அசையாமல் கிடந்து அப்படியே உறங்கிப் போனாள்.

இங்கே கடைக்கு வந்த சுந்தரலிங்கம் அனந்தனின் அறைக்குத்தான் நேராக வந்தார்.

யார் என்று நிமிர்ந்தவன் அவர் முகம் வாடி வதங்கி, சுண்ணாம்பாய் வெளுத்திருக்கக் கண்டு, “என்ன மாமா, உடம்புக்கு ஏதும் சரியில்லையா?” என்றபடி வேகமாக எழுந்து அவர் அருகில் வந்தார்.

அவனின் அந்த அக்கறையில் குரல் உடைய, “உனக்கு என்ன நியாயம் செய்யப் போறன் எண்டு எனக்குத் தெரியேல்ல நந்தா?” என்றார் அவன் கையைப் பற்றியபடி.

அவர் கையில் மெல்லிய நடுக்கம். ஏனோ அன்று மாடியேறி வந்து, தன் கையைப் பற்றி நிரல்யாவைக் கட்டுகிறாயா என்று கேட்டது நினைவு வந்தது. இன்றும் அவள் பற்றிய ஏதோ ஒன்றுதான் என்று உள்ளுணர்வு உணர்த்தியதில் உள்ளே உள்ளத்தில் முணுக்கென்று ஒரு துடிப்பு. எதையும் காட்டிக்கொள்ளாமல், “முதல் என்ன நடந்தது எண்டு சொல்லுங்கோ. அதுக்கு முதல் வாங்கோ, வந்து இருங்கோ!” என்று அவரை நாற்காலியில் அமர்த்தினான்.

“இப்ப சொல்லுங்கோ.”

“இந்தக் கலியாணம் நடக்காது நந்தா.” என்றார் அவனை இயலாமையோடு பார்த்து.

அவன் தொண்டை ஒருமுறை ஏறி இறங்கிற்று. வேகமாக அவரிடமிருந்து பார்வையை அகற்றித் தன்னைச் சமாளிக்க முயன்றவன், அப்படி ஏதும் செய்தால் தன்னைக் கண்டுகொள்வார் என்பதில் ஒரு பிடிவாதத்துடன் அவரையே பார்த்து, ஏன் என்பதுபோல் புருவங்களைச் சுருக்கினான்.

“அவள் அவன்ர பெயரையே பச்சை குத்திக்கொண்டு வந்திட்டாள்.” என்றார் அவனிடமிருந்து பார்வையை அகற்றிக்கொண்டு. ஒரு தந்தையாய் எங்கு என்று சொல்ல முடியவில்லை.

அவனுக்கும் இது பெரும் அதிர்ச்சிதான். கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேச முடியாமல் போயிற்று. அதை உணரும் நிலையில் சுந்தரலிங்கம் இல்லை. மனைவியிடம் கூடப் பகிராத குமுறலை அவனிடம் கொட்டினார்.

“அவளுக்கு எவ்வளவு தைரியம் எண்டு யோசிச்சுப் பார். சின்ன பிள்ளை, உலகம் தெரியாதவள், தெரியாம ஒண்டச் செய்திட்டாள் எண்டு நினைச்சுக்கொண்டு இருந்தா… பயமா இருக்கு நந்தா. இவ்வளவு நாளும் நான் செய்த தொழிலை நினைச்சுக் கவலைப் பட்டதே இல்ல. ஆனா இப்ப ஆர் ஆருக்கோ செய்த பாவத்துக்குத்தான் இப்பிடி எல்லாம் நடக்குதோ எண்டு பயமா இருக்கு.” என்றதும் அவர் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தான்.
 
Status
Not open for further replies.
Top Bottom