You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
“இல்ல! எனக்காக! நீ எனக்கும் வேணும் எண்டுறதுக்காக!”

அவள் தலை ஒருவித அவசரத்துடன் மறுப்பாய் அசைந்தது. “இல்ல! நான் நம்ப மாட்டன். நீங்க அப்பிடி இல்ல. எனக்குத் தெரியும். முதல் என்னால சத்தியமா இது ஏலாது. இதுக்கு நீங்க என்னைக் கொண்டே போடலாம்.” என்றதும் கொதித்துப் போனான் அவன்.

“கொல்லுறதுக்காடி உன்னோட கிடந்து சாகிறன்?” ஓரெட்டில் அவள் முன்னால் வந்து நின்று சீறியவனைக் கண்டு, அவளுக்கு ஒரு கணம் இதயத் துடிப்பே நின்று போயிற்று. விழிகள் இரண்டும் வெளியே வந்துவிடும் அளவுக்கு விரிந்து போயின. மூச்சு விடக்கூட மறந்தவளாக அவனையே பார்த்து நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.

“உன்னில எனக்குப் பாசம், அக்கறை எல்லாம் இருக்கு. அது வேற! அதைத் தாண்டி எனக்கு உன்னப் பிடிக்கும். உன்னை மட்டும்தான் பிடிக்கும். இது இண்டைக்கு நேற்று வந்த ஆசை இல்ல. உன்ர ஸ்கூல் பிரியாவிடை பார்ட்டிக்கு முதல் முதலா சாறி கட்டிக்கொண்டு வெக்கமும் கூச்சமுமா படில இறங்கி வந்தியே, அண்டைக்கு உன்னப் பாத்ததில இருந்து எனக்கு உன்னப் பிடிக்கும். நீ வேணும், நீ மட்டும்தான் வேணும் எண்டு இருந்தனான். ஆரம்பம் நீ சின்ன பிள்ளை, படிச்சு முடிக்கட்டும் எண்டு நினைச்சன். அதைவிட தனியா நிண்ட என்னைக் கூட்டிக்கொண்டு வந்து, உனக்குச் சமனா வச்சுப் பாக்கிற மாமாக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது எண்டுதான் உன்னட்டச் சொல்லேல்ல. நடுவுக்க நிறைய நடந்தும் போச்சு. சரி படிச்சு முடிக்கட்டும் எண்டு பாத்திருந்தா நீ எவனோ ஒருத்தனைக் கூட்டிக்கொண்டு வந்து நிக்கிறாய்!” என்றான் முகமெல்லாம் கோபத்தில் சிவக்க.

அவன் கண்களில் காதல் இல்லை, கனிவு மருந்துக்கும் இல்லை, நேசம் இல்லை. கோபம் கோபம் மட்டுமே இருந்தது. அவள் முகத்தில் மோதிய அவன் மூச்சுக் காற்றில் கூட அனல் பறந்தது. அவன் உடம்பில் அவளை அடித்துவிடும் அளவுக்கான ஆவேசம் தெறித்தது.

“ஆனா அது எல்லாம் முடிஞ்சு போச்சு! அவனைத் தாண்டி வா. என்னட்ட வா! வா என்ன வாறாய்! விளங்கினதா?” என்றான் உத்தரவாக.

அவளுக்கு மறுக்கும் தைரியம் இல்லை. மிடறு கூட்டி விழுங்கினாள்.

“இனியும் சும்மா சும்மா அழுதுகொண்டு இருக்கிறேல்ல. திங்கள்ல இருந்து கடைக்கு வாறாய். மாமாவோட கதைச்சு கெதியில ஒரு நாள் குறிப்பன். வந்து கழுத்த நீட்டுறாய். நாங்க வாழுறதுக்கு எந்த அவசரமும் இல்ல. ஆனா இந்தக் கலியாணம் அவசரமா நடக்கவேணும். விளங்குதா? அத விட்டுட்டு இனியும் அரை லூசுத்தனமா எதையாவது யோசிச்சுக்கொண்டு இருந்தியோ… உன்ர மச்சானைப் பற்றி உனக்கே நல்லாத் தெரியும்!” என்றான் எச்சரிக்கும் விதமாக.

அவளிடம் அசைவில்லை. ஒரு கணம் இமைக்காது அவளையே பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான். அப்போதுதான் அவன் மனம் ஆறியது. எத்தனை வருடத்துக் குமுறல். ஒரு வழியாகக் கொட்டிவிட்டான். ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுவிட்டு இரண்டடி எடுத்து வைத்தவன் திரும்பவும் அவள் முன்னால் வந்து நின்று, “நீங்க ரெண்டு பேரும் சேரவேணும் எண்டு நானும் நினைச்சபடியாத்தான் இவ்வளவு காலமும் நீ நீயா இருந்தனி. நீ குத்தின இந்தப் பச்சை கிச்சை எல்லாம்…” என்றவன் தன் தலையின் மயிரைப் பிடித்து இழுத்துக் காட்டி, “இதுக்குச் சமன். அதால இப்பவும் வேற ஏதாவது லூசு வேலை பாக்கலாம் எண்டு நினைக்காத!” என்றான் பல்லைக் கடித்து.

அவள் அசையவே இல்லை. அவன் முகத்திலிருந்து பார்வையை அகற்றவும் இல்லை. அந்தக் கணத்தில் சிசிர என்கிறவன் அவள் நினைவிலேயே இல்லை. அவள் சிந்தையை மொத்தமாய்ச் சிறைப் பிடித்திருந்தான் அனந்தன்.

அப்போதுதான் அவள் நிலை கவனத்தில் வந்தது. ‘சும்மாவே உலகத்திலேயே இல்லாத ரவுடி மாதிரிப் பாப்பாள். இதுல…’ தலையை வேகமாகக் கோதித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “நிரல்!” என்று மெதுவாக அழைத்தான்.

அப்போதும் அவளிடம் அசைவில்லை என்றதும், “நிரல்!” அவள் தோள்களைப் பற்றி உலுக்கினான்.

“ஆ? என்ன என்ன?” அதிர்ந்து விழித்தவள், “இல்ல இல்ல. இனி நான் ஒண்டும் செய்ய மாட்டன்.” என்றாள் பதறிக்கொண்டு.

அவனுக்கே ஒருமாதிரி ஆகிப்போயிற்று. “என்னடி நீ? உன்னை என்ன பிடிச்சுத் திண்டனானா? இந்த நடுங்கு நடுங்கிறாய்? முதல் வந்து இரு!” அவளைக் கைப்பிடியிலேயே அழைத்து வந்து, அங்கிருந்த அவனுடைய பீன் பாக்கில் அமர வைத்தான். அருந்தத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான்.

அவள் அருந்தியதும் வாங்கிப் பக்கத்தில் வைத்துவிட்டு, “சாப்பிட்டியா?” என்றான் தணிந்த குரலில்.

“ஓம்… ஓமோம் சாப்பிட்டன்.”

“திங்கள்ல இருந்து கடைக்கு வாறியா?”

அவள் தலை சரி என்று ஆடியது.

“மாமா மாமி என்ன செய்யினம்?”

“நி…நித்திரை.”

இன்னும் அவள் பயத்திலிருந்து வெளிவரவில்லை என்று புரிந்தது. அதில், “சரி, ஒண்டையும் யோசிக்காம நீயும் போய்ப் படு!” என்றான் இதமான குரலில்.

விட்டால் போதும் என்று அவளும் எழுந்து ஓடினாள்.

போகிறவளையே பார்த்திருந்தவன் அவள் மறைந்ததும் ஒரு நெடிய மூச்சுடன் அதே பீன் பாக்கில் தொய்ந்து விழுந்தான்.


*****


அடுத்தநாள் காலையில் கடையில் மாட்டினார் சுந்தரலிங்கம். “என்ன மாமா, முகமே பாக்கிறீங்க இல்ல. என்னில அவ்வளவு கோவமா?” அவரின் முன்னால் சென்று அமர்ந்துகொண்டு வினவினான் அனந்தன்.

ஒன்றும் சொல்ல இயலாமல் அவனைப் பார்த்தார் அவர்.

“நிரலைப் பற்றி யோசிக்காதீங்க மாமா. நான் இருக்கிறன்தானே?” என்றான் தெம்பளிக்கும் விதமாய்.

அவர் விழிகள் கலங்கிப் போயின. “எனக்கும் அது தெரியும் நந்தா. உன்ர கைல அவளைப் பிடிச்சுத் தந்தா அவள் நல்லா இருப்பாள். அதுவும் தெரியும். ஆனா நீ? எனக்கு நீயும் சந்தோசமா இருக்கோணும். அவளுக்காக உன்ர சந்தோசத்தைக் கெடுக்காத. இவ்வளவு காலமும் நீ எங்களுக்காகச் செய்தது எல்லாம் போதும்.” என்றார் குரல் கரகரக்க.

“அப்ப இன்னும் என்னை இன்னொரு வீட்டு பிள்ளையாத்தான் பாக்கிறீங்க!” உதட்டோரம் அரும்பிய மெல்லிய முறுவலோடு, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து வினவினான்.

“அடி வாங்கப் போறாய் நந்தா! நானே பெத்த பிள்ளை எண்டு ஒருத்தன் இருந்திருந்தாக் கூட இத்தறிக்கு(இந்தளவில்) தனக்கு எண்டு ஒரு வாழ்க்கையைப் பாத்துக்கொண்டு போயிருப்பான். அதில பிழையும் இல்ல. ஆனா நீ? அப்பிடியான உன்ன வேறயாப் பாப்பனா? ஆனாலும் எங்களுக்காக எண்டு நீ பாத்தது எல்லாம் போதும். இனியாவது உனக்காக வாழு. உன்ர சந்தோசத்தைப் பார்.” என்றார் அப்போதும்.

“அப்பிடியெல்லாம் யோசிக்காதீங்க மாமா. நானும் அவளைக் கட்டினாத்தான் சந்தோசமா இருப்பன்.”

அவன் இப்படித்தான் சொல்வான் என்று தெரியும். ஆனாலும் கூட அவருக்குப் பேச்சற்றுப் போனது.

“என்ன மாமா?”

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தவர், “வட்டி, அடிதடி எண்டு நான் செய்த பாவங்களுக்கு நடுவில நான் செய்த ஒரேயொரு புண்ணியம் உன்னக் கையோட கூட்டிக்கொண்டு வந்தது நந்தா. அதுதான் கடவுள் இந்தளவில எண்டாலும் என்ர குடும்பத்தைக் காப்பாத்தி இருக்கிறார் போல. நீ இல்லாட்டி? என்னால என்ர குடும்பத்தைப் பற்றி யோசிக்கவே ஏலாம இருக்கு. எப்பயெல்லாம் தவிச்சு நிக்கிறனோ அப்ப எல்லாம் நான் இருக்கிறன் மாமா எண்டு வந்து நிக்கிறாய்.” என்றவருக்கு உள்ளம் எல்லாம் நிறைந்து போயிற்று. இனி அவன் பார்த்துக்கொள்வான் என்கிற அந்த எண்ணமே மிகப்பெரிய தெம்பைத் தந்தது.

திருமணத்தையும் அவன் உடனேயே நடத்திவிடலாம் என்று சொல்லவும், “கொஞ்ச நாள் போகட்டுமே.” என்றார் தயவாய்.

அந்தச் சிசிர இனி மகள் வாழ்க்கையில் இல்லை என்று ஆயிற்று. அவள் கொஞ்சம் அதிலிருந்து வெளியே வரட்டுமே என்று எண்ணினார்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன் இப்போது மறுப்பாய்த் தலையை அசைத்தான். “கொஞ்ச நாள் போனா மட்டும்? நிரல் அதில இருந்து வெளில வந்திடுவாள் எண்டு நினைக்கிறீங்களா?”

அவர் பதிலற்று அவனைப் பார்க்க, “அவள் எல்லாம் தானா இதில இருந்து வெளில வாற ஆள் இல்ல. நாங்கதான் கொண்டுவர வேணும். நானும் வேற எந்த நினைப்பிலையும் இதச் செய்ய நினைக்கேல்ல. இனி வாழ்க்கையே சூனியம்தான் எண்டுறவளின்ர நினைப்ப மாத்தோணும். உனக்கு நான் இருக்கிறன் எண்டு சொல்ல ஆசைப்படுறன் அவ்வளவுதான்.” என்றான் அவன் தெளிவாய்.

“ஏன் நந்தா அவளில் இவ்வளவு பாசம்?” நிறைய நாள்களாக அவருக்குள் ஓடிய கேள்வியை இன்று கேட்டார்.

சின்ன முவலோடு, “ஏன் நீங்க என்னைக் கையோட கூட்டிக்கொண்டு வந்தனீங்க? நான் ஒண்டும் உங்கட நெருங்கின சொந்தமும் இல்லையே.” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

அவர் அவனைப் பொய்யாக முறைக்க அவன் முறுவல் விரிந்து போயிற்று. “சில கேள்விகளுக்குப் பதில் இல்ல மாமா. சிலதை உணர மட்டுந்தான் ஏலும். அப்பிடித்தான் அவள் எனக்கு.” என்றவன், “சரி மாமா, நான் ஒருக்கா ரங்கராஜனைப் பாத்துக்கொண்டு வரவேணும். காசு தாறது வரவர ஒழுங்கில்லாம இருக்கு.” என்றபடி எழுந்தவன் நினைவு வந்தவனாக, “நேற்றே அவளிட்ட இதைப் பற்றிக் கதச்சிட்டன். உங்களிட்டயோ மாமிட்டையோ வேண்டாம், விருப்பம் இல்லை எண்டு கதைக்க வருவாள். அதுக்கு ஓம் எண்டு சொல்லிப்போடாதீங்க. லேசுல ஓம் எண்டு வரமாட்டாள். கவனம். அதே மாதிரி பெரிய எந்த ஆர்ப்பாட்டமும் வேண்டாம். சின்னதா, ஒரு கோயில்ல கலியாணத்தை வச்சாக் கூடப் போதும்.” என்றுவிட்டுப் புறப்பட்டான்.

திருமணம் நல்லபடியாக முடிய வேண்டும். அதன் பிறகும் அவன் மணவாழ்க்கை இதமானதாய் இருக்கப் போவதில்லை என்று அறிந்துதான் இருந்தான். ஆனாலும் கூட அவளை மாற்றிவிடலாம் என்று ஆழமாய் நம்பினான்.

