You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member

“என்ன மாமா இது? அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. கொஞ்சம் நிதானமா இருங்க.” என்றவனையும் பச்சை குத்தும் அளவுக்குப் போனவளின் நெஞ்சின் உறுதி கொஞ்சம் மிரட்டித்தான் பார்த்தது. ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “இனி என்ன செய்யப் போறீங்க?” என்று வினவினான்.

“என்ன செய்யச் சொல்லுறாய்? அண்டைக்கே இவளை உனக்குக் கட்டிவைக்காம நம்பிப் படிக்க அனுப்பினதுக்குப் பாடம் படிப்பிச்சு இருக்கிறாள். மனம் விட்டே போச்சு எனக்கு. வாற ஆத்திரத்துக்கு நீ எவனையும் கட்ட வேண்டாம், காலத்துக்கும் வீட்டோடையே இரு எண்டுதான் சொல்ல வேணும் மாதிரி இருக்கு. ஆனா பெத்திட்டனே. பெத்த கடமையைச் செய்து முடிக்கத்தானே வேணும்.” என்றார் பெரும் கசப்புடன்.

அதற்கு ஒன்றும் சொல்லப் போகவில்லை அவன். மனத்தில் இருப்பதை எல்லாம் கொட்டட்டும் என்று விட்டான். சற்று அவர் அமைதியானதும் அருந்தக் கொடுத்துவிட்டு, சந்திரனை கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அவரோடு வீட்டுக்குப் புறப்பட்டான்.

அவனைக் கண்டதும் கண்கள் கலங்கி மன்னிப்புக் கேட்ட அமிர்தவல்லியையும் சமாதானம் செய்து, கையோடு இருவரையும் சாப்பிட வைத்து, அப்படியே அவர்களின் அறையில் விட்டுவிட்டு, “எதையும் யோசிக்காதீங்க மாமா. என்ன எண்டு பாக்கலாம். இப்ப ரெண்டுபேரும் கொஞ்சம் படுத்து எழும்புங்க.” என்றுவிட்டு அவன் வெளியே வந்தபோது, முகம் சோர்ந்து, தலை கலைந்து, கண் மடல்களெல்லாம் வீங்கி, நலுங்கிய வீட்டுடையுடன் மாடியேறிக்கொண்டு இருந்தாள் நிரல்யா.

அவன் விழிகள் அவன் அனுமதி இல்லாமலேயே அவள் பச்சை குத்திய இடத்தைத் தேடிற்று. கைகள், கால்கள், காதுக்குக் கீழே, கழுத்து எங்கும் காணவில்லை. வெளியே தெரியாத இடம் ஊகித்ததும் அவன் மூச்சு சீறலாக வெளிப்பட்டது.
அவனைக் கண்டதும் அவள் தயங்கி நிற்க,
பார்வையாலேயே அவளை எரித்துவிட்டுப் போனவனின் நெஞ்சம் கொதித்தது. இனித் தன் சிந்தையில் கூட அவளை வரவிடக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் அடுத்து வந்த நாள்களைக் கடத்தினான். ஆனால், அதற்காக நெஞ்சுக்குள் பெரும் போராட்டம் நடத்திச் சோர்ந்தான். வெளியில் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நடிக்கவேண்டி இருந்தது.

அவன் மனத்தை அறிந்திருந்த சுந்தரலிங்கத்தால் வாய்விட்டு எதையும் கேட்க முடியவில்லை. ஆசை காட்டி மோசம் செய்தது போலாயிற்றே என்று உள்ளுக்குள் அரிக்கும் இந்தத் துன்பத்தைத் தாங்க முடியாமல், “உனக்குக் கலியாணத்துக்குப் பாக்கட்டா?” என்றார்.

ஒருகணம் தடுமாறினாலும், “முதல் அவளுக்கு முடிங்க மாமா.” என்றான்.

“அவளுக்குச் செய்ய என்ன இருக்கு? அவன் வந்ததும் கட்டி வைக்கிறதுதானே.” என்றார் கசந்த குரலில்.

“முதல் அத முடிப்பம். இப்ப எனக்கு என்ன அவசரம்?”

மகளை மனத்தில் வைத்து இப்படிச் சொல்கிறானோ என்று தோன்றியதும் அவருக்குக் கவலையாயிற்று.

உண்மையில் அன்று அவனை ஏன் அழைத்து வந்தார் என்று கேட்டால் அவரிடம் பதில் இல்லை. ஒற்றைப் பெண் குழந்தையோடு நின்று போனதில் ஒரு மகனுக்கான ஏக்கம் அவருக்கும் அமிர்தவல்லிக்கும் அந்த நாள்களில் இருந்துகொண்டேதான் இருந்தது. அதனாலோ என்னவோ துக்கம் விசாரிக்கப் போனபோது அம்மா அப்பா இருவரையும் இழந்துவிட்டு, தவித்த குழந்தையாய் நின்றவனை அப்படியே விட முடியாமல் போயிற்று. அவர் பாக்கும் தொழிலினால் தனக்கும் மனைவிக்கும் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் தன் மகளும் இப்படித்தானே நிற்பாள் என்று தோன்றிவிடவும் மேலே யோசிக்கவில்லை. அழைத்து வந்துவிட்டார். அமிர்தவல்லிக்கும் அவன் பெறாமகனாகிப் போனான். தொழிலுக்குள் அவன் நுழைந்தது அவரே எதிர்பாராத ஒன்று. சந்தோசத்தைத் தந்த அதே நேரம் அவனையும் இதற்குள் கொண்டு வருவது சரியா என்கிற கேள்வியும் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவன் தொழிலை நேர்த்தியாகவும் இன்னும் சிறப்பாகவும் நடத்த ஆரம்பித்து, அவருக்கான மதிப்பையும் மதியாதையையும் பன்மடங்காய் உயர்த்தித் தரத் தொடங்கவும் யாவருமே அவனைப் பற்றிக்கொண்டார்.

அதன் பிறகு அவர் மனத்தில் அவனுக்கும் நிரல்யாவுக்குமான இடம் ஒன்றேதான். அதுவும் இன்றைய நிலைமையில் மகளை விடவும் அவனுக்கான இடம் உயர்வுதான். அப்படியானவனுக்கு தான் நியாயம் செய்யவில்லை என்று மனம் உறுத்தவும், “என்னில் கோவமா? அதா கலியாணம் வேண்டாம் எண்டு நிக்கிறாய்?” என்றார் அவன் முகத்தையே பார்த்து

“என்ன மாமா சும்மா சும்மா கண்டதையும் யோசிக்கிறீங்க போல. கலியாணம் வேண்டாம் எண்டு நான் சொல்லேல்லையே. அவளுக்கு முதல் முடியட்டும். பிறகு கட்டாயம் நானும் கட்டுறன். அவளின்ர பொறுப்பு உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் இருக்கு.” என்றுவிட்டு எழுந்து போனான்.

இப்படியான ஒருவனைத் தவற விட்டுவிட்டாளே மகள் என்று உள்ளுக்குள் இப்போதும் அழுதார் சுந்தரலிங்கம்.

அடுத்து வந்த யாரும் எதைப்பற்றியும் அவளோடு கதைக்கவே இல்லை. அமிர்தவல்லி முற்றிலும் அவளை விட்டு ஒதுங்கி இருந்தார். சாப்பிட குடிக்க என்று எதையும் கவனிக்கவும் இல்லை, கேட்கவும் இல்லை. என்னவோ எல்லாம் விட்ட நிலை. பசித்தால் சாப்பிடத் தெரியாத? சாப்பாடு எப்போதும் இருக்கும் என்கையில் போட்டுச் சாப்பிடட்டும் என்று விட்டுவிட்டார்.

என்னவோ அவளுக்கு இந்த முறை அழுகை வரவில்லை. தான் செய்ததற்கு இது தேவைதான் என்று எண்ணிக்கொண்டாள். தீவிலிருந்து திரும்பிய சிசிரவோடு அறையில் இருந்தே மெல்லிய குரலில் கதைத்தாள்.

“அவேக்கு எல்லாம் தெரிஞ்சிட்டுது சிசிர.” என்றதும், “நிரா?” அவன் திகைத்துப் போனான்.

“என்ன சொன்னவே? பழைய மாதிரி ஏதும் பிரச்சினையா?”

“இல்ல இல்ல. நான்தான் அவேய… இட்ஸ் ஓகே! எப்பிடியும் இதத் தவிர்த்து இருக்கேலாது. எக்ஸாம் முடிஞ்சதும் கட்டாயம் நீங்க வாங்க. வந்து அப்பாவோட கதைங்க. பிறகு திரும்பப் போகலாம்.” என்றாள் கண்ணீரை அடக்கித் தன்னைத் திடமாகக் காட்ட முயன்றபடி.

“நிரா, என்னம்மா?”

அவனின் அந்த அன்பான அழைப்பில் உடைய பார்த்தவள், “உண்மையா ஒண்டும் இல்ல. ஆனா, நீங்க வராம விட்டுடாதீங்க ப்ளீஸ்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

பச்சை குத்தியத்தைப் பற்றி இப்போதே அவனுக்குச் சொல்லி, அவனையும் கவலைப்பட வைக்க விருப்பமில்லை அவளுக்கு. பரீட்சையை எல்லாம் நல்லபடியாக முடித்துக்கொண்டு வரட்டும், நேரிலேயே காட்டுவோம் என்று எண்ணிக்கொண்டாள்.

சிசிரவுக்கு மனதே சரியில்லை. அவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்று உறுதியாக எண்ணினான். சோர்ந்து, பொலிவிழந்திருந்த முகம் வேறு உறுத்தியது.

தொடரும்…

 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 23

அப்பா கோபப்படுவாரோ, அன்று அடிக்கவே வந்தாரே என்று நிரல்யா பயந்து நடுங்கியதற்கு மாறாக அவள் முகம் பார்ப்பதையே நிறுத்தியிருந்தார் சுந்தரலிங்கம். தாய் தகப்பன் இருவரும் ஏன் இப்படிச் செய்தாய் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை, கோபப்படவில்லை, திட்டவில்லை, அடிக்கவில்லை. அதுதான் அவளைக் கொல்லாமல் கொன்றது. நீ செய்தது பெரும் தவறு என்று இன்னுமின்னும் குத்தியது.

ஒரு வாரம் பொறுத்தவளால் அன்னையின் ஒதுக்கத்தையும் பாரா முகத்தையும் தாங்க முடியவில்லை. மன்னிப்புக் கேட்டு, தன்னை விளங்க வைக்க அவள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோற்றே போயின. அவளோடு பேசுவதை முற்றிலுமாக நிறுத்தியிருந்தார் அவர்.

அவள் மீதான கவனம், கவனிப்பு, கட்டுப்பாடு அத்தனையும் இல்லாமல் போயிற்று. எங்குப் போகிறாள், என்ன செய்கிறாள் என்று யாரும் கேட்பதில்லை. கடைப்பக்கம் வரவேண்டாம் என்று சுந்தரலிங்கம் சொல்லியிருந்தார். அதில் இப்போதெல்லாம் அவசியம் தாண்டி அவளும் எங்கும் செல்வதில்லை. வீட்டுக்குள்ளேயே கிட்டத்தட்ட முடங்கிய நிலை.

சிசிரவோடு கதைக்கும், குறுந்தகவல்கள் அனுப்பும் பொழுதுகள் மட்டுமே ஆறுதலானவை. இப்படியே அடுத்த மூன்று மாதங்கள் ஓடி இருந்தன.

அன்று, காலை உணவை எப்போதும்போல அங்கிருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான் அனந்தன். வெளியே செல்லத் தயாராகி இறங்கி வந்த நிரல்யா, அவனைக் கடந்து சமையலறை வாசலில் சென்று நின்றாள்.

“அம்மா நான் நிவேதாட்ட ஒருக்கா போயிட்டு வாறன்.” தயங்கி தயங்கிச் சொன்னாள். அவர் திரும்பவே இல்லை. தன் பாட்டுக்குக் கை வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.

“அது… அவர் சிசிர ஏதோ குடுத்துவிட்டிருக்கிறாராம். போய் வாங்கிக்கொண்டு வரச் சொன்னவர்.” பெரும் தயக்கமும் தடுமாற்றமுமாக அவள் சொல்ல, அப்போதும் அசையவில்லை அவர்.

ஆனால், இங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்த அனந்தனின் கை ஒரு கணம் அப்படியே நின்றுபோயிற்று. சிசிரவின் பெயர் இந்த வீட்டுக்குள் வெளிப்படையாக நடமாட ஆரம்பித்துவிட்டது புரிந்தது. வாய்க்குள் இருந்த உணவோடு சேர்த்து தன் உணர்வுகளையும் விழுங்கிக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டான்.

அன்னையிடமிருந்து பதில் வராததால், “போயிற்று வாறன் அம்மா.” என்று அடைத்த குரலில் சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தவள் அவனைக் கடக்கையில், “நிவேதா கிளிநொச்சிதானே?” என்றான் அவளைத் திரும்பிப் பார்க்காமல்.

“ஓ…ம்”

“என்னத்தில போகப்போறாய்?”

“ஸ்கூட்டி.” என்றதும் திரும்பி அவன் பார்த்த பார்வையில் பார்வையைத் தளைத்துக்கொண்டாள் நிரல்யா.

“நாதன் அண்ணா நிக்கிறார். கார்ல போ!”

அவள் மறுக்கவில்லை. சிறிதாகத் தலையை அசைத்துவிட்டுக் காரிலேயே புறப்பட்டாள்.

ஏதோ சப்ரைஸ் என்றும், இன்றைய நாளின் திகதியைச் சொல்லிக் காலையில் பத்து மணிக்குப் பிறகு நிற்பதுபோல் அங்கே போகச் சொல்லியிருந்தான் சிசிர. அவள் என்ன என்று எவ்வளவு கேட்டும் சொல்லவில்லை. அதைவிட, குறிப்பாக இன்று போ என்று ஏன் சொன்னான் என்கிற கேள்விக்கும் பதில் தரவில்லை. அவர்கள் நேசத்தைப் பரிமாறிக்கொண்ட அந்த நாள் கூட அடுத்த மாதம்தான் வருகிறது. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் தெரிய வந்துவிடும்தானே என்று சமாதானம் செய்துகொண்டாள்.

சீரான வேகத்தில் கார் பயணித்துக்கொண்டிருந்தது. தலையைச் சீட்டில் சாய்த்து பார்வையை வீதியின் மருங்கில் வைத்திருந்தாலும் சிந்தை அதிலில்லை.

இப்போதெல்லாம் அவள் நிம்மதி, சந்தோசம் எல்லாம் தொலைந்தே போயிற்று. அமைதியற்று, அலைப்புறுதலோடே நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. என்னவோ ஒரு அழுத்தம் நாளுக்கு நாள் எடையேறி அவளைப்போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது. சில நேரங்களில் இந்தக் காதல் எனக்கு ஏன் வந்தது என்றுகூட யோசிக்கிறாள். பேராதனைக்குப் போகாமல் இருந்து, சிசிரவைச் சந்திக்காமல் இருந்திருக்க அவன் அவன் உலகத்திலும் அவள் அவள் உலகத்திலும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள். அவள் வீட்டினருக்கும் அவளால் எந்தத் துன்பமும் வந்திராது.

அவனும் அங்கே தனியாக, அவளும் இங்கே எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டவளாக, அவள் குடும்பமும் அவளால் உடைந்து என்று இந்தக் காதலால் யாருமே சந்தோசமாய் இல்லையே. பிறகும் ஏன் அவளுக்கு இந்தக் காதல் வந்தது?

கண்களில் சேர்ந்துவிட்ட கண்ணீரை நாதன் அண்ணா அறியாமல் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

நிவேதா இவளைக் கண்டுவிட்டு வாசலுக்கே வந்து அழைத்துப் போனாள். அவளின் அம்மா, அப்பா, தம்பி எல்லோருமே இன்முகமாகப் பழகினர்.

என்ன சப்ரைஸ் என்று எப்படிக் கேட்பது என்று அவள் குறுகுறுப்புடன் அமர்ந்திருக்க, “ஒரு அங்கிள் நேற்று இரவு இந்தப் பார்சல் கொண்டுவந்து தந்திட்டுப் போனவரடி.” என்று, நிவேதா ஒரு அளவான பெட்டியைக் கொண்டு வரவும் பரபரத்துப்போனாள் நிரல்யா.

அதைப் பார்த்ததுமே அவளுக்கு விழிகள் தளும்பிப் போயின. அவளின் சிசிர அவளுக்காகக் கொடுத்துவிட்டதாயிற்றே. நேசத்துடன் பார்சலை வருடினாள். இலகுவாகப் பிரிக்க முடியாத அளவில் சலோடேப்பினால் சுற்றப்பட்டிருக்க நிவேதா கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து பிரித்தாள்.

முதலாவதாக வந்தது ஒரு சேலை. அதற்குள் எதையோ சுற்றி வைத்திருக்கிறான் என்று அதை வெளியே எடுக்கும்போதுதான் உணர்ந்தாள். பிரிக்க ஒரு பெட்டி. அதுவும் சலோ டேப்பினால் ஒட்டி இருந்தது. “என்னடி இது? தங்கமா அனுப்பி இருக்கிறார் அண்ணா?” என்றபடி நிவேதா அதையும் பிரிக்க உண்மையிலேயே அதற்குள் இருந்த தங்க நகைகளைக் கண்டு நிவேதாவும் அவள் வீட்டினரும் பயந்தே போயினர்.

“என்னடி இது, சும்மா சொன்னா உண்மையாவே நகை இருக்கு.”

“நாங்க என்னவோ உடு புடவை போல எண்டு நினைச்சு சாதாரணமா வச்சிருந்தனாங்க. கள்ளர் ஆரும் வந்திருந்தா?”

நிவேதாக்கும் அவளின் அன்னைக்கும் எந்தப் பதிலும் சொல்லும் நிலையில் நிரல்யா இல்லை. கண்ணீரும் புன்னகையுமாக அவற்றை எடுத்துப் பார்த்தாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வேறு டிசைனில் இருந்தாலும் அவள் கொடுத்தது போலவே ஒரு ஹாரம் செட்டும் கழுத்தோடு போடும் இன்னொரு நெக்லசும் இருந்தது. கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியாமல் கண்ணீர் பெருகி வழிந்தது. அந்தத் தவறை என்றைக்கும் அவளால் நேர் செய்ய இயலாத போதிலும் பெரிய குற்ற உணர்ச்சியிலிருந்து அவளை மீட்டுவிட்டானே!

கூடவே இருந்த இன்னுமொரு குட்டி நகைப்பெட்டிக்குள் வெள்ளைக் கல் வைத்த மூக்குத்தி அவளைப் பார்த்துச் சிரித்தது. அதைக் கையினில் எடுத்துப் பார்த்தாள். அந்தப் பெட்டிக்குள்ளேயே நான்காக மடித்த துண்டு ஒன்றும் இருக்க, கைகள் நடுங்க அதைப் பிரித்தாள்.

‘எப்பவும் என்னைப் பற்றி மட்டுமே யோசிக்கிற என்ர நிராவுக்கு என்ர முதல் சம்பளத்தில் வாங்கினது.’ என்று எழுதியிருந்ததைக் கண்டு இதழ்கள் நடுங்க முறுவலித்தவளின் கண்கள் கண்ணீரில் பளபளத்தன.

“உன்ன செலக்ட் பண்ணினதில இருந்து அண்ணான்ர செலக்ஷன் எல்லாமே அப்பிடி இருக்கு.” என்ற நிவேதாவின் குரலில் திரும்பிப் பார்த்தாள்.

அவன் கொடுத்துவிட்டிருந்த சேலையைப் பிரட்டி பிரட்டிப் பார்த்தபடி சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அப்போதுதான் நிரல்யாவும் சேலையைப் பார்த்தாள். பார்த்ததும் அவள் புன்னகை இன்னுமே விரிந்து போயிற்று.

போடரில் சின்ன சின்ன கற்கள் பதித்திருக்க அந்தச் சேலையும் பச்சையிலும் சிவப்பிலும் பெரிய பெரிய செக் செக்கில் இருந்தது.

அந்தச் சேலையை வாங்கி வருடிக் கொடுத்தவளின் நெஞ்சில் அவன் மீதான நேசம் பேரலையாய்ப் பொங்கிற்று. அந்த நிமிடமே அவன் குரலைக் கேட்டுவிட வேண்டும் போலிருக்க எழுந்து வெளியே வந்து அவனுக்கு அழைத்தாள். அழைப்புப் போகவில்லை. திரும்ப திரும்ப அழைத்தும் அவன் கைப்பேசி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவே சொல்லிற்று. தானிய ஆராய்ச்சி அறைக்குள் நின்றால் கைப்பேசியை நிறுத்தி வைத்துவிடுவேன் என்று சொல்லியிருக்கிறான் என்பதில் அதற்குமேல் அவள் அவனுக்கு அழைக்கவில்லை.

நிவேதா வீட்டினருக்கு நன்றி சொல்லி, கொஞ்ச நேரம் அவர்களோடு இருந்து உரையாடிவிட்டுப் புறப்பட்டவளின் மனம், நிறைய நாள்களுக்குப் பிறகு நல்ல மனநிலையில் இருந்தது. எல்லாம் சரியாகும், சிசிர சரியாக்குவான் என்று ஒரு நம்பிக்கை ஆழமாய் உண்டாயிற்று.

நகைகளை வீட்டுக்குக் கொண்டுவந்து வைத்தாள்.

அன்றே மூக்குத்தி குத்திக்கொள்ளும் ஆசை எழுந்தாலும் அவன் வந்தபிறகு, அவன்தான் அவள் குத்தும் மூக்குத்தியை முதன் முதலில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் அதைத் தள்ளிப்போட்டாள்.

அடுத்த நாளும் அவன் அழைக்கவில்லை. அதன் பிறகு வந்த ஒரு வாரம் முழுவதும் அவள் அழைத்தும் அவன் எடுக்கவில்லை. இன்னுமே கைப்பேசி நிறுத்தி வைத்திருப்பதாகவே சொல்லவும் ஒரு பயம் பிடித்துக்கொண்டது. மெயில், மெசேஜ் என்று எது அனுப்பியும் பதில் இல்லை. என்னாயிற்றோ, இப்படி இருக்க மாட்டானே!

மகிந்தவுக்கு அழைத்து அவன் வீட்டில் கேட்டுப்பார்க்கச் சொல்லிச் சொன்னாள். போலீஸ் ட்ரெயினிங்கில் இருப்பதாகவும், விசாரித்துவிட்டுச் சொல்வதாகவும் சொல்லி வைத்தான் அவன்.

இரண்டு நாள்கள் கழித்து எடுத்து, அவர்கள் அங்கே வீட்டில் இல்லை என்றும், பக்கத்தில் இருக்கிறவர்களுக்கும் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லையாம் என்றான் அவன்.

அவனுக்கு ஏதுமோ என்று பயந்துபோனாள் நிரல்யா. அவன் இலண்டன் போவதற்கு முதல் ஒரு வைராக்கியத்தோடு அவள் கதைக்காமல் இருந்தபோதும் கூட அவன் அந்தரித்துப் போனானே! அவனால் அவளோடு கதைக்காமல் இருக்கவே முடியாது, கதைக்க முடியா நிலையில் இருந்தால் மட்டுமே அப்படி இருப்பான் என்று நினைத்ததும் அழுகையே வந்திருந்தது.

இன்னும் இரண்டு மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று அவள் காத்திருக்க இது என்ன புதுப் பூகம்பம்? யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அனந்தனிடமே வந்து நின்றாள்.

*****

உடலை எந்தளவுக்கு இறுக்கமாக வைத்துக்கொள்வானோ அந்தளவில் மனத்தையும் வைரத்தின் உறுதியோடு வைத்துக்கொள்ளும் வித்தை அறிந்தவன் அனந்தன். அப்படித்தான் இருக்கிறானும் கூட! ஆனாலும் கூட மின்னல் அறுக்கும் மரமாய் சில நேரங்களில் அவன் நெஞ்சை அறுத்துவிட்டுப் போகிறது நிரல்யாவின் நினைவுகள்.

பல்கலையில் கடைசி நாள் அன்று கடைசி வந்தாலும் அவனைச் சந்திக்காமல் அவள் வந்திருக்கப் போவதில்லை என்று அவனுக்குத் தெரியும். அதே போல, அன்று அவன் சிசிரவுக்கு அடித்தபோது சிறகுகள் அறுத்து வீசப்பட்ட பறவையைப் போல் துடித்தவள், இங்கு வந்த பிறகு அப்படி நேசித்த நேசத்தை இழந்த பெருந்துயர் எதுவுமற்று அமைதியாய் நடமாடியதும் எதுவும் முடிந்துவிடவில்லை என்று அவனுக்குச் சொல்லாமல் இல்லை.

பருவத்தில் வந்த இனக்கவர்ச்சியாய், ஈர்ப்பாய் அவர்கள் நேசம் இருந்திருக்க சிசிரவுக்கு அவன் கொடுத்த அடியிலேயே அத்தனையும் காணாமல் போயிருக்கும். அவனைக் கடல் கடந்து போக வைத்து, அவளை இங்கே அவனுக்காய்க் காத்திருக்க வைத்திருக்கிறது என்றால் அந்த நேசத்தைக் கருவருக்கும் தைரியம் அவனுக்கில்லை.

அதுவும் அவளின் சின்ன சின்ன சந்தோசங்களை, சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் பார்த்து பார்த்து நிறைவேற்றியவன், அவளின் மின்னும் விழிகளின் அழகில் லயித்தவன் எப்படி அதைச் செய்வான்? அவளைப் பேசவிட்டே அழகு பார்த்தவனுக்கு அழவைத்துப் பார்க்கும் தைரியம் எங்கிருந்து வரும்?

பச்சை குத்தியது எல்லாம் அவனுக்கு ஒரு விசயமே இல்லை. ஆனால், சின்ன வலியைக் கூடத் தாங்காமல் துடிப்பவள் பச்சையைக் குத்தி நிரூபித்தது இன்னொருவனின் மீதான நேசத்தின் உறுதியை.

தன்னுடையது கைகூடா நேசம் என்று என்றோ தெரிந்துகொண்டிருந்தாலும் இத்தனைக்குப் பிறகும் கூட அவன் உயிர் முற்றிலும் போகாமல் குற்றுயிராய்க் கிடந்து துடித்துக்கொண்டேதான் இருக்கிறது.

அதுவும் இந்த இரண்டு மூன்று நாள்களாக அவன் இதயத்தில் பெரும் வலி ஒன்று போட்டு ஆட்டிக்கொண்டிருந்தது. புதிதாய் நடக்க என்ன இருக்கிறது என்று எவ்வளவு யோசித்தும் பிடிபடவில்லை. உள்ளம் அளவுக்கதிகமாய் அன்னையைத் தேடிற்று.

என் கண்ணனுக்கு என்ன குறை என்று கேட்டுக் கேசம் கோதும் அந்த இரண்டு கரங்களைக் காற்றில் தேடி தேடி ஏமாந்து போகிறான். வாய் விட்டு அழத்தெரியாத பிள்ளை அவன். தோளில் சாய்த்துத் தட்டிக்கொடுத்தால் போதும், தேறிக்கொள்வான். எதுவுமே கிட்டாமல் அவன் உலகமாகிப்போன மொட்டை மாடியில், ஒற்றை வாங்கிலில், தன்னந்தனியாக நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்தான்.

அவன் காதுகளுக்குள்,
முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…

மனதோரம் ஒரு காயம்…
உன்னை எண்ணாத நாள் இல்லையே…
நானாக நானும் இல்லையே…

வழி எங்கும் பல பிம்பம்…
அதில் நான் சாய தோள் இல்லையே…
உன் போல யாரும் இல்லையே…

தீரா நதி நீதானடி…
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்…
நீதானடி வானில் மதி…
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்…

என்று அவன் உள்ளத்தை அவனுக்கே உணர்த்தியபடி ஒலித்துக்கொண்டிருந்தது பாடல்.

தொடரும்...

கொஞ்சம் சின்ன எபிதான். ஆனா இவ்வளவுதான் எழுத முடிந்தது. முடிந்தால் இண்டைக்கு இரவு இன்னுமொன்று போடப் பாக்கிறேன். இல்லை என்றால் இனித் திங்கள்தான் வருவேன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 24


அவன் காதுகளுக்குள் செருகியிருந்த ஹெட்போன்கள் அவள் வந்து நின்ற அரவத்தைச் செல்லவிடாமல் தடுத்திருந்தாலும் அவள் வாசத்தை அவன் நாசி உணர்ந்துகொண்ட முதல் நொடியிலேயே விழிகளைத் திறந்து, திரும்பிப் பார்த்தான்.

கண்ணீரைக் கண்களுக்குள் தேக்கிப் பிடித்தபடி அவனையே பார்த்துக்கொண்டு நிற்பவளைக் கண்டு ஒரு விநாடி புருவங்களைச் சுருக்கியவன் வேகமாய் எழுந்து அமர்ந்து, கேள்வியாய் ஏறிட்டான்.

“அவரை… காணேல்ல…”

அவனுக்குப் புரியவில்லை. யாரைக் காணவில்லை என்கிறாள்? அவளிடம் இன்னும் தன் புருவங்களைச் சுருக்கினான்.

“அது… அவர்… சிசிர…” அவன் இருந்த மனநிலைக்கு முற்றிலும் ஒவ்வாத பேச்சு. நொடியில் அவன் முகத்தில் கோபச் சிவப்பு ஏறிற்று. அதைக்கண்டு அவள் பேச்சு நின்று போயிற்று. ஆனாலும் பரிதவிப்புடன், “கோபப்படாதீங்க ப்ளீஸ். ஒரு மாதமா அவரிட்ட இருந்து போன், மெயில், மெசேஜ் எண்டு ஒண்டும் இல்ல.” என்று ஆரம்பித்து, படபடவென்று மகிந்த மூலம் அவன் வீடுவரை விசாரித்ததைச் சொல்லிக்கொண்டு வந்தவள், திடீர் என்று தோன்றிய சந்தேகமாய், “நான் பச்சை குத்தின கோவத்துல நீங்கதான் ஏதும் செய்திட்டீங்களா?” என்று கேட்டு முடிக்க முதலே,” ஏய்! போடி கீழ!” என்று சீறியிருந்தான் அவன்.

நடுங்கிப்போய் வேகமாய் இரண்டடி தள்ளி நின்றாலும் அவள் போகவில்லை. “ப்ளீஸ் சொறி… நான் வேணுமெண்டு கேக்கேல்லை. ஆனா, அது எப்பிடி லண்டன்ல இருந்த அவரும் காலில இருந்த அவரின்ர வீட்டு ஆக்களும் திடீரெண்டு காணாம போவினம்? அதுதான் அப்பிடிக் கேட்டனான். உண்மையா சொறி. லண்டன்ல இருக்கிற அவருக்கு நீங்க எதுவும் செய்யேலாது எண்டு விளங்குது. ஆனா… ஆனா எனக்குப் பயமா இருக்கு. அதான் எனக்கு என்ன யோசிக்கிறது எண்டு கூடத் தெரியேல்ல. முதல் ஆரக் கேக்க? எனக்கு ஆரத் தெரியும். இப்பிடி ஒரு மாதத்துக்கு எல்லாம் என்னோட கதைக்காம இருக்க அவரால ஏலாது…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் பேச்சு, விழுக்கென்று நிமிர்ந்து அவன் பார்த்த பார்வையில் மீண்டும் நின்று போயிற்று. பயத்தில் மிடறு கூட்டி விழுங்கினாள்.

எழுந்துபோய் மொட்டை மாடியின் சுவரைப் பற்றிக்கொண்டு நின்றவனின் கை நரம்புகள் புடைத்தன. கதைக்காமல் இருக்க மாட்டானாமே! கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்தது. யாரிடம் வந்து யாரைப் பற்றிக் கதைக்கிறாள்? இவளுக்கு இதற்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? புசு புசு என்று அவனுக்குள் இருந்து அனல் மூச்சு வெளியேறியது.

தனக்குள் எரிமலையாய் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் அவன் சொல்லப்போகும் பதிலுக்காய்க் கண்களில் தழும்பிவிட்ட கண்ணீரோடு அவன் முதுகையே பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்.

தன் சினமும் சீற்றமும் பயனற்றவை என்று தெரிந்து, அவற்றை ஒதுக்கி வைத்து விழிகளை இறுக்கி மூடி, ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்.

சுந்தரலிங்கம் என்ன செய்வதாக இருந்தாலும் அவனைக் கேட்காமல் செய்யமாட்டார். எதுவாயினும் அவன் மூலமாய்த்தான் நடக்கும். வேறு யார்? அப்படி எப்படி இரண்டு இடங்களிலும் காணாமல் போவார்கள்? ஏனோ சிசிர ஏமாற்றியிருப்பான் என்கிற திசையில் யோசிக்க அவனுக்கு வரவில்லை. அவனால்தான் இன்று அவளைத் தான் இழந்து நிற்கிறோம் என்று தெரிந்திருந்தும் கூட, அன்று தன்னிடம் அவ்வளவு அடியை வாங்கிக்கொண்டு ‘போகாத நிரா’ என்று கதறியவனைச் சந்தேகப்படத் தோன்றவில்லை.

தன் அடிகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கும் என்று அவனுக்கே தெரியும். அதுவும் அன்று அவனைக் கொன்றே போடும் வெறியில் இருந்தான். நெஞ்சில் நேசத்தின் உரம் இல்லாமல் அவனால் அந்த அடிகளைக் கடந்தும் அவளை நேசிக்க முடியாது. அப்படியானவன் இப்போது எங்கே போனான்.

“இப்ப நான் உனக்கு என்ன செய்யோணும்?” தன் சிந்தனையை இடையில் நிறுத்தி வினவினான்.

அவள் இதழ்கள் நடுங்கின. எதையாவது செய்து அவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று கேட்க நினைத்தாள். வார்த்தைகள்தான் வரமாட்டேன் என்றன.

அவளிடமிருந்து சத்தம் இல்லாமல் போகவும் நின்ற நிலை மாறாமல் தலையை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான்.

அதற்காகவே காத்திருந்தவள் போன்று, “காலிக்கு ஒருக்கா என்னக் கூட்டிக்கொண்டு போறீங்களா?” என்றாள் அழுகையை அடக்கியதில் மூக்கும் முகமும் சிவக்க.

“நீ போய்?” கூர்மையாய் வெளிவந்தது அவன் கேள்வி.

உன்னால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கிறான். அவளுக்கும்தான் தெரியவில்லையே! அதற்கென்று சும்மாவே இருக்க முடியுமா?

“எனக்கும் தெரியேல்ல. என்ன செய்யப்போறன் எண்டு தெரியவே இல்ல. ஆனா எனக்கு அவரப் பாக்கோணும். சுகமா இருக்கிறார் எண்டு தெரிஞ்சாக் கூடப் போதும். அவருக்கு ஏதும் நடந்திட்டுதோ எண்டு பயமா இருக்கு. இன்னும் ரெண்டு மாதத்தில வந்திடுவன், வந்து அப்பாவோட கதைக்கிறன் எண்டு சொன்னவர். ஆனா இண்டைக்கு…” என்றவளுக்கு மேலே வார்த்தைகள் வராமல் இதழ்கள் நடுங்கின. என்னவோ இந்தக் கொஞ்ச நாள்களாக அவள் இதயம் நடுங்கிக்கொண்டே இருக்கிறது. உள்ளம் அமைதியிழந்து ஐயோ ஐயோ என்று தவிக்கிறது. ஏன், எதனால் என்று ஒன்றும் விளங்கவில்லை.

அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தவன் வேகமாகத் திரும்பி வான் வெளியில் தன் பார்வையை நிறுத்தினான். தன் கண் முன்னாலேயே அவள் அவனுக்காய் துடிக்கிறாள். உதட்டைக் கடித்து தன் உணர்வுகளை அடக்க முயன்றவனுக்குள் மீண்டும் பெரும் பூகம்பமே நிகழ ஆரம்பித்திருந்தது. அதையெல்லாம் தன் நெஞ்சுக்குள்ளயே புதைத்துக்கொண்டு, “கடைசியா எப்ப அவனோட கதைச்சனி?” என்றான் எந்த உணர்வுகளையும் சொல்லாத குரலில்.

“அண்டைக்கு நிவேதா வீட்டுக்குப் போறதுக்கு மூண்டு நாளைக்கு முதல்.”

“அங்க அல்லது இங்க ஏதும் பிரச்சினை, யாராவது அவனை வம்புக்கு இழுக்கிற மாதிரி, சண்டை சச்சரவு என்று ஏதும் சொன்னவனா?”

“இல்ல. அப்பிடி ஒண்டும் சொல்லவே இல்ல. அவரும் எந்தச் சோலி சுரட்டுக்கும் போகமாட்டார். கோவமே வராது.” என்றவளைச் சரக்கென்று திரும்பிப் பார்த்தான் அவன்.

அவளுக்குத் திரும்பவும் தொண்டை உலர்ந்து போயிற்று. “இல்ல… அது… அப்பிடி அவருக்கு எந்தப் பிரச்சினையும் இலை எண்டு சொல்ல…” என்று மென்று விழுங்கினாள்.

அதன் பிறகு அப்படி என்னானது? அவனுக்கும் எதையும் அனுமானிக்க முடியவில்லை. ஆனாலும் நிறைய யோசிக்கவில்லை. “இரவுக்கு வெளிக்கிடுவம். நாலு நாளைக்கு ஏற்ற மாதிரி உடுப்பு எடுத்து வச்சு ரெடியாகு!” என்றான் நின்ற நிலை மாறாமல்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவள் விழிகள் நம்ப முடியாத திகைப்பில் அகன்று போயின. அவன் சொன்னது உண்மைதானா என்பதுபோல் அவன் முதுகையே பார்த்து நின்றாள். என்னவோ அவன் அப்படிச் சொன்னதே சிசிரவே கிடைத்துவிட்டது போன்ற சந்தோஷத்தைத் தந்தது. நிச்சயம் அவனைத் தேடித் தந்துவிடுவான். அவன் மீது அவ்வளவு நம்பிக்கை.

அதில், “தேங்க்ஸ்… தேங்க்ஸ் மச்சான். ஹெல்ப் பண்ண மாட்டீங்க எண்டு நினைச்சன். உண்மையா தேங்க்ஸ்.” சந்தோச மிகுதியில் தழுதழுத்தாள்.

“நீ எண்டைக்கு என்னச் சரியா நினைச்சிருக்கிறாய் இண்டைக்கு நினைக்க?” என்றவனின் குரலில் என்ன இருந்தது? கசப்பு? விரக்தி? முகம் காட்டாமல் நின்று சொன்னவனின் குரலிலிருந்து எதையும் கண்டிபிடிக்க முடியாமல் திகைத்து நின்றாள் நிரல்யா.

ஒரு நெடிய மூச்சை நெஞ்சின் ஆழத்திலிருந்து இழுத்துவிட்டான் அனந்தன். மொட்டை மாடிச் சுவற்றைப் பற்றியிருந்த அவன் கைப்பிடி இறுகிற்று. ஒரே வீட்டில் இருந்தும் இவன் முகம் பாராமல், இவனோடு கதைக்காமல், இவனை ஒதுக்கி வைக்க அவளால் முடிந்திருக்கிறது. இன்று மட்டுமில்லை அன்றும்! ஆனால், அவளோடு கதைக்காமல் அவன் இருக்க மாட்டானாம். அந்தளவில் அவனைத் தெரிந்து வைத்திருக்கிறாள். இது தெரியாமல்… மேலே யோசிக்கக் கூடப் பிடிக்காமல், இன்னும் அவள் அங்கேயே நின்று அவனையே பார்த்துக்கொண்டு நிற்பதையும் பொருட்படுத்தாமல் அறைக்குள் சென்று, பஜிரோவின் திறப்பை எடுத்துக்கொண்டு கிடுகிடு என்று படிகளில் இறங்கிச் சென்று மறைந்தான்.

அவனுக்குச் சுவாசிக்கக் காற்றுத் தேவையாய் இருந்தது. அந்தளவில் மூச்சடைத்தது. நெஞ்சு வெடித்துவிடுமோ என்று அவனுக்கே பயமாயிற்று. எங்கென்று இல்லாமல் பஜிரோவை விரட்டினான். அவன் எண்ணமும் சிந்தனையும் ஒரு நிலைக்கு வரும் வரைக்கும் விரட்டினான்.

அனந்தனின் முடிவில் சுந்தரலிங்கத்துக்கு மருந்துக்கும் ஒப்புதல் இல்லை. “அண்டைக்கும் நான் சொன்னதை நீ கேக்கேல்லை நந்தா. இண்டைக்காவது கேள். இந்த முறை நாங்க ஒண்டும் செய்ய இல்ல. அவனாத்தான் காணாமப் போயிருக்கிறான். முதல் அது எப்பிடியடா இங்கயும் அங்கயும் ஒரே நேரத்தில காணாமப் போக ஏலும்? வாழுற வீட்டை விட்டு, செய்துகொண்டிருந்த தொழிலை விட்டு ஒரே நாள்ல காணாம போயிட்டினமாம் எண்டு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு? துலஞ்சு(தொலைந்து) போனவங்கள் துலஞ்சு போனவங்களாவே இருக்கட்டும். விடு நீ!” என்றார் அவர்.

அவன் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்து தன் மறுப்பைக் காட்டினான்.

“நான் சொல்லுறதைக் கேள் நந்தா. கொஞ்சக் காலம் இப்பிடியே போகவிட்டு உனக்குக் கட்டி வைக்கிறன்!”

“அவள் பச்சை குத்திக்கொண்டு வந்த பிறகும் இப்பிடிச் சொன்னா எப்பிடி மாமா?”

“பெரிய பச்சை. குத்தினா அழிக்க ஏலாதா? பத்து நிமிசம் காணும்.”

“அப்பிடி அந்தப் பெயரை அழிச்சா எல்லாம் அழிஞ்சிடுமா மாமா?”

நிதானமாக அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர்.

அவனாலும் சற்று நேரத்துக்கு ஒன்றும் கதைக்க முடியவில்லை. ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டுவிட்டு, “எனக்கும் இதெல்லாம் ஈஸியா இல்ல மாமா. ஆனா… சாதாரணமா அவள் ஐஸ்கிரீம் கேட்டதுக்கே உங்களுக்குத் தெரியாம, நடு இரவில கேட் பாஞ்சு போய் வாங்கிக்கொண்டு வந்து குடுத்திருக்கிறன். கண்ணீரோட வாழ்க்கையைக் கேக்கிறாள். அவனைத் தேடித் தரச்சொல்லிக் கேக்கிறாள். எப்பிடி மாட்டன் எண்டு சொல்ல?” என்று சொன்னவனுக்கு அந்தத் தைரியம் இல்லாமல்தானே எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து வேகிறோம் என்று விரக்தியாய் இருந்தது.

இதில் அவள் அவனை ரவுடி, அடிதடி என்கிறாள். உண்மையில் அவள் முன்னால் எந்தளவுக்கு அவன் பலமிழந்தவன் என்று அவனுக்குத்தான் தெரியும்.

அவன் சொன்னவற்றைக் கேட்டுச் சுந்தரலிங்கத்துக்கே சுளீர் என்று வலித்தது. இந்த அன்பை உதறிவிட்டு யாரோ ஒருவனிடம் தன் மனத்தைக் கொடுத்துவிட்டு நிற்கும் மகள் உண்மையில் துரதிஷ்டாசாலி என்றே தோன்றிற்று அவருக்கு.

“அவளுக்கு அவளின்ர வாழ்க்கையைத் தேடிக் குடுக்கப் போறாய், சரி. பிறகு உன்ர வாழ்க்கை?”

“அதுக்கு என்ன மாமா குறைச்சல்? அம்மா அப்பா திடீர் எண்டு இல்லாம போவினம் எண்டு நினைச்சேனா, இல்ல அநாதையா நிண்ட நேரம் நீங்க வருவீங்க எண்டுதான் நினைச்சேனா? அப்பிடி ஏதோ ஒண்டு நடக்கும்.” தன் வாழ்வின் மீது அக்கறை சிறிதுமில்லாக் குரலில் சொன்னவன் பேச்சில் அவருக்குச் சட்டென்று கோபம் மூண்டு போயிற்று.

“என்னவாவது நடக்கட்டும். ஆனா இனி உன்ர வாயில இருந்து அநாதை எண்டு ஒரு சொல்லு வரக் கூடாது சொல்லிப்போட்டன். நீ என்ர பிள்ளையடா. என்ர வீட்டுக்கு வந்த செல்வமடா. நான் பெத்ததுக்குத்தான் உன்ர அருமை தெரியேல்ல எண்டா எனக்கும் தெரியா எண்டு நினைக்கிறியா? நானும் உன்ர மாமியும் இருக்கேக்க நீ எப்பிடி அப்பிடி ஒரு வார்த்தை சொல்லுவாய்?” என்றவரின் குரல் கோபத்தில் நடுங்கிற்று.

காயப்பட்டு நிற்பவனுக்கு அவரின் அன்பு பெரும் ஆறுதலைத் தர, அவர் கையை ஆறுதலாய் அழுத்திக்கொடுத்து, “கொஞ்சத்துக்கு முதல் கேட்டீங்களே மாமா உன்ர வாழ்க்கைக்கு என்ன செய்யப் போறாய் எண்டு? நீங்க இருக்கேக்க எனக்கு ஏன் அந்தக் கவலை?” என்றான் உதட்டோரம் அரும்பிய சின்ன முறுவலோடு.

அவர் வாயடைத்து நிற்க, “நாலு நாளைக்கு நிக்க மாட்டன். நீங்க பெருசா ஒண்டும் செய்ய வேண்டாம். சங்கர் அண்ணாவோட அப்பப்ப கதைச்சு என்ன செய்யவேணும் எண்டு நான் பாப்பன். நீங்க மாமியோட இருங்க.” என்றுவிட்டுப் புறப்பட்டான்.

நெஞ்சம் கனத்துப்போக அவன் தன் பார்வையிலிருந்து மறையும் வரையிலும் அவனையே பார்த்திருந்தவரின் விழிகள், அவன் மறைந்ததும் அங்கிருந்த சுவாமிப் படத்தின் புறம் திரும்பிற்று. என்றும் அவர் நம்பி வணங்கும் கந்தசாமி அங்கே வீற்றிருந்தார். அந்தக் கந்தனிடம் அவர் உள்ளம் சிசிரவும் அவன் குடும்பமும் இவர்கள் கண்ணில் படவே கூடாது என்று வேண்டிக்கொண்டது.

தொடரும்...
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 25


அன்று இரவே வவுனியாவிலிருந்து புறப்பட்ட அனந்தனின் பஜிரோ அடுத்த நாளின் அதிகாலையில் காலிக்குச் சென்று சேர்ந்தது. அன்று ஒரு அறையில் அவளோடு தங்கியவன் இன்று இரண்டு அறைகள் எடுத்து, அவளைத் தனியாகத் தங்க வைத்தான்.

சற்றே பயணக்களை ஆறி, குளித்து உடை மாற்றிக் காலை உணவையும் முடித்துக்கொண்டு சிசிரவின் வீட்டுக்குச் சென்று சேர்ந்தார்கள்.

அளவான காணி சோலையாய் இருக்க மிக மிகச் சின்ன வீடு. பார்த்ததுமே நிரல்யாவின் உள்ளத்தில் என்னென்னவோ உணர்வுகள் பொங்கின. இலண்டனிலிருந்து இன்னும் திரும்பியிருக்க மாட்டான் என்று தெரிந்தாலும் இங்கே இருந்துவிட மாட்டானா என்று ஏங்கினாள்.

பெருத்த அமைதியில் திளைத்திருந்தது அந்த வீடு. சுற்றுப்புறத்தைக் கூர்மையாக அலசிய அனந்தன், பக்கத்து வீட்டிலிருந்து எட்டிப்பார்த்த ஓர் தலையைக் கண்டுவிட்டு அவரிடம் சென்று இவர்களைப் பற்றி விசாரித்தான்.

அவர் இவர்களை விசாரித்தார். உண்மையைச் சொல்லாமல், தான் சிசிரவின் சீனியர் என்றும், காலிக்கு வந்ததால் அவனைப் பார்க்க வந்திருப்பதாகவும் சும்மா சொன்னான்.

அதன் பிறகுதான் அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னார் அவர். “எங்க போறது எண்டாலும் வன்னியாராச்சி என்ர மனுசிட்டச் சொல்லாமப் போக மாட்டா. ஆனா இந்த முறை எப்ப போனவே, எங்க போனவே எண்டு ஒண்டும் சொல்ல இல்ல. ஒரு கிழமை பொறுத்துப் பாத்திட்டுக் கதவை உடைச்சு உள்ளுக்கும் போய்ப் பாத்தோம். சந்தேகப் படுற மாதிரி ஒண்டும் இருக்கேல்ல. போலீசுக்கும் சொல்லி, போலீசும் வந்து பாத்துக்கொண்டு போனது. ஏதும் அறிஞ்சா வந்து சொல்லுறன் எண்டு சொல்லி இருக்கினம்.” என்று வீட்டின் கதவைத் திறந்து காட்டினார் அவர்.

அவர்கள் கதவின் பூட்டை உடைத்துவிட்டதால், வெளிப்புறத்திலிருந்து புதுப் பூட்டுப் போட்டுப் பூட்டியிருந்தார்கள்.

சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாய்கள், அறைக்குள்ளேயே கொடி கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த உடைகள், இரண்டு கதவுகள் கொண்ட மரத்தினாலான பழைய அலமாரி ஒன்று என்று பெறுமதியான எந்தப் பொருள்களும் இல்லாத ஒற்றை அறை, ஹோல், சமையல்கட்டு என்று மிக மிக எளிமையான வீடு. கழுவித் துடைத்து வைத்திருந்த பாத்திரங்கள், துப்பரவாக இருந்த வீடு என்று எல்லாமே அவர்களாகத்தான் எங்கோ வெளிக்கிட்டுப் போயிருக்கிறார்கள் என்று சொல்லிற்று.

அங்கே சுவரில் இருந்த ஃபோட்டோவில் தன் குடும்பத்தினருடன் நின்று சிரித்துக்கொண்டிருந்த இளம் சிசிரவைக் கண்டுவிட்டு, விழிகளில் கண்ணீர் தளும்ப அதனருகில் சென்று நின்றாள் நிரல்யா. நடுங்கும் விரல்களால் அவன் முகத்தை வருடினாள். அவள் தேகமெல்லாம் சிலிர்த்தது. அவனின் சுருண்ட கேசத்துக்குள் கைவிட்டுக் கோதியபோது உணர்ந்த இதத்தை உணர்ந்தாள். ‘சுகமா இருக்கிறீங்கதானே?’ அவளைப் பார்த்துச் சிரிக்கும் அந்த அடர் நீல நிற விழிகளிடம் கண்ணீர் கண்களில் தளும்ப வினவினாள்.

‘நன்றாக இருக்கிறேன் நிரா’ என்று ஒரு வார்த்தை சொன்னான் என்றால் போதுமே, இன்னும் பத்து வருடங்கள் என்றாலும் அவனுக்காகக் காத்திருப்பாளே!

அவள் உயிரைத் தீண்டிச் செல்லும் அவனுடைய ‘மகே லஸ்ஸன கெல்ல’ வைக் கேளாமல் அவள் இதயம் கிடந்து தவித்தது. நிரா என்று அவன் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவள் இதயத்தை மெல்லிசை தீண்டுவது போலவே இருக்கும். அவளை அப்படி அழைக்காமல், அவளோடு கதைக்காமல் என்ன செய்கிறான்?

தன்னை மறந்து, சுற்றியிருக்கும் உலகத்தை மறந்து அவனில் லயித்திருந்த நிரல்யாவைக் கண்டு அனந்தனும் அப்படியே நின்றுவிட்டான்.

“இதுதான் மத்துமன்ர நம்பர்.” என்ற பக்கத்து வீட்டுக்காரரின் குரலில் கலைந்து, அவர் தந்த இலக்கத்தைத் தன் கைப்பேசியில் பதிந்துகொண்டான். அப்படியே வன்னியாராச்சியின் நம்பரையும் வாங்கிக் கொண்டான்.

அவற்றுக்கு எத்தனை முறை அழைத்தும் பலன்தான் இல்லை.

மத்தும பண்டாரவைத் தெரிந்தவர்கள், அந்தத் தெருவில் இருப்பவர்கள், அவரின் நெருங்கிய நண்பர்கள் என்று எல்லார் வீடுகளுக்கும் சென்று விசாரித்துப் பார்த்தார்கள்.

அவர்களின் தேநீர்க் கடை பூட்டியே கிடந்தது. அங்கும் பக்கத்தில் இருக்கும் கடைகளில், அந்தக் கடை உரிமையாளரிடம் என்று எங்கு விசாரித்தும் ஒரு சின்ன தகவல் கூடக் கிடைக்கவில்லை.

இரண்டு நாள்களும் அலைந்தது மட்டுமே மிச்சமாயிற்று. தேடிப் போனவர்களிடம் எல்லாம் ஏதாவது செய்தி கிடைத்தால் சொல்லச் சொல்லி அனந்தனின் நம்பரை கொடுத்துவிட்டு அறைக்குத் திரும்பினார்கள்.

“இனி என்ன செய்றது?” இரவு உணவை அவள் அறைக்குக் கொண்டு வந்து தந்தவனிடம் கலக்கத்துடன் வினவினாள் நிரல்யா.

“நீதான் சொல்லோணும்." அங்கிருந்த குட்டி மேசையின் முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்து சொன்னான் அனந்தன்.

அவளுக்கு என்ன தெரியும்? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது. அவனும் நெற்றியைத் தேய்த்துவிட்டான். உண்மையில் இதற்குப் பின்னால் இருக்கும் புதிரைக் கண்டுபிடிக்க அவனாலும் முடியவில்லை.

“அண்டைக்கு ஏன் நிவேதா வீட்டைப் போகச் சொன்னவன்?”

“அது அது… சாறி குடுத்துவிட்டிருந்தவர்.” அவ்வளவு நேரமாகக் கலங்கிக்கொண்டு நின்றவள் முகத்தில் திடீர் தடுமாற்றம்.

“ஒரு சாறிக்காக போனனீயோ? அவனும் ஒரேயொரு சாறியை மினக்கெட்டு அங்க இருந்து குடுத்துவிட்டவனோ?” தன் கூரிய விழிகளை அவள் முகத்திலேயே நிலைக்க விட்டு வினவினான்.

பதற்றத்தில் உதடு கடித்தவள், “அது… ஒரு மூக்குத்தியும் குடுத்துவிட்டவர்.” என்று அவனைப் பாராமல் முணுமுணுத்தாள்.

அடுத்து ஒன்றும் அவன் கேட்கவில்லை. தன் பார்வையையும் அவள் முகத்திலிருந்து அகற்றவில்லை.

அந்தப் பார்வையின் முன்னே திடமாக நிற்க முடியாமல், முகம் கன்றிச் சிவக்க, “அது அது…” என்று தடுமாறி, தான் அவனுக்கு நகை கொடுத்ததையும் அவன் அதைத் திருப்பித் தந்ததையும் மென்று விழுங்கிச் சொல்லி முடித்தாள்.

அனந்தனால் நம்பவே முடியவில்லை. கோபம் என்பதையும் தாண்டிய ஒரு திகைப்பு. அவளா இப்படி? அவன் அறிந்த நிரல்யா சிறு தவறு பொறுக்காதவளாயிற்றே! வட்டிக்கு வாங்கித் திருப்பிக் கொடுக்க முடியாமல் கூனிக் குறுகி நின்ற மனிதரைப் பார்க்க முடியாமல், தன் நகையைக் கழற்றிக் கொடுக்கும் அளவுக்கு இருந்த ஒருத்தி, எப்படி இப்படி மாறிப்போனாள்?

“அது… அது… நீங்க அவேன்ர கடைய உடைச்ச கோவத்துல…” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “வேற என்ன செய்திருக்க வேணும் எண்டு எதிர்பாக்கிறாய்? நீ அவனோட கொஞ்சுறதப் பாத்துச் சந்தோசப்பட்டு இன்னும் கொஞ்சு எண்டு ரூம் போட்டுத் தந்திருக்கோணுமா?” என்று சினமிகுதியில் அவன் சீறிவிட, “என்ன, என்ன நீங்க இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க?” என்றவள் கூனிக் குறுகிப் போனாள். அவளுக்குத் திகைப்பில் வார்த்தைகளே வரமாட்டேன் என்றது.

“வேற எப்பிடிக் கதைக்கச் சொல்லுறாய்? அவனுக்காக அதச் செய்தாய் சரி, உன்னப் பெத்து வளத்துதுகளே ரெண்டு ஜீவன். அதுகளுக்கு என்ன செய்தனி? மாமா தன்ர தொழில்ல நல்லவரோ கெட்டவரோ அது வேற. உனக்கு அவர் நல்ல அப்பாதானே? ஏதாவது ஒரு குறை விட்டவரா? அவரையாவது விடு, அந்த மனுசி உன்ர அம்மா அவாக்கு நீ செய்தது?”

அவன் கேள்விகள் மிக ஆழமாய்ச் சுட்டுவிட்டதில் கண்ணீர் அதுபாட்டுக்குக் கன்னத்தை நனைக்க, “அம்மா அப்பாக்கு நான் செய்தது எல்லாம் பெரும் பிழைதான். எனக்குத் தெரியும். ஆனா… ஆனா எனக்கு அவரை அந்தளவுக்குப் பிடிக்கும். என்ன காரணத்துக்காகவும் அவரை இழந்திடக் கூடாது எண்டு நினைச்சன். அதான்… அதான்… அவர் நல்ல நிலைக்கு வந்தா மட்டும்தான் நாங்க சேரலாம் எண்டுறதுக்காக…” என்றவளால் மேலே சொல்ல முடியாமல் போயிற்று. என்ன சொன்னாலும் அவள் செய்தவை நியாயமாகாது எனும்போது எதை என்று சொல்ல?

“அதுக்காக…” என்று ஆரம்பித்தவன் இனிக் கதைத்து எந்தப் பிரயோசனமும் இல்லை என்று அறிந்து, பல்லைக் கடித்துத் தன்னை அடக்கிக்கொண்டு எழுந்து சென்று யன்னலருகில் நின்றுகொண்டான்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவர்கள் அறை எடுத்திருந்தது மூன்றாவது மாடியில். அங்கிருந்து பார்க்க வீதியில் விரைந்துகொண்டிருந்த வாகனங்களும், ஏதோ ஒரு அவசரத்தின் பிடியில் ஓடிக்கொண்டிருந்த மனிதர்களும் தெரிந்தார்கள்.

நெஞ்சில் பெரும் புழுக்கம். ஒரு காதல் இந்தளவு தூரத்துக்கு ஒருத்தியின் இயல்பையே மாற்றுமா என்ன? அவனால் நம்பவே முடியவில்லை. அந்தளவில் ஒவொன்றுக்கும் பயப்படுவாள். அவன் பாதை மாறிவிட்டான் என்று அவனோடு கதைக்காமல் விட்டவள் தன் காதலுக்காகத் தன்னையே எப்படியான ஒருத்தியாக மாற்றிக்கொண்டு நிற்கிறாள்?

நிரல்யாவும் அதை எண்ணித்தான் துடித்துக்கொண்டிருந்தாள். அவன் வேண்டும், அவனை இழந்துவிடக் கூடாது என்றுதான் அத்தனையையும் செய்தாள். ஆனால் இன்று அவனையே தொலைத்துவிட்டு நிற்கிறாள். அவன் இலக்கத்தை அழுத்தி அழுத்தியே ஓய்ந்து போனாள். அவன் புலனம் அவளின் செய்திகளால் நிறைந்து வழிந்தது. எதற்கும் பலன் இல்லை.

புறப்பட்ட பயணம் தோல்வியில் முடிய, மனமே இல்லாமல் கண்ணீருடன் சிசிரவின் பிறந்த நகரிலிருந்து புறப்பட்டாள்.

அதுவும் ஒரு இரவு நேரப் பயணம். இருவரிடையேயும் கனத்த அமைதி. முற்றிலும் உடைந்து, மனதளவில் தளர்ந்து, இனி என்ன செய்வது என்று தெரியாது, இருளில் தன் உயிரைத் தேடியவளின் விழிகள் கசிந்துகொண்டே இருந்தன.

அன்று தேடி தேடி வந்து அவள் நெஞ்சில் நேசத்தை வளர்த்தவன் இன்று மொத்தமாய் அவளைத் தேட வைத்துவிட்டு எங்கோ போய்விட்டான்? அவனுக்கு என்னாயிற்று?

எண்ணங்களுக்குச் சக்தி உண்டாமே. அவள் எண்ணங்கள் அவனை அவளிடமே கொண்டுவந்து சேர்த்துவிடாதா என்ன?

அழகு நிலவை எழுதி ரசித்த கவிதை என்னாச்சு
ஆசைக் கனவைத் தினமும் ருசித்த காதல் என்னாச்சு
ஊதும் காற்றில் இதழ்கள் சேர்த்து ஆவல் செய்தாய் காதலா
ஊனும் உயிரும் உருக உருக காதல் செய்தாய் காதலா
தனிமைத் தீயில் எரிந்து எரிந்து உருகும் தாகம் ஏனடா

ஆனந்தனின் பஜிரோவினுள் ஒலித்த பாடலில் தன் கண்ணீரை அடக்க முடியாமல், முகத்தை மூடிக்கொண்டு விம்மினாள் நிரல்யா.

அப்படித் திடீர் என்று அவள் விம்ம ஆரம்பித்துவிட்டதில் வாகனத்தை ஒதுக்கி நிறுத்திவிட்டு இறுகிப்போய் அமர்ந்திருந்தான் அனந்தன்.

“நான் தேடிப் பாக்கிறன்.” என்றான் கனத்த குரலில்.

அவன் சொன்னது அவள் செவியில் விழவில்லை. இன்னுமின்னும் தனக்குள் மருகிக் கரைந்தவளை ஒரு அளவுக்குமேல் பொறுக்க முடியாமல், “ஏய் அழாதடி! அதான் தேடிப் பாக்கிறன் எண்டு சொல்லுறன் எல்லா!” என்று அவன் ஏறிப் பாய்ந்ததில் திடுக்கிட்டு நிமிர்ந்து, அழுத விழிகளோடு அவனையே பார்த்து விழித்தாள்.

நொடி நேரம் கூட அந்த முகத்தைப் பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பிக்கொண்டு, “பிரைவேட் ஏஜென்சி மூலம் தேடிப் பாக்கலாம். அப்பிடி எங்க போக இருக்கு? இந்த இலங்கைக்க தானே எங்கயோ இருக்க வேணும்.” என்றான் சமாதானமாக.

ஆனால் அவனுக்குக் கிட்டியதும் தோல்வியே! அவர்களின் தேநீர்க் கடையைக் கூட முதலாளி வேறு யாருக்கோ வாடகைக்கு கொடுத்திருந்தார். வீடு அப்படியே கிடந்தது. யாரும் வரவில்லை.

நாள்கள் மாதங்களாகி வருடமானது மட்டுமே மிச்சமாயிற்று. மகிந்த, சரண்யா, பல்கலை நண்பர்கள் என்று யாரைக் கேட்டும் அவனைப் பற்றிய சிறு துணுக்குக் கூடக் கிடைக்கவில்லை. அவன் குடும்பமும் மாயமானது மாயமானதுதான்.

அமிர்தவல்லி ஒடுங்கிப் போனார். மனத்தின் கவலை அவரை நோயாளியாக்கியிருந்தது. அவனுக்கே அவளைக் கட்டி வைத்திருக்கலாமோ என்கிற நினைப்பு அவரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்ன ஆரம்பித்தது.

அவள் தான் விரும்பிய வாழ்க்கையையாவது நல்லபடியாக வாழ்ந்திருக்க நாளடைவில் தேறியிருப்பார் போலும். அவர்கள் அமைத்துக்கொடுக்க முயன்ற வாழ்க்கையையும் மறுத்துவிட்டு, தானாகத் தேடியதையும் தொலைத்துவிட்டுத் தனித்து நிற்கிறாளே! ஒற்றை மகள். ஒற்றையாகவே நிற்பதைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதும் அவர் உள்ளம் அழுதது. அவர் சத்தியம் வாங்கியதால்தானே மீறினாள். மீறியதால்தானே அவளுக்கு இத்தனை துன்பம். அந்தச் சத்தியத்தை அவர் வாங்காமல் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திராதோ என்று தோன்றுவதைத் தடுக்கவே முடியவில்லை.

சுந்தரலிங்கத்துக்கும் எல்லாம் வெறுத்த நிலை. மனைவி படுத்த படுக்கையானது வேறு அவரை மிகவுமே பாதித்திருந்தது. மனத்தளவில் நன்றாகவே தளர்ந்து போனார். தொழில்களிலுருந்து விலகி மனைவியோடு வீட்டில் அமர்ந்துகொண்டார். அவர்கள் இருவரும் தம் உலகத்தைத் தமக்குள்ளேயே சுருக்கிக்கொண்டனர்.

அன்று ஒரு கோப்பைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்கு வந்த அனந்தனிடம், “நீங்க ரெண்டு பேரும் நல்லாருக்கோணும் எண்டுதான் ஆசைப்பட்டன். கடைசில ரெண்டு பேரும் தனியா நிக்கிறீங்க.” என்றார் மனம் பொறுக்க முடியாமல்.

இப்போதெல்லாம் அடிக்கடி இப்படித்தான் சொல்கிறார். அவனும் சிசிரவைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான். குட்டி மாம்பழ அளவில் இருக்கும் இந்த இலங்கையின் எந்த மூளையில் இருக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியவேயில்லை. அதில், “அவளுக்கு நான் இருக்கிறன் மாமா. கவலைப் படாதீங்க.” என்று தேற்றினான்.

“நாங்க இல்லை எண்டுற காலம் வந்தாலும் அவளுக்கு எண்டு நீ இருப்பாய் எண்டு எனக்குத் தெரியும் நந்தா. உனக்கு? உனக்கு எண்டு ஆர் இருக்கினம்?” அவருக்கு அவனும் திருமணம் செய்யாமல், அவளைப் போலவே தனியாக நிற்பதில் அத்தனை வருத்தம். கூடவே, முன்னர் போன்று மனத்தில் வலு இல்லாமல் போனதாலோ என்னவோ தனக்கும் மனைவிக்கும் ஏதும் ஒன்று நடந்து, இவன் காலத்துக்கும் தனியாகவே நின்றுவிடுவானோ என்கிற பயம் பிடித்திருந்தது.

அவன் அவரிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டான். எல்லாமாய் அவள் இருப்பாள் என்று நம்பினான். இல்லை என்றுவிட்டாள். இன்னொருத்தியை அவள் இடத்தில் கொண்டுவந்து வைக்கவே முடியவில்லை. அவள் சிசிரவோடு சேர்ந்த பிறகாவது தன்னால் அது முடிகிறதா என்று பார்க்கத்தான் காத்திருக்கிறான். அது எங்கே?

ஒரு நெடிய மூச்சுடன், “உங்களுக்கு ஒண்டும் நடக்காது மாமா. எனக்கு நீங்களும் மாமியும் இருக்கிறீங்க. அதால அத விட்டுட்டு இதில சைன் பண்ணித் தாங்க.” என்று கோப்பினை நீட்டினான்.

“எல்லாத்தையும் உன்ர பேருக்கு மாத்திப்போட்டு என்னை நிம்மதியா விடு எண்டு சொன்னாலும் கேக்கிறாய் இல்லை. வரவர நீயும் அவளை மாதிரி நீ பிடிச்ச பிடியிலேயே நிக்கப் பழகிறாய் நந்தா.” என்று அப்போதும் அவன் மீது குறைப்பட்டபடிதான் கையெழுத்திட்டார் அவர்.

இந்தச் சொத்து சுகத்தையெல்லாம் யாருக்காகத் தேடுகிறாராம் என்கிற சலிப்பு அவரிடம். அவரை உணர்ந்திருந்தவன் ஒன்றும் சொல்லாமல் எழுந்து வெளியே வந்தான். அங்கே வாசலில் நின்றிருந்தாள் நிரல்யா.

உதட்டைப் பற்றித் தன் உணர்வுகளை அடக்கியபடி நின்றவள் முகத்தில் ஒரு கணம் பார்வை நிலைத்து மீள, அவளைக் கடந்து நடந்தான் அவன்.

மெல்லிய தயக்கத்துடன் அவர்களின் அறைக்குள் வந்தாள். சுந்தரலிங்கம் இன்னும் அவளோடு கதைப்பதில்லை. அமிர்தவல்லியின் உடல்நிலை முகம் திருப்ப விடுவதில்லை. அவர் ஒதுங்கிப் போனாலும் விடாமல் அவருக்கானதைச் செய்வதை இத்தனை நாள்களில் வழக்கமாக்கியிருந்தாள் நிரல்யா.

தன்னருகில் தயங்கி வந்து அமர்ந்தவள் கையைப் பற்றிக்கொண்டு, “இனியும் நாங்க சொல்லுறதைக் கேக்க மாட்டியா பிள்ளை? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்பிடி நீயும் தனியா இருந்து, அவனையும் தனியா நிக்க வச்சு, எங்களுக்குத் தண்டனை தரப் போறாய்?” நலிந்த குரலில் கண்ணீருடன் வினவினார் அமிர்தவல்லி.

அவள் விழிகள் சட்டென்று கலங்கிப் போயிற்று. குரலும் உடைய, “என்னம்மா நீங்க? உங்களுக்கு என்ன தண்டனை தர இருக்கு? நான் தானேம்மா நல்ல மகளா நடக்கேல்ல. உங்க ரெண்டு பேருக்கும் செய்த பாவம்தான் என்னை இப்பிடித் துரத்துது போல. எனக்கு இந்தக் குற்ற உணர்ச்சில இருந்து விடுதலை வேணும் அம்மா. என்ன செய்து இதில இருந்து வெளில வரப்போறன் எண்டே தெரியேல்ல.” என்று அவர் கையைப் பற்றிக்கொண்டு கண்ணீர் உகுத்தவளைக் கண்டு சுந்தரலிங்கமும் கலங்கிப் போனார்.



தொடரும்...




அடுத்த அத்தியாயம் கொஞ்சம் பெருசா வர சான்ஸ் இருக்கு. முக்கியமான அத்தியாயமும். சொல்ல வேண்டியதை முழுமையா சொன்னாத்தான் நல்லாவும் இருக்கும். அதால எனக்கு ரெண்டு நாள் வேணும். சோ அடுத்த அத்தியாயம் செவ்வாய் தான். (முதலே எழுதிட்டா போட்டுடுவன்) அதனாலதான் இன்றைக்கு இதை அவசரம் அவசரமா எழுதிப் போட்டேன்.

அடுத்த எபி சிசிர பற்றியும், இந்தக் கதையின் முடிச்சு பற்றியும், இனி கதை எப்படி நகரும் என்பது, நிரல் யாருக்கு என்று எல்லாம் சொல்லும். செவ்வாய் இரவு சந்திக்கலாம்.

கருத்திடும் அனைவருக்கும் நன்றியும் அன்பும்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 26


இலங்கையின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குகிறது திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர் கோவில். திருஞான சம்மந்தரினால் பதிகம் பாடப்பட்ட கோயில் என்கிற சிறப்பையும் கொண்டிருந்த ஈசனின் முன்னே, கைகளைக் கூப்பி நின்றிருந்தாள் நிரல்யா. அவளின் வேண்டுதல்கள் எல்லாம் ‘என் சிசிரவைக் கண்ணில் காட்டிவிடு கடவுளே!’ என்பது மட்டும்தான்!

வருடங்கள் ஓடியதே தவிர அவன் பற்றிய பிரயோசனமான தகவல் எதுவும் கிடைக்கவே இல்லை. இலண்டனில் வசிக்கும் சுந்தரலிங்கத்தின் தூரத்து உறவுக்காரர் ஒருவரைப் பிடித்து, அவரைச் சிசிர தங்கியிருந்த இடம், படித்த கல்லூரியின் பெயர் எல்லாம் கொடுத்து விசாரிக்கச் சொல்லி, அவர் அங்குப் படாத பாடெல்லாம் பட்டு விசாரித்து, அவன் தன் தங்குமிடத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு முதலே வெளியேறி, ஆராய்ச்சிப் பண்ணையிலேயே தங்கியிருந்திருக்கிறான் என்பதைக் கண்டு பிடிக்கவே அவருக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாயிற்று.

அவரும் குடும்பம், குட்டி, வேலை என்று இருக்க நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறவர். பிடித்த பிடியாய் நின்று விசாரிக்க வசதிப்பட்டதில்லை. அதன் பிறகும் அந்தப் பண்ணையில் வேலை செய்த ஒருவர் பற்றிய தகவல் திரட்டுவது அவருக்கு அத்தனை இலகுவாய் இருக்கவே இல்லை. சில பல திருகுதாளங்கள் செய்து, இரகசியமாக விசாரித்தபோது அவன் படிப்பை முடித்துக்கொண்டு நாட்டுக்குத் திரும்பிவிட்டான் என்று தெரிய வந்திருந்தது. அதற்கு இன்னொரு வருடம் ஓடிப் போயிருந்தது.

இங்கே பிரைவேட் ஏஜென்சி மூலம் தேடியதில் வன்னியாராச்சி அவர் குடும்பத்துக்கு ஒரே பெண் என்பதும், அம்மா அப்பா சுனாமிக்குப் பலியாகியதும் தெரிய வந்திருந்தது. கூடவே, மத்துமவுக்குத் தாய் சிறு வயதிலேயே இறந்திருக்க தந்தை இவர்களோடு இருந்து, கொஞ்ச வருடங்களுக்கு முதல்தான் காலமாகியிருக்கிறார். ஆனால், மத்துமவுக்கு ஒரு தங்கை இருப்பதும், அவர் திருமணமாகித் திருகோணமையில் இருப்பதும் தெரிய வந்திருந்தது.

வேறு உறவு என்று பெரிதாய் இல்லை. இருந்தாலும் இவர்களின் ஏழ்மை நிலையால் அவர்கள் பழகுவதும் இல்லை. ஆக, திருகோணமலைக்கு அவரின் சகோதரி வீட்டுக்கு வந்திருக்கலாம் என்று, கடைசியாகப் பேசியபோது பிரைவேட் ஏஜன்சியினர் சொல்லியிருந்தார்கள். வேறு எங்கும் போவதற்குச் சாத்தியமில்லை என்றிருந்தார்கள்.

அந்தச் சகோதரியின் வீடு எங்கே இருக்கிறது?

சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் தேடுதல் நடந்துகொண்டுதான் இருந்தது. அனந்தனும் விவசாயம் சம்மந்தமாய் இயங்கும் அத்தனை அரச, தனியார் நிறுவனங்கள் என்று தேடிக்கொண்டிருந்தான். ஆனால், வருடங்கள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று நகர்ந்து ஐந்து வருடமாகியிருந்ததே தவிர அவன் கிடைக்கவில்லை.

சிசிர திருகோணமலையில் இருக்கலாம் என்று தெரிய வந்ததிலிருந்து அடிக்கடி இங்கே வந்து போகிறாள். அதுவும், எப்போதோ ஒரு நாள் ‘என் அம்மாவுக்குச் சிவனை மிகவும் பிடிக்கும், ஒவ்வொரு வாரமும் சிவன் கோவிலுக்குப் போவார்’ என்று அவன் சொன்னதை நினைவில் வைத்து, முடிந்தவரையில் ஒவ்வொரு வெள்ளியும் திருக்கோணேஸ்வரர் கோவிலுக்கு வந்துவிடுவாள். கூடவே கூகிளில் தேடி, திருகோணமலையில் இருக்கிற அத்தனை சிவன் கோவில்களுக்கும் எப்படியாவது சமூகமளித்துவிடுவாள்.

சில நேரங்களில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று அவளுக்கே தோன்றிவிடும். ஆனால், இனி என்னால் முடியாது என்று இருக்கவோ அவனைக் கடந்து வாழ்க்கையில் பயணிக்கவோ அவளால் முடிந்ததே இல்லை. இன்னும் அதே கைப்பேசி எண். அவள் இருக்குமிடம் அவனுக்குத் தெரியும். பல்கலையில் அவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் அத்தனை பேருடனும் இன்னும் தொடர்பிலேயே இருக்கிறாள். முகப்புத்தகம், இன்ஸ்டா, டுவிட்டர் என்று அத்தனையிலும் நிரல்யா சுந்தரலிங்கம் என்கிற பெயரோடு தன் புகைப்படத்தையும் போட்டு வைத்திருக்கிறாள்.

அவளை நோக்கி அவன் ஒரு காலடியை எடுத்து வைத்தாலே எட்டிவிடும் தூரத்தில் தன்னை நிறுத்தி வைத்துக்கொண்டு காத்துக்கொண்டேயிருக்கிறாள். அவன்தான் அவளைத் தேடவில்லை. அதுதான் அவளுக்கு நெஞ்சை அடைத்தது.

இதோ இன்றும் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து, கீழே இறங்கும் படிக்கட்டில் ஒரு ஓரமாக, மர நிழலின் கீழே அமர்ந்துகொண்டாள்.

கண்ணீர் எல்லாம் வற்றிப் போயிற்று. உள்ளேதான் தினமும் அழுகிறாள். அவள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாததுபோலொரு நிலை. இந்த ஐந்து வருடங்களில் அனந்தனின் பிடிவாதத்தால் மாஸ்டர் முடித்துவிட்டு அவனோடு சேர்ந்து கடையைத் தானும் பார்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தாள். வட்டித்தொழிலிலிருந்து நகைத்தொழில் வரையில் அத்தனையையும் முற்று முழுதாக நேர்வழிக்கு மாற்றியிருந்தான் அனந்தன். அப்படியே அவளை டிரைவிங் பழக வைத்து, ஒரு காரையும் வாங்கிக் கொடுத்திருந்தான்.

இந்த ஐந்து வருடங்களில் அவர்களின் நகைத்தொழில் அசுரத்தனமாய் வளர்ச்சியடைந்திருந்தது. அந்தளவில் கடையை அவள் திறம்படக் கவனித்துக்கொள்ள, அவன் துபாய், சிங்கப்பூரிலிருந்து நகைகளைத் தொகையாக இறக்குமதி செய்து, இங்கே நகைக்கடைகளுக்கு மொத்த வியாபாரமாக விற்பனை செய்துகொண்டிருந்தான்.

இதோ நாளை அவர்களின் பிரதானமான வாடிக்கையாளர் ஒருவரின் மகனுக்குத் திருமணம். இவர்களைப் பிரத்தியேகமாக அழைத்திருந்தார். எப்போதும் இப்படியானவற்றுக்கு அனந்தன்தான் சும்மா வந்து தலையைக் காட்டிவிட்டுப் போவான். அவர்கள் வசிப்பது திருகோணமலை என்பதில் நிரல்யா இந்தமுறை வந்திருந்தாள்.

“இன்னுமாம்மா அந்தத் தம்பியத் தேடிக்கொண்டு இருக்கிறாய்?” கோவிலுக்குக் காரியதரிசியாக இருக்கும் ஐயாவின் குரலில் சிந்தனை கலைந்து, அவரை நிமிர்ந்து பார்த்து, ஒன்றும் சொல்லாமல் வெறுமையாய்ப் புன்னகைத்தாள்.

ஒவ்வொரு வெள்ளியும் வந்து வந்து கோயில் நிர்வாகத்தில் இருக்கும் அனைவருக்கும் அவளையும் அவள் கதையையும் நன்றாகவே தெரிந்திருந்தது. தம்மால் முடிந்ததாய் அவர்களும் அவளின் சிசிரவைத் தேட ஆரம்பித்திருந்தார்கள்.

“உனக்கு நல்லது நடக்கவேணும் எண்டு நானும் கோணேச்சரத்தானக் கேக்காத நாள் இல்ல. ஆனா, தேடினது போதுமாச்சி. உன்ர வாழ்க்கையை நீ பார். இனியும் இப்பிடிக் காத்திருக்கிறதில அர்த்தம் இல்லை எண்டுதான் நான் சொல்லுவன்.” என்று சொல்லிவிட்டுப் போனார் அவர்.

அவர் மட்டுமில்லை அவளை அறிந்த எல்லோருமே இதைத்தான் சொல்கிறார்கள். இருபத்தியெட்டு வயதாகிப்போயிற்று. மகிந்த, சரண்யாவுக்குத் திருமணம் முடிந்து, ஒரு குழந்தையே பிறந்திருந்தது. திருமணத்திற்கும், குழந்தையைப் பார்க்கவும் என்று இரண்டு முறைகள் போய்ப் பார்த்துக்கொண்டு வந்திருந்தாள்.

இப்படி, அவன் நண்பர்கள் அத்தனை பேருடனும் தொடர்பில் இருந்தாலும் பேராதனைப் பக்கம் மட்டும் எட்டியும் பார்க்கவில்லை. அந்தத் தைரியம் அவளுக்கில்லை.

பச்சைப் பசேல் என்று பசுமை கொஞ்சும் இடத்தையும், ஈரலிப்பான நிலத்தையும், சதா வீசும் சாயலையும், ஒற்றைக் குடையில் அவர்கள் நடை பயின்ற பாதைகளையும், பேசிச் சிரித்துக் கொஞ்சி மகிழ்ந்த இடங்களையும் தனியாய்ச் சென்று பார்க்கும் தெம்பு அவளுக்கு இல்லவே இல்லை.

இனி என்ன செய்வது? அவளுக்குத் தெரியவே இல்லை.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன் நினைவுகள் எல்லாம் அவள் நெஞ்சில் நங்கூரம் பாய்ச்சி நிலைகொண்டிருந்தன. அசையும் கப்பலாக அவன் நினைவும், நங்கூரம் கிழிக்கும் அடி நிலமாக அவள் மனமும் வலித்துக் கிடந்தன. அலைமோதும் கரையில் கண்ணீர் தேங்கிய விழிகளோடு அவனைப் பார்த்துக்கொண்டே நிற்கிறாள். அவன் அவள் காலடிக்கு வருவதாய் இல்லை.

அவன் பிரிவைக் காலத்தைக்கொண்டு அளவிட்டால் ஐந்து வருடங்கள். துயரத்தைக் கொண்டு அளவிட்டால் கடலளவு கண்ணீர்.

“நிரா, மகே லஸ்ஸன! அண்டன்ன எபா!(அழ வேண்டாம்.) ஐ மிஸ் யூ, ஐ மிஸ் யூ, ஐ மிஸ் யூ, ஐ மிஸ் யூ சோ மச்! கவனமா இரு. எங்க இருந்தாலும் உன்ர சிசிர உனக்காக இருக்கிறான். எங்க போனாலும் உன்னட்ட வருவான்.” என்று அவன் சொன்னது இன்னுமே அவள் செவிகளுக்குள் ரீங்காரித்துக்கொண்டிருக்கையில் அவனைக் கடந்து எப்படி நடப்பாள்?

“ரூமுக்கு போயிற்றியா?” அனந்தனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் சிந்தனை கலைந்தாள்.

“இல்ல. இனித்தான் போகப்போறன்.”

“நேரமாகுது.”

“ம்!” என்று மட்டும் அனுப்பிவிட்டு எழுந்து காரை நோக்கி நடந்தாள்.

அது ஒரு பாதுகாப்பான பெண்கள் தங்குமிடம். அங்கேதான் தங்கியிருந்தாள் நிரல்யா. காலையிலேயே எழுந்து, பாந்தமான சேலை ஒன்றில் தயாராகிப் புறப்பட்டவளுக்கு, “போயிட்டியா?” என்று கேட்டு அனுப்பி இருந்தான் அனந்தன்.

“வெளிக்கிட்டன். இன்னும் முப்பது நிமிசத்தில அங்க நிப்பன்.” என்று பதில் அனுப்பிவிட்டாள்.

“ம்!” என்று இப்போது அவன் அனுப்பியிருந்தான்.

அந்த மெஸேஜையே பார்த்திருந்தாள். தெரிந்தோ தெரியாமலோ அவனை நிறைய முறைகள் வார்த்தைகளாலும் செய்கைகளாலும் நோகடித்திருக்கிறாள். ஆனாலும் கூட எந்தத் தருணத்திலும் அவள் மீதான கவனிப்பையும் அக்கறையையும் அவன் தளர்த்தியதேயில்லை.

அவனைத் திருமணத்துக்குப் பேசி, அதை மறுத்துத்தான் பச்சையே குத்தினாள். அவனுக்கும் அது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும் கூட இத்தனை வருடங்களில் ஒருமுறை கூடத் திருமணம் பற்றி அவன் பேசியதே இல்லை. எல்லோரும் சொல்வதுபோல் இந்த ஐந்து வருடங்களாக வராதவன் இனியா வரப்போகிறான் என்று கேட்டதுமில்லை. இன்னுமே அவளுக்காகச் சிசிரவைத் தேடிக்கொண்டே இருக்கிறான்.

அன்று ‘அவளுக்கு நான் இருக்கிறன் மாமா’ என்றானே. அன்றிலிருந்து அவள் உள்ளம் அவன் பால் பிரத்தியேகமான பாசத்தில் கரைகிறது. அதன் பிறகு அவன் சொன்ன எதையும் அவள் தட்டியதில்லை. தட்ட முடிந்ததில்லை. தான் கரை சேராமல் அவன் தன் வாழ்க்கையைப் பார்க்கமாட்டான் என்கிற உண்மையும் அவளைச் சுட்டுக்கொண்டே இருந்தது.

அவர்கள் இருவரும் நேரடியாகப் பேசிக்கொள்வது மிக மிகக் குறைவு. அதற்கென்று பேசிக்கொள்வதில்லை என்று சொல்வதற்கும் இல்லை. கடையைக் கிட்டத்தட்ட முழுமையாக அவள் கவனிக்க ஆரம்பித்ததிலிருந்து தேவை என்று வந்தால் கலந்தாலோசிப்பது வரை நடக்கும். ஆனாலும் கூட நேரில் ஒரு இயல்பு அவர்களுக்குள் வரவேயில்லை.

என்ன என்றாலும் இப்படி செய்தி அனுப்புவதும் வொயிஸ் மெசேஜ் அனுப்புவதும் மிக இலகுவாய் வந்தது. பெரும்பான்மையான அவர்களின் உரையாடல் இப்படித்தான் நடக்கும்.

அவள் மண்டபத்துக்குச் சென்று சேர்ந்தபோது மாப்பிள்ளையின் தாய் தந்தை வாசலுக்கே வந்து வரவேற்றுச் சென்றார்கள். ஒற்றைப் பெண்ணுக்கான அந்த வரவேற்பை மண்டபமே பார்த்தது. அவள் எந்தப் பார்வையையும் பொருட்படுத்திக்கொள்ளவில்லை. அவர்கள் காட்டிய இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

அழகான சோடி, மண்டபம் நிறைந்த ஆட்கள், சாதாரணமாகவும் இல்லாமல் பகட்டாகவும் இல்லாமல் சீரும் சிறப்புமாகத் திருமணம் நல்லபடியாகவே நடந்தது. உதட்டோரம் ஒட்ட வைத்த முறுவலோடு அனைத்தையும் பார்த்திருந்தாள். புகைப்படத்துக்கு நின்று, பரிசு கொடுத்து, சம்பிரதாயமாக உணவையும் முடித்துக்கொண்டு, மாப்பிள்ளை வீட்டினரிடம் விடைபெற்று நடந்தவளை ஒருவர் வந்து பிடித்துக்கொண்டார்.

“அப்பா அம்மா எப்பிடி இருக்கினம்?”

“நல்லா இருக்கினம் அங்கிள்.” சம்பிரதாய முறுவலோடு பதில் சொன்னாள்.

“சுகம் கேட்டேனாம் எண்டு சொல்லிவிடுங்கோம்மா. அவே வருவினம் எண்டு எதிர்பாத்தனான். நீங்க வந்திருக்கிறீங்க.” இப்போதெல்லாம் அவர்களைச் சந்திக்க முடிவதில்லை என்கிற தொனியில் அவர் சொல்ல, அதற்கான காரணம் தான் தானே என்று கன்ற முயன்ற முகத்தை இத்தனை வருட அனுபவத்தில் வேகமாகச் சமாளித்துக்கொண்டு, “அப்பான்ர நம்பர் இல்லையா உங்களிட்ட? இல்லாட்டிச் சொல்லுங்க தாறன். கதைங்க.” என்று தன் கைப்பையிலிருந்து கைப்பேசியை அவள் எடுக்க முயன்றபோது, “கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா, பிளீஸ்.” என்று கேட்ட இங்கிதம் நிறைந்த குரலில் நெஞ்சமெல்லாம் என்னவோ செய்ய, வேகமாகத் திரும்பினாள் நிரல்யா. கூடவே, அவள் உடல் அவன் கேட்டதைத் தன்னிச்சையாய்ச் செய்தது.

அங்கே நின்றிருந்தவன் சிசிர! அவளின் சிசிரவேதான். அவள் விலகி நின்றதற்கு நன்றி சொல்லும் விதமாய் அவள் முகம் பார்த்துச் சிறு புன்னகையைச் சிந்திவிட்டு அவளைக் கடந்து, மேடையை நோக்கி நடந்துகொண்டிருந்தான். கிட்டத்தட்ட மூன்று வயது கொண்ட பெண் குழந்தை ஒன்று அவன் கையில் இருந்தாள். கூடவே, தாய்மையைச் சுமந்திருந்த பெண்ணொருத்தியும் அவனோடு சென்றுகொண்டிருந்தாள்.

நிரல்யாவுக்கு இதயம் நின்றே போயிற்று. விழிகள் இரண்டும் வெளியே வந்துவிடும் அளவுக்கு அதிர்ச்சியில் விரிந்து போயிற்று. கண்முன்னே காணும் காட்சியை நம்ப முடியாமல் பிடித்துவைத்த சிலையென நின்றாள்.

“தெரிஞ்சவரோ?” பக்கத்தில் நின்றவர் கேட்டது அவள் செவிகளில் விழவேயில்லை. இவளைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு விலகி நடந்தார் அவர்.

அதையெல்லாம் உணராமல் அவன் போகும் திசையையே இமைக்காமல் தொடர்ந்தன அவள் விழிகள். மேடை அருகில் சென்றதும் தேங்கி, “நீ முதல் ஏறு.” என்று அந்தப் பெண்ணை முன்னால் ஏறவிட்டுவிட்டு, அவன் பின்னால் மகளோடு ஏறிக்கொண்டிருந்தான்.

அவளுக்கு உடலும் உள்ளமும் நடுங்கின. விழுந்துவிடுவோம் என்று தெரிந்த நொடியில் அருகில் இருந்த நாற்காலியைப் பற்றிக்கொண்டு இன்னொரு நாற்காலியில் தொய்ந்து விழுந்தாள். அவளால் சுவாசிக்கவே முடியவில்லை. நெஞ்சில் எதுவோ வந்து அடைத்தது.

அவளின் சிசிர எப்படி இன்னொரு பெண்ணோடு? இல்லை என் சிசிர என்னைத் தாண்டிப் போகமாட்டான் என்று இப்போதும் கதறும் உள்ளத்தை நம்புவாளா, இல்லை, கண் முன்னே நடக்கும் காட்சியை நம்புவாளா?

அவன் ஃபோட்டோக்கு நின்றுவிட்டுத் திருமணத் தம்பதியரை வாழ்த்திவிட்டு இறங்கி வருவது தெரிந்தது. அப்படியே மண்டபத்தில் அவனுக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் இரண்டு வார்த்தை பேசி, சிரித்த முகமாய்க் கைகொடுத்து விடைபெற்றுக்கொண்டிருந்தான்.

சாதாரணமாக ஒரு டான்சில் இன்னொருத்தியை அவனருகிள் பார்க்க முடியாமல் கொதித்தவள் அவள். இன்றோ இன்னொருத்தியின் அருகில் மட்டுமில்லை அவளுக்குக் கணவனாக, இரண்டு குழந்தைகளின் தந்தையாக நிற்கிறான்.

யாரோடு வாழ்வதற்காய் அனுதினமும் கனவுகளை வளர்த்தாளோ இன்று அவனையே யாரோ ஒருத்தியாய் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

கண்ட கனவுகள், காத்திருந்த காத்திருப்பு, கடந்துபோன காலம், தேக்கி வைத்திருந்த நினைவுகள் எல்லாவற்றையும் இனி என்ன செய்வாள்?


தொடரும்...

பெருசாவே போடுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனா, உங்க எல்லோரின் எதிர்பார்ப்பும் பார்க்கும்போது காக்க வைக்கவும் மனமில்லை. எழுதின வரை போட்டுட்டேன். எப்படி இருக்கு என்று சொல்லுங்க. (முடிந்தால் இரவுக்கு இன்னும் ஒன்று போட பாக்கிறேன். இல்லாட்டி நாளை பகல் வரும்.)

ஆவலாய் காத்திருக்கும் அத்தனை அன்பு உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி நன்றி. கருத்திட்டு போஸ்ட்டுகள் போட்டு குரூப்பை அதகளப்படுத்தும் அனைவருக்கும் மிகுந்த நன்றிகள். குரூப்
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 27


அவன் மேடைக்கு ஏறிய கணத்திலிருந்தே அவனுக்குள் ஏதோ ஒரு வித்தியாசம். யாரோ தன்னையே பார்ப்பதுபோல், என்னவோ இதயத்தையே பிசைவதுபோல், ஏதோ ஒரு அந்தரிப்பு. அவன் உயிர் காரணமே இல்லாமல் துடித்தது. மனம் ஒருவிதமாக அமைதியிழந்து அலைபாய்ந்தது.

மேடையை விட்டு இறங்கியதும், “உனக்கு ஏதும் உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கா?” என்று மனைவியிடம் விசாரித்தான்.

“இல்லையே. சாப்பிட்டது செமிக்காத மாதிரி இருக்கே தவிர வேற ஒண்டும் இல்ல.” என்று சொன்னாள் அவள்.

பிறகும் என்ன? தன் ஆழ்மனத்தின் உணர்வுகளைத் தள்ளி வைத்துவிட்டு நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு விடைபெற ஆயத்தமானான்.

அப்போது அவன் கைகொடுத்து பேசிய ஒருவன் இவளைக் காட்டி, “உன்னையே பாக்கிறா மச்சான். உனக்குத் தெரியுமா?” என்று சொல்லவும் திரும்பிப் பார்த்தான் சிசிர.

சற்று முன் அவன் விலகி நிற்கச் சொன்ன அந்தப் பெண். அவள் ஏன் அவனையே பார்க்க வேண்டும்? முக்கியமான ஒருத்தியாய் இருக்க வேண்டும் என்று, அவள் மண்டபத்துக்குள் வரும்போது கிடைத்த கவனிப்பை வைத்தே கணித்திருந்தான். அவன் திரும்பிப் பார்த்தபோதும் அகலாத அவளுடைய பார்வை அவனை என்னவோ செய்தது.

“தெரியுமாடா?” நண்பனின் குரல் இடையிட்டது.

“நான் மறந்த லிஸ்ட்ல அவாவும் ஒரு ஆள் போல.” என்றான் அவன் இயல்பாய். நீ இறப்பின் இறுதிவரை மறக்கவே கூடாது என்று நினைத்த ஒருத்தி அவள் என்று அவனிடம் யார் சொல்வது?

அதுவும் அந்த விழிகளில் தெரிந்த தவிப்பும் துடிப்பும் அவன் இதயத்தை என்னவோ செய்ய, அவன் கால்கள் தன்னிச்சையாய் அவளை நோக்கி நடந்தன.

*****

அவனோடு பேசிக்கொண்டிருந்த நண்பன் அவளைக் காட்டி என்னவோ சொல்வதும் அவன் திரும்பி இவளைப் பார்ப்பதும் கருத்தில் பதிந்தாலும் அவளால் அவனிடமிருந்து விழிகளை அகற்ற முடியவில்லை. இந்த ஐந்து வருடங்களையும் அவனைப் பார்க்கப் போகும் ஒற்றை நொடிக்காகவே கடந்து வந்தவள் எப்படி அகற்றுவாள்?

பசை போட்டு ஒட்டியது போன்று அவன் நகருமிடமெங்கும் அவள் விழிகளும் நகர்ந்துகொண்டே இருந்தன.

அவள் முகத்தை நேராக நிமிர்ந்து பார்த்து முறுவலித்துவிட்டு வெகுசாதாரணமாகக் கடந்து போனானே! எப்படி முடிந்தது அவனால்? அவனுடைய நிராவை மறந்துவிட்டானா? அது அவனால் முடிகிற காரியமா? முடிந்திருக்கிறது என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.

அழகாய் இருந்தான். மிக மிக அழகாய் இருந்தான். இளம் வாலிபனின் தோற்றம் அகன்று முழு மனிதனாகியிருந்தான். ஓடி வந்து, அவளுக்கு முன்னால் மூச்சிறைக்க நின்று சிரிக்கும் சிசிர இல்லை அவன். மளுக்கென்று வழிந்துவிட்ட கண்ணீரை அது வழிந்த வேகத்தை விடவும் வேகமாகத் துடைத்துக்கொண்டு திரும்பவும் அவனையே பார்த்தாள்.

இன்னும் கம்பீரமாக இருந்தான். அடர்ந்த மீசை, முழுவதுமாக வழித்த தாடி, அடர் நீல நிற ஷேர்ட். அதுவும் பிளேன் ஷேர்ட். அதுவே நான் உன் சிசிர இல்லை என்று சொல்வது போலிருந்தது.

வார்த்தைக்கு வார்த்தை ‘மகே நிரா’ என்பானே! ‘கண்மணி கண்மணி என் காதலியே, ஓஹோ என்னுயிர் பெண்மணி எனையாளும் பூவே’ என்றெல்லாம் பாடிவிட்டு, ‘தேவதையே என் வானம் நீ’ என்றெல்லாம் சொல்லிவிட்டு இன்னொருத்தியைக் கரம் பற்றி நிற்கிறானே! அதுவும் அவளுக்கு முன்னாலேயே!

கையில் வைத்திருக்கும் மகளோடு அவன் தன்னை நோக்கி வருவது தெரிந்தும் அவளால் அவனிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை.

“நீங்க தமிழா?” அவளை நெருங்கி வந்தவன் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

அந்தக் குரல் அவள் செவிகளுக்குள் நுழைந்து, இதயத்துக்குள் புகுந்து, அவள் இரத்தவோட்டத்தை அதிகரித்து, முகத்தையே சிவக்க வைக்க அவள் நெஞ்சு ஒருமுறை வெடிக்கும் வேதனையில் குலுங்கிற்று. கை தன்னிச்சையாய் நெற்றியைத் தடவிப்பார்த்து, அங்கே அவள் வைத்திருந்த ஒட்டுப் பொட்டு இல்லை என்று கண்டுகொண்டது.

அன்று ‘தெமலத’ என்று கேட்டு அனைத்தையும் ஆரம்பித்து வைத்தவன் இன்று ‘நீங்க தமிழா’ என்று கேட்கிறான். என்ன சொல்ல? தமிழச்சியாய்ப் பிறந்த ஒற்றைக் காரணத்தினால் இப்படித் தனித்துப்போய் நிற்கிறேன் என்றா? இல்லை இப்படிக் கேட்டு ஆரம்பித்த நீ, என் உயிரின் எங்கும் மூச்சுக் காற்றாய்க் கலந்து நிற்கிறாய் என்றா? என்ன சொல்லுவாள்? வார்த்தைகள் எதுவும் வராமல், கசங்கிய முகத்தோடு அவனையே பார்த்திருந்தாள்.

அந்தப் பார்வை அவனையும் என்னவோ செய்தது. அவளுக்குச் சற்றே இடைவெளி விட்டு அமர்ந்துகொண்டு, “என்னை உங்களுக்கு முதலே தெரியுமா?” என்று மிகுந்த கண்ணியத்தோடு வினவினான்.

யாரிடம் வந்து என்ன கேட்கிறான்? அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அந்த அடர் நீல நிற விழிகளையே நெஞ்சு துடிக்கப் பார்த்தாள். அவன் நடிக்கவில்லை. மெய்யாகவே அவளை அவனுக்குத் தெரியவில்லை என்று அந்த விழிகள் அவள் விழிகளை நேர் கோட்டில் சந்தித்துச் சொல்லின.

அவள் உதட்டோரம் மெலிதாய் நடுங்கிற்று. நீ என் உயிருக்குள் நிறைந்தவனடா, எப்படி என்னை மறந்தாய், எப்படி என்னை மறக்க உன்னால் முடிந்தது என்று அவன் சட்டையைப் பிடித்துக்கொண்டு உலுக்க வேண்டும் போல் எழுந்த உணர்வை அடக்கிக்கொண்டு, அவனையே பார்த்திருந்தாள்.

அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. உயிர் துடிக்கும் வலியை விழிகளில் சுமந்தபடி, கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், சிமிட்டினால் கூட மறைந்துவிடுவானோ என்பது போன்று அவனையே விடாமல் பார்க்கிறவள் அவனுக்கு மிகுந்த குழப்பத்தை உண்டாக்கினாள்.

“சொறி, பிழையா நினைக்காதீங்க. அஞ்சு வருசத்துக்கு முதல் நடந்த ஒரு ஆக்சிடென்ட்ல எனக்குப் பழசு எல்லாம் மறந்து போச்சு. அதுதான் எனக்கு உங்களைத் தெரியேல்ல. நீங்க என்னையே பாக்கவும் சில நேரம் தெரிஞ்ச ஆளோ எண்டுதான் கதைக்க வந்தனான்.” மன்னிப்பை வேண்டும் குரலில் நயமாய் இயம்பினான் அவன்.

அவள் விழிகளில் பெரும் அதிர்வு. இது என்ன புதுக் கதை என்பதுபோல் அவனைப் பார்த்தாள்.

இதுவரையில் அவள் அவனுக்குப் புரியாத புதிராக இருந்த போதிலும் கலங்கிச் சிவந்திருந்த அந்த விழிகளில் இருந்த கேள்வியைப் படித்தான் அவன்.

“நான் லண்டனுக்கு படிக்கப் போயிருந்தனான். அங்க இருந்து திரும்பி வந்த நேரம் நாங்க வந்த வேனும் எதிர்ல வந்த லொறியும் மோதினதில அம்மா அந்த இடத்திலேயே இறந்திட்டா. அப்பாக்கு ஒரு கால் இல்ல. எனக்கு இப்பிடி. கடவுள் புண்ணியத்தில தங்கச்சி ஒருத்திக்குத்தான் ஒண்டும் இல்ல. அவளும் அதிர்ச்சில இருந்து வெளில வாறதுக்கு ஆறு மாதத்துக்கு மேல ஆயிற்றுது. இப்ப பரவாயில்ல. ஓரளவுக்கு எல்லாரும் தேறி, நோர்மல் வாழ்க்கைக்கு வந்திட்டம்.” கண்ணை எட்டாத ஒற்றை முறுவலோடு பகிர்ந்தான் அவன்.

அவள் நெஞ்சு குலுங்கியே போயிற்று. அவனுக்கு ஏதுமோ என்று கூடச் சில நேரங்களில் யோசித்து நடுங்கியவள் இப்படி ஒன்றை யோசிக்கவே இல்லை. காலம் ஆடிய விளையாட்டில் அவனையும் அவளையும் திசைக்கு ஒன்றாய் தூக்கி எறிந்துவிட்ட அந்த விதியை என்ன சொல்லி நோவாள்?

ஆனாலும் நிறையக் கேள்விகளும் குழப்பங்களும் அவளைப் போட்டு ஆட்டின. அதையெல்லாம் கேட்குமளவுக்குத் தெம்பு இல்லாமல், “சொறி, எனக்கு இதெல்லாம் தெரியாது.” உடைந்து நலிந்த குரலில் மெல்ல இயம்பினாள்.

“அதெல்லாம் நடந்து அஞ்சு வருசமாச்சு. நாங்களும் மெல்ல மெல்ல அதில இருந்து வெளில வந்தாச்சு. நீங்க கவலைப்படாதீங்க.” என்றான் அவன் அவளுக்கு ஆறுதலாய்.

இதுதானே அவன். இவனிடம்தானே தன் மனத்தை இழந்தாள். இன்று அவனை மொத்தமாகவே இழந்துவிட்டாளா? அவளுக்கு அவன் தங்கையைத் தெரியும். மொத்தக் குடும்பத்தையும் புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள். அவனோடு நின்றவள் தங்கை இல்லை என்பதும், அவர்கள் இருவருக்குமிடையில் தெரிந்த அன்னியோன்யம் நிச்சயம் அவள் அவன் மனைவிதான் என்று அடித்துச் சொன்னபோதிலும், இறைவன் ஒரு துளியாவது அவள் மீது கருணை காட்டியிருக்க மாட்டானா என்கிற ஏக்கத்துடன், “இவா ஆரு?” என்றாள் அவன் கையில் இருந்த குழந்தையைக் காட்டி.
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom