வெளிச்சக்கீற்று

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 14


அவனிடம் சொன்னதுபோல அரக்கப்பரக்க ஓடிவந்து, ‘இவ்வளவு நேரம் அப்பிடி எங்க போனனீ?’ என்கிற தமக்கையின் விசாரணையை எதிர்கொண்டு, ‘பிள்ளைகள் உங்களைக் காணாம தவிச்சுப் போய்ட்டினம்மா. இனி இப்பிடி லேட்டாக்காதீங்கோ!’ என்ற அன்னையைச் சமாளித்து, நாள் முழுக்கத் தன்னைக் காணாத ஏக்கத்தில் சிணுங்கிய சிந்தூரியைத் தேற்றி, காய்ச்சல் இல்லாதபோதும் சோர்ந்து தெரிந்த தூரிகாவைக் கவனித்து, அவர்களுக்கு உணவு கொடுத்து, நடுநடுவே தன்னையும் கவனித்து என்று எல்லா வேலைகளையும் முடித்தபோது, உண்மையில் அவள் முதுகு ஒடிந்தே போயிற்று.

பிள்ளைகளுக்கு நடுவே படுத்ததுதான் தெரியும். அவள் விழிகள் உறக்கத்தில் சொக்கிப்போயின. அகத்தியன் சொன்னவற்றைப் பற்றி யோசிக்கக் கூட நேரமிருக்கவில்லை.

ஆனால், அடுத்தநாள் காலை எழுந்ததில் இருந்து அந்த யோசனைதான். இன்னொரு வாழ்க்கையைத் தேடும்போது இருந்த துணிவு, முடிவெடுக்கும் நிலைக்கு வந்தபோது இல்லாது போயிற்று. பலவிதப் பயங்களும் குழப்பங்களும் நெஞ்சைக் கவ்வின.

சொன்னதுபோல பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருப்பானா, அல்லது, இப்போது இனிக்க இனிக்கப் பேசிவிட்டு நாளைக்கு மாறிவிடுவானா? மாற்றாந்தகப்பனின் பிள்ளைகள் என்று தள்ளி வைத்துவிட்டான் என்றால் அதன்பிறகு பிள்ளைகளின் நிலை? அதை நினைக்கவே நெஞ்சுக்குள் என்னவோ அடைத்துக்கொண்டு வந்தது.

இப்படியெல்லாம் அளவுக்கதிகமாக யோசித்து, கிடைக்கிற நல்ல வாழ்க்கையை உதறத்தான் வேண்டுமா என்றும் ஓடிற்று.

சுசீலாவின் கணவர், பெற்ற மகனையே திரும்பிப் பார்க்காமல்தானே இருக்கிறார். எத்தனையோ வீடுகளில் சொந்தத் தகப்பன் கூடவே இருந்தும் பிள்ளைகள் மீது அக்கறையற்று இருப்பதில்லையா? அந்த வீட்டுத் தாய், தன் பிள்ளைகளை வளர்க்காமலா விட்டுவிடுகிறார்? ஒன்றுக்கும் உதவாத அந்தக் கணவனையும் சேர்த்து இழுத்துக்கொண்டு குடும்பத்தைக் கொண்டுதானே போகிறார். குறைந்தபட்சமாக அந்த நிலைக்கு அகத்தியன் தன்னைக் கொண்டுவர மாட்டான் என்று நம்பினாள்.

ஆக, எதுவும் இரண்டாம் திருமணத்தில் மட்டுமேதான் என்றில்லை. அப்படி வந்தால், ‘இரண்டாம் திருமணம்’ என்பது சொல்வதற்கான ஒரு காரணமாகிறது. அவளுக்கு ஏனோ, ‘சாவுக்கும் சாட்டு வேணுமாம் ஆச்சி.’ என்று அன்னை அடிக்கடி சொல்வது நினைவில் வந்து போனது.

பார்மசிக்கு வந்து சுசீலாவுக்கு அழைத்துப் பேசினாள். அகத்தியன் தன்னோடு கதைத்ததைச் சொல்லி, தன் பயங்களையும் குழப்பங்களையும் பகிர்ந்துகொண்டாள். ஏனோ, கமலாம்பிகையிடம் கூடக் கிடைக்காத ஆறுதலும், மனம் விட்டுப் பேசும் தயக்கமற்ற நிலையும் சுசீலாவிடம் கிடைத்தது.

அவரோ அவள் சொன்னவற்றைக் கேட்டு அகமகிழ்ந்து போனார். “கடவுளே, எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா? உங்க ரெண்டுபேரைப் பற்றியும் நான் நினைக்காத நாள் இல்ல. இன்னொரு வாழ்க்கைக்கு ஆசைப்படுற பிள்ளைகளுக்கு ஒரு நல்லதச் செய்து வைக்காம இருக்கிறது எவ்வளவு பிழையோ, அவ்வளவு பிழை விருப்பமே இல்லாத பிள்ளைகளைச் சேர்த்து வைக்கிறதும் எண்டு யோசிச்சுப்போட்டுத்தானம்மா பேசாம இருந்தனான். இப்பதான் எனக்கு மனம் நிறைஞ்சு இருக்கு.” என்று அவர் சொன்னபோது அவளும் நெகிழ்ந்துபோனாள்.

“அர்த்தமே இல்லாததுகளை யோசிச்சுப் பயப்பிடாதீங்கோ யசோ. நான் குமர்ப்பிள்ளையா இருந்த காலத்தில இருந்து அவே எல்லாரையும் எனக்குத் தெரியும். சோலி சுரட்டுக்குப் போகாத அருமையான குடும்பம். உங்களுக்கு மட்டும் இது ரெண்டாவது கலியாணம் இல்ல. தன்ர வாழ்க்கையைச் சந்தோசமாக் கொண்டுபோக வேணும் எண்டுற ஆசை, அவனுக்கும் இருக்கும் தானேம்மா. சவீதா குடும்பம் வேற பக்கத்திலேயே இருக்கு. உங்களுக்கு அகத்தியன் சொன்னானோ தெரியாது, அவன் அண்டைக்கே உங்களைத்தான் கட்டப்போறன் எண்டு சவீதா குடும்பத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டானாம். அப்பிடிச் சொல்லுறவனாம்மா உங்கட பிள்ளைகளைப் பிரிச்சுப் பாப்பான்? ஒருநாளும் அப்பிடி நடக்காது. கண்டதையும் யோசிச்சது, பயந்தது, தனியா இருந்தது எல்லாம் போதும் யசோ. எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைச்சாத்தான் ஒண்டைச் செய்வன் எண்டு நினைச்சா அது கடைசிவரைக்கும் நடக்காது. எப்பவும் புதுசு புதுசாக் கேள்வியும் பயமும் வந்துகொண்டேதான் இருக்கும். உள்ளுணர்வு சொல்லுறபடி நடக்கிறதுதான் பல விசயங்களுக்கு நல்லது. நீங்க குறிப்பக் கொண்டு வாங்கோ. நான் நாளைக்கு பார்மசிக்கே வந்து வாங்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

கலக்கம் முற்றிலுமாக அகன்றிராதபோதும் அதற்குமேல் அவளால் யோசிக்க முடியவில்லை. அவர் சொன்னதுபோல, யோசிக்க யோசிக்க மனம் இன்னுமே குழம்பிய குட்டையாகத்தான் மாறிற்று. கேள்விகள் புதிது புதிதாகப் பிறந்துகொண்டே இருந்தன. அச்சங்களும் கூடிக்கொண்டேதான் போயின.

ஆனால், சவீதா குடும்பத்தினர் முன்னேயே அவன் தன்னைத்தான் மணக்கப் போவதாகச் சொன்னானாம் என்பது, ஏதோ ஒரு பெரிய நம்பிக்கையை அவளுக்குத் தந்திருந்தது.

இன்னும் வீட்டில் சொல்லவில்லையே என்கிற கலக்கம் இருந்தாலும் அடுத்தநாள் குறிப்பை எடுத்துக்கொண்டு வந்தாள்.

அங்கே சொன்ன பிறகு இங்கே சரிவராமல் போனால், வீட்டில் அவள் நிலை இன்னும் மோசமாகிவிடும். முதல் இங்கே என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, அங்குச் சொல்வோம் என்று முடிவெடுத்துக்கொண்டாள்.

குறிப்பை வாங்குவதற்காகக் காலையிலேயே வந்திருந்தார் சுசீலா.

“குறிப்புப் பொருந்தினா சொல்லுங்கோ அக்கா. நான் முதல் பிள்ளைகளோட கதைக்க வேணும். அம்மாவும் அக்காவும் என்ன சொல்லுவீனம் எண்டு தெரியாது. அதால, இன்னும் எதுவும் உறுதியா முடிவாகேல்ல எண்டும் சொல்லுங்கோ.” என்று சொல்லிக் கொடுத்தாள்.

அதன்பிறகு, அவளுக்கு அதைப்பற்றி யோசிக்க நேரமில்லை. பார்மசிக்கு கொழும்பிலிருந்து புது இருப்புகள் வந்து இறங்கியிருந்தன. முதலாளியும் கடைக்கு வந்திருந்தார். அவர் கணக்கு வழக்குகளைப் பார்க்க, அவளும் மகிளாவுமாகச் சேர்ந்து கடையையும் பார்த்து, வந்து இறங்கியவற்றைச் சரிபார்த்து எடுத்துவைக்க என்று நேரம் ஓடிற்று.

முதலாளி தன் வேலைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டதும், “யசோக்கா, சின்ன ரெஸ்ட் எடுக்காம இனி என்னால ஏலாது. ஒரு நிமிசம் இருங்கோ, தேத்தண்ணியும் சாப்பிட ஏதாவதும் வாங்கிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு, அருகில் இருக்கும் தேநீர்க் கடைக்கு ஓடினாள் மகிளா.

அந்த இடைவெளியில் கைப்பேசியை எடுத்துப்
பார்த்தாள். அகத்தியன் மூன்று முறை அழைத்திருந்தான். ஏனோ? யோசனையோடு அவனுக்குத் திருப்பி அழைத்தாள்.

அழைப்பை ஏற்றதுமே, “நான் உங்கள ஆகத் தொந்தரவு செய்றேனா?” என்றுதான் கேட்டான் அவன். குரலில் மெல்லிய இறுக்கம் தெரிந்தது.

“இல்லையே ஏன்?” புருவங்கள் சுருங்க வினவினாள்.

“இல்ல, முந்தநாள் நான் போட்ட மெசேஜுக்கு ரெண்டு மணித்திலாயத்துக்குப் பிறகுதான் பதில் வந்தது. நேற்று எடுத்து ஏதாவது சொல்லுவீங்க எண்டு எதிர்பாத்தனான். சத்தமே இல்ல. இண்டைக்கு மூண்டு தரம் எடுத்தும் நீங்க கதைக்கேல்ல. இதெல்லாம், தள்ளியே நில்லு எண்டு சொல்லுற மாதிரியே இருக்கு. அப்பிடித்தான் எண்டா நேராச் சொல்லுங்கோ.” என்றவனின் பேச்சில் அவளுக்குச் சினம் உண்டாயிற்று.

“முந்தநாள் நான் வீட்டை போகவே லேட். பிள்ளைக்கு வருத்தம். அவவைப் பாக்கோணும். நாள் முழுக்க அம்மா மூண்டு பிள்ளைகளை வச்சுப் பாக்கிறவா. அண்டைக்கு நாலுபேர். அவேயையும்(அவர்களையும்) பாத்து ரெண்டு வீட்டுக்குச் சமைக்க அவவால ஏலாது. கறி வச்சிருந்தாலும் ரொட்டியோ, புட்டோ, இடியப்பமோ ஏதோ ஒண்டு நான் போய்த்தான் செய்யவேணும், அடுத்தநாளுக்கு தேவையானதுகளையும் கவனிக்க வேணும். இதையெல்லாம் பாப்பேனா, இல்ல, ஃபோன எடுத்து வச்சுக்கொண்டு ஆர், எப்ப மெசேஜ் அனுப்புவீனம், பதில் சொல்லலாம் எண்டு பாத்துக்கொண்டு இருப்பேனா?” என்றாள் சூடான குரலில்.

“ஓ சொறி!” என்றான் இறங்கிய குரலில். “வேலையா இருந்திருப்பீங்க எண்டு நினைச்சனான்தான். எண்டாலும் இந்தளவுக்கு யோசிக்கேல்ல.”

ஆனால், அவள் சினம் குறையவில்லை. “இங்கயும் நான் ஒண்டும் சும்மா இருந்து சம்பளம் வாங்கேல்ல. நீங்க எடுக்கிற நேரமெல்லாம் கதைச்சுக்கொண்டு இருக்க.” என்றாள்.

“அதுதான் சொறி சொல்லிட்டேனே.”

காரணத்தைக் கேட்காமலே கோபப்பட்டுவிட்டு என்ன மன்னிப்பு? அவளுக்குக் கோபம் போகமாட்டேன் என்றது.

“யசோ.”

முதன் முறையாக அவள் பெயர் அவன் வாயிலிருந்து ஒலித்தது. தேகத்தில் ஒரு விதமாகச் சிலிர்ப்போட அப்படியே நின்றாள்.

“இன்னும் கோவமா?” அவன் குரல் தழைந்தே வந்தது.

“ஏன் எடுத்தனீங்க?”

“அடக்கடவுளே! இவ்வளவு கோவம் வருமா அமைதியா இருக்கிற யசோதினிக்கு?” அவன் குரலின் சிரிப்பு, அவளை ஆற்றுப்படுத்தும் மாயமறியாமல் அமைதியாகவே இருந்தாள் யசோ.

“யசோ?”

“ம்…” அவளையறியாமல் எதிர்வினையாற்றினாள்.

“முந்தநாள் தூரிக்கு எப்பிடி இருக்கு, சுகமாயிற்றா எண்டு அறியத்தான் நீங்க எப்ப பதில் போடுவீங்க எண்டு பாத்துக்கொண்டே இருந்தனான். நீங்க அவ்வளவு லேட்டா, சுருக்கமாப் பதில் அனுப்பவும், நான் அக்கறையாக் கேட்டத நீங்க நடிப்பா எடுத்திட்டீங்களோ எண்டு ஒரு மாதிரி ஆயிற்றுது. இதில, எனக்கு ஒண்டும் சொல்லாம குறிப்ப சுசீலாக்காட்டக் குடுத்திருக்கிறீங்க. ஏன் என்னட்டத் தரேல்ல, என்னோட கதைக்கேல்ல எண்டு அது வேற யோசினை. இண்டைக்கு நீங்க ஃபோனும் எடுக்காம இருக்கவும் உண்மையாவே எனக்கு ஒருமாதிரி ஆயிற்றுது. அதுதான்…” என்று தன்னை விளக்கினான்.

“சுசீலாக்காட்ட நானாக் குடுக்கேல்ல. அவாவோட இதைப் பற்றி நேற்றுக் கதைச்சனான். அவா இண்டைக்கு விடியவே குறிப்பு வாங்கிக்கொண்டு போக வந்திட்டா.”

“ஓ1”

“வேற ஏதும் கேள்வி இருக்கா?”
 

நிதனிபிரபு

Administrator
Staff member

அவன் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று. மனமும் இலகுவான உணர்வு. அவள் கோபத்தைச் சுகமாக உள்வாங்கினான். மாலைக்காற்று முகம் வருடிப்போகும் அந்த இதத்துடனேயே, “கேள்வி எல்லாம் இல்ல. ஆனா ஒண்டு சொல்லோணும். நான் குறிப்புப் பாக்க வேண்டாம் எண்டு வீட்டில சொல்லிட்டன். எனக்கு இந்தக் கலியாணத்தில முழு விருப்பம். உங்களுக்கும் விருப்பம் எண்டால் அடுத்தது என்ன எண்டு பாப்பம். இதச் சொல்லத்தான் அப்போத எடுத்தனான். சொல்லுங்க, நீங்க என்ன சொல்லுறீங்க?” என்று வினவினான்.

“ஏன் பாக்க வேண்டாம் எண்டு சொன்னீங்க. நேற்று நீங்க என்னோட கதைக்கேக்க அப்பிடிச் சொல்ல இல்லையே.” அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விசாரித்தாள்.

“நீங்கதானே பொருந்தாட்டி என்ன செய்வீங்க எண்டு கேட்டீங்க? அதுதான், அது தெரியாமையே இருக்கிறது நல்லம் எண்டு நினைச்சன். சும்மாவே எந்தப் பக்கத்தாலயாவது தப்பி ஓடலாமா எண்டு நிக்கிறீங்க. இதில, தப்பித்தவறி பொருத்தம் இல்லை எண்டு சொல்லிட்டா கலியாணத்துக்குக் கடைசி வந்தாலும் ஓம் எண்டு சொல்ல மாட்டீங்க. அம்மா, அக்காவுக்கும் அப்பிடித்தான் இருக்கும். அதுதான் பாக்க வேண்டாம் எண்டு சொல்லீட்டன்.”

“பொருந்தாட்டி வேண்…” எனும்போதே அவசரமாக இடைமறித்தான் அவன்.

“தயவுசெய்து எதிர்மறையா ஒண்டும் சொல்லாதீங்க யசோ. எனக்கு எங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்து, சின்னாக்கள் ரெண்டுபேரும் ஓம் எண்டு சொன்னாப் போதும். வேற ஒண்டும் வேண்டாம். இதில நான் உறுதியா இருக்கிறன். உங்களுக்கும் அந்த உறுதி இருக்கா எண்டு நீங்கதான் சொல்லோணும்.” என்று, மீண்டும் அவளைப் பதில் சொல்லத் தூண்டினான்.

“உங்கட அம்மாவும் அக்காவும் ஒண்டும் சொல்ல இல்லையா?”

“ஒரு பதில நேரடியாச் சொல்லாம என்ன எல்லாம் கேக்கிறீங்க.” என்றான் அவன் சிறிதாக அலுத்த குரலில்.

உதட்டைக் கடித்தாள் அவள்.

“அவேக்கு முதல் மனம் சரியில்லைதான். ஆனா, உங்களத் தவிர வேற ஆரையும் கட்டமாட்டன் எண்டு சொல்லிட்டன். அதால அவேயும் ஓம் எண்டு சொல்லிட்டினம். அவேக்கும் எங்களுக்கு ஒரு கலியாணம் நடந்து, நாங்க சந்தோசமா வாழ்ந்தாப் போதும் எண்டுறதுதான் வேணும். இப்ப நீங்க சொல்லுங்க.” என்றான் திரும்ப.

“நான் பிள்ளைகளோட கதைக்கோணும். அம்மா அக்காட்ட இன்னும் ஒண்டும் சொல்லேல்ல.”

“ஓ!” என்றவனின் சுருதி கொஞ்சமாய் இறங்கிற்று. “பிள்ளைகள் மறுக்காயினம். எனக்கு நம்பிக்கை இருக்கு. அவே ரெண்டு பேருக்கும் என்னைப் பிடிக்கும். அவே உங்கள மாதிரி இல்ல. இல்லாட்டியும் நான் அவேயோட கதைக்கிறன். உங்கட அம்மாவும் அக்காவும் வேண்டாம் எண்டு சொன்னா உங்கட முடிவு என்னவா இருக்கும்?” என்று கேட்கையில் அவன் குரலில் கூர்மை ஏறி இருந்தது.

என்ன முடிவெடுப்பாள் என்று அவளுக்கே தெரியவில்லையே!

“யசோ, எனக்குப் பதில் வேணும்.” அவன் குரலில் அழுத்தம் ஏறிற்று.

அவன் கேட்கும் அந்தப் பதில், அவர்களின் மொத்த எதிர்காலத்துக்குமானது. சொல்லிவிட்டால் காலத்துக்கும் மாறக் கூடாது. அந்தப் பயமே அவள் வாயைக் கட்டிப்போட்டது.

அதுவே அவன் கோபத்தைக் கிளறிவிட்டது. “எங்களுக்கு ஒண்டு வேணும் எண்டுற உறுதி எங்களுக்கே இருந்தாத்தான் யசோ அதுக்காகப் போராடுவம். இப்ப நான் உங்களிட்ட மல்லுக்கட்டுற மாதிரி. சோ, முதல் விசயம் எங்களுக்கு அது வேணுமா, வேண்டாமா எண்டுறதுதான். அதுக்குப் பிறகுதான் அதுக்கு மற்றவே என்ன சொல்லுவீனம் எண்டுறதெல்லாம். இப்ப எனக்கு உங்கட மௌனமே ஒரு பதிலச் சொல்லுது. அதோட, நானே எல்லாத்துக்கும் உங்களை வற்புறுத்துற ஃபீல் வருது. அது… எனக்கு விருப்பம் இல்ல. நான் வைக்கிறன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

உதட்டைப் பற்றியபடி அப்படியே அமர்ந்திருந்தாள் யசோ. அவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் இருந்து அவனைக் கோபப்படுத்திவிட்டது புரிந்தது.

சரியாக அந்த நேரம் வந்து தேநீரை நீட்டினாள் மகிளா. அது அவசியமாக இருந்ததில் வாங்கிப் பருகினாள். அதன் பிறகான நேரம், இருக்க நிற்க முடியாமல் கடந்தாலும் அவன் சொன்னவைதான் ஓடிக்கொண்டே இருந்தன.

இந்தளவுக்குத் தயங்குகிறவள் சுசீலாவிடம் குறிப்பைக் கொடுத்திருக்கக் கூடாது! அதைக் கொடுத்து, அவன் மனத்தில் நம்பிக்கையை விதைத்துவிட்டு, பதிலே சொல்லாமல் நின்றால் கோபப்படாமல் என்ன செய்வான்?

அன்று மாலை, வேலை முடிந்து வீடு நோக்கிப் புறப்பட்டவள், பாதையை மாற்றி அவன் கடைக்கே விட்டாள்.

இவளைக் கண்டுவிட்டு, “வாங்கம்மா!” என்று அழைத்த அந்த ஐயா, “தம்பி!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.

அன்று போலவே இன்றும் உள்ளிருந்து வந்தான் அவன். இன்னுமே கோபமாகத்தான் இருக்கிறானோ என்று அவன் முகத்தை ஆராய்ந்தாள் யசோ. அங்கிருந்து எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவள் தன் முகத்தை ஆராய்வது அகத்தியனுக்கு விளங்காமல் இல்லை. அவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் இருந்துவிட்டு இப்ப என்னவாம்? அந்த ஐயாவும் இருந்ததில் அங்கு வைத்து ஒன்றும் கதைக்காமல், “வாங்க!” என்று அன்று போலவே அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவன் தண்ணீர் கொதிக்க வைக்கப் போக, “இல்ல, நான் போகவேணும்.” என்றாள் அவசரமாக.

இன்றைக்கு அவனும் வற்புறுத்தவில்லை. அந்த மேசையிலேயே சாய்ந்து, கைகளைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்.

அவனாகக் கேட்டால் சொல்லலாம் என்றால் அவனோ அவளுக்கு மேலாக நீயே சொல்லு என்று நின்றான்.

வேறு வழியற்று, “அது… இல்ல எனக்குத் திடீரெண்டு எல்லாமே மாறுற மாதிரியும், வேக வேகமா நடக்கிற மாதிரியும் இருந்தது. அதோட, பிள்ளைகள் என்ன சொல்லுவீனமோ, முதல் அவேட்ட இத எப்பிடிச் சொல்லுறது எண்டு… எனக்குச் சொல்லத் தெரியேல்ல. என்னென்னவோ எல்லாம் மண்டைக்குள்ள ஓடுது. ஒரு மாதிரிப் பயமா இருக்கு. துணிஞ்சு இறங்கிப் பிழைச்சிட்டா என்ர பிள்ளைகளின்ர நிலை என்ன எண்டு, எனக்கு அத யோசிக்கவே நடுங்குது.” எனும்போது அவள் விழிகள் இலேசாகக் கலங்கிப் போயிற்று.

இத்தனை நாள்களில் இரண்டாவது முறையாக அவள் உடைந்து பார்க்கிறான். அவன் நெஞ்சிலும் ஏதோ ஒன்று அசைந்தது.

ஓரெட்டில் அவள் முன்னே வந்து நின்று, “இந்தக் கலியாணத்தில உங்களுக்கு விருப்பமா?” என்றான் அவள் விழிகளையே பார்த்து.

“விருப்பம்தான்.” பார்வையைத் தழைத்துக்கொண்டு முணுமுணுத்தாள்.

“எனக்கு என்னைப் பாத்துச் சொல்லோணும் யசோ.”

அவள் திணற, “யசோ!” என்றான்.

ஒவ்வொரு முறையும் அவன் அவள் பெயரைச் சொல்கையில் அவளுக்குள் என்னவோ நிகழ்ந்துகொண்டிருந்தது. மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மீண்டும் விழிகள் மெலிதாகக் கரிக்க, “விருப்பம்தான்.” என்றாள் கம்மிய குரலில்.

“உறுதியான முடிவா யசோ? இல்ல, நான் கோவமா ஃபோன கட் பண்ணினதால வந்த முடிவா? அல்லது, இன்னும் யோசிக்க வேணுமா? எது எண்டாலும் மறைக்காமச் சொல்லுங்க.” அவன் குரலில் ஒருவிதத் தீவிரமும் தீர்க்கமும்.

“இல்ல, அப்பிடி எனக்கு விருப்பமே இல்லாட்டிக் குறிப்பைக் கொண்டுவந்து தந்தே இருக்கமாட்டன். ஆனா… என்னதான் மற்றவையைப் பற்றி நாங்க யோசிக்கத் தேவையில்லை எண்டு நினைச்சாலும் ஊர் உலகம் என்ன கதைக்குமோ, எதையெல்லாம் கேக்கவேண்டி வருமோ எண்டு பயமா இருக்கு. பிள்ளைகளின்ர காதுக்கு ஏதும் பிழையாப் போயிற்றா, என்னைப்பற்றி என்ன நினைப்பீனம்? இதுக்குப் பேசாம இருக்கிற மாதிரியே இருந்திடலாமோ எண்டு என்னென்னவோ யோசனை... அதான்.”

பரிதவிப்பும் பயமும் குரலில் இழையோடச் சொன்னவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது அவனுக்கு.

“நீங்க சொன்ன விருப்பத்தை நம்பி உங்கட கைய நான் பிடிக்கலாமா?” என்றான் அவள் முகத்தையே பார்த்து.

அவள் விழிகள் திகைப்பில் அகன்றன.

“பிடிக்கலாமா?”

பதில் சொல்லாமல் கையை மட்டும் கொஞ்சமாக முன்னுக்கு நீட்டினாள். இரண்டு கைகளாலும் அவள் கரத்தைப் பற்றித் தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டு, “இண்டைக்குப் பிடிச்ச இந்தக் கையை எண்டைக்கும் விடமாட்டன். பிள்ளைகள நான் பிரிச்சுப் பாத்திட்டா பிள்ளைகளின்ர நிலை என்ன எண்டு கேட்டீங்களாம் எண்டு சுசீலாக்கா சொன்னா. உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாட்டி எங்களுக்கு இன்னொரு பிள்ளையே வேண்டாம். சரியா?” என்றான் உறுதியான குரலில்.

அவளுக்கு ஒருமாதிரி ஆகிப்போயிற்று. “இல்ல… அது…” என்று திணற, பற்றியிருந்த கையை அழுத்திக்கொடுத்து அவள் பேச்சை நிறுத்தினான் அவன்.

“எனக்கு விளங்குது யசோ. ரெண்டு பேருக்கும் இது ரெண்டாவது கலியாணம்தான் எண்டாலும் நீங்க ரெண்டு பிள்ளைகளுக்கு, அதுவும் பொம்பிளைப் பிள்ளைகளுக்கு அம்மா. உங்கட பயம் சரிதான் எண்டு எனக்குத் தெரியும். அதாலதான் சொல்லுறன், குறைஞ்ச பட்சமா உங்களுக்கு என்னில நம்பிக்கை வாறவரைக்குமாவது எங்களுக்கு இன்னொரு பிள்ளை வேண்டாம், சரியா?”

பதிலற்றுப் போனவளின் விழிகள், நீரால் நிறைந்தன.

“ப்ளீஸ் யசோ. இப்பிடிப் பலகீனமாகி உடையிர யசோவ எனக்குப் பாக்க விருப்பம் இல்ல. தயவுசெய்து அழாதீங்க.” எனவும் கன்னத்தில் உருண்டுவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டு, அவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள்.

“இந்தக் கடைதான் எங்கட வீட்டுக்கே சோறு போடுற கடை யசோ. எனக்குக் கோயிலுக்குச் சமன். இந்தக் கடையில நிண்டு சொல்லுறன், உங்கட பிள்ளைகள் இனி என்ர பிள்ளைகள். அவேக்கு நல்ல அப்பாவாக் கட்டாயம் இருப்பன். ஊர் உலகத்தைப் பற்றி யோசிக்காதீங்க. அவே எத்தின நாளைக்குக் கதைப்பீனம்? இல்ல, இதுக்கு முதல் உங்களப் பற்றிக் கதைச்சதே இல்லையா? கட்டின மனுசிக்கு என்ன கொடுமையைச் செய்தானோ ஆருக்குத் தெரியும்? இல்லாம, சும்மா ஒரு பொம்பிளை போலீஸ் வரைக்கும் போகுமா எண்டு என்ர காது கேக்கவே கதைச்சிருக்கினம் யசோ. அதா உண்மை? இல்லயெல்லா? அவே கதைக்கிறதுக்கெல்லாம் பதில் என்ன தெரியுமா? நானும் நீங்களுமா வாழப்போற அந்தச் சந்தோசமான வாழ்க்கை. நீங்க எதைப்பற்றியும் யோசிக்காம போங்க. வீட்டில இப்ப ஒண்டும் கதைக்க வேண்டாம். மிச்சத்தை நான் பாக்கிறன். பிள்ளைகளிட்டயும் ஒண்டும் கதைக்கவேண்டாம். சரியா?”

அவள் மந்திரத்துக்குக் கட்டுண்டவள் போன்று தலையைச் சரி என்று அசைத்தாள்.

“ஏதாவது சாப்பிடத் தரவா?” அவள் முகத்தில் தெரிந்த சோர்வைக் கவனித்துக் கேட்டான்.

“இல்ல, நேரமாகுது.”

“சரி வெளிக்கிடுங்க. முந்தநாள் மாதிரி லேட் ஆக வேண்டாம். வீட்டை போனதும் எனக்கொரு மெசேஜ் போட்டுவிடுங்க. வேற எதிர்பாக்கமாட்டன்.” எனும்போதே அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு.

அவள் முகத்திலும் அது தொற்றிக்கொண்டது.
 
Status
Not open for further replies.
Top Bottom