அப்போது பிரைவேட் ஏஜென்சியிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

“அனந்தன், தேவையான நேரம் நீங்க கேட்ட உதவிய செய்யேலாமப் போனதில உண்மையாவே எனக்கும் கவலைதான். ஆனா, அதுக்கு நாங்க மட்டுமே முழுக் காரணம் இல்ல.” என்று எதிர்ப்புறத்தில் இருந்தவர் சொல்லவும் அவன் புருவங்கள் சுருங்கின.

“முதல் விசயம் அவரின்ர தங்கச்சி அந்தக் காலத்தில தமிழ் ஆளை விரும்பி, சொல்லாம கொள்ளாம காலில இருந்து திருகோணமலைக்குப் பதினெட்டு வயதிலேயே வந்திட்டாவாம். அதில குடும்பம் மொத்தமே அவாவை ஒதுக்கி வச்சிருக்கு. அவவின்ர கணவர் இறந்தபிறகு மத்தும பண்டார அப்பப்ப மட்டும் போன்ல கத பேச்சு வச்சு இருந்திருக்கிறார். அவாவும் மனுசன் இருக்கேக்க சேர்க்காத சொந்தம் இனியும் வேண்டாம் எண்டு பிடிவாதமா திருகோணமலையிலேயே இருந்திட்டா. சிசிர குடும்பம் திருகோணமலைக்கு வந்ததும் இல்ல. அதாலதான் அவா பற்றின எந்த விசயத்தையும் எங்களால கண்டு பிடிக்கேலாம இருந்திருக்கு.” என்றதும், “ஓ!” என்றான் அனந்தன்.

“ரெண்டாவது விசயம், சிசிர அங்க லண்டன்ல படிப்பை முடிக்க இல்ல எண்டு நினைக்கிறன். சரியாச் சொல்லப்போனா நீங்க விசாரிக்கச் சொன்ன மாதத்துக்கு ரெண்டு மாதத்துக்கு முதலே அவர் ஸ்ரீ லங்கா வந்திட்டார். நாங்க நீங்க சொன்ன மாதத்திலிருந்துதான் விசாரிச்சமே தவிர முன்னுக்கு விசாரிக்க இல்ல. அந்த நேரம் லண்டன்ல இருந்திருப்பார் எண்டு நினைச்ச ஒருத்தரை இங்க விசாரிக்க வேண்டிய அவசியமும் இல்லைதானே? அதாலதான் ஆக்சிடென்ட் கேஸ்ல கூட அவேக்கு நடந்த விபத்து எங்கட கவனத்துக்கு வரேல்ல. ஆனா, இப்ப நான் விசாரிச்சதில அந்த விபத்துக்குக் காரணமா இருந்த அந்த லொறி ஒரு அரசியல்வாதின்ர லொறி எண்டு தெரிய வந்திருக்கு. அதுவும் களவா மணல் கொண்டு வரேக்கை நடந்திருக்கு. சோ போலீசும் மொத்தமா மூடி மறச்சிருக்கு.” என்றதும் பஜிரோவை கரையாக நிறுத்தியிருந்தான் அனந்தன்.

என்னவோ அவர்கள் சேர்ந்துவிடக் கூடாது என்பதுதான் காலத்தின் கட்டாயமாகவும் இருந்திருக்கிறது போலும். இல்லாமல் படிப்பை முடிக்காமல் அவன்தான் புறப்பட்டு வருவானா, இல்லை, அவன் அங்கிருக்கிறானா, இங்கு வந்துவிட்டானா என்று அறிவதில் முனைப்புக் காட்டிய இவன் கூட எப்போது இங்கு வந்தான் என்று விசாரிக்காமல் விட்டிருப்பானா? ஆனால், அவன் அப்படி யோசிக்க அவசியமும் இல்லையே! மிகுந்த ஏழ்மைக் குடும்பத்திலிருந்து படிக்க என்று போனவன், அந்தப் படிப்பையே நிரல்யாவோடு சேருவதற்கான ஒற்றைப் பற்றுக்கோளாக நம்பி இருந்தவன் படிப்பை முடிக்க முதலே வந்திருப்பானோ என்று ஏன் யோசிக்க?

முதலில் ஏன் இரண்டே மாதங்கள் இருக்கையில் திரும்பி வந்தான்? இதற்கான பதிலைச் சிசிரதான் சொல்ல வேண்டும்.

ஒரு நெடிய மூச்சுடன், “வேற ஏதும் தெரிய வந்ததா?” என்றான்.

“இப்ப திருகோணமலையில மத்தும பண்டார இருக்கிறது தமிழர் ஏரியா. மகளைக் கட்டிக் குடுத்திருக்கிறது இன்னொரு ஊர். அவரின்ர தங்கச்சி இருக்கிறது இன்னொரு சிங்களக் கிராமம். அந்த அரசியல்வாதியும் சிசிர வேலை செய்ற நகைக்கடை ஓனரும் ஏதோ ஒரு வகைல சொந்தம். அப்பிடித்தான் இந்த வேலையும் சிசிரவுக்குக் கிடைச்சிருக்கு. மத்தும பண்டாரவுக்கு நீங்களும் நகைக்கடை லைன்ல இருக்கிற ஆக்கள் எண்டு தெரியாது எண்டு நினைக்கிறன். அதாலதான் நீங்க சிசிரவ அக்ரி சம்மந்தமான துறைல தேடுவீங்க எண்டு நினைச்சு இந்த வேலைக்குப் போக விட்டிருக்கிறார்.”

ஒரு எளிய மனிதன் எத்தனையை யோசித்திருக்கிறார் என்று மலைப்பாய் இருந்தது அவனுக்கு. “இந்தளவுக்கு எல்லாம் செய்த மனுசன் அப்பிடி எங்களைப் பற்றி விசாரிக்காம இருந்திருப்பார் எண்டு நினைக்கிறீங்களா?” என்று வினவினான்.

“எல்லாத்தையும் பிளான் பண்ணிச் செய்ய அவர் ஒண்டும் வில்லனோ கெட்டவரோ இல்லை அனந்தன். தன்ர குடும்பத்துக்கு ஆபத்து இருக்கு எண்டுற பயத்தில, தனக்குத் தெரிஞ்ச வகைல தன்ர குடும்பத்தைக் காப்பாத்த நினைச்சிருக்கிறார். அதில இதக் கோட்டை விட்டுட்டார் எண்டு நினைக்கிறன். ஏன் எண்டால் அந்த அரசியல்வாதி இவருக்குப் பெரிய தொகை ஒண்டு குடுக்கவும் முன் வந்திருக்கிறார். ஆனா இவர் வாங்கேல்ல. எங்கட குடும்பத்தைப் போலீஸ், கேஸ் எண்டு இழுக்காம விட்டாலே போதும் எண்டு சொல்லி இருக்கிறார்.”

“இவ்வளவையும் ஒரு கிழமைல கண்டு பிடிச்ச நீங்க இதில ஒரு சின்ன விசயத்தக் கூட இந்த அஞ்சு வருசத்தில கண்டு பிடிக்கேல்லையே, ஏன்?”

“அந்தக் கோவம்தான் என்னையும் இவ்வளவு வேகமா இதையெல்லாம் கண்டுபிடிக்க வச்சது அனந்தன். நீங்க நம்புவீங்களா தெரியாது, இந்த ஒரு கிழமையும் இருவது பேர் ஒரே நேரத்தில இறங்கி வேலை செய்திருக்கிறம். ஆனா நீங்க எங்கட இடத்தில இருந்தும் யோசிக்கோணும். ஏனோ மத்தும பண்டார காலில ஆருக்குமே சொல்லாமத்தான் ஏர்போர்ட் வெளிக்கிட்டு வந்திருக்கிறார். வீட்டுக்குத் திரும்பிற வழில விபத்து. இந்த விபத்துக்கும் உங்கட குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எண்டு தெரியிற வரைக்கும் அவர் தாங்க எங்க இருக்கிறோம் எண்டு மூச்சும் விடேல்ல. அதுக்குப் பிறகு நிச்சயமா அங்க நெருங்கின ஆரோடையாவது தொடர்பு இருந்திருக்கும். அவேயும் நெருங்கிப் பழகி இருந்தா காதும் காதும் வச்ச மாதிரி வெளில விடாம இருந்திருக்கலாம். அப்பிடி நடந்தா எங்களுக்குக் கண்டு பிடிக்கிறது உண்மையாவே கஷடம் அனந்தன். அடுத்தது நடந்த விபத்து. அது அரசியல்வாதின்ர லொறி எண்டுறது உங்களுக்குப் பாதகமாவும் அவருக்குச் சாதகமாவும் அமைஞ்சு போச்சு. அதால போலீசும் கேஸை மொத்தமா மூடிட்டாங்கள். அத அறியிறதுக்கே நீங்க தந்ததில பாதிக் காசுக்கு மேல நான் சிலவழிச்சிருக்கிறன் அனந்தன்.”

ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டான் அனந்தன். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது போலும். இல்லாமல் இப்படி எப்படி எல்லாமே அவர்களுக்கு எதிராக மாறியிருக்க முடியும்?

“சரி, நீங்க பில்ல அனுப்பிவிடுங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்கப் போக, “கடைசியா இன்னொரு விசயம் அனந்தன். சிசிரவுக்கு நினைவு திரும்பிட்டுது. ஆள் இப்ப ஆஸ்பத்திரில இருக்கிறார்.” என்றதும், “ஓ!” என்று நெற்றியைத் தேய்த்துவிட்டான் அனந்தன்.

அன்றிலிருந்து இன்றுவரை அவன் ஒன்று நினைக்க நடப்பது இன்னொன்றாகவே இருக்கிறது. சில வினாடிகளுக்கு அப்படியே இருந்தவன் நடப்பதைக் கண்டுகொள்ளும் முடிவோடு மீண்டும் பஜிரோவைக் கிளப்பினான்.

தொடரும்...

பெரும்பாலும் நாளைக்கு அடுத்த அத்தியாயம் வராது. வெளில கொஞ்சம் வேலை இருக்கு. அதாலதான் இதைப் பெருசா போட்டு இருக்கிறேன்.

கருத்திடும் அனைவருக்கும் நன்றி.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 33



கடந்த மூன்று நாள்களும் சிசிரவுக்கு நரகமாய்க் கழிந்திருந்தன. என்னென்வோ காட்சிகள் எல்லாம் வந்து வந்து போயின. கல்லூரி நாள்கள், மழை, குடை, காதல், அவனைக் களவாடும் இரண்டு விழிகள், அதிலிருந்து வழிந்த கண்ணீர், முத்தம், திருமணம், அழகான இல்லறம், பெண் குழந்தை, காலிக் கோட்டை, அக்பர் பாலம், திருகோணமலைக் கடற்கரை என்று பல இடங்களும் பல நிகழ்வுகளும் சுழற்றி அடித்தன. உயிர்போகும் தலைவலி ஒரு புறம், திரும்பியும் திரும்பாத நினைவுகள் இன்னொரு புறம், ஏன் என்றே தெரியாமல் ஊமையாய் அழும் உள்ளம் மறுபுறம் என்று அவனுக்குப் புத்தி பிசகாமல் இருப்பது பெரும் அதிசயம் போலிருந்தது.

கடைசியாகத் தேநீர்க் கோப்பையுடன் யன்னல் வழியாக வேடிக்கை பார்த்த நினைவு. அதன் பிறகு தடுக்க முயன்றும் முடியாமல் தரையில் விழுந்தது வரை கூட மங்கலாய் நினைவில் வந்தது.

அதன் பிறகு?

ஆனால் அவனுடைய நிரா, அவள் எங்கே? அவளைப் பார்க்க என்று இங்கிலாந்திலிருந்து ஓடி வந்தானே. நெஞ்சினில் அளவற்ற சந்தோசத்தையும் விழிகளில் பெரும் கனவையும் சுமந்தபடி பயணித்துக்கொண்டிருந்தபோது படார் என்று ஏதோ மோதியது. அவன் எங்கோ தூக்கி எறியப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்தான். அழுகை, ஒப்பாரி, கூக்குரல்கள் என்று அதன் பிறகு கேட்டதெல்லாம் ஓலக்குரல்களே!

படக்கென்று எழுந்து அமர்ந்தான். நெஞ்செல்லாம் படபடத்து வியர்க்க ஆரம்பித்தது. அங்கிருந்த தாதிப்பெண் இவன் எழுந்து அமர்ந்த வேகத்தில் ஓடி வந்தாள்.

“ரிலாக்ஸ்! அமைதியா இருங்க. எப்பிடி இருக்கு உங்களுக்கு?” அவனை ஆற்றுப்படுத்தி அவன் நிலையை அறிய முனைந்தாள்.

அவளைப் புரியாத பார்வை பார்த்தபடி தலையை அசைத்தான். “அம்…மா இருக்கிறாவா?” காற்றாகிவிட்ட குரலில் உலர்ந்திருந்த உதடுகளை அசைத்து வினவினான்.

அந்தத் தாதிப்பெண்ணின் முகமும் விழிகளும் பெரும் வியப்புடன் விரிந்தன. அன்று மயங்கி விழுந்த நிலையில் கொண்டுவரப்பட்டவனுக்கு விபத்துக்கு முதலான நினைவுகள் அனைத்தும் திரும்பியிருந்தன. பின்னானவை தெரிந்தும் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான். இப்போது அதுவும் நினைவு வந்துவிட்டது போலவே!

“இங்கயே இருங்கோ. டொக்டரை கூட்டிக்கொண்டு ஓடி வாறன். அவர் வந்து கதைப்பார்.” என்றுவிட்டுக் குடுகுடு என்று ஓடிப்போனாள்.

போன வேகத்திலேயே வைத்தியரோடு திரும்பி வந்தபோது அங்கே அவன் இல்லை. விழிகளில் கண்ணீர் வழிய வழிய வீடு திரும்பிக்கொண்டிருந்தான்.

அவன் வாழ்வில் அரங்கேறிய அத்தனை நிகழ்வுகளும் நினைவுக்கு வந்திருந்தன. விபத்து, அன்னையை இழந்தது, அத்தையின் சின்ன ஓலைக்கொட்டில் வீட்டில் வாழ்ந்தது, அவர் மகளோடு அவனுக்கு நடந்த திருமணம்… அதற்குமேல் யோசிக்க முடியவில்லை. விழிகளைத் துடைத்துக்கொண்டவனின் பார்வையில் பட்டது கையில் இருந்த டாட்டூ.

கொடி போன்று படர்ந்திருந்த ‘என்’க்குள் மிகுதி எழுத்துகள் புதைந்து கிடந்தன. அதைப் பார்க்கிற பொழுதுகளில் எல்லாம் அவன் கைகளுக்குள் அடங்கி, அவன் மார்புக்குள் அடைக்கலமாகிவிடுகிறவளின் நினைவு வந்துவிடும். இன்றும் அந்த நினைவோடு அதைத் தடவினான். அவளின் தோளணைக்கும் உணர்வு. மளுக்கென்று விழிகள் நிறைந்து போயின. கையை உயர்த்தி கைச் சட்டையில் கண்களைத் துடைத்துக்கொண்டான். ஆனாலும் கண்ணீர் இன்னுமின்னும் பெருகியது.

உடலில் பச்சையாகக் குத்தியவன் நெஞ்சில் அச்சாகப் பதிந்திருந்தவளை மறந்துவிட்டானே!

அவள்தான் அவன் வாழ்தலின் காரணி! மீனுக்கு நீர் போன்று, நெருப்புக்குக் காற்றுப் போன்று, உயிருக்கு உடல் போன்று அவனுக்கு அவள். அவள் இல்லையெனில் அவன் இல்லை. இன்றோ அவன் அவளுக்கில்லை! நெடிய மூச்சை இழுத்து விட்டு நெஞ்சின் தகிப்பைச் சமன் செய்ய முயன்றான். முடியவேயில்லை. ஆற்றாமையும் அழுகையுமாகச் சேர்ந்து நெஞ்சு கொதித்தது.

*****

‘உண்மையாவே அவருக்குக் கலியாணம் நடந்திட்டுதுதானா?’ என்று அன்று நிரல்யா கண்ணீருடன் கேட்டதில் இருந்தே மத்தும பண்டாரவுக்கு மனம் சரியில்லை. ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. அவள் கண்ணீரை இலகுவாய்க் கடந்து வர முடியவில்லை. நான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ என்கிற கேள்வி அடிக்கடி எழுந்தது.

இப்படி இருக்கையில்தான் சிசிர மயங்கி விழுந்துவிட்டதால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று அவன் வேலை செய்யும் கடையிலிருந்து அழைத்துச் சொல்லியிருந்தார்கள்.

பதறியடித்துக்கொண்டு ஓடிப்போனார். அவரின் பயத்துக்கு மாறான மகிழ்வோடு அவனுக்குப் பழைய நினைவுகள் திரும்பிவிட்டன என்றும் விபத்துக்குப் பிறகானவையும் நினைவுக்கு வந்துவிடும் என்றும் சொல்லியிருந்தார் வைத்தியர். அவரிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டாலும் உள்ளூரப் பெரும் பயம் ஒன்று பிடித்துக்கொண்டது.

என்ன சொல்வானோ, என்னோடு கோபிப்பானோ என்கிற கேள்விகள் எழுந்து வந்து மிரட்டிய. ஆனாலும் அமைதியான, பொறுப்பான மகன் தன்னை விளங்கிக்கொள்வான் என்கிற நம்பிக்கையும் இருந்தது. மனைவி, இரண்டு குழந்தைகள் என்றான பிறகு, படிக்கும் காலத்தில் நடந்தவைகளைத் தூக்கிப் பிடிக்கமாட்டான் என்றும் நினைத்தார்.

இப்போதும் அதே கலக்கமும் நம்பிக்கையும் கலந்த மனநிலையோடு தயாராகியவர் அவனைப் பார்க்கச் செல்வதற்கு ஜயருக்க்ஷியையும் தயாராகச் சொல்லிவிட்டு விறாந்தையில் அமர்ந்திருந்தார்.

அந்த நேரத்தில்தான் திடீரென்று அவர் முன்னால் வந்து நின்றான் சிசிர.

“மகன்?” என்றார் அவனை எதிர்பாராத் திகைப்புடன்.

“ஏன் இப்பிடிச் செய்தனீங்க?”

அவர் திகைப்புடன் பார்க்க, “சொல்லுங்க! ஏன் இப்பிடிச் செய்தனீங்க?” என்று குமுறினான். “ஏன் அவளை என்னட்ட இருந்து பிரிச்சனீங்க? சொல்லுங்க அப்பா! ஏன் என்னைக் கூட்டிக்கொண்டு போய் அவளுக்கு முன்னால நிப்பாட்டேல்ல? அப்பிடி நிப்பாட்டி இருக்க எப்பவோ நினைவு திரும்பி இருக்குமே! அவளைப் பாத்து ரெண்டு நாளில எனக்கு எல்லாம் நினைவு வந்திருக்கு எண்டா அவள் எந்தளவுக்கு எனக்குள்ள இருக்கிறாள் எண்டு தெரியேல்லையா உங்களுக்கு? அப்பிடியானவளுக்கு ஏன் துரோகம் செய்தனீங்க?” என்றதும் துடித்துப்போனார் மத்தும பண்டார. எல்லோருக்கும் நல்லது என்று எண்ணிச் செய்ததை மகன் துரோகம் என்கிறானே!

“உயிரா நேசிச்ச ரெண்டு மனங்களைக் கொண்டு(கொன்று) ஏனப்பா இந்தக் கலியாணத்தைச் செய்து வச்சனீங்க? ஏன் அப்பா இந்தப் பாவ வேல பாத்தனீங்க? உங்களுக்காக எண்டு அவள் செய்த காரியம் எவ்வளவு பெருசு எண்டு தெரியுமா உங்களுக்கு? இல்ல, உங்கட மகனுக்காக என்ன துன்பம் எல்லாம் அனுபவிச்சவள் எண்டுதான் தெரியுமா?”

கண்கள் கலங்கிச் சிவந்திருக்க, தன் கட்டுப்பாட்டை இழந்து கேள்விகளாகக் கேட்டவனைக் கண்டு பயந்து போனார் அவர். “மகன்…” திரும்பவும் அவனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று பதறியது அவருக்கு.

“என்னை அப்பிடிக் கூப்பிடாதீங்க!” என்றான் பட்டென்று.

அவர் விக்கித்துப் போனார். அவருக்கு அருமையான மகன் அவன். அவனிடமிருந்து இப்படி ஒரு கோபத்தை எதிர்பார்க்கவே இல்லை.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“அம்மாவை இன்னொருத்தனோட பாத்திருந்தா உங்களுக்கு எப்பிடி இருந்திருக்கும்?”

“மகன்!” தன்னை மீறிக் குரல் உயர்ந்துவிட, விருட்டென்று எழுந்தவர் நிற்க முடியாமல் தடுமாறி விழப்போனார். ஓடிவந்து அவரைப் பற்றி மீண்டும் அமர்த்திவிட்டு, “மனுசி பிள்ளையோட நிண்ட என்னைப் பாத்த நேரம் அவளுக்கும் அப்பிடித்தான் அப்பா இருந்திருக்கும்.” என்றான் கலங்கிவிட்ட விழிகளோடு. “தாங்கியே இருக்கமாட்டாள். மனதளவில செத்தே போயிருப்பாள்.” என்றதும் முற்றிலும் நொறுங்கிப் போனார் மத்தும பண்டார. அன்றைக்கு அவள் துடித்த துடிப்பை வேறு பார்த்தாரே! நெஞ்சை அடைத்தது அவருக்கு.

“அண்டைக்கு அவள் பாத்த பார்வைக்கு பொருள் எனக்கு விளங்கேல்ல. ஆனா இண்டைக்கு? அந்தப் பார்வையும் கண்ணீரும் என்னைக் கொல்லுது அப்பா. என்னை இன்னொருத்திட்டத் தூக்கிக் குடுக்கேக்க நான் நானா இல்ல நிரா எண்டு அவளிட்ட எப்பிடிச் சொல்லுவன்? இதுக்குப் பதிலா அந்த அக்சிடென்ட்ல அம்மாவோட சேர்ந்து நானும் செத்துப் போயிருக்கலாம். இல்லை, என்னை நீங்க அப்பிடியே சாக விட்டிருக்கலாம். வாழுற காலம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமாச் சாகடா எண்டு சொல்லி இந்தக் கலியாணத்தை எனக்குச் செய்து வச்சீங்களா?”

அதற்குமேல் அவரால் முடியவில்லை. “இப்பிடி எல்லாம் கதைக்காதீங்க மகன். எனக்குத் தாங்கேலாம இருக்கு.” என்றார் கலங்கிவிட்ட விழிகளோடு.

“அண்டைக்கு என்னை இன்னொருத்தியோட பாத்த பிறகும் ஒரு கேள்வி கேக்கேல்ல அவள். என்னை எங்கயோ பாத்த மாதிரி இருக்காம் எண்டு சொன்னவள். உயிராப் பழகின ஒருத்தனைப் பாத்து அப்பிடிச் சொல்லேக்க என்ன பாடு பட்டிருப்பாள் எண்டு யோசிச்சுப் பாருங்க. துடிச்சுப் போயிருப்பாள். அவள் என்ர உயிரப்பா. அவளைப் போய்க் காலம் முழுக்க அழு எண்டு விட்டுட்டீங்களே! இதுக்கு என்னைத் தனியாவே விட்டிருக்கலாமே! நான் சுயத்திலேயே இல்லாத நேரம் என்ர வாழ்க்கைல இப்பிடி ஒரு முடிவை எடுக்கிற உரிமையை உங்களுக்கு ஆர் தந்தது? சொல்லுங்க! நீங்க பெத்த மகன் எண்டாப்போல என்னவும் செய்வீங்களா? ஆசை, பாசம் எல்லாம் எனக்குத் தனியா இருக்கப்பா. நான் ஒரு தனி மனுசன். என்ர உயிர் அவள். எனக்கு நீங்க செய்திருக்கிறது பச்சைத் துரோகம்!” என்றவனுக்குத் தன்னையே அழிக்கும் அளவுக்கு ஆத்திரம் பொங்கிற்று. “கடவுளே!” என்று தலையைப் பிடித்தான். அந்தத் தலையைக் கொண்டுபோய் அப்படியே சுவரில் மோத வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

“எங்களைப் பிரிச்சிடுவினமோ எண்டு பயமா இருக்கு சிசிர, என்னை விட்டுட்டுப் போகாத எண்டு அழுதவள். நான்தான் கேக்கேல்லை. நான்தான் கேக்கேல்லை. ஐயோ!” என்று அங்கிருந்த பூச்சாடியைத் தூக்கி ஓங்கி அடித்தான்.

“மகன்!” பதறி எழும்ப முயன்ற மத்துமவால் முடியவில்லை. நெஞ்செல்லாம் நடுங்கிற்று. உடல் ஒத்துழைக்க மறுத்தது. “கொஞ்சம் நிதானமா இருங்க மகன். எனக்குப் பயமா இருக்கு.” என்றார் நடுங்கும் குரலில்.

அப்போதுதான் குளித்துவிட்டு வந்த ஜயருக்க்ஷி திகைத்துப்போய் ஓடி வந்தாள். காதில் விழுந்தவற்றை அவளால் நம்பவே முடியவில்லை. அதிர்வுடன் அவனையே நோக்கினாள்.

அவளைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான் சிசிர. அவனின் அத்தனை ஆர்ப்பாட்டங்களும் அடங்கிப் போயின. அவனால் அசையக்கூட முடியவில்லை. ஜயருக்க்ஷியாலும் அவனிடமிருந்து விழிகளை அகற்ற முடியவில்லை. அந்தளவுக்கு அதிர்ந்துபோயிருந்தாள்.

அவளின் சிசிரவா இது? அல்லது இன்னொருத்தியின் சிசிர அவளுக்குக் கணவனாகியிருக்கிறானா? அப்படித்தான் என்றது அறிவு! மளுக்கென்று அவள் விழிகள் நிரம்பிப் போயின. அதைப் பார்த்தவனின் விழிகளும் கலங்கிப் போயின. வேகமாகத் தன் பார்வையை அகற்றிக்கொண்டான்.

அதற்கே நொறுங்கிப்போனாள் ருக்க்ஷி. அதுவரை விழிகளுக்குள் தளும்பி நின்ற கண்ணீர் மளுக்கென்று கன்னத்தில் வழிந்திருந்தது.

அவன் சொன்னதெல்லாம் அவளுக்குத் தெரியவே தெரியாது. அப்பா வீட்டு உறவுகளும் இல்லாமல் அம்மா வீட்டு உறவுகளும் இல்லாமல் ஒற்றை மகளாய் வளர்ந்தவள். மாமா குடும்பம் என்று அவர்கள் வந்தபோது அவ்வளவு சந்தோசம். சிங்கித்தியோடு சேர்த்து சுயமிழந்து, தன்னையே மறந்து நின்றவனின் மீது இயல்பாய்ப் பற்றிக்கொண்ட பாசத்தோடு அவனைப் பார்த்து பார்த்துக் கவனித்துக்கொண்டாள். அவன் தோற்றம், எதையும் நிதானமாய் அணுகும் பாங்கு, மிக மென்மையான குணம் எல்லாம் அவளைக் கவராமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

மத்தும திருமணத்திற்குக் கேட்டபோது சந்தோசமாகவே தலையாட்டியிருந்தாள். ஆரம்பத்தில் அவளோடு ஒன்ற முடியாமல் தவித்துத் தடுமாறினான்தான். நடந்த விபத்தினாலும், தன்னை மறந்த நிலையினாலும்தான் அப்படி இருக்கிறான் என்று விளங்கி, பொறுத்திருக்க அவளால் முடிந்தது. அதற்குப் பலன் போன்று நாளடைவில் ஒருவர் மீது மற்றவருக்கு இயல்பாய்ப் பற்றிக்கொண்ட பாசமும் நேசமும் அவர்கள் வாழ்க்கையை மிக அழகாய் மாற்றியும் இருந்தன.

அதன் பிறகு அவனோடு அவள் வாழ்ந்தது எல்லாம் நிறைவான, நிம்மதியான இல்லற வாழ்வு. அதன் பலனாய் இரண்டு முத்துகள் வேறு!

ஆனால் இன்று அவன் சொல்கிறவை எல்லாம் அவள் தலையில் இடியையே இறக்கின. அவளின் வாழ்வின் அடித்தளமே ஆட்டம் கண்டது போல் உள்ளம் பதறிற்று. அவன் வாழ்வில் அவளுக்கு முதல் ஒரு பெண் இருந்திருக்கிறாள். சாதாரணமாய் இல்லை. அவளிடமிருந்து என்னைப் பிரித்ததற்குப் பதிலாய்க் கொன்றிருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு. அப்படியானால் அவள்? அவன் வாழ்க்கையில் அவளுக்கான இடம் என்ன?

சுவாசிக்கக் கூட மறந்தவளாய்க் கன்னங்களில் கண்ணீர் இறங்க, அவனையே பார்த்தபடி நின்றாள். அவளின் அந்தத் தோற்றம் அவனை என்ன செய்ததோ, அப்படியே மடிந்து தரையில் அமர்ந்தான். அதன் பிறகு நிமிராவே இல்லை.

சில நொடிகளுக்கு இமைக்கவும் மறந்து கணவனையே வெறித்தாள் ருக்க்ஷி. அவன் நிமிரவில்லை. அவளிடம் விளக்கம் போன்று எதையும் சொல்லவும் இல்லை. அதன் பிறகு அவள் தாமதிக்கவில்லை. வேகமாக அறைக்குள் புகுந்து, விறுவிறு என்று தனக்கும் மகளுக்கும் அவசியம் தேவை என்று தோன்றியவற்றை எல்லாம் எடுத்து ஒரு பையினுள் அடைக்க ஆரம்பித்தாள்.

விரிந்து கிடந்த கதவின் வழியே நடப்பதைப் பார்த்த மத்தும பண்டார பதறிப்போனார். பக்கத்து நாற்காலியில் சரித்து வைத்திருந்த தன் ஊன்றுகோலை எட்டி எடுத்துக்கொண்டு அவளிடம் ஓடினார்.

“மகள், எங்கம்மா வெளிக்கிடுறீங்க?”

அவருக்குப் பதில் சொல்லாது, நல்ல உறக்கத்தில் இருந்த மகளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, அந்த பேக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

வேகமாக வந்து அவளை மறித்து நின்றார் மத்தும. “அவசரப்படாதீங்கோ மகள். என்ன எண்டாலும் கதைக்கலாம். கொஞ்சம் பொறுமையா இருங்கோ. இத்தனைக்கும் காரணம் நான்தான். நான் எல்லாத்தையும் விளக்கமாச் சொல்லுறன். மாமா சொல்லுறதைக் கேளுங்க ருக்க்ஷி.” என்றதும் நெஞ்சு துடிக்க அவரை நிமிர்ந்து நோக்கினாள் ஜயருக்க்ஷி.

“நீங்க சொன்னனீங்க எண்டுதான் அவரைக் கட்டினனான் மாமா. இப்ப எங்க வந்து நிக்கிறன் எண்டு விளங்குதா உங்களுக்கு? திரும்பவும் நீங்க சொல்லுறதைக் கேக்கச் சொல்லுறீங்க?” என்றதும் பதிலற்று அப்படியே நின்றுவிட்டார் மத்தும பண்டார.

வேகமாக வந்து கணவனின் முன்னே நின்றாள். போக முடிவெடுத்துவிட்டபோதும் அவனைத் தாண்டிப் போக முடியவில்லை. உயிராய் வாழ்ந்துவிட்ட நேசம் இழுத்துப் பிடித்தது. ‘என்னை மறித்துவிடு, போக விடாதே!’ என்று அவள் உள்ளம் கதறிற்று. கண்ணீர் வழியும் விழிகளினூடு கணவனை நோக்கினாள். அவன் அசையவும் இல்லை, அவள் நிற்பது அறிந்து நிமிரவும் இல்லை.

மகனின் அந்தச் செயலை மத்தும பண்டாரவினாலேயே பொறுக்க முடியவில்லை. “மகன், உங்களுக்கு அப்பாவோடதானே கோபம்? அதைப் பிறகு கதைப்பம். இப்ப ருக்க்ஷியப் போக வேண்டாம் எண்டு சொல்லுங்கோ!” என்றார் தவிப்பும் இறைஞ்சலுமாய்.

“அவள் போகட்டும், விடுங்க.” தலையை நிமிராமலேயே சொன்னான் அவன்.

முற்றிலுமாய் அடிபட்டுப் போனாள் ருக்க்ஷி. சொன்னது அவன்தானா என்று நம்ப முடியாமல் அவனையே வெறித்தாள். அவனை நம்பி வயிற்றில் ஒன்று கையில் ஒன்று என்று சுமப்பதற்கு அவன் தந்திருக்கும் பரிசு இதுதான் போலும். நெஞ்சைப் பிளந்துகொண்டு வந்த துக்கத்தை அப்படியே விழுங்கியவள் அதற்குமேல் தாமதிக்கவில்லை. அந்த வீட்டின் வாசற்படியைத் தாண்டி நடக்க ஆரம்பித்தாள்.

எல்லோருக்கும் நல்லது என்று எண்ணிச் செய்த ஒன்று, இன்று அத்தனை பேரையும் இப்படித் திசைக்கு ஒன்றாய்த் தூக்கி எறியும் என்று எண்ணியே பாராத மத்தும மொத்தமாய் உடைந்து போனார்.

“நான் செய்தது பிழை எண்டதுக்காக நீங்க இப்ப செய்றது சரி இல்ல மகன்.” என்றவர் தானும் மருமகளின் பின்னால் ஓடினார்.




தொடரும்...

கருத்திடும் அனைவருக்கும் நன்றி. கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் இந்த அத்தியாயம் எழுதினான். உங்களை அழ வைக்க இல்லையே?
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 34


கண் முன்னால் கண்ணீர் உகுத்தபடி அமர்ந்திருக்கும் மகளைக் கண்டு உறைந்துபோய் அமர்ந்திருந்தார் காமினி பண்டார. இன்னும் மூன்று மாதங்களில் அடுத்த பிள்ளையும் பிறந்துவிடும், என் மகளின் குடும்பமும் பெருகுகிறது என்று அவர் சந்தோசத்தில் இருக்க என்ன சொல்கிறாள் அவள்?

அவருக்கு உடல், மனம், மூளை அத்தனையும் செயல் இழந்துவிட்டது போன்றதொரு நிலை. அவரின் மருமகன் கொஞ்சம் அப்படி இப்படி, சரியில்லை, பரவாயில்லை என்கிற வரையறைக்குள் கூட வராதவன். இது நாள் வரையில் அவன் தங்கம். உண்மையில் தங்கம்தான். என் மகளுக்குச் சொந்தத்தில் நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்று நிம்மதி கொண்டிருந்தார். இனி அது இல்லையோ!

அவர் வாழ்வில் காதலும் கணவனும் கசந்ததே இல்லை. எல்லா வீட்டிலும் போன்று சண்டை சச்சரவுகள் வந்து போனாலும் தவறான முடிவு எடுத்துவிட்டேனோ என்று என்றுமே யோசித்ததில்லை. அப்படியான ஒரு வாழ்வு கிட்டியுமே என் உறவுகளை விட்டுத் தனித்து நிற்கிறேனே என்கிற எண்ணம் அவருக்குள் என்றும் இருந்திருக்கிறது.

அப்படி இருக்கையில்தான் ஒரு இக்கட்டான நிலையில் தமையன் அவரைத் தேடி வந்தார். பெரும் சந்தோசத்தோடு ஏற்றுக்கொண்டார். கொஞ்சக் காலம் அவர் உழைப்பில்தான் மொத்தக் குடும்பமும் பிழைத்தது. அதைக் குறித்தெல்லாம் அவர் கவலை கொண்டதே கிடையாது. என் அண்ணா என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதிலேயே நிறைவுகொண்டிருந்தார். அதன் அடுத்த கட்டமாக என் மகனுக்கு உன் மகளைத் தருகிறாயா என்று கேட்டபோது அவர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. அவனைப் போன்ற கண் நிறைந்த ஒருவனுக்கு மகளை மறுப்பாரா என்ன?

சந்தோசமாகவே கட்டிக்கொடுத்தார். அவர் கண் நிறையப் பார்த்து மகிழும் அளவில்தான் அவர்கள் வாழ்க்கையும் இருந்தது.

அப்படி இருக்க இது என்ன புதுக் குண்டு? இல்லை, இது புதுக் குண்டு இல்லை. அவரின் உடன் பிறந்தவர் மறைத்து வைத்த பழைய குண்டு. இன்று வெளியே வந்ததும் இல்லாமல் அவர் மகளின் தலையில் விழுந்திருக்கிறது. நிறைமாத வயிற்றோடு அவள் விடும் கண்ணீரை அவரால் பார்க்க முடியவில்லை.

இதில், பரிதவிப்புடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் தமையன், அவருக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த சினத்துக்கும் சீற்றத்துக்கும் எண்ணெய் வார்த்தார்.

செய்வதை எல்லாம் செய்துவிட்டு எதற்கு முகம் பார்க்கிறாராம்? மனம் கொதிக்க ஆரம்பிக்க, “சொல்லுங்க அண்ணா, நீங்க செய்த காரியத்துக்கு என்ன விளக்கம் சொல்லப் போறீங்க?” என்றார் நேராகவே.

“தங்கச்சி…” தங்கையின் கோபத்தின் முன்னே சட்டென்று பேசிவிட முடியாமல் திணறினார். என்ன விளக்கம் சொன்னாலும் அது நியாயமானதாய் இராது என்கிற எண்ணம் வேறு அவரைத் தைரியமாகப் பேசவிடாமல் செய்தது.

ஆனால் அவர் சொல்கிறவற்றைப் பொறுமையாய் அமர்ந்திருந்து கேட்கும் நிலையில் காமினி பண்டார இல்லை.

“ஆசைப்பட்டவரைக் கட்டினதுக்கு அப்பாவும் அம்மாவும் காலத்துக்கும் ஒதுக்கி வச்சு எனக்குப் பெரிய தண்டனை தந்தவே. கடைசி வரைக்கும் சேர்க்கவே இல்ல. என்னதான் வைராக்கியத்தோட தனியாவே இருந்தாலும் மனுசனும் இல்லாம, என்ர மகளை எப்பிடிக் கரையேத்தப் போறனோ எண்டுற பயம் நிறைய இருந்தது. அப்பதான் நீங்க உங்கட மகனுக்குக் கேட்டனீங்க. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்தது தெரியுமா? நான் பயப்பிடவே தேவை இல்ல, சொந்த அண்ணா, அவர் என்ர மருமகன், என்ர மகள் காலத்துக்கும் நல்லா இருப்பா எண்டு நினைச்சன். அப்பிடி நம்பின என்னை நீங்க நம்ப வச்சுக் கழுத்தறுத்திருக்கிறீங்க. உங்கட மகனைக் காப்பாத்துறதுக்காக என்ர பிள்ளையின்ர வாழ்க்கையை நாசமாக்கினீங்களா?” என்றதும் துடித்துப்போனார் மத்தும.

“இல்ல தங்கச்சி. சத்தியமா அப்பிடி ஒரு எண்ணம் எனக்கு இல்லவே இல்ல. ருக்க்ஷியும் சந்தோசமா இருப்பா எண்டுதான் கட்டி வச்சனான்.” என்றவரின் பேச்சைக் கேட்கும் நிலையில் காமினி இல்லை.

“பிறத்தி வீடா இருந்திருந்தா, பெடியன் எப்பிடி எண்டு என்ர சக்திக்கு உட்பட்டாவது விசாரிச்சு இருப்பன். என்ர அண்ணான்ர மகன் எண்டதாலதானே கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல. அப்பிடி உங்களை நம்பினதுக்கு எவ்வளவு பெரிய தண்டனையைத் தந்து இருக்கிறீங்க? இனி என்ன செய்வன் நான்? என்ர பிள்ளையின்ர வாழ்க்கையை நேராக்கித் தாறதுக்கு எனக்கு எண்டு ஆர் இருக்கினம்?” கோபமும் குமுறலும் கண்ணீருமாய் அவர் கேட்டபோது மத்தும பண்டாரவுக்குக் கண்ணீரே வந்துவிட்டிருந்தது.

“இப்பிடி எல்லாம் கதைக்காதீங்கம்மா. அப்பிடி ஒண்டும் நடக்காது. என்ர மகனைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? அவர் அப்பிடி ருக்க்ஷிய விடமாட்டார். ” என்றார் தழுதழுத்த குரலில்.

“அதுதான் விட்டுட்டாரே!” பட்டென்று சொன்னார் காமினி பண்டார. “வயித்தில பிள்ளையோட நிண்டவளப் போ எண்டு விட்டுட்டாரே. இன்னும் என்ன விடோணும் உங்களுக்கு? முதல் உங்கட மகன் இன்னொருத்தியை விரும்பி இருக்கிறார் எண்டு தெரிஞ்சும் என்ன தைரியத்தில என்ர மகளின்ர வாழ்க்கையோட விளையாடினனீங்க? ஏன் அதைப் பற்றி எங்களிட்ட ஒரு வார்த்த சொல்ல இல்ல? என்னத்துக்கு மறைச்சனீங்க? நாளைக்கு அவர் அவள்தான் வேணுமெண்டு போனா நான் என்ன செய்ய? உங்கட மகனை நம்பி ரெண்டு பிள்ளைகளோடு நிக்கிற என்ர மகளுக்கு என்ன பதில்? சொல்லுங்க!” என்று கேட்டதும் மத்துமவை விடவும் அதிர்ந்துபோனது ருக்க்ஷிதான்.

இல்லை, என் கணவன் அப்படிச் செய்ய மாட்டான் என்று மனம் அடித்துச் சொன்னாலும் இன்னொரு பக்கம் பயத்தில் நெஞ்சு அடித்துக்கொண்டது. அவன் அந்தப் பெண்ணுக்காய்த் துடித்த துடிப்பைத்தான் கண்ணாலேயே பார்த்தாளே! கண்ணீர் அரும்ப பரிதவிப்புடன் மத்துமவைப் பார்த்தாள்.

அவரும் தவித்துப் போனார். மருமகளாய் இருந்தாலும் மகளுக்கு ஒப்பானவளாயிற்றே! “இல்ல மகள். நீங்க அப்பிடியெல்லாம் யோசிச்சுப் பயப்பிடாதீங்க. கடைசி வந்தாலும் என்ர மகன் அப்பிடி நடக்கமாட்டார். எனக்குத் தெரியும்.” என்று ருக்க்ஷியிடம் அடித்துச் சொன்னார்.

“அவர் இப்ப மனம் குழம்பி நிக்கிறார். ஒரு கொஞ்ச நாள் அமைதியா இருங்கோ. அவர் நிதானமாகி வரட்டும். அவருக்குப் பழையது மட்டுமில்ல உங்களோட வாழ்ந்த சந்தோசமான வாழ்க்கைல இருந்து, ரெண்டு பிள்ளை எண்டுறது வரைக்கும் எல்லாமே நினைவு இருக்கு. பிறகு எப்பிடி விடுவார்? கட்டாயம் வருவாரம்மா. இந்த மாமாக்காக, உங்கட பிள்ளைகளுக்காக, ஏன் உங்கட மனுசனுக்காகவும் கொஞ்சம் பொறுமையா இருங்க மகள்.” என்று கெஞ்சினார்.

அவளும் வேறு என்னதான் செய்ய இருக்கிறது? ஒன்றும் சொல்லாமல் கண்ணீருடன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

கணவனுக்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்திருக்கிறது என்று கேள்விப்படுவதே கொடுமையானது. இதில் அந்தப் பெண்ணுக்காக அவளின் கண் முன்னாலேயே துடிக்கிறான் அவன். இவள் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு வந்திருக்கிறாள். ‘இதுக்கு நீங்க என்னைக் கொன்று இருக்கலாமே’ என்று கேட்டானே! மேலே நினைக்க முடியாமல் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள். அந்தக் கண்களுக்குள்ளும் அவன்தான் வந்து நின்று இன்னொருத்திக்காயத் துடித்தான்.

திருமணம் வரைக்கும் அவள் அறிந்ததெல்லாம் மிகுந்த ஏழ்மை வாழ்க்கைதான். அவனை மணந்த பிறகும் அவர்கள் ஒன்றும் பெரிய வசதியில் திளைக்கவில்லைதான். அதற்கென்று வறுமையில் வாடவும் இல்லை. நிறைவான, நிம்மதியான, பாதுகாப்பான, சந்தோசமான ஒரு வாழ்க்கையைத்தான் சிசிர அவளுக்குத் தந்திருக்கிறான். இனி? நினைக்கவே பயந்தாள்.

நெஞ்சுக்குழிக்குள் என்னவோ வந்து அடைத்தது.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அன்று அனந்தன் திருமணம் பற்றிப் பேசியதிலிருந்து நிலையிழந்து தவித்துக்கொண்டிருந்தாள் நிரல்யா. அவனிடம் மறுக்கும் தைரியம் இல்லாமல் வந்துவிட்டாலும் சிசிரவை மறந்து என்னால் எப்படி இன்னொருவரோடு வாழ முடியும் என்கிற கேள்வி அவளை அரித்துக்கொண்டிருந்தது.

அவனுக்கு அவள்தான் அவளுக்கு அவன்தான் என்று சொல்ல ஊருக்கும் உலகுக்கும் வேண்டுமானால் ஒரு திருமணம் வேண்டுமாய் இருக்கலாம். அவளின் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் அது தேவையா என்ன?

அந்தக் கனவுகளிலும் கற்பனைகளிலும் அவள் சிசிரவோடு வாழாத வாழ்க்கையும் இல்லை, காணாத கனவுகளும் இல்லை. அப்படி உள்ளத்தாலும் உணர்வுகளாலும் ஒருவனோடு வாழ்ந்துவிட்டு எப்படி இன்னொருவனோடு திருமண பந்தத்தில் இணைவது?

முதன் முதலாய் அவள் உள்ளத்தைச் சலனப்படுத்திய ஆண் அவன்! அவன் பார்த்த பார்வைகள், அவை உணர்த்திய பிரத்தியேக உணர்வுகள், அவன் நெருக்கங்கள், அவை தந்த கதகப்புகள், அவன் விரல்கள், அவை அவளுடைய விரல்களோடு கோர்த்துக்கொண்ட பொழுதுகள், ஒற்றைக் கையால் மட்டும் அவளின் தோளணைத்த நிமிடங்கள், தந்த முத்தங்கள், அதில் மயங்கிய நிமிடங்கள் என்று எதை மறக்க? இன்னுமே அவன் அனுப்பிய குறுந்தகவல்களை எல்லாம் திரும்ப திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கிறாள். பிறகும் எப்படி இன்னொருவனோடு இணைவது?

முடியாது! என்னால் முடியவே முடியாது! இதற்கு என்னைக் கொன்றுவிடுங்கள் என்று அவள் உள்ளம் கதறி கண்ணீர் வடிக்கிறது. உள்ளத்தின் கதறல் வெளியே கேட்காது என்பதால் அது யாருக்கும் தெரியவில்லை.

அப்போது, அவள் சிந்தனைகளுக்குள் இடையிட்டபடி அறை வாசலில் வந்து நின்றார் சுந்தரலிங்கம்.

இப்படி ஒரு நாளும் தேடி வந்தது இல்லை. அதுவே என்ன பேசப்போகிறார் என்று சொல்லிவிட, தனக்குள் துடியாய்த் துடித்தாள். ஆனாலும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.

அவரும் அங்கிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்துகொண்டு அவள் முகத்தை ஆராய்ந்தார். விழிகளில் உயிர்ப்பில்லாமல், வாழ்வின் மீது பிடித்தமில்லாமல், தன் தேகத்தைச் சுமப்பதே பாரம் என்பது போன்று நின்றிருந்தவளின் தோற்றம் அந்தத் தகப்பனின் நெஞ்சைப் பெரிதாய்த் தாக்கிற்று!

அவரின் ஒரேயொரு பெண். சொத்து, சுகம், அழகு, ஆரோக்கியம், படிப்பு என்று எதற்கும் குறைவில்லை. வளமான வாழ்க்கை ஒன்றை மிக அழகாய் வாழ்ந்திருக்க வேண்டியவள். அவர் ஆசைப்பட்டது போன்று திருமணம் நடந்திருக்க இன்று அவளுக்கு ஒரு குழந்தை கூட இருந்திருக்கலாம். பொருந்தாத இடத்தில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டு மீளமுடியாமல் தவிக்கிறாள்.

அவளின் செய்கைகளால் மனம் விட்டுப் போயிருந்தாலும், அவள் மீது பெரும் கசப்பே உண்டாகியிருந்தாலும் அப்படியே விடமுடியவில்லை. பெற்ற பாசம் எப்படியாவது அவள் வாழ்க்கையை நேராக்கிவிடத் துடித்தது.

“நந்தன் உன்னோட கலியாணத்தைப் பற்றிக் கதைச்சவனாம்.” மெல்லத் தன் பேச்சை ஆரம்பித்தார்.

தொண்டைக்குழி அடைக்க ஆம் என்பதுபோல் தலையை அசைத்தாள் நிரல்யா.

“கலியாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னவன்.” என்றதும் விழிகள் நிறைந்து போயின. அழுகையில் உதடுகள் துடிக்க முகத்தைத் திருப்பித் தன் கண்ணீரை அவர் பார்வையிலிருந்து மறைத்தாள்.

“நான் என்ன செய்ய? நான் ஒரு ஏற்பாட்டைச் செய்ய, அதுக்கு மாறா நீ என்ன செய்வியோ எண்டு எனக்குப் பயமா இருக்கு. அதால நீயே சொல்லு, கலியாணத்துக்கு ஏற்பாடு செய்யவா, வேண்டாமா?” என்றதும் அதற்குமேல் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு விம்மி இருந்தாள் நிரல்யா.

எந்தளவில் அவளால் உடைந்துபோயிருந்தால் அவளிடமே வந்து இப்படிக்கு கேட்பார்? இதுதான் என் முடிவு, நான் சொன்னதுதான் நடக்கும் என்று இறுமாப்புடன் இருந்த மனிதரைப் பயமா இருக்கு என்று சொல்லும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டாளே!

அவருக்கு மகளாக அவள் கொடுத்தது எல்லாம் அழியாத காயங்களை மட்டுமே! பெயர் சொல்லும் விதமாகவோ, பெருமைப் படும் விதமாகவோ நடந்ததே இல்லை. ஏன், குறைந்த பட்சமாக மன நிம்மதியைக் கூடக் கொடுத்ததில்லை. நிச்சயமாக மனத்தளவில் அவளை வெறுத்திருப்பார். சீ என்று போயிருக்கும். ஆனாலும் வெறுத்து ஒதுக்காமல் இன்னுமே அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுத்துவிட மாட்டோமா என்று துடிக்கும் மனிதரை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அவளால்.

அவராலும் பெண்ணின் கண்ணீரைப் பார்க்க முடியவில்லை. ஆயிரம்தான் அவள் மீது குறைகள் இருந்தாலும் பெட்ரா நெஞ்சு துடித்தது. அதில், “எனக்குப் பதில் வேணும்!” என்றார் அவளைப் பாராது.

“நான் உங்களுக்குச் செய்தது எல்லாம் பெரும் பிழைகள் எண்டு எனக்குத் தெரியும் அப்பா. ஆனா, உங்களையும் அம்மாவையும் நோகடிக்கோணும் எண்டு நினைச்சோ, இப்பிடியெல்லாம் நடக்கோணும் எண்டு நினைச்சோ எதையும் செய்யேல்ல. எனக்கு எதிர்காலத்தில துணையா வரப்போற ஒருத்தர் எப்பிடி இருக்கோணும் எண்டு ஆசைப்பட்டேனோ அப்பிடி இருந்தார் அவர். அப்பிடியானவர என்ன காரணத்துக்காகவும் மிஸ் பண்ணிடக் கூடாது எண்டு நினைச்சன். ஆரம்பம் கோபப்பட்டாலும் பிறகு நீங்களும் அம்மாவும் விளங்கிக்கொள்ளுவீங்க எண்டு ஒரு குருட்டு நம்பிக்கை. ஆனா உங்க ரெண்டு பேரையும் நோகடிச்ச பாவத்துக்காக்கும் கடவுளே எனக்குப் பெரிய தண்டனையா தந்திட்டார்.” என்றபோது அவள் இதழ்கள் அழுகையில் நடுங்கின.

சுந்தரலிங்கத்தாலும் மகளை அப்படிப் பார்க்க முடியவில்லை. ஆனால், நெருங்கிச் சென்று அணைத்து ஆறுதல் படுத்த முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. உள்ளே உள்ளம் அவளுக்காய்த் துடித்தாலும் வெளியே அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

பார்வையை மறைத்த கண்ணீரைத் தன் இரு கரங்களாலும் துடைத்துக்கொண்டு, “அதால இனிப் பிழையா எதுவும் செய்யமாட்டன் அப்பா. ஆனா கொஞ்சம் டைம் தாங்க. எனக்கு இதில இருந்து வெளில வரோணும். உடனேயே எண்டா ஏலாம இருக்கு அப்பா.” என்று கண்ணீர் கன்னத்தில் உருளக் கெட்டவளிடம் சரி என்பதுபோல் தலையைச் சிறிதாக அசைத்துவிட்டு எழுந்துகொண்டார்.

இரண்டடி எடுத்து வைத்தவர் மீண்டும் நின்று திரும்பி, “உன்ன நம்பி இன்னும் கொஞ்ச நாள் கழிச்சே இந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்றன். தயவு செய்து இந்த முறையாவது எங்களை ஏமாத்திப் போடாத. நீ என்னதான் சொன்னாலும் என்னால முழு மனதா நம்பேலாம இருக்கு. அதாலதான் திரும்பவும் சொல்லுறன். நாங்களாவது உன்னைப் பெத்த பாவத்துக்கு அனுபவிக்கிறோம் எண்டு சொல்லலாம். ஆனா அவன் பாவம். ஏற்கனவே ஒருமுறை நம்பி ஏமாந்து நிக்கிறான். திரும்பவும் ஏமாத்திப் போடாத. வெளிலதான் முரடன். உள்ளுக்குப் பாசத்துக்கு ஏங்குற பச்சைக் குழந்தை அவன். இண்டைக்கு உன்ர அம்மாவும் அப்பாவும் உயிரோட இருக்கக் காரணம் அவன் மட்டும்தான். இனியாவது ஏதாவது எங்களுக்கு நல்லது செய்ய நினைச்சா அவனை ஏமாத்தாமக் கட்டு. இதைக்கூட அவனுக்காகச் சொல்லேல்ல. கட்டாயம் நீ சந்தோசமா இருப்பாய் எண்டுற சுயநலத்தோடதான் சொல்லுறன்!” என்றுவிட்டுப் போனார் அவர்.

அப்படியே கட்டிலில் சுருண்டு விழுந்து கண்ணீர் உகுத்தாள் நிரல்யா. சேரவே முடியாது என்று தெரிந்த இருவரை அந்தக் கடவுள் ஏன் சந்திக்க வைக்க வேண்டும்? ஏன் உயிராய்ப் பழக வைக்க வேண்டும்? பின் ஏன் இத்தனை கொடூரமாய்ப் பிரித்து எறிய வேண்டும்?

ஐந்து வருடங்களாய் அவனைச் சேர நெஞ்சில் அவள் வளர்த்த யாகம் இன்று அணைந்தே போயிற்று!
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 35


அழுதழுது ஓய்ந்திருந்தாள் நிரல்யா. இதற்குமேல் என்னால் முடியாது எனுமளவுக்கு மனமும் உடலும் தம் சக்தியை மொத்தமாய் இழந்திருந்தன. அறையே மூச்சு முட்டுவது போலிருக்க, எழுந்து முகத்தைத் துடைத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

அமிர்தவல்லிக்கு உடல் நிலை முடியால் போனதிலிருந்தே கீழே விருந்தினர்களுக்கென்று ஒதுக்கியிருந்த அறையைத் தமக்கென்று எடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரலிங்கம். அங்கே மெல்லிய குரலில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

நிச்சயம் தனக்கும் அனந்தனுக்குமான திருமணம் பற்றியதாய்த்தான் இருக்கும் என்று தெரிந்ததில் நெஞ்சில் சுருக்கென்று வலித்தாலும் பேசாமல் தோட்டப் பக்கம் நகர்ந்தாள்.

அங்கே, அவளோடு சேர்ந்து வளர்ந்த, அவளுக்கு மிக மிகப் பிடித்த கறுத்தக் கொழும்பான் மாம்பழ மரத்தடிக்குச் சென்றாள். யாழ்ப்பாணத்தில் மட்டுமே விளையுமாம், வேறிடங்களில் இலகுவில் வராதாம் என்று சொல்லி ஒரு காலத்தில் அப்பா வாங்கி வந்து கொடுத்த கன்றை அம்மா பொத்தி பொத்தி வளர்த்ததாக எப்போதோ அவளிடமும் பகிர்ந்திருந்தார். அவருக்கு அவளும் அந்த மரமும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பார். அத்தனை கவனமாய் வளர்த்தாராம். அதனாலேயே அவளுக்கும் அதற்குமிடையில் பிரத்தியேகமான சொந்தம் ஒன்று உண்டு. இன்றும் அதனருகில் சென்று, அதன் கீழே மண்ணில் அமர்ந்துகொண்டாள்.

மனம் தாய் மடியைத் தேடிற்று. முன்னர் போன்று அன்னையிடம் சென்று உரிமையாய்ப் படுத்துக்கொள்ளவோ, செல்லம் கொஞ்சவோ முடிவதில்லை. அவள் போனால் அவர் மறுக்கப் போவதில்லை. போக அவளால் முடிவதில்லை. இன்று அந்த மரத்தைக் கட்டிக்கொண்டு அதன் மீதே தலையைச் சாய்த்து அமர்ந்துகொண்டாள்.

சிந்தையில் எதுவுமில்லை. சிந்திக்கும் திறனே அவளிடமிருந்து அகன்றுவிட்டது போலொரு மரத்த நிலை. பார்வை எங்கோ வெறித்திருந்தது. எவ்வளவு நேரம் கடந்ததோ, முதுகு இலேசாய் வலிக்க ஆரம்பிக்கவும் ஒரு நெடிய மூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தாள். அப்படியேவும் கொஞ்ச நேரம் கழிய, கால்கள் இரண்டும் மரத்துக்கொண்டு வந்தன. இதற்குமேல் முடியாது என்று தெரிந்து, எழுந்து திரும்பவும் வீட்டுக்குள் நடந்தாள்.

இப்போது அமிர்தவல்லி குசினிக்குள் நிற்பது தெரிந்தது. முன்னர் போன்று தனியொருத்தியாய் அவரால் எதையும் செய்ய முடிவதில்லை. துணைக்கு ஒரு அம்மாவை வைத்திருந்தார். அவர்களைக் கடந்து தன் அறைக்குச் செல்ல மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தாள். இரண்டு படிகள்தான் ஏறி இருப்பாள். “நிரா!” என்றது உடைந்து கரகரத்த குரல் ஒன்று!

அவள் உயிர் துடித்துப் போயிற்று. விழுக்கென்று திரும்பிப் பார்த்தாள். கசங்கிய சட்டை, கலைந்த தலை, கசங்கிப்போன முகம், சொல்லொணாத் துயரைச் சுமந்து நின்ற விழிகள் என்று நின்றிருந்தவன் சிசிரவேதான். நம்ப முடியா அதிர்வில் சிலையாகி நின்றவளின் விழிகள் மளுக்கென்று நிறைந்துபோயின. தேகத்தில் மெல்லிய நடுக்கம் பிடித்துக்கொண்டது. அவள் உள்ளத்தில் பெரும் பிரளயம் ஒன்று நடக்க ஆரம்பித்தது.

அவனும் சில கணங்களுக்கு இமைக்காது அவளையே பார்த்தான். அடுத்த கணமே, “நிரா!” என்று ஓடி வந்து அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். அவள் தேகம் ஒருமுறை தூக்கிப் போட்டது. கழுத்து வளைவில் அவன் முகம் புதைத்த நொடி, படியின் கைப்பிடியை இறுக்கிப் பற்றிக்கொண்டு விழிகளையும் இறுக்கி மூடிக்கொண்டாள்.

நெஞ்சு வெடிக்கும் போலாயிற்று. அப்படி ஒரு வலி! இந்த ஒற்றை அணைப்புக்காய் அவள் காத்திருந்த காத்திருப்பு பெரும் காத்திருப்பு. அதெல்லாம் இனி வீண் என்றான பிறகு வந்து அணைக்கிறான். அவளால் என்ன செய்ய இயலும்?

அது அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் விரசமில்லாத அணைப்பு. வேலைக்குப் போன தாய்க்காக நாள் முழுக்கக் காத்திருந்த குழந்தை, அன்னையை வாசலில் கண்டதும் ஓடிப்போய் இறுக்கி அணைத்துக்கொள்ளுமே, அப்படி ஒரு அணைப்பு. என் அம்மாவை யாருக்கும் தரமாட்டேன் என்பதுபோல் இறுக்கிக் கட்டிக்கொண்டு கழுத்து வளைவில் முகம் புதைக்குமே, அப்படி அவள் கழுத்து வளைவில் புதைத்திருந்தான் அவன்.

அவள் தேகம் கிடுகிடு என்று நடுங்கியது. அவனை அணைக்கவும் முடியாமல், விலக்கித் தள்ளவும் முடியாமல் தனக்குள் சுக்குநூறாக நொறுங்கிக் கொண்டிருந்தாள்.

அவன் தேகமும் அழுகையில் குலுங்கிற்று. அவன் கண்ணீர் அவள் கழுத்து வளைவை நனைத்தது. அவன் உதடுகள், “சொறி நிரா, சொறி நிரா!” என்று விடாது உச்சரித்தன.

அவள் அப்படியே அவன் கைகளுக்குள் நின்றிருந்தாள். அவனை அணைக்கவும் இல்லை. அவனிடமிருந்து விலகவும் இல்லை. மூடியிருந்த விழிகளிலிருந்து அருவியாய்க் கண்ணீர் மட்டும் கொட்டியது.

வேகமாய் நிமிர்ந்து, பரிதவிப்புடன் அவள் முகம் பார்த்து, “சத்தியமா நடந்த எதுவும் எனக்குத் தெரியா நிரா. உன்னைத் தாண்டி இன்னொருத்திட்ட போற தைரியம் உன்ர சிசிரக்கு இல்ல நிரா! ஒருத்தியக் கட்டி, அவளோட வாழ்ந்து, ரெண்டு குழந்தைக்கு ஆப்பா ஆகியிருக்கிறன். ஆனா அது உன்ர சிசிர இல்ல. அவன் ஆரோ. அவன் உன்ர சிசிர இல்ல.” அவள் தோள்கள் இரண்டையும் பற்றிக்கொண்டு பரிதவித்தான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கன்னங்களைக் கண்ணீர் நனைக்க, எதுவுமே செய்ய முடியாதவளாய் அவனைப் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள் அவள். கண் முன்னே அவள் உயிர் துடிக்கிறான். ஆற்றுப்படுத்த முடியாதவளாய் அவள். ஏன் இந்தக் கடவுள் அவர்கள் இருவரையும் இந்த நிலையில் நிறுத்தினான்?

“பாத்தியா என்ர நிலமைய? கைக்க நீ நிக்கிறாய். ஆனா சொந்தம் கொண்டாடவே ஏலாத தூரத்தில நான் நிக்கிறன். உன்னப் பாக்கத்தான் நிரா ஓடி வந்தனான். கையோட உன்னக் கூட்டிக்கொண்டு போகத்தான் ஆசையா வந்தனான். கடைசில என்னையே நான் துலைச்சிட்டன் நிரா. என்னை நம்புறியா? உன்ன நான் ஏமாத்தேல்ல நிரா.”

“எனக்குத் தெரியும்.” அதற்கு மேலும் அவன் துடிக்கும் துடிப்பைப் பார்க்க முடியாமல், பெரும் சிரமத்துக்கு மத்தியில் வார்த்தைகளை உதிர்த்தாள் அவள்.

சட்டென்று அவன் கலங்கிச் சிவந்திருந்த விழிகளில் ஒரு ஒளிவெள்ளம் பாய்ந்தது. “தெரியும்தானே? உன்ர சிசிர உன்னத் தானடி இன்னொருத்திட்டப் போகமாட்டான் எண்டு உனக்குத் தெரியும்தானே?” பெரும் தவிப்புடன் அவள் முகம் பார்த்துப் பரபரத்தான்.

கன்னங்களை நனைத்த கண்ணீர் மார்பையும் நனைக்க ஆம் என்பதுபோல் தலையசைத்தாள் நிரல்யா.

“என்னை நம்புறாய் தானே?” மீண்டும் தவிப்புடன் கேட்டான்.

அதற்கும் உதட்டைப் பற்றி அழுகையை அடக்க முயன்றபடி ஆம் என்று தலையசைத்தாள்.

“ஆனா ஏன் நிரா இப்பிடி எல்லாம் நடந்தது? நீயாவது என்னைத் தேடி வந்திருக்கலாமே. ஏன் என்னை விட்டாய், ஏன் என்னைத் தூக்கி இன்னொருத்திக்குக் குடுத்த நிற? என்னை ஏன் நிரா விட்டுட்டாய்? இப்ப நான் ஆருக்காக வாழ?” அர்த்தமே இல்லாத கேள்வி என்று தெரிந்தபோதும் கேட்டு கேட்டுத் துடித்தான் அவன்.

இதற்குள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த அமிர்தவல்லிக்கு நடப்பதை விளங்கிக்கொள்ளவே சில கணங்கள் பிடித்திருந்தன. இதில் அவன் படும் பாட்டைக் கண்டு அப்படியே உறைந்து நின்றார்.

மகள் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்ட ஆசுவாசத்தில் அப்போதுதான் தன்னை மீறிக் கண்ணயர்ந்திருந்த சுந்தரலிங்கமும் திடீர் என்று கேட்ட சத்தத்தில் அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து ஓடிவந்தார்.

அப்படி வந்தவர் பார்த்தது, தன் மகளைப் பற்றிக்கொண்டு குமுறிக்கொண்டு நின்றவனைத்தான். முதல் வேலையாக, “ஏய், என்ன செய்றாய்? தள்ளி நில்லு!” என்றவர் ஓடி வந்து மகளைத் தன் புறம் இழுத்துக்கொண்டார்.

அவன் உதட்டோரம் கசந்த முறுவல் ஒன்று வந்து போனது. “பயப்பிடாதீங்க. நான் தள்ளியே நிக்கிறன். இனிப் பக்கத்தில நிண்டா என்ன, தள்ளி நிண்டா என்ன? அதுதான் நிரந்தரமாப் பிரிச்சிட்டீங்களே!” என்றான் குமுறலாய். “எல்லாருமாச் சேர்ந்து ஏன் இந்த வேலை பாத்தீங்க? நான் சிங்களவனாப் பிறந்தது என்ர பிழையா? இல்ல, தமிழச்சியாப் பிறந்தது அவளின்ர பிழையா? இப்பிடி எங்களைப் பிரிச்சு, அழ வச்சுப் பாத்து, நீங்க கண்ட மிச்சம் என்ன? நான் கெட்டவனா? இல்ல படிக்கேல்லையா? இல்ல ஒழுக்கம் இல்லாம போயிட்டேனா? இப்பிடி நியாயமே இல்லாம எங்களைப் பிரிச்சிட்டீங்களே! இனம், மொழி, மதம் எல்லாம் எங்கட கைல இல்லை எண்டு உங்களுக்குத் தெரியாதா?” என்றவனின் கேள்விகளுக்கு அவரிடம் பதிலே இல்லை.

இதற்குள் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி மூலம் விசயம் அறிந்த அனந்தனின் பஜிரோ, மிக வேகமாய் வந்து வீட்டு வாசலில் நின்றது. அதைவிட வேகமாக இறங்கி ஓடி வந்தான் அவன்.

திரும்பிப் பார்த்த சிசிரவுக்கு மனம் கொதித்துப் போயிற்று. “இப்ப சந்தோசமா உங்களுக்கு? அண்டைக்கு உனக்கு அவள் கேக்குதாடா எண்டு கேட்டு அடிச்சீங்களே, இண்டைக்கு நானே அவளுக்கு இல்ல. இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க?” அவன் முன்னால் சென்று நின்று கொந்தளித்தவனுக்குப் பதில் சொல்லாமல் நிரல்யாவைத்தான் பார்த்தான் அனந்தன்.

செய்வதறியாது பயமும் பதற்றமுமாக அவளும் அவனைத்தான் நோக்கினாள்.

“நிரா!” அவர்களை இடையிட்டது சிசிரவின் குரல். அவள் பார்வை இப்போது அவனிடம் திரும்ப, “எனக்கு உன்னோட கதைக்கோணும். தனியா.” என்றான் தவிப்புடன்.

ஆனந்தனை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு சிசிரவை நோக்கி நடந்தாள். வேகமாக அவனுக்கும் அவளுக்கும் இடையில் வந்து நின்று, “நிரல் போகாத! நீ போகக் கூடாது! முதல் அவனை அனுப்பு!” என்றான் அழுத்தமாக.

“நானும் வேற எதுக்காகவும் போகேல்ல மச்சான். ஆனா அண்டைக்கு நான் ஒரு நிலைக்கு வாறதுக்கு எப்பிடி நீங்க எனக்குத் தேவையா இருந்தீங்களோ, அப்பிடி இண்டைக்கு அவர் ஒரு நிலைக்கு வாறதுக்கு அவருக்கு நான் வேணும்.” என்றாள் உடைந்து கரகரத்த குரலில். அவன் இமைக்காது அவளையே பார்க்க, “அவருக்கு ஒரு குடும்பம் இருக்கு மச்சான். அந்தக் குடும்பத்தோட அவர் நிம்மதியா வாழுறதுக்கு இந்த ஒரு நாள் அவருக்கு என்னோட வேணும்.” என்றுவிட்டுக் காலடிகளை எடுத்து வைத்து அவனைக் கடந்தவன் நின்று திரும்பி, “போகட்டா?” என்று அனுமதி கேட்டாள் அவன் முகம் பார்த்து

ஒருகணம் தடுமாறிப்போனான் அனந்தன். “என்ன புதுசா என்னக் கேக்கிறாய்?” என்றான் எங்கோ பாத்துக்கொண்டு

“என்னவோ தெரியா மச்சான். இப்ப எல்லாம் என்ன செய்ய நினைச்சாலும் பயமா இருக்கு. ஒரு காலம் நீங்க சொன்னதைக் கேட்டு நடந்த நேரம் இதையெல்லாம் நான் அனுபவிச்சதே இல்ல. அதான்…” என்றபோது அவள் குரல் முற்றிலுமாய் உடைந்து போனது.

ஒருகணம் அவள் விழிகளுக்குள் ஊடுருவியவன் போ என்பதுபோல் தலையசைத்தான். அவளும் நடக்க, அப்போதுதான் எதையோ உணர்ந்தவன் போன்று வேகமாக அவள் கையைப் பற்றித் தடுத்து, “வெளில எங்கயும் போக வேண்டாம். மேல மொட்டை மாடிக்குக் கூட்டிக்கொண்டு போ!” என்று சொன்னான்.

தலையை அசைத்துவிட்டு சிசிரவோடு மாடியேறினாள் நிரல்யா. அவர்கள் மறைந்ததும் தொப்பென்று சோபாவில் விழுந்தவன், தலையைக் கைகள் இரண்டாலும் பற்றியபடி தரையைப் பார்த்து அமர்ந்துகொண்டான். விழிகள் மூடியிருந்தாலும் அவன் உள்ளத்துக்குள்ளும் பெரும் பிரளயம் ஒன்று நடந்துகொண்டிருந்தது.

சற்று நேரத்தில் அவன் தோளில் சுந்தரலிங்கத்தின் கை படிந்தது. நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன நந்தா இதெல்லாம்?”

“வேற வழி இல்ல மாமா. இதையெல்லாம் கடந்து வந்துதான் ஆகோணும். அவளோட சேர்த்து நாங்களும்.” என்றுவிட்டு எழுந்து பஜிரோவை நோக்கி நடந்தான் அவன்.

தொடரும்...
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 36


அமிர்தவல்லி அறைக்குள் விக்கித்துப்போய் அமர்ந்திருந்தார். காதல் என்ற அந்த ஒன்றுக்குப் பின்னால் இத்தனை ஆழமான அன்பொன்று இருக்கும் என்று அவர் யோசித்துப் பார்த்ததேயில்லை. ஒரு பெண்ணைப் பெற்ற தாயாக மகள் ஒருவனை நேசிக்கிறாளாம் என்று அறிந்ததும் பதறிப்போனார். மனத்தைப் பெரும் பயம் ஒன்று கவ்விக் பிடித்திருந்தது. அடுத்த நொடியிலிருந்தே எப்படி அவளை அதிலிருந்து வெளியே கொண்டு வந்து, பாதுகாக்கலாம் என்றுதான் யோசித்தார். அதில் விளைந்த நகர்வுகள்தான் சத்தியம் வாங்கியது தொடங்கி அவளை இங்கே மாற்றியது வரையானவை.

ஆனால் இன்று, ஒரு தாய் தன் குழந்தைக்காய் எப்படித் துடிப்பாரோ, ஒரு தந்தை தன் பிள்ளைக்காய் எப்படித் தவிப்பாரோ, அப்படி அவரின் மகளுக்காய் அவன் துடியாய்த் துடித்த காட்சி, அவர் கண்ணை விட்டு அகலவே மாட்டேன் என்றது. ‘உன்ர சிசிர உன்னத் தாண்டி இன்னொருத்திட்டப் போகமாட்டான் எண்டு உனக்குத் தெரியும்தானே?’ என்று அவன் கேட்ட விதம் கண்டு நடுங்கிப்போனார். ஏன், கண்ணீர் கூட வந்திருந்தது. இன்னும் கூட அவனிடமிருந்து தன் சிந்தனையைப் பிரிக்க முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அப்போது இருண்ட முகத்துடன் அறைக்குள் வந்தார் சுந்தரலிங்கம்.

“பாவம் செய்திட்டமா அப்பா?” பெரும் பரிதவிப்புடன் அவரிடம் வினவினார். சுந்தரலிங்கம் நிமிர்ந்து பார்க்க, “ஆரா இருந்தாலும் அவனும் என்னை மாதிரி ஒரு தாய் பெத்த பிள்ளைதானே? இண்டைக்கு அந்தத் தாயும் இல்லாம, இப்பிடி உயிரா விரும்பின பெட்டையும் இல்லாம… என்னவோ காலத்தோட சேர்ந்து நாங்களும் அந்தப் பெடியன வதைச்சிட்டமோ எண்டு இருக்கு.” என்றவரை மேலே பேச விடாமல் இடையிட்டு, “அவனுக்கு எண்டு ஒரு குடும்பம் இருக்கு அமிர்தம். கண்டதையும் யோசிக்காத!” என்றார் சுந்தரலிங்கம் கண்டிக்கும் குரலில்.

அமிர்தவல்லியால் அப்படி இருக்க முடியவில்லை. இத்தனை காலமும் யாரோ ஒரு சிங்களவனாக இருந்தவன் இன்று, மகனுக்கு ஒப்பான இடத்தைப் பிடித்துவிட்டதில் என் மகன் என்றால் இப்படி விடுவேனா என்று அவர் தாயுள்ளம் அவனுக்காயும் துடித்தது. அதில், “அந்தக் குடும்பம் அவனா உருவாக்கினது இல்லையே.” என்றார் கலங்கிய குரலில்.

“இப்ப அதுக்கு என்ன செய்யச் சொல்லுறாய்?” மெல்லிய எரிச்சல் தொனிக்க வினவினார் சுந்தரலிங்கம்.

“செய்றதுக்கு ஒண்டும் இல்ல. அது இல்லை அப்பா நான் சொல்ல வாறது. எங்கட பிள்ளைக்காக இப்பிடித் துடிக்கிறவன் கட்டின அந்தப் பிள்ளையோட எப்பிடி வாழுவான்? இதேதானே எங்கட பிள்ளைக்கும் நடக்கப் போகுது?” என்றதும் அதிர்ந்து பார்த்தார் சுந்தரலிங்கம்.

அவரையும் கண் முன்னால் கண்ட காட்சி உலுக்கித்தான் போட்டிருந்தது. அன்று அனந்தனிடம் அடி வாங்கி ‘நிரா போகாத!’ என்று அவன் கதறியபோது கூட மருந்துக்கும் அவர் இரங்கவே இல்லை. இனி அவன் என் மகள் பக்கம் திரும்பவே கூடாது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தார். ஆனால் இன்று… ஏதோ ஒன்று அவர் நெஞ்சையும் பிசைந்தது. இதைப் பற்றி மேலே யோசிக்க வேண்டாம் என்று நினைத்தாலும் முடியாமல் அவன் நின்ற கோலமும், பட்ட பாடும் திரும்ப திரும்ப அவரை அங்கேதான் இழுத்தது.

கதைகளிலும் காவியங்களிலும் படங்களிலும் உயிர் நேசம், ஆழமான அன்பு, அளவற்ற பாசம் என்று காதலுக்கு எத்தனை விதமாய்ப் பொருள் கொடுத்தாலும் எம் பிள்ளையின் உள்ளத்தோடும் உணர்வுகளோடும் உடலோடும் யாரோ ஒருவன் அல்லது ஒருத்தி மிக நெருக்கமாகவும் அந்தரங்கமாகவும் பேசும் மொழியாகவே அந்தக் காதலை வீடுகள் மொழிபெயர்த்துவிடுகின்றன. அது உண்மையும் கூட! அந்த அந்தரங்கமான நெருக்கம் பிள்ளைகளின் மொத்த வாழ்க்கையையும் நாசமாக்கிவிடும் அபாயம் இருப்பதாலேயே பெற்றவர்கள் முந்திக்கொள்ள நினைக்கிறார்கள். அதைத்தான் சுந்தரலிங்கமும் செய்தார். அதில் தவறிருப்பதாய் அவர் இப்போதும் நினைக்கவில்லை.

ஆனால் அவன் துடித்த துடிப்பு… கேட்ட கேள்விகள்? மனைவி கேட்டது? நானாக ஒரு உறவிலிருந்து விலகி இன்னொன்றுக்குள் முழு மனத்துடன் போவது என்பது வேறு. எனக்கே தெரியாமல் என்னைக் கொண்டுபோய் இன்னொரு உறவில் சிக்க வைத்து, திரும்பிவிட முடியா நிலையில் நிறுத்துவது என்பது எத்தனை பெரிய நரகம்?

அதற்குமேல் அதைப்பற்றி யோசிக்க விரும்பாமல், தலையை உலுக்கி அந்தச் சிந்தனைகளிலிருந்து வெளியே வந்தவர், “இப்பிடியெல்லாம் மனதில கூட நினைக்காத அமிர்தம். நந்தனை யோசிச்சுப் பார். எல்லாரையும் விட அவன் பாவம்.” என்றார் தனக்கும் சேர்த்து.

ஆம் என்பதுபோல் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாலும் அமிர்தவலிக்கு என்னவோ சிசிர, அவன் மனைவி, தம் மகள், அனந்தன் நல்லவருமே மிகுந்த பரிதாபத்துக்குரியவர்கள் என்றே தோன்றிற்று. அவர்களை எல்லாம் இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டதில் தம் பங்கும் இருப்பதையும் உணர்ந்தே இருந்தார்.


*****

அந்த வீட்டின் மொட்டை மாடி. அனந்தனின் குட்டி இராச்சியம். இருவரும் அங்கே நின்றிருந்தார்கள்.

கதைக்க என்று வந்தவர்கள் எதையும் கதைக்கவில்லை. கதைக்க முடியவில்லை. ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தபடி நின்றிருந்தனர். இருவர் விழிகளிலும் ஈரம். இருவர் நெஞ்சிலும் ஆழமான காயம். இருவருக்குமே தம் உள்ளத்தின் உணர்வுகளை மற்றவரிடம் கொட்டி அழ வேண்டும் போலிருந்தது. அது இனி முடியாதே என்கிற நிலை நெஞ்சை வால் கொண்டு அறுத்தது.

அதைத் தாங்க முடியாமல், “இங்கதான் மச்சான் இருக்கிறவர்.” என்று மெல்ல முணுமுணுத்தாள் நிரல்யா.

மெல்லிய தலையசைப்பால் கேட்டுக் கொண்டவனின் விழிகள் அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கவே இல்லை. அவன் உலகம்தான் நொறுங்கிப் போயிற்றே! சற்று முன்னர் கட்டுப்பாட்டை இழந்து நின்றது போன்று இப்போது முடியவில்லை. நிதானம் திரும்பியிருந்தது. என்ன, ஐயோ ஐயோ என்று நெஞ்சுக்குள் கேட்கும் அந்த இரைச்சல் மட்டும் அடங்கவே இல்லை.

“எப்பிடி இருக்கிறீங்க?” தழுதழுத்த குரலில் மெல்ல வினவினாள் நிரல்யா.

இருக்கிறேன் என்பதுபோல் தலையை அசைத்தான் அவன். தொண்டை ஏறி இறங்கிற்று. நெஞ்சுக்குள் திரும்பவும் ஏதோ ஒன்று அடைத்துக்கொண்டு வந்தது. அதற்குமேல் அவளைப் பார்க்க முடியாமல் மொட்டை மாடிச் சுவரருகே நகர்ந்தான். இலேசாக அதில் சாய்ந்து, கைகளைக் கட்டிக்கொண்டு, வான் வெளியை வெறித்தவனின் முகத்தில் தாங்கொணா சோகம்.

மீண்டும் இருவரிடையேயும் கனத்த மௌனம். உள்ளங்கள் மட்டும் பெரும் இரைச்சலோடு பொங்கி பொங்கி அடங்கின. “எல்லாம் முடிஞ்சு என்ன?” என்றான் சிசிர அவள் புறம் திரும்பாமல்.

மளுக்கென்று அவள் விழிகள் நிறைந்து போயின. அதற்குப் பதில் சொல்ல இயலாமல் நின்றாள்.

“இனி அவ்வளவுதான் என்ன?”

தொண்டை அடைக்க அவனையே பார்த்தாள் நிரல்யா.

“இனிக் காலத்துக்கும் எனக்கு நீயும் இல்ல, உனக்கு நானும் இல்ல.”

அவளுக்கு உதடுகள் அடக்கிய அழுகையில் நடுங்க ஆரம்பித்தன.

“வாழுவமா?”

“வேற வழி?” தொண்டை அடைக்க வினவினாள்.

அவனிடம் சற்று நேரத்துக்குச் சத்தமில்லை. “ரெண்டு பேரும் செத்திடுவமா?” என்றான் திடீரென்று.

நிரல்யா திகைத்துப்போனாள். “என்ன கதைக்கிறீங்க? உங்களை நம்பி மனுசி, பிள்ளைகள் இருக்கினம். அவேயப் பற்றி யோசிக்க மாட்டீங்களா?”

“ப்ச்!” சலிப்புடன் உச்சுக் கொட்டினான் அவன். “அவள வீட்ட போகச் சொல்லிட்டன்.”

அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. சட்டென்று மெல்லிய கோபமும் மூண்டது. “நீங்க செய்தது சரி எண்டு நினைக்கிறீங்களா?” சிறு சீற்றத்துடன் வினவினாள்.

திரும்பி அவளைப் பார்த்தான். அவன் ஆசையாசையாய் நேசித்த பெண் அவள். அவனுடைய முதல் காதல். முதல் சொர்க்கம்! பார்த்து பார்த்து ரசித்திருக்கிறான். அவளோடு கொஞ்சிக் குலாவியிருக்கிறான். அப்படி இருந்தும் என்னை ஏன் இந்த நிலையில் நிறுத்தினாய் என்று கேளாமல், அவன் மனைவிக்காக அவனிடமே கோபப்படுகிறாள். அப்படியானவளை முற்றிலுமாக இழந்துவிட்டு நிற்கிறான் அவன். அவனால் முடியவேயில்லை. இந்த நிலையில் தன்னை நிறுத்திவிட்ட விதியைச் சபித்தான். நெஞ்சில் வெறுப்பும் விரக்தியும் சூழ்ந்தது. அப்படியே தொய்ந்து மொட்டை மாடிச் சுவரிலேயே சாய்ந்து அமர்ந்தான்.

அவளையும் அமரச் சொல்லிக் கையால் காட்டினான். அவளும் அளவான இடைவெளி விட்டுச் சப்பாணி கட்டி(சம்மணம் போட்டு) அமர்ந்துகொண்டு அவன் முகம் பார்த்தாள்.

அவன் தன் கையில் இருந்த அவள் பெயர் டாட்டூவையே மிக மிக மென்மையாக வருடிக்கொண்டிருந்தான். அவளைச் சேர்ந்துவிட வேண்டும் என்று எத்தனை எத்தனை போராட்டங்கள். அத்தனையும் வீண்! விழிகளை இறுக்கி மூடித் திறந்தான். அவனால் முடியவே இல்லை.

பார்த்திருந்தவளின் விழிகளில் நீர் சேர்ந்து போயிற்று. தானும் பச்சை குத்தியதை அறிந்தால் என்னாவான்?

“சிசிர! ஏதாவது கதைங்க.” அவன் இப்படித் தனக்குள் மூழ்கிக் கிடப்பது ஒருவிதமாய் அவளுக்குள் அச்சமூட்ட மெல்ல அவனைப் பேசவைக்க முயன்றாள்.

“என்ன கதைக்க? எதைக் கதைச்சாலும் எதுவும் மாறப்போறது இல்லையே! அந்தப் பேராதனைக் காலத்துக்குத் திரும்பப் போகவே ஏலாதா எண்டு ஏக்கமா இருக்கு நிரா. அண்டைக்கு நீ கேட்ட மாதிரி உன்னை எங்கயாவது கூட்டிக்கொண்டு போயிருக்கக் கூடாதா எண்டு இருக்கு. நினைவு முழுக்க அங்கேயேதான் சுத்திக்கொண்டு இருக்கு. என்ன செய்ய நான்? உன்னையே நம்பி, உனக்காகவே காத்திருந்தவள விட்டுட்டியேடா எண்டு என்ர மனமே என்னைக் கொல்லுது. எவ்வளவு பெரிய விபத்தாவும் இருக்கட்டும். என்னால உன்ன மறக்க முடிஞ்சிருக்கே. அதாலதானே இவ்வளவும் நடந்தது.” என்றவனின் விழியோரம் மெல்லிய நீர்ப்படலம்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனைப் பேச வைக்க முயன்றவள் பேச்சற்றுப்போய் அவனைப் பார்த்துப் பரிதாபமாய் விழித்தாள். ஹோ என்கிற பெரும் இரைச்சல் அவள் உள்ளத்திலும். பக்கத்திலேயே இருக்கிறான். ஆனால் பக்கத்தில் போகவே முடியாத தூரத்தில் இருக்கிறான்.

“உனக்கு என்னில கோவமே வரேல்லையா நிரா?”

அவனுடைய திடீர் கேள்வியில் திகைத்து, வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு இல்லை என்பதுபோல் தலையசைத்தாள்.

“ஏன்?”

“ஏன் கோவிக்க? நடந்ததில உங்கட பிழை என்ன இருக்கு?” என்று திடமாகத் திருப்பிக் கேட்டாள் அவள்.

தான் அவளை விட்டுவிட்டோம் என்கிற எண்ணம் அவனை அளவுக்கதிகமாக அழுத்துவதை அவளால் உணர முடிந்ததில் தன்னைத் திடப்படுத்திக்கொண்டாள். தான் உடைந்தாலோ, அழுதாலோ அது அவனை இன்னுமே நோகடிக்கும் என்று உணர்ந்து, “முதல் ஏன் இப்பிடித் திரும்ப திரும்ப அதையே நினைக்கிறீங்க? உயிராக் காதலிச்ச ஆருமே இதுக்கு முதல் பிரிஞ்சதே இல்லையா? இல்ல, அதுக்குப் பிறகு அவே வாழ்ந்ததே இல்லையா?” என்று மென்மையாய் வினவினாள்.

மற்றவர்களைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? அவனால் முடியவில்லை. அவள் இனித் தனக்கு இல்லவே இல்லை என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு, இதயத்தைக் கசக்கிப் பிழியும் இந்த வலியைத் தாங்கிக்கொண்டு எப்படி வாழ்வான்?

“நாங்க சேரக் கூடாது எண்டே இருந்திருக்குப் போல நிரா. அது தெரியாம உன்னையே சுத்தி சுத்தி வந்து, சும்மா இருந்த உன்னையும் என்னப் பாக்க வச்சு, உயிராக் காதலிக்க வச்சு, ஓராயிரம் கனவுகள் கண்டு கடைசில எல்லாம் வீண்!” என்றான் வெறுத்த குரலில்.

அவன் இப்படித் திரும்ப திரும்ப தன்னையே நிந்தித்துக்கொள்வதைக் கண்டவளுக்கு மெல்லிய பயம் பிடித்துக்கொண்டது. சற்றே அவனை நெருங்கி அவன் கரத்தைப் பற்றினாள். வேகமாக நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளில் பெரும் போராட்டம். அவளுக்கும் நெஞ்சை அடைத்துக்கொண்டுதான் வந்தது. ஆனால், திரும்ப திரும்ப அந்த வேதனைக்குள் கிடந்து உழல்வதில் அர்த்தமே இல்லை என்றும் விளங்கிற்று. இத்தனை நாள்களும் உடைந்து கிடந்தவள் அவன் படும் பாட்டின் முன்னே திடம் பெற்றாள்.

அதில், “நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேக்குறீங்களா?” என்றாள் தான் பற்றியிருந்த அவன் கரத்தில் மெல்லிய அழுத்தம் கொடுத்து.

“சொல்லு!” என்று அவள் முகம் பார்த்தான் அவன்.

ஒரு கணம் அந்த அடர் நீல நிற விழிகள் இரண்டையும் மாறி மாறிப் பார்த்தாள். உள்ளம் ஏதோ ஒரு ஆழ்துளைக் கிணற்றுக்குள் புதைய முயன்றது. அதற்கு விடாமல் இழுத்துப் பிடித்தபடி, “இந்த ரெண்டு கண்ணும் என்னைப் பாத்தாலே பளபளக்கும் சிசிர. சிரிக்கும், கொஞ்சும், பிரத்தியேகமா என்னட்டக் கதைக்கும். நீங்க என்னோட கதச்சதை விட உங்கட ரெண்டு கண்ணும்தான் நிறையக் கதைச்சிருக்கு. எனக்குள்ள நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்ததும் இந்த ரெண்டு கண்ணும்தான். ஆனா இதே ரெண்டு கண்ணும் அண்டைக்கு என்னை ஆரோவாப் பாத்தது…” என்றபோது எவ்வளவுதான் திடமாகக் காட்டிக்கொள்ள முயன்றாலும் அவள் பேச்சுத் தடுமாறிப் போயிற்று.

அவனும் பேச்சற்றுப்போய் அவளையே பார்த்திருந்தான்.

கண்களை எட்டாத ஒரு முறுவலைச் சிந்தி, “அண்டைக்கு உங்கட முகத்தில அவ்வளவு வெளிச்சம். ஒருத்தன் மனுசி பிள்ளைகளோட நிறைவா, சந்தோசமா, நிம்மதியா வாழ்ந்தா எப்பிடி இருப்பானோ அப்பிடி இருந்தீங்க. உங்கட கண்ணுக்கு முன்னால நான் நிக்கிறன். ஆனா நீங்க என்னைக் கவனிக்கவே இல்லை.” என்றதும், “துடிச்சுப் போயிற்றியா நிரா?” என்றான் அவன் இடையிட்டு.

“என்ன?” எதிர்பாராமல் வந்த வினாவில் தடுமாறி வினவினாள்.

“என்ன அப்பிடிப் பாத்ததும் துடிச்சியா நீ? இந்த நிலைல உன்னப் பாத்தே கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கொண்டு இருக்கிறன் நிரா. உன்ன நம்பி வந்தாளே, மொத்த வீட்டையும் எதிர்த்தாளே, அப்பிடியானவளுக்கு என்னடா செய்து வச்சிருக்கிறாய் எண்டு உள்ளுக்க என்னவோ இருந்து வதைக்குது நிரா. நீ எப்பிடி என்னை இன்னொருத்தியோட பாத்தும் தாங்கினாய்?”

அவள் எங்கே தாங்கினாள்? கிட்டத்தட்ட செத்துப் பிழைத்தாளே! ஒன்றும் சொல்லாமல் சிரித்துத் தன்னைச் சமாளித்தாள்.

“அதிர்ச்சியா இருந்ததுதான். அழுதனான்தான். ஆனாலும் உங்களுக்கு நினைவு திரும்பவே கூடாது எண்டுதான் நினைச்சனான். அந்தளவுக்கு உங்கட குடும்பம் பாக்கவே கண்ணை நிறைச்சது சிசிர.” என்று புன்னகைத்தவளை வேதனையோடு பார்த்தான்.

அவள் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை. அதை இன்னொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு அவனைத் தேற்ற முயல்கிறவளை என்ன என்று சொல்வது?

“நான் அழுதுகொண்டே இருந்தனான். நீங்க என்னோட வந்திருந்து கதைச்சுக்கொண்டு இருந்தனீங்க. அதைப் பாத்து உங்கட மனுசி கோவப்படவே இல்ல. ஏன், நாங்க என்ன கதைக்கிறம் எண்டு கேக்க எங்களுக்குக் கிட்ட வரவே இல்ல. அவ்வளவு நம்பிக்கை. அதுவும் உங்களில! அப்பிடியான ஒரு துணை கிடைக்கிறது வரம் சிசிர. அதை இழந்திடாதீங்க.” என்றபோது அவனால் மறுக்க முடியவில்லை.

அன்று வீட்டுக்கு வந்த பிறகும், ‘அவாவை உங்களுக்குத் தெரியுமா’ என்று ஒரேயொருமுறை கேட்டாளே தவிர்த்துப் பிறகு விசாரிக்கவே இல்லை. ‘நான் உன்னை மறந்துவிட்டால் என்ன செய்வாய்’ என்று அவன் கேட்டதும் அதற்கு அவள் சொன்ன பதிலும்கூட நினைவில் வந்து போக அவன் உள்ளத்தில் ஒரு துடிப்பு.

“இப்ப உங்களுக்கு அவவோட வாழ்ந்த வாழ்க்கையும் நினைவில இருக்கும்தானே? அத யோசிச்சுப் பாருங்க. கட்டாயம் அதுவும் நிறைவான, ஒரு சந்தோசமான வாழ்க்கையாத்தான் இருந்திருக்கும். அது வேண்டாமா உங்களுக்கு? அண்டைக்கு உங்கட மகள் உங்கட அம்மா மாதிரி எண்டு சொன்னீங்க. அவா வேண்டாமா உங்களுக்கு? உங்களை மாதிரியே இருந்தா சிசிர. எனக்கு அப்பிடியே கையோட தூக்கிக்கொண்டு வரோணும் மாதிரி இருந்தது. இன்னொரு மகனோ மகளோ பிறக்கப் போகுது. அந்தக் குழந்தை வேண்டாமா உங்களுக்கு?”

விழிகள் கலங்க பார்வையை அகற்றிக்கொண்டான் அவன். அநியாயமாக அவளை இழந்துவிட்ட வலியும், தனக்காய்க் காத்திருந்தவளைத் தனிமையில் நிறுத்திவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியும் அவனைப் போட்டு வதைத்தாலுமே கூட,
நிறை மாத வயிற்றோடு இருந்தவளைப் போ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறோமே என்கிற எண்ணம் உள்ளத்தின் ஒரு ஓரத்திலிருந்து அவனை அழுத்தாமல் இல்லையே. நிச்சயம் அப்பா மூலம் அனைத்தையும் அறிந்துகொண்டிருப்பாள், என் சிசிரவா இப்படி என்று தனக்குள் துடித்துக்கொண்டிருப்பாள் என்றும் தெரியுமே! என்ன அவனால்தான் அவளை எதிர்கொள்ள இயலவில்லை. அதுதான் அனுப்பி வைத்தான்.

“சிசிர!”

அவன் திரும்பவே இல்லை.

“என்னைப் பாருங்க சிசிர.”

திரும்பி அவளைப் பார்த்தான். அவன் விழிகளில் இலேசாய்ப் படர்ந்திருந்த கண்ணீர்க் கோடு அவள் உயிரை வதைத்தாலும் காட்டிக்கொள்ளாமல், “ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கனவு கண்டோம்தான். அது இனி இல்லை எண்டு ஆனது வலிதான். அதுக்காக அங்கேயே நிக்கேலுமா சொல்லுங்க? கடந்து வரத்தானே வேணும்? அப்பிடி இதுல இருந்து வெளில வாங்கோ. நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு உங்களில எந்தக் கோவமும் இல்ல. நான் தனியா நிக்கவும் இல்ல.” என்று அவன் மனத்தில் பதியும்படியாக இதமாகவும் அதே நேரம் அழுத்தியும் சொன்னாள்.

அவன் அவள் முகத்தையே இமைக்காது பார்த்திருக்க, “யோசிச்சுப் பாருங்க. என்ர குடும்பத்துக்கு நான் செய்தது எல்லாம் பெரும் பிழைகள் சிசிர. ஆனாலும் அவே என்னை விடவே இல்லை. கடைசிவரையிலும் என்னோட எனக்குத் துணையா நிண்டவே. இனியும் விடாயினம்(விடமாட்டார்கள்). அதால நான் தனிச்சு நிக்கிறன் எண்டெல்லாம் நினைக்காதீங்க. உங்களை நம்பி உங்கட குடும்பம் இருக்கு. உங்கட அப்பா… அவரும் பாவம். உங்களை விட்டா அவருக்கு வேற ஆர் இருக்கினம் சொல்லுங்க?”

“அப்ப நீ?” என்றான் அவன் வேறு பேசாமல்.

“நான்… எனக்கு…. எனக்கும் கலியாணம் நடக்கப் போகுது.” என்றாள் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி.

“உண்மையாவா? ஆரோட?” என்றான் நிமிர்ந்து அமர்ந்துகொண்டு.

“மச்சானோட.”

“அவரோடயா?” புஸ் என்றானது அவனுக்கு.

“ஏன், அவருக்கு என்ன குறை?” இப்போது அவன் முகம் பார்த்து வினவினாள்.

“குறை எல்லாம் ஒண்டும் இல்ல. கோவம்தான் அளவுக்கு அதிகமா வருமே. தாங்குவியா நீ?”

“இவ்வளவு காலமும் நான் உங்களத் தேட என்னைப் பாதுகாத்தது அவர்தான்.”

“எண்டாலும் அவர் உனக்குச் சரிவரமாட்டார். வேற ஆரையும்…” என்று சொல்லிக்கொண்டே திரும்பியவன் உக்கிர மூர்த்தியாக அங்கே நின்றிருந்த அனந்தனைக் கண்டு திடுக்கிட்டுப் போனான்.

இவன் எப்போது வந்தான் என்று இருவருக்கும் திகைப்பாய் இருந்தாலும் சமாளித்துக்கொண்டனர். அதோடு, விட்டால் சிசிரவின் மேல் பாய்ந்துவிடும் அளவுக்குச் சினத்தில் நின்றவன், தனக்காகத்தான் பொறுத்துக்கொண்டிருக்கிறான் என்று நிரல்யாவுக்கு விளங்கியதில் நம்ப முடியாமல் விழிகளை விரித்தாள்.

எப்போதும் ஒரு பெரிய மனிதனாக மட்டுமே பார்த்துப் பழகிய மச்சானை இன்று, சிசிரவின் பேச்சுக்குக் கோபம் கொண்டவனாகப் பார்க்க அவளுக்கு வேடிக்கையாய்ப் போயிற்று. அவளை அறியாமலேயே அவனிடம் சேட்டை செய்யும் சின்ன பெண் நிரல்யா நிறைய நாள்களுக்குப் பிறகு தலையைத் தூக்க, வேண்டுமென்று, “அதுக்கெல்லாம் விடாயினம்(விடமாட்டார்கள்)!” என்று, அவனைப் பார்த்துக்கொண்டே சிசிரவுக்குப் பதில் சொன்னாள்.

அவன் விழிகள் இப்போது அவளையும் எரித்தன. அவளுக்கு இன்னுமே ஆச்சரியமாயிற்று. இதையெல்லாம் ஒரு விசயமாக எடுப்பானா என்ன என்று அவனைப் பார்த்தாள்.


தொடரும்...

கருத்திடும் அனைவருக்கும் நன்றி. பெரிய எபி போட்டிருக்கிறன். கருத்தும் கட்டுரை மாதிரி வரோணும் சொல்லிட்டேன்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom